Saturday 23 January 2021

பணச்சடங்கு

ஆசி கந்தராஜா

 

நாகலிங்கம் மாஸ்டர் மனைவியுடன் சிட்னிக்கு வந்து மூன்று மாதமாகிறது. இது அவர்களது முதல் வருகை மட்டுமல்ல முதலாவது விமானப் பறப்பும்கூட. முப்பத்தைந்து வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் 'டிமிக்கிவிடும் மகனுக்குஒரு கால்க்கட்டுப் போடும் வைராக்கியத்துடன் ஒரு வருஷ விசாவில் சிட்னிக்கு வந்திருக்கிறார்கள். நாகலிங்கம் மாஸ்டர் விரும்பியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபுகுந்துதமிழ் மூத்த பிரசைகள் சங்கம்கலை இலக்கியப் பேரவைதமிழர் கூட்டமைப்புஇந்துக் கோவில்கள் என பல்வேறு தமிழ்சமூகசமைய அமைப்புக்களின் தலைவராகியிருக்க முடியும். அந்த அளவுக்கு வல்லமையுள்ள மனுஷன் அவர். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கிபடிப்படியாக உயர்ந்து முதலாம் தர பாடசாலை அதிபராக பத்து வருடங்கள் ஊரில் பணிபுரிந்த பின்னர் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது மனைவி பூமணி டீச்சரும் குறைந்தவரில்லை. ஆரம்ப பாடசாலை ஒன்றின் தலமை ஆசிரியர். அத்துடன் ஊரிலுள்ள மாதர் சங்கத்தின் நிரந்தர தலைவியும்கூட! 

வன்னிச்சமர் உக்கிரமடைந்த காலத்தில் சிட்னிக்கு வந்த குமாரசுவாமி வாத்தியார் ஆஸ்திரேலியாவில் இப்பொழுது நிரந்தரப் பிரசை. பயிற்றப்பட்ட தமிழாசிரியர் என்ற கோதாவில் இப்பொழுது சிட்னியிலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆலோசகர். அவருக்கும் மனைவிக்கும் சென்ரலிங் பென்ஷனும் கிடைக்கிறது.  கொழுத்த காசு. இலங்கையில் கிடைக்கும் வாத்தியார் பென்ஷன் காசுஇந்தக் கணக்கில் வராதது. குமாரசுவாமி வாத்தியாரின் மகனுக்கு அடுத்த மாதம் சிட்னியில் கலியாணம். மனைவிமகன் சகிதம் நேரில் வந்து நாகலிங்கம் மாஸ்டரை திருமணத்துக்கு அழைத்திருந்தார்.

திருமண அழைப்பிதழ்கால் கிலோ நிறை வரும். பல  வர்ணக் கற்கள் பதிக்கப்பட்டுபட்டுக் குஞ்ச அலங்காரத்துடன் படு டாம்பீகமாக அது அமைக்கப்படிருந்தது. தபால் மூலம் அழைப்பிதழை அனுப்பினால் பல்லின தபால் சேவகர்கள் மத்தியில் அது தொலைந்து போக வாய்ப்புள்ளதால்முடிந்த வரை அனைவருக்கும் நேரடியாகவே கொடுத்தார்கள். நாகலிங்கம் மாஸ்டருக்கு அழைப்பிதழ் கொடுக்க மனைவி மகனுடன் வீடு தேடி வந்தது பழைய நட்புக்காக. நட்பென்றால் சும்மா நட்பல்ல. இளமைக் காலங்களில் 'அப்படிஇப்படிஎன ஊரில் பல திருவிளையாடல்களை நடத்திய நட்பு. பிற்காலத்தில் ஆசிரியர் சங்கம்கூட்டுறவு இயக்கம்கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற அமைப்புக்களில் ஒரு கன்னைக்கு நின்று காய் நகர்த்திஊரைக் கட்டியாண்டவர்கள். இன்னும் சிறப்பாகச் சொன்னால் மதிப்புக்குரிய பிரமுகர்கள்!

குமாரசுவாமி வாத்தியார் கொடுத்த அழைப்பு மடலுக்குள் ஐந்து இதழ்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சடங்குகளுக்கான அழைப்பு மட்டைகள். டிலக்மெகிந்திசங்கீத்மாங்கல்யம்ரிஷெப்ஷன் என அர்த்தம் விளங்காத சில வார்த்தைகள். இத்தனைக்கும் குமாரசாமி வாத்தியாரின் சம்பந்தியும் புலம்பெர்ந்த ஈழத் தமிழர்தான். அதுமட்டுமல்ல ஆஸ்திரேலியத் தமிழர் கலாசாரப் பேரவையின் நிரந்தரத் தலைவரும்கூட. 'வெள்ளையர்கள் மட்டும்என்ற கொள்கை ஆஸ்திரேலிய அரசால் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில்பின் தங்கிய கிராமங்களில் பணிபுரிய வைத்தியர்கள் தேவைப்பட்டபோது குடிபுகுந்த கொழும்பு கறுவாக்காட்டு 'டமிழர்'. கால ஓட்டத்தில் மெல்ல சிட்னி நகருக்கு இடம் பெயர்ந்து பிரபல மகப்பேறு வைத்தியராகச் செல்வச் செழிப்புடன் வாழும் இவர்கண் வைத்தியராக சமீபத்தில் பயிற்சி முடித்த குமாரசுவாமி வாத்தியாரின் மகனை மருமகனாக்கிக் கொண்டதில் வியப்பில்லை.

அன்றைய இரவுச் சாப்பாட்டின் போது கலியாணத்துக்கு என்ன பரிசு கொண்டு போவது என்ற பேச்சை ஆரம்பித்தார் பூமணி டீச்சர். குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவகையில் நல்லதொரு பரிசுப்பொருள் கொண்டுபோக வேண்டுமென்றும் அதில் மகனின் கௌரவமும் அடங்கி இருக்கிறது எனவும் நியாயங்களை அடுக்கினார். மனைவி சொன்னதில் உண்மை இருந்தாலும் நாகலிங்கம் மாஸ்டரின் சிந்தனையில் மனக் கணக்கொன்று ஊர்ந்தது. இன்றைய நிலவரப்படி (2018) நூற்று இருபது இலங்கை ரூபாய்களை மாத்தினால்தான் ஒரு ஆஸ்திரேலிய டாலர் பெற்றுக்கொள்ளலாம். இந்த நேரம் பார்த்து மகனும் அலுவலக வேலைக்காக நியூசீலாந்துக்குப் போய் விட்டான். திரும்பி வர இரண்டு மாதங்களாகும். மகன் இருந்திருந்தாலும் அவனிடம் காசு கேட்க பூமணி டீச்சர் விட்டிருக்கமாட்டார். பெத்த பிள்ளை என்றாலும் காசு விஷயத்தில் கடமைப்படக் கூடாது என்ற கொள்கை அவரது.

'நூறு டாலருக்கு குறையபரிசுப் பொருள் வாங்குவது மரியாதையில்லைஎனச் சொன்ன பூமணி டீச்சர்நித்திரைக்கு முன்னர் அருந்தும் சுக்குக் காப்பி தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்தார்.

மாஸ்டரின் மனதில் தற்போதைய 'எக்ஸ்சேஞ் ரேட்முகம்காட்டி மறைந்தது. குறைந்தது பன்னீராயிரம் ரூபா வேணும். பொல்லாலை அடிச்ச காசு. ஒண்டும் செய்யேலாதுஎன மனதை திடப்படுத்த முயன்றவருக்குஊரில் நடந்த பழைய சடங்கு சம்பிரதாயங்கள் கறுப்பு வெள்ளை  சினிமாப் படக் காட்சிகள் போல விரிந்துகொண்டே போனது.

சென்ற நூற்றாண்டின் எழுபதுகள் வரை திருமணம்வீடு குடிபுகுதல்சாமத்தியச் சடங்குஅந்திரட்டி போன்ற சடங்குகளுக்கு தகுதிக்கு ஏற்றபடி 'அரிசி பச்சைஎன்ற பெயரில்குத்தரிசியும் கறிமொந்தன் வாழைக் குலையும் கொடுத்தனுப்புவது பிரதேச வழமை. வசதி குறைந்தவர்கள் வாழைக் குலைக்குப் பதிலாக பூசணிக்காய் கொடுத்தனுப்புவார்கள். சடங்கு வைப்பவர்கள் எத்தனை கொத்து அரிசி வந்ததுவாழைக் குலையில் எத்தனை வாழைக்காய்பூசணிக்காய் பெரிதோ சிறிதோஎனக் கணக்கெழுதிக் கொள்வார்கள். அரிசி பச்சை கொடுப்பதிலும் சில சம்பிரதாய முறைகள் உண்டு. நார்க் கடகத்தில் குத்தரிசியை அளந்து போட்டுஅதற்கு மேலே வாழைக் குலையை வைத்து 'அதற்குரியபெண்மணி ஒருவர் சுமந்து போவார். அவருடன் அரிசிபச்சை அனுப்பும் வீட்டுச் சிறுவனோ சிறுமியோ கூடச் செல்லவேண்டும். அப்படி செல்லும்போது சடங்கு வீட்டுக்குரிய நாவிதரோசலவைத் தொழிலாளியோ கடகத்தில் கையை வைத்தால் அரிசியும் பச்சையும் அவர்களுக்குரியது. இந்த வகையில் ஒருதரம் பிடிப்பதற்கே அனுமதியுண்டு.

அரிசிபச்சை பற்றிய இன்னொரு நினைவும் மாஸ்டரின் மனதில் சுழன்றடித்தது. அது விதானையார் வீட்டுக் கலியாணத்தில் நடந்த சங்கதி. மாலைக் கருக்கலில் நாகலிங்கம் மாஸ்டர் அனுப்பிய 'ஆமானமொந்தன் வாழைக் குலையையும் பத்துக் கொத்து மொட்டைக் கறுப்பன் கைக்குத்தரிசியையும் விதானையார் வீட்டுப் படலையடியில் வைத்தே நாவிதர் முருகேசு பிடித்துவிட்டார். அத்துடன் அவர் சும்மா இருந்திருக்கலாம். போனஸ்ஸாக அரிசிபச்சை சுமந்துபோன வள்ளியம்மையின் மார்பில் பட்டும் படாமலும் கைவைக்கவள்ளியம்மை நாவிதரின் வேட்டியை உருவி நாலு சாத்துச் சாத்தியது அந்தக்காலத்து ஈஸ்ற்மன் கலர் வசுக்கோப்பு.

நல்ல துணிச்சல்காரி வள்ளியம்மைஎன்ற  நினைப்பில் நாகலிங்கம் மாஸ்டர் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்!

வள்ளியம்மை நல்ல சிவப்பி. அழகானவள். குறுக்குக் கட்டில் அவளது வசீகரம் சுண்டி இழுக்கும். புருஷன் கந்தையா உசாரில்லாத ஒரு 'சோணையன்என்று ஊரில் பெயரெடுத்தவன். நாகலிங்கம் மாஸ்டரின் தோட்டம் வயல்களைக் குத்தகைக்கு எடுத்துச் செய்தாலும் பெரிய வருமானமில்லை. இதனால் மாஸ்டர் வீட்டில் வள்ளியம்மை தொட்டாட்டு வேலை செய்தாள்.

ஒரு காலத்தில் பணச்சடங்கும் கிராமங்களில் வெகு பிரபல்யம். குடும்பத்தில் பணக்கஷ்டம் என்றால் சொந்தங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் சொல்லிபணச்சடங்கு நடத்துவார்கள். சடங்கு நடக்கும் மூன்று நாள்களும் பனை மரத்தில் கட்டிய மைக்செற் குழாய் கால நேரமின்றி சினிமாப் பாடல்களை ஒலிபரப்பும். பணச்சடங்குக்கு வரும் உறவுகள் வைக்கும் மொய்ப் பணத்தில் அந்த வீட்டின் அவசர தேவைகள் ஓரளவு தீர்ந்துவிடும்.

இந்த வகையில் ஊரில் கொடுத்த மொய்ப் பணத்தைத் திரும்பப் பெற கந்தையாவும் வள்ளியம்மையும் பணச்சடங்கு வைத்தார்கள். அதற்காக நடந்த 'பலகாரச்சூடு ' இனிய நினைவுகளை நோக்கித்தள்ளஅன்றைய மைமல் பொழுதில்அழகுக்கான அத்தனை தேவதைகளும் ஆசீர்வதித்த கோலத்தில் அவள் தன் முன்னால் நின்ற காட்சியை நாகலிங்கம் மாஸ்டர் அசைபோட்டார்.

திடீரென கந்தையாஅரசாங்கம் குடுத்த காணியில் கமம் செய்யவென குடும்பத்துடன் விசுவமடுவுக்குப் போய்விட்டான். வள்ளியம்மை முதல் முறையாக கருவைச் சுமந்தகாலமது. 'நிறைமாத கர்ப்பிணியை உடனே அழைத்துக் கொண்டு போகவேண்டுமா'? என பூமணி டீச்சர் மறித்துப்பார்த்தார். கந்தையா கேட்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் ஊருக்குத் திரும்பவில்லை.

வள்ளியம்மையின் நினைவுகள் சிட்னிக் குளிருக்கு இதம் சேர்க்ககடந்த கால சம்பவங்களில் உலாவந்து கொண்டிருந்த மாஸ்டரை சூடான சுக்குக் காப்பியுடன் வந்து தட்டி எழுப்பினர் பூமணி டீச்சர்.

'இஞ்சை பாருங்கோரிஷெப்ஷன் அழைப்பிதழ் மட்டையிலை 'நோ பொக்ஸ் ஹிவ்ற் பிளீஸ்(No box gift please) எண்டு எழுதியிருக்கு. சின்ன எழுத்திலை இருக்கிறதாலை எங்கடை கண்ணிலை அது தட்டுப்படேல்லை. அவையளிட்டை இருக்கிற காசுக்கும் வசதிக்கும் மற்றவையின்ரை சில்லறைப் பரிசுப் பொருள்கள் என்னத்துக்கு'? எனச் சொல்லிபரிசுப் பொருள் வாங்கும் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் பூமணி டீச்சர்.

கலியாண நாளும் வந்தது!

இது நாகலிங்கம் மாஸ்டரும் மனைவியும் வெளிநாட்டில் கலந்து கொள்ளும் முதல் கலியாணம். சிட்னி ஒப்ரா ஹெளசுக்கும் ஹாபர் பாலத்துக்கும் இடையிலுள்ள பூங்காவில் தாலிகட்டும் சடங்கு. பூங்கா அருகேயுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் றிஸெப்ஷன். மேட்டுக் குடிமக்கள் பலரும் ஒன்று கூடும் இடத்தில்தாங்களும் சோடைபோகக் கூடாது என்ற நினைப்பில் இருவரும் கனகச்சிதமாக உடையணிந்து கொண்டார்கள். குமாரசுவாமி வாத்தியாரும் தன் நண்பன் நாகலிங்கம் மாஸ்டரை கௌரவிக்கும் வகையில் மணமேடை அருகே அவர்களுக்கு இடம் ஒதுக்கியிருந்தார்.

பூங்காவில் மேசை விரிப்புடன் கூடிய வட்ட மேசைகள் அடுக்கப்பட்டிருந்தன. மேசையைச் சுற்றி பத்து நாற்காலிகள் துணியால் போர்த்தப்பட்டுபட்டுக் குஞ்சம் கட்டப்பட்டிருந்தது. மேசை விரிப்புக்கு தோதாக பீங்கான் கோப்பைகத்திமுள்ளுக் கரண்டிகளுடன் நொறுக்குத் தீனிகளும் வைத்திருந்தார்கள். ஆனால் வந்தவர்கள் கொண்டுவரும் பரிசுப் பொருள்களை அடுக்கி வைக்க அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதைக் கவனித்த பூமணி டீச்சர்அழைப்பு மடலில் எழுதியிருந்த 'வசனத்தைதான் சரியாகப் புரிந்து கொண்டதை எண்ணித் திருப்திப்பட்டார்.

மணமேடையில் மணமகனுக்கு காப்புக் கட்டும் சடங்கு நடந்தது. நாதஸ்வர தவில் வித்வான்கள் காம்போதியைத் தொடர்ந்து மோகன ராகம் வாசிக்க ஆரம்பித்தார்கள். வட்ட மேசையைச் சுற்றி இருந்தவர்கள் இவை எதையும் பொருட்படுத்தாமல் தங்களுக்குள் அரட்டை அடித்து ஊர் வம்பளந்து கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு இளைஞன், 'பாட்டுபாட்டுஎன்றபடி மைக்செற் வைத்திருந்த மூலைக்கு விரைந்தான். மறுகணம் ஒலிபெருக்கியில் குத்துப்பாட்டு ஒன்று ஹிந்தி மொழியில் ஒலித்தது. 'ஏ. ஆர். ரஹ்மான் சமீபத்தில் இசையமைத்த பாடல் அதுஎனச் சொன்னார் ஒருவர். அனைவரும் குத்தாட்ட இசைக்கு ஏற்ப தாளம் போட ஆரம்பித்தார்கள்.  திடீரென பூங்காவின் ஒரு மூலையில் இருந்து பெண்களின் குரவைச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ரஹ்மானின் பாடலுக்கு ஆடியபடி வட இந்திய ஆடை அலங்காரத்துடன் மணப்பெண்ணும் தோழிகளும் மணமேடையை நோக்கி வந்தார்கள். 'இது குஜராத்தி ஸ்டைல்என எக்கவுண்டன் மயில்வாகனம் மனைவிக்குச் சொன்னார்.

நாகலிங்கம் மாஸ்டருக்கு இவையெல்லாம் புதினமாகவும் புதுமையாகவும் இருந்தது. மோகன ராகத்துள் மூழ்கியிருந்த பூமணி டீச்சரால் குத்துப்பாட்டையும் மணமகளின் ஆட்டத்தையும் ரசிக்க முடியவில்லை. கோபத்தில் மூக்கு விடைக்க ஹாபர் பாலத்தில் ஊர்ந்து சென்ற றெயில்-கோச்சைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'பாட்டும் ஆட்டமும் நல்லாயிருக்குஎன மனைவிக்குச் சொல்லத் திரும்பிய நாகலிங்கம் மாஸ்டர்மனைவியின் முக பாவனையைக் கண்டதும் அடக்கிக் கொண்டார்.

ஒருவழியாக தாலி கட்டு முடிந்துமணமக்களை வாழ்த்த வரிசை நீண்டது. கலியாணத்தை முன்னின்று நடத்திய பெடியன் பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட பெட்டி ஒன்றை மண மேடையில் வைத்தான். மண மேடைக்கு வந்தவர்கள் அனைவரும் வாழ்த்திய கையோடு பெட்டிக்குள் ஒரு என்வலப்பைச் செருகி இறங்கினார்கள். அப்பொழுதுதான் வாழ்த்து மட்டையில் எழுதியிருந்த ஆங்கில வசனத்தின் அர்த்தம்பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியருக்குப் புரிந்தது.

'காசைத் தாங்கோ என நேரடியாய் சொல்லாமல் நாசூக்காய் சொல்லி இருக்கினம்என நினைத்தவர் 'நோ பொக்ஸ் ஹிவ்ற் பிளீஸ்(No box gift please) என்ற வசனத்தின் வெவ்வேறு பரிமாணங்களை நெட்டுருச் செய்தபடிமனைவியின் றியக்ஷன் அறிய பூமணி டீச்சர் பக்கம் திரும்பினார்.

'கந்தையாவும் வள்ளியம்மையும் காசுக் கஷ்டத்தில் வைத்த பணச்சடங்கு மாதிரியெல்லோ இது இருக்குஎன கணவனின் காதுக்குள் குசுகுசுத்த பூமணிடீச்சரை இடைமறித்துஇது 'நவீன பணச் சடங்குஎனத் திருத்தினார் நாகலிங்கம் மாஸ்டர்.

என்வலப் கொண்டுவராததால் இருவரும் மணமேடைப் பக்கம் போகவில்லை. விஷயத்தைச் சொல்லகுமாரசுவாமி வாத்தியாரிடம் சென்றார்கள்.

'வரிசையிலை காத்து நிக்கிற கொஞ்சப்பேரைசாப்பிட அனுப்பினால் மண மேடையில் கூட்டம் குறையும்என்ற ஆலோசனையை முன்மொழிந்தபடிஎதிர்பாராத விதமாக அங்கு வந்து சேர்ந்த இளைஞனைநாகலிங்கம் மாஸ்டருக்கு அறிமுகம் செய்தார் குமாரசுவாமி வாத்தியார். 

'இந்தத் தம்பி எங்கடை ஊர்ப் பெடியர்தான். வள்ளியம்மையின்ரை மகன். கேற்ரறிங் பிஸ்னஸ்ஸில் இங்கு கொடிகட்டிப் பறக்கிறார்என்றார்.

'அப்படியா'? என நாகலிங்கம் மாஸ்டர் விழிகளை உயர்த்தி பெடியனைப் பார்த்தார். 

அதே சாயல்...!

சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவர்திடீரென உறைந்துபோய் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துவிட்டார்.

அப்படியும் இருக்குமோஎனசடுதியாக அவர் மனதில் ஒரு பொறி தட்டியது.

மறுகணம் சிட்னிக் குளிரையும் மீறிநாகலிங்கம் மாஸ்டருக்கு உடம்பு வேர்த்தது.

(ஞானம்நவம்பர் 2018​)

 


No comments:

Post a Comment

.