அந்திமம்
ஆசி கந்தராஜா
அம்மாவிடம், ஒரு கொட்டைப் பெட்டி
இருந்தது. அதைச் செல்வச்சந்நிதி கோவில்,
தேர்த் திருவிழாவின் போது வாங்கியதாக ஞாபகம். அது, பனம் ‘சார்வோலை’யால், தட்டையாக, தனியான மூடியுடன்
பின்னப்பட்டு, பல வர்ணங்களில் சாயம்போட்ட குருத்தோலையால் பொத்தி, அழகு
படுத்தப்பட்டிருந்தது. அம்மா வாங்கிய கொட்டைப்
பெட்டியில், ஒன்றுக்குள் ஒன்றாகச்
செருகப்பட்ட நான்கு அறைகள் இருந்தன. அதன் உட்பகுதியில் சில்லறைகளும், பக்கவாட்டில் தாள் காசும் வைத்திருந்தார்.
அம்மா கணக்கில் கெட்டிக்காரி. பெரிய நெடும் பிரித்தல் கணக்கையும் சில நொடிகளில் மனதுக்குள் போட்டுவிடுவார். எத்தனையோ பணப் பிரச்சனைகளை, தனி ஆளாக எதிர் நோக்கிச் சமாளித்தவர். அவர் கருமியல்ல. எங்கே காசைப் பொத்திப் பிடிக்கவேணும், எங்கே விரிக்கவேணும், என அவருக்குத் தெரியும். ஆனால், வயோதிபம் வந்து, அவரது இயக்கம் தானாகக் குறைந்தபோது, காசு விஷயத்தில் அம்மாவிடம் எவ்வளவோ பெலவீனங்கள்!
அம்மா என்னுடன் இருபத்தைந்து வருடங்கள், சிட்னியில் வாழ்ந்து,
தொண்ணூற்று
இரண்டு வயதில் காலமாகும்வரை, கொட்டைப் பெட்டியை, தலையணையின் கீழே
வைத்திருந்தார். சில சமயங்களில் தடித்த தலையணை உறையுள்ளே, அதை வைத்து
மடித்துச்சுத்தி, ஊசி குத்தியிருப்பார். அந்த ஊசி, அவ்வப்போது கட்டில்
விரிப்புடனும் சேர்த்துக் குத்தப்பட்டிருக்கும். அம்மாவுக்கு வீட்டில் சகல
சௌகரியங்களும், மருத்துவப் பராமரிப்பும் இருந்தன. தானாக எதுவும்
வாங்க வேண்டிய தேவை இருந்ததில்லை. இருந்தாலும் கொட்டைப் பெட்டிக்குள் வைப்பதற்கு
என்னிடம் காசு கேட்பார், அதுவும் தாள் காசாக!
‘உங்களுக்கு ஏனம்மா காசு? தேவையானதை சொல்லுங்கோ, நான் வாங்கி வருகிறேன்’ என்றேன் ஒரு நாள்.
சலனமே இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு, சிறிது நேரம் என்னை உற்றுப்
பார்த்தார். பின்னர் எதுவும் பேசாது, தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். நானும் மனைவியும் பலமுறை அழைத்தும் அன்று அவர் சாப்பிடவில்லை. ‘வயிறு புகையுது, பசி இல்லை’ எனக் காரணம் சொன்னதாக
மனைவி சொன்னாள். இதற்குப் பிறகு, அம்மா பணம் கேட்டால், நான்
மறுபேச்சின்றிக் கொடுத்துவிடுவேன்.
அன்று ஆடி அமாவாசை! ஐயாவுக்கான விரத நாள். எனக்கு பதினைந்து வயதில், ஐயா மரணமான காலம் முதல், அம்மாவே விரத நாளை
நினவுபடுத்துவார். அம்மாவுக்கு இப்பொழுது ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோய்
துவங்கியுள்ளதால், ஐயாவின் விரதம் நினைவிலில்லை.
அன்று கோவிலுக்கு போகமுன்,
எதேச்சையாக
அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தேன். கொட்டைப்
பெட்டியிலிருந்த பணம் முழுவதையும் அம்மா கட்டிலில் பரப்பியிருந்தார். அவசர அவசரமாக
காசை எண்ணுவதும், தடவுவதும், மீண்டும் எண்ணுவதுமாக
இருந்தார். சமீப காலங்களில் இது தினமும் நடப்பதாக மனவி சொன்னாள். அம்மாவுக்கு
வீட்டில் சகல வசதிகளுமிருந்தும், வயோதிப காலத்தில், பணத்தின் ஸ்பரிசம் ஏன்
தேவையாக இருக்கிறது? என்ற கேள்வி, நெடுநாளாக என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.
ஊரிலே, சீட்டுப் பிடிக்கும்
சின்னாச்சிக் கிழவி, சுவரிலே கரியால் எழுதி வைக்கும் சீட்டுக்
கணக்கு, பெரும்பாலும்
பிழைத்துவிடும். இதனால் சீட்டு ஏலம் விடுவதற்கு முதல்நாள், கணக்கைச் சரிபார்க்க
அம்மாவிடம் வருவார். அம்மா ஊரில் வாழ்ந்த காலங்களில், பல ‘சின்னாச்சி’களின் லோக்கல் ‘எக்கவுண்டன்’ அம்மாவே. காசுக் கணக்கை, சொல்லச் சொல்ல அம்மாவின் மனதில், அவர்களின் ‘ஸ்பிறெட் சீற்’ கனகச்சிதமாக
தயாராகிவிடும்.
சின்னாச்சிக் கிழவியிடமும், ஒரு கொட்டைப் பெட்டி இருந்தது. அது சிறிய உமலுக்கும், கொட்டைப் பெட்டிக்கும்
இடைப்பட்ட சைஸ். அதற்குள் சின்னாச்சிக் கிழவியின் சீட்டுக்காசுகள் சங்கமமாகும்.
கொட்டைப் பெட்டியின் பக்க அறை, சின்னாச்சிக் கிழவியின் சேமிப்பு வங்கி. அதற்குள் தனது வருத்தச் செலவுக்கும், மரணச் செலவுக்கும்
சின்னாச்சி காசு சேர்க்கும். சின்னாச்சிக் கிழவி, சின்ன வயதிலேயே தாலி அறுத்தது. கைம்பெண்ணாக, யார் கையையும் எதிர்
பார்க்காமல் உழைத்துச் சம்பாதித்து நாலு குமருகளை, நல்ல இடத்தில் கரை சேர்த்துவிட்டது. ஆனால், மகன் கணேசன் மட்டும்
தறுதலையாக வேலை வெட்டி இல்லாமல், மனைவி பிள்ளைகளைக் கவனிக்காமல், ஊரைச் சுற்றிக்
கொண்டிருந்தான். காசு தேவைப் படும்போது, கிழவியின் கொட்டைப் பெட்டியிலிருந்து பெரிய தாளாக உருவி எடுப்பான். தகப்பன்
செய்யும் களவைக் காட்டிக் கொடுப்பது வீட்டிலுள்ள குஞ்சு குருமன்களே. உடனே, கிழவி ‘அறுவானே’ எனத் துவங்கி தனக்குத் தெரிந்த தூஷண வார்த்தைகளை அகர
வரிசையில் சொல்லி, கணேசனைத் திட்டித் தீர்க்கும்.
மகனின் இந்த களவாணித் தனத்தினால், சின்னாச்சிக் கிழவி தனது குறுக்குக்கட்டு மாராப்புக்குள், கொட்டைப் பெட்டியைச்
சொருவிக் கொண்டே, சீட்டுக் காசு வாங்க ஊர்
கோலம் போகும். வாங்கிய சீட்டுக் காசை விரித்துப் பார்த்து,
எண்ணி, இரண்டு கண்களிலும்
மாறிமாறி ஒத்திய பின்னரே,
கொட்டைப்
பெட்டிக்குள் பத்திரப்படுத்தும். அப்பொழுது, வேர்வையில் நனைந்த கொட்டைப் பெட்டியிலிருந்து அடிக்கும், கிழவியின் வாசம் மூக்கைத்
துளைக்கும்!
அன்று சீட்டு ஏலம் கோரும் நாள். சின்னாச்சிக்
கிழவி ‘குய்யோ முறையோ’ என தலையில் அடித்தபடி ஓடி வந்தது. ‘என்ன சின்னாச்சி நடந்தது?’ என அம்மா கேட்டார்.
கிழவியால் பேசமுடியவில்லை. மூச்சடைத்தது. சைகையால் தண்ணி கேட்டது. அம்மா தண்ணி
கொண்டுவரமுன் கிழவி, தலைவாசல் குந்தில்
சரிந்து விட்டது. வலது பக்க கையும் காலும்
இயங்கவில்லை. வாய் கோணி எச்சில்
வழிந்தது. கிழவியைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது. ‘பாரிசவாதம், இனிக் கஷ்டம்தான்’ என காதைக் கடித்தார், பக்கத்து வீட்டு ‘மாட்டு வைத்தியர்’. ‘கிழவியின் கொட்டைப்
பெட்டிக்குள் இருந்த காசு முழுவதையும், கணேசன் சூதாடித் தொலைத்து விட்டதாக’ விஷயத்தை அவிட்டுவிட்டான், கணேசனுடன் சேர்ந்து சூதாடும் பரந்தாமன். நாலு நாளாக பாயில் கிடந்த கிழவி, கண்ணை மூடி இரண்டு
நாளாச்சு. கணேசன் வரவில்லை. ‘பிரேதம் எடுக்க காசில்லை’ என்று, அழுதுவடிந்த முகத்துடன்
வந்து நின்றாள், கணேசனின் மனைவி. அந்திம
செலவுக்கென, கிழவி சேமித்து வைத்த
காசையும் சேர்த்தே, கணேசன் சூதில்
தொலைத்திருக்கிறான். ஐம்பது, நூறென ஊரில் காசு சேர்த்தே கிழவியின் காரியம் ஒப்பேறியது. கிழவியின் உடலுடன், ‘வெறும்’ கொட்டைப்பெட்டியும்
நெருப்பில் சங்கமமாகிய நிகழ்ச்சி, சின்னாச்சிக் கிழவியின் விசித்திர வாழ்க்கையின், அழியாத சித்திரம்!
மீன் விற்கும் சிவப்பி
வைத்திருந்தது சற்று வித்தியாசமான கொட்டைப் பெட்டி. இது குருத்தோலையால்
பின்னப்பட்ட நீள் சதுர வடிவானது. இரட்டை ஓலைப் பின்னலுடன், மீன் செதிலும் அழுக்கும்
சேர்ந்து, கொட்டைப் பெட்டி நிறம்
மங்கி, கறுத்திருந்தது. கிழக்கு வெளிக்க முன்னரே எழும்பும் சிவப்பி, ஆறு மைல் தூரம் நடந்து போய், கடற்கரையில் மீன் வாங்கி, வீடுவீடாக விற்கும். சிவப்பியிடம் பெரியதொரு நார்க் கடகம்
இருந்தது. இது இரட்டைப் பனை ஓலையால் இழைக்கப்பட்டு பனம் நாரால் பொத்தப்பட்டது. அடுக்குப் பெட்டி அல்லது
அஞ்சறைப் பெட்டி போல, சிவப்பியின் கடகமும் ஒரு அடுக்குக் கடகம். ஒவ்வொரு
அடுக்கிலும் வெவ்வேறு வகை மீன்கள் இருக்கும். எங்கள் வீட்டுக்கு சிவப்பி வர மாலை
ஐந்து மணியாகிவிடும். மத்தியான சாப்பாடு முடிந்து இரவுச் சாப்பாட்டுக்கான
அடுக்குகளை அம்மா துவங்கிவிடுவார். எங்களுக்காகவே சிவப்பி அடிக் கடகத்தில், ஆமான மீனை ஓலைத்
தடுக்கால் மூடிக் கொண்டு வரும். இதற்குப் பிரதி உபகாரமாக ஆத்துப்பறந்து பசியோடு
வரும் சிவப்பிக்கு, பூவரசம் இலையில் அம்மா
சோறு குழைத்துக் கொடுப்பார். கடைசிக் கவளம் தொண்டையால் இறங்கியவுடன், சிவப்பி விடும் ஏவறையை
ரசிக்க நான் தயாராகக் காத்திருப்பேன். அது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய புதுவகையான
சங்கீதம். சங்கீத வித்துவான்களின் ஆரோகண, அவரோகணம் அதற்குத் தோத்துப் போகும்.
சிவப்பியின் புருஷன் முருகேசன், வேலைவெட்டி இல்லாமல், எந்த நேரமும் சாராய
வாசனையுடன் திரிவார். மீன்விற்றுக் களைத்து
திரும்பும் சிவப்பி, குடிக்க காசு தராவிட்டால்
வெளியே சொல்ல முடியாத தூஷண வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார், இழுத்துப் போட்டு
அடிப்பார். சட்டி பானைகள் உடையும். போதையின் உச்சத்தில் கத்தியுடன் துரத்தினால், சிவப்பி எங்கள் வீட்டில்
தஞ்சமடையும். முருகேசனின் இந்த ஆய்க்கினை தாங்காமல்தான், மீன்விற்ற காசை சிவப்பி, அம்மாவிடம் பத்திரப்
படுத்துவது. நிலுவையில் நிற்கும் சேமிப்பு பணத்தை சில வேளைகளில் சிவப்பி மொத்தமாக
வாங்குவதுமுண்டு. அந்தப் பணம், கொட்டைப் பெட்டிக்குள்,
சிவப்பியின்
ஸ்பரிசத்துடன் சில நாள்கள் ஓய்வெடுத்தபின், மீண்டும் மீன் வாசனையுடன் அம்மாவிடம் வந்துவிடும். திடீரென ஒரு நாள் முருகேசன் ஈரல்
கருகி செத்துப்போனார். சிவப்பி உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து அழுதது. அம்மாவிடம்
கொடுத்து வைத்திருந்த பணம் முழுவதையும் வாங்கி, பான்ட் வாத்திய இசை பின்னி எடுக்க, தண்டிகை கட்டி, முருகேசனின் உடலை சுடுகாட்டுக்கு
கொண்டுபோனது.
‘எல்லாத்தையும் வழிச்சு
துடைச்சு முருகேசனுக்கு செலவு செய்து போட்டாய், அந்தரம் ஆபத்துக்கு நீ என்ன செய்யப்போறாய்?’ என வீட்டுக்கு வந்த சிவப்பியிடம் கேட்டார் அம்மா. சிவப்பி எதுவும் பேசவில்லை. ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டுப் போய்விட்டது. முருகேசனின் சாவுக்குப் பிறகு, சிவப்பி நொடிந்து
விட்டது. மீன் விற்கப் போகவில்லை. சிவப்பியின் நார்க் கடகமும், காலியான கொட்டைப்
பெட்டியும், மீன் வாசனையுடன் கோடியில்
கிடந்தன. ‘குழந்தைகளும் இல்லாத நிலையில், மோசமான குடிகாரப் புருஷனுக்கா, சிவப்பி இப்படி
வருத்தப்படுவுது’ என எனக்கு ஆச்சர்யமாக
இருந்தது.
முருகேசனுடனான சிவப்பியின் வாழ்க்கையில், அவர்களின் அன்பை
நிர்ணயித்த காரணி எது? என்ற கேள்வி என் மனதைக்
கிளறியது. உண்மையில் அறிந்துணர முடியாத ஆச்சரியமான பல பக்கங்களை சிவப்பி வைத்திருந்தது. இருந்தும், அந்திம வயதில் காசில்லாமல் யாருமற்ற அனாதையாக, அரச முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானது சிவப்பி!
அம்மா என்னுடன் வாழ்ந்த
காலங்களில், எங்கள் வீட்டுக்குப்
பக்கத்தில் மிஸ்ஸிஸ் தொம்சன் குடியிருந்தார். சிட்னியில், ஆரம்ப பள்ளி ஆசிரியையாக இருந்து
ஓய்வு பெற்ற அவருக்கு, தொண்ணூறு வயதாகிறது.
அவரது பென்னாம் பெரிய வீட்டில் அவர் மட்டுமே வாழ்ந்தார். சமூக சேவை
இலாகாவிலிருந்து இரண்டு தாதிகள் தினமும் வந்துபோனார்கள். மகன் ஞாயிற்றுக்
கிழமைகளில் குடும்பத்துடன் வந்து நலம் விசாரிப்பான். மிஸ்ஸிஸ் தொம்சனுக்கு எங்கள்
கறி சோறு பிடிக்கும். அதனால் சமையல் நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவுடன்
பேசிக்கொண்டிருப்பார். மிஸ்ஸிஸ் தொம்சனிடமும் வடலி ஓலையால் செய்த கொட்டைப் பெட்டி இருந்தது.
கணவனுடன் பாலித்தீவுக்குப் போனபோது வாங்கியதாம். கணவன் இறந்த பின், அவர் ஞாபகமாக அதைத்
தன்னுடன் வைத்துக் கொள்வதாகச் சொன்னார். அது, இரட்டைப் பிறவி போல மிஸ்ஸிஸ் தொம்சனுடன் ஒட்டித் திரிந்தது. மாதாமாதம்
வங்கிக்கு வரும் அவரது பென்சன் பணம், அடுத்த நாளே தொம்சனின் கொட்டைப் பெட்டிக்குள் ஓய்வெடுக்கும். பணத்தை அடிக்கடி
எண்ணிப் பார்க்கும் பழக்கம் அவரிடமும் இருந்தது. திடீரென ஒரு நாள், படுக்கை அறையில் அவர்
கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அருகே, காலியான கொட்டைப் பெட்டி இரத்தச்
சிதறலில் நனைந்து கிடந்த கோலம், இன்றும் என் மனப் பத்தாயத்தில் அப்படியே இருக்கிறது.
மிஸ்ஸிஸ் தொம்சனின் இறப்பு, அம்மாவை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அதன் பின்னர் அம்மா அதிக காலம் வாழவில்லை. அம்மா இறந்த பின், நானும் மனைவியும், அம்மாவின் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். அங்கு பல கொட்டைப் பெட்டிகள் எமக்காக காத்திருந்தன. முதல் முறையாக அம்மாவின் கொட்டைப் பெட்டிகளை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தேன். அதற்குள் தனித்துவமான வாசனையுடன் பெருந் தொகையான பணம் இருந்தது. அந்த வாசனை அம்மாவக்கு மட்டுமே சொந்தமான வாசனை. அது, அந்திம காலத்தில் அவருக்கு நம்பிக்கை கொடுத்த வாசனை!
‘அந்திமம் என்பது ஆழமான
கடலைப் போன்றது. அதற்குள் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஆயிரம் ஆயிரம் விஷயங்கள்
அமிழ்ந்து கிடக்கின்றன’ என்றாள் மனைவி, எங்கோ தான் வாசித்ததை
நினைவில் நிறுத்தி. அதை ஆமோதிப்பது போல், சுவரிலே மாட்டப்பட்டிருந்த அம்மாவின் படம், காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.
Note:
·
கொட்டைப் பெட்டி:
பனை ஓலையால் பின்னிய Money Purse.
இது யாழ்ப்பாணக் கலாசாரத்துடன் இணைந்ததொரு
கலாசாரக் குறியீடு.
·
உமல்: பனை
ஓலையால் பின்னிய shopping bag
(கல்கி தீபாவளி மலர் 2017)
அன்னையர் தினத்தன்று வெவ்வேறு குணநலன்கள் கொண்ட சில அன்னை யர்களை சந்திக்க வைத்தீர்கள். அன்றைய யாழ்ப்பாணத்தில் சில மணித்துளிகள் நடமாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாராட்டுகள்.
ReplyDeleteThanks ammah
DeleteVery good story about Amma .
ReplyDeleteThanks.
Delete