Saturday 30 January 2021

அசைல்

ஆசி கந்தராஜா

ன்று இலங்கை அகதிகளுக்கான விசாரணை நாள். குடிவரவு அதிகாரிகளினால் நடத்தப்படும் இந்த முதலாவது நேர்காணலில், அகதி அந்தஸ்துப் பெறுவோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இப்பொழுதெல்லாம் நிலமை முந்தின மாதிரி இல்லை, சொன்னதையெல்லாம் அப்படியே நம்புவதற்கு. அந்தந்த நாடுகளின் அரசியல் பிரச்சனைகளை, ஆதியோடந்தமாக விசாரணை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாவது விசாரணையில் வெற்றி பெறாதவர்கள்  கீழ் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என, மாறிமாறி மனுச் செய்து காலத்தைக் கடத்துவார்கள். அதற்குள் உழைப்பதை உழைத்து, ஊரில் போய்ச் செட்டிலாகிவிடலாம் என்ற பொருளாதார மனக்கணக்கு இவர்களுக்கு. இதற்காகவே நீதிமன்றங்களில் அப்பீல் செய்ய, பெருவாரியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நம்மவர்கள் உட்பட!

காத்திருப்போர் அறையில் தமிழர்கள் மட்டுமல்ல, ஒருசில சிங்களவர்களும் விசாரணைக்காகக் காத்திருக்கிறார்கள். தங்கள் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்ல, ஒருசிலர் வழக்கறிஞர்களுடன் வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இங்குள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்களைக் கூட்டிவந்திருக்கிறார்கள். மொத்தத்தில், இவர்கள் எல்லோரும் தமிழ் சிங்கள தேசிய முரண்பாட்டுப் பின்புலத்தை மையமாக வைத்து, அகதி அந்தஸ்துக் கோர வந்தவர்கள். இவர்கள் மத்தியில் தமிழரசி தன்னந்தனியே விசாரணைக்காகக் காத்திருக்கிறாள். முப்பது ஆண்டுகால ஈழப் போராட்டம் தன் கண்முன்னே வீழ்ந்த கொடூரம், தாளாத துயரமாக மனதை அழுத்த, அவள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய நினைவில் அலை அலையாக போர்க்காலச் சம்பவங்கள் வந்துவந்து மறைந்தன. இந்த நாட்டுக்கு அவள் தானாக விரும்பி வந்தவளல்ல. மாறாக கூட்டிவரப்பட்டவள்.

Wednesday 27 January 2021

 நரசிம்மம்

ஆசி கந்தராஜா

 

வனுடைய பெயரை இதுவரை யாரும் முழுதாகச் சொன்னது கிடையாது. தெரிந்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பெயரைச் சுருக்கி, 'தமிழ்' என்றே அழைத்தார்கள். பாடசாலைப் பதிவு இடாப்பில் மட்டும் அவனுடைய பெயர், ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றிருந்தது. இதில் அவனது முதற்பெயர், நடுப்பெயர், குடும்பப்பெயர் என்ற பிரிவினை இல்லை. இந்த மூன்றும் சேர்ந்த ஒன்றே, அவனது முழுப்பெயர். பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்க்கும்போது 'பெயரைச் சற்றுச் சுருக்கிப் பதியலாமே' என்றார் தலமை ஆசிரியர். என்னுடைய மகனின் பெயர் அதுதான், அது முழுமையாகப் பதியப்பட வேண்டுமென பிடிவாதமாக நின்றாள் புனிதவதி. இதேமாதிரியான பிரச்சனை, வன்னியில் உலர் உணவுப் பங்கீட்டுக்குப் பதிவு செய்தபோதும் ஏற்பட்டது. கிராமசேவகர் ஒரு சிங்களவர், இனத்துவேசம் கொண்டவர். பெயரை முழுமையாகப் பதியாது இழுத்தடித்தார். புனிதவதி அசைந்து கொடுக்கவில்லை. இதனால் உணவுப் பங்கீட்டு அட்டையிலும் அவனது பெயர் ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றே பதியப்பட்டது. இந்த வன்மம் அவள் தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் வலிகளுக்கான ஒருவகை ஒளடதம், சிதறிக் கிடக்கும் கோப நெருப்புக்கான வடிகால்!

.