Tuesday 12 December 2023

 அறிவியல் புனைகதை:

வைரஸ் புராணம்

 


ங்கள் வீட்டில், ஒரு எலுமிச்சை நின்றது. வருடம் முழுக்கக் காய்க்கும். விதைகள் இல்லை, நல்ல புளி. திடீரென அதன் இலைகள் வெளிறிச் சுருண்டு, பட்டை வெடித்து, காய்ப்பதை நிறுத்திக் கொண்டது.

எலுமிச்சைக்கு வைரஸ் நோய் (CTV) என்பதை உறுதி செய்து கொண்டேன். தாமதிக்காது மரத்தை வேருடன் பிடுங்கி எரித்து விட்டேன்.

மனைவிக்கோ அது பெரும் கவலை. அது அவள் ஆசை ஆசையாக, பண்ணையில் வாங்கி, நட்டுவளர்த்த மரம்.

எல்லாத்துக்கும் மருந்தடிக்கிறியள் எலுமிச்சைக்கு மருந்தடிக்கேலாதோ? எனப் புறுபுறுத்தாள் மனைவி.

தாவரத்தையோ அல்லது மனிதர் உட்பட விலங்குகளையோ தாக்கும்   வைரஸ் கிருமிகளுக்கு மருந்தில்லை என்றேன் மொட்டையாக.

என்ன சொல்லுறியள்? உலகமே கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு ஆராச்சியில் இறங்கியிருக்குது. நீங்கள் வைரஸ் கிருமிக்கு மருந்தில்லை என, புதுக்கதை சொல்லுறியள் என்றவாறே என் முன் வந்தமர்ந்தாள் மனைவி.

Friday 1 December 2023

 

அறிவியல் புனைகதை:

 

பலஸ்தீனியன் வீட்டுப் பூனைகள்.

 


டந்த பத்து வருடங்களாக சுந்தரம் மேட்டுக்குடிகள் வாழும் குறிச்சியொன்றில் வசிக்கிறார். அறியப்பட்ட கண்வைத்தியரான அவர், செல்வந்தர்கள் வாழும் புறநகர்ப் பகுதியில் வீடுவாங்கியது ஒன்றும் புதினமல்ல. அடுத்த வீட்டில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யூதப்பெண்மணி நயோமி குடியிருக்கிறார். விசாலமான பல அறைகள் கொண்ட, மாளிகைபோன்ற அந்த வீட்டில், அவர் தனியாள். அவருக்கு வயது, அறுபதுக்குமேல் இருக்கும். ஜேர்மனியில் அடொல்வ் ஹிட்லரின் அடக்குமுறைகளுக்குத் தப்பி, இவரின் பெற்றோர் பெரும் செல்வத்துடன் சிட்னியில் வந்து குடியேறினார்களாம். இதற்குமேல் நயோமி பற்றி அந்த வீதியில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. அவரின் வீட்டுக்கு எரும் வந்துபோகும் சிலமனுமில்லை. எப்போவாவது ஒருநாள், ஹிப்பா தொப்பி அணிந்த ஆண்களும், தலைமுடியை மூடிமறைத்த பெண்களும் வருவார்கள். நயோமிக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. கண்வைத்திய கிளினிக்கில் நேரஒதுக்கீடு பெற நீண்டகாலம் எடுக்குமென்பதலால், நயோமி வைத்திய ஆலோசனை கேட்டு அவ்வப்போது சுந்தரத்திடம் வருவார். வந்தாலும் உள்ளே வரமாட்டார். வெளிவாசலில் நின்றுகொள்வார்.

ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பெருநகரங்களில் தனித்தனியான குறிச்சிகளுண்டு. இஸ்லாமியர்களும் மதரீதியாக சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுள் கணிசமானோர் லெபனானியர்கள், துருக்கியர்கள், பலஸ்தீனியர்கள். சிட்னியில் ஸ்ட்ராத்பீல்ட் என்னும் இடத்தில் தமிழர்களும் கூடிவாழ்ந்தார்கள். வசதிவாய்ப்புகள் பெருக, வேறு இடங்களில் கோவில் கட்டி, அதைச்சூழ வீடுவாங்கி வாழ்கிறார்கள்.

டாக்டர் சுந்தரம் பணிபுரியும் வைத்திய சாலையில், இருதய நோய் வைத்திய நிபுணராகக் கடமையேற்றார், போலஸ். அவரது முழுப்பெயர் வாய்க்குள் நுழையாது. லண்டனில் மருத்துவம் படித்து சிட்னிக்குப் புலம்பெர்ந்த இவர், ஒரு பலஸ்தீனியர். மகப்பேறு மருத்துவரான இவரின் மனைவி, ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரி. வீடு வாங்க இவர்கள் ஆயத்தமானபோது விற்பனைக்குவந்தது, நயோமியின் வீட்டுக்கு அடுத்தவீடு. போலஸ் தம்பதிகள் அந்த வீட்டை வாங்குவதற்கு சுந்தரம் காரணமானார்.

போலஸ் ஒரு பலஸ்தீனியர் என்பதை நயோமி எப்படியோ அறிந்துகொண்டார். இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் குறிச்சியில் வாழாமல், இவன் ஏன் இங்கு வந்தான்? என்ற வெப்பிசாரம் நயோமியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. இதிலிருந்து ஆரம்பமாகியது மாமரப் பிரச்சனை.

 அறிவியல் புனைகதை:

சிலீப் அப்னியா

பீட்டர் சுல்ஸ், என்னுடன் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தவன். அவனுக்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவான். அதேயளவுக்கு அனைவரையும் ஐமிச்சமாகப் பார்ப்பான், அவதானமாக இருப்பான். தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என்ற மனநிலையிலிருந்து மாறமாட்டான். தானொரு யூதன், ஜேர்மன் நாட்டிலிருந்து சிறு வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவன், என அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

ஜேர்மனி இரண்டாகப் பிளவுபட்டிருந்த காலத்தில், கிழக்கிலும் மேற்கிலும் படித்தவன், பணிபுரிந்தவன் என்ற வகையில் இவனது பெயர் ஒரு யூதப்பெயரல்ல, அது ஜேர்மன் பெயர் என்பதை நான் அறிவேன்.

எமது கல்விப் பீடத்தின் நத்தார் கொண்டாட்டத்தின் போது இருவரும் மது அருந்திப் போதையேறிய நிலையில், உண்மையில் நீ யூதனா? என எதேச்சையாகக் கேட்டேன். கொஞ்சநேரம் எதுவும்பேசாது அமைதி காத்தவன், பதில் எதுவும் சொல்லாமல் கொண்டாட்ட மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டான். இது அவனது இயல்பான குணமல்ல. கேள்வி கேட்பவனை மடக்கி, வெட்டி, உரத்துப்பேசி, தகுந்த பதிலடி கொடுப்பது அவனது இயல்பு.

அதிக அளவிலே அவன் மது அருந்துவதையும், யூதர்களுக்கான உணவுப் பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் வாழ்வதையும் மனதில் கொண்டே, நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

Wednesday 24 May 2023

 

நிறம்மாறும் ஓணான்கள்

ஆசி கந்தராஜா

(ஜீவநதி. சித்திரை 2023)

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது மனதைச் சுட்டெரித்தது. ஒத்துப் போவதென்பது போலிகளுக்குத் துணை போவதுதானோ?

அபொர்ஜினி என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் அவர். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு மொழிகள் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் தனித் தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால் இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன என்பதைப் பரமலிங்கம் நாளடைவில் புரிந்து கொண்டார். இதனால், அகண்டு பரந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றைக் கற்பனை பண்ணி மகிழ்ந்த காலங்களும் உண்டு.

பரமலிங்கம் பணிபுரியும் கல்விச் சாலைக்கு முதல் முறையாக ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக அவன் தம்பித்துரை அண்ணரின் மகன் இராசதுரையை அச்சுஅசலாக ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி சொன்னார். இதனால் விரிவுரைகளுக்கு அப்பால், அறிவியல் பாடங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச்சாலை பரமலிங்கத்தை நியமித்தது என்பதிலும்பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு. கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் ஆதிவாசிகளின் நடனம் இடம்பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால் குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, கையிலே யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். டிட்ஜெரிடூ எனப்படும் நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவ மரக் கருவி இசை எழுப்ப, தாளக் குச்சிகள் தாளம் போட்டன. வாத்திய இசையும் தாளமும் ஒன்றிணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள்.

Saturday 13 May 2023

 

நீலமலை இளவரசி

ஆசி கந்தராஜா

(காலச்சுவடு, மே மாதம் 2023)

நீலமலையின் ஒடுங்கிய பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மகிழ்மொழி. வன இலாகா தங்கள் தேவைக்காக அமைத்த மண் பாதையிது. கங்காரு, வாலாபீ, வொம்பற், குவாலா ஆகியன பாதையில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன. நீலமலைக்கு மகிழ்மொழி முன்னரும் தனியேயும் தாயுடனும் தன்னுடன் படிக்கும் தோழிகளுடனும் வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அதற்காதேவை இருந்தது. இன்றும் அப்படித்தான்!

திடீரென நீலமலையின் குளிரையும் தாண்டி உடம்பில் உஸ்ணம் பரவி வேர்த்ததால், கொண்டுவந்த பைக்குள் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். அடிவயிறு கவ்விப் பிடித்தது. சிறுநீர் கழிக்கவேண்டும் போல இருந்தாலும் வரவில்லை. தொடர்ச்சியாக குருதி கசிவதால் உள்ளாடை நனைந்து நசநசத்தது. பாதத்திலிருந்து பிட்டம்வரை தசை நார்கள் வலுவிழந்து வலித்தன. அவளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. பாறி விழுந்த யூக்கலிப்டஸ் மரக் கட்டைமேலே அமர்ந்து ஓய்வெடுத்தாள். ஊசியிலை மரங்களுடன் ஓங்கி வளரும் யூக்கலிப்டஸ் விருட்சங்கள் ஆவியாக வெளிவிடும் தைலங்களை ஆழமாக உள்ளே இழுத்துச் சுவாசித்தாள். உடல்வலியைப் போக்க யூக்கலிப்டஸ் தேநீர் அருந்துவதாகப் பள்ளித்தோழி சொன்னது நினைவில்வர யூக்கலிப்டஸ் மரக் குருத்துக்களைப் பிடுங்கிக் கடித்தாள். மறுகணம் பையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த டப்பாவின் மூடியை திருகிச் சரிபார்த்தாள். நடந்து முடிந்த சம்பவங்களின் நினைவுகள் மனதில் சுழன்றடிக்க, நினைவைச் சுருக்கி டப்பாவை அணைத்து மௌனித்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த மாக்பை பறவையொன்று தலைக்கு மிக நெருக்கமாகப் பறந்து அவளைத் திடுக்கிட வைத்தது. இயல்பை  மறந்து மாக்பை அவளின் தலையைக் கொத்தாதது அதிசயம்தான்.

Tuesday 31 January 2023

 

ஆயுத எழுத்து

ஆசி கந்தராஜா


ண்சட்டியில் கருவாட்டுக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.  கண்டிக்குப் போகும் வழியில், சுண்டிப் பார்த்துக் கவனமாக வாங்கிய மண்சட்டியது. மண்சட்டியில் கறிசமைக்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசை இம்முறைதான் சித்தித்தது. திரும்பிவரும் பறப்பில் முப்பது கிலோ அனுமதிக்கப்பட்டிருந்தாலும் சொந்தச் சாமான்கள் அதிகம் இல்லாததால், வெவ்வேறு சைஸில் மண்சட்டிகளும் கிலோக் கணக்கில் கருவாடும் வாங்கி, பக்குவமாகப் பொதிசெய்து கொண்டுவந்திருந்தார். மனைவி பெரும்பாலும் சைவம். இதனால் மச்சமாமிசம் காச்சுவதென்றால் சாம்பசிவம் வாய்க்கு இதமாகத் தானே சமைத்துக் கொள்வார்.

இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன்றில், பொருளாதாரமும் வணிக முகாமைத்துவமும் படித்த சாம்பசிவம், அரச வங்கியொன்றில் உயர் பதவி வகித்தவர். வெளிநாடொன்றில் வசதியோடு வாழ்ந்த மனைவியின் அண்ணன், மச்சான் அழைத்ததால் எண்பத்தி மூன்றாம் ஆண்டு, இலங்கை இனக்கலவரத்துக்கு முன்னரே குடும்பத்தோடு புலம்பெயர்ந்து, அரசியல் தஞ்சம் கோரியவர். இலங்கையில் அவருக்கு எந்தவித அரசியல் நெருக்கடிகளோ கெடுபிடிகளோ இருந்ததில்லை. இருந்தாலும் நிரந்தர விசா எடுத்து, அகதிகளுக்கான அரச கொடுப்பனவுகளைப் பெற, அகதி அந்தஸ்துக் கோருவதுதான் சுருக்கமான வழியென்றும் காதும் காதும் வைத்தாற்போல விசயத்தை முடித்துவிடலாம் என்றும் மச்சான் சொன்னார். ஈழவிடுதலை இயக்கங்கள் முனைப்படையாத காலத்தில், அகதி விண்ணப்பங்களைப் பரிசீலித்த அதிகாரிகளுக்கு, இலங்கைப் இனப்பிரச்சனை பற்றிய பூரண அறிவோ மனுதாரர்களின் தகிடுத்தத்தங்களோ தெரியாது. மனுவில் எழுதியது, விசாரணையில் சொன்னது எல்லாவற்றையும் வஞ்சகமில்லாமல் நம்பினார்கள். மச்சானின் யோசனைப்படி, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் தான் தீவிரமான அங்கத்தவராக இருந்து, உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் இதனால் இலங்கைப் பொலீஸ் தன்னைத் தேடுவதாகவும் கற்பனையில் ஒரு மனு எழுதிச் சமர்ப்பித்தார். விசாரணைகளிலும் இதையே திரும்பத் திரும்பச் சொன்னதால், ஒரு கட்டத்தில் மனுவில்த் தான் எழுதியதெல்லாம் உண்மையென்றே நம்பத் தொடங்கிவிட்டார்.  

.