Wednesday 24 May 2023

 

நிறம்மாறும் ஓணான்கள்

ஆசி கந்தராஜா

(ஜீவநதி. சித்திரை 2023)

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது மனதைச் சுட்டெரித்தது. ஒத்துப் போவதென்பது போலிகளுக்குத் துணை போவதுதானோ?

அபொர்ஜினி என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் அவர். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு மொழிகள் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் தனித் தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால் இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன என்பதைப் பரமலிங்கம் நாளடைவில் புரிந்து கொண்டார். இதனால், அகண்டு பரந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றைக் கற்பனை பண்ணி மகிழ்ந்த காலங்களும் உண்டு.

பரமலிங்கம் பணிபுரியும் கல்விச் சாலைக்கு முதல் முறையாக ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக அவன் தம்பித்துரை அண்ணரின் மகன் இராசதுரையை அச்சுஅசலாக ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி சொன்னார். இதனால் விரிவுரைகளுக்கு அப்பால், அறிவியல் பாடங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச்சாலை பரமலிங்கத்தை நியமித்தது என்பதிலும்பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு. கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் ஆதிவாசிகளின் நடனம் இடம்பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால் குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, கையிலே யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். டிட்ஜெரிடூ எனப்படும் நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவ மரக் கருவி இசை எழுப்ப, தாளக் குச்சிகள் தாளம் போட்டன. வாத்திய இசையும் தாளமும் ஒன்றிணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள்.

பரமலிங்கம் சிறு வயதில் பாட்டுக் காவடியும் கரகமும் பழகி, ஊர்க் கோவில்களில் ஆடி அசத்தியவர். ஆதிவாசிகளின் தாளத்துக்கு கால்கள் துருதுருக்க, தன்னை மறந்து அவரும் ஆடத்துவங்கினார். இதைக் கண்ட வெள்ளையர்கள் அதையும் இதையும் முடிச்சுப் போட்டு கொமன்ற் அடித்துச் சிரித்தார்கள். வேறு சிலர் பரமலிங்கத்தின் ஆட்டத்தை ரசித்தார்கள். இதிலிருந்து ஆசிவாசிகளுடனான அதீத நட்பு பரமலிங்கத்துக்கு ஆரம்பமாகியது.

அடுத்த சில ஆண்டுகளிலே, ஆதிவாசிகளெனத் தம்மை அடையாளப்படுத்திய கலப்பின வெள்ளை நிற மாணவர்கள் சிலரும் பரமலிங்கத்தின் விரிவுரைக்கு வந்தார்கள். சப்பை மூக்கு மட்டுமே இவர்களின் அபொர்ஜினி அடையாளம். தோற்றம் அச்சுஅலாக வெள்ளையர்களைப் போல இருந்தது. பரமலிங்கத்தைச் சந்திக்க வந்த ஆதிவாசிகளின் நலன்களைப் பேணும் இளைஞன் ஒருவன், இவர்கள் பற்றிய வர்த்தமானத்தைக் கதையோடு கதையாகச் சொன்னான்.

வெள்ளையர்களுக்கு காமம் தலைக்கேறும் போதெல்லாம் அதற்கு வடிகால் அமைக்க முடியாதவர்கள், ஆதிவாசி பெண்களுடன் பலவந்தமாக வல்லுறவு கொண்டதால் பிறந்தவர்களே இவ் வெள்ளைத் தோல் குழந்தைகள். கறுப்புநிற ஆதிவாசித் தாயுடன் இக்குழந்தைகள் வாழ்வதை, வெள்ளையர்கள் விரும்பவில்லை. இதனால், கலப்பினக் குழந்தைகள், ஆதிவாசி பெற்றோரிடமிருந்து களவாடப்பட்டார்கள் அல்லது பலவந்தமாகப் பிரிக்கப்பட்டார்கள்.

பரமலிங்கத்திடம் இயல்பாகவே இருந்த விடுப்புப் பிடுங்கும் குணம் இங்கும் மெல்லத் தலைகாட்டியது.

குழந்தைகளின் தாய் அபொர்ஜினியாகவும், தந்தை முன்பின் தெரியாத வெள்ளையனாகவும் இருந்ததுபோல, தாய் வெள்ளைக்காரியாகவும் தந்தை அபொர்ஜினியாகவும் இருந்ததுண்டா? எனக்கேட்டார்.

பரமலிங்கத்தின் இந்தக் கேள்விக்கு அதிரச் சிரித்தான் இளைஞன். அவன் பசுமைக்கட்சியின் தீவிரமான அங்கத்தவன். கம்யூனிசக் கொள்கைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் வெள்ளை இனத்தவன்.

குடியேறிய வெள்ளைக்காரிகள், தங்களை எஜமானிகளாகவும் புனிதமானவர்களாகவும் கருதினார்கள். கறுப்பு நிறம், அவர்களுக்கு அழுக்கின் அடையாளம். அவர்கள் எப்படி அபொர்ஜினி ஆணுடன் உடலுறவு கொண்டிருக்க முடியும்? அதுமட்டுமல்ல குடியேறியவர்களுள் அதிக எண்ணிக்கையில் ஆண்கள் இருந்ததினால், வெள்ளைக்காரிகள் உடலுறவுக்காக வெளியே போகவேண்டிய தேவை இருக்கவில்லை, என்றான்.

களவாடப்பட்ட கலப்பினக் குழந்தைகளுக்கு என்ன நடந்தது? எனத் தொடர்ந்தும் கொக்கிபோட்டார் பரமலிங்கம்.

இவர்கள் தூர இடங்களிலுள்ள விடுதிகள், மற்றும் தேவாலயங்களில், பெற்ற தாயுடன் தொடர்பற்ற வகையில் வளர்க்கப்பட்டார்கள். அங்கு இவர்களுக்கு ஆங்கிலக் கல்வி புகட்டப்பட்டு, ஆங்கில கலாசாரத்தில் வாழப் பழக்கப்பட்டார்கள். கலப்பினக் குழந்தைகள் மேற்கத்திய சூழலில் வளர்ந்து கிறீஸ்தவர்கள் ஆனார்கள். இவர்களுள் எவருமே பின்னர் கறுப்பு நிற, அபொர்ஜினி சமூகத்தில் கலந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களை மணந்து ஆங்கிலேயர்களாகவே வாழத் துவங்கினார்கள். இவர்களுக்கு இருந்த அபொர்ஜினி அடையாளம் சப்பை மூக்கு மட்டுமே. நிறம், பேச்சுமொழி உட்பட மற்றவையெல்லாம் பெரும்பாலும் வெள்ளையர்களதே என்றவன் சற்று நிறுத்தி, மேலும் தொடர்ந்தான்.

இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், 'களவாடப்பட்ட குழந்தைகள்' என அழைக்கப்பட்ட இவர்களின் சந்ததியினரே, பின்னர் வெள்ளையர்களின் அரசுக்கு தலையிடியாய் இருப்பார்களென, வெள்ளையர்கள் அப்போது நினைக்கவில்லை, எனப் புதிர்போட்டான்.

அதெப்படி..? பரமலிங்கம் உஷாரானார்.

சர்வதேச அழுத்தங்களைத் தாக்குப் பிடிக்க முடியாத வெள்ளையர்களின் அரசு, ஆதிவாசிகளுக்குப் பல சலுகைகளை அள்ளித் தெளித்தார்கள். ஆனால் இன்றுவரை இந்தச் சலுகைகளை அநுபவிப்பது பெரும்பாலும் கலப்பின அபொர்ஜினி சந்ததியினரே.

இது எப்படிச் சாத்தியமாகிறது? புரியும்படி விளக்கமாகச் சொல்லு எனத் தூபம் போட்டார் பரமலிங்கம். இது சம்பந்தமாக கல்விச்சாலை மட்டத்திலே நடப்பனவற்றை, பரமலிங்கம் அறிவார். இருப்பினும் தூய வெள்ளை இன இளைஞன், இதுபற்றி என்ன நினைக்கிறான்? என்பதை அறிய, இவ்வாறு கேட்டார்.

கலப்பின அபொர்ஜினி சந்ததியிலுள்ள பலருக்கு, முப்பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி மாத்திரம் கறுப்புநிற, தூய அபொர்ஜினி பெண்ணாக இருப்பார். ஆனால் பாட்டியின் சந்ததியினர் வெள்ளையர்களை மணம் முடித்திருப்பார்கள்..!'

ஓ...! என ஆச்சரியப்பட்டார் பரமலிங்கம்.

இதிலுள்ள இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் தங்கள் இரத்தத்தில் இன்னமும் அபொர்ஜினி மரபணு இருப்பதாக உரிமை கோரி, அங்கீகாரம் பெற்றுள்ளதே.

இதனால் இவர்களுக்கு என்ன லாபம்?

மேற்கத்திய கலாசாரத்தில் கல்வி கற்று, முற்றுமுழுதாக ஆங்கிலேயர்களாக வாழும் இவர்களுக்கு, மேலதிகமாக அபொர்ஜினி சலுகைகளும், கொடுப்பனவுகளும் கிடைக்குமல்லவா?

உஷாரான ஆக்கள்தான்! ஆஸ்திரேலிய அரசு இதை அங்கீகரித்ததா?

ஆம், போராடிப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுள் சிறந்த சட்ட வல்லுனர்கள் இருந்தார்கள். இவர்களே அபொர்ஜினி மக்களை பல சபைகளில் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். அதனால் அங்கீகாரம் பெறுவது இலகுவாயிற்று. அது மட்டுமல்ல, இவர்களே அபொர்ஜினிகளின் உரிமைகளுக்காக உரத்துப் பேசி அரசியல் செய்தார்கள். இதில் பெரும்பாலும் இவர்களின் நன்மைகளே மேலேங்கி உள்ளன. ஆனால்...?

ஆனால் என்ன? இது மனித சுபாவம்தானே என கதையை வளர்த்தார் பரமலிங்கம்.

இது ஒறிஜினல் அபொர்ஜினிகளை, இன்று வரை பாதிக்கின்ற விஷயம். பூர்வகுடி மக்களுக்காக, அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களையும், வேலை வாய்ப்பு முன்னுரிமைகளையும் பெரும்பாலும் தட்டிச் செல்வது இவர்களே. இது உங்களுக்குத் தெரியாத விஷயமா?

இளைஞன் சொன்னது அனைத்தும் உண்மை என்பதை பரமலிங்கம் அவ்வப்போது அறிந்துகொண்டவர். இம்முறை கல்விச் சாலையில் கோரப்பட்ட பூர்வ குடிமக்களுக்கான கல்வி புலமைப் பரிசில்களுக்கு (Scholarship) ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றுள் பெரும்பாலானவை, அபொர்ஜினி என உரிமைகோரும் கலப்பினத்தவர்களதே. கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும், அவர்கள் அபொர்ஜினி என்று நம்ப முடியாதவர்கள். ஆனாலும் தாங்கள் ஒரு தூய அபொர்ஜினித் தாயின் சந்ததி என்று சான்றிதழ் சமர்ப்பித்தார்கள்.

ஆங்கிலச் சூழலில், வசதியாக வாழ்ந்த கலப்பின அபொர்ஜினிகளின் கல்விச் சான்றிதழ்களுக்கு முன்னால், புதர்களுக்கு மத்தியிலிருந்து வந்த 'கறுப்பு' அபொர்ஜினி மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் அடிபட்டுப்போயின.

கல்விச் சாலையில், பூர்வ குடிமக்களான அபொர்ஜினிகளின் புலமைப் பரிசில்களைத் தீர்மானிக்கும் நிர்வாக சபையில், இம்முறை பரமலிங்கமும் ஒருவர். நிர்வாக சபை தீர்மானித்த முடிவில், அவருக்கு சிறிதும் உடன்பாடில்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் படி மற்றவர்களுடன் அவர் ஒத்துப்போக வேண்டியதாயிற்று. இதனால் புலமைப் பரிசில் கொடுப்பனவுகள், மற்றும் சலுகைகள் அனைத்தும், விதிகளின் பிரகாரம் கலப்பின அபொர்ஜினிகளுக்கே கொடுக்கத் தீர்மானித்தார்கள். இதுவே பரமலிங்கத்தின் மனவேதனைக்கும் தூக்கமின்மைக்கும் காரணமாயிற்று.

தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அதனால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளோம் என, உலக நாடுகளில் உரிமைகோரிக் கூப்பாடு போடுபவர்கள் அனைவரும் அதைவைத்து ஆதாயம் அடைந்தவர்களே, என்பார் சிட்னியில் வாழ்ந்து மறைந்த முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ. இது ஆஸ்திரேலிய கலப்பின ஆதிவாசிகளுக்கும் எப்படி பொருந்துகிறது என பரமலிங்கம் நினைத்துப் பார்த்தார்.

ஆசி கந்தராஜா (ஜீவநதி. சித்திரை 2023)

 

2 comments:

  1. அருமையான கதை.அப்பொர்ஜிணிகளின் இனத் தூய்மை அழிப்புக்காக பெண்கள் வெள்ளையர்களால் kகற்பழிகப்பட்டு இருக்கலாம்.பிற்காலத்தில் தமக்கு எதிராக திரும்பமால் இருக்க ஒரு யுக்தி. இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்கள் என்று சொல்லப்படும் கலப்பினம் இன்று வரை வெள்ளையர்களுக்கு ஆதரவாக பேசும். இரத்தம் தண்ணிரை விட தாடிமானது அல்லவா? நல்ல வரலாறு பேசும் கதை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இந்த தளத்தில் எனது பல கதைகளுண்டு. வாசிக்கவும்.

      Delete

.