Tuesday, 5 May 2026

 

 

டாட்டூ சித்திரங்கள்.

ஆசி கந்தராஜா


 

-1-

உள்நாட்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமான பெட்டிச் செய்தி இது!

பயிற்றப்பட்ட தாதி ஒருவர், தனது பராமரிப்பின் கீழிருந்த நோயாளியின் இறப்புக்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாதியும் நோயாளியும் இலங்கைத் தமிழர்கள் எனத் தெரியவருகிறது. விசாரணை தொடர்கிறது’.

செய்தியில் சொல்லப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பதால் அங்குள்ள தமிழ் ஊடகங்களும் பக்கம்பக்கமாகச் செய்திகளையும் புலனாய்வுக் கட்டுரைகளையும் வெளியிடத் துவங்கின. யூ-டியூப் செய்தியாளர்களும் தங்கள் பங்கிற்கு கற்பனை கலந்து கிசுகிசு தகவல்களை அள்ளித் தெளித்தார்கள். காலஞ்சென்ற தமிழர், குலசேகரம் என்பதும் அவர் அந்த நாட்டில் பிரபல்யமான பிரமுகர், புரவலர், கோவில் தர்மகர்த்தா என்பதும் அங்குள்ள தமிழர்களுக்கும் தமிழ் மீடியாவுக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவர் பிரபல்யமானவர். அவரின் இறுதிச் சடங்கு, சகல மரியாதைகளுடன் பெரும் தொகையான வெள்ளையர்களும் கலந்து கொண்ட நிகழ்வாக நடந்தது.

சென்ற மாநகர சபைத் தேர்தலில் குலசேகரம் தமிழர்கள் செறிந்து வாழும் தொகுதியில் போட்டியிட்டு கவுன்சில் மெம்பர் ஆனவர். அதனால் மாநகர சபைக் கட்டிடத்தில், கவுன்சில் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. வழமைக்கு மாறாக, உயிரோடு இருக்கும்போதே ஈழவிடுதலை அமைப்பொன்றினால், பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அதனால் வெளிநாடுகளில் வெளிவரும் ஈழவிடுதலை சார்ந்த பத்திரிகைகள், அவர் செய்த சேவைகள் பற்றி பக்கம் பக்கமாகச் சிலாகித்து எழுதின. மொத்தத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர் அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து உச்சுக்கொட்டினார்கள். அறுபது வயதைத் தாண்டிய பெரிசுகள் மட்டும் இவன் செய்த அநியாயங்களுக்கு வேறையெப்படிச் சாவான்? எனச் சபித்தார்கள். ஆனால், குலம் என வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட குலசேகரத்துக்கு வைத்தியசாலையில் என்ன நடந்ததென்பதோ, எப்படி இறந்தார் என்றோ வெளியிலுள்ளவர்களுக்குத் தெரியாது. அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் கமுக்கமாகவே இருந்தார்கள். பிரபலமான ஒரு தனியார் வைத்தியசாலையில் குலசேகரம் இறந்தார் என்பதை அறிவதில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குச் சிரமம் இருக்கவில்லை. அதிக கட்டணங்களை அறவிடும் தனியார் வைத்தியசாலையே அதுவென்பதும் குலசேகரம் போன்ற பெரும் பணக்காரர்களே அங்கு சிகிச்சை பெறமுடியும் என்பதும் ஊரறிந்த விஷயம்.

Wednesday, 29 April 2026

 மதிப்பீடு:

மதிப்பெண்: 9.5 / 10

ஆசி கந்தராஜாவின் “எண்ணம் இரங்காதோ?”

ச் சிறுகதை; புலம்பெயர்ந்த உடலின் உள்ளே சிக்கிய தாய் மண் நினைவின் இறுதி மூச்சு.



இந்தக் கதையின் மையத்தில் நிற்பவர் சிங்காரம்பிள்ளை. பிஜிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தமிழ் கூலி. அவர் மரணப் படுக்கையில் கிடப்பது உடலின் சோர்வு மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் வரலாறு முடிவை நோக்கிச் செல்லும் தருணம்.
அவருடைய உயிர் பேரனைப் பார்க்கும் வரை தங்கிக் கொண்டிருப்பது, “இன்னும் யாராவது என்னை நினைவில் வைத்திருப்பார்களா?” என்ற அகதியின் அமைதியான கேள்வியாக மாறுகிறது.

கதையின் பலம்:

1. புலம்பெயர்வின் மௌன வேதனை.
கதையில் வெளிப்படையாக அழுகை இல்லை. ஆனால் ஒவ்வொரு வரியிலும் ஒரு சொல்லப்படாத துயரம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
சிங்காரம்பிள்ளை: தன் மொழியை இழந்தவர். தன் நாட்டை இழந்தவர். தன் தலைமுறையோடு தன் நினைவுகளும் அழிந்துபோகும் நிலையில் நிற்பவர். அவருடைய அந்த நிலையை எழுத்தாளர் மிகவும் அமைதியாக எழுதுகிறார். அதனால் வாசகரின் மனதில் அது இன்னும் ஆழமாகப் பதிகிறது.

2. மரம், மைனா, றங்குப்பெட்டி — நினைவின் குறியீடுகள். இந்தக் கதையில் பொருட்கள் வெறும் பொருட்களாக இல்லை. மா மரம் – தாயகத்தின் நிழல். மைனா பறவைகள் – புலம்பெயர்ந்த இந்தியர்களின் உருவகம். றங்குப்பெட்டி – மறைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை
சிங்காரம்பிள்ளை தனது றங்குப்பெட்டியை யாருக்கும் திறக்க விடாதது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் தனக்குள் பூட்டி வைத்த துயரத்தைப் போல உள்ளது.
கதையின் முடிவில் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் பணம், “நீயாவது ஒருமுறை ஊருக்குப் போய்வா” என்பது கதையின் மிக ஆழமான குத்து.

Sunday, 5 April 2026

 

எண்ணம் இரங்காதோ?

ஆசி கந்தராஜா

(‘அந்திமழை’ ஏப்ரல் 2026)

 


சிங்காரம்பிள்ளை மரணப் படுக்கையில் படுத்துக் கிடந்தார். வயோதிபத்தின் ரேகைகள் முகத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் கண்கள் சுருங்கிச் சிறுத்திருந்தன. தளர்ந்து தொங்கிய வாய்த் தசைகள் எதையோ சொல்ல அசைந்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவரது இறப்பை எதிர்பார்த்து, பிஜி இந்தியர்கள் முற்றத்தில் கூடியிருந்தார்கள். உயிர் இன்னமும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரியும். எத்தனை ஆண்டுகால ஏக்கம் அது! 

வீட்டுக் கோடியில் கிளைபரப்பி நின்ற மா மரத்தின் கீழே, ஆண்கள் காவா அருந்திக் கொண்டிருந்தார்கள். பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் காவாச் செடி, வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரைக் காயவைத்து இடித்த மாவை, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டினால் வரும் பானம் காவா. இது மிதமான போதை தருவது. மூளைக்கும் உடலுக்குமான தகவல் பரிமாற்றத்தை மந்தமாக்கி, உடம்பைச் சோர்வடையச் செய்வது. பிஜி மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் தவிர்க்க முடியாதது. கால ஓட்டத்தில் பிஜி இந்தியர்களும் இதைத் தத்தெடுத்து தமதாக்கிக்கொண்டார்கள்.

போதை தலைக்கேறியதால் சிங்காரம்பிள்ளையின் மகன் தென்னை மரத்தின் கீழே சுருண்டிருந்தான். வழமைபோல காவாவுடன் தென்னஞ் சாராயமும் அவன் அருந்தியிருக்கவேண்டும்.

காவா தயாரிக்கும் ஆரவாரம் கேட்டு ஆண்பெண் என்ற பேதமின்றி சுதேசிகளும் அங்கு வந்திருந்தார்கள்.

நெட்டையும் குட்டையுமான பல தென்னை இனங்கள் நிறைந்த அந்த வளவும் வீடும் சிங்காரம்பிள்ளையின் கடும் உழைப்பில், சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தில் உருவானவை. இலந்தை, நாவல் முதல் இந்தியாவில் காணப்படும் எல்லா மரங்களும் அங்கு நின்றன. மாவும் பலாவும் முருங்கையும் காய்த்துக் குலைகுலையாகத் தொங்கின. கறிமொந்தன் உட்பட எல்லா வகை வாழை இனங்களும் வஞ்சகமில்லாமல் குலை தள்ளின.

அயல்வீட்டு சுதேசிப் பெண்ணொருவர் முற்றிய மாங்காய்களைப் பிடுங்கி தனக்கும் மற்றவர்களுக்கும் பத்திரப்படுத்திய பின், அணில் குடைந்த மாங்காய்களைத் தோல் சீவி வெட்டி, உப்புத்தூள் கலந்து காவாவுக்கு உவப்பான சைட்டிஸ் தயாரித்தார். சிங்காரம்பிள்ளை வளர்த்த நாய்மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து குலைத்தபடி வளவைச் சுற்றி வந்தது.   

கரும்புத் தோட்டத்தில் வெய்யில் குடித்துக் காய்ந்த உடம்பு படுக்கையில் தளர்ந்துகிடக்க, பாதி திறந்திருந்த விழிகள் அருகிலிருந்த றங்குப் பெட்டியில் நிலைகுத்தி நின்றன. சிங்காரம்பிள்ளை பிஜிக்கு வந்தபோது கொண்டுவந்த றங்குப்பெட்டியது. பெயின்ற் கழன்று அடிக்கடி துருப்பிடிக்கும் றங்குப்பெட்டி, தேங்காயெண்ணையும் மண்ணெண்ணையும் சேர்ந்த கலவை எண்ணையால் துடைக்கப்பட்டு, ஆமைப் பூட்டால் பூட்டப்பட்டிருக்கும். றங்குப்பெட்டியைத் திறந்து பார்க்க அவர் எவரையும் அனுமதித்ததில்லை. ஆனாலும் றங்குப்பெட்டி உனக்குத்தான் என அடிக்கடி பேரனுக்குச் சொல்வார்.

சிங்காரம்பிள்ளையின் இறப்பு அங்கு வந்திருந்தவர்களுக்கு கவலைச் சாவல்ல. அதுவொரு கலியாணச் சாவு. தொண்ணூற்று வயதுக்குமேல் வாழ்ந்து சாதித்த கட்டை, நிம்மதியாகப் போய்ச் சேரவேண்டியதுதான் என்ற நினைப்பு. வந்திருந்தவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணைத் தூவியபடி சிங்காரம்பிள்ளை தொடர்ந்தும் சேடமிழுத்துக் கொண்டிருந்தார்.

Tuesday, 10 September 2024

 

பூக்களே, காதல் செய்யுங்கள்..!

அறிவியல்புனைகதை

ஆசி கந்தராஜா

 


இன்று அர விடுமுறை. என்னுடைய மனைவி மெல்பனில் வசிக்கும் மகள் வீட்டுக்குப்போக, நான் சோம்பலை அடைகாத்து, வீட்டில் பொழுதைப் போக்கினேன். காலை பத்து மணி இருக்கும். கைத்தொலைபேசி சிணுங்கியது. மறு முனையில் செல்லத்துரை அண்ணை.

இண்டைக்கு வீட்டிலை நண்டுக்கறி தம்பி, மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திட்டுப் போவன், என படு கரிசனையாக அழைத்தார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தங்கம்மா அக்காவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் காரமான நண்டுக்கறியை நினைத்ததும் நாக்கில் ஜலம் ஊறியது. அடுத்த அரை மணி நேரத்தில் செல்லத்துரை அண்ணை வீட்டில் ஆஜரானேன்.

நண்டுக்கறி மூக்கைத் துளைத்தது. தங்கம்மா அக்கா நண்டுக்கறிக்குத் தோதாக குசினியில் முருங்கை இலைச் சொதி வைத்துக்கொண்டு நின்றார்.

பின் வளவில்,  நட்ட கண்டுகளுக்குத் தண்ணிர் விட்டபடி, இஞ்சாலை வாதம்பி, எனக் குரல் கொடுத்தார் செல்லத்துரை அண்ணை.

Tuesday, 2 January 2024

 

அறிவியல் புனைகதை:

 


மரணத்தின் குடி.

-ஆசி கந்தராஜா-

(ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை. தை 2024)

வாக்கெடுப்பு, பதினான்கு அக்டோபர் 2023 சனிக்கிழமை நடந்தது!

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளான, அபொர்ஜினி பழங்குடி மக்களின் நலன் சார்ந்து, அரசியலமைப்பை மாற்ற வேண்டுமா என்பதற்கான  கருத்துக் கணிப்பு அது. அறுபது சதவீதமான வாக்காளர்கள், வேண்டாம் என்றே வாக்களித்தார்கள். அபொர்ஜினிகளுக்குச் சொந்தமான இந்த நாட்டில், வந்தேறு குடிகளாக வாழும் வெள்ளையர்களும் மற்றவர்களும் அபொர்ஜினிகளுக்கு எதிராக வாக்களித்ததை, மாலினியும் அவர்சார்ந்த மனித உரிமை அமைப்பும் எதிர்பாக்கவில்லை. இதற்கும்மேலாக மாலினி வாக்களிக்கச் சென்றபோது நடந்த சம்பவம் அவரது மனதைப் பெரிதும் வருத்தியது.

நடந்தது இதுதான்!

Tuesday, 12 December 2023

 அறிவியல் புனைகதை:

வைரஸ் புராணம்

 


ங்கள் வீட்டில், ஒரு எலுமிச்சை நின்றது. வருடம் முழுக்கக் காய்க்கும். விதைகள் இல்லை, நல்ல புளி. திடீரென அதன் இலைகள் வெளிறிச் சுருண்டு, பட்டை வெடித்து, காய்ப்பதை நிறுத்திக் கொண்டது.

எலுமிச்சைக்கு வைரஸ் நோய் (CTV) என்பதை உறுதி செய்து கொண்டேன். தாமதிக்காது மரத்தை வேருடன் பிடுங்கி எரித்து விட்டேன்.

மனைவிக்கோ அது பெரும் கவலை. அது அவள் ஆசை ஆசையாக, பண்ணையில் வாங்கி, நட்டுவளர்த்த மரம்.

எல்லாத்துக்கும் மருந்தடிக்கிறியள் எலுமிச்சைக்கு மருந்தடிக்கேலாதோ? எனப் புறுபுறுத்தாள் மனைவி.

தாவரத்தையோ அல்லது மனிதர் உட்பட விலங்குகளையோ தாக்கும்   வைரஸ் கிருமிகளுக்கு மருந்தில்லை என்றேன் மொட்டையாக.

என்ன சொல்லுறியள்? உலகமே கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு ஆராச்சியில் இறங்கியிருக்குது. நீங்கள் வைரஸ் கிருமிக்கு மருந்தில்லை என, புதுக்கதை சொல்லுறியள் என்றவாறே என் முன் வந்தமர்ந்தாள் மனைவி.

Friday, 1 December 2023

 

அறிவியல் புனைகதை:

 

பலஸ்தீனியன் வீட்டுப் பூனைகள்.




டந்த பத்து வருடங்களாக சுந்தரம் மேட்டுக்குடிகள் வாழும் குறிச்சியொன்றில் வசிக்கிறார். அறியப்பட்ட கண்வைத்தியரான அவர், செல்வந்தர்கள் வாழும் புறநகர்ப் பகுதியில் வீடுவாங்கியது ஒன்றும் புதினமல்ல. அடுத்த வீட்டில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக யூதப்பெண்மணி நயோமி குடியிருக்கிறார். விசாலமான பல அறைகள் கொண்ட, மாளிகைபோன்ற அந்த வீட்டில், அவர் தனியாள். அவருக்கு வயது, அறுபதுக்குமேல் இருக்கும். ஜேர்மனியில் அடொல்வ் ஹிட்லரின் அடக்குமுறைகளுக்குத் தப்பி, இவரின் பெற்றோர் பெரும் செல்வத்துடன் சிட்னியில் வந்து குடியேறினார்களாம். இதற்குமேல் நயோமி பற்றி அந்த வீதியில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. அவரின் வீட்டுக்கு எரும் வந்துபோகும் சிலமனுமில்லை. எப்போவாவது ஒருநாள், ஹிப்பா தொப்பி அணிந்த ஆண்களும், தலைமுடியை மூடிமறைத்த பெண்களும் வருவார்கள். நயோமிக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. கண்வைத்திய கிளினிக்கில் நேரஒதுக்கீடு பெற நீண்டகாலம் எடுக்குமென்பதலால், நயோமி வைத்திய ஆலோசனை கேட்டு அவ்வப்போது சுந்தரத்திடம் வருவார். வந்தாலும் உள்ளே வரமாட்டார். வெளிவாசலில் நின்றுகொள்வார்.

ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பெருநகரங்களில் தனித்தனியான குறிச்சிகளுண்டு. இஸ்லாமியர்களும் மதரீதியாக சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுள் கணிசமானோர் லெபனானியர்கள், துருக்கியர்கள், பலஸ்தீனியர்கள். சிட்னியில் ஸ்ட்ராத்பீல்ட் என்னும் இடத்தில் தமிழர்களும் கூடிவாழ்ந்தார்கள். வசதிவாய்ப்புகள் பெருக, வேறு இடங்களில் கோவில் கட்டி, அதைச்சூழ வீடுவாங்கி வாழ்கிறார்கள்.

டாக்டர் சுந்தரம் பணிபுரியும் வைத்திய சாலையில், இருதய நோய் வைத்திய நிபுணராகக் கடமையேற்றார், போலஸ். அவரது முழுப்பெயர் வாய்க்குள் நுழையாது. லண்டனில் மருத்துவம் படித்து சிட்னிக்குப் புலம்பெர்ந்த இவர், ஒரு பலஸ்தீனியர். மகப்பேறு மருத்துவரான இவரின் மனைவி, ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரி. வீடு வாங்க இவர்கள் ஆயத்தமானபோது விற்பனைக்குவந்தது, நயோமியின் வீட்டுக்கு அடுத்தவீடு. போலஸ் தம்பதிகள் அந்த வீட்டை வாங்குவதற்கு சுந்தரம் காரணமானார்.

போலஸ் ஒரு பலஸ்தீனியர் என்பதை நயோமி எப்படியோ அறிந்துகொண்டார். இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் குறிச்சியில் வாழாமல், இவன் ஏன் இங்கு வந்தான்? என்ற வெப்பிசாரம் நயோமியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. இதிலிருந்து ஆரம்பமாகியது மாமரப் பிரச்சனை.

 அறிவியல் புனைகதை:

''சிலீப் அப்னியா''

-ஆசி கந்தராஜா-



பீட்டர் சுல்ஸ், என்னுடன் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தவன். அவனுக்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவான். அதேயளவுக்கு அனைவரையும் ஐமிச்சமாகப் பார்ப்பான், அவதானமாக இருப்பான். தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என்ற மனநிலையிலிருந்து மாறமாட்டான். தானொரு யூதன், ஜேர்மன் நாட்டிலிருந்து சிறு வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவன், என அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

ஜேர்மனி இரண்டாகப் பிளவுபட்டிருந்த காலத்தில், கிழக்கிலும் மேற்கிலும் படித்தவன், பணிபுரிந்தவன் என்ற வகையில் இவனது பெயர் ஒரு யூதப்பெயரல்ல, அது ஜேர்மன் பெயர் என்பதை நான் அறிவேன்.

எமது கல்விப் பீடத்தின் நத்தார் கொண்டாட்டத்தின் போது இருவரும் மது அருந்திப் போதையேறிய நிலையில், உண்மையில் நீ யூதனா? என எதேச்சையாகக் கேட்டேன். கொஞ்சநேரம் எதுவும்பேசாது அமைதி காத்தவன், பதில் எதுவும் சொல்லாமல் கொண்டாட்ட மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டான். இது அவனது இயல்பான குணமல்ல. கேள்வி கேட்பவனை மடக்கி, வெட்டி, உரத்துப்பேசி, தகுந்த பதிலடி கொடுப்பது அவனது இயல்பு.

அதிக அளவிலே அவன் மது அருந்துவதையும், யூதர்களுக்கான உணவுப் பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் வாழ்வதையும் மனதில் கொண்டே, நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

Wednesday, 24 May 2023

 

நிறம்மாறும் ஓணான்கள்

ஆசி கந்தராஜா

(ஜீவநதி. சித்திரை 2023)

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது மனதைச் சுட்டெரித்தது. ஒத்துப் போவதென்பது போலிகளுக்குத் துணை போவதுதானோ?

அபொர்ஜினி என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் அவர். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு மொழிகள் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் தனித் தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால் இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன என்பதைப் பரமலிங்கம் நாளடைவில் புரிந்து கொண்டார். இதனால், அகண்டு பரந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றைக் கற்பனை பண்ணி மகிழ்ந்த காலங்களும் உண்டு.

பரமலிங்கம் பணிபுரியும் கல்விச் சாலைக்கு முதல் முறையாக ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக அவன் தம்பித்துரை அண்ணரின் மகன் இராசதுரையை அச்சுஅசலாக ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி சொன்னார். இதனால் விரிவுரைகளுக்கு அப்பால், அறிவியல் பாடங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச்சாலை பரமலிங்கத்தை நியமித்தது என்பதிலும்பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு. கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் ஆதிவாசிகளின் நடனம் இடம்பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால் குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, கையிலே யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். டிட்ஜெரிடூ எனப்படும் நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவ மரக் கருவி இசை எழுப்ப, தாளக் குச்சிகள் தாளம் போட்டன. வாத்திய இசையும் தாளமும் ஒன்றிணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள்.

.