Sunday 31 January 2021

சிறுகதைத் தொகுதிகளின் முகவுரை

1.     பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்

2.     கள்ளக் கணக்கு: அ முத்துலிங்கம்

3.     உயரப்பறக்கும் காகங்கள்: இந்திரா பார்த்தசாரதி

4.     பாவனை பேசலன்றி: பிரபஞ்சன்


1.     பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்:

ஆசி கந்தராஜாவின் புனைகதைகள்

சி கந்தராஜா இன்றைய ஈழத்து புலம்பெயர் எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்மனி, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் கல்விகற்றவர். உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கற்பித்தவர். விவசாயத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர், ஏராளமான சர்வதேச ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். அவ்வகையில் சர்வதேச அளவில் அறியப்பட்ட, அங்கீகாரம் பெற்ற ஓர் அறிவியல் அறிஞர், பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருபவர். இத்தகைய பின்புலமும், படைப்பாற்றலும் உள்ள ஒருவரின் தமிழ் இலக்கியத் துறைப் பிரவேசம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் தந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

Saturday 30 January 2021

அசைல்

ஆசி கந்தராஜா

ன்று இலங்கை அகதிகளுக்கான விசாரணை நாள். குடிவரவு அதிகாரிகளினால் நடத்தப்படும் இந்த முதலாவது நேர்காணலில், அகதி அந்தஸ்துப் பெறுவோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இப்பொழுதெல்லாம் நிலமை முந்தின மாதிரி இல்லை, சொன்னதையெல்லாம் அப்படியே நம்புவதற்கு. அந்தந்த நாடுகளின் அரசியல் பிரச்சனைகளை, ஆதியோடந்தமாக விசாரணை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாவது விசாரணையில் வெற்றி பெறாதவர்கள்  கீழ் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என, மாறிமாறி மனுச் செய்து காலத்தைக் கடத்துவார்கள். அதற்குள் உழைப்பதை உழைத்து, ஊரில் போய்ச் செட்டிலாகிவிடலாம் என்ற பொருளாதார மனக்கணக்கு இவர்களுக்கு. இதற்காகவே நீதிமன்றங்களில் அப்பீல் செய்ய, பெருவாரியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நம்மவர்கள் உட்பட!

காத்திருப்போர் அறையில் தமிழர்கள் மட்டுமல்ல, ஒருசில சிங்களவர்களும் விசாரணைக்காகக் காத்திருக்கிறார்கள். தங்கள் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்ல, ஒருசிலர் வழக்கறிஞர்களுடன் வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இங்குள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்களைக் கூட்டிவந்திருக்கிறார்கள். மொத்தத்தில், இவர்கள் எல்லோரும் தமிழ் சிங்கள தேசிய முரண்பாட்டுப் பின்புலத்தை மையமாக வைத்து, அகதி அந்தஸ்துக் கோர வந்தவர்கள். இவர்கள் மத்தியில் தமிழரசி தன்னந்தனியே விசாரணைக்காகக் காத்திருக்கிறாள். முப்பது ஆண்டுகால ஈழப் போராட்டம் தன் கண்முன்னே வீழ்ந்த கொடூரம், தாளாத துயரமாக மனதை அழுத்த, அவள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய நினைவில் அலை அலையாக போர்க்காலச் சம்பவங்கள் வந்துவந்து மறைந்தன. இந்த நாட்டுக்கு அவள் தானாக விரும்பி வந்தவளல்ல. மாறாக கூட்டிவரப்பட்டவள்.

Wednesday 27 January 2021

 நரசிம்மம்

ஆசி கந்தராஜா

 

வனுடைய பெயரை இதுவரை யாரும் முழுதாகச் சொன்னது கிடையாது. தெரிந்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பெயரைச் சுருக்கி, 'தமிழ்' என்றே அழைத்தார்கள். பாடசாலைப் பதிவு இடாப்பில் மட்டும் அவனுடைய பெயர், ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றிருந்தது. இதில் அவனது முதற்பெயர், நடுப்பெயர், குடும்பப்பெயர் என்ற பிரிவினை இல்லை. இந்த மூன்றும் சேர்ந்த ஒன்றே, அவனது முழுப்பெயர். பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்க்கும்போது 'பெயரைச் சற்றுச் சுருக்கிப் பதியலாமே' என்றார் தலமை ஆசிரியர். என்னுடைய மகனின் பெயர் அதுதான், அது முழுமையாகப் பதியப்பட வேண்டுமென பிடிவாதமாக நின்றாள் புனிதவதி. இதேமாதிரியான பிரச்சனை, வன்னியில் உலர் உணவுப் பங்கீட்டுக்குப் பதிவு செய்தபோதும் ஏற்பட்டது. கிராமசேவகர் ஒரு சிங்களவர், இனத்துவேசம் கொண்டவர். பெயரை முழுமையாகப் பதியாது இழுத்தடித்தார். புனிதவதி அசைந்து கொடுக்கவில்லை. இதனால் உணவுப் பங்கீட்டு அட்டையிலும் அவனது பெயர் ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றே பதியப்பட்டது. இந்த வன்மம் அவள் தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் வலிகளுக்கான ஒருவகை ஒளடதம், சிதறிக் கிடக்கும் கோப நெருப்புக்கான வடிகால்!

Saturday 23 January 2021

பணச்சடங்கு

ஆசி கந்தராஜா

 

நாகலிங்கம் மாஸ்டர் மனைவியுடன் சிட்னிக்கு வந்து மூன்று மாதமாகிறது. இது அவர்களது முதல் வருகை மட்டுமல்ல முதலாவது விமானப் பறப்பும்கூட. முப்பத்தைந்து வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் 'டிமிக்கிவிடும் மகனுக்குஒரு கால்க்கட்டுப் போடும் வைராக்கியத்துடன் ஒரு வருஷ விசாவில் சிட்னிக்கு வந்திருக்கிறார்கள். நாகலிங்கம் மாஸ்டர் விரும்பியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபுகுந்துதமிழ் மூத்த பிரசைகள் சங்கம்கலை இலக்கியப் பேரவைதமிழர் கூட்டமைப்புஇந்துக் கோவில்கள் என பல்வேறு தமிழ்சமூகசமைய அமைப்புக்களின் தலைவராகியிருக்க முடியும். அந்த அளவுக்கு வல்லமையுள்ள மனுஷன் அவர். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கிபடிப்படியாக உயர்ந்து முதலாம் தர பாடசாலை அதிபராக பத்து வருடங்கள் ஊரில் பணிபுரிந்த பின்னர் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது மனைவி பூமணி டீச்சரும் குறைந்தவரில்லை. ஆரம்ப பாடசாலை ஒன்றின் தலமை ஆசிரியர். அத்துடன் ஊரிலுள்ள மாதர் சங்கத்தின் நிரந்தர தலைவியும்கூட! 

 

எதிலீன் ஹோமோன் வாயு

ஆசி கந்தராஜா

 -1-

ரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தபோது எனக்கு பதின்மூன்று வயது. இராசதுரை, நான், சரவணை அம்மானின் ஒரே மகள் பூங்கொடி எல்லோரும் அப்போது ஊர்ப் பாடசாலையில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். சரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தவரோ அல்லது அவரை அடித்துத் தூக்கினதோ...? என்ற சமசியம், அப்போது பலருக்கு இருந்தது. இதுபற்றி ஊரிலே ஆரென்ன சொன்னாலும், சந்தையால் வந்த சரவணை அம்மான், அன்று பெண்சாதியுடன் சண்டை பிடித்ததை, நான் பார்த்தேன். இந்தச் சண்டை வெறும் வெண்டிக் காயால் வந்தது.

 தலைமுறை தாண்டிய காயங்கள்

ஆசி கந்தராஜா

 

றூத் என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்.

'மிக நல்ல செய்தி சேர், கேள்விப்பட்டீர்களா...?' என்றான் பரபரப்புடன்.

அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல் மூச்சு வாங்க, இணையத் தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது 'ஐபாட்' அலைபேசியிலுள்ள 'இணைய' செய்தியையும் காண்பித்தான்.          

'இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது...' என அந்தச் செய்தி தொடர்ந்தது.

 சாது மிரண்டால்...!

ஆசி கந்தராஜா

கிராமசேவகர் மாமா, பேர்த்சேட்டிபிக்கற் (Birth certificate) வந்திட்டுதோ? எனக்கேட்டு, வழமை போல எனது அலுவலகத்துக்கு வந்திருந்தான் நாராயணன்.

நடந்து வந்த களைப்பினால் அவனுக்கு மூச்சு வாங்கியது. பிறப்பிலேயே நாராயணனுக்கு கால் ஊனம். இருந்தாலும் நல்ல மாற்றுத் திறனாளி. கண் பார்த்ததை, அவனது கை செய்யும். தோட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்கள், பழுதா? கூப்பிடு நாராயணனை, என்னுமளவுக்கு ஊரிலே அவன் பிரசித்தம். அவனுக்கு ஆதரவாய் வாழ்ந்த பாட்டிக் கிழவியும் இறந்துவிட, மெசின் திருத்தப் போகுமிடத்தில் சாப்பாடுவான். இல்லையேல், இருக்கவே இருக்கிறது கதிரேசு கடை ரொட்டியும், வாழைப் பழமும், தேத்தண்ணியும்.

'கார்த்திகை மாசத்தோடை உங்களுக்கு பென்சன்எண்டு கேள்வி, அதுக்கு முதல் பேர்த்சேட்டிபிக்கற்ரைஎடுத்துத் தாங்கோ' என மீண்டும் நச்சரித்தான், நாராயணன்.

 கையது கொண்டு மெய்யது பொத்தி

ஆசி கந்தராஜா

 

ந்தச் சிறுவன் எந்தவித சலனமுமின்றி நின்றான். பதினைந்து வயதுக்கு மேல் இருக்காது. கைகள் குருதியால் நனைந்திருந்தன. அவனருகில் நடுங்கியபடி அவள். பத்து வயது மதிக்கலாம். வயசுக்கு மீறிய வளர்ச்சி அவள் உடலில் தெரிந்தது. வயிற்றிலும் மார்பிலும் கசிந்த இரத்தம், கிழிந்து தொங்கிய அவளது சட்டையூடாக வடிந்து கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலும், சிரிய அகதிகளும் லெபனானியர்களும் சிறுவர்களைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். பொலீஸ்காரன் ஒருவன் அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

லெபனான் தலைநகர் பெய்ரூத்திலுள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்துக்கு முன்னே, மத்தியதரைக் கடற்கரையோரம், காலையிருந்து மாலைவரை அகதிச் சிறுவர்கள் றோசாப் பூ விற்பார்கள். இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமோ முகவரியோ இல்லை. சிவப்பு றோசாக்கள் காதலின் சின்னமாகையால், மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவை அமோகமாக விற்பனையாகும். பெரும்பாலான அகதிச் சிறுவர்கள் பூ விற்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பிச்சை எடுப்பார்கள், அசந்தவர்களிடம் 'பிக்பொக்கற்' அடிப்பார்கள். பெய்ரூத் நகர பொலீசாருக்குப் பாரிய தலையிடியாக இருக்கும் இவர்கள், குற்றம் செய்து பிடிபட்டால் நேரடியாக சிறுவர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப் படுவார்கள்.

 எதிரியுடன் படுத்தவள்

ஆசி கந்தராஜா

மேற்குச் சுவர் என்னும் வெயிலிங் வால்...!

யூதர்கள் வயது வித்தியாசமின்றி அந்தச் சுவரில் தலையை முட்டிப் பிரார்த்திக்கிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பிள்ளையார் கோவிலில் குட்டிக்கும்பிட்ட பழக்கத்தில் நானும் மூன்று முறை சுவரில் முட்டிப் பிரார்த்திக்கிறேன்.

மன்னர் தாவீதும், அவரின் மகன் சாலமனும் கட்டிய தேவாலயங்கள், தொடர் படையெடுப்புக்களால் சிதைக்கப்பட, யூதர்களின் கோயிலில் மிஞ்சியது, இந்த ஒற்றைச் சுவர் மட்டுமே. 'நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று காட்டுவதற்கு கடவுள் விட்டு வைத்திருக்கும் ஒற்றை அடையாளமாக யூதர்கள் இதை நினைக்கிறார்கள். இதனால் வாழ்வில் ஒருமுறையேனும் சுவரைத் தரிசித்து, முட்டிக்கொண்டு அழுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

 சாத்திரம் உண்டோடி?

ஆசி கந்தராஜா

 

சுந்தரமூர்த்திக்கு இருப்புக் கொள்ளவில்லை.

உண்மையாகவே அது நடந்து விட்டால் என்னசெய்வது என்கிற பயம் அவரை வாட்டியது. இந்த அவதியில் நாலுதடவைகளுக்கு மேல், அலுவலகத்தில் இருந்து, மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதுபற்றிக் கேட்டுவிட்டார். தொலை பேசியின் மறுமுனையில், மனைவி சூடான எண்ணையில் போட்ட கடுகாக வெடித்தாள்.

நான் சொல்லுறதைக் கேட்டால் ஏன் இந்தப்பாடு? வைச்சுக் கொண்டிருங்கோ. ஊர்ச்சனம் குண்டியாலை சிரிக்கப் போகுது’ என்கிற வார்த்தைகளை இணைத்துப் பொரிந்து தள்ளினாள்.

கடைசி இரு முறையும் சுந்தரமூர்த்தியின் குரலைக் கேட்டதுமே, மௌனமே பதிலாகச் சடக்கென தொடர்பைத் துண்டித்து விட்டாள்.

 ஆண் சுகம்

ஆசி கந்தராஜா

-1-

ரவு இரண்டு மணி இருக்கும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி மோனிக்காவுடன் வந்திருந்தார் ஜேம்ஸ். அவரின் முகம் இறுகிக் கறுத்திருந்தது. மோனிக்காதான் விஷயத்தைச் சொன்னார்.

'ரோனி இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது. நடந்தது விபத்து, என்பதை எங்களால் நம்ப முடியவில்லை' என்ற மோனிக்கா, கண்களில் திரண்டிருந்த கண்ணீரை மறைக்க, கழுத்தில் கட்டியிருந்த மவ்ளரை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். ஜேம்ஸ் மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அவரின் கண்களிலும் கண்ணீர் கரைகட்டி நின்றது.

இரவு நேரத்தில் ஜேம்ஸ் கார் ஓட்டுவதில்லை, கண்பார்வை குறைவு.  ஆனாலும், அந்த அகால வேளையில் விபத்து நடந்த இடத்துக்குப் போக வேன்டுமென இருவரும் அடம்பிடித்தார்கள். ரோனியின் உடல் அந்த இடத்தில் இருக்கப் போவதில்லை. பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பார்கள். இருந்தபோதிலும் அவர்களைத்  திருப்திப்படுத்த எனது காரில் விபத்து நடந்த இடத்துக்குப் போனோம். ரோனியின் கார், வீதி ஓரத்து மின் கம்பத்துடன் மோதி நொருங்கிக் கிடந்தது. போலீசார் விபத்து நடந்த இடத்தில் கோடுகள் கீறுவதும் படமெடுப்பதுமென சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

கலியாண கெமிஸ்றி 

(வேதியின் விளையாட்டு)

ஆசி கந்தராஜா

து சரிவராது போலத்தான் இருக்குஎன்ற மனைவியின் பதிலால் பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது!

பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர்மானித்துத் திட்டமிட்டுக்கொள்வது அவரது சுபாவம். இதுதான் அவரது பலமும், பலவீனமும்!

படுக்கையில் புரண்டு படுத்தார் பென்னம்பலம்.

 காதல் ஒருவனைக் கைப்பிடித்து…!

ஆசி கந்தராஜா

ந்த இளைஞன் அவர் முன் அமர்ந்ததும் வீரசிங்கம் மலைத்துப் போனார். தன் முன்னால் இருந்த மடிக் கணனியில் அவனது விபரங்களைத் தட்டிப் பார்த்தார். தந்தை பெயர் அமீர் முகம்மது, தாய் றொஸ்நாக். தந்தையின் பிறப்பிடம் ஈரான், ஆனால் இளைஞன் சிட்னியில் பிறந்ததாக தரவுகள் சொல்லிற்று. பதினெட்டு வருடங்களுக்கு மேலாக பேராசிரியர் வீரசிங்கத்தின் மனதை அலைக்கழித்த கேள்விகளுக்கு, அத்தகவல்கள் விடையாக அமைந்தன.

ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில், பன்னிரண்டாம் வகுப்பில் அதிகூடிய புள்ளிகள் எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மேலதிகமாக, மருத்துவப் படிப்பிற்கென பரீட்சை எழுதி, நேர்முக பரீட்சையிலும் சித்திபெற வேண்டும். மருத்துவம் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு புனிதமான தொழில். மருத்துவம் படிக்க வருபவருக்கு அதில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டா எனப் பரீட்சிக்கும் நெறி முறைகளே இவை. இப்படியான நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கே, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அந்த இளைஞன், பேராசிரியர் வீரசிங்கத்தின் முன் அமர்ந்திருந்தான். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், அமீர் முகம்மது பேராசிரியடம் ஆராய்ச்சிப் படிப்புக்காக சிட்னி வந்தபோது எப்படி இருந்தானோ அப்படியே, ‘அச்சொட்டாக’ அந்த இளைஞனும் இருந்தான்.

.