Wednesday, 27 January 2021

 நரசிம்மம்

ஆசி கந்தராஜா

 

வனுடைய பெயரை இதுவரை யாரும் முழுதாகச் சொன்னது கிடையாது. தெரிந்தவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பெயரைச் சுருக்கி, 'தமிழ்' என்றே அழைத்தார்கள். பாடசாலைப் பதிவு இடாப்பில் மட்டும் அவனுடைய பெயர், ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றிருந்தது. இதில் அவனது முதற்பெயர், நடுப்பெயர், குடும்பப்பெயர் என்ற பிரிவினை இல்லை. இந்த மூன்றும் சேர்ந்த ஒன்றே, அவனது முழுப்பெயர். பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்க்கும்போது 'பெயரைச் சற்றுச் சுருக்கிப் பதியலாமே' என்றார் தலமை ஆசிரியர். என்னுடைய மகனின் பெயர் அதுதான், அது முழுமையாகப் பதியப்பட வேண்டுமென பிடிவாதமாக நின்றாள் புனிதவதி. இதேமாதிரியான பிரச்சனை, வன்னியில் உலர் உணவுப் பங்கீட்டுக்குப் பதிவு செய்தபோதும் ஏற்பட்டது. கிராமசேவகர் ஒரு சிங்களவர், இனத்துவேசம் கொண்டவர். பெயரை முழுமையாகப் பதியாது இழுத்தடித்தார். புனிதவதி அசைந்து கொடுக்கவில்லை. இதனால் உணவுப் பங்கீட்டு அட்டையிலும் அவனது பெயர் ஈழத்-தமிழன்-பிரபாகரன் என்றே பதியப்பட்டது. இந்த வன்மம் அவள் தன் மனதில் பூட்டி வைத்திருக்கும் வலிகளுக்கான ஒருவகை ஒளடதம், சிதறிக் கிடக்கும் கோப நெருப்புக்கான வடிகால்!

புனிதவதி தன் மகனுடன் நரசிம்மர் கோவிலடியில் குடியிருக்க வந்தது தற்செயலான நிகழ்வுதான். நரசிம்மர் என்ற கடவுளை இதற்கு முன்னர் அவள் கேள்விப்பட்டது கிடையாது. பிள்ளையார், முருகன், அம்மன், வைரவருடன் அவளது சமய அறிவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நரசிம்மர் யாராக இருந்தாலென்ன? அவளைப் பொறுத்தவரை அந்தக் கோவிலும் அதன் சூழலும் அவளுக்கு மன அமைதியைக் கொடுத்தது.

வன்னிக் காட்டின் நடுவே, மகிழ மரத்தின் கீழே கனகாலம் கல்லாக இருந்தவர் இந்த நரசிம்மர். இன்று அவர் சீமெந்துக் கட்டிடத்தில் குடியிருப்பது வன்னிச்சமர் அவருக்கு வழங்கிய பெருவாழ்வு. இது அவரே எதிர்பாராதது. மகிழ மரத்துக்கு நேரெதிரே சடைபரப்பி நின்றது ஓரு அரசமரம். அதன் கீழே விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வன்னிக்கு வந்த சிங்கள இராணுவத்தினர், புத்தர் சிலை ஒன்றை வைத்துப் பிரித் ஓதினார்கள்.

எதிர்பாராத விதமாக வன்னியிலுள்ள பாரிய இராணுவ முகாம் ஒன்று புலிகளின் கைகளில் வீழ்ந்தது. இராணுவத் தரப்பில், பெரும் உயிர்ச் சேதமேற்பட்டது. இதனால், கூலிக்காகப் போரிடும் இராணுவச் சிப்பாய்களுக்கு மெல்லமெல்ல மரண பயம் தொற்றிக்கொண்டது. அவர்களை ஆற்றுப்படுத்தவும் சோர்வடைந்த சிப்பாய்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி உற்சாகப் படுத்தவும் புத்தபிக்குகள் வன்னிக்கு வரவழைக்கப்பட்டார்கள். புத்தர் கடவுள் இல்லை என்பதும் அவர் ஒரு தத்துவ ஞானி என்பதும் பௌத்த துறவிகளுக்குத் தெரியும். இதனால் புத்தர் சிலையுடன் துர்க்கை அம்மனையும் ஒன்றாக வைத்து, புத்தபிக்குகள் பிரித் ஓதினார்கள். 'சிங்க வாகனத்தில் வலம் வரும் துர்க்கை அம்மன் சத்துருக்களை அழிப்பவள்' என்று கிராமத்திலிருந்து வந்த சிங்களச் சிப்பாய் ஒருவனின் கேள்விக்குப் பதில் சொல்லப்பட்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில், 'இரணியன் என்ற கொடிய எதிரியை வதம் செய்த கடவுளே நரசிம்மர்' என இந்தியாவில் பயிற்சி முடித்துத் திரும்பிய இராணுவ அதிகாரி சொன்னதும், மகிழ மரத்தின் கீழே தேடுவாரற்று இருந்த நரசிம்மருக்கு மவுசு கூடியது. இருட்டில் இருந்தவருக்கு இரவில் வெளிச்சம் வந்தது. கட்டிடம் அமைத்து அஸ்பெஸ்ரஸ் கூரையும் போடப்பட்டது. பாளி மொழியில் அவருக்கும் பிரித் ஓதினார்கள். காலஓட்டத்தில் நரசிம்மர் எதிரியை வெல்லும் கடவுளாக உருவகப் படுத்தப்பட்டுச் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார்.

வன்னிப் பிரசேத்தில் ஈழப்போர் திடீரென உக்கிரமடைந்தது. களமுனைக்குச் சென்று திரும்பும் சிப்பாய்களின் மன அமைதிக்காக, புத்தரின் வெவ்வேறு தியான நிலைகளை, முகாம் சுவர்களிலும் விகாரைச் சுவர்களிலும் வரையுமாறு உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தினார்கள். இதற்காக, சித்திரம் வரையும் சிப்பாய் ஒருவன் கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுபப்பட்டான்.

ஓவியன் தாமதிக்காது செயலில் இறங்கினான். நரசிம்மர் சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர். லஷ்மிநரசிம்மர் புலிமுகமும் மனித உடலும் கொண்ட அவதாரம், என்ற தகவல்களை இணையவழித் தேடல் மூலம் தெரிந்து கொண்டான். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான போர், புலிக்கும்  சிங்கத்துக்குமான போர் என அவன் தன் கற்பனையில் உருவகப் படுத்திக்கொண்டான். இதனால் நரசிம்ம முர்த்தியின் பல்வேறு வடிவங்களும் கோவில் சுவர்களில் வரையப்பட்டன. இவற்றுள் சிங்க முகம் கொண்ட நரசிம்மர், புலிமுகம் கொண்ட லஷ்மிநரசிம்மரைக் கடித்துக் குதறுவதாக ஓவியன் வரைந்த சித்திரம் சிங்கள இராணுவத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவனின் அதீத கற்பனையில் உருவான இன்னுமொரு ஓவியம் நரசிம்மர் கோவில் முகப்புச் சுவரை அலங்கரித்தது. பல்வேறு வர்ணங்களைக் கலந்து அந்த ஓவியத்தை வரைய, அவன் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டான். அது சிங்க உடலும் புலி வாலும் கொண்ட பிரமாண்டமான ஒரு உருவம். இதுவே 'இனப்பிரச்சனைக்கான சரியான தீர்ப்பு' என புத்தபிக்குகள் ஓவியனைப் பாராட்டினார்கள்.

இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியடைந்ததால் ஈழப் போர் முடிவுக்கு வந்தது. சரணடைந்த புலிகள் முதலில் வெவ்வேறு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய புனிதவதியும் இறுதி நாளன்று கைது செய்யப்பட்டு இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

தொடர்ந்த சில மாதங்களில் காட்டுப் பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் மூடப்பட்டு நகரத்தையொட்டி, பெரிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் அரசமரத்தின் கீழிருந்த புத்தரும் மகிழமரத்தின் கீழே வீற்றிருந்த நரசிம்மரும் அனாதையானார்கள். நரசிம்மர்க்கு இது பழக்கப்பட்ட வாழ்வுதான். ஆனால் புத்தர் இதை எதிர்பார்க்கவில்லை. தன்னையும் கூட அழைத்துக்கொண்டு போகும்படி இராணுவத்திடம் சொல்ல புத்தர் நினைத்தார். அவர் பாவம். அவருக்கு சிங்கள மொழி தெரியாது. தெரிந்திருந்தால் இற்றைவரை எத்தனை போதனைகளைச் சிங்கள மொழியில் நிகழ்த்தியிருப்பார்.   

கைதுகள், சித்திரவதைகள், மரணங்கள் என எல்லாவற்றையும் நிகழ்த்திவிட்டு, வானத்து நட்சத்திரங்கள் போல அமைதியாக உதிர்ந்து கொண்டிருந்தது காலம். மெல்லமெல்ல  போர் ஆதாரங்களை அழிக்கும் வேலைகள் வன்னியில் ஆரம்பமாகின. நரசிம்மர் கோவிலடியில் இருந்த  இராணுவ முகாம், ஆரம்ப பாடசாலையாக மாற்றப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஈழத்-தமிழன்-பிரபாகரன் இப்பொழுது அந்தப் பாடசாலையில்தான் ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். படிப்பில், சமூக அக்கறையில், விளையாட்டில் அவன் முதல்தர மாணவன் என ஆசிரியர்களால் கணிக்கப்பட்டான்.

புத்திசாலி மாணவர்களைத் தெரிந்தெடுக்கும் ஆறாம் வகுப்புக்கான ஸ்கொலஷிப் சோதனைக்கு மனுச்செய்யும் விண்ணப்பத்தில், பெற்றோரின் பெயர் கேட்கப்பட்டிருந்த போதுதான், தன்னுடைய தந்தை யார்? என்ற கேள்வி, முதன் முதலில் அவனுக்குள் எழுந்தது. அன்று மாலையே இதுபற்றித் தாயிடம் கேட்டான். 

அவரை எனக்குத் தெரியாது என்றாள் புனிதவதி மொட்டையாக.

முன்னர், பிறப்புச்சாட்சிப் பத்திரத்துக்கு பதிவு செய்தபோதும் புனிதவதி இதையே சொன்னாள். இதனால், கையால் நிரப்பிக் கொடுக்கப்பட்ட பத்திரத்தில் தந்தையின் பெயருக்குரிய கட்டம், வெறுமையாக விடப்பட்டிருந்தது. ஈழப் போராட்ட காலத்திலும் பின்னரும் வீட்டில் தந்தை இல்லாதிருப்பது அசாதாரணமானதல்ல. இருந்தாலும் அவனுடன் படித்த இதேபோன்ற மாணாக்கர்களுக்குத் தங்களுடைய தந்தையின் பெயர் தெரிந்திருந்தது. அவனில் பொறாமை கொண்ட சில மாணவர்களுக்கு அவனுடைய தாயார் இராணுவ முகாமில் இருந்தது எப்படியோ தெரிந்திருந்தது. சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் அவனைக் காயப்படுத்த, அவர்கள் இதையே குறிபார்த்து அடித்தார்கள்.

ஸ்கொலஷிப் படிவம் அனுப்ப வேண்டிய நாளும் நெருங்கியது. விண்ணப்பம் கணினியில் நிரப்பி அனுப்பவேண்டும். தந்தையின் பெயரை அதற்குரிய இடத்தில் பதியாமல், மேலே செல்ல கணினி இடம் தரவில்லை என, அதற்குப் பொறுப்பான ஆசிரியர் சொன்னார். இதனால் தன்னுடைய தந்தை யார்? என்று தொடர்ந்தும் தாயைக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இராணுவ முகாமில் புனிதவதியைப் பாலியல் வல்லுறவு செய்த நூறுக்கும் மேற்பட்ட ஆண்களில், அவனுடைய தந்தை யார் என்று அவளால் எப்படிச் சொல்ல முடியும்? புனிதவதி மிகவும் அழகானவள். கவர்ச்சியானவள். இதன் காரணமாகவே அவளை முள்வேலிக்குப் பின்னால் அடைக்காமல் இராணுவ முகாமில் வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் புனிதவதி விருந்தாக்கப்பட்டாள். ஒரு நிலையில், அவளுடன் பாலியல் உறவுகொள்ள விரும்பியவர்கள் அனைவரும் அதை நிறைவேற்றிக் கொள்ள அநுமதிக்கப்பட்டார்கள். மதுவெறியில் வந்தவர்களுள் யாருக்காவது உடலுறவுக்கு முன்னர், சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதையும் அவள் மீதே கழித்தார்கள். இந்தக் கொடுமையான நிகழ்வுகள் பற்றி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இப்பொழுது நினைவு கூர்வது அவளுக்கு எளிதான விஷயமல்ல. தனது மகன் உண்மையை அறிந்து, அதை ஜீரணித்துக் கொள்வதற்கான வயது வரும்வரை அவள் காத்திருக்க விரும்பினாள். ஆறாம் வகுப்பில் அவன் பெறப்போகும் ஸ்கொலஷிப் பணத்துக்காக, தன் இரத்தச் சரித்திரத்தை தன்னுடைய மகன் தெரிந்து கொள்ள கொண்டியதில்லையென அவள் திடமாக நம்பினாள். உன்னுடைய தந்தை ஒரு போராளி, விடுதலைப் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று மகனுக்குச் சொல்வது புனிதவதிக்கு எளிதானது. அவள் பொய் சொல்ல விரும்பவில்லை. காலம் வரும்போது அவன் அறிந்து கொள்ளட்டும் என்று எண்ணினாள்.

ஈழத்-தமிழன்-பிரபாகரன், ஸ்கொலஷிப் பரீட்ஷையில் வன்னி மாவட்டத்தில் முதலாவதாக வரக்கூடுமென, ஆசிரியர்கள் நம்பினார்கள். அந்கப் பெருமையை இழக்க, பாடசாலை விரும்பவில்லை. இதனால் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முதல் நாள் மாலை, புனிதவதியைச் சந்திக்க தலைமை ஆசிரியர் நரசிம்மர் கோவிலடியிலிருந்த அவர்களின் குடிசைக்கு வந்தார். தாயும் மகனும் அப்போது முற்றத்துத் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

வாத்தியாரைக் கண்டதும் புனிதவதி கையை அலம்பிவிட்டு அவரை வரவேற்றாள். மகன் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர் வந்ததற்கான காரணம் அவளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர் சொல்லட்டும் என புனிதவதி காத்திருந்தாள். அவளது மனதைப் படித்தவராக, சுற்றி வளைக்காது வாத்தியார் நேரே விசயத்துக்கு வந்தார்.

தந்தையின் பெயர் நிரப்பவேண்டிய இடத்தில் 'தெரியாது' எனப் பதிந்து படிவத்தை மேலே பூர்த்தி செய்யலாமா? எனக்கேட்டு அவள் சம்மதத்துக்காகக் காத்திருந்தார்.

புனிதவதி எதுவும் பேசாது அரசமரத்தின் கீழே, தேடுவாரற்றுக் கிடந்த புத்தர் சிலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். முற்றத்து முருங்கை மரத்தில் ஏறியிருந்த அவளது சேவல் ஒன்று செட்டையைப் படபடவென அடித்துக்கொண்டு அடுத்த கிளைக்குத் தாவியது. பத்து வருடங்களாக அவள் மனதுள் அமுங்கிக் கிடந்த தீக்குழம்பு வெடித்துச் சிதற எத்தனித்தது. மகன் எதிரே அவள் அழ விரும்பவில்லை. பொங்கிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்க முயற்சித்தாள். எனினும் கண்களிலிருந்து ரணம் வழியத்தான் செய்தது. இரண்டு கைகளளாலும் முகத்தை அழுத்தித் துடைத்தவள், மெல்லப் பேசத் துவங்கினாள்.

வாத்தியார் அளைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

எனது பெற்றோரும் உறவினர்களும் இன்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் போரில் நான் இறந்து விட்டதாகவே அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நான் தந்தை பெயர் தெரியாத ஓரு குழந்தையுடன் அங்கு சென்றிருந்தால், யாழ்ப்பாணச் சமூகம் என்னை எப்படி வரவேற்றிருக்கும்? அதனால்தான் இங்கு ஒதுங்கி வாழ்கிறேன். காட்டின் நடுவே தனித்து வாழும் இந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தருகிறது. கொடூரமான என்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பகிரங்கப்படுத்தி என் மகனைக் காயப்படுத்தாதீர்கள் ஐயா, எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் புனிதவதி.

வாத்தியாரின் வருகை, அவளது கசப்பான நினைவுகளைக் கிளறிவிட்டதால் அதிலிருந்து கிளம்பிய புழுதி அடங்க நேரமெடுத்தது. இதனால் நள்ளிரவு தாண்டியே புனிதவதியால் தூங்க முடிந்தது. இரவு முமுழுவதும் அரசமரத்தின் கீழே படுத்திருந்த நாய்கள் விட்டுவிட்டு ஊளையிடுவதும் குலைப்பதுமாக இருந்தன. வழமைபோல மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கே புனிதவதி எழுந்துவிட்டாள். தூக்கம் இன்னும் அவளது கண்களில் ஒட்டிக்கொண்டிருந்தது. காலையில் சமையலை முடித்பின் அவள் வயல் வேலைக்குச் சென்றால்தான் குடிசையில் மாலை அடுப்பெரியும். பொழுது விடிந்து அதிக நோமாகியும் மகன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். கடந்த சில நாட்களாக சோபையிழந்து காணப்பட்ட அவனுடைய முகம் இன்று தெளிவடைந்தது போலப் புனிதவதிக்குப்பட்டது. அவன் தூங்கட்டும் என்ற நினைவுடன் தேநீர் தயாரிக்க அடுப்பைப் பத்தவைக்கப் போனவளுக்கு, நேற்று இரவே விறகு முடிந்தது நினைவுக்கு வந்தது. திடீரென வானம் இருண்டு தடித்த மழைத்துளிகள் நிலத்தில் விழுந்து தெறித்தன. அடுப்பெரிக்க இப்பொழுது நனையாத விறகுகள் வேண்டும். சோளகம் வீசிய காலத்தில் முறிந்து விழுந்த மகிழமரத்துச் சுள்ளிகளைப் பொறுக்கி, மாரிகாலப் பாவனைக்கென நரசிம்மர் கோவில்த் தாழ்வாரத்தில் புனிதவதி அடுக்கியிருந்தாள். அவற்றை எடுக்கச் சென்றவள், அப்படியே கோவிலின் முன்னே உறைந்துபோய் நின்றாள். திசைமறந்த சிட்டுக் குருவி ஒன்று சிவுக்கென அவள் காதருகே பறந்து அவளைத் திடுக்கிட வைத்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முகப்புச் சுவரை மீண்டும் உற்றுப் பார்த்தாள்.

அந்தச் சுவரில், சிங்கள ஓவியன் வரைந்த 'சிங்க உடலும் புலிவாலும்' கொண்ட பாரிய உருவம், கூரிய பொருள் ஒன்றினால் சிதைக்கப்பட்டிருந்தது.   

(காலச்சுவடு July 2020)

No comments:

Post a Comment

.