அசைல்
ஆசி கந்தராஜா
இன்று இலங்கை அகதிகளுக்கான விசாரணை நாள். குடிவரவு அதிகாரிகளினால் நடத்தப்படும் இந்த முதலாவது நேர்காணலில், அகதி அந்தஸ்துப் பெறுவோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இப்பொழுதெல்லாம் நிலமை முந்தின மாதிரி இல்லை, சொன்னதையெல்லாம் அப்படியே நம்புவதற்கு. அந்தந்த நாடுகளின் அரசியல் பிரச்சனைகளை, ஆதியோடந்தமாக விசாரணை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாவது விசாரணையில் வெற்றி பெறாதவர்கள் கீழ் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என, மாறிமாறி மனுச் செய்து காலத்தைக் கடத்துவார்கள். அதற்குள் உழைப்பதை உழைத்து, ஊரில் போய்ச் செட்டிலாகிவிடலாம் என்ற பொருளாதார மனக்கணக்கு இவர்களுக்கு. இதற்காகவே நீதிமன்றங்களில் அப்பீல் செய்ய, பெருவாரியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நம்மவர்கள் உட்பட!
காத்திருப்போர் அறையில் தமிழர்கள் மட்டுமல்ல, ஒருசில சிங்களவர்களும் விசாரணைக்காகக் காத்திருக்கிறார்கள். தங்கள் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்ல, ஒருசிலர் வழக்கறிஞர்களுடன் வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இங்குள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்களைக் கூட்டிவந்திருக்கிறார்கள். மொத்தத்தில், இவர்கள் எல்லோரும் தமிழ் சிங்கள தேசிய முரண்பாட்டுப் பின்புலத்தை மையமாக வைத்து, அகதி அந்தஸ்துக் கோர வந்தவர்கள். இவர்கள் மத்தியில் தமிழரசி தன்னந்தனியே விசாரணைக்காகக் காத்திருக்கிறாள். முப்பது ஆண்டுகால ஈழப் போராட்டம் தன் கண்முன்னே வீழ்ந்த கொடூரம், தாளாத துயரமாக மனதை அழுத்த, அவள் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய நினைவில் அலை அலையாக போர்க்காலச் சம்பவங்கள் வந்துவந்து மறைந்தன. இந்த நாட்டுக்கு அவள் தானாக விரும்பி வந்தவளல்ல. மாறாக கூட்டிவரப்பட்டவள்.
தமிழரசி என்பது, அவளுக்கு இயக்கம் வைத்த பெயர். அதுவே இன்றுவரை நிரந்தரமாக
நிலைத்துவிட்டது. நீண்ட காலத்தின் பின்னர், அவள் அகதி அந்தஸ்துக் கோரும் விண்ணப்பத்தை நிரப்பியபோதே அபிராமி என்று தன்
உண்மையான பெயரை எழுதினாள். பெயர் விஷயத்தில்கூட காலம் தன்னை எப்படிக் கொண்டு வந்து
நிறுத்தியிருக்கிறது என்பதை நினைத்து, தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
காத்திருப்போர் அறை, நடைபாதையைப் போலச்
சற்றுக் குறுகி நீண்டிருந்தது. இதனால் எதிரும் புதிருமாக இரண்டு வரிசைகளில்
கதிரைகளை அடுக்கியிருந்தார்கள். அறையின் ஒரு பக்க அந்தலைச் சுவரில் மாட்டப்பட்ட
தகவல் பலகையிலே, உலக அகதிகள் பற்றிய, ஜெனீவா உடன்படிக்கைச்
சரத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழரசிக்கு நேரெதிரே இன்னமும் மீசை முளைக்காத
தமிழ்ப் பெடியன் ஒருவன், தனக்கும் இலங்கையில்
அரசியல் பிரச்சனை இருக்கென நிரூபிக்க, திகிலடித்த முகத்துடன் காத்திருக்கிறான். அவனுக்கு வசதியுள்ள உறவினர்கள் இந்த
நாட்டில் இருக்கவேண்டும். இல்லையேல் பசைப்பிடிப்புள்ள பின்புலம் இருக்கவேண்டும்.
ஒரு தமிழ் லோயரைத் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறான். இருவரும் குரலைத் தாழ்த்தி
மெதுவாகப் பேசினாலும் லோயரின் தடித்த குரல், முன்னால் இருந்த தமிழரசிக்குத் தெளிவாகக் கேட்கிறது.
'இலங்கையை விட்டு வெளியேற, உன்னை நிர்ப்பந்தித்த 'இறுதி'க் காரணத்தை மட்டும், விளக்கமாகச் சொல்லு' என விசாரணையில் சொல்ல
வேண்டியதை நினைவுபடுத்தினார் லோயர்.
'முந்தின பிரச்சனைகளைச் சொல்லவேண்டாமோ'?
பெடியனின் கதையைக்கேட்டு, லோயர் டென்ஷனானார். தமிழரசி மனதுக்குள்
சிரித்துக் கொண்டாள்.
'முந்தின பிரச்சனைகள் அவங்களுக்குத் தேவையில்லாதது. அந்தப் பிரச்சனைகளுக்கு
மத்தியிலும் உன்னால் அங்கு வாழ முடிந்திருக்கிறது, என அதிகாரிகள் நினைப்பார்கள்'.
'ம்'
'இந்த நாட்டில் அகதி அந்தஸ்துப் பெற வேண்டுமென்றால், ஊரிலிருந்து வெளியேற
உன்னை நிர்ப்பந்தித்த, வலுவான காரணத்தைச்
சொல்லவேண்டும். அந்தக் காரணம், இலங்கையில் உன்னால் தொடர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கவேண்டும்'.
லோயர் சொன்ன லாஜிக் விளங்காமல் 'ஙே' என விழித்தான் பெடியன்
லோயரால் இதற்கு மேலும் விளக்கமாகச் சொல்ல
முடியவில்லை. 'நான் சொல்லித்தந்ததை
மாத்திரம், விசாரணையில் சொல்லு' என்றார் காட்டமாக.
சற்றுநேரம் அமைதி காத்த பெடியன், ஜாக்கெட் பாக்கெட்டில்
பத்திரப் படுத்தி வைத்திருந்த, கடித உறையை வெளியில் எடுத்தான். பின்னர் குரலை வெகுவாகத் தாழ்த்தி, 'ஊரிலை நான் இயக்கத்திலை
இருந்தனானெண்டு கிராம சேவகர் தந்த கடிதத்தைக் கொடுக்க வேண்டாமோ'? எனக் கேட்டான்.
தமிழரசிக்கு உடம்பில் உஷ்ணம் பரவி சட்டெனத்
தலைக்கேறியது. காதைப் பொத்தி பெடியனுக்கு இரண்டு 'அறை'
குடுக்கவேணும்
போல இருந்தது. கஷ்டப்பட்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள்.
'அந்தக் கடிதத்தை உள்ளே வை. இந்த நாட்டுச் சட்டப்படி, இயக்கம் ஒரு
தடைசெய்யப்பட்ட அமைப்பு. அடுத்த பிளேனிலை உன்னைத் திருப்பி அனுப்புவாங்கள், விருப்பமோ'? எனச் சீறியவரின் செல்போன்
சிணுங்கவே, எடுத்துக் காதில்வைத்தபடி
வெளியே போனார் லோயர்.
பெடியன் தயாவுக்கு ஒரே
குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. அவனுக்குப் பக்கத்திலிருந்த சிவா இறுகிய
முகத்துடன் 'காக்க காக்க கனகவேல்
காக்க' என, மனதுக்குள்
முணுமுணுத்தபடி இருந்தான். இருவரும் இலங்கையில் இருந்து ஒரு ஏஜென்சி மூலமாகத்தான்
இந்த நாட்டுக்குள் வந்தவர்கள். சிவாவுக்கு லோயர் வைக்க காசில்லை. ஒன்றுவிட்ட
தமையனின் தயவில் இங்கு வந்தவன். பத்து வருடங்களுக்கு முன்னர் தமையனும் இந்த
நாட்டுக்கு ஈழப் போராட்டத்தை முன்வைத்து வந்தவன்தான். இப்போதுள்ள கடுமை முன்னர் இல்லாததால், சீக்கிரம் விசா
கிடைத்துக் காலூன்றிவிட்டான். இவன் மட்டுமல்ல, இங்கு அகதியாக வந்து இப்பொழுது
பிரமுகர்களாகவும் செல்வந்தர்களாகவும் வாழும் பெரும்பாலானோர், இந்த வழியாக நாட்டுக்குள்
நுழைந்தவர்கள்தான்.
நான்கு அறைகளிலும் மொழிபெயர்ப்பாளர்களின்
உதவியுடன் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒருசிலர் மட்டும் நீண்ட நேரம்
விசாரிக்கப்படுகிறார்கள். பேயறைந்த முகத்துடன் பலர் விசாரணை முடிந்து வெளியே
வருவதால், காத்திருப்போர் அறையில்
ஒருவகை அச்சம் கலந்த அமைதி நிலவுகிறது. வெளியே வந்தவர்களிடம் உள்ளே நடப்பதைக்
கேட்டறிய முடியாதபடி பாதுகாப்பு அதிகாரிகள் குறுக்கும் மறுக்குமாக விறாந்தையில்
நடந்து திரிகிறார்கள்.
குழந்தைகளுடன் வந்திருந்த இளம் தம்பதிகள், தாங்கள் கொண்டுவந்த
வீபூதியைப்பூசி, ஆஞ்சசேநேயர் படத்தைக்
கண்களில் ஒத்தி, பயபக்தியுடன்
பிரார்திக்கிறார்கள். இடையிடையே சிலுவைக் குறியிடுகிறார்கள். ஆஞ்சநேயருக்கும்
வீபூதிக்கும் சிலுவைக் குறிக்குமான முரண் அவர்களுக்குத் தேவையற்றது. வந்த விஷயம்
ஒப்பேறவேண்டும். அதற்காக எதையும் சொல்லத்
துணிந்தவர்களாகவே விசாரணைக்கு வந்திருக்கிறார்கள்.
இலங்கையில் நீண்டகாலம் நடந்த விடுதலைப்போர், பலரை மரணத்தில் தள்ளி, எஞ்சியவர்களின் உணர்வைச்
சிதைத்து, மனச்சாட்சியை
மழுங்கடித்து இறுதியில் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது என்ற எண்ணம் தமிழரசியைத் துரத்தியடித்தது. அத்துடன் நீண்ட
நேரம் ஒரே இடத்தில் இருந்ததால், அவளின் பாதிப்படைந்த தண்டுவடம் வலித்தது. எழுந்து சிறிது தூரம் நடந்தாள்.
'நீ என்ன சொல்லப்போறாய்'?
என சிவாவுக்கு
நூல்விட்டுப்பாத்தான் தயா.
'கட்டாய ஆள்சேர்ப்பில் இயக்கம் என்னைப் பிடிச்சுக்கொண்டுபோய் வைச்சிருந்ததாய், அண்ணை சொல்லச்சொன்னவர்' என்ற சிவா, பின்னர் உஷாராகி, பேச்சை மேலும் வளர்க்க
விரும்பாது ரொயிலெற்றை நோக்கி நடந்தான்.
இந்த நாட்டில் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு
என்பது உண்மைதான். ஆனாலும் அந்த இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் போராட்டமே
அனைவரையும் இந்த நாட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்ததென்பது அதைவிடவும் பெரிய
உண்மை. இதைத் தெரிந்துகொண்டும் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும்
குற்றம் சொல்லவும் தயாராகவே பலர் விசாரணைக்கு வந்திருக்கிறார்கள். அகதி
விசாவுக்காகவும் அதனால் கிடைக்கப்போகும் வசதியான வாழ்க்கைக்காவும் எப்படி
இவர்களால் சட்டென்று மாறமுடிகிறது? என்ற கேள்வி தமிழரசியின் மனதைக்கிளற, அவள் வெகுவாக ஆத்திரப்பட்டாள்
தமிழரசி விடுதலை இயக்கத்தில் நீண்ட காலம்
இருந்தவள். முன் அரங்குகளில் நின்று வீரத்துடன் போர்புரிந்தவள். ஈழப் போராட்டம்
தோற்கவில்லை என்று இன்னமும் நம்புவள். போரின் இறுதிக் கட்டத்தில் களமுனையில்
படுகாயமுற்று நீண்டகாலம்,
வெளிநாட்டு
உதவியுடன் இயங்கிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவள். பின்னர் புலம்பெயர் அமைப்பு
ஒன்றின் உதவியுடன் இந்த நாட்டுக்கு வந்தவள். இன்றும் போர்க்கால நினைவுகளுடன்
வாழ்பவள்.
நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர், தமிழரசியின் முறை வரவே
விசாரணைக்கு அழைக்கப்பட்டாள். உள்ளே ஒரு பெண் அதிகாரி மொழிபெயர்ப்பாளருடன்
அமர்ந்திருந்தார். அதிகாரியின் முதலாவது கேள்வி, அவளது முகத்திலும்
கழுத்திலும் துலக்கமாகத் தெரிந்த தழும்புகள் பற்றியது.
அவை 'விழுப்புண்கள்' என்றாள் சுருக்கமாக. அது
சரியாக மொழி பெயர்க்கப் படாததால் தமிழரசி அதற்குரிய ஆங்கில வார்த்தையைச் சொன்னாள்.
அவள் பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கில மொழியில் படித்ததால், அவளால் சரளமாக ஆங்கிலம்
பேசவும் எழுதவும் முடியும். இதனால் சொற்களைக் கவனமாகத் தெரிந்தெடுத்து, ஆங்கிலத்தில் மேலே தொடர்ந்தாள்.
'நான் களமுனையில் நின்று போராடியவள்' என மொட்டையாக நிறுத்தியவள், சற்று நிதானித்து 'ஈழ விடுதலைப் போராட்டம்
ஒரு பயங்கரவாதச் செயற்பாடென நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில்
அது அப்படியல்ல' என்றவள், விசாரணை அதிகாரியின்
ரெஸ்போன்ஸுக்காகக் காத்திருந்தாள்.
உஷாரான அதிகாரி, மேலே சொல்லு என்னும் பாவனையில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
'எனக்கும் அப்போது படித்துப் பெரியாளாக வேண்டுமென்ற ஆசை இருந்தது. என்னைப்போலவே
பலருக்கும் அந்த ஆசை இருந்தது. நாங்கள் தங்கியிருந்த கோவிலின் மேலே கொத்துக்
கொத்தாக குண்டுகளை வீசி, அப்பாவிப் பொதுமக்களைக்
கொலை செய்தபோதுதான் நான் அவர்களுக்கெதிராக போராட முடிவெடுத்தேன். என் கண்
முன்னாலேயே எனது மூன்று வயது தம்பி வயிறு பிளந்து, குடல் வெளியே வந்து
இறந்து கிடந்தான். இரண்டு நாட்களின் பின் அம்மாவின் உடல், இடிபாடுகளின் கீழே
கண்டெடுக்கப்பட்டது. அப்பா சித்தப்பிரமை
பிடித்தவராக சில காலம் வாழ்ந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சு நிறையக் கோபம், தனித்து நின்று என்னால்
எதுவும் செய்யமுடியாதென்ற இயலாமை. மனதில் சிதறிக்கிடந்த கோப நெருப்பைக் குவிக்க
எனக்கு ஒரு மையம் தேவைப்பட்டது. நெஞ்சிலே குமுறிக் கனன்று கொண்டிருந்த நெருப்பை ஒன்றுசேர்க்க எனக்கு ஒரு அமைப்புத் தேவைப்பட்டது'.
'கொலைக்குக் கொலை தீர்வாக இருக்கமுடியாது தமிழரசி. நீ சார்ந்த இயக்கமும்
சிங்களப் பிரதேசங்களில் பல பொதுமக்களைக் கொலை செய்தார்களே, அதை எப்படி
நியாயப்படுத்துகிறாய்'?
'யாருடைய உயிராக இருந்தாலும் அது எல்லாவற்றையும் விட மேலானது என்பதில் எனக்குச்
சந்தேகமில்லை. ஆனால் அதைவிடவும் பெரியது, எமது இனத்தின் விடுதலை என நான் சார்ந்திருந்த இயக்கம் முழுமையாக நம்பியது. களமுனையின் முன்
அரங்குகளில் நின்று போராடிய பல ஆயிரம் போராளிகளில் நானும் ஒருத்தி. என்னால் எப்படித்
தலமையை எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியும்? நீண்டகாலம் களமுனையில் நின்று போராடியதாலோ என்னவோ, ஒரு நிலையில் எங்களால்
போர் வெற்றியைத் தவிர வேறு எதையும் சிந்திக்க
முடியவில்லை'.
'நீ சார்ந்திருந்த இயக்கம் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பது
உனக்குத் தெரியுமா தமிழரசி'?
'நன்றாகவே தெரியும். எனக்கு நடந்த துன்பியல் சம்பவங்களை உங்களுக்கு ஏற்றமாதிரி
என்னால் மாற்றியும் திரித்தும் சொல்ல முடியம். இன விடுதலைக்காக சகலதையும் இழந்தவள்
நான். இந்த நாட்டில் கிடைக்கலாம் என்ற சுகபோக வாழ்க்கைக்காக, எப்படி நான் துவக்குத்
தூக்கிப் போராடவில்லையென மனச்சாட்சிக்கு மாறாகச்
சொல்லமுடியும்'?
தமிழரசி உணர்ச்சி வசப்பட்டதால் அவளால்
தொடர்ந்து பேசமுடியவில்லை. கொண்டுவந்திருந்த மருத்துவ அறிக்கையை அதிகாரியிடம்
கொடுத்து விட்டு, யன்னலூடாக வெளியே
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதிகாரி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
தமிழரசி கொடுத்த மருத்துவ ஆவணங்களைக் கவனமாக வாசித்தபின், விரைவில் முடிவைத்
தெரிவிப்போம் எனச் சொல்லி விடைகொடுத்தார்.
தமிழரசிக்கு முதுகுத் தண்டுவடம் தொடர்ந்து
பிரச்சனை கொடுத்தது. முறையான 'விசா' இன்றி, தகுந்த சிகிச்சை பெற
முடியாத நிலையில், வலியுடன் நகர்ந்து கொண்டிருந்தது
காலம். மனிதர்கள் எதிர்பாத்துக் காத்திருப்பது பலநேரங்களில் நடப்பதில்லை. ஆனால்
காத்திருந்ததை விடவும் அழகான விஷயங்கள் சிலநேரங்களில் நடந்து விடுகின்றன.
தமிழரசிக்கும் அது நடந்தது. எதிர்பாராதவிதமாக அவளுக்கு குடிவரவு இலாகாவிலிருந்து
கடிதம் வந்திருந்தது. அரச மருத்துவ இலாகாவைத் தொடர்பு கொண்டு, தண்டுவட சிகிச்சையைச்
செய்யுமாறும் அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் கொடுப்பனவுகளையும் அரசே ஏற்றுக்
கொள்ளுமென்றும், கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது.
வீதியோர தபால்பெட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்து
சேர்ந்த கடிதத்தை அன்று மாலையே தமிழரசி பார்த்தாள். எல்லாம் நல்லபடியாக
முடியவேண்டுமென முருகன் கோவிலுக்குப் போய் அருச்சனை செய்ய வேண்டும்போல இருந்தது.
அன்று ஐப்பசி வெள்ளி. திருவிளக்குப் பூசை வேறு. கோவில் மண்டபம் நிரம்பி வழிந்தது.
சனம் கொஞ்சம் குறையட்டுமென தமிழரசி வெளியே நின்றாள். தூரத்தில் இருந்து
தமிழரசியைக் கண்ட தயாவும் சிவாவும் ஆக்களை இடித்துத் தள்ளாத குறையாக விரைந்து
வந்தார்கள்.
'ஞாபகமிருக்கா அக்கா, விசாரணையில்
சந்திச்சனாங்கள்' எனத் தங்களை
அறிமுகப்படுத்தினான் சிவா.
கூடநின்ற தயா தொடர்ந்தான். 'ஒட்டுமொத்தமாய்
எல்லாருக்கும் றிஜெக்ட் பண்ணிப் போட்டாங்கள், ஒருதருக்கும் ‘விசா’ கிடைக்கேல்லை. இனிக் கீழ்க்கோட்டிலை அப்பீல் பண்ணவேணும். ஊரிலை திரும்பவும்
பிரச்சினை துவங்கினால்தான் அப்பீல் வழக்கிலை வெல்லலாம்'.
'நீங்கள் முந்தி இயக்கத்திலை இருந்தனீங்கள்தானே அக்கா. நிலமை இப்ப என்னமாதிரி? சண்டை திரும்ப வருமோ?' எனக் கேட்டு அவளின்
சாதகமான பதிலுக்காகக் காத்திருந்தான் சிவா. அவன் இருபது இலட்சம் இலங்கை ரூபாக்கள் ஏஜென்சிக்கு, வட்டிக்கு கடன் வாங்கிக்
குடுத்து வந்தவன். குறைந்த பட்சம் அந்தக் காசையாவது உழைக்க வேண்டுமென்ற கவலை
அவனுக்கு.
தமிழரசி..!
கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் அலைந்து
திரியும் உண்மைப் போராளிகளில் அவளும் ஒருத்தி. அவளால்
இவர்களுக்கான பதிலை எப்படிச் சொல்லமுடியும்?
(ஞானம், பெப்ரவரி 2021)
No comments:
Post a Comment