Tuesday 31 January 2023

 

ஆயுத எழுத்து

ஆசி கந்தராஜா


ண்சட்டியில் கருவாட்டுக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.  கண்டிக்குப் போகும் வழியில், சுண்டிப் பார்த்துக் கவனமாக வாங்கிய மண்சட்டியது. மண்சட்டியில் கறிசமைக்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசை இம்முறைதான் சித்தித்தது. திரும்பிவரும் பறப்பில் முப்பது கிலோ அனுமதிக்கப்பட்டிருந்தாலும் சொந்தச் சாமான்கள் அதிகம் இல்லாததால், வெவ்வேறு சைஸில் மண்சட்டிகளும் கிலோக் கணக்கில் கருவாடும் வாங்கி, பக்குவமாகப் பொதிசெய்து கொண்டுவந்திருந்தார். மனைவி பெரும்பாலும் சைவம். இதனால் மச்சமாமிசம் காச்சுவதென்றால் சாம்பசிவம் வாய்க்கு இதமாகத் தானே சமைத்துக் கொள்வார்.

இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன்றில், பொருளாதாரமும் வணிக முகாமைத்துவமும் படித்த சாம்பசிவம், அரச வங்கியொன்றில் உயர் பதவி வகித்தவர். வெளிநாடொன்றில் வசதியோடு வாழ்ந்த மனைவியின் அண்ணன், மச்சான் அழைத்ததால் எண்பத்தி மூன்றாம் ஆண்டு, இலங்கை இனக்கலவரத்துக்கு முன்னரே குடும்பத்தோடு புலம்பெயர்ந்து, அரசியல் தஞ்சம் கோரியவர். இலங்கையில் அவருக்கு எந்தவித அரசியல் நெருக்கடிகளோ கெடுபிடிகளோ இருந்ததில்லை. இருந்தாலும் நிரந்தர விசா எடுத்து, அகதிகளுக்கான அரச கொடுப்பனவுகளைப் பெற, அகதி அந்தஸ்துக் கோருவதுதான் சுருக்கமான வழியென்றும் காதும் காதும் வைத்தாற்போல விசயத்தை முடித்துவிடலாம் என்றும் மச்சான் சொன்னார். ஈழவிடுதலை இயக்கங்கள் முனைப்படையாத காலத்தில், அகதி விண்ணப்பங்களைப் பரிசீலித்த அதிகாரிகளுக்கு, இலங்கைப் இனப்பிரச்சனை பற்றிய பூரண அறிவோ மனுதாரர்களின் தகிடுத்தத்தங்களோ தெரியாது. மனுவில் எழுதியது, விசாரணையில் சொன்னது எல்லாவற்றையும் வஞ்சகமில்லாமல் நம்பினார்கள். மச்சானின் யோசனைப்படி, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் தான் தீவிரமான அங்கத்தவராக இருந்து, உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் இதனால் இலங்கைப் பொலீஸ் தன்னைத் தேடுவதாகவும் கற்பனையில் ஒரு மனு எழுதிச் சமர்ப்பித்தார். விசாரணைகளிலும் இதையே திரும்பத் திரும்பச் சொன்னதால், ஒரு கட்டத்தில் மனுவில்த் தான் எழுதியதெல்லாம் உண்மையென்றே நம்பத் தொடங்கிவிட்டார்.  

.