Wednesday, 24 May 2023

 

நிறம்மாறும் ஓணான்கள்

ஆசி கந்தராஜா

(ஜீவநதி. சித்திரை 2023)

ந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது மனதைச் சுட்டெரித்தது. ஒத்துப் போவதென்பது போலிகளுக்குத் துணை போவதுதானோ?

அபொர்ஜினி என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச்சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, பரமலிங்கத்துக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் அவர். அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் மத்தியிலே பல பேச்சு மொழிகள் உண்டு. இவர்கள் ஆதிகாலத்தில் தனித் தனி குழுக்களாக, தொடர்பின்றி வாழ்ந்ததினால் இது ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் தோற்றத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் சாயல், மற்றும் சடங்கு சம்பிரதாயம் என்பன பெரிதும் ஒத்திருப்பதுடன், பேச்சு மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களும் கலந்திருக்கின்றன என்பதைப் பரமலிங்கம் நாளடைவில் புரிந்து கொண்டார். இதனால், அகண்டு பரந்த ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரு மூலையிலே, திராவிட தேசமொன்றைக் கற்பனை பண்ணி மகிழ்ந்த காலங்களும் உண்டு.

பரமலிங்கம் பணிபுரியும் கல்விச் சாலைக்கு முதல் முறையாக ஒரு ஆதிவாசி இளைஞன் படிக்க வந்தான். சப்பை மூக்கும் இருண்ட உருவமுமாக அவன் தம்பித்துரை அண்ணரின் மகன் இராசதுரையை அச்சுஅசலாக ஒத்திருந்தான். அடுத்த ஆண்டு அதே சாயலில் இன்னும் சிலர் வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் கல்வி வசதிகளற்ற சூழலில், புதர்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் என, அழைத்து வந்த செஞ்சிலுவைச் சங்க அதிகாரி சொன்னார். இதனால் விரிவுரைகளுக்கு அப்பால், அறிவியல் பாடங்களில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. இந்தப் பணிக்கு கல்விச்சாலை பரமலிங்கத்தை நியமித்தது என்பதிலும்பார்க்க, கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கும் காரணம் உண்டு. கல்விச்சாலையில் அந்த வருடம் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டத்தில் ஆதிவாசிகளின் நடனம் இடம்பெற்றது. கன்னத்திலும் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றால் குறிவைப்பது போன்று, வெள்ளை நிற மண்ணைக் குழைத்துப் பூசிக்கொண்டு, கையிலே யூக்கலிப்ரஸ் மரக் கிளைகளைகளுடன் ஆதிவாசிகள் அரங்கிற்கு வந்தார்கள். டிட்ஜெரிடூ எனப்படும் நாதஸ்வரம் போன்ற, குழாய் வடிவ மரக் கருவி இசை எழுப்ப, தாளக் குச்சிகள் தாளம் போட்டன. வாத்திய இசையும் தாளமும் ஒன்றிணைந்த ஒரு உச்ச நிலையில், ஆட்டக்காரர்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஆடத் துவங்கினார்கள்.

.