Monday 31 January 2022

 

கங்காரு

ஆசி கந்தராஜா

(காலச்சுவடு பிப்ரவரி 2022)



-1-

திகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில், பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும். கனவுக்கும் விழிப்புக்கும் இடையிலான இந்த வேளையில், நடுக் கூடத்தில் விழுந்து வெடித்த எறிகணைகளால் அம்மா இறந்ததும் மடிக்குள் இருந்த தான் காயங்களுடன் தப்பியதும் நினைவில் வந்து வருத்தும். விசித்திரமான இந்தக் கனவை நிறுத்த, சயந்தன் பல வழிகளிலும் முயன்றான். திருநீறு பூசி சுவாமி கும்பிட்டுப் படுத்தான். ஒன்றில் ஆரம்பித்து நூறுவரை நிதானமாக எண்ணிப்பார்த்தான். பட்டியில் நின்ற தங்கள் செம்மரி ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக, கடப்பைத் தாண்டிப் பாய்வதாக கற்பனை செய்தான். இருந்தாலும் தினமும் அந்தக் கனவு வந்துகொண்டே இருந்தது.

கனவில் காணும் உருவத்தை ஒத்த விலங்கின் கோட்டுச் சித்திரத்தை சயந்தன் யாழ்ப்பாணச் சந்தையிலுள்ள பழக் கடையில் பார்த்தான். மஞ்சள் நிறமான ஆரஞ்சுப் பழங்கள் அடைக்கப்பட்டு, வெளி நாட்டிலிருந்து இறக்குமதியான மரப் பெட்டிகளில் ஒட்டியிருந்த லேபலில், அந்த வரிச் சித்திரம் அச்சாகியிருந்தது. அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான். மேலதிக தகவல்களை விலங்கியல் படித்த பக்கத்து வீட்டு தமயந்தி அக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். சித்திரத்தில் தாயின் அடைப்பத்துக்குள் குட்டி இருந்த காட்சியைத் தன்னுடன் ஒப்பிட்டு அவனது கற்பனை வளர்ந்தது. ஈழப்போராட்ட காலத்தில் குறைமாதத்தில் பிறந்த சயந்தன், தாயின் உடம்புச் சூட்டிலேயே வளர்ந்தவன். போர் கெடுபிடிகளுக்கு மத்தியில், தாயின் மடியும் மார்பும்தான் அவனது இன்குபேட்டராக இருந்தன. தாய் இறந்த பின்னரும் அவனுக்குத் தன் தாயின் சேலை வேண்டும், போர்த்திப் படுப்பதற்கு.

.