Monday 31 January 2022

 

கங்காரு

ஆசி கந்தராஜா

(காலச்சுவடு பிப்ரவரி 2022)



-1-

திகாலை வேளையில் அடிக்கடி அந்த உருவம், கனவில்வந்து பாடாய்ப் படுத்துகிறது. முன்னர் பார்த்திராத கோலத்தில், விலங்கினதும் பெண்ணினதும் கலவையானதொரு தோற்றத்தில் அது தோன்றி மறைகிறது. உருவத்தில், பெண்ணின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரியும்போது, அந்த விம்பம் தன் தாயின் சாயலையொத்து இருப்பதை சயந்தன் உணர்ந்தான். அம்மாவின் கால்களுக்கு இடையே தொங்கும் சேலைப் பகுதியைப் பதித்து ஏணையாக்கி, அதற்குள் தான் இருப்பது போலத் தோன்றிய தருணங்களில் மூச்சு முட்டி அவனுக்கு விழிப்பு வந்துவிடும். கனவுக்கும் விழிப்புக்கும் இடையிலான இந்த வேளையில், நடுக் கூடத்தில் விழுந்து வெடித்த எறிகணைகளால் அம்மா இறந்ததும் மடிக்குள் இருந்த தான் காயங்களுடன் தப்பியதும் நினைவில் வந்து வருத்தும். விசித்திரமான இந்தக் கனவை நிறுத்த, சயந்தன் பல வழிகளிலும் முயன்றான். திருநீறு பூசி சுவாமி கும்பிட்டுப் படுத்தான். ஒன்றில் ஆரம்பித்து நூறுவரை நிதானமாக எண்ணிப்பார்த்தான். பட்டியில் நின்ற தங்கள் செம்மரி ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக, கடப்பைத் தாண்டிப் பாய்வதாக கற்பனை செய்தான். இருந்தாலும் தினமும் அந்தக் கனவு வந்துகொண்டே இருந்தது.

கனவில் காணும் உருவத்தை ஒத்த விலங்கின் கோட்டுச் சித்திரத்தை சயந்தன் யாழ்ப்பாணச் சந்தையிலுள்ள பழக் கடையில் பார்த்தான். மஞ்சள் நிறமான ஆரஞ்சுப் பழங்கள் அடைக்கப்பட்டு, வெளி நாட்டிலிருந்து இறக்குமதியான மரப் பெட்டிகளில் ஒட்டியிருந்த லேபலில், அந்த வரிச் சித்திரம் அச்சாகியிருந்தது. அம்மாவின் மடியில் தான் இருந்ததைப் போன்று, வரிச்சித்திரத்தில் தாய்விலங்கும் குட்டியும் இணைந்திருந்ததைச் சயந்தன் அவதானித்தான். அந்த வரிவடிவம் கங்காரு என்னும் மிருகத்தின் உருவம் என அறிந்ததும், தான் பார்த்த கோட்டுச் சித்திரத்துக்கு முடிந்தவரை முழுமையான உருவம் கொடுத்து யோசித்தான். மேலதிக தகவல்களை விலங்கியல் படித்த பக்கத்து வீட்டு தமயந்தி அக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். சித்திரத்தில் தாயின் அடைப்பத்துக்குள் குட்டி இருந்த காட்சியைத் தன்னுடன் ஒப்பிட்டு அவனது கற்பனை வளர்ந்தது. ஈழப்போராட்ட காலத்தில் குறைமாதத்தில் பிறந்த சயந்தன், தாயின் உடம்புச் சூட்டிலேயே வளர்ந்தவன். போர் கெடுபிடிகளுக்கு மத்தியில், தாயின் மடியும் மார்பும்தான் அவனது இன்குபேட்டராக இருந்தன. தாய் இறந்த பின்னரும் அவனுக்குத் தன் தாயின் சேலை வேண்டும், போர்த்திப் படுப்பதற்கு.

பலாக்கொட்டை அளவில், தாயிலிருந்து வெளியேறும் கங்காரு முளையத்தின் மிகுதி வளர்ச்சி, அடைப்பப் பையுக்கு உள்ளேதான் என, தமயந்தி அக்கா சொன்ன பிறகு, ஏழு மாதத்தில் பிறந்த தனக்கும் கங்காரு முளையத்துக்கும் இடையில் சமாந்தரக் கோடுகளை வரைந்தான். குறை மாதத்தில் தான் பிறந்ததற்குக் காரணம், போர்ச் சூழலால் தாய்க்கு ஏற்பட்ட மன அழுத்தமும் அதிர்ச்சியும் என அப்பா பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், கங்காருக் குட்டிகள் இயல்பாகவே குறை மாதத்தில் பிறப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என சயந்தன் தன் அறிவுக்கு எட்டியவரை யோசித்துப் பார்த்தான். இப்படியான வினோதமான நினைவுகள் மனதில் தோன்றும்போது, கங்காருவை அதன் குட்டியோடு பார்க்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கும்.

கிழக்கிலங்கையில் உள்ள மாவிலாறு பிரச்சனையுடன் ஆரம்பித்த நான்காவதும் இறுதியுமான ஈழப்போர் இலங்கையின் வடபகுதியை நோக்கி நகர்ந்து கிளிநொச்சியை அடைந்தது. அரச படைகள் ஏவிய எறிகணைகள், பல மைல்கள் தாண்டி விழுந்து சயந்தன் வாழ்ந்த கிராமத்தையும் அழித்தன. கிராமம் கிராமமாக இடம் பெயர்ந்து, படகில் தப்பி சயந்தனும் தகப்பனும் தமிழகம் வந்து சேர்ந்த போது முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் முடிவுக்கு வந்திருந்தது. தமிழர்கள் சார்பில் போரை நடத்தியவரின் மரணம் தமிழகத்தில் அனுதாப அலையைத் தோற்றுவித்ததால் ஈழத்தமிழர்களின் அகதி முகாம்களில் அதிக கெடுபிடி இருக்கவில்லை. இருந்தாலும் அகதிப் பிள்ளைகளின் பாடசாலைச் சேர்க்கை ஏனோ தள்ளிப்போக, சயந்தன் அருகிலுள்ள பட்டிணத்துக்குப் போய் சிறுசிறு லேலைகள் செய்தான். அங்கு அவன் முழு வேலையாளாகக் கணிக்கப்படாததால், பழக்கடை வீதியிலுள்ள கடை ஒன்றில் தொட்டாட்டு எடுபிடி வேலையே கிடைத்தது. அப்பா அதே வீதியிலுள்ள கிட்டங்கி ஒன்றில் மூட்டை சுமந்தார். காலை ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பித்தால் இரவு பத்து மணிவரை வேலை இருக்கும். மதியம் மூன்று மணிக்குக் கிடைக்கும் இடைவேளையில் தூக்குச் சட்டியில் கொண்டு வந்த சோற்றை விழுங்கிவிட்டு, மஞ்சள் நிற ஆரஞ்சுப் பழங்கள் அடுக்கியிருக்கும் பழக்கடைகளை, சயந்தன்  நோட்டம் விடுவான். ஆனாலும் அவன் கனவில் காணும் அந்த உருவம், அங்குள்ள பழப்பெட்டி லேபல்களில் அகப்படவில்லை.

அகதியாக வந்த இடத்திலும் சயந்தனுக்கு அந்தக் கனவு வந்தது. இங்கே, மனித முகம் மங்கலாகவும் விலங்கின் உருவம் தூக்கலாகவும் தெரிந்து, பழக்கடை வீதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் விக்கிரகத்தை நினைவுபடுத்தியது. சில வேளைகளில், இறந்துபோன அவனுடைய தாய் எழுந்து நிற்கும் தோற்றத்தில் கைகள் இரண்டும் குட்டையாகவும் கால்கள் இரண்டும் நீண்டும் பருத்தும் தெரிந்தன.

சயந்தனுடன் கடையில் வேலை செய்த வடநாட்டு இளைஞன் லால்சிங் வெளிநாடு போகும் எண்ணத்துடன் தமிழ் நாட்டுக்கு வந்ததாகச் சொன்னான். அகதிகளின் ஐரோப்பா நோக்கிய பறப்புக்கள் தடைப்பட்டதால் ஆஸ்திரேலியா நோக்கிய படகுப் பயணத்துக்குத் தான் காத்திருப்பதாகச் சொன்னான். கனவில் காணும் உருவத்தை ஒத்த மிருகம் ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழ்வதாகத் தெரிந்ததும், சயந்தன் லால்சிங்குடன் வலிந்து சிநேகிதமானான். மதிய உணவின்போது இருவரும் சப்பாத்தியும் சாதமும் பகிர்ந்து கொண்டார்கள். சப்பாத்தியுடன் லால்சிங் தந்தூரி சிக்கன் கொண்டு வருவான். சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்ததும் தந்தூரி மசலா வாசம் மூக்கைத் துளைத்து சிரசுவரை ஏறும். வன்னியிலே நாட்டுக்கோழியும் வீட்டு மரக்கறிகளும் சாப்பிட்டுப் பழகிய சயந்தன் சப்பாத்தியை பகிர்ந்து கொள்வதுடன் நிறுத்திக் கொள்வான். லால்சிங் கொண்டுவரும் மரக்கறிக் குருமாவைக்கூட தொடுவதில்லை. ஊசி அடித்து ஊதிப்பெருத்த புறொயிலர் கோழியும் உரம்போட்டு உப்பிய காய், பிஞ்சு, பழங்களும் உடலுக்கும் உலகத்துக்கும் கேடு என எண்ணும் வன்னிச் சூழலில் வளர்ந்தவன். அதனால் சயந்தனுக்கு இயல்பாகவே இயற்கையை நேசிக்கும் பழக்கம் வந்தது. 

மதிய உணவின்போது சயந்தன், கங்காரு பற்றிப் பேச ஆரம்பிப்பான். லால்சிங் அதிலே அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, ஆஸ்திரேலிய பால் பண்ணைகளிலும் பழத் தோட்டங்களிலும் நிறைய வேலைகள் இருப்பதாகவும் அங்குள்ள பன்றித் தொழுவங்களில் வேலை செய்தால் அதிக ஊதியம் பெறலாம் எனவும் தகவல்களை அடுக்குவான். தொழுவம் என்றதும் சயந்தனின் மூளையில் ஒரு பொறிதட்டியது. சாப்பாடு முடிந்து பாக்கு மெல்லும் நேரம் லால்சிங் ஜாலியாக ஜோக்கடிப்பான். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து, கங்காருக்களும் தொழுவங்களில் வளர்க்கப் படுவதுண்டோ? என லால்சிங்கின் வாயைக் கிளறினான். திரும்பத் திரும்ப சயந்தன் ஒரே விசயத்தைப் பேசுவது லால்சிங்கிற்கு எரிச்சலூட்டியது. இதனால் பேசுவதைக் குறைத்து, சாப்பாடு பகிர்வதுடன் உறவை மட்டுப்படுத்திக் கொண்டான். ஆனாலும் கங்காரு பற்றிய நினைப்பு மட்டும் அடிக்கடி நினைவில் வந்து சயந்தனுக்குத் தொல்லை கொடுத்தது. தான் போகமுடியாத தூரத்தில் வாழும் ஒரு விலங்கின் உருவம் எப்படி, எதற்காக தன்னுடைய கனவில் வந்து வருத்துகிறது என நினைத்ததும் சயந்தனுக்குப் பயம் ஏற்பட்டது.

காலஓட்டத்தில் ஒருநாள், ஆஸ்திரேலியா நோக்கிப் படகு புறப்படுகிறது என்ற தகவலுடன் வந்தான் லால்சிங். படகுப் பயணத்துக்குக் கொடுக்க வேண்டிய தொகை கொஞ்ச நஞ்சமில்லை.  இழுத்தடிப்புகளுக்குப் பின்னர், சயந்தனின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், வரும்போது கொண்டு வந்த தாயின் நகைகளை விற்று, சயந்தனும் தகப்பனும் படகில் ஏறினார்கள்.

வாரக் கணக்கில் கடலில் மிதந்த படகு கிழக்குத் தீமோர் கடற்கரையில் ஒதுங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் வடமுனையை நோக்கி நகர்ந்தது. படகுப் பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. தீமோர் கடலில் அலைகள் கிளர்ந்து எழுந்து படகை இருபது அடிக்குமேல் தூக்கிக் குத்தியது. உப்புக் காற்றும் கால நிலை மாற்றங்களும், உடற்சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தின. ஒழுங்கான சாப்பாடோ, குடிக்கப் போதியளவு தண்ணீரோ இல்லாத நிலையில் கிடைத்த சாப்பாடும் படகின் ஆட்டத்துக்கு வாந்தியாக வெளியே வந்தது. உப்புக் காற்றை தொடர்ந்து சுவாசித்ததால் மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. பலர் குளிர் பிடித்து மூக்குச் சிந்தினார்கள். உடல் நொந்து காச்சலடித்துப் படுக்கையில் கிடந்தவர்களில் சிலர் வலிப்பு வந்து இறந்தார்கள். முன்பின் தெரியாதவர்களின் இறப்புக்கு படகில் வந்தவர்கள் கண்ணீர் சிந்த, கூடவந்த ஐயர் ஒருவர் தேவாரம் பாடிப் பிராhர்த்திக்க, உடல் கடலுக்குள் இறக்கி விடப்பட்டது. இந்த அமளிக்குள்ளும் சயந்தன் தொடர்ந்தும் அந்த விம்பத்தைக் கனவில் கண்டது அதிசயம்தான். கனவின் தொடக்கப் புள்ளி என்ன, அதற்கான அர்த்தம் என்ன? என்பது அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

இரவில் படுக்கும் நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் படகின் முதலாவது தளத்தில் நின்று கடலையே உற்றுப் பார்ப்பது சயந்தனின் வழக்கம். கடல் அலைகள் உக்கிரமாக சீறி எழுந்து கீழே விழும்போது, கனவில் காணும் உருவம், தசைநார்கள் முறுக்கேறித் திரண்ட தன் பின்னங் கால்களை உதைத்து மேலே எழும்புவது போன்ற தோற்றத்தைக் கண்டு பிரமித்தான். காற்றின் கீழ்நோக்கிய விசை, கடல் நீர் மீது செயல்ப்பட்டு அலைகளைத் தாக்கி அழிக்கும்போது சயந்தனின் மனம் தானாகச் சுருங்கிவிடும். ஒரு காட்சிப் புள்ளியில், தாயின் மடிக்குள் தான் சுகம் கண்ட நேரத்தில், செல்லடிபட்டு தாய் சிதறிப் போனது நினைவில் வந்து அலைக்கழிக்கும்.

எந்தநேரமும் சிடுசிடுக்கும் அப்பாவுக்கு படகுப் பிரயாணத்தில் பேச்சுத் துணைக்குத் தோதான ஆளில்லாதபோது ஈழப் பாடல்களை உரத்துப் பாடுவார். விடுதலை இயக்க மேடைகளில் அவர் ஈழவிடுதலைப் பாடல்கள் பாடி திறம் பாட்டுக்காரரென வன்னியில் பெயரெடுத்தவர். இயல்பை மறந்து ஒருநாள் மகிழ்ச்சியாக இருந்த வேளையில், கங்காரு, ஏன் ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழ்கிறது அப்பா? என மெல்ல ஆரம்பித்தான். சற்று நேரம் யோசித்த அப்பா, இல்லையே, அது இங்கிலாந்திலேதான் இருக்கிறது என்றதும் சயந்தனின் மனம் பொசுங்கிவிட்டது. அப்பா கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்வர். எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர். வன்னிக் காட்டிலுள்ள மிருகங்களை மட்டும் அறிந்தவர். இலங்கை இந்தியாவுக்கு வெளியே அவரைப் பொறுத்தவரை எல்லாம் இங்கிலாந்துச் சீமைதான். ஆங்கிலம் பேசும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து மகாராணியின் ஆதிக்கத்தின் கீழேதான் என, கிட்டங்கி முதலாளி சொன்னதன் பின்னரே படகோட்டிக்குக் காசு கொடுக்கச் சம்மதித்தவர்.

கங்காரு ஆஸ்திரேலியாவில் மட்டும்தான் இருக்காம் அப்பா, அவற்றின் குட்டிகள் எப்பொழுதும் குறை மாதத்தில் பிறக்குமாம், என பக்கத்து வீட்டுத் தமயந்தி அக்கா சொன்ன தகவலை அவிட்டு விட்டான்.

உன்னைப்போல குறைமாதப் பிறப்பு எண்டு சொல்லு, என சட்டெனத்  தன் சுயம் இழந்து சீண்டினார். தன்னுடைய பிறப்பைப்பற்றி அப்பா அடித்த கமெண்ட்டால் சொல்லமுடியாத உணர்வுகளால் சயந்தனின் மனம் குமைந்து ஒடுங்கியது. பொங்கிக் கொண்டு வந்த கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். தன்னைப் போலவே அரைகுறையாகப் பிறக்கும் கங்காருக் குட்டிகளின் நினைப்பு சயந்தனின் மனதில் நெடுநேரம் ஊறிக் கொண்டே இருந்தது. கங்காரு வாழும் நாட்டில் சண்டை இல்லை. துவக்குவெடி, கண்ணிவெடி, செல்லடிச் சத்தங்கள் இல்லை. அவற்றால் ஏற்படும் அதிர்வும் அதிர்ச்சியும் அழிவும் இல்லை. இருந்தாலும் முழு வளர்ச்சி அடையாமால் குட்டிகள் பிறப்பது ஏன்? என சயந்தன் இயலுமானவரை தன் அறிவுப் பரப்புக்குள் சிந்தித்தான்.

என்ஜின் அறையில் நின்ற படகோட்டி, கிழக்கு தீமோரில் படகு நின்றபோது வாங்கிய ஜாவா ரக சுருட்டைப் பற்றவைத்து, அனுபவித்து, புகை ஊதிக் கொண்டிருந்தான். படகில் வந்தவர்களின் பயத்தைப் போக்க அவன் நட்புப் பாராட்டி எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவது வழக்கம். அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு படகில் போவதாக கதையோடு கதையாக அடித்துவிடுவான். தனது சந்தேகத்தைத் தீர்க்க அவனே பொருத்தமானவன் எனத் தீர்மானித்து, நாய் பூனைகள் மாதிரி கங்காருக்கள் பின்வளவிலும் நிக்குமோ? என ஆரம்பித்தான். கடலில் ஏற்பட்ட அலைகளின் அழுத்தத்தைச் சமாளிக்க முடியாத கொதிப்பில் நின்ற படகோட்டிக்கு, சயந்தனின் கேள்வி எரிச்சலைக் கிளப்பியது.

எனக்கெப்பிடித் தெரியும்? நச்சரிக்காமல் பேசாமல் இரு, என அதட்டினான். அத்துடன் கங்காருக்கள் பற்றிய கேள்விகளை மனதுக்குள் அமுக்கி அடக்கிக்கொண்டான் சயந்தன். 

 


-2-

நீண்ட கடல் பயணத்தின் பின்னர் ஆஸ்திரேலியாவின் வடக்குத் திசையிலுள்ள ரிவி என்ற தீவில் படகு தரைதட்டியது. இது ஒரு குட்டித் தீவு, ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமானது. இங்கு தீவார்கள் என அழைக்கப்படும் ஆதி இனத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். இவர்கள் அபொர்ஜினி என்று அழைக்கப்படும் ஆதிவாசிகளல்ல, தனியான இனத்தவர்கள். கிழக்குத் தீமோரில் இருந்து ரிவி தீவுக்கான பாதையைத் தானே கண்டு பிடித்ததாகச் சொல்லி, அதிக கட்டணம் அறவிட்டதை, படகோட்டி முதலில் நியாயப்படுத்தினான். பின்னர், கரையோர எல்லைப் பொலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி, அனைவரையும் பாதுகாகப்பாக கூட்டி வந்ததற்கு போணஸ்ஸாக, இன்னும் வேணுமெனச் சொல்லி மிச்சமாக இருந்த பணத்தையும் நகைகளையும் வெருட்டி வாங்கிக்கொண்டு, ஆள்க்கடத்தல் குற்றத்துக்கு அகப்படாமல் திரும்பிவிட்டான். 

தீவு ஆளரவமற்றுக் காணப்பட்டது. எல்லோருக்கும் நல்ல பசியும் களைப்பும். சயந்தனின் அப்பா ஈழத் தமிழருக்காகத் தான் ஒரு நாட்டையே கண்டுபிடித்த பாவனையில் ஊரிலிருந்து கொண்டுவந்த துவாயை மணலில் விரித்து மல்லாந்து படுத்தபடி உரத்த குரலில் ஈழப்பாடல் ஒன்றை எடுத்துவிட்டார். சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனத் தேடி பல திசைகளிலும் வந்தவர்கள் பிரிந்து சென்றார்கள். இதற்காகவே காத்திருந்தவர்போல பிராயாணப் பொதிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த எள்ளுருண்டைகளை மெல்ல எடுத்தார். யாழ்ப்பாணத்து முறையில் தயாரிக்கப்பட்ட எள்ளுருண்டைகள் ஆஸ்திரேலிய ரிவிதீவில் அற்புதமாக இருந்தன. ஒரு எள்ளேனும் கீழே விழுந்துவிடாத அவதானத்தில் அண்ணாந்து கடித்து அநுபவித்துச் சாப்பிட்டான் சயந்தன்.

கடற்கரையில் அந்நியர்களின் நடமாட்டத்தை, ரேடார் வழியாக எல்லைப் பொலீசார் அவதானித்திருக்கவேண்டும். எள்ளுருண்டை சாப்பிட்டு முடிவதற்கு முன்னரே கரைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். அகதிகளைக் கூட்டிவந்த படகு அப்போது சர்வதேச கடற்பரப்புக்குள் நுழைந்திருக்கும். கரையில் நின்றவர்களைக் கடலுக்குள் தூக்கி எறியவா முடியும்? அனைவரையும் அள்ளிக் கொண்டு போய் நவ்ரு தீவில் விட்டார்கள், தீவு என்றாலும் இது ஒரு தனிநாடு. இப்படியான ஒரு தீவை தமிழர்கள் வாங்கினால் என்ன? என்ற தோரணையில் அப்பா கண்களை அலையவிட்டார். இந்த தீவில்தான் அகதிகளுக்கான முகாம்களை ஆஸ்திரேலிய அரசு அமைத்திருக்கிறது. முகாமில் பல நாட்டு மக்களுடன் தமிழர்களும் கலந்துகட்டி இருந்ததைக் கண்ட சயந்தனுக்கும் அப்பாக்குவும் மகா சந்தோசம். அப்பா கைவசம் வைத்திருந்த சுருட்டொன்றை எடுத்து மூக்கருகே வைத்து நுகர்ந்து அநுபவித்து நிம்மதியாகப் புகை ஊதினார்.

ஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்ததும் எல்லோருக்கும் படுக்கைகள் ஒதுக்கப்பட்டன. கடல்ப் பயணம் தந்த அலுப்பில் சயந்தன்  படுத்தவுடன் தூங்கிவிட்டான். இங்கும் அவனை விடாது கனவு துரத்தியது. முதலில் ஒரு உருவம் வந்தது. பின்னர் பத்து, நூறு, ஆயிரம் என குட்டிகளைச் சுமந்தபடி சாரிசாரியாக சயந்தனை நோக்கிப் பாய்ந்துபாய்ந்து நகர்ந்து வந்தன. திடீரென வானத்தில் தோன்றிய இடியும் மின்னலும் தாய் உருவங்களை அடித்துச் சரித்துவிட, குறைமாதக் குட்டிகள் சயந்தனை நோக்கி உருண்டு வரும் தோற்றம் மங்கலாகத் தெரிந்தது. தாயை இழந்த சோகத்தில் அந்தரித்த குட்டிகள் அவனிடம் உதவி கேட்டு யாசிப்பதான பிரமை உண்டானது. உடல் வேர்த்துக் கொட்டுவதான உணர்வில் திடுக்கிட்டு எழுந்தான். தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலையில், முகாமுக்கு வெளியே இருந்த பற்றைகள், கனவில் வந்த விம்பங்களை ஒத்து இருந்தன. சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது. குப்புறப் படுத்த கோலத்தில் அப்பா குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். கழிவறைக்குப் போய் வந்து, நெடுநேரம் கட்டிலில் உட்கார்ந்து யோசித்தான். மனதை அலைக்கழித்த அந்த நினைவுகளை மேலும் அடக்க முடியாமல், கங்காருக்கள் எங்கை அப்பா நிக்கும்? என தகப்பனைத் தட்டி எழுப்பிக் கேட்டான். நித்திரை முறிந்த சினத்தில் சயந்தனுக்கு அடிபோட நினைத்தாலும் தாயைத் தின்னி என நினைத்து அப்பா கோபத்தை அடக்கிக் கொண்டார். பேசாமல் படடா. நாங்கள் இன்னும் ஆஸ்திரேலியாவுக்கை உள்ளடேல்லை. பக்கத்து நாட்டுத் தீவிலை வைச்சிருக்கிறாங்கள், என சயந்தனை அமைதிப்படுத்தினார்.     

நாட்கள் நகர அகதி அந்தஸ்துக்கான விரிவான விசாரணைகள் மொழிபெயர்பாளரின் உதவியுடன் ஆரம்பமாகின. செல்லடி பட்டுத் தாய் இறந்தபோது, ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் இருவர் உடம்பிலும் இருந்ததால், நடந்த அவலத்தை அதிகாரிகளுக்கு விளக்குவதில் சிரமம் இருக்கவில்லை. போனஸ்ஸாக விடுதலை இயக்கப் பாடல்களை ராகம் தாளம் தப்பாமல் பாடிக்காட்டி, தான் விடுதலை இயக்கப் பாடகன் என அப்பா நிரூபித்தார். இவைகள்; அகதி விசா கிடைக்க இருவருக்கும் உதவி புரிந்தன. வறண்ட பிரதேச குடியேற்றத் திட்டத்தின் கீழே, ஆஸ்திரேலியாவின் மத்திய பிரதேசத்தில் குடியேறவுள்ள அகதிகளுடன் இவர்களையும் சேர்த்தார்கள். நவ்ரு தீவிலிருந்து பறப்பும் பின்னர் பஸ் பிரயாணமும் ஒழுங்கு செய்யப்பட்டன. தாங்கள் போகுமிடம் கங்காருக்கள் பெருவாரியாக வாழும் வெப்ப வலயம் என அவ்கானிஸ்தான் அகதிகள் தங்களுக்குள் குசுகுசுத்ததை குத்துமதிப்பாகப் புரிந்துகொண்ட சயந்தன் ஆனந்தத்தில் மிதந்தான். தன்னுடைய கனவின் மர்ம முடிச்சு அங்கு அவிழும் என்ற நம்பிக்கை மனதில் கிளர்ந்தது. அப்பாவோ, கடை கண்ணிகள் அதிகம் இல்லாத வனாந்தரத்தில் வேலை எப்படி எடுப்பது? என்ற சிந்தனையிலும் கவலையிலும் மூழ்கியிருந்தார்.

பஸ் பிரயாணத்தின் போதுதான் சயந்தன் நிஜத்திலே கங்காருக்களைக் கண்டான். பின்னங்கால்களை ஊன்றி உதைத்து, படுவேகமாக  குதித்துக் குதித்துக் கூட்டமாக ஓடிய கங்காருக்களைக் கண்டதும் தன்னை மறந்து பரவசமானான். உடல் எங்கும் வெப்பம் பரவிப் புல்லரித்து வேர்த்துக்கொட்டியது. 

அகதிகளைச் சும்மா இருந்து அரச செலவில் சாப்பிட அரச நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சமூக சேவை இலாகா வேலை எடுத்துக் கொடுத்தது. சயந்தனின் அப்பாவுக்கு இறைச்சி வெட்டும் நிலையமொன்றில் இறைச்சி பொதி செய்யும் வேலை. அங்கு கங்காரு இறைச்சியும் பொதி செய்யப்பட்டன. இவை கொழுப்பில்லாத இறைச்சி என ஆஸ்திரேலியாவில் அதற்கு நல்ல கிராக்கி இருந்தது. சயந்தனுக்கு இதுபற்றி அப்பா மூச்சுக் காட்டவில்லை.

சயந்தனுடன் படிக்கும் ஆதிவாசி யாரன் நீண்டகாலமாக அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான விலங்குப் பண்ணை ஒன்றில் வேலை செய்கிறான். தன்னை ஒத்த தோற்றத்திலும் நிறத்திலும் இருந்த சயந்தனை தன் இனமென நினைத்தானோ என்னவோ நட்புடன் பழகினான். பண்ணையில் சயந்தனுக்கு பகுதிநேர வேலை எடுத்துக் கொடுத்தவனும் அவனே. கங்காரு, குவாலா, வொம்பற் ஆகிய தேசிய  மிருகங்களை உள்ளடக்கிய விலங்குப் பூங்கா ஒன்று பண்ணையில் இருந்தது. அதிக கட்டணம் அறவிடப்பட்டாலும் கோடை காலங்களில் பூங்கா உல்லாசிகளால் நிரம்பி வழியும். பண்ணையின் ஒதுக்குப் புறத்திலே, கங்காரு வளர்ப்புக்கும் ஆராச்சிக்குமென கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒரு தனிப்பிரிவு இரகசியமாக இயங்கியது. இறைச்சி வணிகத்தில் கோலேச்சும் பல்தேசியக் கம்பனி ஒன்று இதற்கு மறைமுகமாக நிதி வழங்குவதாக் கதையோடு கதையாக யாரன் சொன்னான். சயந்தனுக்கு இயல்பாகவே எங்கும் எதிலும் நோண்டும் குணம். கங்காரு வளர்ப்பில் என்னடா மர்மம்? என கதையை வளர்த்தான்.

ஆருக்குத் தெரியும்? உனக்கு வேலை கிடைத்து விட்டதல்லவா, மூடிக்கொண்டு இரு, என சயந்தனை அடக்கினான்.

ஆதிவாசிகள் அல்லது அகதிகளே கீழ்நிலை ஊழியர்களாக பண்ணையில் வேலை செய்தார்கள். இவர்கள் வெள்ளையர்கள் சொல்வதை ஏன் என்று கேட்காமல் செய்யக்கூடியவர்கள். சயந்தன் விஷயத்திலும் அவன்  நம்பிக்கையானவனா என விசாரித்து, யாரனின் உத்தரவாதம் பெற்ற பின்னரே வேலைக்குச் சேர்த்தார்கள்.

கங்காருக்கள் தேசிய மிருகம். ஆடு, மாடு, பன்றிகள் போல அவை பண்ணைகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படுவதில்லை. இயற்கையாக வாழ்பவை. பூங்காவைக் காரணம் காட்டி இங்கு கங்காருக்களை அடைத்து வைத்திருந்தார்கள். இவற்றுக்கு உணவு கொடுத்துப் பராமரிக்கும் வேலை கிடைத்ததால், பழைய நினைவுகள் மனதில் கிளர்ந்தெழ சயந்தன் ஆகாயத்தில் மிதந்தான். தனக்கும் கங்காருக்களுக்கும் இடையில்  ஏதோ பூர்வஜென்ம பந்தமும் தொடர்பும் இருக்கென நினைத்து, தான் காணும் கனவுக்கும் கிடைத்த வேலைக்கும் முடிச்சுப்போட்டு மகிழ்ந்தான். நாட்கள் நகர சயந்தனும் யாரனும் காடு கரம்பையெல்லாம் சுற்றி முயல் வேட்டைக்குப் போக ஆரம்பித்தார்கள். வேட்டையின்போது ஒருநாள், அடைப்பப் பைக்குள் குட்டியைச் சுமக்கும் கங்காருவை இயற்கைச் சூழலில் கண்டபோது சயந்தனின் மனது விபரிக்கமுடியாத உணர்வுகளுக்குள் தோய்ந்து நனைந்தது. தாயின் நினைவுகள் விடாது அவனைத் துரத்தின. குறைமாதத்தில் பிறந்த அவன் போரின் தாக்கத்தால் போசாக்கில்லாமல் வளர்ந்தவன். கங்காருவின்  குட்டியைப் போலவே, தாயின் முந்தானையின் கீழே மார்போடு ஒட்டி வளர்ந்த காட்சிகள் அவன் மனதில் விரிந்துகொண்டே போனது. அன்று இரவு முழுவதும் காட்டில் நடந்த சம்பவங்கள் மனதில் அலைஅலையாக ஓடின. விதம்விதமான பல கனவுகள் தொடர்ச்சியாக வந்தன. கனவில் வரும் விம்பம் தாயின் தோற்றத்தில் பல கதைகள் சொல்வதுபோலத் தோன்றியது. கனவா அல்லது நனவா என்று தெரியாத இரண்டும் கெட்டான் வேளையில் நடுநிசியில் எழுந்து குதித்துக் குதித்து நகர ஆரம்பித்தான். மனசார அப்பா அன்று பயந்துதான் போனார். விடிந்ததும் வைத்தியரிடம் கூட்டிப்போய் மருந்து வாங்கிக் கொடுத்ததுடன் ஊரிலுள்ள வைரவருக்கு வடைமாலை சாத்தி, நூற்றியெட்டு தேங்காய் உடைப்பதாகவும் நேர்த்திவைத்தார்.             

நாட்கள் நகர்ந்தன. ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்படும் முழு வளர்ச்சியடைந்த குட்டிகளைப் பராமரித்து உணவளிப்பதுதான் சயந்தனின் தற்போதைய வேலை. இயற்கையாக அடைப்பப் பைக்குள் வளரவேண்டிய கங்காருக் குட்டிகளை தாயிலிருந்து பிரித்து, ஆய்வுமைய இன்குபேட்டர்களில் ஏன் உணவூட்டி வளர்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி சயந்தனின் மனதில் ஊறியதால், மூளை கிறுகிறுத்து தலைவலித்தது. இயற்கையோடு இயைந்து வாழும் ஆதிவாசி யாரனும் காரணம் தெரியவில்லை என்றான். ஏதோ தப்பு நடக்குது, என்பதை மட்டும் இருவரும் உணர்ந்து கொண்டார்கள். அவர்களின் அநுமானத்துக்கு வலு சேர்க்க பண்ணைக்கு அவ்வப்போது  பொலீஸ் வாகனம் வந்து போனது.

நாட்கள் செல்லச் செல்ல சயந்தனின் நடவடிக்கைகளில் மேலும் பல மாற்றங்கள் தெரிந்தன. வேலை நேரத்தில் அச்சுஅசலாக கங்காருவைப் போலவே பாவனை செய்தான். ஒரு கையால் பிடிக்கக் கூடிய பொருள்களையும் இரண்டு கைகளாலும் பிடிக்க ஆரம்பித்தான். சாலட் இலைகளை விரும்பி உண்ணத் துவங்கினான். சயந்தனின் வினோத செய்கைகள் விபரீதத்தில் முடியலாம் எனப் பயந்த யாரன், வைத்தியரின் ஆலோசனைப்படி அவனை இயல்புக்குக் கொண்டுவர கங்காருக்களின் சில குண இயல்புகளைப் பக்குவமாகச் சொன்னான்.

ஆதிவாசிகளுக்கு கங்காருக்கள் குடும்ப உறுப்பினர்கள். இருந்தாலும் அவை அவர்களையே மூர்க்கத்தனமாகத் தாக்கியிருக்கின்றன. கங்காருக்களின் பின் கால்கள் இரண்டும் முன் கால்களைவிட பத்து மடங்கு நீளமானவையும் பலம் வாய்ந்தவையும். துள்ளி எழுந்து பின்னங் கால்களால் ஒருவரை உதைத்தால் நெஞ்சுக் கூடு பிளந்து அந்த இடத்திலேயே கதை முடிந்து விடும். பின்னங் கால்களுக்கு இருக்கும் அதே அசுர பலம் அதன் வாலுக்கும் உண்டு. இறைச்சிக்காக கங்காரு வேட்டைக்குப் போன எனது தந்தையை வாலால் அடித்தே கொன்றது ஒரு கிழட்டுக் கங்காரு, என சயந்தனை எச்சரித்தான் யாரன்.

கங்காருக்களை வேட்டையாடுவதில் யாரனின் தாத்தா, வல்லவர் எனப் பெயர் பெற்றவர். வேட்டையாடுவதில் தங்கள் குல தர்மம் பேணுபவர். அடைப்பப் பைக்குள் குட்டியுடன் திரியும் தாயையோ வயதில் முதிர்ந்த கங்காருவையோ அவர் ஒருபோதும் வேட்டையாடுவதில்லை. ஆஸ்திரேலியா முழுவதிலும் குத்துமதிப்பாக அறுபது கோடி கங்காருகள் உள்ளதாகவும் இவற்றின் இனப் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க அவ்வப்போது அவை சுட்டுக் கொல்லப்படுவதாகவும் தாத்தா கணக்குச் சொன்னார்.

சந்தைக்கு வரும் கங்காரு இறைச்சிகள் அனைத்தும் வேட்டையாடிப் பெறப்பட்டவையா? என ஒருநாள், தன் மனதிலிருந்ததை மேலும் அடக்க முடியாமல் கேட்டான் சயந்தன். 

ஆம், முன்பெல்லாம் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்றி கங்காருக்கள் வேட்டையாடப் பட்டன. ஆனால் இப்பொழுது பணம் பண்ணும் நோக்கத்தில் வரைமுறையின்றி சுட்டுக் கொல்லப்படுகின்றன, என வார்த்தைகளை விட்டுவிட்டு உடைத்த தாத்தா தொடர்ந்து பேசாமல் மௌனம் காத்தார். இதைச் சொல்லும்போது அவரது கண்கள் வெறுப்பை உமிழ்ந்ததை சயந்தன் அவதானித்தான். முடிந்தவரை முயன்றும் இதுபற்றித் தொடர்ந்து பேச தாத்தா மறுத்துவிட்டார்.

இறைச்சிக்காக வகைதொகையின்றி கங்காருக்கள் சுட்டுக் கொல்லப்படுவதாக, தாத்தா சொன்ன தகவலும் அவரது உடல்மொழியும் சயந்தனைத் தொடர்ந்து படுத்தி தூக்கத்தைக் கெடுத்தது. பாடசாலை நேரத்திலும் பாடத்தைக் கவனிக்காது கங்காருக்களின் நினைவாகவே இருந்தான். கங்காரு இறைச்சியின் கிராக்கி வெள்ளையர்கள் மத்தியில் அதிகரிக்க, புறொயிலர் கோழிகள் போல விரைவில் சதைவைக்கும் கங்காருக்களை இனவிருத்தி செய்தால் என்ன? என்ற பல்தேசியக் கம்பனியின் எண்ணமும் செயலாக்கமுமே பண்ணையில் நடப்பதாக மணந்து பிடித்தான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த அவ்கானி.

தாய்க் கங்காரு வெறும் முப்பது நாள்களிலேயே ஜெல்லி பீன்ஸ் சைசில் தன்னுடைய குட்டியை ஈன்றுவிடுகிறது. இதை 'யோய்' என, பண்ணையிலுள்ள வெள்ளையர்கள் அழைப்பதை சயந்தன் கேட்டிருக்கிறான். இதற்கு வால் இருக்காது, காது கேட்காது, கண்கள் தெரியாது, முடிகள் இருக்காது. முன் கால்கள் கிடையாது. பின் கால்கள் மட்டும்தான் இருக்கும். பண்ணையில், சயந்தனின் பராமரிப்பில் நின்ற ஒரு கங்காரு, பிரசவ காலத்தில் தனது ரோமங்களை நக்கி, குட்டி தனது பையக்குள் ஏற ஒரு தடத்தை உருவாக்கியதை அவதானித்தான். பலாக்கொட்டை சைஸில் பிறந்த குட்டி தடத்தில் உருண்டு அடைப்பப் பைக்குள் போன லாவகம் பிரமிக்கவைத்தது. குட்டியின் மிகுதி வளர்ச்சி அடைப்பப் பையுக்கு உள்ளேதான் நடைபெறவேண்டும். பையுக்குள் இருக்கும் முலை போன்ற அமைப்பில் பாலை உறுஞ்சி முழுமையான வளர்ச்சியை எட்டியவுடன் பூமியில் தன்னுடைய பிஞ்சு பாதங்களை வைப்பது இயல்பாக நடக்கும் சங்கதி.

ஆனால் பண்ணையில்?

ஈன்ற மறு கணமே குட்டி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சுதேச விலங்குளின் இயல்பை மாற்றும் இனவிருத்தித் தடையையும் மீறி, ஆய்வுகூடத்தில் ஊளைச் சதைவைக்கும் ஆய்வுகள் கமுக்கமாக நடந்தன. பன்றிகள்போல கொழுத்துப் பெருத்த கங்காருக்களின் பிம்பத்தை சயந்தனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் கற்பனை, லண்டன் தமிழ் முதலாளி ஒருவர் வன்னியில் ஆரம்பித்த கோழிப் பண்ணை நினைவுகளை நோக்கித் தள்ளியது. அங்கு இனவிருத்தி செய்யப்பட்ட பல்இன புறொயிலர் கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன. கூடுகளில் வளர்ந்த இவை ஒரு நிலையில் தங்கள் உடம்புப் பாரத்தை தாங்க முடியாமல் துவண்டு விழும் காட்சி சினிமா படம்போல மனதில் ஓடியது. அந்த நினைவுகள் தந்த அதிர்வுகள் இந்தக்கணமும் சுழன்றடிப்பதை சயந்தன் உணர்ந்தான்.

ஒரு நிலையில் இன்குபேட்டரில் போஷிக்கப்படும் தங்கள் குட்டிகளைத் தேடி தாய்க் கங்காருக்கள் ஆய்வுமையத்தை இரவு பகலாகச் சுற்றிவந்தன. குறைந்த பட்ஷம் சில மாதங்களாவது தான் தாயின் உடம்புச் சூட்டில் வளர்ந்த நினைவுகள் மனதில் விரிந்தன. புதிய கனவுகள் அலை அலையாக வந்து சயந்தனைப் பயமுறுத்த, பயித்தியம் பிடித்தவன் போல பள்ளிக்கூடம் போகாமல் கங்காருக் கொட்டகையே கதியெனக் கிடந்தான்.

நாட்கள் நகர சயந்தனின் அசாத்திய நடவடிக்கைகள் தீவிரமானதால் பண்ணைக்கு அருகே இருந்த வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டான். பின்தங்கிய பிரதேச வைத்திய சாலைகளுக்கு வெள்ளைக்கார வைத்தியர்கள் பணிபுரிய வருவது குறைவு. புலம்பெயர்ந்த ஆசிய டாக்டர்களே பெரும்பாலும் பணிபுரிந்தார்கள். மகன், தன் இயல்பில் மனித கங்காருவாக மாறுகிறானா? என ஆஞ்சநேய பக்தரான அப்பா வார்த்தைகளை விக்கி விழுங்கிக் கேட்டபோது வாய்விட்டுச் சிரித்த நேப்பாளி டாக்டர், இது நீங்கள் நம்பும் அவதாரமும் அல்ல, நோயுமல்ல, ஆழ்மனப் படிவுகளின் வெளிப்பாடு என்றார். ஆனாலும் அப்பாவின் மனம் அடங்கவில்லை. ஊரிலுள்ள சிறுதெய்வங்களின் நினைவுகள் மனதில் சுழன்றடிக்க,  அண்ணமாருக்கு ஆடுவெட்டி மடை வைக்காததால் வந்த வினைதான் இதுவென நினைத்து, பரிகாரம் செய்ய ஆயத்தமானார்.

அன்று காலை பண்ணை அமளிதுமளிப்பட்டது. அடைத்து வைக்கப்பட்ட கங்காருக்கள் ஓடிவிட்டதை காலையில் வேலைக்கு வந்த யாரன் அவதானித்தான். ஆய்வு மைய வாசல் கதவு உடைக்கப்பட்டு கண்ணாடி யன்னல்கள் நொருங்கியிருந்தன. அங்கிருந்த இன்குபேட்டர்கள் கவிழ்க்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தன. கங்காருக் குட்டிகளைக் காணாது நிர்வாகம் திகைத்தது.

இவ்வளவு நடந்தும் பண்ணைக்குப் பொலீஸார் அழைக்கப்படவில்லை. நடந்ததை அறிந்து, உள்மட்டத்தில் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் சிசிடிவி கேமராப் பதிவுகளைப் பார்த்தது. தாய்க் கங்காருக்களின் நடுவே, மனிதன்பாதி மிருகம்பாதி என்னும் கலவையான தோற்றத்தில், மங்கலான உருவம் ஒன்று கேமராவில் பதிவாகியிருந்தது.

காலச்சுவடு இலக்கிய சஞ்சிகை, பிப்ரவரி 2022,

 

 

 

 

No comments:

Post a Comment

.