Sunday 13 March 2022

 

புனைகதை வெளியில் புதிய எல்லையைத்தொடும்

பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு

புலோலியூர் ஆ இரத்தினவேலோன்


றிவியலுடன் உலகளாவிய தனதனுபவங்களையும் கலந்து வித்தியாசமான தளங்களில் நின்று புதிய புனைவு மொழியிலும், உத்திகளிலும் கதை சொன்ன முறைமையில் இன்றைய எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவராக முதற் சிலருள் வைத்துப் போற்றத்தக்கவராக ஆசி கந்தராஜா திகழ்கிறார். பூங்கனியியல், உயிரியல்  தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர், அறிவியல் அறிஞர், விவசாயத்துறை ஆலோசகர், அனுபவமிக்க மின்னியல் ஊடகவியலாளர், எழுத்தாளர் என ஆசி கந்தராஜா பல் துறைகளிலும் பிரகாசிப்பினும் அவரை ஜனரஞ்சகப் படுத்தியது எழுத்தாளர் எனும் அவரது பேராளுமை தான் எனத் துணிந்து கூறலாம்.

எழுத்தாளர் எனும் வகையில் கதைஞராக, புனைவாளராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக ஆசி செயலியற்றி வருகிறார். அறிவியலை குறிப்பாக பூங்கனியியலை முன்னிறுத்தி ஆசி புனையும் கட்டுரைகளில் அறிவியல் சார்ந்த தகவல்கள் அவருடைய சித்திரிப்பு ஆற்றலுடன் செம்பாதியாய் கலந்திருக்கும். ஆனால் அவரது புனைவுகளிலோ ஆசிரியரின் திறனானது அவரது சித்திரிப்பு ஆற்றலுக்கு அப்பாலும் பல தளங்களிலும் வியாபித்து மானுட உறவு நிலைகளையும் உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்துவதாக அமையும்.

புனைகதைஞராய் நின்று ஆசி படைத்த இலக்கியங்கள் சர்வ தேசிய மாற்றங்களின் போக்கிற்கேற்ப இயைந்திருந்து அவரை ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளராக சிறுகதையைப் புத்தாக்கம் செய்யும் பிதாமகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின எனலாம். அந்த வகையில் 'பாவனை பேசலின்றி' (2000) உயரப் பறக்கும் காகங்கள் (2003) போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் அதில் உள்ளடங்கி யிருந்த கதைகளும் இலக்கியவெளியில் பெரிதும் பேசப்படலாயின. இந்த இரு நூல்களைத் தவிர 2018 இல் ஆசியின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பானது 'கள்ளக்கணக்கு' எனும் பெயரில் அறுவடையானது. 'பாவனை பேசலின்றி' சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான இலங்கை அரசின் இலக்கிய விருதினைத் தனதாக்கியிருந்தமையும், 'கள்ளக்கணக்கு' நூலானது தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது என இரட்டை விருதுகளைப் பெற்றிருந்தமையும் இவரது புனைவாற்றலுக்குக் கிடைத்த பேரங்கீகாரங்கள் எனக் கொள்ளலாம். அறிவியல் சார் தகவல்களையும் புனைவின் கூறுகளையும் கலந்து  புதுவித மொழிநடையுடனும் அங்கதச் சுவையுடனும் தன் கதைகளை அவர் நகர்த்தும் பாங்கு அவருக்கேயுரியது. இப் பண்பினாலேயே பெரும்பாலான வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஆசி பொருத்திப் பார்க்கப் படுகிறார்.

ஆசியின் அல்புனைவுகள் அறிவியல் சஞ்சிகைகளுக்கு நிகரானவை. விஞ்ஞானியான போதிலும் வித்துவத்துடன் அவற்றினைப் புனையாது விவசாயஞ் செய்பவர்களாலும் அறிவியல் பிரஞ்ஞை அற்றவர்களாலும் புரிந்துணரத்தக்க வகையில் தனது கட்டுரைகளை அவர் வடிவமைத்திருப்பார். நீண்ட காலப் பயிர்களை குறுகிய காலத்துள் மகசூல் தரவைப்பது அயன மண்டலப் பயிர்களை  அவுஸ்திரேலியாவிலும் பயிரிட்டு அறுவடை காண்பது ஒட்டு வைத்தும் பதிவைத்தும் பயிர்களில் மிகுந்த பலனைக் கொள்வது என பயிர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும், பூங்கனியியல் அபிவிருத்தியினையும் இலக்கியமாக்கி அதனைப் பாமரர் வரை கொண்டு சென்றதோடு அப் புதுவகை இலக்கியத்திற்கு முன்னோடியாகவும் தலைப்பட்டு நிற்பதே ஆசி கந்தராஜா பெறும் முக்கியத்துவத்திற்கான காரணம் எனலாம்.

மேற்படி வகையில் அமைந்த ஆசியின் கறுத்தக் கொழும்பான்( செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (2019) போன்ற அல்புனைவுக் கட்டுரைத் தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையாகியதும் திருப்பூர் இலக்கிய விருதுகளைத் தமதாக்கியதும் அவரின் அறிவியல் எழுத்துகளுக்கும் ஆராய்ச்சிக்கும் கிடைத்த பெருவெற்றியென தாராளமாகவே கூறலாம். இவரது குறுநாவல் முயற்சிகளும் விதந்துரைக்கற்பாலது. புலம் பெயர்விலான உணர்முறைமை மாற்றங்களையும் நிலைமாறும் வாழ்க்கை முறைகளையும் ஆசி என்னும் புலம்பெயர்ந்த இலக்கியவாதி குறுநாவல் போன்ற தன் புலப்பதிவுகள் வாயிலாக வெளிப்படுத்தும் முறைமை வெகு அற்புதமாகவே அமையலாயின. 'திரிவேணி சங்கமம்' என்னும் குறுநாவல் இன்றளவும் மனதில் நிலைப்பதற்கு இத்தகு சித்தரிப்பு முறைமையே காரணமாகியது. புலம் பெயர்ந்து வாழும் விடலைகளின் விழுமியப் பிறழ்வினை அந்நவீனத்தில் உயிர்ப்புடன் ஆசி சித்தரித்திருப்பார். இக்குறுநாவலை உள்ளடக்கியதாக வெளிக் கொணரப்பட்ட 'கீதையடி நீயெனக்கு' எனும் பனுவலும் 2015 இல் திருப்பூர் இலக்கிய விருதினை வென்றிருந்ததும் மனங்கொள்ளத்தக்கது.

அறிவிப்பாளராக, தொகுப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானலைகளிலும் ஆசி எடுக்கும் அவதாரங்கள் ஒவ்வொன்றும் அபாரமானவை. இந்த வகையில் தாயகம் வானொலியில் இவர் தொகுத்தளிக்கும் 'நிலாமுற்றம்' நிகழ்ச்சி நயந்து நோக்கற்பாலது. ரஷ்ய-  உக்ரேன் யுத்தம்  பற்றிய இவரது தொகுப்பொன்று சில தினங்களின் முன்னர் ஒலிபரப்பான தருணம், அது பலருள்ளும் பதியமாகியிருந்தது.

ஆசி கந்தராஜாவின் பத்தாவது நூலாக அண்மையில் அறுவடையாகியிருக்கும் பணச்சடங்கு ஆசிரியரின் நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். பரந்துபட்ட  விற்பனை வலையமைப்பினூடு எம்மவர் புத்தகங்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வரும்  குலசிங்கம் வசீகரனின் 'எங்கட புத்தகங்கள்' பிரசுராலயமே பணச்சடங்கினை வெளிக்கொணர்ந்தி ருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்நூலில் பதினைந்து கதைகள் உள்ளடங்கியுள்ளன. இப்பதினைந்து கதைகளையும் ஒருசேர படித்த பின்னர் வாசகனுக்கு ஏற்படும் உணர்வானது உண்மையில் அபரிமிதமானது. தான் அனுபவித்த அல்லது உணர்ந்த புதுவகை அனுபவங்களை தனது பார்வையில் இருந்ததன் படியே கட்டமைத்து அதே வடிவத்துடனேயே வாசகனது தரிசனத்திற்கும் உள்ளாக்க வைக்க ஆசி போன்ற ஒரு சிலரால்தான் முடிகிறது. இத்தகு தன்மையினாலேயே 'தமிழில் இந்தவகை எழுத்துகள் இதற்கு முன் இல்லை' என  நாஞ்சில் நாடன் போன்றவர்களால் 'ஆசி' க்கு அணிந்துரை நல்கி ஆசி வழங்க முடிகிறது.

இப்பதினைந்து கதைகளுள் மூன்று கதைகள் மிக முக்கியமானவை. இவை ஆசிரியரின் சொந்த மண்ணில் நிகழ்வனவாகப் புனையப்பட்டவை. மண்ணிற்கே உரித்தான உரையாடல்களும் சொற்களும் இயல்பாகவே இக் கதைகளில் வந்தமைந்து அணிசேர்த்துள்ளன. 'இந்துமதியாகிய நான்' , 'சாது மிரண்டால்' ,  'நரசிம்மம்' ஆகிய இம்மூன்றுள் முதலிரு கதைகளும் மணவாழ்வு மற்றும் பாலியல் பிறழ்வு தொடர்பானவை. 'நரசிம்மம்' போரின் விளைவுகளையும் அதன் வழியான அதிர்வுகளையும் முன்நிறுத்திப் பேசுகிறது. நோய்க்கிருமியைத் தொற்ற வைத்து தன்னை வஞ்சித்த மனைவியை பழிவாங்கும் கணவனைப் பற்றிய கதை 'சாது மிரண்டால்' . அறிவியல் கற்ற எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பலர் இருப்பினும் அவற்றினை புனைகதைகளில் புகுத்தி பொதுசனங்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கத் தக்க வல்லமையினை ஆசி போன்ற ஒரு சிலரே கொண்டிருக்கின்றார்கள். அத்தக பண்பினை அவர்கள் கொண்டு விளங்குவதாலேயே வாசகர்களாலும் விரும்பி வாசிக்கப் படுகிறார்கள்.

இளைஞர் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நிகழ்ந்த கதி பற்றிய  ஒரு சிறுவெட்டுமுகமாக 'நரசிம்மம்' கதையினைக் கொள்ளலாம். புனிதவதி எனும் வனிதை , இராணுவ முகாம்களில் அனுபவித்த தொடர் பாலியல் பலாத்காரங்களையும்  சித்திரவதைகளையும் அதன் விளைவால் தாய்மையுற்று பெற்றெடுத்த தன் குழந்தைக்கு ஒருவித வன்மத்துடன் பெயர் சூட்டுவதையும் மனதை விட்டகலா முறையில் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். புதிய வாழ்விட வெளியில் நின்று கொண்டு, தான் பிறந்த மண்ணில் நிகழ்ந்த போரையும் அதன் பின்னால் நிகழ்ந்த இத்தகு வலிமிகுந்த சம்பவங்களையும் ஆசி நோக்கிய முறைமையே இங்கு பிரதானமாகிறது. மறுபுறமாக ஆயுதக் கலாசாரத்தின் ஆதிக்கம் தனிமனித வாழ்வினை எவ்வாறு சின்னாபின்னமாக்கியது, சீர்குலைத்தது என்பதனையும் மேற்படி கதைகளில் துணிவுடன் ஆசிரியர் பதிவு செய்துள்ளமையும் நோக்கற்பாலது. புலம் பெயர்ந்து வாழும் காரணமாகவும் ஆசிக்கு இத் தைரியம் சாத்தியமாகி இருக்கலாம்.

புலம்பெயர் எழுத்தாளர்களில் ஒரு சாரார் ஈழத்து வாசகர்களுக்கு தம் படைப்புகளின் வாயிலாக புத்தனுபவங்களை தரிசிக்க வைப்பர். இன்னோர் வகையினர் வாழ்வியலின் பண்பாட்டுக் கூறுகளை விமர்சனத்துக்குள்ளாக்கும் வகையில் தமது  பதிவுகளை முன்னெடுப்பர். தமது அனுபவ வளங்களையெல்லாம் புனைகதைக்குள் கொண்டு வந்து சேர்க்கும் முதலாவது வகையினரையே வாசகர் பெரிதும் உவப்பர். புலம்பெயர்வின் பின்னரான பிறந்த மண் பற்றிய ஏக்கங்கள், கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் முதலானவைகள் அந்நியமாவதாலான சிக்கல்கள், புதிய நாடுகளில் வாழ்வினை முன்னெடுத்துச் செல்வதில் முகங்கொடுக்க வேண்டிய சவால்கள்,தொழிற்தளப் பிரச்சினைகள், முதியோர் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் போன்றனவே பொதுவாக புலம்பெயர் இலக்கியங்களின் பாடுபொருளாகின்றன. ஆனால் இவற்றிற்கு அப்பாலும் சென்று அறிவுபூர்வமான அணுகுமுறை,

சிந்தனைகளால் தம் சிறுகதைகளை சுவாரசியம் மிக்கதாக சிருஷ்டிப்பதாலேயே ஆசி புலம்பெயர் எழுத்தாளர்களுள் எடுத்துப் பேசத்தக்கவராகிறார்.இந்த வகையில் இத் தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 'எதலீன் என்னும் ஹோமோன் வாயு' எனும் கதை குறிப்பிடத்தக்க ஒன்றெனலாம்.

'வெயில் சூட்டுக்கு எலுமிச்சங் காயிலிருந்து எதலீன் வெளியேறியதாலேயே பிஞ்சு வெண்டிக்காய் முத்தியது' என்ற வேதியல் மாற்றத்தை ஒரு சிறுகதையின் அடிநாதமாக, பாடுபொருளாக ஆக்கி கதை நிகழும் காலத்தினை கால் நூற்றாண்டு வரை நகர்த்தத் தக்க பக்குவமும் முதிர்ச்சியும் ஆசிக்கே உரித்தானது. அதுவே அவரது தனித்துவமுமாகிறது. 'பணச்சடங்கு' எனும் கதையில் எம்மண்ணிற்கே உரிய பாரம்பரியம் எவ்வாறு அவுஸ்திரேலியா வரை வியாபித்திருக்கிறது என்பதை அங்கத நடையுடன் ஆசி நாசூக்காக சொல்லியிருப்பது நயத்திற்குரியது. 50 வயதைக் கடந்த தம்பதியினரிடையே 'தவணை' தவறியதால் ஏற்படும் இயல்பான பதகளிப்பை நம்பகத் தன்மையுடன் சித்தரித்திருக்கிறது, 'சாத்திரம் உண்டோடி' எனும் சிறுகதை. இவ்வாறாகவே அந்திமம், முகமூடி மனிதர்கள், வேதியின்  விளையாட்டு போன்ற  கதைகளிலெல்லாம் ஆசி தானாகவே நின்று கதை சொல்வதால் அவரது மெய்யனுபவங்கள் யாவுமே எமக்குரியதாகி எம் முன் தொற்றிக் கொள்கின்றன.

தொகுதியில் இடம்பெற்றிருக்கும் மூன்றாவது வகையான கதைகளின் களங்கள்  ஈழத்து வாசகர்களுக்கு முற்றிலும் அந்நியமானவை. புதிதானவை. ஈரான்., லெபனான், ஜெருசலேம், ஜோர்தான் போன்ற தேசங்களை கதைமாந்தர் களமாகக் கொண்டு இந்த ஆறு கதைகளும் புனையப்பட்டுள்ளன. தொழிலின் நிமித்தமாக அந்நாடுகளுக்குச் சென்றிருந்த வேளைகளில் அங்கு தான் அவதானித்தவற்றையும் அனுபவித்தவற்றையும் கருப்பொருட்களாக்கி  காத்திரமானதாக ஆசி வடிவமைத்த கதைகள் அவை. இந்த வகையிலே அ.முத்துலிங்கத்தின் கதைகூறு முறையின் தொடர்ச்சியை ஆசி கந்தராஜா பேணி வருகிறார் எனலாம். 'பல நாட்டு மனிதர்களின் அனுபவங்களுடன் விஞ்ஞான அறிவும் ஆசியின் கதைகளை அலங்கரிக்கின்றன' என ஓரிடத்தில் அ. முத்துலிங்கம் கூறியதனை இவ்விடத்தே மனங்கொள்ளல் தகும்.

இவ்வகைமையில் அமைந்த 'ஆண் குழந்தை' , 'காதல் ஒருவனைக் கைப்பிடித்து', 'ஆண்சுகம்', 'எதிரியுடன்  படுத்தவள்' , 'கையது கொண்டு மெய்யது பொத்தி' , 'தலைமுறை தாண்டிய காயங்கள்' ஆகிய ஆறு கதைகளுள்ளும் 'ஆண்குழந்தை', 'கையது கொண்டு மெய்யது பொத்தி' ஆகிய இரண்டும் கவனத்தைக் கோருவனவாக அமைந்துள்ளன. மகப்பேறின்மைக்கும் தொடர்ச்சியாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் பெண்கள் அல்ல பொறுப்பாளிகள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை 'ஆண்குழந்தை' கதை மூலம் ஆசிரியர் உணர வைத்திருக்கின்றார். சிரிய யுத்தத்தால் இடம் பெயர்ந்து லெபனானின் தலைநகரான பெய்ரூத்தில் சிக்குண்டு அல்லலுறும் இரண்டு குழந்தைகளின் கதையாக 'கையது கொண்டு மெய்யது பொத்தி' திகழ்கிறது.சிறுவன் அலியையும் அவனது தங்கை பாத்திமாவையும் பொலிஸிலிருந்து தப்ப வைத்த  அந்த இஸ்லாமியப் பெரியவர் கதை வாசித்து முடித்து நீண்ட நாட்கள் சென்றும் நினைவை விட்டு அகலாதிருந்தார். 15 கதைகளுள்ளும் மூச்சைத் திணற வைத்த கதை இது எனலாம்.

அந்திமம் முதல் பணச்சடங்கு வரை 15 கதைகளை உள்ளடக்கியுள்ள இப்பனுவலில் உச்சம் பெற்ற கதைகளாகக் குறைந்தது 5 கதைகளையாவது பரிந்துரைக்கத் தக்கதாயுள்ளது. அந்த வகையில் பெரும்பாலான கதைகள் கனதியுடனமைந்து புனைகதை வெளியில் ஒரு புதிய எல்லையினை இப்பனுவல் தொட பாலம் அமைத்துள்ளன எனலாம். 'எனது ஆக்கங்கள் எதையுமே நான் ஒரே முறையில் எழுதியது கிடையாது. அவை திரும்பத் திரும்ப எழுதப்பட்டவை. அவற்றில் உண்மை கலந்த நம்பகத்தன்மை உள்ளதா எனப் பார்க்கப் பட்டவை.++ ஏற்ற சொற்களைப் பாவித்து, முடிந்தவரை எளிமையான உரைநடையில் விவரிக்கப்பட்டவை' என நூலின் என்னுரையில் ஆசிரியர் ஆசி கந்தராஜா கூறியிருப்பது கவனத்தில் கொள்ளப்பட  வேண்டியது. குறிப்பாக புனைகதை வெளியில் இன்று காலடி பதித்திருக்கும் இளம் எழுத்தாளர்கள் ஆசியின் இக்கூற்றினை ஓர் அறிவுரையாகக் கூட  கொள்ளலாம்.

நூலிற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் வழங்கியிருக்கும் நீண்ட முன்னுரையும் குறிப்பிடற்பாலது. புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு உசாத்துணையாகவல்ல  இம்முன்னுரை நூலின் கனதிக்கும் ஓர் காரணமாகின்றது என்றால் அதுமிகையாகாது. தெளிவான அச்சுப் பதிப்பு, கண்களுக்கு இதமான எழுத்துரு, கனதியான தாள், கவர்ச்சியான பக்க வடிவமைப்பு முதலானவைகளும் புத்தகத்தினை மேலும் பெறுமதியாக்கியுள்ளன. இதே தரத்துடன் எங்கட புத்தகங்களை தொடர்ந்தும் குலசிங்கம் வசீகரன் வெளிக்கொணர வேண்டும்.

ஊரெல்லாம் சொல்லி பணச்சடங்கினை பேராசிரியர் ஆசி  கந்தராஜா ஒழுங்குபடுத்தியுள்ளார். வாசகர்களும் விமர்சகர்களும் நிச்சயம் கோலாகலமாக அதைக் கொண்டாடுவார்கள்!

13 மாச் 2022. ஞாயிறு தினக்குரல்.







No comments:

Post a Comment

.