Saturday 19 March 2022

 

சொல்லித் தெரிவதில்லை இலக்கியக்கலை

- மு பொ -

(20 March 2022 தினக்குரல்)



சென்றவார ( 13 march 2022 ) தினக்குரலில் புனைகதை வெளியில் புதிய எல்லையைத் தொடும் பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு என்ற தலைப்பில் புலோலியூர் ஆ .இரத்தினவேலோன் எழுதிய கட்டுரை ஆசி கந்தராஜாவின் இலக்கிய பங்களிப்பை முழுமையாக அறியாத பலருக்கு பேருதவி செய்வதாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சென்ற ஆண்டு அவர் கொழும்பு வந்திருந்த போது என்னையும் வந்து சந்தித்து தனது நூலொன்றையும் தந்தது எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய பரந்த மனப்பான்மையையும் அன்பையும் காட்டுவதாய் இருந்தது. பின்னர் அவரைக் கெளரவிக்கும் முகமாக 'ஞானம்' சிற்றிதழின் ஆசிரியர் கொழும்புத் தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டி கெளரவித்தார். இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவர் ஆசி கந்தராஜாவிடம் ஈழத்தமிழர் மேற்கொண்ட விடுதலைப் போராட்டம்,  அதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை?  என்ற கேள்வியொன்றை முன்வைத்தார்.

அது அவசியமான நல்ல கேள்வியாகவே இருந்தது. அதற்கு அவர், நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு அதில் அனுபவம் எதுவுமில்லை அதனால் எழுதுவதுமில்லை என்றார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான பதில் அளித்தவர்களைக் கண்டிருக்கிறேன். இவ்வாறான பதிலை அவர்கள் முன் வைத்ததற்கு  காரணம் அதில் தமக்கு அனுபவம் இல்லை என்பதை விட இவற்றை எழுதப் போய் தேவையற்ற அரசியலில் சிக்க நேர்ந்து விடும் எனும் அச்சமே முக்கியமானது. ஆகவே அதை ஒரு குறையாக நாம் எடுப்பதில்லை. இவ்வாறானவை எழுதப்போய் ஒருவன் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது நாங்களா தோள்கொடுக்கப் போகிறோம் 

ஆனால் இங்கே ஆசி கந்தராஜாவைப் பொறுத்தவரை மட்டுமல்ல எவரையும் பொறுத்தவ ரையும் இப்படி எனக்கு அது பற்றி அனுபவம் இல்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முனைவது எழுத்தை அவமதிப்பதாகும். அதனால் நான் ஆசி கந்தராஜாவிடம் பின்வருமாறு கேட்டேன். நீங்கள் அமெரிக்கப் புரட்சி பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆம் என்றார். தொடர்ந்து அமெரிக்கா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபின் வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிந்து உள்நாட்டுப் போர் அங்கே வெடித்தது.தெற்கு கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் இனவெறி கொண்ட வெள்ளையர்

களைக் கொண்டது. வடக்கோ கறுப்பின மக்களையும் தம்மைப் போல மனிதர்களாக மதிக்கும் வெள்ளையர்களைக் கொண்டது இல்லையா? ஆம் என்றார். இக் காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரஹாம்  லிங்கன் ஆவார். வடக்கின் வெற்றிக்காய் பல வியூகங்களை அமைத்து போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போது அவரோடு கறுப்பின மக்களும் படையில் சேர்ந்து போராடினர். அப்போராட்டம் வடக்கை வெற்றிவாகை சூடவைத்தது. இக்காலத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் தெற்கில் இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது எவரும் அறிந்ததே.

தொடர்ந்து நான் அவருக்கு பின்வருமாறு சொன்னேன். இந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி பலர் நிறையவே எழுதியுள்ளனர். இத்தகையோரின் எழுத்துக்கள் அனைத்தையும் விட Stephen Crane என்பவர் எழுதிய The Red Badge of Courage என்ற நாவலே அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி வெளிவந்தவற்றுக்கெல்லாம் சிகரமாக நிற்கின்றதென்றால் மிகையாகாது. இங்கே இவைபற்றியெல்லாம் நான் எழுதுவதற்கு காரணம் இந்த நாவலை எழுதியவர் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது பிறந்திருக்கவும் இல்லை! அத்தோடு  அவர் பிறக்க முன்னரே உள்நாட்டுப் போரும் முடிந்து விட்டது.

அப்படியானால் ஸ்டீபன் கிறேன் என்ற இந்த எழுத்தாளர் எந்த அனுபவத்தை வைத்து தனது ஆக்கத்தைப் படைத்தார் என்பதே கேள்வி. நிச்சயமாக அவர் உள்நாட்டுப் போர் பற்றி வந்த பத்திரிகைச் செய்திகள், ஏனைய எழுத்தாளர்களால் போர் பற்றித்தரப்பட்ட  தகவல்கள், கதைகள் என்று பலவற்றைப் படித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.ஆனால், இந்தத் தகவல்களையும் வெற்று அனுபவத்தையும் வைத்து கையால் மாவைப் பிசைவது போல மனதைப் பிசைவதால் ஆக்க இலக்கியம் வந்துவிடாது. சொல்லித் தெரிவதில்லை இலக்கியக்கலை.

ஒருவர் தான் சேகரித்த தகவல்கள், அனுபவங்கள் என்பவற்றின் பின்னணியில் அவன் தன் ஆக்கத்தை படைப்பு நிலைக்கு கொண்டு வர முயலும் போது அவனது ஆழ உள்ளுணர்வின் சிலிர்ப்பு உயர்ந்த தளத்துக்கு இட்டுச் செல்கின்றது. அவ்வாறு நிகழும் எழுத்துகள் நிச்சயமாக வெற்றி பெறுகின்றன என்பதே உளவியலாளர் சிலரின் கூற்று.

எனக்கும் ஆசி கந்தராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடலின் பின்னர் அவர் தனக்கு அனுபவம் இல்லை என்று கூறிய விஷயங்கள் தொடர்பாக எழுத முற்பட்டார் என்று நான் அறிய வருகிறேன். ஞானம் இதழில் அப்படி ஒரு சிறுகதை வந்ததாக அறிகிறேன். தற்போது இரத்தினவேலோன் எடுத்துக் காட்டியுள்ள நரசிம்மம் கதையும் அத்தகையவற்றில் ஒன்றா?

அது என்னவாய் இருந்தாலும் அவர் போன்ற ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் நம்மக்கள் பட்ட பாட்டை தம் எழுத்தாளுமைக்குள் விழுத்துவது அவசியம் அல்லவா ?

இத்தகைய உள்ளுணர்வின் பாற்பட்டதே ஸ்டீபன் கிறேன் எழுதிய நாவலும். 1871 இல் பிறந்த அவர் 1900 இல் இறந்து போனார். அவன் சிறந்த கவிஞனாகவும் இருந்தான். சொற்ப காலம் வாழ்ந்த மேதை.

No comments:

Post a Comment

.