Tuesday 31 January 2023

 

ஆயுத எழுத்து

ஆசி கந்தராஜா


ண்சட்டியில் கருவாட்டுக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.  கண்டிக்குப் போகும் வழியில், சுண்டிப் பார்த்துக் கவனமாக வாங்கிய மண்சட்டியது. மண்சட்டியில் கறிசமைக்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசை இம்முறைதான் சித்தித்தது. திரும்பிவரும் பறப்பில் முப்பது கிலோ அனுமதிக்கப்பட்டிருந்தாலும் சொந்தச் சாமான்கள் அதிகம் இல்லாததால், வெவ்வேறு சைஸில் மண்சட்டிகளும் கிலோக் கணக்கில் கருவாடும் வாங்கி, பக்குவமாகப் பொதிசெய்து கொண்டுவந்திருந்தார். மனைவி பெரும்பாலும் சைவம். இதனால் மச்சமாமிசம் காச்சுவதென்றால் சாம்பசிவம் வாய்க்கு இதமாகத் தானே சமைத்துக் கொள்வார்.

இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன்றில், பொருளாதாரமும் வணிக முகாமைத்துவமும் படித்த சாம்பசிவம், அரச வங்கியொன்றில் உயர் பதவி வகித்தவர். வெளிநாடொன்றில் வசதியோடு வாழ்ந்த மனைவியின் அண்ணன், மச்சான் அழைத்ததால் எண்பத்தி மூன்றாம் ஆண்டு, இலங்கை இனக்கலவரத்துக்கு முன்னரே குடும்பத்தோடு புலம்பெயர்ந்து, அரசியல் தஞ்சம் கோரியவர். இலங்கையில் அவருக்கு எந்தவித அரசியல் நெருக்கடிகளோ கெடுபிடிகளோ இருந்ததில்லை. இருந்தாலும் நிரந்தர விசா எடுத்து, அகதிகளுக்கான அரச கொடுப்பனவுகளைப் பெற, அகதி அந்தஸ்துக் கோருவதுதான் சுருக்கமான வழியென்றும் காதும் காதும் வைத்தாற்போல விசயத்தை முடித்துவிடலாம் என்றும் மச்சான் சொன்னார். ஈழவிடுதலை இயக்கங்கள் முனைப்படையாத காலத்தில், அகதி விண்ணப்பங்களைப் பரிசீலித்த அதிகாரிகளுக்கு, இலங்கைப் இனப்பிரச்சனை பற்றிய பூரண அறிவோ மனுதாரர்களின் தகிடுத்தத்தங்களோ தெரியாது. மனுவில் எழுதியது, விசாரணையில் சொன்னது எல்லாவற்றையும் வஞ்சகமில்லாமல் நம்பினார்கள். மச்சானின் யோசனைப்படி, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் தான் தீவிரமான அங்கத்தவராக இருந்து, உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் இதனால் இலங்கைப் பொலீஸ் தன்னைத் தேடுவதாகவும் கற்பனையில் ஒரு மனு எழுதிச் சமர்ப்பித்தார். விசாரணைகளிலும் இதையே திரும்பத் திரும்பச் சொன்னதால், ஒரு கட்டத்தில் மனுவில்த் தான் எழுதியதெல்லாம் உண்மையென்றே நம்பத் தொடங்கிவிட்டார்.  

சாம்பசிவத்தின் மச்சான் வலு சுழியன். எழுபதுகளிலேயே படிக்கவென வெளிநாடு வந்து பொருளாதார ரீதியாகத் தன்னை வலுப்படுத்திக் கொண்டவர். சாம்பசிவம் அகதி அந்தஸ்துப் பெற்றதைக் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஈழ விடுதலை இயக்கம் ஒன்றைச்சாட்டி பல்பொருள் அங்காடி ஒன்றை, சாம்பசிவத்தின் பெயரில் ஆரம்பித்து, எம்மவர்கள் பாவிக்கும் சகல பொருள்களையும் இறக்கி விற்பனைக்கு விட்டார். அப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்கள் பெருவாரியாகப் புலம்பெயரத் தொடங்கிய காலம். இலங்கைத் தமிழ்க் கடைகள் எதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கவில்லை. விற்பனையில் பெறப்படும் இலாபமெல்லாம் விடுதலை இயக்கத்துக்குப் போகுது என மச்சான் பரப்பிவிட்ட கதை, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நல்லாய் வேலைசெய்ய, வியாபாரம் சக்கைபோடு போட்டது. இத்துடன் சாம்பசிவத்தின் வணிக முகாமைத்துவ அறிவும் கைகொடுக்க, தமிழர்கள் வாழும் குறிச்சியெங்கும் கிளைகளைத் திறந்தார்கள். கால ஓட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன், புதுப்புது தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டன.

இப்பொழுதெல்லாம் சாம்பசிவம் ஒரு புரவலர், பிரமுகர், கோவில்களின் தர்மகர்த்தா, முக்கிய ஈழ அமைப்பொன்றின் நிரந்தரத் தலைவர். சமீபத்தில்தான் தனது எழுபதாவது பிறந்த தினத்தை, தடல்புடலாகக் கொண்டாடியவர். தலைக்கு மையடித்து இளமை பேணினாலும் உடல் உபாதைகள் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டத் துவங்க ஊர்ப்பற்றும் சுடலைஞானமும் மெல்லமெல்லத் தலைதூக்கின. வைத்தியர் சொன்னபடி மன அழுத்தம் வராமல் இருக்க அடிக்கடி இலங்கைக்கு வந்துபோனார்.        

கருவாட்டுக் குழம்பு வத்தி வறட்டல் பருவத்துக்கு வந்துகொண்டிருந்தது. அடிப்பிடிக்க விடாமல் ஊரிலிருந்து வாங்கிவந்த சிரட்டை அகப்பையால் விறாண்டி, வட்டமாகத் துழாவியபோது குழம்பின் மையத்தில் அந்த இளைஞனின் முகம் கோட்டோவிய வடிவத்தில் தோன்றிய பிரமை உண்டானது. உடம்பு முழுவதும் உஷ்ணம் பரவி வேர்த்தது. இளைஞனின் நினைவு அலைபோல எழுந்துஎழுந்து விழுந்து மனதை அலைக்கழித்தது. அடுப்பை அணைத்து, மெல்ல வெளியே போய் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து அந்த நினைவை மறக்க முயன்றார்.

ஊரிலிருந்து வாங்கி வந்தது, திறம் பாரைக் கருவாடு. தலை, வால், குடற்பகுதி, நடுமுள்ளு எல்லாம் நீக்கி, நல்ல தசைத் துண்டங்களாக வெட்டிப் பொதிசெய்திருந்தான் அந்த இளைஞன். வெவ்வேறு நாடுகளின் 'குவாரன்டைன்' சட்டதிட்டங்கள் அனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அட்சரசுத்தமான ஆங்கிலத்தில் உரையாடியபடி, கருவாட்டை வெட்டி இரண்டடுக்கு பொலித்தீன் பைகளில் சீல்செய்தபின் 'காய்ந்த சுத்தமான கருவாடு' என அழகான ஆங்கில எழுத்துக்களில் எழுதினான். கருவாட்டுக்கு முதலாளி சொன்ன விலை கொஞ்சம் கூடத்தான். டொலரை மாத்தின சாம்பசிவத்தாருக்கு அது அதிகமில்லை. காசல்ல பெரிசு, நல்ல கருவாடுதான் அவருக்கு முக்கியம்.

கருவாட்டின் உப்பு இறங்க சுடுதண்ணியில் ஊறவிட்டு, தாளிதத்தின் பின்னர் பழப்புளி, தக்காளி, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க வைத்துயாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் போட்டு மூடி அவியவிட்டு, பின்னர் நல்லெண்ணையில் பிரட்டி எடுத்ததால், கருவாட்டின் வாசனை மூக்கைத் துளைத்து வயிற்றைக் கிள்ளியது. 'என்னத்துக்குத்தான் இந்த நாத்தல் கருவாட்டைக் கொண்டுவந்து வீட்டை நாறடிக்கிறியளோ தெரியாது. இங்கைதானே சந்தையிலை நல்ல ஃப்ரெஸ்ஸான மீன் வாங்கலாம், அதை வாங்கிச் சமைக்கலாமே' எனப் புறுபுறுத்தபடி வீட்டின் ஜன்னல் கதவுகளை அகலத் திறந்துவிட்டாள் மனைவி. கருவாட்டு மணம் மனைவிக்கு நாத்தம், சாம்பசிவத்தாருக்கு அது வாசனை. இப்படியான சந்தர்ப்பங்களில் 'அறிந்தவன் அறிவான் அரியாலைப் பனாட்டை' என்ற நினைப்பில் சாம்பசிவம் அமைதிகாப்பார்.

இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகவே சாம்பசிவம் ஒரு கருவாட்டுப் பிரியர். அதன் அசலான ருசியையும் அதில் எத்தனைவகைச் சமையல் செய்யலாம் என்பதையும் பல்கலைக் கழகத்தில் கூடப்படித்த சிங்களவர்களிடம்தான் தெரிந்து கொண்டவர். கண்டியில் இவருடன் அறையைப் பகிர்ந்துகொண்டவன் ஒரு நாட்டுப்புறச் சிங்களவன். அவனுக்கும் தினமும் சோறு வேண்டும். அதனால் பக்கத்து அறைக்காரர்களுடன் சேர்ந்து, முறை வைத்துப் பொதுவான சமையல் நடந்தது. சாம்பசிவம் சமையல் கற்றுக் கொண்டதும் சிங்களவர்களிடம்தான். 

இம்முறை எப்பாடுபட்டாவது திரியாய்ப் பாரைக் கருவாடு வாங்கவேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் சாம்பசிவம் யாழ்ப்பாணம் போனார். திரியாய்ப் பாரைக் கருவாட்டின் சுவை பற்றியும் அது அரிதாகவே கிடைப்பதாகவும் நண்பர் ஒருவர் சிலாகித்துச் சொல்லியிருந்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறையை அண்மித்த கடற்கரையோர திரியாய் மீனவக் குறிச்சியில்த்தான் இப் பாரைக் கருவாடு பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தும் பொறிமுறைச் சூக்குமம் பிறர் அறியாதது. பதிவில் இல்லாதது.  மஞ்சள்தூள் மற்றும் பல சரக்குச் சாமான்கள் சேர்த்துப் பதப்படுத்திக் காயவைத்த திரியாய்க் கருவாட்டை, பிரசவத்தின் பின்னர் பெண்கள் உட்கொள்வதாகவும் இதில் உடல்வலியைப் போக்கும் அன்டி-ஆக்ஸிடன்ற் என்னும் வேதிப்பொருள் உண்டென்றும் சாம்பசிவம் அறிந்திருந்தார். கருவாட்டு விசயத்திலே சாம்பசிவம் ஒரு விடாக்கண்டர். திரியாய்ப்பாரை தேடி பருத்தித்துறை வரை அலைந்தும் கிடைக்கவில்லை. அயலட்டையில் விசாரித்தபோது யாழ்ப்பாணப் பட்டிணச் சந்தைக்கருகே பல கருவாட்டுக் கடைகள் இருப்பதை அறிந்து அடுத்த நாள் காலையில் அங்கு ஆஜரானார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவக் கிராமங்களின் பெயர்களுடன் பல கருவாட்டுக்கடைகள், வீதியின் இருமருங்கிலும் வரிசைகட்டி அவரை வரவேற்றன. ஆமான பாரை, விளை, கொடுவா, வஞ்சிரம் கருவாடுகளுடன் வேறும் பல விதம்விதமான கருவாடுகள் கடைகளின் முகப்பில் வரிசையாகத் தொங்கின. வாடிக்கையாளர்களைத் தங்கள் கடைக்கு கவர்ந்திழுப்பதில் அங்கு பலத்த போட்டி நிலவியது. சாம்பசிவம் திக்குமுக்காடிப்போனார். கருவாட்டு வாசத்துக்கு மத்தியிலும் சாம்பசிவம் வெளிநாட்டுக்காரர் என்பதை வியாபாரிகள் மணந்து பிடித்துக்கொண்டார்கள். அங்கும் திரியாய்ப் பாரை கிடைக்கவில்லை. ஓடர்பண்ணித்தான் எடுக்கவேணும், மாதக்கணக்காகும் என்றார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பார்த்துப்பாராமல் கருவாடு வாங்குவார்கள் என்பது வியாபாரிகளின் பட்டறிவு. அதனால் வேறு பல கருவாட்டின் மகிமைகளைச் சொல்லி, சாம்பசிவத்தைத் தங்கள் கடைக்கு அழைப்பதில் முனைப்புக்காட்டினார்கள். திடீரென ஒரு கடைக்காரர் கடையின் பின்பக்கத்திலிந்து ஒரு வாலிபவயதைத் தாண்டிய இளைஞனை இழுத்துவந்து சாம்பசிவத்தின் முன் நிறுத்தினார். மேலங்கி போடாமல் முக்கால் களிசான் மட்டும் போட்டிருந்த அவனும் கடைமுகப்பில் தொங்கிய கருவாடுகளைப்போல காய்ந்து கருவாடாகிப் போயிருந்தான். மார்பிலும் முகத்திலும் காயம்பட்ட வடுக்கள் இருந்தன. மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டிருந்த இடக்கையை வலக்கையுடன் சேர்த்துக் கும்பிட்டு 'எங்கடை கடைக்கு வாங்கோ ஐயா, திறம் கருவாடு இருக்கு' என அழைத்தான். கடை முதலாளியும் தன் பங்குக்கு 'இவன் எங்கடை ஊர்ப்பெடியன். கனகாலம் இயக்கத்திலை இருந்தவன், ஆமிக்குப் பயந்து ஒருத்தரும் வேலை குடுக்கேல்லை, நான்தான் பாவம்பார்த்து வேலைக்கு வைத்திருக்கிறன்' என அவனைவைத்து விளம்பரம் தேடினார்.

கருவாட்டு முதளாளி, இளைஞனையே சாம்பசிவத்தின் வியாபாரத்தைக் கவனிக்க விட்டாலும் அவன் என்ன பேசுகிறான் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார். பேரம் படிந்ததும் அவனே பெரிய பாரைக் கருவாட்டை எடுத்து மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட இடக்கையால் கருவட்டை அமத்திப் பிடித்தபடி நீண்ட பட்டாக்கத்தியால் துண்டுகளாக்கத் துவங்கினான். கத்தியின் கூரும் வெட்டின வேகமும் சாம்பசிவத்துக்கு நடுக்கத்தை ஏற்படுத்தின.

'கவனம் தம்பி, கையை இன்னொருக்காத் துண்டாடிப்போடாதை' என்றார் கரிசனையுடன். சாம்பசிவத்தின் கொமன்ற் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவனுடைய முகத்தில் தெரிந்தது.

'ஐயா, பத்து வருஷங்கள் இயக்கத்திலை இருந்தனான். துவக்குப்பிடிச்ச கை, இலக்குத் தப்பாது' என்றவன் தொடர்ந்து கருவாட்டை வெட்டுவதில் முனைப்பானான்.

இளைஞனின் இயக்கப் பின்னணியும் அவனது பேச்சும் தோற்றமும் சாம்பசிவத்தின் மனதைக் கலைத்து பழைய நினைவுகளைக் கிளறிவிட, கடந்தகாலத்தை அசைபோட்டார். குறைந்த கட்டணத்தில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்தில் பறந்து, களவாக எல்லை கடந்து, பொய்யான வாக்குமூலம் கொடுத்து, அகதி அந்தஸ்துப் பெற்றதும் அதைத் தொடர்ந்து புலம்பெயர் வாழ்வில் பெரும் பிரமுகரானதும் அலை அலையாக மனதில் ஓடின. இளைஞனுடன் சற்று நேரம் கதைப்பதற்கு பலமுறை முயன்றும், முதலாளி இருவருக்கும் இடையில் குத்துக்கல்லாட்டம் நின்றதும் அவனை அடிமைபோல நடத்தியதும் சாம்பசிவத்தாரின் மனதைக் கீறி உப்புத் தடவியது.

மத்தியானம் மலேயன் கபே சாப்பாட்டுக் கடையில் வாழை இலைச் சாப்பாடு முடித்து, புழுக்கொடியல் வாங்க சந்தைக் கட்டிடத்துக்குள் நுழைந்தார் சாம்பசிவம்.

வாழைப்பழக் கடை முன்னே, சந்தைப் படிக்கட்டில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த கருவாட்டுக் கடை இளைஞன், ஐயா எப்ப பயணம்? என்றான் ஆங்கிலத்தில். இதையே தனக்கான வாய்ப்பாக எடுத்தவர் அவனருகே படியில் அமர்ந்து, அதுவரை மூளையைக் குடைந்த அந்தக் கேள்வியைக் கேட்டார்.

'இவ்வளவு இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசுகிறாயே, எங்கு படித்தாய்'?

கருவாட்டுக் கடையில் கேட்க நினைத்த இந்தக் கேள்வி, நீண்ட நேரம் மனதுக்குள் ஊறி அரியண்டப் படுத்திக்கொண்டிருந்தது.

புகையை ஆழமாக உள்ளே இழுத்து அனுபவித்து மூக்குத் துவாரங்களினூடாக வளையம் வளையமாக  வெளியே ஊதியவன், சிறிதுநேரம் கழித்து, 'கருவாட்டுக்கடையில் வேலை செய்பவன் ஆங்கிலம் பேசக்கூடாதா ஐயா?' என சாம்பசிவத்தைப் பார்த்தான்.

சாம்பசிவம் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இளைஞனே தொடர்ந்தான்.

'வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இங்குள்ளவர்களை நோண்டி நொங்கெடுப்பது இப்படித்தான். இருந்தாலும் உங்களைப் பார்க்க, என் அப்பாவின் நினைவு வருகிறது' எனத் துவங்கிய இளைஞனின் பழைய நோக்கியோ செல்போன் சிணுங்கவே எடுத்துக் காதில் வைத்தவன் கடுமையான தொனியில் யாருக்கோ கட்டளையிடும் பாவனையில் பேசினான். தொடர்ந்து வந்த இரு அழைப்புக்களும் இந்தவகையே. இனத்துவ அடையாளம் பற்றியதாக இருந்தது. 

பொறுமையோடு காத்திருந்த சாம்பசிவம், தொலை பேசி உரையாடல்  முடிந்ததும் 'உன் ஆங்கில அறிவு பற்றிக் கேட்டேன்' என சம்பாசனையைத் தொடர அடியெடுத்துக் கொடுத்தார்.

மீண்டும் ஒரு சிகரெட்டை களிசான் பக்கற்றுக்குள்ளிருந்து எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு புகைவழியே தன் கதையை, சுருக்கமாகச் சொன்னான்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது படிப்பைத் தியாகம் செய்து, ஈழவிடுதலை இயக்கம் ஒன்றில் இணைந்தவனாம். கிளிநொச்சி சமரின்போது முன்னரங்கில் நின்று போர் புரிந்ததாகவும் அங்குதான் இடது கை, மணிக்கட்டுன் துண்டிக்கப்பட்டதாகவும் சொன்னான்.

உன்னைப்போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வளமாக வாழ்கிறார்களே, நீ முயற்சிக்கவில்லையா? என வார்த்தைகளைப் பொறிக்கியெடுத்துக் கோர்த்தார் சாம்பசிவம். அவன் எதுவும் பேசாது வீதியை வெறித்துப் பார்த்தபடியிருந்தான்.

கருவாட்டில் மட்டுமல்ல சகல விஷயங்களிலும் சாம்பசிவம் ஒரு விடாக்கண்டர். நெருங்கி உட்கார்ந்து 'உனது ஆங்கில அறிவின் சூக்குமம் பற்றிக் கேட்டேன் நீ சொல்லவில்லையேடா தம்பி' என உரையாடலின் போக்கை மாற்றி, உரிமை கொண்டாடினார்.

அப்பாவைப்போன்ற தோற்றமுடைய ஒருவர் அருகில் அமர்ந்து மனம்விட்டுப் பேசுவதை அவனால் தட்டிக் கழிக்கமுடியவில்லை. சிறிது நேர மௌனத்தின் பின் தெட்டம்தெட்டமாகக் கதை சொன்னான். 

'அப்பா தீவுப்பகுதி பாடசாலையொன்றின் அதிபராக இருந்தவர். அம்மா அதே பாடசாலையில் ஆங்கில ஆசிரியை. ஒரேபிள்ளை நான். அம்மாவிடம்தான் ஆங்கிலம் படித்தேன். எனது இயக்க நடவடிக்கை காரணமாக மாற்று இயக்கம் ஒன்றினால் அவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, முகாமில் வைத்துக் கொல்லப்பட்டார்கள்' என்றவன் வெறுப்புடன் திரும்பி அருகிலிருந்த கழிவு வாய்க்காலுக்குள் காறித் துப்பினான்.

வயதில் மிக மூத்தவரானாலும் சாம்பசிவம் அவன் முன்னே பௌவியமாக அமர்ந்திருந்தார். சுடலை ஞானமும் அதனால் ஏற்பட்ட   குற்ற உணர்வும் விஸ்வரூபமெடுத்து அவரின் தலையில் மாறிமாறிக் குட்டியது. அவரது பையுக்குள்ளே சற்று நேரத்துக்கு முன்னர் வங்கியில் மாற்றிய இலங்கைப் பணம் கட்டுக்களாக இருந்தன. சடுதியாக  அதிலொன்றையெடுத்து அவன் மடியில் வைத்தார்.

முதல் முறையாக அவரது முகத்தை நேருக்குநேர் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் இளைஞன். பின்னர் எழுந்து நின்று பணக்கட்டை, துண்டிக்கப்படாத வலது கையில் பிடித்து மேலும்கீழும் ஆட்டியபடி 'ஐயா, எம் இனத்தின் விடுதலைக்காக படிப்பைத் தியாகம் செய்து, இந்தக் கையால் துவக்குத் தூக்கியவன் நான். அதற்கு நீங்கள் தரும் கூலி அல்லது சன்மானம் என, இதை எடுத்துக்கொள்ளவா? நான் மட்டுமல்ல என்னைப்போன்ற போரில் ஊனமுற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இங்கு வாழத் தேவையான பணத்தை எம்மால் கௌரவமாகச் சம்பாதிக்க முடியும். வெளிநாட்டிலிருந்து வந்து, இப்படிக் காசை விட்டெறிந்து எங்களைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.

இது, நீ நினைப்பதுபோலல்ல, என அனுங்கினார் சாம்பசிவம்.

ஐயா, வெளிநாட்டில் ஈழ விடுதலையை மூலதனமாக்கி வாழும் பலருக்கு இங்குள்ள விஷயங்கள் புரியாது. அதனால்தான் எதையும் பணத்தால் சரிசெய்துவிடலாம் என்று நீங்கள் நினைப்பது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்துவிட்டால் அதுதான் சொர்க்கம் ஐயா. இன்றைய எனது வாழ்க்கையும் இதுதான், என்றவன் பணத்தை சாம்பசிவத்தின் கையில் திணித்தான்.

சாம்பசிவம் மௌனமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவனைத் தொடர்ந்து பேசவிடாமல் இருமல் தடுத்தது. பையில் வைத்திருந்த அதிமதுரத் துண்டை வாயில் போட்டு மென்றபடி மேலே தொடர்ந்தான்.

விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எதை அடைந்தோம் எதை இழந்தோம் என்பது முக்கியமில்லை ஐயா. எதை நாம் கடந்து வந்தோம் என்பதுதான் முக்கியம். எது எப்படி இருந்தாலும் எமது போராட்ட வாழ்க்கையின் வெற்றிதோல்வி, போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்னர், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் தங்கியுள்ளது.

கனத்த வரிகளை ஒன்றன்பின் ஒன்றாக சாம்பசிவத்தின் முகத்தில் வீசியவன், அடுத்தமுறை வரும்போது அறிவித்துவிட்டு வாருங்கள் திரியாய்ப் பாரை எடுத்துவைக்கிறேன்' என்று விடைபெற்றான்.

சாம்பசிவம் திகிலடித்துப்போய் சற்றுநேரம் படியில் உட்கார்ந்திருந்தார்.

முதலாளிக்கு அடங்கி, கடையிலே கருவாடு வெட்டிக் கொண்டிருந்த இளைஞனா இவன்?

'தோல்வியை வெற்றியாகவும் துயரத்தைச் சந்தோஷமாகவும் எடுப்பதுதான் வாழ்வின் அர்த்தம்' என்னும் தத்துவ ஞானத்தை, சந்தைப் படிக்கட்டிலே பெற்ற சாம்பசிவம், கடையில் அவன் கட்டித் தந்த கருவாட்டுப் பொதியை இறுகப் பற்றினார்.

ஆசி கந்தராஜா (அம்ருதா, ஜூலை 2023)





 

No comments:

Post a Comment

.