Saturday 13 May 2023

 

நீலமலை இளவரசி

ஆசி கந்தராஜா

(காலச்சுவடு, மே மாதம் 2023)

நீலமலையின் ஒடுங்கிய பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மகிழ்மொழி. வன இலாகா தங்கள் தேவைக்காக அமைத்த மண் பாதையிது. கங்காரு, வாலாபீ, வொம்பற், குவாலா ஆகியன பாதையில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன. நீலமலைக்கு மகிழ்மொழி முன்னரும் தனியேயும் தாயுடனும் தன்னுடன் படிக்கும் தோழிகளுடனும் வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அதற்காதேவை இருந்தது. இன்றும் அப்படித்தான்!

திடீரென நீலமலையின் குளிரையும் தாண்டி உடம்பில் உஸ்ணம் பரவி வேர்த்ததால், கொண்டுவந்த பைக்குள் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். அடிவயிறு கவ்விப் பிடித்தது. சிறுநீர் கழிக்கவேண்டும் போல இருந்தாலும் வரவில்லை. தொடர்ச்சியாக குருதி கசிவதால் உள்ளாடை நனைந்து நசநசத்தது. பாதத்திலிருந்து பிட்டம்வரை தசை நார்கள் வலுவிழந்து வலித்தன. அவளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. பாறி விழுந்த யூக்கலிப்டஸ் மரக் கட்டைமேலே அமர்ந்து ஓய்வெடுத்தாள். ஊசியிலை மரங்களுடன் ஓங்கி வளரும் யூக்கலிப்டஸ் விருட்சங்கள் ஆவியாக வெளிவிடும் தைலங்களை ஆழமாக உள்ளே இழுத்துச் சுவாசித்தாள். உடல்வலியைப் போக்க யூக்கலிப்டஸ் தேநீர் அருந்துவதாகப் பள்ளித்தோழி சொன்னது நினைவில்வர யூக்கலிப்டஸ் மரக் குருத்துக்களைப் பிடுங்கிக் கடித்தாள். மறுகணம் பையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த டப்பாவின் மூடியை திருகிச் சரிபார்த்தாள். நடந்து முடிந்த சம்பவங்களின் நினைவுகள் மனதில் சுழன்றடிக்க, நினைவைச் சுருக்கி டப்பாவை அணைத்து மௌனித்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த மாக்பை பறவையொன்று தலைக்கு மிக நெருக்கமாகப் பறந்து அவளைத் திடுக்கிட வைத்தது. இயல்பை  மறந்து மாக்பை அவளின் தலையைக் கொத்தாதது அதிசயம்தான்.

ஊசியிலை மரக் காட்டையடுத்து மலையின் செங்குத்தான பள்ளத்தாக்கில் அகன்ற இலை மரங்கள் காடுவசாரியாக வளர்ந்திருந்தன. அடர்த்தியாக வளர்ந்த இக்காடு, வன இலாகாவின் ஆளுகைக்கும் பராமரிப்புக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் நடமாட முடியாதது. பள்ளத்தாக்கை ஊடறுத்து நெளிந்து வளைந்து ஓடும் வற்றாத நதியையும் அங்கு தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரும் கங்காருக்களையும் மலையின் விளிம்பில் நின்று ரசிப்பதை மகிழ்மொழி எப்போதும் விரும்பினாள். அது அவளின் மன அழுத்தங்களைக் குறைத்தது. பள்ளத்தாக்கில் பலத்த காற்று வீசியதால் நீர் வீழ்ச்சியிலிருந்து வெளியேறிய மூடுபனியும் யூக்கலிப்டஸ் தைல ஆவியும் சேர்ந்து மலையை கடும் நீல நிறமாக்கியிருந்தன. மகிழ்மொழியின் வருகையை நுகர்ந்த குவாலா தன் தூக்கத்தைக் கலைத்து அவளருகில் வந்தமர்ந்தது. வழமைபோல யூக்கலிப்டஸ் குருத்துக்களைப் பிடுங்கி குவாலாவின் முன் வைத்தாள். இலைகளை உருவியதால் உண்டான தைலமணத்தை மோப்பம் பிடித்து வந்த சில வாலாபீக்கள் மகிழ்மொழியின் காலைச் சுற்றிச்சுற்றி வந்தன. இவைகள் கங்காருக்களின் நெருங்கிய உறவினர்கள். அச்சொட்டாக அவற்றின் உடலமைப்பைக் கொண்டவை. உருவத்தில் பல மடங்குக்கு சிறியன, அழகானவை, சாதுவானவை. இவற்றை அள்ளி அணைத்து விளையாடுவதை மகிழ்மொழி பெரிதும் விரும்பினாள். இவற்றின் ஸ்பரிசம் வெள்ளாட்டுக் குட்டிகளை அளைந்து விளையாடிய பொழுதுகளை நினைவுபடுத்தும். ஊரிலே, அம்மம்மா வளவில் விதம்விதமான கோழியினங்கள், மாடுகள், ஆடுகள், முயல்கள், நாய், பூனை என எத்தனையெத்தனை ஜீவராசிகள். இவைகள் அனைத்தும் அவளது குழந்தைப் பருவ நினைவுகளைப் பெருக்கெடுக்க வைத்தன. இதன் நீட்சியாக பத்து வருடங்களுக்கு முன்னர் பெற்றோருடன் படகிலேறி ஆஸ்திரேலியா வந்ததும், எல்லைக் காவலர்கள் கைதுசெய்து முகாமில் வைத்து விசாரித்ததும், நிபந்தனை விசா பெற்றபின்னர் கறிக்கோழிப் பண்ணை ஒன்றில் அம்மா நாமகள் வேலை பெற்றதும், ஒன்றன்பின் ஒன்றாக மனதில் விரிந்துகொண்டு போனது. இத்தகைய நினைவுகளால் இதயம் ஒருகணம் நின்று துடிக்க, கண்களை மூடி அம்மாவை நினைத்துக்கொண்டாள். அவளின் வாழ்க்கை ஒரு ரத்தச் சரித்திரம் என்பதையும் அவள் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது என்பதையும் மகிழ்மொழி அறிவாள்.

ஒன்றாகப் படித்த பாடசாலையில் விளையாட்டு வீரனாக, தசை நார்கள் முறுக்கேறி ஆணழகன் றேஞ்சுக்கு பெண்கள் மத்தியில் மவுசுடன் திரிந்த அன்ரனை, மதம்மாறி வீட்டாரின் எதிர்ப்புக்களையும் மீறியே நாமகள் திருமணம் செய்து கொண்டவள். அதன் பின்னரே அவன் மனதில் ஒளிந்திருந்த விஷக்கொடுக்கு வெளியே தெரிந்தது.

பல்கலைக்கழகம் போக கல்வித் தகுதி பெறாத அன்ரன், விளையாட்டில் தான் பெற்ற வெற்றிகளையும் பதக்கங்களையும் வைத்து, பொலீஸ் உத்தியோகம் பெறமுயன்றும் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் அவனது நினைப்பு அவனைக் கீழிறங்க விடவில்லை. நிரந்தர வருமானம் ஏதுமில்லாமல் கைக் குழந்தையுடன் நாமகள் அல்லாடிப்பேனாள். சும்மா இருந்த என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்து, தாலிகட்ட வைத்தவள் அவள். அவளே இதையும் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மிதப்பில் அன்ரன் சோக்காளியாகத் திரிந்தான். இறுதி முயற்சியாக, சனத்துடன் சனமாக ருந்ததை விற்று, காணாததுக்கு ஒற்றை ஆளாக நின்று ஊரில் கடன்வாங்கி, வள்ளத்திலேறி ஆஸ்திரேலியா வந்தபோது, மகிழ்மொழிக்கு ஐந்து வயது. அப்போது தேர்தல் காலமாகையால் அதிகாரிகளின் கெடுபிடிகளும் நெருக்குவாரங்களும் அதிகம் இருக்கவில்லை. தற்காலிக விசாவும் வேலையும் விரைவில் கிடைத்தது அதிர்ஷ்டம்தான்.

மகிழ்மொழி, தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற மலையை இருள் கௌவும்வரை காத்திருக்கவேண்டும். அதை நினைத்ததும் அச்சப்பந்து வயிற்றில் உருண்டு, உடல் நடுங்கியது. சட்டையினூடாக கசிந்து வெளியேறிய குருதி மரக்குற்றியிலும் படிந்தது. தொடர்ச்சியாக  அவளால் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. பிட்டத்தில் ஏற்பட்ட வலி பிடரிவரை படர்ந்து அவளைப் பாடாயப்படுத்தியது. ஊசி இலைகளைத் தடியுடன் முறித்து ஒன்றாகச் சேர்த்துக் கட்டித் தலையணையாக்கி, பாறி விழுந்த மரத்தின்மேலே ஒரு பக்கமாகச் சரிந்து படுத்தாள். வானம் இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்த மழைத் துளிகள் உடலைக் குளிர்வித்தன.

வன இலாகா வாகனமொன்றின் உறுமல் சத்தம் தொலைவில் கேட்டதும் மகிழ்மொழி எழுந்து உட்கார்ந்தாள். வாலாபீக்கள் பின்னங்கால்களை ஊன்றி உதைத்துப் பாய்ந்து பற்றைக்குள் பதுங்கிக் கொள்ள, குவாலா மெல்ல மரத்தில் ஏறி மறைந்தது. வாகனத்தைச் செலுத்தி வந்த முதிய வனஇலாகா அதிகாரி அவளருகே வந்ததும் வாகனத்தை நிறுத்தினார். இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த பதின்பருவ வயதுப் பெண்ணொன்று, காட்டிலே தனியே நிற்பது அவருக்கு விநோதமாகப்பட்டதால், காரணம் கேட்டார். அங்கு வந்த காரணத்தை எப்படி அவளால் சொல்ல முடியும்? பாடசாலை தோழிகளுடன் முன்னர் நீலமலைக்கு வந்தது நினைவில் வர, இம்முறையும் சுற்றுச் சூழல் பாடத்துக்கான அறிக்கை எழுத, தரவுகள் சேகரிக்க வந்ததாகப் பொய் சொன்னாள். வனஇலாகா அதிகாரிக்கு அவளின் பதிலில் திருப்தியில்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டுமென தனது ஐபேட்டில் அவளின் விபரங்களைப் பதிந்து, படமும் எடுத்தார். ஆஸ்திரேலிய சட்டப்படி அவளை அங்கிருந்து விரட்ட முடியாது. இதனால், யாருடனோ தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் சொன்னவர், இருட்டுவதற்கு முன்னர் வீட்டுக்குப் போய்விடு எனச் சொல்லி அகன்றார்.

நாமகளும் பல்கலைக் கழகத்தில் கணினி விஞ்ஞானம் படித்ததவள். வனஇலாகா அதிகாரி வைத்திருந்ததைப் போலவே அவளும் ஒரு ஐபேட் வைத்திருந்தாள். அதே சைஸ், அதே நிறம். ஆனால் அம்மாவின் ஐபேட் நவீனமானது, பிந்திய வரவு. வீட்டிலிருந்து இரவில் வேலை செய்ய கோழிப்பண்ணை நிர்வாகம் கொடுத்தது.

அகதிவிசா கிடைத்ததும் சமூகசேவை இலாகா அதிகாரிகளே நீலமலையின் அடிவாரத்திலிருந்த பிரமாண்டமான கோழிப் பண்ணையில், நாமகளுக்கு வேலை எடுத்துக் கொடுத்தார்கள். நாடுமுழுவதும் அங்கிருந்து கறிக்கோழி இறைச்சிகள் பல்வேறு வடிவங்களிலும் வகைகளிலும் பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. பண்ணையிலே பல்லாயிரக்கணக்கான கோழிகள் கூண்டுகளில் வளர்ந்தன. அவை முட்டைக்கான கோழிகளல்ல. இறைச்சிக்கானவை. ஆறு வாரங்களில் இரண்டு கிலோவுக்கு மேல் ஊளைச்சதை வைக்கும் கோழி இனங்கள் மட்டும் அங்கு வளர்க்கப்பட்டு வெட்டப்பட்டன. ஊரிலே, ஆறு வாரங்களில் இருநூறு கிராம் விறாத்துக் குஞ்சு சைஸில் வளரும் கோழிகளையே நாமகள் அறிவாள். ஒன்பது வயதில் மகிழ்மொழி பூப்படைந்ததற்கான காரணம் பண்ணையிலிருந்து தான் தினமும் கொண்டுவரும் கறிக்கோழி இறைச்சியைச் சாப்பிட்டதாலோ? என்ற கேள்வி மனதைக் கிளறிவிட, மகளின் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் பூரிப்பும், நாமகளின் மனதில் அச்சத்தை விதைத்தன. 

கோழிப் பண்ணை அலுவலகத்தில் தினமும் வரவு செலவுக் கணக்குகளைக் கணினியில் தரவேற்றி, ஸ்ப்ரெட்ஷீட் தயாரித்து மாலையில் முதலாளி முன்னே வைக்கவேண்டியது நாமகளின் பொறுப்பு. இந்த விஷயத்தில் நிர்வாகம் அவளது தற்காலிக அகதி விசாவை மனதில் வைத்து, தவிச்ச முயலடித்தது. கணினிப் பிரிவில் ஒற்றையாளாக நின்று உழைத்துக் களைத்து ஓய்ந்துபோய் வீட்டுக்கு வர எப்படியும் இரவு எட்டு மணியாகிவிடும். வீட்டில் எல்லாமே போட்டது போட்டபடி இருக்க அதன்பின்னரே சமையலும் சாப்படும் நடக்கும்.

ஆஸ்திரேலியாவில் அன்ரனுக்கு இருந்த ஒரேயொரு தகுதி அவனது உடம்பு மட்டுமே. அவன் சார்ந்த கிறீஸ்தவ மிஷன் ஒழுங்கு செய்த சாதாரண வேலையைச் செய்ய அன்ரனின் ஈகோ இடம்தரவில்லை. மனைவியின் வருமானத்தில் சும்மா இருந்து மது அருந்த ஆரம்பித்தான். நாள் முழுவதும் சாப்பிடாது போதையில் இருக்கும் அவனுக்கு, தினமும் இரவில் ருசியான சாப்பாடும் படுக்கையில் அவளும் வேண்டும். அசதியில் அவள் மறுக்கும் தருணங்களில் கோழிப் பண்ணை முதலாளியுடன் தொடர்பு எனச் சொல்லி, தன் மரத்த கைகளால் பின்னியெடுப்பான். நினைக்கவே திகிலடிக்கும் இப் பொழுதுகளில், இயலாமையும் கோபமும் முண்டியடிக்க, எதுவும் செய்ய முடியாதவளாக மகிழ்மொழி கன்களை இறுகமூடி, காதைப் பொத்தி சோபாவில் சுருண்டு படுத்திருப்பாள். சித்திரவதையின் உச்சத்தில் ஒருநாள் தாயின் அலறல் சத்தம் கேட்டு, கோழிவெட்டும் கத்தியால் தகப்பனைத் தாக்கமுயன்ற சம்பவம் நினைவிலே ஊர்ந்து, நரம்புகளை முறுக்கேற்றியது. வெறுப்புடன் எச்சிலை மிண்டி விழுங்கியபோது, தொண்டையில் விரிந்த தசையசைவுகள் வயிறுவரை தொடர்ந்து வலித்தது. 

நீலமலைச் சுவாத்தியத்துக்கு, ஊசியிலை மரங்களின் அடிப்பகுதியில் போதை தரும் காளான்கள் வளரும். வனஇலாகாவினர் அதை அழித்துவிடுவார்கள். மலையின் அடிவாரத்திலுள்ள அகதிமுகாம்களில் வாழும் ஒருசில கிழக்காசிய இளைஞர்கள் இக் காளான்களைச் சேகரித்து உலர்த்திப் பொடியாக்கி, இரகசியமாக விற்பார்கள். சற்று முன்னர் காட்டில் நின்ற வனஇலாகா அதிகாரியின் கண்களில்  மண்ணைத்தூவி மறைந்திருந்தவர்கள், சேகரித்த காளான்களுடன் தங்கள் மொழியில் உரத்துப் பேசியபடி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஸ்டெலாவின் மகன். மகிழ்மொழி பற்றைக்குள் பதுங்கிக்கொண்டாள்.

அன்ரன் சார்ந்த கத்தோலிக்க கோவிலுக்கு வரும் ஸ்டெலா கிழக்காசிய நாட்டிலிருந்து அகதியாக, பதின்பருவ வயது மகனுடன் வள்ளத்தில் வந்தவள். கோவிலுக்கு வரும் இவளின் நாட்டவர் எவரும் இவளைப்பற்றி நல்லவிதமாகப் பேசியதில்லை. இவள் ஒருவிதமானவள் என்பதை வெவ்வேறு வார்த்த்தைகளில் சொன்னார்கள். திடீரென ஒரு பகல்பொழுதில் அன்ரன் அவளை வீட்டுக்குக் கூட்டிவந்தான். படிப்படியாக இரவு முழுவதும் வீட்டில் தங்கவைத்து நாறடித்தான். நாமகளாலோ அன்றி ஆஸ்திரேலிய சட்டங்களினாலோ அவர்களின் கூத்தடிப்பைத் தடுக்க முடியவில்லை. இதன் பின்னணியில் எத்தனை இரவுகள் எதுவும் செய்ய இயலாதவளாக, சோகங்களை மனதில் பூட்டிவைத்து, அழுது குமைந்திருப்பாள்.

நாமகளைப் பொறுத்தவரை காலம் மிகக் கொடுமையானது. தொடர்ச்சியாக அது அற்பமான, அபத்தமான, குரூரமான சம்பவங்களை நடத்திக் கொண்டே இருந்தது.

அது நத்தார்க் காலம்! நாடுமுழுவதும் பெருமளவில் இறைச்சி வினியோகம் நடக்கவேண்டும். இரவு பகலாக பண்ணையில் வேலை நடந்தது. வேலை முடிந்து ஒரிரவு, மலையின் கொண்டை ஊசி வளைவில் நடந்து வந்தபோது, வளைவில் திரும்பிய டிரக் தொடர் வண்டியின் இரு பெட்டிகளுக்கு இடையில் நாமகள் சிக்குண்டாள். ஆளும்பேருமாக அவளை அள்ளியெடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனபோதும், அவளின் அஸ்தியே ஒரு டப்பாவுக்குள் வீடு வந்து சேர்ந்தது.

நீலமலைக்கு கொண்டுவந்த டப்பாவை பையிலிருந்து எடுத்து நெஞ்சோடு அணைத்து, மகிழ்மொழி தேம்பியழ ஆரம்பித்தாள். அருகிலிருந்த குவாலா மெல்ல நகர்ந்து அவளோடு ஒட்டியது. நீண்ட தன்னுடைய பின்கால்களை மடித்து, மகிழ்மொழியின் காலடியில் குந்தியிருந்த வாலாபீ, குறுகிய முன்னங்கால்களை அவளின் மடியில் வைத்து, நிமிர்ந்து பார்த்தது. அதன் அடைப்பப் பையுள் இருந்த குட்டியின் ஈரலிப்பும் ஸ்பரிசமும் மகிழ்மொழியின் உடலைச் சிலிர்க்க வைத்தது. தாயும் குட்டியும் அம்மாவின் நினைவுகளை மீண்டும் கிளறியதால் அவளின் மறைவுக்குப் பின்னரான சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனதை அரித்தன.

நாமகளின் விபத்துக்குப் பின்னர் ஒருவாரம் கல்லுளி மங்கனாட்டம் பம்மிக்கொண்டு திரிந்தான் அன்ரன். அடுத்தவாரமே ஸ்டெலாவுடன் சேர்ந்து சமூக இலாகாவுக்குச் சென்று அகதிப் பணத்துக்கு மனுச் செய்தான். மகிழ்மொழி மைனர் என்பதால் அவளுக்குச் சேரவேண்டிய பணமும் அன்ரனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பெரும்சோகம். நாளடைவில் விபத்துக்கான இழப்பீடாக இன்ஸ்சூரன்ஸ் பணமும் வந்துசேர ஸ்டெலாவும் மகனும் நிரந்தரமாக அன்ரனுடன் தங்கினார்கள். வீட்டில் ஸ்டெலா வைத்ததே சட்டமாயிற்று. சின்ன விஷயங்களையும் பெரிதுபடுத்தி அதைப் பல குரல்களில், பல தொனிகளில் மாற்றிமாற்றி, குரூரமாகப் பேச அவளால்த்தான் முடிந்தது.

உழைக்காமல் வந்த பணம் படிப்படியாகத் தன் வேலையை ஆரம்பித்தது. விலையுயர்ந்த மதுக்களும் விதம்விதமான போதைப் பொருள்களும் வீட்டுக்குக்கு வநது சேர்ந்தன. தினமும் இருவரும் போதையில் மிதந்தார்கள். இடையிடையே ஸ்டெலாவின் மகனும் போதையேற்றிக்கொண்டு மகிழ்மொழிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுக்க ஆரம்பித்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை! பள்ளித்தோழியின் பாட்டியின் அஸ்தியை தேவாலய சுடுகாட்டில் கல்லறைக்குள் வைக்கும் சடங்கிற்கும் தேநீர் விருந்துக்கும் தோழி அழைத்திருந்தாள். நிகழ்வுக்குச் சென்ற மகிழ்மொழிக்கு அம்மாவின் அஸ்திபற்றிய நினைவே மூளையைக் குடைந்தது. அம்மாவின் பணம் பெரும் தொகையாக வந்தபோதும் அவளின் அஸ்தி கௌரவமாக அடக்கம் செய்யப்பட மாட்டாது என்பதும் நாளடைவில் அது குப்பை லொறியில் குப்பையோடு குப்பையாகச் செல்லுமென்பதும் மகிழ்மொழிக்குத் தெரியும். வீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக டப்பாவை எடுத்துத் தன்னுடைய அலுமாரிக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள்.

வீட்டில் நடக்கும் கூத்தடிப்புக்களையும் பாலியல் சீண்டல்களையும் முறையிடுவதற்குப் பொருத்தமான எவரும் அருகில் இல்லாததால் மகிழ்மொழி தனது வகுப்பு ஆசிரியையிடம் அனைத்தையும் சொல்லி அழுதாள். படிப்படியாக விஷயம் பள்ளிக் கவுன்சிலர், அதிபர் வழியாக பொலீஸுக்குப் போனது. தாங்கள் சேர்ந்து வாழ்வதாகவும் மகிழ்மொழி சொல்வது போல எதுவும் நடப்பதில்லையென்றும் அன்ரனும் ஸ்டெலாவும் சட்டரீதியான வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் ஸ்டெலாவின் மகன் சொன்னதை அதிகாரிகள் நம்பவில்லை. அவன் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த இலாகாவில் வைத்து மூன்று நாள்கள் விசாரித்த பின்னர் சில நிபந்தனைகளை விதித்து, எச்சரித்து அனுப்பினார்கள்.

வெளியே வந்தவன் வேறெங்கும் போகவில்லை. போதை ஏற்றும் காளான் சுருட்டுப் புகைத்தபின் நேரே மகிழ்மொழி வீட்டுக்கு வந்தான். சற்று நேரத்துக்கு முன்னர்தான் அன்ரன் ஹெராயின் ஊசி ஏற்றியிருக்கவேண்டும். மயங்கிக் கிடந்தான். மகனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஸ்டெலா அன்று மதுவுடன் நிறுத்தியிருந்தாள். மகிழ்மொழி பாடசாலை முடிந்து வந்து தனது அறையில் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தாள். நேரே மகிழ்மொழியின் அறைக்குச் சென்றவன் தனது பெலமெல்லாவற்றையும் ஒன்று திரட்டி அவளைக் கட்டிலில் வீழ்த்தினான். சமையலறையில் நின்ற ஸ்டெலா சத்தம் வெளியே கசியாதவாறு கதவைச் சாத்தினாள். நீண்டநேரம் கதறக்கதற வன்புணர்ந்தவன் வெளியே வந்து மீண்டும் போதையேற்றிக்கொண்டு இயற்கைக்கு மாறாகவும் திரும்பத் திரும்பப் புணர்ந்தான். முன்னும் பின்னும் கசிந்த குருதி, பிட்டத்திலும் தொடையிலும் வழிந்து மெத்தையை நனைத்தது. மகிழ்மொழி எந்தவித அசைவுமின்றி மயங்கிக் கிடந்தாள். மகனை அங்கிருந்து வெளியேற்றிய ஸ்டெலா, மகிழ்மொழி மூச்சுவிடுவதை உறுதி செய்தபின் அன்ரனின் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்.

மயக்கம் தெளிந்து மகிழ்மொழி எழும்பியபோது வீடு நிசப்த்தமாக இருந்தது. ஸ்டெலாவும் போதை ஊசி ஏற்றியிருக்கவேண்டும்.

மகிழ்மொழிக்கு உடலெங்கும் அணுவணுவாக நொந்தது. அந்த வலி அவள் முன்னர் அனுபவிக்காதது. வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து என்பதையும் தனக்குத் தகுந்த பாதுகாப்புத் தேவையென்பதையும் உணர்ந்தாள். தேவையான உடைகளையும் அம்மாவின் அஸ்தி இருந்த டப்பாவையும் ஒரு பையில் பொதிசெய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.

அப்பொழுது கோடை காலம்! மாலை எட்டுமணிக்குப் பின்னரே மலையை இருள் சூழ்ந்தது. எழுந்து மலையின் செங்குத்தான விளிம்பை நோக்கி நடந்தாள். அவள் பின்னால் குவாலா அரக்கி அரக்கி அசைந்தது. வாலாபீ சிறிய அடிகளை எடுத்துவைத்துக் குதித்தது. பள்ளத்தாக்கில் ஓடிய நதி எந்தவித சலனமுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அஸ்தியை அங்கு கொட்டுவது சட்ட விரோதமானது என்பது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் மகிழ்மொழிக்கு வேறு வழி இருக்கவில்லை. இறுக்கமாக மூடப்பட்டிருந்த டப்பாவை அருகிலிந்த பாறையில் தட்டினாள். மூடி திறந்ததும் புகைபோல அஸ்தியின் நுண்ணிய துகள்கள் வெளியேறி நாசியை நிரப்பி நெஞ்சுவரை சென்றன. கண்களை மூடி, ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து மீண்டும் நுகர்ந்தாள். அம்மா தன்னுடன் கலந்துவிட்ட உணர்வு தோன்றியது. சாம்பலாகவும் சிறு எலும்புத் துண்டுகளாகவும் டப்பாவுக்குள் இருந்த அம்மாவின் அஸ்தியை பள்ளத்தாக்கில் கொட்டினாள். அஸ்தி கீழே இறங்க இறங்க பனிமூட்டத்தின் நடுவே யூக்கலிப்டஸ் தைலஆவியை ஊடறுத்து, அம்மாவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. மகிழ்மொழி மேலே அடியெடுத்து வைத்தாள். குவாலா மட்டும் அவளைப் பின்தொடர்ந்தது.

பள்ளத்தாக்கின் நடுவேயுள்ள யூக்கலிப்டஸ் மரக்கிளையைப் பற்றிப் பிடித்துத் தொங்கிய குவாலாவுக்கு, அதுவே புதிய வாழ்விடமாயிற்று. நீலமலை இளவரசி வருவாள் என எதிர்பார்த்து மலையின் விளிம்பில் நின்ற வாலாபீ, அடைப்பப் பைக்குள் குட்டியைச் சுமந்தபடி காத்துக்கொண்டிருந்தது.      

ஆசி கந்தராஜா (காலச்சுவடு, மே மாதம் 2023)

 

 

 

No comments:

Post a Comment

.