Saturday, 23 January 2021

 காதல் ஒருவனைக் கைப்பிடித்து…!

ஆசி கந்தராஜா

ந்த இளைஞன் அவர் முன் அமர்ந்ததும் வீரசிங்கம் மலைத்துப் போனார். தன் முன்னால் இருந்த மடிக் கணனியில் அவனது விபரங்களைத் தட்டிப் பார்த்தார். தந்தை பெயர் அமீர் முகம்மது, தாய் றொஸ்நாக். தந்தையின் பிறப்பிடம் ஈரான், ஆனால் இளைஞன் சிட்னியில் பிறந்ததாக தரவுகள் சொல்லிற்று. பதினெட்டு வருடங்களுக்கு மேலாக பேராசிரியர் வீரசிங்கத்தின் மனதை அலைக்கழித்த கேள்விகளுக்கு, அத்தகவல்கள் விடையாக அமைந்தன.

ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில், பன்னிரண்டாம் வகுப்பில் அதிகூடிய புள்ளிகள் எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மேலதிகமாக, மருத்துவப் படிப்பிற்கென பரீட்சை எழுதி, நேர்முக பரீட்சையிலும் சித்திபெற வேண்டும். மருத்துவம் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு புனிதமான தொழில். மருத்துவம் படிக்க வருபவருக்கு அதில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டா எனப் பரீட்சிக்கும் நெறி முறைகளே இவை. இப்படியான நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கே, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அந்த இளைஞன், பேராசிரியர் வீரசிங்கத்தின் முன் அமர்ந்திருந்தான். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், அமீர் முகம்மது பேராசிரியடம் ஆராய்ச்சிப் படிப்புக்காக சிட்னி வந்தபோது எப்படி இருந்தானோ அப்படியே, ‘அச்சொட்டாக’ அந்த இளைஞனும் இருந்தான்.

 -2-

மீர் முகம்மது ஈரான் அரசாங்கத்தால் மரபணு மாற்றம் பற்றி ஆராய்ச்சி செய்ய, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டவன். அந்தவகையில் அவன் வீரசிங்கத்தின் மேற்பார்வையின் கீழ், டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. முதல் நாள் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகளுடனும் மனைவி றொஸ்நாக்குடனும் அவன் பல்கலைக்கழகம் வந்தது, வீரசிங்கத்திற்கு இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. றொஸ்நாக் மிகவும் அழகாக இருந்தாள். ‘பர்தா’வால் முக்காடிட்டு, உடலை மறைத்து முழுநீள சட்டை அணிந்திருந்தாலும், அவளது பேரழகு வெளியே பளிச்சிட்டது. அதிகாலை ஏழு மணிக்கே அமீர் ஆய்வுகூடம் வந்துவிடுவான். நண்பகல் ஒரு மணிக்கு மனைவி றொஸ்நாக், மதிய உணவு கொண்டுவருவாள். ஆய்வு கூடத்தினருகே ஓங்கி வளர்ந்திருந்த செரி மரத்தின் கீழ் இருவரும் அமர்ந்திருந்து உணவு உண்ணுவார்கள். மாலையில் பாடசாலையால் திரும்பிவந்த குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அதே செரி மரத்தின் கீழ் அமீருக்காக காத்திருப்பாள்.

ஆராய்ச்சியை ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அமீரின் விவேகம், நேர்மை, நாணயம் ஆகியன வீரசிங்கத்தை மிகவும் கவர்ந்தன. அவனையிட்டு அவர் உண்மையிலேயே பெருமைப்பட்டார். அப்படிப்பட்ட அமீரின் வாழ்க்கை தடம்புரண்டு திசைமாறியது வீரசிங்கம் முற்றிலும் எதிர்பார்க்காததொன்று.

றொஸ்நாக், ஈராக்-ஈரான் எல்லையோர கிராமத்தில் பிறந்தவள். அவள் பாரசீக-அராபிய கலப்பின சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவள். இவர்கள் அங்கு தனி இனமாகக் கருதப்படுகிறார்கள். இதனால் இவர்கள் ஈரானிய பாரசீகர்களுடன் சேர முடியாமலும், ஈராக்கிய அராபியர்களுடன் வாழ முடியாமலும் தனித்து விடப்பட்டவர்கள். ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது றொஸ்நாக்கின் குடும்பம் பாதிக்கப் பட்டதால் அவர்கள் தலைநகர் தேரானுக்கு இடம் பெயர்ந்ததாக அமீர் ஒருமுறை சொல்லியிருக்கிறான். பாரசீக அராபிய கலப்பு, பதின் பருவ வயது, றொஸ்நாக் தேரான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த முதல் வருஷமே அழகுராணிப் போட்டி ஒன்றில் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவளின் அழகில் மயங்கி அமீர் காதலித்தான்.

மீரின் பெற்றோர் பாரசீக பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக பெருவாரியான சொத்துக்கள் ஈரானில் உண்டு. தன் மகனுக்காக வளைகுடா நாடுகளின் வழக்கப்படி பெண் கேட்டு, தன் குடும்பத்துக்கு எந்த வகையிலும் ஒவ்வாத ஒரு கலப்பின குடும்பத்திடம் செல்ல அமீரின் தந்தை மறுத்துவிட்டார். இந்த விடயத்தில் அமீர் உறுதியாக நின்றதால், தன் ஒரே மகனின் விருப்பத்தை நிறைவேற்ற அமீர்-றொஸ்நாக் திருமணத்துக்கு அவர் அரைகுறை மனதுடன் ஒத்துக்கொண்டார்.

அமீர் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்த காலத்தில், ஒரு வருட பட்டப் ‘பின்’படிப்பை முடித்தவர்கள் தொழில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பெருவாரியான வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொண்டார்கள். இதுபற்றி அமீர் வீரசிங்கத்திடம் ஒருமுறை கேட்டான். தன் மனைவி ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்க விரும்புவதாகவும் அதற்காக ஒருவருட பட்டப் பின்படிப்பை படிக்கக் கேட்பதாகவும் சொல்லி குறைப்பட்ட அமீர், இதுபற்றித் தன் மனைவியுடன் பேசுமாறும் கேட்டுக்கொண்டான்.

அமீர், இதை நீ மிகவும் கவனமாகக் கையளவேண்டும்! நீயும் உனது குடும்பமும் இங்கு நிரந்தரமாக தங்குவது பற்றிய உன் அபிப்பிரயமென்ன…?’

சேர், எனது குடும்பம் மிகவும் பாரம்பரியம் மிக்கது. பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்தும், வாழ்க்கை வசதிகளும் எமக்கு தேரானில் உண்டு. எனது நாடும் குடும்பமும் எனக்காக காத்திருக்கிறது…? நான் எதற்காக இங்கு வாழவேண்டும்…?’

பின் எதற்காக உன் மனைவி ஆசைப்படுகிறாள்?’

இங்குள்ள பெண்கள் சுதந்திரமே இதற்குக் காரணமாக இருக்கலாம்’ என்று சொன்னவன், அவனாகவே மேற்கொண்டு இதுபற்றிப் பேச விரும்பாதவனாக ஆய்வு கூடத்துக்கு சென்றான். இது பற்றி றொஸ்நாக்குடன் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி வீரசிங்கம் காத்திருந்தார். அதற்குள் அவளாகவே, அமீருக்குத் தெரியாமல் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றுவிட்டாள். இதற்கு மேல் இதில் தலையிடுவது நாகரிகமல்ல என உணர்ந்து அவர் அமைதியானார்.

படிப்பைத் துவங்கிய பின், றொஸ்நாக்கின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கின. இஸ்லாமிய பெண்கள் மீது தம் பார்வையைத் திருப்பியுள்ள பெண்ணியவாதிகள் றொஸ்நாக்குடன் ஒட்டிக் கொண்டார்கள். இதனால் ‘பர்தா’ அணியாமல் வெளியே வரத் துவங்கினாள். பின்னர் தலைமுடியைக் குட்டையாக வெட்டி உலாவரத் துவங்கினாள். படிப்பு முடிந்ததும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்க விசாவையும் பெற்றுக் கொண்டாள்.

காலப் போக்கில் றொஸ்நாக்கைப் பற்றிப் பல்வேறு கதைகள் ‘கிசுகிசு’க்கப்பட்டன. ‘தூய பாரசீக ரத்தத்துடன் வந்திருந்தால் இப்படிச் செய்யாள்’ என சிட்னிக்கு படிக்கவந்த ஈரானிய மாணவர்கள் பேசித்திரிந்தார்கள். றொஸ்நாக் இது பற்றிக் கவலைப் படவில்லை. பாரசீக அராபிய அழகின் கலவையுடன், ஆஸ்திரேலிய உடையும் சேர அவள் பல்கலைக் கழகத்தில் தேவதை போலப் பவனி வந்தாள். தன் குழந்தைகளை பாடசாலைக்கு ஏற்றி இறக்க கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். மொத்தத்தில் ஆராச்சிப் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அமீரில் சார்ந்திராது தனது வேலைகளைத் தானே செய்து கொண்டாள். அமீருடன் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கவந்த ஏனைய குடும்பங்கள் சும்மா இருக்குமா? அமீரை ‘ஆண்மையில்லாதவன், கட்டிய மனைவியை ஒழுங்காக வைத்திருக்கத் தெரியாதவன்’ எனத் தூற்றத் துவங்கினார்கள். அமீர் முற்றிலும் உடைந்து போனான். எதை நம்புவது எதை விடுவது என்று தடுமாறினான்.

றொஸ்நாக்கில் எது, இந்த விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியது? புதிய சூழலில், அவள் இதுவரை அனுபவித்திராத சுதந்திரமா அல்லது பெண் விடுதலை பற்றிப் பேசும் நண்பர்கள் கூட்டமா? அமீர் மீது வீரசிங்கம் கொண்ட அக்கறை காரணத்தினால் தன் இயல்பையும் மீறிய தோரணையில் அவர் மனம் சிந்திக்கலாயிற்று. குடும்ப பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமீர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தேவையான பரிசோதனைகளை முடித்திருந்தது அவருக்கு ஆறுதல் தந்தது. இனி தரவுகளைக் கணித்து கட்டுரை எழுத வேண்டியதுதான் பாக்கி.

இந்த நேரத்திலே தான் அது நடந்தது!

ஆறு வருடங்களின் பின் றொஸ்நாக் மீண்டும் கர்ப்பமடைந்தாள். கருத்தரித்து ஆறு மாதங்களின் பின்பே இது அமீருக்கு தெரியுமென்று சக ஈரானியர்கள் பேசிக் கொண்டார்கள். றொஸ்நாக் கர்ப்பமடைந்தது பற்றி ஈரானிய மாணவர்கள் மத்தியில் பல வதந்திகள் உலாவின. எமது பல்கலைக் கழகத்தில், ‘இஸ்லாமிய பெண்கள் விடுதலை’ பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் ஆஸ்திரேலிய வெள்ளையன் ஒருவனுடன் றொஸ்நாக் நட்பாக இருப்பதாகவும், வயிற்றில் வளரும் குழந்தை அவனதே எனவும், ஈரானியர்கள் சத்தியம் செய்யத் தயாராக இருந்தார்கள். அதற்குப் பின்பு அமீர் ஆய்வு கூடத்துக்கு வரவில்லை. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதத் தேவையான தரவுகளைப் பெறவாவது, அமீர் வருவானென வீரசிங்கம் காத்திருந்தார். அவன் வரவில்லை. ஆனால், ஈரானிய மாணவன் ஒருவன் றொஸ்நாக் பற்றிப் புதிய தகவலுடன் வந்தான். வெள்ளைக்காரர்களின் சாயலில் றொஸ்நாக் சில தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தையைப் பெற்றுள்ளதாக சொன்னான். தகவல் சொன்ன ஈரானிய மாணவன் ஆய்வு கூடத்தில் நிற்கும் போதே, அலுவலக செயலாளர் அவசர அவசரமாக வீரசிங்கத்திடம் வந்தாள். உள்ளூர் பொலீஸ் நிலையத்திலிருந்து தொலை பேசி அழைப்பு வந்ததாகவும், அமீர் விடயமாகப் பேச உடனடியாக பொலீஸ் நிலையத்துக்கு அவரை வரமுடியுமா? எனக் கேட்டதாகவும் சொன்னாள்.

பொலீஸ் நிலையத்தின் உள்ளே கை விலங்குடன் அமீர் அமர்ந்திருந்தான். அவனது உடை எங்கும் திட்டுத் திட்டடாக இரத்தம் படிந்திருந்தது. அவனது உடலில் சிறுசிறு கீறல்களே இருந்தன. என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் ஒரளவு ஊகிக்க முடிந்தது!

அன்று காலை றொஸ்நாக்கையும் குழந்தையையும் பார்க்க அமீர் மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறான். குழந்தை பற்றிய வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி பூவாசால் றொஸ்நாக்கை தாக்கியிருக்கிறான். அவளின் மண்டை உடைந்து, வலது கை சுட்டு விரலும் முறிந்து விட்டது.

வைத்தியசாலை ஊழியர்களின் சாட்சி பலமாக இருந்தது. மனைவியை அடித்து காயமேற்படுத்தி கொலை செய்ய முயன்றது முதற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மத்தியில், ஈரானிய கலாசாரமும் இஸ்லாமிய ஆசாரங்களும், கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென அமீரின் வழக்குரைஞர் வைத்த வாதம், ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் எடுபடவில்லை. அமீருக்கு இரண்டு வருடச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. றொஸ்நாக் பலதடவை குழந்தையுடன் அமீரைப் பார்க்கச் சிறைக்குச் சென்றபோதும், அவன் அவளைப்பார்க்க மறுத்தது சரியென ஈரானிய மாணவர்கள் நியாயப் படுத்தினார்கள்.

சிறைச்சாலையில் மகனைச் சந்திக்க அமீரின் தந்தை சிட்னி வந்தார். ‘குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை’ என்ற தங்களின் மரபைச் சொல்லி முதலிரண்டு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து கூட்டிச் சென்றுவிட்டார். றொஸ்நாக் கைக்குழந்தையுடன் அநாதரவாக நின்றது பற்றி அவர் கவலைப்படவில்லை.

அமீர் தன் தண்டனைக் காலத்திலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிச் சமர்ப்பித்திருந்ததால் அவன் வெளியே வந்ததும் பட்டம் பெற்றான். சிட்னியிலுள்ள பள்ளிவாசலொன்றில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்துப் பெற்று ஈரான் சென்றுவிட்டான். அத்துடன் அமீர்-றொஸ்நாக்கின் தொடர்பு வீரசிங்கத்துக்கு முற்றாக அறுந்து போயிற்று.

 

-3-

தினெட்டு வருடங்கள் கழிந்து, இன்று இந்த இளைஞனை சந்தித்த விசித்திரத்தை வீரசிங்கம் எண்ணிப்பார்த்தார். சந்தேகமே இல்லை அந்த இளைஞன் அமீரின் மகனேதான். வீரசிங்கத்தின் மனம் ஒரு நிலையில் இல்லை. எவ்வளவு வசைகள் றொஸ்நாக் மீது சொல்லப்பட்டன. வீரசிங்கத்துக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. மறுநாள் சனிக்கிழமை ஒரு தீர்மானம் எடுத்தவராக, இளைஞனின் தரவுகளிலிருந்து அவனது விலாசத்தை, எடுத்து மனைவியுடன் றொஸ்நாக் வீட்டுக்குச் சென்றார்.

அழைப்பு மணியை அடித்ததும் அந்த இளைஞனே கதவைத் திறந்தான். பேராசிரியர் வீரசிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம். உனது தாயார் இருக்கிறாரா எனக் கேட்டதும் அவன் முகத்தில் பயம் கலந்த தயக்கம். இருப்பினும் தன்னை சுதாகரித்துக் கொண்டவன், ‘தொழுகையில் இருக்கிறார், வந்துவிடுவார், இருங்கள்’ எனச் சொல்லி உள்ளே சென்றான். வீடு முழுவதும் இஸ்லாமிய மதத்தின் புனிதம் தெரிந்தது. அமீர், றொஸ்நாக் மற்றும் முதல் இரு குழந்தைகள் சேர்ந்து எடுத்த குடும்பப் படமும், அதனருகே றொஸ்நாக் தன் கடைசி மகனுடன் எடுத்த படமும் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

றொஸ்நாக் தொழுகை அறையிலிருந்து வெளியேவந்தாள். அதே அழகான உருவம். குட்டையான முடி. பர்தா இல்லை. முகத்தில் மாத்திரம் சிறிது முதிர்ச்சி தெரிந்தது. வீரசிங்கத்தைக் கண்டதும் றொஸ்நாக் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அமீரின் பேராசியர் என வீரசிங்கத்தை மகனுக்கு அறிமுகப்புடுத்தினாள். சமையலறைக்குச் சென்று ஈரானிய சிற்றூண்டி வகைகளுடன் தேனீர் தயாரித்துக் கொண்டுவந்தாள். வீரசிங்கம் தம்பதிகள் முன் அமர்ந்து, ‘எத்தனை வருடங்கள்…’ என தன் கைகளால் முகத்தை அழுத்தித் தேய்த்தாள்.

மகனைத் தான் சந்தித்த விபரத்தைச் சொல்லி, அவனைக் கண்டதும் அமீரைக் கண்டதுபோல் இருந்ததாக வீரசிங்கம் சொன்னார்.

றொஸ்நாக் விரக்தியாகச் சிரித்தாள். பின்னர் எதுவும் பேசாது எழுந்துசென்று சில பத்திரங்களுடன் வந்தாள். அது டீ.என்.ஏ (DNA) பற்றிய ஆய்வுகூட தரவுகள். றொஸ்நாக்கின் மகனதும்; அமீரதும் டீ.என்.ஏ அமைப்புக்கள் ஒன்றென அதில் குறிக்கப்பட்டிருந்தன. றொஸ்நாக் மெதுவாகத் தொடர்ந்தாள்.

சேர், பல வருடங்களின் பின்பு உங்களைச் சந்தித்ததில் என் மனம் அமைதியடைகிறது. இந்த விபரங்களுடன் நான் பலதடவை சிறைக்குச் சென்று அமீரைச் சந்திக்க முயற்சித்தேன், முடியவில்லை. அமீரை மனதார நான் அன்றும் காதலித்தேன். இன்றும் மனதளவில் சேர்ந்து வாழ்கிறேன். எமது நாட்டின் வாழ்க்கை முறைபற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். பெண்கள், பிள்ளைகள் பெறும் இயந்திரங்களாகவே ஆணாதிக்க வாதிகளால் இன்றும் பார்க்கப் படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் சத்திய நன்னெறிகள் பின் தள்ளப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் எமது உலகில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கிறது. தலாக், பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்ற எத்தனையோ வலிகளைச் சுமந்து கொண்டே இன்றும் நாம் வாழ்கின்றோம்…’.

அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப் பட்டதனால் றொஸ்நாக்கின் உடல் நடுங்கியது. கோப்பையில் மீதமுள்ள தேநீரைக் குடித்தபின் நிதானமாகத் தொடர்ந்தாள்.

நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போதுதான் சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் இந்த விடையத்தில் வலிமை அற்றவர்களாக, சந்ததி சந்ததியாக ஏதோ ஒரு ஆணிடம் அடிமைப் பட்டுக் கொண்டேதான் வாழ்கிறார்கள்…’

நீ அளவுக்கதிகமான சுதந்திரத்தை ஆரம்பத்திலேயே சுகிக்கத் துவங்கி விட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாமல்லவா…?’

சேர், அமீர் தன் ஆராச்சியில் முழுமையாக ஈடுபடவும், பிள்ளைகளை ஏற்றிஇறக்கவும் வசதியாக நான் கார் ஓட்டினேன். பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். எமது நாட்டில் பெண்கள் அணியும் நீண்ட உடையுடன் கடைகளுக்கும், பிள்ளைகளின் பாடசாலைக்கும் போவது எனக்கு மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் அசௌகரியமாக இருந்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தேவை கருதியும் ஒருசில விடையங்களில் என்னை நான் மாற்றிக் கொண்டதை இன்றும் நான் தப்பாக நினைக்கவில்லை.

உங்கள் நாட்டில் பெண்கள் கார் ஓட்டுவார்களே! அது சவூதி அரேபியாவில் அல்லவா தடை செய்யப்பட்டிருக்கிறது…’

சேர், நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இருபது வருடங்களுக்கு முன்பு அமீர் இங்கு படிக்க வந்த காலத்தில் ‘அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களே’ கல்வி கற்க, அரச செலவில் வெளி நாடுகளுக்குச் செல்லமுடியும். அவ்வாறு படிக்கச் செல்வதற்கு கல்வித் தகமை மட்டும் போதாது. தீவிர கடும் போக்காளர்களின் சிந்தனையுடன் அவர்கள் ஒத்துப் போகவேண்டும். அதற்கான பரீட்சை ஒன்றில் சித்தி பெறவேண்டும். அப்போது வெளி நாடுகளுக்குப் அனுப்பப்பட்ட அனைவரும் மணம் முடித்த ஆண்களே. இதனால் அவர்கள் குடும்பத்துடன் சென்றார்கள். வெளி நாடுகளிலும் அவர்கள் அடிப்படை வாதிகளாக வாழ்ந்து நாடு திரும்பவேண்டும் என்பதுதான் அப்போதைய அரசின் போக்காக இருந்தது…’

ஆனால் அமீர் அப்படிக் கடும் போக்கானவனாக இருந்ததில்லேயே’!

உண்மைதான். அமீர் வாழ்ந்த சூழல் வேறு. தந்தையின் பிரபுத்துவ செல்வாக்காலேயே அமீர் இங்கு வர முடிந்தது. அடிப்படையில் அமீர் மிகவும் நேர்மையானவர். ஆனால் தகப்பன் சொல்வதையே எப்போதும் செய்து பழக்கப்பட்டதால் தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தவர். நான் வளர்ந்த சூழல் வித்தியாசமானது. ஈரான்-ஈராக் எல்லையோர கிராமத்தில் பாரசீக-அராபிய பிரச்சனைகளுக்கு நாங்கள் முகங் கொடுத்து வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை லேசானதல்ல’ எனச் சொன்னவாறே எழுந்து சென்று ஒரு சஞ்சிகையைக் கொண்டுவந்தாள்;.

நீங்கள் சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவது பற்றிச் சொன்னீர்களே, இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். எங்கள் நாட்டிலும் பெரு நகரங்கள் தவிர்ந்த மற்றைய இடங்களில் இதுதான் நிலமை’, என்றவாறு சஞ்சிகையை விரித்து வீரசிங்கத்திடம் கொடுத்தாள்.

பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்’. இந்த வாசகங்கள் அச்சு அசலாக சவுதி அரேபியா சட்டசபை போன்ற அதிகார மையத்தில், உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை. பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் (2015). இதற்காக சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா? ஐந்து சதவீதம். மிகுதி 95 சதவீதமும் ஆண்களே. பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு. ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு…’ எனத் தொடர்ந்தது கட்டுரை.

கட்டுரையை வாசித்ததும் வீரசிங்கம் அதை மனைவியிடம் வாசிக்கக் கொடுத்தார். றொஸ்நாக் தொடர்ந்தாள்.

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. ‘இறைவாக்கினர்’ வாழ்ந்த காலத்துலேகூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படி என்றால் இன்று பெண்கள் கார் ஓட்டுவதில் என்ன பிழை?’

றொஸ்நாக்கின் கேள்விகளுக்கு வீரசிங்கத்திடம் பதில் இல்லை. அறிவியலுக்கு அப்பால் மற்றவை அனைத்தும் ‘கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியவர். இருப்பினும் றொஸ்நாக்கின் அறிவு முதிர்ச்சி அவள் இதுவரை பட்ட துன்பங்களால் வந்ததென்பதை மட்டும் புரிந்து கொண்டார்.

முதலிரண்டு குழந்தைகளையும் நீங்கள் விட்டிருக்கக் கூடாது. அவுஸ்திரேலிய சட்ட திட்டங்களைப் பாவித்து தடுத்திருக்க வேண்டும்’ என்றார் பேராசிரியர் வீரசிங்கத்தின் மனைவி, ஒரு தாயின் தவிப்பைப் புரிந்தவராக.

உண்மைதான். ஆனால் அப்போது என்னால் முடியவில்லை. கைக் குழந்தையுடனும் வளர்ந்த இரு பிள்ளைகளுடனும் கையில் பணமின்றி நான் அநாதரவாக நின்றேன். அமீர் சிறையில். சக ஈரானியர்கள் என்னை ஈரானிய கதையாடல்களில் வரும் சாத்தானாக எண்ணித் தள்ளி வைத்தார்கள். இந் நிலையில் அமீரின் தந்தையின் மூர்க்க குணத்தை தனி மனுசியாக என்னால் எதிர்க்க முடியவில்லை. ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதில் சமூக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பெண்ணின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால் எனக்கு என்னுடைய குழந்தைகள் மீது எந்த உரிமையும் இல்லை என அமீரின் தந்தையால் சட்டம் பேசப்பட்டது. கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பிரியும் நிலை வந்தால் குழந்தைகள் ஆணின் உடமையாகி விடுகிறதென மேற்கோள் காட்டப்பட்டது. நான் மனதால் கூட அமீருக்கு துரோகம் செய்தது கிடையாது. ஒரு பெண் விரும்பக்கூடிய அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினேன். அது இங்கு படிக்க வந்த மற்றைய ஈரானிய குடும்பங்களால் கொச்சையாக்கப்பட்டது. எந்த ஆதாரமுமில்லாமல் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக இட்டுக்கட்டப்பட்டது. எல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்தவர்கள் போல குழந்தைக்குத் தகப்பன் யாரோ என கதை பரப்பினார்கள்…’

நீ இவற்றை விளக்கமாக அமீருக்கு சொல்லியிருக்கலாமே…?’

இது பற்றி அமீருடன் பேச நான் பலதடவை முயன்றேன். ஆனால் அமீர் ஒரு ‘எடுப்பார் கைப்பிள்ளை’. மற்றவர்களின் பேச்சுக்கு நன்கு எடுபடுவார்’ என்றவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, ‘என் மன ஆறுதலுக்காவது இதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்’ எனத் தொடர்ந்தாள்.

என்னுடன் வாழும் மகன், அமீரது மகன்தான் என்ற டீ. என். ஏ.(DNA) விபரம் பற்றி, இங்கிருந்து யாரோ அமீரின் தகப்பனுக்குத் சொல்லியிருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னால் அவனையும், தமது பாரம்பரிய சட்டங்களைச் சொல்லி ஈரானுக்கு அழைக்க முயன்றார். ஆனால் அவரது ‘பாச்சா’ பலிக்கவில்லை. நான் அவுஸ்திரேலியப் பிரஜை, என்னுடைய தாயாருடன் இருப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரமுண்டு, இனிமேல் இப்படியான முயற்சியில் இறங்க வேண்டாம் என, என்னுடைய மகன் அவருக்கு கடிதமெழுதவே அத்துடன் அவர் அடங்கிவிட்டார்’.

இதைச் சொல்லும்போது றொஸ்நாக்கின் முகத்தில், முதல் முறையாக ஒருவித நிம்மதி, மின்னலடித்து மறைந்ததை வீரசிங்கம் அவதானித்தார்.

முதல் இரண்டு குழந்தைகளும் இப்பொழுது பெரியவர்களாகி இருப்பார்களே, அவர்களுடன் உங்களுக்குத் தொடர்புண்டா?’ எனக் கதையின் போக்கை மாற்றினார் வீரசிங்கத்தின் மனைவி.

றொஸ்நாக் சின்னப் பிள்ளை ஒன்றின் குதூகலத்துடன் தனது ஐபாட்டை எடுத்து வந்தாள். அதைத் தட்டிப் படங்களைக் காட்டி, ‘அமெரிக்காவில் படிக்கும் என்னுடைய பிள்ளைகள், அங்கு சென்ற பின்பே என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்’ என்றாள் பெருமை பொங்க.

நாம் விடைபெறத் தயாரானோம். ‘சற்றுப் பொறுங்கள் நான் இன்னுமொரு விடையத்தையும் சொல்லி விடுகிறேன். அமீர் இன்னமும் வேறு திருமணம் செய்யாது தேரானில் தனியாகவே வாழ்வதாக அமெரிக்காவில் படிக்கும் பிள்ளைகள் சொன்னார்கள். அவர் ஒன்றல்ல, முறைப்படி நான்கு திருமணங்கள் செய்திருக்க முடியும். என்னுடைய அமீரை எனக்குத் தெரியும். ஒரு நாள் என்னிடம் நிச்சயம் வருவார். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்’ என்றாள் நம்பிக்கையுடன். அப்போது றொஸ்நாக்கின் வீட்டருகேயுள்ள சிட்னிப் பள்ளிவாசலில், தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கும் ‘பாங்கு’ ஓங்கி ஒலித்தது.

(ஞானம், மார்ச் 2016)

1 comment:

  1. அண்ணா, ஒரு கலாச்சாரத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள். வாசித்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete

.