Saturday 23 January 2021

 ஆண் குழந்தை

ஆசி கந்தராஜா

ரணக் கடல், வழமைக்கு மாறாக இன்று அமைதியாக இருக்கிறது. அக்னி வெய்யில். உக்கிரமாக வீசும் உப்புக் காற்று அனல் வெக்கைக்குப் போட்டியாக முகத்திலடிக்கிறது. காது கன்னமெல்லாம் ஒரே எரிச்சல். வாயில் உப்புக் கரிக்கிறது. உடம்பு முழுவதும் கடல் சேற்றைப் பூசிக்கொண்டு அரைநிர்வாண கோலத்தில் வெள்ளையர்கள் குடைகளின் கீழே படுத்துக்கிடக்கிறார்கள். மரணக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள தாதுப் பொருள்கள், தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறதாம். இதற்காகவே ஜேம்ஸ் தன்னுடைய மனைவி மோனிக்காவுடன் மரணக் கடலுக்கு வந்திருகிறார்.

கடற்கரை ரம் தன்னிச்சையாக வளர்ந்த பேரீச்சை மரங்களும் தாளை மரங்களும் இலை கருகி வாடிச் சோர்ந்து நிற்கின்றன. இடையிடையே உவர் மண்ணுக்கும் உப்புத் தண்ணீருக்கும் இயைந்து வாழும் ஒலிவ் மர இனங்கள் உல்லாசிகளுக்கு நிழல் கொடுக்கின்றன. ஒலிவ் மரங்கள் ஊடாகப் பார்த்தால் ஜோர்டான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை நெளிந்து விரிவது தெரிகிறது.

ஐநூறு மீட்டர் தூரத்தில் வீதி ஓரமாக, மரணக் கடலின் மகத்துவங்களை விளக்கும் பெயர்ப்பலகைத் தூண்களில், இரண்டு ஒட்டகங்கள் முதுகைத் தேய்த்துச் சுகம் காண்கின்றன. பெயர்ப் பலகைக்கு நேர் எதிரே, வீதி ஓரமாக யூசுப்பின் 'ஷவர்மா ஹெபாப்' கடையும் விருந்தினர் விடுதியும். ஜோர்டான் 'றிப்' பள்ளத்தாக்கில் தன்னிச்சையாக மேயும் குறும்பாட்டு இறைச்சியில் தயாரிக்கப்படும் யுசுப்கடை ஹெபாப், சுற்று வட்டாரத்தில் வெகு பிரபல்யம். இதனால் பெயர்ப் பலகையில் எழுதியுள்ள அறிவுறுத்தலை வாசிக்க வந்த உல்லாசிகள், ஹெபாப் வாங்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.

கல்லாப் பெட்டியில் யூசுப்பின் நாலாவது மனைவி நீனா அமர்ந்திருக்கிறாள். அவள் ஜோர்டான் பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானம் படித்தவள். புத்திசாலி. அழகுத் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவள். சந்தர்ப்ப வசத்தால் யூசுப்பின் மனைவியாகி இருக்கிறாள். இப்பொழுது அவள் கடைக்கு வரும் உல்லாசிகளிடம் அன்பாகப் பேசி கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறாள். அவளின் கைகளுக்குத்தான் என்ன சுறுசுறுப்பு. மூன்று வாரங்களுக்கு முதல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த களைப்பு எள்ளளவும் இல்லை. மாறாக அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிருந்தால் இப்பொழுது ஓய்வாகத் தன் குழந்தையுடன் படுத்திருப்பாளோ?

ஜோர்டான் நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் ஒரு வீதி, உப்பு மணல்க் காட்டைத் தாண்டி மரணக் கடலை அடைகிறது. அந்த வீதியின் கடற்கரை அந்தலையில், யூசுப் தனது வாகனத்தை நடு வீதியில் நிறுத்தி எதிர் திசையிலிருந்து வந்த வாகன சாரதியுடன் அரபிய மொழியில் ஆக்ரோஷமாகச் சண்டைபோடுகிறான். இதனால் ஏற்பட்ட வாகன நெரிச்சல் பற்றி அவனுக்கோ மற்றவனுக்கோ கவலை இல்லை. ஜோர்டான் பொலீஸ் அங்கு வரும்வரை அல்லது தர்க்கத்தில் ஒருவன் வெல்லும்வரை அவர்களின் சண்டை தொடரும்.

நீனாவுக்குப் பிறந்த குழந்தையுடன் சேர்த்து யூசுப்புக்கு மொத்தம் பதின்நான்கு பெண் குழந்தைகள். யூசுப்பின் மொழியில் இவர்கள் அனைவரும் 'பெட்டைக் கழுதைகள்'. எப்படியும் ஒரு ஆண் குழந்தை வேண்டும், என்ற அங்கலாய்ப்பில் யூசுப் நான்கு பெண்களை நிக்காஹ் செய்தும் தொடர் தோல்விதான். இருந்தாலும் ஆண் குழந்தைக்காக அவன் தொடர்ந்தும் முயற்சிப்பான். இது அவனது கௌரவப் பிரச்சனையும் கூட!

ஹெபாப் கடையின் பின்புற வாசலால் உற்றுப் பார்த்தால் நெடுஞ்சாலை ஓரமாக 'முஜீப்' இயற்கைப் பிரதேசம் தெரிகிறது. அங்கிருந்து மரணக்கடல் வரை உல்லாசிகளுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான ஹோட்டல்கள் எழுந்து நிற்கின்றன. பெயர்ப்பலகைக்கு அப்பால் கடற்கரை வரை, வரிசையாக பல பெட்டிக் கடைகள். அங்கு இல்லாத சாமான்களே இல்லை என்னுமளவுக்கு பொருள்கள் நிறைந்து கிடக்கின்றன.

பெட்டிக் கடைகளுக்கு முன்னாலுள்ள வட்ட மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் குடுவை புகைப்பான்களில் ஆண் பெண் பேதமின்றி உல்லாசிகள் 'சீஷா' புகைக்கிறார்கள். குடுவை புகைப்பான்களின் கிண்ணத்தில் வாசனைப் புகையிலையை நிரப்பவும் பத்தவைக்கவும் நெருப்புத் தணலுடன் ஒரு பையன் சுறுசுறுப்பாக இயங்குவானே? அவனுக்கு இன்று என்ன நடந்தது? முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறான்.

யூசுப்பின் ஹெபாப் கடைக்கு நேர் எதிரே, வீதிக்கு மறுபக்கம் சடைத்து வளர்ந்த ஒலிவ் மரத்தின் கீழ் உள்ள இருக்கையில், அலி அட்டணக் கால் போட்டுக் கொண்டு சீஷா புகைத்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் குடுவைக்குள் நிரம்பியிருக்கும் தண்ணீரூடாக புகையை இழுத்து, நீராவி எஞ்சின் போல மூக்குத் துவாரங்கள் வழியே கபகப என அவன் புகை விடுவதை, சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்க்கிறார்கள். சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது என மனைவிக்கு விளக்கம் சொல்கிறார் சுற்றி நின்ற உல்லாசி.

அலி, யூசுப்பின் தம்பி. ஒரு சோக்காளி. எந்த வேலையிலும் நிரந்தரமாகத் தங்கமாட்டான். ஆனால் வசீகரமானவன். உல்லாசிகளாக வரும் இளம் பெண்களை வளைத்துச் சுகம் காண்பதில் வலு கில்லாடி. அடிக்கடி அவன் சிக்கல்களில் மாட்டுப்படுவதால் யூசுப்புக்கு இவன் ஒரு தீராத தலை வலி!

மனைவிமார் ஹெபாப் கடை வியாபாரத்தையும் விருந்தினர் விடுதியையும் பார்த்துக்கொள்ள,  யூசுப் உல்லாசிகளின் வழிகாட்டியாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறான். இந்த வருமானத்தில்தான் தன்னுடைய நாலு மனைவி குழந்தைகளுக்கும் ஊதாரியாகத் திரியும் அலியின் குடும்பத்துக்கும் சாப்பாடு போடுகிறான்.

அலிக்கு ஒரு மனைவி மட்டுமே. ஆனால் அவள் பெற்றுப்போட்டவை அனைத்தும் கடுவன்கள். இவர்கள் அனைவரும் ஆண் சிங்கங்கள், குடும்ப வாரிசுகள் எனச் சொல்லிச் சொல்லி, அண்ணன் யூசுப்பை வெறுப்பேற்றுவான் அலி.

அது, பாடசாலை விடுமுறைக் காலம்! இருந்தாலும் இம்முறை கூட்டம் குறைவு. இதனால் குழந்தைகளைச் சுமந்து செல்லும் அலங்கரிக்கப் பட்ட ஒட்டகங்களுக்கு இன்னும் சவாரி படியவில்லை. ஒலிவ் மர நிழலில் படுத்துக் கொண்டு அவை அசை போடுகின்றன.

பாரிய பாறை ஒன்றின் மேல் ஏறி நின்று மரணக்கடலின் மகிமை பற்றி உல்லாசிகளுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறான் யூசுப்.  

'மீன்களே இல்லாத, அதிசயங்கள் பல நிறைந்தது மரணக்கடல்...' என ஆரம்பித்த யூசுப்பிடம் 'மரணக் கடல் என ஏன் அழைக்கப்படுகிறது? முதலில் அதைச் சொல்லுங்கள்' எனக் கேட்டார் ஒரு உல்லாசி.

சுற்றி நின்ற மற்றவர்களும் அதற்கான காரணத்தை அறிய உஷாரானார்கள்.

'சாதாரண கடல் நீரை விட மரணக் கடலில் பல மடங்கு உப்புச் செறிவு இருப்பதால் உயிரினங்களின் குடி நீராகவோ, வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் இதை 'Dead Sea' அல்லது' மரணக் கடல் என்கிறார்கள்...'

'பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கிறது. ஆனால், இங்கிருந்து நீர் விரயமாவதில்லை. எனவே ஆறுகள் இறுதியாக வந்தடையும் இடம் என்பதாலும் மரணக் கடல் என்ற பெயர் வந்திருக்கலாம்...'

இந்த இடத்தில் யூசுப்பை, சைகை மூலம் இடைமறித்தார் ஜேம்ஸ். யூசுப் சொன்ன தகவல்களுக்கு மேலதிகமாக, அவர் சில அறிவியல் தகவல்களைச் சொல்லத் துவங்க, 'இவர் ஒரு பிரபல உயிரியல் விஞ்ஞானி' என அவரை அறிந்த முதியவர், செவிப்புலன் குறைபாடுள்ள தன் மனைவிக்கு உரத்துச் சொன்னார். அது மற்றவர்களின் செவிகளிலும் விழுந்தது. அனைவரும் விழிகளை விளித்து ஜேம்ஸ் சொல்வதைக் கேட்க ஆர்வமானார்கள்.

'மரணக் கடல் என்ற பெயரைக் கேட்கும்போது யூசுப் சொல்வதைப் போல, எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதான் நினைப்போம். அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் மரணக் கடலில் நல்லபடியாக வாழ்கின்றன. இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்கின்றன' என்றவர் சற்று நிறுத்தி,

'மரணக்கடலுக்கு அடியில் பல நீரூற்றுகளும் உள்ளன. அவற்றில் கலந்துள்ள வேதிப் பொருள்கள் பல தோல் வியாதிகளைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது' என மேலதிக தகவலையும் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

யூசுப் தனது தொழிலில் ஜேம்ஸைப் போல எத்தனை பேரைச் சந்தித்திருப்பான். இருந்தாலும் அன்றைய தனது வருமானத்துக்கு ஜேம்ஸால் பங்கம் வந்துவிடுமோ என்ற பயம், அவன் மனதில் முகம் காட்டி மறைந்தது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவன் சிறு வயதில் பழகிய நடனம் கைகொடுக்கும். உடனே தன்னுடைய கையிலிருந்த கம்பைச் சுழற்றி தாள லயம் பிசகாது உல்லாசிகள் மத்தியில் ஜோர்டானிய நடனமாடினான். உல்லாசிகளின் கவனம் இயல்பாகவே அவன் பக்கம் திரும்ப, நடனத்தின் நடுவில் சரியான சந்தர்ப்பத்தைத் தெரிந்தெடுத்து குடுகுடுப்பைக்காரன் பாணியில் தொடர்ந்தான்.

'நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். ஆனால் இவை எதுவும் இல்லாமலே மரணக்கடலில் மிதக்கலாம்...'

'இதுவும் தண்ணீர்தான். ஆனால் மரணக் கடலில் குதிப்பவர்கள் மூழ்கமாட்டார்கள். மாறாக நீர் மட்டத்தின் மேல் மிதப்பார்கள். இதுதான் மரணக் கடலின் சிறப்பம்சம்...'

யூசுப்பின் இந்தத் தகவல் விவரணம், அவனுக்கு வந்த தொலை பேசி அழைப்பால் துண்டிக்கப்பட்டது.

அங்கு நின்ற உல்லாசிகள் அனைவரும் முதல் முறையாக மரணக் கடலுக்கு வந்தவர்கள். நீரில் மிதக்கும் விஷயத்தில் ஒரு வழிகாட்டி சொல்வதை நம்பத் தயாரில்லை. எனவே இது எப்படிச் சாத்தியமாகும்? என ஜேம்ஸைக் கேட்டார்கள்.

'யூசுப் சொல்வது முற்றிலும் உண்மை' என அவனுக்கு ஆதரவாகப் பேசிய ஜேம்ஸ், நீரில் மிதக்கும் சூக்குமத்தைச் சொல்லத் துவங்கினார். 

'உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்திலிருந்து 378 மீட்டர் ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப் பரப்புத்தான் மரணக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்டது'

திடீரென மரணக்கடலின் மறுகரையில், இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைக் காவலரண்களில் இருந்து, சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன. இது வழமையான ஒன்றுதான். இருந்தாலும் அவை ஏற்படுத்திய அதிர்வால் ஜேம்ஸின் விளக்கம் தடைப்படடுகிறது. சுற்றி நின்ற உல்லாசிகள் 'ம்' சேர்த்து, அவரைத் தொடர வைக்கிறார்கள்.

'மரணக்கடலில், உப்பின் அளவு சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மரணக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை பாறைகள் இல்லாத கடற்கரையில் காணலாம்' என்றவர், அருகில் நின்ற யூசுப்பின் மன ஓட்டத்தைப் புரிந்தவராக தனது விளக்கங்களுக்கு நிரந்தரமாக 'சுபம்' போட்டார்.

அன்றைய தன் பணிக்கு யூசுப் உல்லாசிகளிடம் பணம் வசூலிக்க வேண்டும். இதனால் தனது தகவல் சித்திரத்தை நிறைவாக்க, சில நடைமுறை அறிவுறுத்தல்களைச் சொல்லத் துவங்கினான்.

'மரணக் கடலில் நீங்கள் முறைப்படி நீந்தத் தேவையில்லை. கடல் தானாகவே உங்களை மிதக்க வைக்கும். ஆனால் ஒன்று முக்கியம். முதுகு தண்ணீரில் பட வானத்தைப் பார்த்தபடி மிதவுங்கள். உப்புத் தண்ணீர் கண்ணில் படாதவாறு கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். அதற்குரிய கண்ணாடி என்னிடமுள்ளது, விலை இருபது டொலர்கள்' என முடித்தவன் உல்லாசிகளின் றெஸ்பான்ஸுக்கு காத்திராமலே, தந்திரமாகத் தன் கூலியுடன் சேர்த்து கண்ணாடிக்கும் பணத்தை வசூலித்தான்.

இயல்பாகவே யூசுப் தன்னுடைய தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பான். தொழில் எதிரிகளைச் சமாளித்து, தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் வெகு சாமர்த்தியசாலி. இதனால் ஜேம்ஸ், மோனிக்கா தம்பதிகளுடன் ஒட்டி உறவாடி, சீக்கிரம் நண்பனாகி விட்டான். ஒரு சந்தந்தர்ப்பத்தில் தனக்கு ஆண் வாரிசு இல்லாத குறையைச் சொல்லிக் குறைப்பட்ட யூசுப் பெட்டை'களாகவே பெற்றுத் தள்ளும் தன் நான்கு மனைவிகளையும் திட்டித் தீர்த்தான். ஆண் குழந்தைக்காக எத்தனை பெண்களை வேண்டுமென்றாலும் தான் நிக்காஹ் செய்யத் தயாராக இருப்பதாகவும் சவால் விட்டான்.

மோனிக்கா ஒரு மகப்பேறு வைத்தியர். பெண்ணிய வாதி. யூசுப்பின் இந்தத் திமிர்ப் பேச்சு அவளுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. சந்தர்ப்பம் வரட்டுமெனக் காத்திருந்தார். இருந்தாலும் காலம் எதை எதையோ கலைத்துப் போட்டு, பூச்சாண்டி காட்டி இழுத்துக்கொண்டே இருந்தது.

அன்று ரமலான் நோன்பு முடிந்து வரும் ஈகைத் திருநாள்!

ஊரெங்கும் திருவிழா. வழமைபோல யூசுப் வீட்டிலும் மிகப் பெரிய கொண்டாட்டம். ஜேம்ஸ் மோனிக்கா தம்பதிகளும் இம் முறை கொண்டாட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்.

எத்தனை வகையான புரியாணிகள், ரொட்டிகள், வாட்டிவதக்கிய இறைச்சி வகைகள், பழங்கள், பழரசங்கள், விதம் விதமான இனிப்புப் பண்டங்கள். அரேபிய வாத்திய இசைகளுக்கிடையே Dabke நடனம்.

விருந்தினர்கள் வட்ட வடிவில் துள்ளித் துள்ளி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மண்டபத்துக்கு வெளியே  எலியோட்டத்தில் சின்ஞ் சிறுசுகள்.

கொண்டாட்டம் களை கட்டியது.

பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் நீனாவும் மோனிக்காவும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்காத காரணத்தால் பெண்கள் படும் அவஸ்தைகள், பெண்ணியம் பேசும் மோனிக்காவின் தூக்கத்தைப் பல தடவைகளில் கலைத்துப்போட்டிருக்கிறது. இதுபற்றி அறிவு பூர்வமாக நீனாவுடன் மட்டும்தான் பேசமுடியும். அதற்காகவே காத்திருந்தவர், சந்தர்ப்பத்தை நழுவ விடாது விஷயத்துக்கு வந்தார்.

நீனா, நீ உயிரியல் விஞ்ஞானம் படித்தவள். கருவில், ஆண் பெண் 'பால் நிர்ணயம்' எப்படி நடைபெறுகிறது என்பதை, பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறாயா?

இல்லையென மெல்லத் தலையாட்டினாள் நீனா. மோனிக்காவின் கேள்வி அவளைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். ஒரு ஆண் குழந்தையை, தன்னாலும் பெற்றெடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அவள் சகஜ நிலைக்குத் திரும்பும்வரை காத்திருந்த மோனிக்கா மேலே தொடர்ந்தார்.

கருவில் உருவாகும் குழந்தை, ஆணா? அல்லது பெண்ணா? என்று தீர்மானிப்பது ஆணின் விந்தணுக்கள், என்பதைப் பலர் அறிவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் எப்போதும் குற்றவாளியாக்கப்படுவது பெண்கள் மட்டும்தான்.

'நிஜமாகவா? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்' என நிமிர்ந்து உட்கார்ந்தாள் நீனா.

பெண்ணின் கருப்பையில் விருத்தியுறும் கருமுளையம், ஆணாகவா? அல்லது பெண்ணாகவா? விருத்தியுற வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்களே...,

இதைக் கேட்டு உஷாரானாள் நீனா. அவள் எப்படியும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றேயாகவேண்டும். இல்லையேல் இன்னுமொரு பெண், யூசுப்பின் ஹெபாப் கடை கல்லாப் பெட்டியில் அமர்வாள். அதைத் தொடர்ந்து நீனாவின் குடும்பத்துக்குக் கிடைக்கும் பண உதவியும் துண்டிக்கப்படும். 'நெபோ' மலை உச்சியில் வாழும் நீனாவின் குடும்பம் பெரியது. தந்தை இல்லை. குடும்பத்தில் வறுமை. சிறுவயதிலிருந்தே துடுக்கும் விவேகமும் கொண்ட நீனா, அரச செலவிலேயே பல்கலைக் கழகம் வரை படித்தவள். படிப்பு முடிந்த பின் யூசுப்பின் விருந்தினர் விடுதியில் கணக்கெழுதச் சேர்ந்வளை 'தவிச்ச முயல்' அடித்தான் யூசுப்.

மண்டபத்துக்கு வெளியே ஒறிக்ஸ் (Oryx) ஆடுகள் கட்டப்பட்டு நிற்கின்றன. திருநாள் விருந்துக்குத் தன் பங்காக, அலி அவற்றைக் கொண்டுவந்திருக்கிறான். செங்குத்தாக ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய, குழாய் போன்ற வடிவத்தில், வரிவரியாக அமைந்த அவற்றின் கொம்புகள் மிக அழகானவை. அவற்றை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் மோனிக்கா.

தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழக் கிண்ணத்தை மோனிக்கா முன் நகர்த்திய நீனா, 'குரோமோசோம்களைப் பற்றிச் சொன்னீர்கள்' என விட்ட இடத்தை நினைவுபடுத்தினாள்.

'பெண்ணின் கருப்பையில் உருவாகும் முட்டையிலுள்ள குரோமோசோம்களால் ஆண் பெண் பால் வேறுபாட்டைத் தீர்மானிக்க முடியாது'

'ஆணின் விந்திலே இரு வகைகளுண்டு. ஒரு வகை விந்திலே ஆண் குழந்தையை உருவாக்கும் குரோமோசோமும் மற்ற வகை விந்திலே பெண் குழந்தையை உருவாக்கும் குரோமோசோமும் இருக்கும்'.

அப்போ, ஆணிலிருந்து வெளியேறும் விந்தில் 'ஆண் விந்து'  'பெண் விந்து' என இரு வகையான விந்துகள் இருக்குமா? என மெதுவாகக் கேட்டாள். மற்றவர்கள் காதில் இந்தச் சம்பாஷனை விழக்கூடாதென்ற அவதானம் நீனாவுக்கு.

ஆம். சாமானியர்களும் விளங்கிக் கொள்ளும் வகையில், இவற்றை ஆண் குழந்தைகளை உருவாக்கும் விந்துகள், பெண் குழந்தைகளை உருவாக்கும் விந்துகள் என அழைக்கலாம்.

விஷயத்தைச் சட்டென விளங்கிக் கொண்ட நீனா, மோனிக்காவின் மேலதிக விளக்கத்துக்குக் காத்திராமல் தொடர்ந்தாள்.

'பெண்ணின் முட்டையுடன் ஆண் விந்து கருக்கட்டினால் ஆண் குழந்தையும் பெண் விந்து கருக்கட்டினால் பெண் குழந்தையும் உருவாகும். அப்படித்தானே? எனச் சொல்லி மோனிக்கா சொல்ல வந்த விஷயத்தை இலகுவாக்கினாள். 

அதேதான். இப்பொழுது சொல்லு. பெண்குழந்தை உருவானதற்குக் காரணம் நீயா? அல்லது யூசுப்பா? எனக்கேட்டு உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் மோனிக்கா.

இந்த அறிவியல் விளக்கத்தை யூசுப்பின் மற்றைய மனைவிகளுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. மோனிக்காவின் அறிவியல் விளக்கம் தங்கள் கலாசார நம்பிக்கைக்கு எதிரானது என அவர்கள் சண்டைக்கு வருவார்கள். ஆணாதிக்க சிந்தனை கொண்ட யூசுப் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நிலமையை எப்படிச் சமாளிக்கலாம் என நீனா பல வழிகளிலும் சிந்தித்தாள். யூசுப்பின் அனுமதியின்றி மருத்துவர்களிடம் போக முடியாது என்பதும் அவளுக்குத் தெரியும். இதனால், மருத்துவப் புத்தகங்களை தேடித்தேடி வாசித்தாள். மருந்து மூலிகைகளை யூசுப்பின் உணவில் சேர்த்தாள்.

இருந்தாலும் அடுத்தமுறையும் அவளுக்குப் பெண் குழந்தையே பிறந்தது. இது யூசுப்பின் பதினைந்தாவது பெண்குழந்தை...!

அலி, யூசுப்பை பெட்டையன், பேமானி, கையாலாகாதவன் என ஊரெல்லாம் சொல்லிச் சிரித்தான். ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போல, ஆண் குழந்தை பெற இன்னொரு பெண்ணைத் தேடினான் யூசுப்.

காலவெள்ளம் அடக்குமுறை, அவமானம், கொடுமை என எல்லாவற்ரையும் கடந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

நீனா மீண்டும் கருத்தரித்தாள்!

கடந்த வருட நோன்பு மாதத்திலிருந்து சரியாக எண்ணிப் பத்தாவது மாத ஆரம்பத்தில், நீனா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

இப்பொழுது அவள் அந்தக் குடும்பத்தின் இராஜகுமாரி, எல்லோராலும் ஆராதிக்கப்படுபவள்.

யூசுப் ஆனந்தக் கூத்தாடினான். வழமைக்கு மாறாக அலியும் அவனுடன் சேர்ந்து ஆடினான்.

ஆண்குழந்தை பிறந்ததில் அனைவருக்கும் சந்தோஷம். நீனாவைத் தவிர. அதற்கான காரணம், நீனாவுக்கும் அலிக்கும் மட்டும் தெரியும்! 

(காலச்சுவடு. பிப்ரவரி, 2019)

 

No comments:

Post a Comment

.