வெள்ளிக்கிழமை விரதம்
ஆசி கந்தராஜா
பிறந்த மண்ணைவிட்டு புதிய வாழ்க்கை ஒன்று தேடும்
நீண்ட பயணத்திலே, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற மண்ணின் பெருமைகளையும் மரபுகளையும் தொலைத்து
விட்டேன் என்கிற வருத்தம் அவருக்கு சடுதியாக இந்த இருண்ட கண்டத்தில் தோன்றுவதற்கு
காரணம் என்ன?
ஆபிரிக்க பல்கலைக்கழகமொன்றில் சிறப்பு விரிவுரை நிகழ்த்தவென வீரசிங்கம் வந்திருக்கிறார். அவரின் விரிவுரைகள் சாரமுள்ளதாகவும் சுவராஸ்யமானதாகவும் அமையும். அதற்காக அவர் கடுமையாகவும் உழைப்பார். ஆனால் வெள்ளிக் கிழமைகளிலே நடைபெறும் விரிவுரைகளை வெறும் நாற்காலிகளுக்கு ஆற்றும் அவலம். பெண்கள் வரமாட்டார்கள். ஆண்களிலும் நூறு சதவீதம் எதிர்பார்க்க இயலாது. அவரின் விரிவுரைகள் மாணவரைக் கவரவில்லையா? இந்த எண்ணம் அவரை வருத்தியது. அவரின் மனக்குறையை மொறிஸிடம் கொட்டித் தீர்க்கத் துணிந்தார்.
பல்கலைக் கழக
நிர்வாகத்தினால், அருகில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலே அவர் தங்குவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் ‘Room boy’யாகப் பணியாற்றுகிறான் மொறிஸ். அத்துடன் அவன் பல்கலைக் கழகத்திலும் சமூகவியல்
படிக்கிறான். மொறிஸூடன் உரையாடுவது சுவையானது. சமூகப் பிரக்ஞை உள்ள ஆபிரிக்க
இளைஞன். இவற்றுக்கு மேலாக சுறுசுறுப்பான உழைப்பாளி. நாலு மணித்தியால வேலையை இரண்டே
மணித்தியாலத்தில் முடித்து விடுவான். செய்யும் தொழிலில் ஒரு நேர்த்தியும் நிறைவும்
இருக்கும். வேலை முடிந்த மிகுதி நேரங்களில் வீரசிங்கத்தின் அறைக்கு வந்து பேசிக்
கொண்டிருப்பான். மாலை நேரத்தில் தனிமையில் இருக்கும் வீரசிங்கத்துக்கு அவன்
நல்லதொரு பேச்சுத் துணை. என்னதான் சிநேகிதமாகப் பேசினாலும், பண விசயத்தில் மொறிஸ் கறார் பேர்வழி. ஒற்றிக்கு இரட்டியாக கறந்து விடுவான்.
உடைகளின் சலவைக்கு, சப்பாத்து மினுக்குதல் போன்ற சேவைகளுக்கு ஹோட்டலில் தனிக் கட்டணம் உண்டு.
மொறிஸ் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரியாமல் இரகசியமாக அவற்றைச் செய்து பணம்
சம்பாதித்துக் கொள்வான். அவனுடைய மனிதநேயப் பேச்சுக்களுக்கு முரண்பட்டதாக இருந்தது
அவன் பணம் சம்பாதிப்பதில் காட்டிய தீவிரம். இந்த முரண்பாடு சம்பந்தமாகவும்
வீரசிங்கம் சிந்தித்ததுண்டு. விசாரணையில் இறங்கவில்லை.
‘மாலைநேர வகுப்புக்களுக்கு வரவு குறைவாக
இருக்கிறதே? குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை நேர வகுப்புக்களுக்கு, பெண்கள் வருவதில்லை. இது ஏன்…? என் விரிவுரைகளில் ஏதாவது
குறைபாடு உண்டா?’ என தன் மனக்குடைச்சலை அவனிடம் கொட்டினார் வீரசிங்கம்.
அவன்
புன்னகைத்தான். அவர் பதிலை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு ‘உங்கள்
விரிவுரைகளுக்கு மாணவர் மத்தியிலே நல்ல வரவேற்பு உண்டு, என்பதை நான் அறிவேன். வெள்ளிக்கிழமை மாலை வகுப்புக்களுக்கு பெண்கள் வராமல்
இருப்பதற்கும் உங்கள் விரிவுரையின் தரத்திற்கும் எவ்வித
சம்மந்தமும் இல்லை…’ என்று கூறி மீண்டும் புன்னகைத்தான். அவனுடைய புன்னகையின்
அர்த்தத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்று
சனிக்கிழமை. வீரசிங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க சபாரி (Safari) பார்க்கப் போக மொறிஸ் ஒழுங்குகள் செய்திருந்தான். பல சதுர மைல்கள்
விஸ்தீரணமுள்ள பென்னாம் பெரிய நிலப்பரப்பில், ஆபிரிக்க மிருகங்களை அங்கு
சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார்கள். அவற்றிற்கு ஏற்ப அடர்ந்து வளர்ந்த புற்களும்
உண்டு, பற்றைக்காடுகளும் உண்டு. Four-wheeler வாகனங்கள் ஓடக்கூடியதான மண்
சாலைகளை அமைத்து நகர நாகரீகம் பேணுவது போல அங்கங்கே வழிகாட்டிக் குறிப்புகளும்
வைத்திருந்தார்கள். சபாரிக்கு (Safari), மொறிஸ் குளோறியாவை அழைத்து
வந்திருந்தான். அவளை ஹோட்டல் ‘Bar’இல் ஏற்கனவே பல தடவைகள் வீரசிங்கம்
சந்தித்திருக்கிறார். ‘கறுப்பும் அழகிய நிறமே’ என்கிற பிம்பத்தினை அவரின் மனதில்
முதல் பதித்தவள் அவள்.
‘இவள் என் காதலி’ என்று குளோறியாவை மொறிஸ்
அறிமுகப்படுத்துவான் என்பது, அவர் சற்றும் எதிர் பார்க்காதது. இதற்கு காரணம்
உண்டு. வீரசிங்கம் அவளைச் சந்தித்தபொழுதெல்லாம் அவள் வேறு வேறு ஆண்களுடன்
உல்லாசமாகக் காணப்பட்டாள். கூச்சமின்றி அவர்களை முத்தமிட்டு அணைத்து திரிந்தாள்.
இந்த அபூர்வ ஆபிரிக்க அழகியின் அழகு மலிவாகக் கரைந்து கொண்டிருக்கிறதே என
வீரசிங்கம் பலமுறை ஆதங்கப் பட்டதுண்டு.
இன்று, அவளை இன்னொரு ஒளியிலே பார்த்தார். மொறிஸூக்காக எதையும் செய்யத் துடிக்கும்
காதலியாக இருந்தாள். மிகப் பண்புடனும் புத்தி சாதுர்யத்துடனும் உரையாடினாள்.
சபாரியில் தென்பட்ட பல்வேறு ஆபிரிக்க மிருகங்களைப் பற்றி ரஸனையுடன் விளக்கிக்
கொண்டு வந்தவள், சோடிசோடியாக அங்கு ‘காதல் லீலை’ புரிந்த காண்டா மிருகங்களை சுட்டிக்காட்டி
‘இவைகள் எமது இனத்தின் காதல் தெய்வங்கள். இவற்றின் கொம்பிலிருந்துதான் ஆண்களுக்கு
வீரியம் கொடுக்கும் மருந்து வகைகளை தயாரித்துக் கொள்ளுகிறார்கள்’ என்று கூறியவள், மொறிஸை குறும்பு ததும்ப முழுமையாகப் பார்த்து கண்களைச் சிமிட்டினாள்.
அடுத்த நாள்
மொறிஸூடன் கிராமப்புறங்களுக்கு சென்ற பொழுதான் குளோறியா சொன்ன காண்டா மிருகக்
கொம்பின் தார்ப்பரியம் விளங்கியது. மொறிஸ் அறிமுகம் செய்த குடும்பத் தலைவர் அங்கு
சகல சௌகரியங்களும் நிறைந்த நடுக்குடிலில் இருந்தார். அவரது குடிலைச் சுற்றி
புல்லால் வேய்ந்த பல்வேறு சிறுகுடில்கள். ஒவ்வொரு குடிலிலும் தலைவர் தன்னுடைய
ஒவ்வொரு மனைவியைக் குடியமர்த்தியிருந்தார். அவர் வேலைக்குப் போவதில்லை. அவருடைய
முழுநேரப் பணியும் மன்மதக் கலையே. மனைவியர் கடினமாக உழைத்து அவரை பூஜித்து
வாழ்வதிலே இன்பம் அனுபவிக்கிறார்கள். தலைவரின் குடிலுக்குள் ஆங்காங்கே சின்னதும்
பெரியதுமாக காண்டாமிருகக் கொம்புகள் தொங்கின. அந்தக் கொம்புகள்தான் அனைத்து
மனைவியரையும் பேசாமடந்தையராக ஆட்டிப்படைக்கின்றன போலும் என வீரசிங்கம் எண்ணிக்
கொண்டார். விருந்தினராகப் போன வீரசிங்கம் ஏதாவது பேச வேண்டுமென்பதற்காக ‘இது
சரியான ஆண் ஆதிக்க மாயிற்றே…? உழைத்து பெண்ணைப் பராமரித்தல் ஆணின் கடமை
என்பதுதான் பொதுவான நடைமுறை. சமூகவியல் படிக்கும் நீ, இந்த சமூக அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டாமா?’ என்றார் மொறிஸிடம்.
‘இங்கு நடப்பதும் தப்பு, நீங்கள் சொல்லும் ஆண்கள் உழைத்து பெண்களுக்கு உணவும் உடையும் அளிக்கும்
முறையும் தப்பு. ஆணும் பெண்ணும் சரிசமமாக உழைத்து வாழும் காலம் ஆபிரிக்காவில்
மலரவேண்டும். இனம்-குலம்-தலைவன் என்கிற வட்டத்துக்குள் வாழும் இவர்களுடைய
கட்டுப்பாட்டை உடைப்பது கடினமானது. இருப்பினும் அது உடைத்தெறியப்பட வேண்டுமென்பதே
எனது கொள்கை’ என்ற மொறிஸ், தலைவனின் குடிலுக்குள் சென்ற இளம்பெண்ணைச் சுட்டிக்காட்டி ‘இது இவரது புது
மனைவி. இன்று இவளுக்கு முறை. இதேவயதில் இவருடைய மூத்த மனைவியருக்கு பிறந்த பல
மகள்கள் இருக்கிறார்கள். இங்குள்ள மனைவியர் அனைவருமே மணப்பெண் கூலிகொடுத்து
வாங்கப்பட்டவர்கள்’ என்றான்.
‘மணப்பெண் கூலியா…?’
‘ஆமாம். பெண்ணைப் பெற்றவன், அவளுக்கு உடை உணவு முதலியன அளித்து இதுவரை அவளை வளர்த்து வந்துள்ளான்.
இப்பொழுது அவள் பயனுள்ள பெண்ணாக வளர்ந்து இன்னொரு ஆணுக்கு உழைக்கப் போகிறாள். எனவே
மணமகள் கூலிஎன்பது ஒரு நஷ்ட ஈடு போல’ என விளக்கினான் மொறிஸ்.
‘இந்திய சமூகத்தில் அப்படி அல்ல. பெண்ணின்
தகப்பன் பெண்ணை ஏற்றுக்கொள்ளும் மாப்பிளைக்கு சீர்வரிசை கொடுப்பார்…’
‘இந்தியர்களுடைய திருமணச்
சடங்குகளை நான் நன்கு அறிவேன். நான் கூட சிலவேளைகளில் இந்தியனாக
பிறந்திருக்கக்கூடாதா என்று யோசிப்பதுண்டு’ என்றான் மொறிஸ் சிரித்துக் கொண்டு.
ஏன்…? உன் குளோறியாவின் அப்பன் உன்னிடம் அவளுக்கு அதிக விலை கேட்கிறானா? என்று கேட்டு, வீரசிங்கமும் சிரிப்பிலே கலந்து கொண்டார்.
‘அதை ஏன் கேட்கிறீர்கள். பணத்தாசை பிடித்த
கிழவன். அவனுக்கு பத்து மகள்கள். அவர்கள் மூலம் தனக்கு எவ்வளவு தொகை வருமென்று, கணக்கும் வைத்திருக்கிறான். நான் ஓடிஓடி காசு சேர்ப்பது எதற்காக என்று
நினைக்கிறீர்கள்?’ என மொறிஸ் பதிலளித்தான். அவன் அதை சொன்னவிதம் மிகவும் பரிதாபமாக இருந்தது.
இனிமேல் அவன் செய்யும் வேலைகளுக்கு கொஞ்சம் தாராளமாகவே ‘டிப்ஸ்’ கொடுக்க
வேண்டுமென்று வீரசிங்கம் நினைத்துக்கொண்டார்.
சபாரிக்கு
சென்றதிலிருந்து குளோறியா வீரசிங்கத்துடன் கலகலப்பாகப் பழகத் துவங்கினாள். Barஇல் கூட்டம் குறையும் போதெல்லாம் அவருடன் நெடுநேரம் பேசுவாள். அப்பொழுதெல்லாம்
ஆபிரிக்க கறுப்பினத்தவர்களது சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவளின் விமர்சனங்கள் அவரை
ஆச்சரியத்துள் ஆழ்த்துவதுண்டு. ஆனால் அவள் பணக்கார கறுப்பர்களை விலை மாதின்
சாகசத்துடன் வீழ்த்தி, அவர்களிடம் பணம் கறப்பது வீரசிங்கத்துக்கு அறவே பிடிக்கவில்லை. இத்தகைய ஒரு
‘இளகிய மனசு’ப் பெண்ணுக்காக மொறிஸ் பைத்தியக்காரன் போல ஓடிஓடிப் பணம் சேர்ப்பதை
நினைத்த பொழுது அவரின் மனசு கனத்தது.
அன்று
முழுவதும் அடை மழை. Barஇல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹோட்டலில் தங்கி யிருந்த நாலைந்து ஆண்கள்
மட்டுமே பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். Barஇல் அதிக வேலையும்
இருக்கவில்லை. குளோறியா பியரையும் எடுத்துக்கொண்டு வீரசிங்கத்தின் முன்
வந்தமர்ந்தாள்.
வீரசிங்கம்
மெல்ல கதையை துவக்கினார்.
‘குளோறியா, மொறிஸ் உன்னை மனசாரக்
காதலிக்கிறான். உன்னை அடைவதற்காக அவன் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறான்
தெரியுமா? அவனுக்கு துரோகம் செய்வதுபோல நீ நடந்து கொள்வது முறையா?’
அவள் சிறிது
நேரம் மௌனமாக இருந்தாள். தேவையில்லாமல் அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை
நுழைக்கிறேனோ என்கிற குற்ற உணர்வு அவருக்கு இலேசாகத் தலை தூக்கியது.
‘மொறிஸ் தனது பகுதிநேர சம்பாத்தியத்திலும், உங்களைப் போன்றோரின் சப்பாத்துகள் மினுக்குவதன் மூலமும் எவ்வளவு பணம்
சம்பாதிக்க முடியுமென்று நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டு குளோறியா அவரை
உற்றுப் பார்த்தாள்.
வீரசிங்கம்
எதுவும் பேசவில்லை.
தன் முன்னால்
இருந்த பியரில் இரண்டு மிடறு குடித்துவிட்டு அவள் தொடர்ந்தாள்.
‘என் அப்பன், மொறிஸிடம் அநியாயமாக பணம்
கேட்கிறான். ‘நீ இவ்வளவு பணம் கேட்பது சரியில்லை’ என்று என் அப்பனிடம் சண்டை
போடமுடியுமா? இது எங்கள் சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாதது. என் அப்பன் கேட்கும்
பணத்தினை மொறிஸால் இந்த ஜென்மத்தில் சேர்த்துவிட முடியாதென்று எனக்கும் தெரியும், மொறிஸூக்கும் தெரியும். நான் மொறிஸை மனதாரக் காதலிக்கிறேன். காசுகுடுத்து
என்னை வாங்கக் கூடிய பணக்கார கிழவனுக்கு பத்தோடு பதினொன்றாக வாழ நான்
விரும்பவில்லை. எங்கள் காதல் ஜெயிக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக
என் உடலையும் விற்க நேரிடுகிறது. ஆனால் உடலுடன் சேர்ந்து என் மனசை யாருக்கும்
விற்றுவிடமாட்டேன்…’
குடித்துமுடித்த
பியர் கிளாஸை பாரிலே கொண்டு போய் வைத்தபின் குளோறியா மீண்டும் வீரசிங்கத்தின் முன்
வந்தமர்ந்து கொண்டாள்.
‘Sir…, நீங்கள் வாழும் சமூகத்தின்
விழுமியங்கள் வேறு, இங்குள்ள யதார்த்த நிலைகள் வேறு. தான் விரும்பும் காதலனை அடைவதற்காக, பல இளம்பெண்கள் என்னைப் போல, வார இறுதியில் உடலைக் கொடுத்துப் பணம்
சம்பாதிப்பது இங்கு சர்வசாதாரணம். இதனை நாம் நியாயப் படுத்த வரவில்லை. காதலையும்
காதலனையும் இழப்பதிலும் பார்க்க இந்த ஏற்பாடு இன்றைய தலைமுறையால் ஏற்றுக்
கொள்ளப்படுகிறது’.
மேற்கொண்டு
அவளால் பேசமுடியவில்லை. தலையைக் குனிந்து கொண்டு எழுந்து சென்றாள்.
அந்த சோக
சங்கடங்களில் இருந்து விடுபட, புத்தி பூர்வமாக ஏதாவது சிந்திக்கலாம் என
வீரசிங்கம் நினைத்தார்.
வெள்ளிக்
கிழமைகளிலே, அவருடைய விரிவுரைகளுக்கு மௌசு இல்லாமல் இருப்பதற்கான சூக்குமம் அப்போது
விளங்கியது. அத்துடன், உடலுறவுகளினாலே சோரம் போகாத, புனிதமான காதல் பற்றிய ‘புதிய வேதம்’ ஒன்று, ஆபிரிக்காவில் தோன்றுவதான நினைவும் குறுக்கிட்டது.
(தினக்குரல், 25 ஆகஸ்ட் 2002)
No comments:
Post a Comment