மறுக்கப்படும் வயசுகள்
ஆசி கந்தராஜா
வகுப்பில் கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது!
பன்னிரண்டை
மூன்று மூன்றாக எப்படி வகுக்கலாம், என்ற கணக்கைப் புதிய
முறையில் விளக்கிக் கொண்டிருந்தார் கணக்கு ரீச்சர் மிஸ்ஸிஸ் தொம்ஸன்.
நாலாம் வகுப்பு
படிக்கும் ராஜிக்குட்டியின் சிந்தனையோ கிங்ஸ்வூட் பார்க்கில் அமைக்கப்பட்டுக்
கொண்டிருந்த றாட்டணத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது.
ராஜி எப்போதும்
வகுப்பில் முன்வரிசையிலேயே அமர்ந்து கொள்வாள். அதுவும் அம்மாவின் கட்டளைப்படி.
எதிலும் எப்படியும் தன் மகள் முதலாவதாகத் திகழ வேண்டும் என்கிற தவிப்பு
அம்மாவுக்கு!
ராஜி படிப்பில்
கெட்டிக்காரிதான். பாடத்தின் நடுவே கேள்வி கேட்பது மிஸ்ஸிஸ் தொம்ஸனின் வழக்கமல்ல.
இதனால் தனது மனதைத் தன்னிச்சையாகக் கிங்ஸ்வூட் பார்க்கில் மேயவிட்டாள்.
சனிக்கிழமைகளில் நடக்கும் ரியூஷன் கிளாஸில் போன வருடமே சிக்கலான நெடும் பிரித்தல் கணக்குவரை ராஜி படித்திருந்தாள். ரியூஷன் என்றால் அது ராஜிக் குட்டிக்கு மட்டும் தனியாக நடக்கும் வகுப்பல்ல. இதுவும் பள்ளிக்கூட வகுப்பு போன்றதுதான். பத்துப் பதினைந்து பேர் வரை வகுப்பில் இருப்பார்கள். பாதிக்கு மேல் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த ஆசிய நாட்டவர்கள். தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அங்கு குறைவில்லை.
ரியூஷன்
மாஸ்ரரை விட மிஸ்ஸிஸ் தொம்ஸன் நன்றாகப் படிப்பிப்பார் என்பது ராஜிக்குட்டியின்
அபிப்பிராயம். ரியூஷனுக்குப் போய்த்தான் பக்கத்து வீட்டு வாணி ஆறாம் வகுப்பில்
சிலெக்ரிவ் (Selective) ஸ்கூலுக்கு எடுபட்டிருந்தாள். இதனால் ராஜிக்குட்டியையும் அதே ரியூஷன்
வகுப்புக்கு அம்மா அனுப்புகிறாள். பல ‘ராஜிக்களையும் ராஜன்களையும்’ அவ்வாறு
அம்மாக்கள் ஆரம்ப வகுப்பிலேயே ரியூஷனுக்கு அனுப்பும் சூக்குமமும் இதுவே.
மிஸ்ஸிஸ்
தொம்ஸன் பிரித்தல் கணக்கை விளக்கி முடித்ததும் சென்ற வாரம் வகுப்பில் நடந்த
பரீட்சை பெறுபேறுகளைப் பிள்ளைகளிடம் கொடுத்தார். இந்த முறை பக்கத்துக்குத்
தெருவில் வசிக்கும் சுனிதா ராஜியை விட இரண்டு மாக்ஸ் அதிகமெடுத்துவிட்டாள்.
ராஜியின் அம்மா
பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்கு ஒழுங்காகப் போய் வருபவர். மாத இறுதியில் அந்த
மாதம் படிப்பித்த பாடத்தில் வகுப்பு பரீட்சை நடக்குமென்பதும் இறுதி வெள்ளிக்கிழமை
மிஸ்ஸிஸ் தொம்ஸன் அதற்குரிய மாக்ஸை கொடுப்பார் என்பதும் அம்மாவுக்கு நன்றாகவே
தெரியும்.
இன்று ராஜி
வீட்டிற்குச் சென்றதும்,
‘எத்தனை மாக்ஸ் எடுத்தாய்?’ என்றுதான் அம்மா முதலில் மாக்ஸ் பற்றிய விசாரணைகள் ஆரம்பிப்பார். வகுப்பில்
உள்ள தமிழ்ப் பிள்ளைகளின் மாக்ஸ் பற்றிய விசாரணை தொடரும். ராஜி எப்போதும்
மற்றவர்களைவிட – குறிப்பாகத் தமிழ்ப் பிள்ளைகளை விட – அதிக புள்ளிகள் எடுக்க
வேண்டும் என்பதே அம்மாவின் ஆசை. இந்த ‘எப்போதும்’ இடையிடையே ராஜிக்கு சங்கடத்தை
கொடுப்பதுண்டு.
படிப்பு
விஷயத்தில் ராஜியை அம்மா திட்டுவதும் பேசுவதும் புதுசல்ல. ஆனால் நாளை கிங்ஸ்வூட்
மைதானத்தில் காணிவெல் துவங்கும் நேரத்தில் சுனிதா இரண்டு மாக்ஸ் அதிகமெடுத்ததுதான்
ராஜிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த இரண்டு மாக்ஸிற்காக மேலும் பல
மணித்தியாலங்கள் புத்தகங்களைக் கட்டிஅழ வேண்டும் என்பது ராஜிக்கு தெரியும்.
தான் விரும்பிய
இடத்துக்கு அம்மாவோ அப்பாவோ அழைத்துச் செல்வதில்லை, என்ற பெரும் குறை
ராஜிக்குட்டிக்கு. வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் எவலின் திங்கட்கிழமை பள்ளிக்கு
வரும் போதெல்லாம் வார இறுதி நாட்களைத் தமது குடும்பம் எவ்வாறு கழித்ததென்பதைக் கதை
கதையாய் சொல்வாள். அப்பாவுடன் Bush walk போனதாகவும், பீச்சுக்கோ, காம்பிங்கிக்கோ, அல்லது களியாட்ட விழாவிற்கோ குடும்பத்துடன் சென்றதாகவும் வாராவாரம் பெருமை
பேசுவாள். இவைகளை ஒரு முறையேனும் செய்யவேண்டுமென்ற பெரும் ஆசை ராஜிக் குட்டிக்கு.
அவுஸ்திரேலிய
அரசு பல இன பல்கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ்வப்போது களியாட்ட
விழாக்களை நடாத்துவதுண்டு. அத்தகையதொரு காணிவேல் இவ்வார இறுதியில் கிங்ஸ்வூட்
பார்க்கில் சிறந்த முறையில் நடைபெறவிருப்பதாக சமூகக் கல்வி படிப்பிக்கும் ரீச்சர்
வகுப்பில் கூறியிருந்தார்.
கிங்ஸ்வூட்பார்க்
ராஜியின் வீட்டிற்கு அருகிலேதான் இருக்கிறது. வெள்ளி காலை ராஜி முகம் கழுவும் போது
மெரிகோரவுண்டும், ராட்டிணங்களும் அமைக்கும் பணிகள், பாத்றூம் யன்னலூடாக நன்கு
தெரிந்தது. குதிரைகளும் குட்டையான கோவேறு கழுதைகளும் குழந்தைகளின் சவாரிக்கென
பார்க்கின் வடக்கு மூலையிலுள்ள ஊசியிலை மரங்களில் கட்டப்பட்டிருந்தன.
நாளைக் காலை
தந்தையும், மறுநாள் ஞாயிறு தாயும் தன்னையும் தனது தம்பியையும் காணிவேலுக்கு அழைத்துச்
செல்வார்கள் என மத்தியான இடைவெளியின் போது எவலின் தம்பட்ட மடித்துக் கொண்டாள்.
ராஜியை காணிவேலுக்கு பெற்றோர் விடமாட்டார்கள் என்பது எவலினுக்கு நன்கு தெரியும்.
இருப்பினும், அவளை அடிக்கடி இவ்வாறு சீண்டிப் பார்ப்பதில் மகா சுகம் காண்பவள் எவலின்.
சமூகவியல்
பாடத்தில் மூன்று பிள்ளைகள் சேர்ந்து ‘புறெஜெக்ற்’ செய்ய வேண்டும். ராஜி, எவலின், கத்தரின் ஆகியோரின் குழுவுக்கு ‘பல்இனமக்களின் கலாசாரம்’ என்னும் தலைப்பு.
பொருத்தமான வர்ணப் படங்களை சஞ்சிகைகளில் சேகரித்துக் கொண்டார்கள். புறெஜெக்ற்
பற்றி கலந்துரையாடி, படங்களை அதற்குரிய மட்டையில் ஒட்டி அதன்கீழ் குறிப்பெழுதுவதற்காக, எவலினையும் கத்தரினையும் ராஜி தனது வீட்டிற்கு அழைத்திருந்தாள்.
வீட்டு
வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெற்றிக் கிண்ணங்களைக் கண்ட எவலினால்
ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.
‘நீ பெரிய விளையாட்டு வீராங்கனை என்பது
எங்களுக்கு தெரியாதே…, ஏன் நீ பாடசாலைப் போட்டிகளில் பங்கு பற்றுவதில்லை?’ எனக் கேட்டாள் எவலின்.
பாடசாலையில்
நடைபெறம் பேச்சுப் போட்டி உட்பட பல போட்டிகளிலும், வெற்றி பெறுபவர்களுக்கு
சிறிய Badge அன்றேல் Flag ஒன்றே கொடுப்பது வழக்கம். வெற்றிக் கிண்ணம் என்பது பெரிய விஷயம்.
‘இதெல்லாம் நான் தமிழ்ப் போட்டிகளில் எடுத்த
கிண்ணங்கள். நீங்கள் வரும்போதுகூட போட்டியொன்றுக்குப் ‘பேச்சு’ பாடமாக்கிக்
கொண்டிருந்தேன்’ என்றாள் ராஜி.
பேச்சுப்
போட்டிக்கே வெற்றிக் கிண்ணம் கொடுப்பதை முதல்முறையாகக் கேள்விப்பட்ட கத்தரின்
‘இம்முறை எதைப்பற்றி பேசுகிறாய்?’ எனக் கேட்டாள்.
‘சங்ககாலத் தமிழின் சிறப்பு’ என்று தமிழில்
தலைப்பைக் கூறிய ராஜி, ‘இதன் அர்த்தம் எனக்கு புரியாது. இருப்பினும் பேச்சு முழுவதையும் மனனம் செய்து
விட்டேன்’ என்றாள். இதைச் சொல்லும்போது ராஜியால் சிரிப்பினை அடக்க முடியவில்லை.
வெற்றிக்
கிண்ணமொன்றை எடுத்துப் பார்த்தாள் எவலின். மனனப் போட்டியொன்றில் ராஜி மூன்றாமிடம்
பெற்றதாக அக்கிண்ணத்தின் அடியில் பொறிக்கப்பட்டிருந்தது.
‘என்ன ராஜி…? மூன்றாமிடத்துக்கும்
கிண்ணம் கொடுக்கிறார்களா?’ என நக்கல் கலந்த குரலில் கேட்டாள் எவலின்.
‘மூன்றாவதென்ன…? சில சமயங்களில் இங்கு
தமிழ்ப் போட்டிகளிலே பங்குபற்றும் அனைவருக்குமே வெற்றிக் கிண்ணங்கள்
கொடுப்பார்கள்!’ என்றாள் ராஜி சிரித்துக் கொண்டே.
‘இதுவும் பல் கலாசாரத்தின் ஒரு அங்கம் தானே? கொஞ்சம் விபரமாகக் கூறு. எமது புறெஜெக்ரில் இது பற்றியும் குறிப்பிடலாம்’ என, சற்றே சீரியஸாகச் சொன்னாள் கத்தரின்.
‘இல்லை இல்லலை. இப்படி எங்கள் நாட்டில்
நடப்பத்தில்லை. இங்கு கிண்ணங்கள் மலிவாக கிடைப்பதால் கண்டபடி கொடுக்கிறார்கள்’
எனத் தமிழ்க் கலாசாரத்தை காப்பாற்ற முயன்றாள் ராஜி.
புறெஜெக்ற்
முடிந்து வீடு செல்லுமுன் நாளை நடைபெறவிருக்கும் ‘பல்இன’ காணிவேலை நினைவூட்டினாள்
எவலின்.
‘நாளைக்காலை எட்டு மணிக்கு இங்கு வருகிறோம்.
அம்மாவிடம் மறக்காது அனுமதி வாங்கிவிடு’ எனக் கேட்டுக் கொண்டாள் கத்தரின்.
அவர்கள்
சென்றதும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தான் வழமையாகச் செய்யும் சங்கதிகளை ராஜி
எண்ணிப் பார்த்தாள்.
கணித ரியூஷன்
சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கு ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆங்கில
வகுப்பு பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். மத்தியானம் வீட்டிற்கு வந்து
சாப்பிட்டபின் இரண்டு மணிக்கு தமிழ்ப் பள்ளிக்கூடம். இரவு சாயி பஜனை. ஞாயிறு காலை
பரத நாட்டிய வகுப்பு. பின்னேரம் சமய வகுப்பும் Speech and Drama கிளாசும். அத்துடன் அடுத்த வாரம் நடைபெறும் தமிழ்ப் போட்டியிலும் கலந்து
கொண்டு வெற்றி பெறவேண்டும். போட்டிகளில் பரிசு பெறும் போதெல்லாம் ‘என்ரை பிள்ளை
கெட்டிக்காரி’ என்பார் அம்மா. இல்லையேல் தொடர்ந்து சில நாட்கள் எதற்கெடுத்தாலும்
சீறிச் சினப்பார். மொத்தத்தில் அம்மாவின் இந்த குணவேறுபாடுகளை ராஜிக்குட்டியால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை.
நாளை
எப்படியும் கிங்ஸ்வூட் காணிவேலுக்குச் செல்ல வேண்டுமென்று ராசி தீர்மானித்து
விட்டாள்.
சிநேகிதிகள்
கேட்டுக் கொண்டபடி காலையில் செல்வதனால் எட்டரை மணி ரியூஸன் வகுப்பை ‘கட்’ பண்ண
வேண்டும். அது கஷ்டம். அம்மாவே காரில் கொண்டுபோய் கொண்டுவரும் கிளாஸது. பின்னேரம்
தமிழ்வகுப்பு. காச்சல் என்று கள்ள மடித்தால் ராஜி வீட்டில் நிற்கலாம்.
சனிக்கிழமைகளில் மாத்திரம் நடைபெறும் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு அம்மா இரண்டு
மணிக்குப் போய் விடுவார். அவர் அங்கு தொண்டர் ஆசிரியை.
வளவின் பின்புற
வேலியருகேயுள்ள வாழை மரத்துக்கும் கறிவேப்பிலைச் செடிக்கும் இடையேயுள்ள தகரப்படலலையைக்
கடந்தால் மறுபுறம் கிங்ஸ்வூட் பார்க் ஆரம்பிக்கிறது. இரண்டு மணிபோல், மெல்ல படலையூடாகச் சென்றால், தமிழ் பள்ளி நடக்கும் மூன்று மணித்தியாலங்களும்
அங்கு ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம். எவலினும் கத்தரினும் நிச்சம் நாள் முழுதும்
அங்கே நிற்பார்கள் என்பது ராஜிக்கு நன்கு தெரியும். டனியேலாவும் மூன்று மணிக்கு
வருவதாகக் கூறியிருந்தாள்.
ராஜி தனது
உண்டியலைத் திறந்து பார்த்தாள். சிறிது சிறிதாகச் சேர்த்த பணம் கணிசமானளவு
இருந்தது. ‘இது போதும் நாளைய செலவுக்கு, கள்ளக்காச்சலை எப்படி
வரவழைப்பது..?’
அம்மாவுடன்
அவள் பார்த்த தமிழ்பட மொன்று சட்டென்று ஞாபகத்தில் வந்தது. கக்கத்தில் வெங்காயத்தை
வைத்து இரவு முழுவதும் படுத்தால் காலையில் காச்சல் வருமென்ற ‘ரெக்னிக்’ படத்தில்
சொல்லப்பட்டிருந்தது.
வீட்டிலுள்ள
பெரிய வெங்காயத்தை கக்கத்துள் வைப்பது கடினம். பக்கத்து வீட்டில் வசிக்கும்
மட்டக்களப்புப் பாட்டி ஒருவர், தமிழ்க்கடையில் சின்னவெங்காயம் வாங்குவது
ராஜிக்கு தெரியம். அம்மா வாங்கிவரச் சொன்னதாகத்தான் பாட்டியிடம் வெங்காயத்தை வாங்க
வேண்டும். பாட்டிக்கு மறதிக் குணமதிகம். இதனால் ராஜி வெங்காயம் வாங்கிய சங்கதி
அம்மாவுக்கு தெரியப் பேவதில்லை.
வெள்ளி மாலையில்
ராஜிக்குட்டியின் குடும்பம் தவறாது கோவிலுக்குப் போகும். கோவிலால் வந்தவுடன்
சந்தனம் திருநீறு சகிதம் பாட்டியிடம் சென்றாள் ராஜி. பேச்சோடு பேச்சாக ஐந்தாறு
சின்னவெங்காயத்தை அவரிடம் வாங்கி வந்து, தனது மேஜை லாக்கிக்குள்
பத்திரப்படுத்திக் கொண்டாள்.
இரவு ஒன்பதுமணியளவில்
ராஜி, கண் எரிவையும் பார்க்காது சின்ன வெங்காயத்தின் காய்ந்த தோல்களை கவனமாக உரித்து, கக்கத்துள் வைத்த பின்னர் போர்வையால் முழு உடலையும் மூடியவாறு படுத்துக்
கொண்டாள்.
மறுநாள் பொழுது
விடிந்தது!
‘ரியூஷனுக்கு போற நோக்கமில்லையோ?’ என்ற அம்மாவின் குரல்கேட்டே ராஜி கண் விழித்தாள்.
கக்கத்தில்
வைத்த வெங்காயங்கள் படுக்கை எங்கும் பரவிக்கிடந்தன. நெற்றியல் கை வைத்துப்
பார்த்தாள்.
வெங்காயம் அவளை
ஏமாற்றிவிட்டது!
வீட்டிலுள்ளவர்கள்
தொடக்கம் வெங்காயம் வரை தனது ஆசைகளுக்கு எதிராகச் சதிசெய்வதான உணர்வுடன்
ராஜிக்குட்டி எழுந்தாள்.
பார்க்கில்
காணிவேல் ஆரம்பித்தின் அறிகுறியாக கடகடவென்ற ராட்டணச் சத்தமும், ‘பாண்ட்’ வாத்திய இசையும் ஒலித்தன. ராஜியால் மேலும் பொறுக்க முடியவில்லை.
அம்மாவை ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போம் என தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.
சமையலறையில்
அலுவலாக நின்றார் அம்மா. மனநிலையை நாடிபிடித்துப்பார்க்கும் வகையில், ‘தம்பியை எழுப்பி முகம் கழுவிவிடவா அம்மா?’ எனக் கேட்டாள் ராஜி.
‘அவன் இப்ப எழும்பினால் குழப்படி பண்ணுவான். நீ
சாப்பிட்டு கோப்பியைக் குடிச்சிட்டு ரியூஷனுக்கு வெளிக்கிடு. உன்னை கிளாசில
விட்டிட்டுத்தான் பிளமிங்டன் மார்க்கற்றுக்குச் சாமான் வாங்கப் போகவேணும்’ என்றார்
அம்மா, வழக்கத்துக்கு மாறான அமைதியுடன்.
அம்மா நல்ல
மூடில் இருப்பதுபோல் தோன்றியது ராஜிக்கு.
‘இண்டைக்கு கத்தரினும் எவலினும் கிங்ஸ்வூட்
பார்க் காணிவேலுக்கு போகினம். என்னையும் கட்டாயம் வரச்சொன்னவை. போகட்டேயம்மா?’ ஒருவித குழைவுடனும் எதிர்பார்ப்புடனும் கேட்டாள் ராஜி.
நெருப்பை
மிதித்தவர் போல் துள்ளி எழுந்தார் அம்மா.
‘ரியூஷன் கிளாசும், தமிழ் பள்ளிக்கூடமும்
இண்டைக் கிருக்கெண்டு தெரியாதோ? அதோடை பின்னேரம் கலைவிழா ‘நாடக றிகேஸலும்’
இருக்கு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை அதிலை முக்கிய பாத்திரத்திலை போடுவிச்சனான்.
உனக்கு விளையாட்டாய் இருக்கு. அதோடை ரியூஷனுக்கும் போகாமல் இப்பிடி விளையாடிக்
கொண்டு திரிஞ்சால் ஆறாம் வகுப்பிலை சிலெக்ரிவ் ஸ்கூலுக்கு எடுபடாமல் எங்கடை
மானத்தைக் கெடுக்கப்போறாய். போடி போ. கெதியாய் ரியூஷனுக்கு வெளிக்கிடு’ என
பொரிந்து தள்ளினார்.
வெதும்பிய
மனதுடன் ராஜிக்குட்டி புத்தகங்கள் சகிதம் காரில் ஏறிக் கொண்டாள். கறாஜால் கார் புறப்படும் போது ‘றைவே’யில் (Drive way) எவலினும் கத்தரினும் நடந்து வருவது தெரிந்தது.
கார் கண்ணாடியை
சற்றுக் கீழே இறக்கியஅம்மா,
‘ராஜிக்கு ரியூஷன் இருக்கிறது. அவள் வரமாட்டாள்…’
என்றார்.
‘ரியூஷனா…?’ என விநோதமாகக் கேட்டவர்கள், ராஜிக்கு கையசைத்தவறே கிங்ஸ்டவூட் பார்க் நோக்கி நடந்தார்கள்.
நாலாம் வகுப்பு
படிக்கும் ராஜிக்குட்டியோ, ஆறாம் வகுப்பில் படிக்க வேண்டிய பாடத்தில் ‘ஞானம்’ பெறுவதற்காக ‘ரியூஷன்’
வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறாள்!
(மல்லிகை, 2000)
அருமையான கதைகூறல்.
ReplyDeleteராஜிக்குட்டியின் தன்னிலை உணர்வுகளாக கூறப்பட்ட இக்கதை மிகவும் மனநெகிழ்வு தந்தது. அதை சமயம் இவ்வாறான குற்றத்தின் பங்குதாரர்களாக மனவேதனையும் தந்தது.
பின்லாந்து கல்விமுறை பற்றிய பதிவொன்றை அண்மையில் முகப்புத்தக நண்பர் ஒருவரின் பக்கத்தில் வாசித்தேன். எமது கல்வி நடைமுறையை நினைத்து இயலாமையும், வெறுப்பு உணர்வுமே அதிகரிக்கிறன.
குழந்தைகளின் உலகத்தை கொள்ளையடித்து இயந்திரமயமாக்கும் அதே தவறை நாம் இன்றுவரை செய்து கொண்டே தான் இருக்கிறோம். எனினும் போட்டிகள் மிகுந்த கல்வி நடைமுறையில் வேறென்ன செய்வது என்ற கேள்வியும் உண்டு. தனியார்துறை கல்விகளுக்கான செலவு இலங்கை போன்ற நாடுகளில் சாதாரண மக்களால் தாங்கமுடியாதது என்பதும் பாடசாலை காலத்தில் சிறுவர்கள் போட்டி நடைமுறைக்கு தள்ளப்படுவதற்கான மேலதிக காரணமாக உள்ளது. இதில் பெற்றவர்களின் பெருமிதம் என்ற சுயநலமும் சார்ந்தே உள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=2824129747914107&id=100009513284388