தலைமுறை தாண்டிய காயங்கள்
ஆசி கந்தராஜா
ஹறூத் என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்.
'மிக நல்ல செய்தி சேர், கேள்விப்பட்டீர்களா...?' என்றான் பரபரப்புடன்.
அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல் மூச்சு வாங்க, இணையத் தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது 'ஐபாட்' அலைபேசியிலுள்ள 'இணைய' செய்தியையும்
காண்பித்தான்.
'இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது...' என அந்தச் செய்தி தொடர்ந்தது.
ஹறூத் ஆர்மேனிய இனத்தவன்.
அவன் லெபனானிலுள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தின் பெக்கா (Bekkaa) பள்ளத்தாக்கு
வளாகத்தில் என்னுடைய மாணவன். அவனுடைய முழுப்பெயர் ஹறூத் ஆப்பிரஹாமியன். நூறு ஆண்டுகளுக்கு
முன்பு அவனுடைய தாத்தா பீட்டர் ஆப்பிரஹாமியன்
நடந்தே லெபனானுக்கு புலம் பெயர்ந்து வந்து குடியேறியதாக
அவன் ஏற்கனவே எனக்குச் சொல்லியிருந்தான்.
அராபிய மொழியின் இலக்கணம் சற்றே வித்தியாசமானது. தமிழ் இலக்கணத்தில்
அஃறினையாக கருதப்படும் பல பொருள்கள்,
அராபிய மொழியில் சொல்லை அடிப்படையாகக்
கொண்டு ஆண்பாலாக அல்லது பெண்பாலாக மாறிவிடுவதுண்டு. ஜேர்மன் மொழியும் அப்படியே.
அராபிய வசன அமைப்பில் சொற்களுக்கிடையே உள்ள 'பால்' வேறுபாட்டை,
முறைப்படி பிரயோகிக்காவிட்டால் கருத்து மாறுபட்டுவிடும். ஆர்மேனியர்கள், பல தலைமுறைகளாக அராபிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், அவர்கள் ஆண்பால், பெண்பால் பற்றிய இலக்கண நுட்பத்தை வசப்படுத்திக்
கொள்ளவில்லை. இப்பிரச்சனை ஹறூத்தை அதிகமாகவே கஷ்டப்படுத்தியது. இதனால் ஹறூத் அராபியமொழி பேசும்பொழுது, அராபிய மாணவர்களின் கேலிக்கும் பரிகாசத்துக்கும் இலக்காவான்
ஹறூத் இதை சட்டைசெய்வதே
இல்லை. 'ஆர்மேனியன்’ எனது தாய்மொழி.
கல்விகற்கும் மொழி ஆங்கிலம்.
இவ்விரண்டு மொழிகளிலும் எனக்கு பாண்டித்தியமுண்டு. தொடர்பு மொழியாகிய அரபுபற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை...,
போங்கடா, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்...!
என்பது அவனது வாதம். அவனுடைய நிலைப்பாடு யதார்த்தமானது.
ஹறூத்தை நான் சந்திப்பதற்கு
முன்பு, ஆர்மேனியர்கள் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நான் இலங்கைத் தமிழன் என்று அறிந்த பின் அவன் என்னுடன் அதிகமாகவே வலிந்து ஒட்டிக்கொள்ள
ஆரம்பித்தான். என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம்
நேரம் காலம் பார்க்காது இலங்கையின் இனப்பிரச்சனைபற்றி அக்கறையுடன் விசாரிப்பான். சில சமயங்களில் எனக்கு இது எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அவன்மீது நான் கோபப்பட்டதுமுண்டு. நாளடைவில் அவனது இனப்பற்றின் ஆழத்தையும் விசுவாசத்தையும் புரிந்துகொண்டு, அவனுடைய கரைச்சலைப் பொறுத்துக்கொண்டேன்.
ஆர்மேனியர்களது கலாசாரம் மிக தொன்மையானது. கிறீஸ்தவ சமயத்தை, நாலாம் நூற்றாண்டிலே 'அரச மதமாக' பிரகடனப்படுத்திய பெருமை ஆர்மேனிய இராச்சியத்திற்கே உரியது. முதன்முதலில்
தோலினாலான காலணிகளை அணிந்தவர்கள்
அவர்கள். 'வைன்' என்னும் மதுவகையைப் பதப்படுத்தும்
முறையை கி.மு. நாலாயிரம் ஆண்டளவிலே கண்டுபிடித்திருந்தார்கள்.
ஆனால் ஆர்மேனிய வரலாறோ மிகவும் சிக்கலானது.
அதை முழுமையாக இங்கு சொல்லிவிடவும்
முடியாது. எனவே இந்தக்கதைக்கு
தேவையானவற்றை மாத்திரம் இங்கு சுருக்கமாகச்
சொல்லிவிடுகிறேன்.
நாலாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஆர்மேனியர்கள் பாரசீகர்களாலும், அராபியர்களாலும், மொங்கோலியர்களாலும், ஒட்டமான் துருக்கியர்களாலும் ஆளப்பட்டார்கள். முதலாவது உலக யுத்தத்தின் பின்னர், ஆர்மேனியர்கள் வாழ்ந்த பிரதேசம் 'சோவியத்' கூட்டரசின் ஓர் மாநிலமாகி, 1991ம்ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம்திகதி, சுதந்திர ஆர்மேனிய நாடாக விடுதலையடைந்தது.
பதினைந்து நூற்றாண்டுகளாக, மற்றவர்களால் ஆளப்படும் சிறுபான்மை இனமாக
வாழ்ந்தபோதிலும், ஆர்மேனியர்களில் புத்திஜீவிகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலாம் உலகப்போரின் காரணமாக, ஐரோப்பாவின் நோயாளியாகக் கருதப்பட்டு, துருக்கியரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த ஒட்டமான் சாம்ராஜ்யம் சிதைவுற்றது. அப்பொழுது திட்டமிட்ட வகையில் ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உட்பட, இலட்சக் கணக்கான ஆர்மேனியர்கள் துருக்கியர்களாலே கொல்லப்பட்டார்கள். நூற்றாண்டு காணவிருக்கும் இச்சம்பவம் இனஅழிப்பல்ல
(Genocide), இனக்கலவரம் என்றே
துருக்கி இதுவரை
சாதித்து வருகிறது. இதுவே ஹறூத்
போன்று உலகமெங்கும் சிதறி, புலம்பெயர்ந்த சிறுபான்மையினராக வாழும்
ஆர்மேனியர்கள், துருக்கியர்களை தங்கள் பரம விரோதிகளாக கருதுவதற்குக் காரணமாகும்.
இந்தப் பரம்பரையான பகையை வைத்துக்கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளிலே வாழும் ஆர்மேனியர்களை
அந்தந்த நாடுகள், தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்துவதாக ஹறூத் குறைபட்டுக்கொண்டான். இதன் காரணமாகவே துருக்கிய எல்லையின் பாதுகாப்பிற்கு, சிரியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்கள்
அடங்கிய துருப்புக்களையே, சிரியா பயன்படுத்துவது நானும் அறிந்து கொண்ட செய்தியே.
துருக்கியில்
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஹறூத் அதனைக் கொண்டாடி மகிழ்வான்.
23 ஒக்டோபர் 2011 அன்று, துருக்கியில்
பாரிய நில அதிர்வு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கில் படுகாய மடைந்தார்கள். அந்தச் செய்தி இணையத்தில் வந்தபோது அவன் என்னுடைய விரிவுரையில்
இருந்தான். விரிவுரை முடிந்தவுடன்
நேரே கன்ரீனுக்குச் சென்று, அங்கு தாராளமாகவே இனிப்புகளை வாங்கி எல்லோருக்கும்
கொடுத்துக் கொண்டாடிய பின்னர் என் அலுவலகத்துக்கு வந்தான்.
'ஹறூத், உனக்கு மனிதத் தன்மையே இல்லையா? மற்றவர்களின்
துன்பத்தையும் மரணத்தையும் இப்படிக் கொண்டாடலாமா...?' எனக் கேட்டேன்.
ஹறூத் பதிலேதும் சொல்லாமல் சிறிதுநேரம் என்னைப் பார்த்து மௌனம் சாதித்தான்.
'எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட வலியைவிடவா இது பெரியது...?
எங்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தலைமுறைகள் தாண்டியும் இன்னும் ரணமாக இருப்பதை எத்தனை மனித உரிமையாளர்கள்
அனுதாபத்துடன் அணுகியுள்ளார்கள்...?' என வெடித்தான்.
'ஹறூத், இது நூறு ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த விஷயம். இத்தகைய பகைமை உணர்ச்சி உனக்கே அதிகமாகப் படவில்லையா...?'
'சேர், எமது இனஅழிப்புக்கும் படுகொலைக்கும் சாட்சியாக என்னுடைய தாத்தா இன்றும் எங்களுடன் வாழ்கிறார்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களின் இனக்கொலை பற்றிய சரியான தகவல்களை உங்கள் மகனுக்குச் சொல்லி வளர்த்திருந்தால், உங்கள் கேள்விக்கு அவன் பதில் சொல்லியிருப்பான்' என்று முணுமுணுத்தபடியே எனது அலுவலகத்திலிருந்து அவன் வெளியேறினான். அந்தச் செயல் அவனது வழமையான கோபத்தின் அடையாளம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அடுத்த நாள் வழமைபோல 'குட்மோணிங் சேர்' என்றபடி வந்தான். அன்று அவனுக்கும் எனக்கும் விரிவுரைகள் கிடையாது.
பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்த பொழுது பிரான்ஸ் நாடாளுமன்றம்
அங்கிகரித்துள்ள சட்டமூலத்தைப் பற்றியும் கேட்டேன்.
'சேர்..., ஒட்டமான் துருக்கிப்பேரரசின் கீழ் 1915ம் ஆண்டளவில் இருபது இலட்சம் ஆர்மேனியர்கள்
வாழ்ந்தார்கள். இவர்களுள் பதினைந்து இலட்சம் ஆமேனியர்கள் துருக்கியர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இரவோடு இரவாக பெண்கள் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் துருக்கிய இளைஞர்களால் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இன்றுவரை அமெரிக்கா உட்பட உலக நாடுகளெல்லாம்
இதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ள
மறுக்கிறது...! இது எந்தவகையில் நியாயம்....?'
நூறு வருடங்களுக்குப் பிறகு, இப்போது பிரான்ஸ் இந்தச் சட்டமூலத்தை இயற்றியிருக்கிறது. இதற்கு ஏதாவது அரசியற் பின்னணி இருக்கவேண்டுமல்லவா?'
பிரான்ஸ் இதைக் கையில் எடுப்பதற்குக்
காரணம், பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஆமேனியர்களின்
வாக்குகளுக்காக. அங்கு தேர்தல் வரப்போகிறதல்லவா? உலகம் 'மானுடம்' பற்றிப் பேசுவதெல்லாம்
சுத்த 'ஹம்பக்' சேர்...!'
என ஹறூத் ஆத்திரப்பட்டான்.
'ஆர்மேனியர்கள்
இலட்சக்கணக்கில் இனப் படுகொலை செய்யப்பட்டார்களே. அவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் என்ன பிரச்சனை...?'
எனது இந்தக்கேள்வி
அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவனின் முகத்தில் தெரிந்தது. என் கேள்வியை நான் முடிப்பதற்குள், 'சேர்..., தமிழர்கள் இலங்கையில் ஏன் படுகொலை செய்யப்பட்டார்கள்...?' எனக் கோபப்பட்டவன், பின்னர் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு மேலே சொல்லத் துவங்கினான்.
'ஒட்டமான் துருக்கி பேரரசின்கீழ், ஆர்மேனியர்கள் மீது பிரத்தியேக வரி வசூலிக்கப்பட்டு, இரண்டாந்தரப் பிரஜைகளாகவே துருக்கியர்களால் நடத்தப்பட்டார்கள். இருப்பினும் ஆமேனியர்கள் துருக்கியர்களுடன் சமாதானமாகவே வாழ முயன்றார்கள்.
19ம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் ஒட்டமான் பேரரசை சூழவுள்ள நாடுகளில் வாழ்ந்த மற்றைய சிறுபான்மையின
கிறீஸ்தவர்கள் படிப்படியாக சுதந்திரம்பெறவே, முதன்முதலில் அரச மதமாக ஏற்றுக்கொண்ட
கிறீஸ்தவ ஆர்மேனியர்கள் மத்தியிலே சுதந்திர உணர்வு தலைதூக்கியது. இதனால் இஸ்லாத்தின் கோட்டையாக விளங்கிய ஒட்டமான் துருக்கிப் பேரரசின்கீழ், ஆர்மேனியர்கள் தேசத்துரோகிகளாகவும் வேண்டப்படாதவர்களாகவும் துருக்கியர்களால் பார்க்கப்பட்டார்கள்...'
ஹறூத்தால் மேலும் தொடர முடியவில்லை. குளிரூட்டப்பட்ட எனது அலுவலக அறையில் அவன் இருந்தபோதும், அவன் உடம்பெல்லாம்
வியர்த்தது.
அப்பொழுது சமீபத்தில் பணியில் சேர்ந்த அமெரிக்க பேராசிரியர் ஒருவர் என் அறைக்குள் வந்தார். தொழில் சம்மந்தமான பல விடையங்களையும் பேசியபின், 'நீங்கள் 'அவுஸ்திரேலியன்' என்று அறிந்தேன்.
எவ்வளவு காலம் அங்கு வாழ்கிறீகள்?' என்று கேட்டுச் சகஜமான பின்னர், தன்னுடைய அவுஸ்திரேலிய
பயண அநுபவங்களைப் பற்றிச் சுவைபட பேசினார்.
அவர் செல்லும்வரை காத்திருந்த ஹறூத் மீண்டும்வந்தான். நான் சொல்வதையிட்டு
நீங்கள் வருத்தப்படக்கூடாது சேர்...,'
என்று பீடிகை ஒன்று போட்டு, என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.
'பறுவாயில்லை, சொல்...'
'உங்களை அவர் 'அவுஸ்திரேலியன்' என்று சொன்னபோது அதை நீங்கள் மறுத்திருக்கவேண்டாமா...? நெஞ்சை நிமித்தி,
நான் ஸ்ரீலங்கன் என்று சொல்லவேண்டாமா...? நீங்கள் உங்கள் அடையாளத்தை இழப்பது சரியல்ல'.
ஹறூத் நின்று நிதானித்துச்
சொல்லி முடித்த பின், என்னை நிமிர்ந்து பார்த்தான்.
ஹறூத், உன் தாத்தா துருக்கியரா அல்லது ஆர்மேனியனா...?
இதிலென்ன சந்தேகம்.
ஆர்மேனியன்...!
'உன் தாத்தா துருக்கியரில்லையென்றால் நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழன்...!
உங்கள் மூதாதையர்கள்
கிறிஸ்தவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட
முதன்மையானவர்கள் என்று நீ பெருமைப்படுகிறாய். எனது இனத்துக்கும்
மனித நாகரீகத்தைப் பரப்பி வாழ்ந்த பெருமையுண்டு. நான் ஸ்ரீலங்காவில்
பிறந்து வாழ்ந்த தமிழ் ஈழன். தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ளது பற்றி, மனித உரிமைகள் பற்றி வாய்கிழியப்பேசும் உலக சமூகம் மௌனம் சாதிக்கிறது. அந்த மௌனத்தைக் குலைப்பதற்கு, தாத்தாக்கள் சுமந்த வலிகளைச் சொல்லி பிள்ளைகளை வளர்க்கவேண்டுமென்ற உன் கருத்தை ஏற்கிறேன்...'
என் குரல் நெகிழ்ச்சியில் உடையலாயிற்று...!
அதேவேளை, ஹறூத் என் ஆசான்போன்று நிமிர்ந்து நிற்பதை உணர்ந்து,
என் உடல் குறுகியது.
(ஞானம்,
மாரச் 2012, ஞானம் புலம்பெயர் இலக்கிய சிறப்பிதழ், டிசம்பர்2014)
ஆசிரியரின் புனைவுக் கட்டுரைகள் போன்றே சிறுகதைகளும் வேறுபட்ட சுவை கொண்டவை. அவை ஆக்க கர்த்தாவுக்கே உரிய தனித்துவமான உருவும் கருவும் அமையப்பெற்று அவற்றின் மூலம் தம்மைப் படைத்தவனை அடையாளம் காட்டுவன.
ReplyDeleteThanks, Ammah.
Delete