Saturday 23 January 2021

 முன்னிரவு மயக்கங்கள்

ஆசி கந்தராஜா

ந்த அழைப்பிதழ் அழகாக அமைந்திருந்தது.

கம்பியூட்டரில் வடிவமைத்து கலர் பிரிண்டரில் அச்சடித்திருந்தார்கள். அழைப்பிதழ் மேசைமேல் கிடந்த கோலத்தில் அது மனைவிக்குப் பிடிக்காத ஒருவர் அனுப்பியதென அவன் ஊகித்துக் கொண்டான்.

சிட்னியில் வாழும் நண்பன் ஒருவன் தன் மனைவியின் நாற்பதாவது பிறந்த தின விழாவிற்கு குடும்ப சமேதராய் வருமாறு அழைத்திருந்தான். பொருளாதாரத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் அவன் எதையும் மணி கிலுக்கிச் செய்வது வழக்கம். சமீபத்தில்தான் தனது வெடிங் அனிவேசரியை மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தடல்புடலாக கொண்டாடியிருந்தான். அந்தப் பாட்டிக்கு வெள்ளைக்கார நண்பர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் ‘கோட்சூட்’ என படு நாகரீகமாக உடையணிந்திருந்தார்கள். நண்பன் தானே என்ற நினைப்பில் சாதாரண உடையில் சென்று பாட்டி முடிந்து வீடு வந்து சேரும் வரையிலும் மனைவியிடம் வாங்கிக் கட்டிய பேச்சுக்கள் சுந்தரமூர்த்திக்கு சட்டென்று நினைவுக்கு வந்தன. இந்த தடவை மற்றவர்களுக்கு சோடை போகாத விதத்தில் உடுத்த வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

அன்றைய இரவுச் சாப்பாட்டின் போது நண்பனின் பாட்டிக்கு என்ன பரிசு கொண்டு போவது என்ற பிரச்சனையை மகள் துவக்கினாள். அவள் பாவம். வஞ்சகமில்லாமல் ஏதாவது ஆசையாய் பேசத்துவங்கி சுந்தரமூர்த்தியை வில்லங்கத்துள் மாட்டிவிடுவாள்.

 அவையளுக்கென்னபுளிப்புடிச்சவை. காசுத்திமிரைக் காட்ட ‘ஒண்டவிட்ட’ ஒரு கிழமை பாட்டிவைப்பினம்நீங்களும் நல்லாய் பல்லை இளிச்சுக் கொண்டு போய் திண்டு குடிச்சுப் போட்டு வாருங்கோ. அவனவன் நாலைஞ்சு வழியிலை காசுழைக்கிறான்பாட்டி வைக்கிறான். உங்களுக்கென்ன வக்கிருக்கெண்டு கூத்தடிக்கிறியள்?’ தனது மனஎரிச்சலை வெளியில் கொட்டினாள் மனைவி.

இத்தகைய சந்தர்ப்பங்களிலே சுந்தரமூர்த்தி மௌனம் சாதிப்பது வழக்கம். அந்த மௌனத்தில் அவனது மாதாந்த வருமானம் பற்றிய பரிசீலனை அவனைக் கூனச் செய்யும். இதற்கு ஈடு செய்வது போல அவன் சமூகப்பணிகளிலே தன்னைப் பிணைத்துக் கொண்டான். இந்த சமூக சேவை சுந்தரமூர்த்திக்கு மேல்மட்ட நண்பர்களை சம்பாதிக்க உதவியது. இந்த விவகாரம் சாண் ஏற முழம் சறுக்கும் சங்கதி போன்றது. இறுதியில் சுய பச்சாதாபத்திலே அவன் திக்குமுக்காடுவான். அவனது மௌனங்கள் மனைவிக்கு வெற்றித் திருப்தியை அளிக்கும்.

மௌனத்தை கலைப்பதுபோல் மகள் மணியானதொரு யோசனையை முன்மொழிந்தாள். சிங்கப்பூர் மாமி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்த சேலை ஒன்றினை நிறம் சரியில்லை என்று நொட்டை சொல்லி மனைவி உடுக்காமல் வைத்திருந்தாள். அதனை நினைவூட்டிஅந்த சேலையை பிறந்த நாள் பரிசாக கொடுக்கலாம் என்பதுதான் மகளின் யோசனை. நல்ல மினுமினுப்பான பேப்பரில் அழகாக அந்த சேலையை பார்சல் செய்வ தென்றும்பரிசுப் பார்ச்சல் பிறம்பாகவும் வாழ்த்துக்’காட்’ பிறம்பாகவும் எடுத்துச் செல்வதென்றும்அந்த நிறம் சரியில்லாத சேலையை யார் கொண்டு வந்தது என்று அவர்கள் மண்டையைப் போட்டு உடைப்பது முஸ்பாத்தி யானது என்றும் சாப்பாட்டு மேசையில் அபிப்பிராயங்கள் விழுந்தன. இந்த ஆரவாரங்களுக்கு மத்தியிலே மகன் வேறொரு யோசனையை முன்வைத்துசுந்தரமூர்த்தியை வில்லங்கத்துள் மாட்டினான். அவர்களது பழைய கார் தொடர்ந்து கரைச்சல் தருவதாகவும்இப்படியான பாட்டிகளுக்கு இதில் போவது இனிமேல் ஒத்துவராதென்றும் விரைவில் புதுக்கார் வாங்கவேண்டுமென்றும்முன் மொழிந்தான். மகன் வாய்மொழிந்தாலும் இந்த யோசனை யின் ஊற்று தன் மனைவியாக இருக்கலாம் என்று சுந்தர மூர்த்தி ஊகித்தான்.

வங்கியில் Personal lone எடுத்தாவது சீக்கிரமே நல்ல கார் ஒன்று வாங்குவது என்ற மனைவியின் யோசனையை அட்டகாசமாக ஏற்றான். அன்றைய இரவு உணவும் அத்துடன் இனிதே நிறைவேறியது.

அந்தநாளும் வந்தது.

மனைவிமகன்மகள் எல்லோரும் லட்சணமாக உடையணிந்து கனகச்சிதமாக தோன்றினார்கள். இவற்றின் பின்னணியிலே மனைவியின் அழகுணர்வும் அக்கறையும் செயற்பட்டிருக்க வேண்டும். சுந்தரமூர்த்தி அணிய வேண்டிய உடைகளையும் மனைவியே தெரிவு செய்தாள். மேல்மட்டத்துப் பிள்ளைகள் கூடும் இடத்தில் தமது பிள்ளைகளும் அவர்களுக்குச் சோடை போகாது இருக்க வேண்டு மென்ற சமத்துவக் கொள்கை அவளுக்கு. காரில் ஏறுவதற்குமுன்பு அவனுடைய ‘ரை’ ஒழுங்காக கட்டப்பட்டிருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொண்டாள். எல்லோரும் காரில் ஏறிக் கொண்டனர். பழைய காராக இருந்தாலும் சுந்தரமூர்த்தி அதை கழுவி பாட்டிக்கு போகவென ‘பொலிஷ்’ பண்ணியிருந்தான். கார் என்ஜினுக்குள் தண்ணி போனதோ என்னவோ கார் Start செய்ய மறுத்தது.

இதுக்குத்தானே நான் ஒரு இடத்துக்கும் வெளிக்கிடமறுக்கிறது…’ என்று துவங்கிய மனைவிதனது தகப்பன் யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்திலேயே வைத்திருந்த காரின் பெருமையையும்அவனால் உருப்படியான ஒரு கார் கூட வாங்க முடியாத இயலாமையும் சுட்டிக்காட்டிபிறந்த வீட்டு புராணம் ஒன்றைப் பாடி முடித்தாள்.

மனைவிமேல் ஏற்பட்ட கோபத்தை Accelerator மீது காட்டி இரண்டு தடவை இறுக்கி பெற்றோலை பம்பண்ணிமீண்டும் Start செய்தான். இரண்டு முறை விக்கி விட்டு கார் உயிர்த்தது. காரை வேகமாக ஒட்டிதிடுமென வெட்டி மனைவி மீதிருந்த கோபத்தைக் குறைத்துக் கொண்டான். தனது மனைவியை நேரடியாக கோபிக்க முடியாத தன் இயலாமைக்கு இவ்வாறு தான் அவன் வடிகாலமைத்துக் கொள்வதுண்டு. இதனால் சுந்தரமூர்த்தியை பலர் ஒரு முற்கோபி எனக் கருதுவதும் உண்டு.

அவர்களுக்கு முன்னரே விருந்தினர் பலரும் வந்து சேர்ந்து விட்டார்கள். நண்பனின் வீட்டுக்கு முன்னால் இருந்த றோட்டு முழுவதையும் பலவிதமான கார்கள் அடைத்துக் கொண்டு நின்றன. யோகநாதன் தான் வாங்கிய ‘பென்ஸ்’ காரை எல்லோருக்கும் தெரியும்படியாக நண்பனின் வீட்டிற்கு முன்னால் நிற்பாட்டியிருந்தான். அதற்குப் பின்னர் டொக்டர் தணிகாசலத்தின் புத்தம் புதிய BMW நின்றது. நண்பன் வீட்டு கார்கராஜ் திறந்திருந்தது. அதற்குள் அவனுடைய இரண்டு கார்களும் மின்னின. அதில் ஒன்று அவன் தன் மனைவிக்கு சமீபத்தில் வாங்கிக் கொடுத்த ஜேர்மன் மொடல் ஸ்போட்ஸ் கார்.

வளைவை ஒட்டினாற் போல் வீதி ஓரம் ஒரு கார் பார்க் செய்யத்தக்க இடம் காலியாக இருந்தது. அதிலே காரை நிறுத்தலாம் என நினைத்து சுந்தரமூர்த்தி காரைத் திருப்புவதற்கிடையில்மறுபக்கத்தால் முந்திக் கொண்டு வந்து தான் புதிதாக வாங்கிய Toyota Cammeray ஐ பார்க்செய்தான் இராமநாதன்.

அட. இவனும் புதுக்கார் வாங்கியிட்டானேஇவங்களுக்கு எங்காலை தான் காசு வருகுதோஇதுகளைக் காட்டத்தானே இங்கை பாட்டி வைக்கிறவை.’ என்று தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தாள்சுந்தரமூர்த்தியின் மனைவி.

இந்த றோட்டிலை இடம் கிடைக்காததும் நல்லதுதான். அடுத்த குறுக்கு றோட்டிலை ஒருவருக்கும் தெரியாமல் பார்க் பண்ணிப் போட்டு வாறன். எல்லாரும் இறங்கி நில்லுங்கோ…’ என அவசரப்படுத்திய சுந்தரமூர்த்திஅவர்கள் இறங்கியதும் கார் பார்க் செய்யும் காரியத்தை அவசர அவசரமாக முடித்து திரும்பினான்.

நண்பன் தன் மனைவிக்கு பரிசளித்த ஸ்போட்ஸ் மொடல் காரையே வெறித்துப் பார்த்தபடி கனவில் சஞ்சரித்த தன் மனைவியைத் தட்டி நிஜ உலகுக்கு கொண்டு வந்தான்சுந்தரமூர்த்தி. மகள் அழகாக சுற்றப்பட்ட அந்த பரிசுப் பார்சலை நெஞ்சுடன் அணைத்துப் பிடித்திருந்தாள். ஒருவகை நிம்மதியுடன் அழைப்பு மணியை அழுத்தியதும் ‘ஏன் இவ்வளவு நேரம் செண்டதுஒரு வீடு மாதிரி புளங்கிறனாங்கள். இப்பதான் ஆடி அசைஞ்சு வாறியள்.’ என்றவாறே கதவைத் திறந்தாள் நண்பனின் மனைவி.

நாங்கள் வெளிக்கிடேக்கைதான் என்ரை அண்ணர் USA இல் இருந்து ரெபோன் பண்ணினவர். பிள்ளையளின்ரை அடுத்த லீவுக்கு எங்கள் எல்லாரையும் USAக்கு வரச் சொல்ஒரே ஆக்கினை. அதுதான் கொஞ்சம் சுணங்கிப் போச்சு…’ என்று கார் Start பண்ணாத கதையை கனகச்சிதமாக மறைத்தாள் சுந்தரமூர்த்தியின் மனைவி.

வெளிநாட்டிலை இருந்து ரெபோன் வந்தது’ என்ற கதை இப்பொழு தெல்லாம் சபைகளிலே எடுபடுவது குறைவு. இருந்தாலும் ஜேர்மனிபிரான்ஸ். கனடாவிலும் பார்க்க USA இல் இருந்து வரும் ரெலிபோன்களுக்கு இன்னமும் மவுசுமுற்றாக மங்கிவிடவில்லை என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

இந்த சங்கடங்களிலே சுந்தரமூர்த்தி தெளிவதற்கிடையில் ஆபத்பாந்தவராக ‘என்ன மச்சான்இதிலை மிலாந்திக்கொண்டு நிக்கிறாய். இங்கை பாருக்கு (Bar) வாவன்’ என்று உரிமையுடன் அழைத்தான் நண்பன். தமிழ்ச் சங்கத்தில் இருவரும் தலைவர் செயலாளராக இருந்தபோது தோன்றிய நட்பல்லவா அது ‘மச்சான் எதையெடுத்தாலும் நீ ‘ஸ்ரெடி’தான். நான் ஒரு ‘கொக்ரெயில்’ தயாரித்து தாறன் குடிச்சப்பார்’ என்று சுந்தரமூர்த்தியின் சம்மதத்தைக் கூட எதிர்பார்க்காமல் பல போத்தல்களிலும் இருக்கும் மது வகைகளை ஒரு கிளாசிலே ஊற்றி ‘சண்டி’ தயாரித்தான் நண்பன். இத்தகைய ‘சண்டிகள்’ குடிக்க நல்லாகத்தான் இருக்கும். அடுத்த நாள் தலையை தூக்கேலாது. பிறகு ‘பனடோல்’ என்றும் தைலம் என்றும் பல சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும். இந்த பொட்டுக் கோடுகளை சபை நடுவே பிரசித்தம் செய்வது வடிவில்லை. அத்துடன் இப்படிப்பட்ட பாட்டிகளை விட்டால் பெருங்குடி மக்களுடைய சூக்குமங்களை எப்படித்தான் கற்றுக் கொள்வது?

இந்த சண்டி தான் என்ரை ஸ்பெஷல். உனக்குத் தான் என்ரை ரேஸ்ட் விளங்கும்’ என்று நண்பனைப் பாராட்டிபக்கத்தில் இருந்த டொக்டர் தணிகாசலத்துக்கு ‘சியேஸ்’ சொல்யபடியே கிளாசைக் காலிசெய்தான் சுந்தரமூர்த்தி.

பாட்டி களைகட்டத் தொடங்கியது!

வந்த பிள்ளைகளை மகிழ்விக்கபிறிதொரு அறையில் ஆங்கில வீடியோ படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. பெண்கள் அப்படி என்னதான் கதைகள் சேமித்து வைத்திருக்கிறார்களோஅவர்கள் மத்தியிலே ஒரே குசுகுசுக்களும் கலகல சிரிப்புக்களும். எங்களுடைய பெண்களுக்குத்தான் எத்தனை வகையான கொண்டைகள் போடத் தெரியும். இவர்கள் மத்தியிலே தன் மனைவியைப் பார்க்க சுந்தரமூர்த்திக்கு பெருமையாக இருந்தது. அவள் எந்த சபையிலும் ஒளிரக்கூடிய அழகிதான். அதிலே சந்தேகமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதில் அவனுக்கு பெருமையாக இருந்தது.

ஆண்கள் வட்டத்தில் கிளாஸும் கிளாஸும் மோதிக்கொள்ள போதையும் ஏறியது. நண்பன் இத்தகைய பாட்டிகளை ஒழுங்கு செய்வதில் விண்ணன். குடிக்கு துணைபோக சற்று உறைப்பான Bites உணவுகளும் வலம் வந்தன. அவற்றை நண்பனே நேரில் பரிமாறிவந்தவர்கள் மத்தியிலே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தினான். ஒரு கட்டத்தில் ‘ஏன் நாங்கள் பிறம்பு பிறம்பாக இருப்பான்பெம்பிளையள் ஆம்பிளையள் எல்லாரும் ஒரு வட்டமாய் இருக்கலாமே!’ என்றான் புதிதாக Toyota வாங்கிய இராமநாதன். அவனின் சமத்துவக் கொள்கை எல்லோ ராலும் வரவேற்கப்பட்டு நாற்காலிகள் நகர்ந்து சங்கமமாகஇதையே எதிர்பார்த்து காத்திருந்தவன் போல ஜீன்ஸ் திரைப்படத்தில் வந்த ‘உன்னோடு காண்ப தெல்லாம்…’ என்ற பாடலைநண்பன் ஒலிக்கச்செய்தான். மேற்கத்தைய இசையும் கர்நாடக இசையும் இணைந்து ரஹ்மானின் இசையமைப்பில் ஒத்த நித்தியஸ்ரீயின் குரல்அங்கு கூடியிருந்த நாற்பது வயதுக்கு மேற்பட்ட அரைக்கிழங்களையும் உசுப்பேத்தியது. இரண்டு கைகளையும் நீட்டி விரித்து விரல்களை மடக்கி உடலை நெளித்து பரத நாட்டியம் என்ற பெயரில் அபிநயம் பிடித்தான் பென்ஸ் கார் யோகநாதன். அவனின் ஆட்டத்தை அங்கிருந்த பெண்கள் ரசிப்பதைக் கண்ட அரைக்கிழங்களும் அவனுடன் சேர்ந்து அபிநயம் பிடித்தன. இந்தப் பெண்கள் கூட்டத்துக்கு முன்னால் ஆடி தானும் ‘சபாஷ்’ வாங்கவேண்டுமென்று அவனது கால்கள் துருதுருத்த போதிலும் மனைவியின் கண்களிலே மின்னிய எச்சரிக்கையைச் சாமர்த்தியமாக உள்வாங்கி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சுந்தரமூர்த்தி.

என்ன இருந்தாலும் எங்கடை பிள்ளையளைத் தமிழ்ப்பாட்டுக் கேட்க வைத்தது ஏ. ஆர். ரஹ்மான் தான்’ என்று தனது கண்டுபிடிப்பை அந்த அமளிக்குள்ளும் அவிட்டு விட்டார் திருவாட்டி ராம் மோகன். இதை ஆமோதிப்பவர்போல் ரஹ்மானின் இசையில் சங்கமம் படத்திலுள்ள பாடல் ஒன்றை பாடிக் காட்டினார் சங்கீத வகுப்பு நடத்தும் சிவமணி ரீச்சர். அவவுடைய குரல்வளம் பிழையில்லை. அவர் நடத்தும் சங்கீத வகுப்புக்கு இது நல்லதொரு விளம்பரம் என பலரும் எண்ணிக் கொண்டனர்.

போதை ஏறஏற சபையின் அக்கறை வேறு திசையிலே திரும்பலாயிற்று. சிட்னி கோவிலுக்கு தாங்கள் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. வழக்கம் போலவே தமிழ் மொழியும் தமிழ்க் கலாசாரமும் சிட்னியில் வளர என்னென்ன செய்யப்படல் வேண்டும் என்ற பேச்சு முக்கியம் பெறலாயிற்று. இத்தகைய பேச்சுக்களே தம்மை தமிழராய் அடையாளப் படுத்துவதாக குடிவெறியில் நம் தமிழர் நினைவுபடுத்திக் கொள்ளுதல் ஆறுதலான விசயம்.

பல இனங்கள் வாழும் இந்நாட்டில் தமிழ் இனத்தின் தனித்துவம் பேணப்படுதல் வேண்டுமென்றும்தமிழராகிய நாம் இரு மொழி பேசும்இரு கலாசாரங்களைப் பின்பற்றும் இனமாக அவுஸ்திரேயாவில் வாழ வேண்டுமென்றும் ‘ஆங்கிலத்தில்’ பிரசங்கம் செய்தார் டொக்டர் தணிகாசலம்.

டொக்டர் ஐயாசும்மா மற்றவைக்கு உபதேசம் செய்யிறதை விட்டிட்டு நடைமுறையிலை காட்டுங்கோ. இங்கை நாங்கள் திண்டு குடிச்சுக்கொண்டு நல்லாய் இருக்கிறம். அங்கை வன்னியிலை எங்கடை சனம் எவ்வளவு அவதிப்படுகுதுகள்அதுகளுக்கு என்ன குடுத்த நீங்கள் எண்டு சொல்லுங்கோ பாப்பம்சும்மா தத்துவம் பேசா தேங்கோ’ என்று இராமநாதன் குறுக்கிட்டான். அவனுக்கு இளம் ரத்தம். டொக்டர் தணிகாசலத்திலை பழைய கோபமும் இருக்கவேணும்.

 

ஒரு சின்னப் பெடியனாலை தன் தகுதிக்கு விடுக்கப் பட்ட சவாலாக டொக்டர் தணிகாசலம் இதை எடுத்திருக்க வேண்டும். அவருடைய விழிகள் மேலும் சிவந்தன.

தம்பி இராமநாதன்! என்னுடைய உடம்பிலும் தமிழ் இரத்தம்தான் ஓடுது. வன்னிச் சனங்களின்ரை உதவிக்கு நீ எவ்வளவு போடுறாய்அதைப்போலை ஐஞ்சு மடங்குக்கு நான் இப்பவே செக் எழுதி தாறன்’ என்று சொல்க்கொண்டே டொக்டர் தனது செக் புத்தகத்தையும் பேனாவையும் வெளியில் எடுத்தார். போதை மயக்கத்தில் கனக்கச் சொல்ப்போடுவாரோ என்று பயந்த மிஸிஸ் இராமநாதன் அவனைத் தடுத்து நிறுத்த முன்பு மனைவியின் கைப்பையை பறித்து செக் புத்தகத்தை எடுத்து ‘என்ன டொக்டர்உங்களைவிட நான் பிந்திதான் அவுஸ்திரேயா வந்தனான். அதுக்காக நாங்கள் ‘ரெலர் மெஸினிலை’ தான் நெடுக காசெடுக்கிற தெண்டு நினைக்க வேண்டாம். நான் என்ஜினியர். என்ரை மனிசி எக்கவுண்டன்ற். நாங்களும் கையோடை செக் புத்தகம் வைச்சுக் கொள்ளுறது தான்’ என்று கூறிக்கொண்டே வன்னி அகதிகள் நிவாரண நிதிக்கு ஆயிரம் டொலருக்கு ஒரு செக் எழுதி எல்லோரும் பார்க்கக் கூடியதாக மேசையிலே போட்டான் இராமநாதன். சபை சடுதியாக உறைநிலை அடைந்தது.

டொக்டர் தணிகாசலம் எதுவும் பேசவில்லை. அவர் ஐயாயிரம் டொலருக்கு செக் எழுதி கையெழுத்திட்டு அதற்குப் பக்கத்தில் வைத்தார்.

விருந்தும் கொண்டாட்டமும் திசை திரும்புவதை உணர்ந்த நண்பன் உசாரானான்.

இங்கை சாப்பாடு குளிருது. பிள்ளையளைக் கூப்பிட்டு சாப்பாட்டைக் குடுங்கோ. இந்தச் சாப்பாட்டை வன்னிக்கு அனுப்பவும் ஏலாது. எல்லாரும் நான் கூப்பிட்டதுக்காக வந்தநீங்கள். எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டு முடிச்சுப் போடுங்கோ. இல்லாட்டில் ஒரு கிழமைக்கு மனிசி இதைத்தான் ‘மைக்கிறோ வேவிலை’ சூடாக்கி சூடாக்கி எனக்குத் தரும் என்று நண்பன் உரத்துச் சொன்னான். இழுபறியுடன் சாப்பாடு துவங்கியது. பிறகு செயற்கையானதொரு மௌனம். ஒருவகை இறுக்கம். விருந்து முடிந்து சுந்தரமூர்த்தி குடும்பம் வெளியேறியது.

இதெல்லாம் பணக்கொழுப்பு செய்யிறவேலை. நாங்கள் இலங்கையிலை சம்பாதிக்காத பணமோ?’ என சுந்தரமூர்த்தியின் மனைவி புறுபுறுத்துக் கொண்டே வீதிக்கு வந்தாள்.

கார் நிற்பாட்டிய குறுக்கு றோட்டில் அனைவரும் நுழைந்தனர். என்ன மாயம்கார் எங்கே?

நல்லாய் நினைவிருக்கு. இந்த இடத்திலை தான் நிறுத்தி வைச்சனான்’ என்றவாறே வெறியிறங்க இரண்டுதரம் அங்குமிங்கும் தலையை ஆட்டினான் சுந்தரமூர்த்தி.

கார் நிற்பாட்டிய இடத்தின் அருகே இருந்த தபால் பெட்டியின் கீழ் அவனது காரின் பதிவு இலக்கம் எழுதிய ஒரு ‘என்வலப்’ வைக்கப்பட்டிருந்தது. சுந்தரமூர்த்தியின் காரை பொலீஸ் இழுத்துக் கொண்டு போனதற்கான அத்தாட்சித் துண்டு அது. மனக்குழப்பத்திலும் அவசரத்திலும் குடியிருப்பவரின் வழியை மறித்து காரை நிற்பாட்டியிருந்ததைஅப்பொழுது தான் உணரலானான்.

இப்பொழுது என்ன செய்வதுபாட்டி வைத்த நண்பனிடம்இ வீட்டிற்கு போக ஒரு Lift கேட்கலாம் என விக்கி விழுங்கிச் சொன்னான் சுந்தரமூர்த்தி.

மனைவி பத்திரகாளியானாள். ‘பட்ட அவமானம் போதாதெண்டு இனியும் படப்போறியளே?’ வன்னிச் சனங்களுக்கு ‘டொனேசன்’ குடுக்கிறதிலைகூட வக்கிரம். உவங்களை ஒரு நாளும் திருத்தேலாது. அங்கை போக என்ன ‘மொடல்’ கார்எந்த ஆண்டு ‘மேக்’ எண்டெல்லாம் ஆராய…. நடவுங்கோ அங்கினை ரெபோன் பூத்திலை நிண்டு ரக்ஸியைக் கூப்பிடுவம்’ என்று கூறிய மனைவிசுந்தரமூர்த்தியின் பதிலுக்கு கூட காத்திராமல் பிள்ளைகளுடன் பிரதான வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அதிர்ஷ்ட வசமாக அந்த வீதியால் காலியான ரக்ஸி ஒன்று வந்தது. அதனை மறித்து அனைவரும் ஏறிக் கொண்டனர். ரக்ஸி ஒட்டி கிரேக்கன் சகஜமாகப் பேசினான். பேச்சின் நடுவே தனது காரை பொலீசார் இழுத்துச் சென்றுவிட்டதை சுந்தரமூர்த்தி மெதுவாகக் கூறினான். ரக்ஸி ஒட்டி பொலீஸை இரண்டு பாட்டம் திட்டித்தீர்த்தான். பிறகு தனக்கும் இப்படி ஒரு அநுபவம் ஏற்பட்டதாகக் கூறினான். இன்றைக்கு சனிக்கிழமை என்றபடியால் இனித்திங்கள் கிழமை தான் காரைத் திரும்பப் பெறலாம் என்றும் ஏறத்தாழ நானூறு டொலர்கள் செலவாகலாம் என்றும் நடைமுறைகளைக் கூறினான். பின் ஆசனத்தில் இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவியிடமிருந்து முக்கல் கேட்டது. இந்த சங்கேத மொழியை சுந்தரமூர்த்தி நன்கு அறிவான்.

சிட்னியின் புறநகர்ப் பகுதியூடாக ரக்ஸி ஓடிக்கொண்டிருந்தது. மனைவியையும் பிள்ளைகளையும் திருப்திப்படுத்துவதற்காயினும் வங்கிக்கடன் எடுத்துதொந்தரவு தராத நல்ல கார் ஒன்றினைச் சீக்கிரமே வாங்க வேண்டுமென்ற தீர்மானம் சுந்தரமூர்த்தியின் நெஞ்சிலே இறுகலாயிற்று. நண்பனின் பாட்டியிலே வெட்கத்தைப் பாராமல் ஐந்தாறு Drinks ஐ வயிற்றினுள் ஊற்றிக் கொண்டது நல்லது போலவும் தோன்றியது.

அந்த மதுவின் போதையூட்டும் மயக்கத்திலேசுந்தரமூர்த்திக்கு அன்றைய இரவு நிம்மதியாக கழியும்.

நாளைகள்’ எத்தனையோ பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு விடியக் காத்திருக்கின்றன. இது இடம்பெயர்ந்து வாழும் வன்னி அகதிகளுக்கு மட்டுமல்லபுலம் பெயர்ந்த நம்மவவர்களுக்கும் தான்!

(வீரகேசரி, 16 ஜனவரி 2000.)

(குமுதம் யாழ்மணம் 15-30 ஆகஜ்ட் 2002)

 


No comments:

Post a Comment

.