அந்நியமாகுதல்
ஆசி கந்தராஜா
வழமையான காற்றழுத்த பிரச்சனைகள் ஏதுமின்றி இந்து சமுத்திரத்தின் மேலாக விமானம் அமைதியாகப் பறந்து
கொண்டிருந்தது. இரவு உணவு முடிந்தபின் அனைவரும் தூங்குவதற்கு வசதியாக விளக்குகள்
அணைக்கப்பட்டு, நடுவிலுள்ள பெரிய வெண்திரையிலும் ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்பட்ட குட்டி
‘மொனிற்றிர்’களிலும் வெவ்வேறு சனல்களில் படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
விமானத்தில் வழங்கப்பட்ட இரண்டு ‘பெக்’ விஸ்கியைக் குடித்து நன்றாகச் சாப்பிட்டும் வழமைக்கு மாறாக அன்று என்னால் தூங்கமுடியவில்லை. அந்த சம்பவம் மீண்டும் மீண்டும் என் மனதை அலைக்கழித்தது. யன்னலோர இருக்கையை நன்கு பதித்து தலையணை ஒன்றை தலைமாட்டிலும் இன்னொன்றை நெஞ்சுடனும் அணைத்துப் பிடித்தவாறு எனக்குப் பின்னால் மல்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். அவனது உணர்வுகளை அந்த நிகழ்வு அதிகம் பாதித்திருக்கவில்லைப் போலும். ‘Poor fellow’ என இரண்டு வார்த்தைகளை உதிர்த்து அதற்கு வடிகால் அமைத்துக் கொண்டான். நடந்து முடிந்த காரண காரியங்களுக்காக பெரிதும் அலட்டிக்கொள்ளாத பிறவி அவன். ஆனால் வாழ்க்கையின் மேடுபள்ளங்களை யெல்லாம் கடந்து கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து முன்னேறிய எனக்கு, அது பெரும் தாக்கத்தையேற்படுத்தியது.
டக்காவிருந்து
சிட்னிவரையிலான பறப்பு முழுவதும் பத்து மணிநேரம் யூசுப் பற்றிய நினைவிலேயே
ஆழ்ந்திருந்தேன்.
வங்காளதேச
ஆராச்சி நிலையமொன்றின் நீள்சதுர விருந்தினர் மண்டபத்தில் மல்கமும் நானும்
அமர்ந்திருந்தோம். அந்த மண்டபத்தின் முதல் மாடியிலேயே நாம் தங்குவதற்கு அறை
ஒதுக்கியிருந்தார்கள். விருந்தினர் மண்டபத்தில் நூறு பேருக்கு மேல் அமரக்கூடிய
மேசைமீது வெளுத்த வெள்ளைத்துணி விரிவிக்கப்பட்டு, ஐந்தடிக்கொன்றாக முற்றாத
நெற்கதிர்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட சீனநாட்டு பூச்சாடிகள்
வைத்திருந்தார்கள். அந்த பென்னாம் பெரிய மேசையின் குறுகிய அந்தலையில் மல்கமும் அதை
ஒட்டிய பக்கவாட்டில் அவனருகே நானும் அமர்ந்து அன்றைய இரவு உணவுக்காக
காத்திருந்தோம். அங்கு நடப்பனவெல்லாமே அவனுக்கு புதுமையாக இருந்திருக்கவேண்டும்.
என்னைப் பார்த்து அடிக்கடி புன்னகைத்தவண்ணமிருந்தான். பொஸ்னிய யுத்தப் பிரச்சனை
காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்தபின், அவுஸ்திரேயாவுக்கு சமீபத்தில் புலம் பெயர்ந்த அவனை, நான் பகுதிநேர அடிப்படையில் உதவியாளனாகச் சேர்த்திருந்தேன். இளைஞன். உண்மையான
உழைப்பாளி. முதல்முறையாக தெற்கு ஆசிய நாடொன்றுக்கு வந்திருக்கிறான். வங்காள தேசத்துக்கு
அவனை கூட்டி வந்ததற்காக, வந்த நாள் முதல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு நன்றி கூறிக்
கொண்டிருந்தான்.
கோடைவெப்பத்திலும்
கோட் சூட் அணிந்து அங்குவந்த வங்காளி ஒருவன் என்னைக் கடந்து போய் மல்கமுக்கு
கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். இந்த விருந்தினர் மாளிகை உலக வங்கி
உதவியுடன் ஆராச்சி நிலையத்துக்கு வரும் அதி உயர் விருந்தினர்களுக்காக
கட்டப்பட்டதென்றும், தானே அதை நிர்வகிக்கும் மனேஜர் என்றும் பெருமையாகக் கூறிக்கொண்டான்.
இவை
அனைத்தையும் நான் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அவன் கண்டு
கொள்ளாதது மல்கமுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
‘என்னிடம் எதற்காக இவற்றையெல்லாம் சொன்னான்?’ மல்கம் தன்னுடைய அதிருப்தியை, வங்காளி சென்றதும் இவ்வாறு வெளிப்படுத்தினான்.
‘ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குகீழ் அதிககாலம்
வாழ்ந்ததினால் ஏற்பட்ட தாக்கம் தான் இது’ என்றேன்.
‘நான் ஆங்கிலேயன் இல்லையே?’ என்றான் மல்கம் தன் புருவத்தை உயர்த்தியவாறு.
‘ஆனால் உனக்கு வெள்ளைத்தோல் இருக்கிறதே? அதற்குரிய மதிப்புத்தான் இது’ என நான் சிரித்தேன்.
‘வெள்ளைத் தோலா? சீனர்களுக்கும்
வெள்ளைத்தோல் இருக்கிறதே’ என்று நகைச்சுவையுடன் அவன் கேட்டான்.
‘சீனர்களுக்கு மஞ்சள் தோல் என்று நம்மவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்’ என நான் சற்று சீரியஸாகவே பதிலளித்தேன்.
அப்போது
அறைக்குள் பணியாள் ஒருவன் வந்தான். தன்னை யூசுப் எனப் ‘பவ்வியமாக’
அறிமுகப்படுத்திக் கொண்டபின் உணவு வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேசைக்கு கொண்டு
வந்தான்.
‘இந்த உணவு வகைகளை நானே சமைத்தேன். இந்த நாட்டை
முழுமையாக அறிந்து கொள்ள வங்காளதேச உணவு வகைகளை நீங்கள் சுவைக்க வேண்டுமல்லவா?’ என்று அக்கறையுடன் கூறி பரிமாறத் துவங்கினான்.
மேற்கத்தைய
உணவு என்ற பெயரில் அதுவுமில்லால் இதுவுமில்லாமல், இடையில் ஒருவகை பண்டத்தை
எதிர் பார்த்திருந்த எனக்கு யூசுப்பின் பேச்சு அவன் மேல் அபிமானத்தை
ஏற்படுத்தியது. கோழிக் கால்களை துடையுடன் சேர்த்து வெட்டி மஞ்சள் தூளிலும்
மசாலாவிலும் பிரட்டி எடுத்து எண்ணையில் வதக்கி இருந்தாள். அவை நாட்டுக் கோழியின்
கால்களாக இருக்க வேண்டும். எண்ணையில் நன்கு வதங்கி சுருங்கி தவளைக் கால்கள் போல்
காட்சி யளித்தன. Hormoneஇல் வளர்ந்த ‘சப்’ என்ற கோழிக் கால்களை அவுஸ்திரேலியாவில் தின்று அலுத்த
மல்கத்துக்கு நாட்டுக்கோழி நன்கு சுவைத்திருக்கவேண்டும். எலும்பையும் மீதிவிடாமல்
சப்பி சுவைத்து மென்று கொண்டிருந்தான்.
‘அதிகம் சாப்பிடாதே. இந்த எண்ணையும் மசாலாவும்
உனக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்’ என நான் எச்சரித்தேன். வயிற்றுவலியால் அவன்
படுத்தால் வந்த அலுவல் முடியாதென்ற கவலை எனக்கு. அவனோ எதையும் காதில் வாங்காமல்
தொடர்ந்து அந்தக் கோழிக்கால்களை கடித்துக் கொண்டிருந்தான்.
ஆராச்சி
நிலையத்தில் பயிற்சி பட்டறையும் துவங்கியது. செய்முறை பயிற்சிகளை ஒழுங்கு செய்ய
வேண்டியது மல்கமின் வேலை. மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பின் போது மல்கம் தனது
கால்களை பக்கவாட்டுக்கு அகட்டிவைத்து நடக்கத் துவங்கினான். எனக்கு விசயம்
விளங்கிவிட்டது. அவனைக் கூப்பிட்டுக் கேட்டேன்.
‘பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தற்பாதுகாப்பிற்காக
‘நப்கின்’ கட்டியிருக்கிறேன்’ என்றான்.
யூசுப்
சமைக்கும் கறியின் சுவை அவனது நாவின் சுவை மொட்டுக்களை மீட்டியிருக்கவேண்டும்.
வயிற்றின் அலைக் கழிவுக்கு மத்தியிலும் காரமான உணவுவகைகளை கேட்டு வாங்கி
சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
மல்கத்தின்
சாப்பாட்டு மோகத்தினால், யூசுப் இப்பொழுது எம்முடன் அந்நியோன்யமாக பழகத் துவங்கினான். இரவு நேரங்களில்
எமது அறைக்கு வந்து நீண்ட நேரம் உள்ளூர் அரசியலும் ஊர்ப் புதினங்களும் பேசுவான்.
அப்பொழுதெல்லாம் நாளைய சமையல் பற்றிய சங்கதிதான் மல்கத்தின் பேச்சில்
முதலிடம்பெறும்.
தனக்கு கீழ்
பணிபுரியும் யூசுப், மல்கமுடன், அதுவும் ஒரு வெள்ளைக்காரனுடன், சிநேகிதமாக இருப்பது
மனேஜருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும். எமக்கு முன்னால் யூசுப்பை
காரணகாரியமின்றி அடிக்கத் துவங்கினான். அப்பொழுதெல்லாம் மல்கத்தின் கை
துருதுருக்கும். மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு மல்கத்தை நான் அடக்கி
வைத்திருந்தேன். அடுத்த சில நாள்களாக யூசுப் எமது அறைக்கு வரவில்லை. சாப்பாட்டு
அறையிலும் காணவில்லை. ‘உன் ‘தோஸ்துவை’ காணவில்லையே? என்ன நடந்தது?’ என்று மல்கத்தைக் கேட்டேன்.
‘பாவம் யூசுப், இரவில் சைக்கிள் றிக்ஷா
ஓட்டுகிறான்’ என்றான்.
‘மனேஜர் அவனை வேலையால் நிற்பாட்டி விட்டானா?’ எனக் கேட்டேன் யூசுப்பின் மீது அநுதாபம் மேலிட.
‘பரிமாறும் பணிக்கு வேறொருவனைப்
போட்டிருக்கிறான். எம்முடன் பேசக்கூடாது என்றும் தடுத்திருக்கலாம். அதுதான்
எம்முடன் அந்நியோன்யமாக பழகத் தயங்குகிறான்.’ பேச்சில் வெறுப்பு தொனிக்க கூறிய
மல்கம் தன் முகத்தை இருகைகளாலும் அழுத்தித் துடைத்தவாறு ஒரு புதிய வர்த்தமானத்தைச்
சொன்னான்.
‘ஏன் யூசுப்பை இப்படி நடத்துகிறாய் என்று நான்
மனேஜரிடம் நேரே கேட்டேன். அந்த ராஸ்கல் சிரித்து மழுப்பிவிட்டான். யூசுப்பின் மேல்
அவனுக்கு வெறுப்புவர வேறு காரணமும் இருப்பதாக அறிந்தேன். மனேஜரின் மகனும்
யூசுப்பின் மகனும் ஒன்றாக எட்டாம் வகுப்புக்குரிய அரச பரீட்சை எடுத்தார்களாம்.
யூசுப்பின் மகன் நாடளாவிய ரீதியில் அதிஉயர் புள்ளிகள் பெற்று
சித்தியடைந்திருக்கிறான். தனக்கு கீழ் பணிபுரியும் ஒருவனின் பிள்ளை தன் மகனை முந்துவதா என்கிற முறுகல். இதனால் யூசுப்பின் ‘வேலை நேரத்தில் வெட்டு’
போன்ற பல தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.’
‘பரீட்சையில் மகன் அடைந்த சித்திக்கும் வேலை
நேரத்துக்கும் என்ன சம்மந்தம்’ என நான் யோசிக்கும் அவகாசத்தை மல்கம் வைக்கவில்லை.
யூசுப் தன் மகனை உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட தொகை
முற்பணம் கட்ட வேண்டுமாம். அதுதான் யூசுப் இரவில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிறான்
என்றான்.
யூசுப் மீது
மல்கம் காட்டும் கரிசனை எமக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என நான் பயந்தேன். தங்கள்
உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதாக நிர்வாகம் எம்மீது குற்றம் சாட்டக்கூடும்.
இருப்பினும் யூசுப் விசயத்தில் பேசாமல் இரு என மல்கத்தை தடுக்கவும் மனசு வரவில்லை.
மல்கத்தின் பின்னால் வந்து ஓட்டிச் சலாம் போட்டுத் திரிந்த
மனேஜர் என்னுடன் திடீரென நட்புடன் பழக ஆரம்பித்தான். அவனுடைய எந்தச் செயலும்
ஒருவகை போலித்தனம் தென்படுவதை என்னால் உணர முடிந்தது. இதனால் அவனுடைய செயல்களை
மனசார வெறுத்த போதிலும் வெளியிற் காட்டிக் கொள்ளவிலலை.
மல்கம் வயிற்றை
திறந்து வைத்துக் கொண்டு கண்டதையும் கடியதையும் தின்றதினால் வயிற்றுப் போக்கு
அதிகமாகி Dehydration ஆகுமளவுக்கு வந்துவிட்டது. இந்நேரம் பார்த்து எனக்கும் காச்சலென்று துவங்கி, மலேரியாக் காச்சலாகி கைகால்கள் உதறத் தொடங்கிவிட்டன. எமது துர்அதிர்ஷ்டம்
எதிர்பாராத விதமாக எதிர்க் கட்சி ஒழுங்கு செய்த நாடளாவிய ஹர்த்தால் அப்போது ஆரம்பமாகியது.
வங்காள தேசத்தின் ஹர்த்தால்கள் மிகவும் மூர்க்கமானவை. அரச இயந்திரங்கள் எல்லாம்
முடங்கிவிடும். ஹர்த்தால் என்றாலே வங்காள தேசத்தவர் வீதிகளையும், நடமாட்டத்தையும் துறந்து வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடப்பார்கள். அறையில்
உள்ள ரெலிபோனில் உயர் அதிகாரிகள் உட்பட பலரையும் நாம் தொடர்பு கொள்ள எத்தனித்தோம். அனைத்தும் செயலிழந்திருந்தன. வங்காள தேசத்து அரசியல் கட்சிகள் மாறிமாறி நடத்தும் ஹர்த்தால் பற்றியும், முஜிபுர் ரஹ்மான் பெற்றுக் கொடுத்த சுதந்திர அரசு, கட்சி அரசியலின் கெடுபிடிக்குள் பிராணாவஸ்தைப் படுவதையும் நான்
அறிந்திருந்தேன். ஆனாலும் அதன் தாக்கத்தையும் கொடுமையையும் இப்படி நேரில்
அநுபவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. மனத் தெம்பை வரவழைத்துக் கொண்டு
மெல்ல எழுந்து நாம் இருக்கும் விருந்தினர் மண்டபத்தின் பின்புறத்தேயுள்ள மனேஜர்
வீட்டுக் கதவை தட்டி விபரத்தை சொன்னேன். ஜன்னலை இலேசாகத் திறந்தவன், ஆராச்சி நிலையத்தின் தொழிற்சங்கத் தலைவன், தான் என்றும், வெளியே வந்தால் ஹர்த்தாலை மீறியதாகிவிடும் என பயப்படுவது போல நடித்து ஜன்னலைச்
சாத்திக் கொண்டான்.
என்ன ஆச்சரியம்?
ஹர்த்தால்
கெடுபிடிகள் அனைத்தையும் ‘உச்சி’க்கொண்டு யூசுப் எங்கள் அறைமுன் நின்றான். மலேரியா
நோய்க்கான வில்லைகள், மல்கத்தின் வயிற் றோட்டத்தை நிறுத்துவதற்கான மருந்து வகைகள் குடிதண்ணீர்
ஆகியவற்றுடன் வந்திருந்தான். என்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அழுதுவிட்டேன்.
‘என்னய்யா? நீங்கள் இப்படி அழலாமா?’ என்று தேற்றியவாறே மருந்துகளைத் தந்தான். மானிடத்தை, சாக்கடை அரசியலினால் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்பதின் சாட்சியாய்
யூசுப் என் முன்னே நிற்கிறான், என்பதை விளங்கிக் கொள்ளுதல் மனசுக்கு சுகமாகவும்
இருந்தது.
ஹர்த்தால்
தொடர்ந்தது. எதிர்க்கட்சியின் பிரசாரத்தினாலும் போர்முனைப்பு நடவடிக்கைகளினாலும்
ஹர்த்தால் வேகம் பெற்றது. வங்காளதேசத்தின் இராணுவமும் ஹர்த்தாலை அடக்குவதற்கு
அரசுக்கு துணைபோக மறுத்தது. இந்நிலையில் வங்காளதேச அரசு கவிழ்ந்தது.
எதிர்க்கட்சியின் தொழிற்சங்கம் வெற்றிக்களிப்பில் திரிய, பதவி இழந்த கட்சி புதிய ஹர்த்தால் ஒன்றினை நடாத்த புதிய நியாயங்களை தேடிக்
கொண்டிருந்தது. ஆளும் கட்சிகளும் ஆட்சிகளும் மாறலாம். ஆனால் ஹர்த்தால்
போராட்டத்தின் வரலாறு தொடரும். நாடு விடுதலையானதும் அதனை நிறுவிய தலைவரே படுகொலை
செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இராணுவமும் அரசியல் கட்சிகளும் ஆட்சியைக்
கைப்பற்ற ஹர்த்தாலை வெற்றி தரும் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன.
ஹர்த்தால்
கெடுபிடிகளின் மத்தியிலே யூசுப் காட்டிய பரிவும் அக்கறையினாலும் உடல் தேறினோம்.
இந்நிலையில் நானும் மல்கமும் அவுஸ்திரேலி யாவுக்கு திரும்புவது எனத்
தீர்மானித்தோம்.
அன்று
புறப்படும் நாள்.
எம்மை
விமானநிலையத்துக்கு கொண்டு போகவென நாம் கேட்காமலேயே மனேஜர் காரை ஒழுங்கு
செய்திருந்தான். விசாரித்ததற்கு மேலதிகாரியின் உத்தரவு என்றான். கார் விருந்தினர்
மாளிகையின் போட்டிக் கோவிலேயே நிற்பாட்டப்பட்டிருந்தது. யூசுப் எமது பெட்டிகளைத் தூக்கி
கொண்டு வந்து காரிலே ஏற்றிக் கொண்டிருந்தான்.
‘குடிநீர் புட்டியை மறந்து விட்டீர்கள் அப்பா!’
என்று கத்தியவாறு சிறுவன் ஒருவன் ஓடிவந்தான்.
‘இவன்தான் பரீட்சையிலே ஜெயித்த யூசுப்பின் மகன்’
என அந்தப் பையனை அணைத்தவாறு மல்கம் அவனை அறிமுகம் செய்தான்.
பரீட்சையில்
ஜெயித்ததற்கு வாழ்த்துக் கூறிய நான், ‘எப்பொழுது புதிய உயர்நிலைப் பள்ளிக்குச்
செல்கின்றாய்?’ என்று வெகு யதார்த்தமாகக் கேட்டேன்.
மௌனமாக
நின்றான் பையன். யூசுப் மிடறு விழுங்கினான். பையன் தன்னை சுதாகரித்துக் கொண்டு
‘பாடசாலைக்கு கட்ட வேண்டிய பணத்தை அப்பாவினால் ‘கண்டுபிடிக்க’ முடியவில்லை…, இடையில் ஹர்த்தால் வந்து எல்லாவற்றையும் குழப்பிவிட்டது…’ என்றான். அவனுடைய
பதிலிலே மண்டிக் கிடந்த ஏக்கத்தினை நான் புரிந்து கொண்டேன்.
ஹர்த்தாலின்போது
யூசுப்பின் கருணையும் அக்கறையுமே மல்கமையும் என்னையும் மனிதர்களாகத் தேற்றி
எடுத்துள்ளது. அப்பொழுது அவன் ஜாடைமாடையாகக் கூட தன் பணத் தேவைகளைச் சொன்னதில்லை.
மனேஜர் தன் மீது திணிக்கும் அநியாய ஆதிக்கத்தைப் பற்றி முறைப்பாடு செய்ததும்
இல்லை. அவனுடைய பணத்தேவை அறிந்திருந்தும் அதனைப் பற்றி அக்கறைப்படாத என்னுடைய
மெத்தனத்திற்காக நான் வருந்தினேன். பிராயச்சித்தமாக என் கையிற்கிடந்த பணம்
முழுவதையும் அவன் கைகளில் திணித்தேன். பயணத்தின்போது எமக்கு பணம் தேவைப் படவும்
மாட்டாது.
நான்
யூசுப்புக்கு பணம் கொடுத்ததை மனேஜர் பார்த்திருக்க வேண்டும். சடுதியாக அந்த
இடத்திலே தோன்றி, ஏதோ சட்டவிரோதமான செயலைத் தடுத்து நிறுத்தும் தோறணையில், யூசுப்பின் கைகளிலே நான் திணித்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டான்.
எதற்காக இந்தப்
பணம்? என அவன் கேட்டான்.
இது அவனுக்கான
டிப்ஸ், அவ்வளவுதான்.
டிப்ஸ் என்பது
இங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது. அதுதான்
இங்குள்ள நடைமுறை’ என்று கூறிக் கொண்டேஇ அவ்வளவு பணத்தையும் தன் கோட்டின்
பைக்கற்றுக்குள் திணித்துக் கொண்டான்.
‘இது அவனுடைய சேவைக்கு மட்டும் கொடுக்கப்பட்ட
டிப்ஸ். எங்களைச் செத்துப் போகும்படி நிர்க்கதியாய் விட்டவன்தானே நீ!’ என்று மல்கம்
வழமைக்குமாறான கோபத்துடன் கத்தினான்.
‘Stop it, my dear foreign gust…! இங்குள்ள சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் மீறாதீர்கள். இது
உங்களுக்கும் நல்லதல்ல, எங்களுக்கும் நல்லதல்ல, என்றான் மனேஜர், கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, எங்களை உள்ளே தள்ளாத
குறையாக.
கூழைக் கும்பிடுகளுடன் திரிந்தவன், எப்படித் திடீரென்று அதிகார மமதையுள்ளவனாக
மாறினான் என நான் மலைத்தேன்.
டிரைவர் காரை
ஸ்ராட் செய்தான். யூசப்யும் மகனும் மனித முகங்களுடன் கையசைத்துக் கொண்டிருந்தார்கள்.
மனிதர்கள்
அதிகார வெறியினால் அந்நியர்களாக மாறுகிறார்களா?
விமானத்தின்
பறப்பு முடிந்தது!
இருந்தும், என் வினாவிற்கான விடை கிடைக்கவே இல்லை.
(குவியம், மே 2003)
.அருமை .
ReplyDelete