Saturday, 23 January 2021

 கையது கொண்டு மெய்யது பொத்தி

ஆசி கந்தராஜா

 

ந்தச் சிறுவன் எந்தவித சலனமுமின்றி நின்றான். பதினைந்து வயதுக்கு மேல் இருக்காது. கைகள் குருதியால் நனைந்திருந்தன. அவனருகில் நடுங்கியபடி அவள். பத்து வயது மதிக்கலாம். வயசுக்கு மீறிய வளர்ச்சி அவள் உடலில் தெரிந்தது. வயிற்றிலும் மார்பிலும் கசிந்த இரத்தம், கிழிந்து தொங்கிய அவளது சட்டையூடாக வடிந்து கொண்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலும், சிரிய அகதிகளும் லெபனானியர்களும் சிறுவர்களைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். பொலீஸ்காரன் ஒருவன் அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

லெபனான் தலைநகர் பெய்ரூத்திலுள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்துக்கு முன்னே, மத்தியதரைக் கடற்கரையோரம், காலையிருந்து மாலைவரை அகதிச் சிறுவர்கள் றோசாப் பூ விற்பார்கள். இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமோ முகவரியோ இல்லை. சிவப்பு றோசாக்கள் காதலின் சின்னமாகையால், மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் அவை அமோகமாக விற்பனையாகும். பெரும்பாலான அகதிச் சிறுவர்கள் பூ விற்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பிச்சை எடுப்பார்கள், அசந்தவர்களிடம் 'பிக்பொக்கற்' அடிப்பார்கள். பெய்ரூத் நகர பொலீசாருக்குப் பாரிய தலையிடியாக இருக்கும் இவர்கள், குற்றம் செய்து பிடிபட்டால் நேரடியாக சிறுவர்கள் தடுப்பு முகாமுக்கு அனுப்பப் படுவார்கள்.

இந்தக் கதையின் நாயகர்களும் அகதிச் சிறுவர்களே. இவர்கள் மேட்டுக் குடிச் சூழலில் வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரபு மொழியுடன் சரளமாக ஆங்கிலமும் பேசினார்கள். வேலை முடிந்து செந்தில்நாதன் கடற்கரை ஒரமாயுள்ள பரிஸ் வீதியால் நடந்து வரும்போது, இச் சிறுவர்கள் தினமும் பூ வாங்கும்படி கேட்பார்கள். பரிதாபத்தின் காரணமாக பலமுறை அவர்களிடம் ரோசா மொட்டுக்கள் வாங்கியிருக்கிறார். ஆனால் அவற்றைக் கொடுப்பதற்கு பெய்ரூத்தில் அவருக்கு யாருமில்லை. அவருடைய மனைவி சிட்னியில் இருந்தாள். இதனால் ஒரு முறை பூ வாங்காமலே சிறுவனுக்குப் பணம் கொடுத்தார். பணத்தை அவன் வாங்க மறுத்த பண்பும் அதற்கு அவன் சொன்ன காரணமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களைக் காணும் போதெல்லாம் நலம் விசாரித்து செந்தில்நாதன் அவர்களுடன் பேசுவதுண்டு. இப்படியானதொரு சந்தர்ப்பத்திலேதான், தனது பெயர் அலி எனவும் தங்கையின் பெயர் பாத்திமா எனவும் சிறுவன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

சிரிய சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்தான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்தார்கள். இவற்றுள் லெபனானே மிகச் சிறிய நாடு. 10,452 சதுர கிலோ மீட்டர்கள் மாத்திரம் கொண்டது. இந்நிலையில், 2015ம் ஆண்டு லெபனானில் தஞ்சம் அடைந்த சிரிய அகதிகளின் எண்ணிக்கையே 1.5 மில்லியனைக் கடந்திருந்தது. லெபனானின் 'பெக்கா' பள்ளத்தாக்கில் இவர்களுக்காக பாரிய பல முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் கடும் குளிரும், பனியும் நிலவுவதால் அதைச் சமாளிக்க முடியாது, அகதிகளில் பலர் இடம்பெயர்ந்து தலைநகர் பெய்ரூத்துக்கு வந்தனர். பெய்ரூத்தில் இவர்களுக்கு அகதி முகாம்கள் இல்லை. இதனால் பலர் பிச்சை எடுத்தார்கள். பெண்களில் சிலர் சோரம் போனார்கள். நிர்க்கதியான சில பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் ஐ.நா சபை பட்டியலில் தொலைந்து போவர்களாகப் பதியப்பட்டார்கள்.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலப்போ மிகவும் புராதனமான நகரம். யுத்தத்துக்கு முன்னர் அலப்போவை தரிசிப்பதற்காகவே உல்லாசிகள் சிரியாவுக்கு படையெடுப்பார்கள். பல வருடங்களாக சிரியாவில் தொடரும் கொடிய யுத்தத்தினால் தற்போது அது பாதிக்கப்பட்டு உலகின் கைவிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

அலப்போவிலுள்ள அமெரிக்க பாடசாலை ஒன்றில் இவர்களது தந்தை நீண்டகாலம் அதிபராக பணியாற்றியதாக அலி சொன்னான். அங்குதான் இவர்களும் கல்வி கற்றார்களாம். தந்தை இறந்த பின்னர் தாயுடன் 'அன்ரி லெபனான்' (Anti-Lebanon mountain) மலையைத் தாண்டி, லெபனானுக்கு நடந்து வந்தாகச் சொன்னான்.

பரிஸ் வீதியருகே, கடற்கரை ஓரமாகவுள்ள ஒரு பொதுக் கழிப்பிடத்தில் குளிப்பதற்கும் வசதியுண்டு. பெய்றூத் மாநகர சபை அதை ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருந்தது. அதிகாலை வேளையில் ஒரு தோல் பையுடன் வரும் அலியும் தங்கையும் அங்கு காலைக் கடன்களை முடித்தபின் பூ விற்க்கத் துவங்குவார்கள். அலி பேசிய இலக்கண சுத்தமான ஆங்கிலம் செந்தில்நாதனின் நட்பை மேலும் நெருக்கமாக்க, மாலையில் வேலை முடிந்து அவர் வரும் போது வாசித்து முடித்த ஆங்கில சஞ்சிகைகளை, அலி கேட்டு வாங்குவான். மறுநாள் தான் வாசித்த கட்டுரைகள் பற்றி அலி ஆக்கபூர்வமான கருத்துக்களை செந்தில்நாதனுடன் பகிர்ந்து கொள்வான். அவனிடம் வயதுக்கு மீறிய விவேகமும் அறிவும் இருந்தன. 'இப்படியானதொரு புத்திசாலிச் சிறுவது எதிர்காலம் என்னவாகும்...?' என செந்தில்நாதன் பல முறை கவலைப் பட்டதுண்டு. இதனால் அவர்கள் மீது இயற்கையான பரிவு ஏற்பட, அவர்களை லெபனீஸ் 'ஹெபாப்' (Kebab) சாப்பாட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றார். அன்றைய தினம் தாயாரின் ஆண்டுத் திதி என்பதால் இரண்டு சோடி உடுப்புக்களும் அவர்களுக்கு வாங்கியிருந்தார். அவர்களுக்கு மிகுந்த சந்தோசம். 'ஹெபாப்' சாப்பிடும் போது பலமுறை அவருக்கு நன்றி சொன்னார்கள். கதையோடு கதையாக 'பெக்கா' பள்ளத் தாக்கிலுள்ள அகதி முகாம் வாழக்கை பற்றி செந்தில்நாதன் கேட்டார். அலி 'ஹெபாப்' சாப்பிடுவதை நிறுத்தி தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பாத்திமாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 'அந்தப் பிஞ்சுகளின் மனசைக் காயப்படுத்தி விட்டேனோ...?' என செந்தில்நாதன் தவித்தபோது, அலி தன்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்தி பெரிய மனுஷத் தோரணையில் பேசத் துவங்கினான்.

'சேர், சிரிய அரசுக்கும் பல்வேறு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் சண்டை நடைபெறுவதாக வெளியே சொல்லப்பட்டாலும், எனது அறிவுக்கு எட்டியவரை இது ஷியா பிரிவைச் சார்ந்த சிரிய அரசுக்கும் சுனி பிரிவினரான கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் நடைபெறும் யுத்தமே...' என்றவன் திடீரென வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து, அவசரமாக ரொயிலெற்றை நோக்கி நடந்தான்.

வெளியே, 'பிசுபிசு'வென மழை பெய்து கொண்டிருந்தது. இடையிடையே வெய்யிலும் தூறலும் இணைந்த அர்த்தநாதீஸ்வர கோலம். மத்திய தரைக் கடலிலே வானவில் வர்ணங்கள். இப்படியானதொரு மழை நேரத்தின்போதே, செந்தில்நாதன் பஸ் தரிப்பு நிலையமெமான்றில், முதல் முறையாக அலியைச் சந்தித்தார். அவன் தங்கள் நாட்டின் போர் நிலவரம் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு நின்றான். அவர்களின் உரையாடல் சற்று அதிகப்பிரசங்கித் தனமாக இருந்தது. ஆனால், கால ஓட்டத்தில் அவர் சந்தித்த சிரிய அகதிகள் அனைவருமே, வயது வித்தியாசமின்றி தமது நாட்டின் அரசியல் பின்னணியை ஆதியோடந்தமாகத் தெரிந்து வைத்திருப்பதை செந்தில்நாதன் அவனித்தார். 

வயிற்றின் அலைக்கழிப்பிலிருந்து மீண்ட அலி, தான் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தான்.

'சேர்.... நீங்கள் ‘சாவை’ நேரடியாகப் பார்த்தீர்களோ தெரியாது. ஆனால் நான், கொடூரமாக பலர் கொல்லப் படுவதை நேரில் கண்டிருக்கிறேன். விடுதலையின் பெயரில், அப்பா மதசாயம் பூசப்பட்டு எங்கள் முன்னிலையில் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டார். அன்றிரவே அலப்போவை விட்டுப் புறப்பட்ட நாங்கள், இருபத்தொரு நாள்கள் மலையைத் தாண்டி நடந்து, லெபனானிலுள்ள பெக்கா முகாமுக்கு வந்தோம்...'

அலி உணர்ச்சி வசப்பட்டதால் அவனது உதடுகள் நடுங்கின. அவனைச் சற்று சாந்தப்படுத்தும் நோக்கில், 'இந்து மதத்திலும் சைவம், வைஸ்ணவம் என்ற பிரிவுகள் உண்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையேயும் சண்டைகள் நடந்ததுண்டு. ஆனால் அந்த விரோதம் படிப்படியாக மறைந்து போயிற்று' என்றார் செந்தில்நாதன்.

'சேர், பிரச்சனை அதுவல்ல. சிரியாவில் இஸ்லாமியர்கள், கிறீஸ்தவர்கள் மற்றும் டூறூஸ்(Druze) மதத்தவர்கள் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம். இதேபோல பெக்கா பள்ளத்தாக்கிலுள்ள அகதி முகாமிலும் எல்லா மதத்தவர்களும் இருந்தார்கள்...' என்றவன் மேலும் தொடர முடியாமல் விக்கிவிக்கி அழுதான்.

'அலி, விட்டுவிடு. வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவோம்' என்றவாறு எழுந்து சென்று அவர்கள் இருவருக்கும் செந்தில்நாதன் ஐஸ்கிறீம் வாங்கி வந்தார்.

'எனது மனக் குமுறல்களை வெளியில் கொட்டுவதற்கு எனக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது, என்னைச் சொல்ல விடுங்கள். என்னுடைய தாயார் சமூக சேவகியாக சிரிய அரசில் பணியாற்றியவர். தனது சோகங்களுக்கு வடிகாலாக, அகதி முகாமிலும் அவர் சேவை செய்யத் துவங்கினார். இதனால் உணவுப் பங்கீடு செய்வதற்கு உதவுமாறு முகாம் அதிகாரி கேட்டுக் கொண்டார். இது பெக்கா பள்ளத்தாக்கில் இயங்கும் சிரிய கிளர்ச்சிக் குழுவுவொன்றுக்கு ஏனோ பிடிக்கவில்லை...'

இந்த இடத்தில் அலி தனது முகத்தை அழுத்தித் தடைத்தபடி அமைதியாக இருந்தான். பின்னர் தங்கை பாத்திமாவை உணவுச் சாலையில் சிறுவர்கள் விழையாடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அனுப்பிய பின் கதையைத் தொடர்ந்தான்.

'ஒரு நாள் முகத்தை மூடிய கிளர்ச்சிக் குழுவினர் துப்பாக்கிகள் சகிதம் எங்கள் கூடாரத்துக்கு வந்தார்கள். பயம் காரணமாக ஏனைய அகதிகள் தங்கள் கூடாரங்களுக்குள்ளே அடங்கிக் கிடந்தார்கள். வந்தவர்களுள் இருவர், துப்பாக்கிகளை எங்கள் தலைகளில் குறி வைக்க, எங்கள் முன்னிலையிலேயே தாயாருடன் மாறிமாறி அவர்கள் வல்லுறவு கொண்டார்கள். இறுதியில் நெற்றிப்பெட்டில் சுட்டு  நிர்வாணமான அவரது உடலை கூடாரத்துக்கு வெளியில் வீதியோரம் எறிந்து விட்டு சென்றார்கள்.

இதைச் சொல்லும் போது அவனுடைய முகம் இறுகிக் கறுத்திருந்தது. அலி மனம் விட்டு அழாதது செந்தில்நாதனுக்கு பயமாகவும் இருந்தது. எந்தவித சலனமுமின்றி அவன் வீதியை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.

அன்றைய சந்திப்பின் பின்னர் செந்தில்நாதன் சிறுவர்களைக் காணவில்லை. இன்று, இரத்தச் சகதியின் மத்தியிலே அவர்களைக் கண்டதும் விறைத்துப் போனார். சுற்றி நின்றவர்கள் அரபு மொழியில் குசுகுசுத்தார்கள். அங்கு நடந்ததை செந்தில்நாதன் மெல்லப் புரிந்து கொண்டார்.

பூக்கடையின் ஓரமாகவுள்ள ஓடையிலே அலி தன்னுடைய தங்கையுடன் இரவில் தூங்குவான். பாத்திமாவின் பூரிப்பான உடல் அங்குள்ள ஒருவனின் கண்களை உறுத்தவே சமயம் பார்த்துக் காத்திருந்தவன், அலி காலைக் கடன் கழிக்கச் சென்ற நேரம், பாத்திமாவை கெடுக்க முயற்சித்திருக்கிறான். அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்த அலியால், அவனை விலக்க முடியவில்லை. பார்த்திமாவின் சட்டையைக் கிழித்து, பிடியை அவன் மேலும் இறுக்கவே, தண்ணீர் கொண்டு வந்த கண்ணாடிப் போத்தலை உடைத்து அவனுடைய கழுத்தில் பலமுறை குத்தியிருக்கிறான். கழுத்திலுள்ள நாடி நரம்புள் அறுந்து குருதி பெருகிய நிலையில் ஓட நினைத்த காமுகன் பூக்கடையின் முன்னால், வீதியோரமாக சாய்ந்தான்.

அங்கு நின்ற பொலீஸ்காரன் கொடுத்த தகவல் அறிந்து, பொலீஸ் வண்டி வரும் சைரன் ஒலி வெகு தூரத்தில் கேட்டது. பொலீஸ் வண்டியை சம்பவ இடத்துக்கு அழைத்துவர பொலீஸ்காரன் பிரதான வீதிக்குச் சென்றான். பொலீசில் அகப்பட்டால் சிறுவர்களது வாழ்க்கை முற்றிலும் சீரழிந்துவிடும். வெளிநாட்டிலிருந்து வந்து தொழில் புரியும் செந்தில்நாதன் இதில் தலையிடுவது நிலமையை மேலும் சிக்கலாக்கும் என்பதை அவர் அறிவார். இவர்களை எப்படிக் காப்பாற்றலாம் என்ற பதகளிப்பில் அவர் தவித்தபோதே, அது நடந்தது.

எங்கிருந்தோ ஒரு இஸ்லாமியப் பெரியவர் ஒரு வாளி நிறைய தண்ணீருடன் வந்து, சிறுவர்களின் தோல்ப்பை இருந்த ஓடைக்குள் அவர்களை அழைத்துச் சென்றார். துரித கதியில் அவர்களைச் சுத்தப்படுத்தி உடையை மாற்றி 'இங்கிருந்து தப்பி ஓடிவிடுங்கள்' எனக் கலைத்து விட்டார்.

அந்த அதிகாலை வேளையிலும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், அங்கு சுவராஸியம் குறையவே மெல்லக் கலைந்து போனார்கள். பொலீசாரின் கைகளில் சிக்கி, சிறுவர்களின் வாழ்க்கை சீரழியாமல் காப்பாற்றிய இஸ்லாமியப் பெரியவரும், கலைந்து சென்ற கூட்டத்துடன் சங்கமித்தார். லெபனானிலுள்ள அகதிகள் சமுத்திரத்தில், சிறுவர்களை இனிமேல் பிடிக்க முடியாதென்பது செந்தில்நாதனுக்கு சற்று ஆறுதல் தந்தது. பெரியவர் சென்ற திசையை நோக்கி 'சலாம்' வைத்த செந்தில்நாதன், கனத்த மனசுடன் வேலைக்குச் சென்றார்.

தெருவில் கிடந்த காமுகன் சடலத்தினருகே, தெரு நாயொன்று குந்தி இருந்தது!

('ழகரம்' கனடா, ஜூன் 2016)

 

 

 

No comments:

Post a Comment

.