காலமும் களமும்
ஆசி கந்தராஜா
விதானையார் மாமா அந்த முடிவை எதிர்பார்க்கவில்லை.
தோல்வி என்பதை விட, அந்த அவமானத்தை அவரால் தாங்கவே முடியவில்லை. விசாலாட்சி காட்டிய ‘பவிசு’
அவரைச் சுட்டெரித்தது. ஊராக இருந்திருந்தால் இற்றை வரை அங்கு ஒரு பிரளயமே நடந்து
இருக்கும். ஆனால் அவர் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் அல்லவா வாழ்கிறார்!
அனுசரித்துப்
போவதென்றால் மூலையில் முடங்கிக்கிடப்பது தானோ?
‘இரண்டு நாட்களாக அப்பா அறைக்குள்ளேயே படுத்துக்கிடக்கிறார். நீ ஒருகால் வந்து
பார்த்தியானால் அவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்…’ என்று ரெலிபோனில் கூறினாள்
கல்யாணி. அவள் விதானையார் மாமாவின் மகள். ஹோம்புஸில் வாழும் சிட்னிவாசி.
விதானையார் மாமாவின் பெருமைகளை நான் ஊரிலேயே அறிந்தவன். எனக்கு அவர் தூரத்து உறவு. மரியாதையின் நிமித்தம் அவரை நான் மாமா என்று அழைத்துப் பழகிவிட்டேன்.
இரண்டு மூன்று
தலைமுறைகளுக்கு மேலாக மாமாவின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் விதானையார் தொழில்
பார்த்து வந்தது. அறுபதுகளின் பிற்பகுதியில் விதானையார் முறை மாறி கிராமசேவர் பதவி
அமலுக்கு வந்த பொழுதும், மாமா தொடர்ந்து பதவி வகித்து ஐம்பத்து எட்டு வயதிலே பென்சன் வாங்கியவர். அதன்
பிறகும் அவர் ‘விதானையார்’ என்றே அழைக்கப்பட்டார்.
விதானையார்
வீடும் வளவும் ஊரில் மிகப்பெரியது. ஓர் எல்லையில் நின்று மறு எல்லையை நிதானிப்பது
சிரமம். அடாத்தாகப் பக்கத்துக் காணிகளைப் பிடுங்கிச் சேர்த்த சொத்து என்று ஊரில்
பலரும் பேசிக் கொண்டார்கள். எனது பாட்டியின் சீதனக் காணியையும் விதானையார்
மாமாவின் தகப்பன் சுருட்டி எடுத்தவர் என அம்மா புறுபுறுப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
இவை பழங்கதைகளும் பழங்கணக்குகளும்! இருப்பினும் விதானையார் மாமா ஊருக்கு பெரிய
மனுஷன் என்கிற பிம்பமே என் மனதில் இன்றும் நிலைத்துள்ளது.
விதானையார்
மாமாவின் ஒரே மகன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். பணத்திமிருடன் ஊர் சுற்றுவான்.
படிப்பு விடயத்தில் என்னில் தங்கியிருக்க வேண்டியிருந்தால் என்னுடன் நன்கு
ஒட்டிக்கொண்டான். நான் வாத்தியார் மகன்! அப்பா தொழில் தர்மம் பேணி வாழ்ந்ததினால்
ஊர் மக்களின் மரியாதையை சம்பாதித்தவர். வாத்தியார் மகன் தப்புத் தண்டாவிற்கு போகக்
கூடாதென்பது எங்கள் ஊரின் எழுதாத விதி. இதனால் விதானையார் மகனின் நட்பு
பலவழிகளிலும் எனக்குப் பாதுகாப்பாக இருந்தது.
பாடசாலை
தவிர்ந்த மற்றை நேரங்களில் விதானையார் வளவிலேயே நான் காலங்கழிப்பதுண்டு.
விதானையார் மாமிக்கு என்னை நன்கு பிடிக்கும். மாமாவின் தில்லுமுல்லுகளைச்
சமப்படுத்துவது மாமி பாக்கியமே. அவர் அந்த வீட்டின் லஷ்மி, மங்கல விளக்கு! மாமா தோட்டம் செய்பவர்களுக்குக் காசு கடன் கொடுப்பார்.
புகையிலை, மிளகாய் விற்றவுடன் அவர்கள் காசைத் திருப்பிக் கொடுப்பார்கள். கொடுத்த
காசுக்கு மேலாக அடுத்தவாரமே கடன் வாங்குவார்கள். மாமாவைக் கண்டாலோ, இவர்கள் தோளில் இருக்கும் சால்வையைக் கமக்கட்டிற்குள் எடுத்து வைத்து மரியாதை
செய்வார்கள். வட்டியின்றிக் கொடுக்கும் கடனுக்கு மாமா எதிர்பார்ப்பதும் இதுதான்.
மாமாவின் கொடுக்கல் வாங்கல் கணக்குகளைப் பெயரிதொரு கொப்பியில் எழுதிவைக்கும்
பொறுப்பை என்னிடமே தந்திருந்தார். வரவு ஒரு பக்கத்திலும், செலவு எதிர்ப் பக்கத்திலுமாக மாதா மாதம் கணக்கு எழுதவேண்டும். சிக்கலான
வழக்குகள் வந்தால் அதை முறைப்படி பதிவேட்டில் பதியவும் என்னையே கூப்பிடுவார்.
இதனால் நான்
மாமா வீட்டில் செல்லப் பிள்ளையாக உலா வந்தேன்.
பஞ்சாங்கத்திலே
எழுதி வைக்கப்பட்ட விரதம் எதுவும் வீட்டிலே தப்பாது. விரதம் என்றாலே சைவச்
சாப்பாடுதான். எனக்கோ அசைவம் வேண்டும். அதனால் பெரும்பாலான நாட்களில் நான் மாமா
வீட்டிலேயே சாப்பிடுவேன். அங்கு அசைவம் சமைப்பதற்கென்றே புறம்பான கொட்டில் உண்டு.
ஊரில் ஆட்டுக்
கடா களவு போகும். களவு கொடுத்தவர்கள் முன் வாசலால் வந்து வழக்கைப் பதிந்து விட்டு
போவார்கள். ‘கடா’ களவெடுத்த வல்லி பின்வளவால் வந்து இறைச்சி கொடுத்துவிட்டுப்
போவான். மாமி அந்த இறைச்சியை கையாலும் தொடமாட்டார். அங்கு வேலை செய்யும்
சின்னாச்சியால் அது குடிலுக்குள் குழம்பாக்கப்படும். இறைச்சி மாமாவின்
வயிற்றுக்குள் இறங்கியதும் களவு பற்றி எழுதப்பட்ட முறைப்பாட்டுப் பத்திரமும்
குப்பைக் கூடைக்குள் போகும்.
சனிக்கிழமை
மாமாவிற்கு முழுக்கு நாள். அன்று வேறு எந்த வேலையும் வைத்துக் கொள்ள மாட்டார்.
காலையில் எழுந்தவுடன் வழக்கம் போல முட்டைக் கோப்பி வரும். சூரியன் மேலே எழும்பத்
தொடங்க, வட்டுக்கோட்டையிலிருந்து ஸ்பெஷலாகவே வர வழைக்கப்பட்ட நல்லெண்ணையுடன் மாமி அவர்
முன் ஆஜராவார். மாமா நாலு முழத் துண்டுடன் நாற்சார் முற்றத்தில் சம்மணம் போட்டு
அமர்ந்து கொள்வார். மாமி சூடுபறக்கஉடம்பெல்லாம் எண்ணை தேய்த்து விடுவார். மாமா
ஊரிலே ‘மேய்ந்து’ திரிவது மாமி அறியாத விஷயமல்ல. இருப்பினும் இந்தச் சனிக்கிழமைப்
பதிசேவை தனக்கே உரியதென மாமி மகிழ்வார்.
பனங்கள்ளுக்
காலத்தில், பின்வளவுக்குள் கதிரவேலுவினால் இறக்கப்பட்ட தனிப் பெண் பனைகள்ளும் தும்பு
செதுக்கிய சிரட்டை ஒன்றும் முற்றத்தை ஒட்டிய கதவோரம் வைக்கப்பட்டிருக்கும்.
சிரட்டையின் வெளிப் புறத்தை எண்ணைக் கையால் பொலிஷ் செய்தவாறே கள்ளை ஊற்றி
மாமாவிடம் கொடுப்பார். அவர் குடித்து முடிக்கும் வரை அருகில் இருந்து கதை
‘பறை’வார் மாமி. இந்தப் பணிவிடைகள் நடைபெறும் பொழுது நான் மாமியை நினைத்துப்
பரிதாப்படுவதுண்டு.
மாமா
சனிக்கிழமை தவிர்த்த மற்றைய நாட்களில் கள்ளுக் குடிக்கும் சாட்டில் கதிரவேலுவின்
வீட்டிற்கு இரகசியமாகப் போய் வருவார். விதானையார் வருவதை பெருமையாக எடுத்துக்
கொண்டது கதிரவேலு குடும்பம். கதிரவேலுவின் வாட்டசாட்டமான பெடியன் விதானையாருக்குப்
பிறந்ததென பின்னொரு காலத்தில் ஊரில் ‘கிசுகிசுக்கள்’ உலாவின.
சிட்னியிலுள்ள
தனியார் நிறுவனமொன்றின் கணக்காளர் நான். வருட இறுதியில் அடுத்த நிதியாண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தைப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் நத்தார்
லீவும் வருவதால் ஊழியர்களின் சம்பளத்தை நேரகாலத்துடன் அவர்களின் வங்கிக்
கணக்கிற்கு அனுப்புதல் வேண்டும். வேலை மிகுதியால் மாமாவை உடன் சென்று பார்க்க
முடியவில்லை.
‘நாள் முழுதும் அப்பா ஒன்றுமே
சாப்பிடவில்லையென்றும் முடிந்தால் இன்றிரவே வீட்டிற்கு வருமாறும்’ ரெலிபோன் ஆன்ஸரிங்
மெஷினில் தகவல் விட்டிருந்தாள் மாமாவின் மகள் கல்யாணி. வேலையால் வீட்டிற்கு வந்த
நான் மனைவி தந்த தேநீரை அருந்திவிட்டு, மாமாவிடம் செல்ல மீண்டும்
காரில் ஏறிக் கொண்டேன்.
மாமாவிடமும்
ஊரில் பழைய மொடல் ‘ஒஸ்ரின்’ கார் ஒன்றிருந்தது. செட்டி அதை ஓட்டுவான். அந்தக் காரை
தினமும் கழுவி, மண்ணெண்ணையும் ஒயிலும் கலந்த திரவத்தால் பொலிஷ் பண்ணி போட்டிக்கோவில் நிறுத்த
வேண்டும்.
மாதத்தின்
முதலாம் திகதி மாமாவிற்குச் சம்பள நாள். அவர் யாழ்ப்பாணக் கந்தோருக்குப் (Office) போக வேண்டும். அன்று மற்ற ஊர் விதானைமாரும் சம்பளம்மெடுக்க கந்தோருக்கு
வருவார்கள். அன்று மாமியும் காரில் பட்டணம் செல்வார். மாமி உடுத்திப்படுத்து
நிற்கும் பொழுது சாட்சாத் அந்த மகாலஷ்மியே பிரசன்னமானது போல் இருக்கும். மாமா
அன்று கந்தோருக்குச் செல்லும் போது செவ்விளநீரும் வாழைக் குலையும், மற்றும் பிறவுமாக கையுறையால் கார் நிரம்பியிருக்கும். இவை அதிகாரிகளுக்கும் சக
விதானைமாருக்கும் மாமாவின் அன்பளிப்பு. இந்தத் தாராள சுபாவத்தினால் மாமாவின்
செல்வாக்கு யாழ்ப்பாணக் கந்தோர் மட்டத்திலும் கொடிக்கட்டிப் பறந்தது.
ஊரிலே, விதானையார் மாமாவிற்கு பதவிகள் பல தானாகவே வந்தன. பல சமூக அமைப்புகளும்
வருந்தி அழைத்து தலைமைப் பதவிகள் வழங்கின. ஏதாவது ஒரு பதவிக்கு அவர் ஆசைப்பட்டால்
அது அவருக்கு கிடைக்க வேண்டும். அதனை அடைவதற்கு சாம, பேத, தான, தண்டம் என எந்த உத்தியையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார். இந்தப் பதவிகளை
மக்கள் மத்தியிலே தனக்கிருந்த செல்வாக்கினை அளக்கும் ஒரு கருவியாகவே அவர்
கருதினார். சமூக சேவையின் ஈடுபாட்டினாலும், பதவிகளை அடைவதற்கு அவர்
கையாண்ட செலவு சித்தாய நடவடிக்கையாலும் குடும்பச் சொத்தை அழித்ததாகவும், அது இருந்திருந்தால் இப்பொழுது நாலு ‘இன்வெஸ்ற்மென்ட்’ வீடுகள் சிட்னியில் வாங்கி இருக்கலாமென்றும் மகள் கல்யாணி குற்றம்
சாட்டுவதுண்டு. மாமா பண விஷயத்தில் கருமியல்ல. பதவிக்கும் புகழுக்கும் முன்னால்
காசை அவர் பொருட்டாக மதித்ததில்லை. செல்வத்தையும். செல்வாக்கையும் ஊரில்
வாழ்ந்தனுபவித்தவர் அவர்.
அவராகவே தேடிப்
போகாது பரம்பரையாக கிடைத்த பதவிகள் ஒன்று ஊரில் உள்ள முருகன் கோயில் மணியகாரன்
பதவி. முருகன் கோயில் மாமாவின் பரம்பரைச் சொத்து. பத்து நாட்கள் அங்கு திருவிழா
நடைபெறும். தேர் தீர்த்தம் ஒன்றாகப் பத்தாம் நாளும், அதைத் தொடர்ந்து பதினொராம்
நாள் நடைபெறும் திருக்கல்யாணமும் மாமாவின் செலவிலேயே நடைபெறும். இத்திருவிழாக்களில்
சிகர சப்பர சோடணைகள் அசத்தும். யாழ்ப்பாணத்தில் உள்ள நாதஸ்வர தவில் வித்வான்கள்
அனைவரும் கானமழை பொழிவார்கள். இவை மாமாவின் செல்வாக்கினால் முருகன் திருவிழாவுக்கு
இலவசமாகக் கிடைக்கும் சிறப்புகள்.
அன்று
திருக்கல்யாணம்.
பிரபல
நாதஸ்வரம் வித்வான்களின் இசை காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. குருக்கள்
மந்திரத்தை உச்சரித்தபடி அம்மன் கழுத்தில் தாலியை ஏற்றப் போகையில் அது சடுதியில்
நிகழ்ந்தது. விதானையார் மாமாவின் மகன், குருக்களின் கையிலே இருந்த
தாலியைப் பறித்து அங்கு தயாராக நின்ற மேளகார ராசதுரையின் மகள் கழுத்தில்
கட்டினான். மக்கள் மருண்டு அல்லோல கல்லோலப்பட, அந்தச் சோடி சிட்டாய்
பறந்து மறைந்தது.
மகனைச்
சுடுவதற்காக மாமா அடிப்பட்ட புலிபோல், துவக்கும் கையுமாக
ஊரெல்லாம் சுற்றித் திரிந்தார். துவக்குடன் எனது வீட்டிற்கு வந்தவரின் காலில்
விழுந்து ‘எனக்கு எதுவுமே தெரியாது தெரியாது மாமா’ எனக் கதறினேன். என்னை அன்று
அவர் உயிருடன் விட்டது அதிசயம் தான். இளம் ஜோடி எப்படியெல்லாமோ மறைந்து வாழ்ந்து
லண்டனுக்குத் தப்பியோடிவிட்டது. அங்கு அவன் மனைவியுடன் நல்லநிலையில் இருப்பதாக
பலரும் சொன்னார்கள்.
அவன்
தந்தையுடன் பாச உறவினைப் புதுப்பிக்க சகல முயற்சிகள் எடுத்தும் மாமா இன்றும் அவனை
மன்னிக்கத் தயாராக இல்லை. மகன் இப்படி தந்தையின் முகத்திலே கரியைப் பூசி மறைந்த சோகத்தில் மாமி அதிக
காலம் வாழவில்லை. மாமி இறந்த பின் மாமா ஆடிப் போய்விட்டார்.
அப்பொழுதுதான்
விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் யாழ்ப்பாணம் வந்தது. ஸ்ரீலங்கா
அரசாங்கத்தின் ஊழியர்களான கிராம சேவகர்கள் அதிகாரமற்றவர்களாக்கப்பட்டு இயக்க
முக்கியஸ்தர்கள் சிவில் நிர்வாகத்தையும் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள். மாமாவின்
அதிகரத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு கள்ளிறக்கும் கதிரவேலுவின் மகன் நியமிக்கப்பட்டான்.
தான் கட்டியாண்ட அதிகரம் கதிரவேலுவின் மகனிடம் வந்ததில் மாமாவிற்கு உள்ளுரச்
சந்தோஷம் தான். பரம்பரை தொடர்கிறது என எண்ணிக் கொண்டார் போலும். இருப்பினும், வாழ்க்கை வெறுமையாகியது போன்ற உணர்வு. எத்தனை காலத்துக்குத்தான்
முகட்டைப் பார்த்துக் கொண்டு பழம் பெருமைகளை இரைமீட்டுக் கொண்டிருப்பது. ஊரிலும் கொழும்பிலும் வாழ விரும்பாது அவருடைய மகள் கல்யாணி
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்து, சிட்னி வாசியாகிவிட்டாள்.
அவளுடைய மகன்கள் இருவரும் நன்றாகப் படிக்கிறார்களாம். நீச்சல் குளத்துடன் கூடிய
பெரிய வீடு, இரண்டு கார்கள் என ஏக தடல்புடல்களுடன் அவள் வாழ்வதாகவும் அறிந்தார். ‘கடைசிக்
காலத்தில் பால் பருகுவதற்கு உங்கள் போர்களாவது பக்கத்தில் வேண்டாமா? என்று பலவாறு எழுதி மாமாவின் மனைசக் கரைத்து விட்டாள் கல்யாணி. அவளுடைய
வற்புறுத்தல் தாங்காமலும், மறைமுகமாகத் தனிமையும் வெறுமையும் விரட்டியதாலும் இப்பொழுது விதானையார்
மாமாவும் சிட்னி வாசியாவிட்டார்.
மாமாவைவப்
போலவே நாட்டு நிலைமையைக் காரணம் காட்டி பிள்ளைகளின் ஸ்பொன்ஸரில் யாழ்ப்பாணத்து ‘பென்சன்காரர்’ பட்டாளமொன்றே சிட்னியில் வாழ்வதைப் பார்த்து
மாமா விக்கித்துப் போனார். ‘ஊரில் இவங்களை விலாசமாக யார் மதித்தவர்கள்? Nobodyயாக ஊரில் இருந்தவர்கள், சிட்னியில் Somebodyயாக விலாசமிட்டு மின்னுவது
மாமாவின் உள்ளுறை சுபாவத்தைக் கிளறிவிட்டது. ஊரிலே வாழ்ந்ததுபோல், தலைமைப் பதவிகளுடன் வாழ்வதுதான் விதானையார் மாமாவிற்கு மதிப்புத் தரும் என்று
விஸ்வலிங்கம் மாஸ்டரும் தூண்டிவிட்டார். இதனால் சமூக அமைப்பின் தலைவராகும் ஆசை
நாளடைவில் மாமாவின் உள்ளத்தில் விஸ்வரூபம் எடுக்கலாயிற்று.
கோவில்
தர்மகத்தா பதவி மாமாவுக்கு அச்சொட்டகப் பொருந்தும். அதில் அவரைவிட விண்ணன்
சிட்னியில் யாருமில்லை. ஆனால் அதிலே இவருக்கு புரியாத சில புதிய சூக்குமங்கள்
புகுந்து விளையாடுவது மாமாவுக்கு புதிசு. பிறப்பால் அவர் கோயில் மணியகாரன்! வீடு
வீடாக எலெக்ஷனில் வெல்ல ‘Proxy’ கேட்டு அலைவது ஆண்டவன் திருப்பணியாகாதென விஸ்வலிங்கம் மாஸ்டரிடம், மாமா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
மாமாவிலும்
பார்க்க, மாமாவுக்குத் தலைவர் பதவி என்னும் ‘தலைப்பா’ கட்டிப்பார்க்க விஸ்வலிங்கம் மாஸ்டரே மூர்க்கமாக விரும்பினார். அவருடைய சுபாவமே அப்படி. கூட்டுறவு இயக்கம், ஆசியர் சங்கம் என்று ஊரில் அவருக்கு எலெக்ஷன் தண்ணீர்பட்டபாடு. அவர்
எப்பொழுதும் பிரபல்யமான ஒருவரைத் தூண்டிவிடுவார். அந்த ஆள் வெற்றி பெற்றதும் தன்
பிரயாசைகளுக்காக ஒரு சிறிய பதவியை ‘தட்டிப்’ பறித்துக் கொள்வார். திரை மறைவு
அதிகாரங்கள் அவருக்குப் போதும். ‘சுழியன்’ என்றாலும் விஸ்வலிங்கம் மாஸ்டர் விபரம்
அறிந்தவர்.
சிட்னித்
தமிழர் கலாசார சங்கத்திற்கு அவுஸ்திரேலிய அரசு பல்இன பல்கலாசாரத்தை
ஊக்குவிப்பதற்காகப் பண உதவி வழங்குகின்றது. அதிலே தலைவரானால் அரசாங்க மட்டத்திலும்
அறிமுகம் கிடைக்கும், காலப் போக்கிலே பெரிய பதவிகளைப் பெற்றுக் கொள்வது சுலபமாகிவிடும் என்ற பல
விஷயங்களை விளக்கி, விதானையார் மாமாவை கோதாவில் இறக்கிவிட்டார் விஷ்வலிங்கம் மாஸ்டர். மாமாவின்
பின்னால் பெரியதொரு அணி திரள்வதை பொறுக்கமாட்டாத எங்கள் ஊர் விசாலாட்சி மாமி
மாமாவைப் பழிவாங்க இதுதான் தருணம் என எண்ணிக் கொண்டார்.
பழிவாங்கலின்
பின்னணியை, நான் ஊரிலே கேள்விப்பட்ட கதைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து விளங்கிக் கொண்டேன்.
மாமா, விதானையாராவதற்கு முன்னால், விசாலாட்சி மாமி பின்னால் சுற்றித் திரிந்தவராம். இருவரும் மனமொத்த காதலர்கள். ஊர் மணியகாரன் தனது மகளை சொத்துப்
பத்துடன் மாமாவுக்கு கொடுக்க முன்வரவே சொத்துக்கு ஆசைப்பட்டு மாமா விசாலாட்சி
மாமியை கைகழுவிவிட்டு பாக்கியம் மாமியை கட்டிக் கொண்டாராம். இதற்குப்
பிராயச்சித்தமாக மாமாவின் தகப்பன், பெரிய விதானையார், விசாலாட்சி மாமிக்கு ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்து சிங்களப் பிரதேசத்துக்கு
அனுப்பி வைத்துவிட்டதாகவும் ஊரில் பேசிக் கொண்டார்கள். விசாலாட்சி மாமியும்
கனகாலம் கன்னியாக இருந்த பின்னர் தேயிலைக் கொம்பனியொன்றில் வேலை பார்த்த
பரமரைக்கட்டிக் கொண்டு கொழும்பு வாசியாகிவிட்டார்.
இருவரும்
சிட்னியிலேயே மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். விசாலாட்சி மாமிக்கு இப்பொழுதும்
கட்டுக்குலையாத தேகம். கண்ணைச் சுழற்றி உடம்பைக் குலுக்கி ‘பவிசு’ காட்டுவதில் மகா
கெட்டிகாரி. அவருடைய பிள்ளைகள் சிட்னியில் நன்கு வேரூன்றி வாழ்பவர்கள். அத்துடன்
தொண்டையிலே வழுக்கிச் செல்லும் ஆங்கிலம் பேசும் வித்தையைக் கொழும்பு வாழ்க்கை
அவருக்கு வாலாயமாக்கியது. கொழும்பில் எடுத்த றைவிங் லைசென்ஸுடன் சிட்னி வந்து, அதை லோக்கல் லைசென்ஸாக மாற்றி சிட்னியெங்கும் காரில் ஓடித்திரிபவர்.
விதாணையார் மாமாவைக் காணும் பொழுதெல்லாம் வேண்டுமென்றே விசாலட்சி மாமி
ஆங்கிலத்திலேயே பேசுவார்.
விதானையார்
மாமாவிற்கு ஆங்கிலம் எழுதத் தெரிந்தளவுக்கு, பேசப் பறியாது. இன்னமும்
தனது யாழ்ப்பாணத்து தற்பெருமை பேசுபவர். செட்டியை நம்பியே ஊரில் கார்
வைத்திருந்தவர்.
மாமா பேசிய
யாழ்ப்பாண தற்பெருமையை அவருக்கெதிரான துரும்புச் சீட்டாக மாற்றினார் விசாலாட்சி
மாமி. யாழ்ப்பாண மிடுக்குடன் வாழ்ந்த மாமாவுக்கு எதிராகக் ‘கொழும்பார்’
‘யாழ்ப்பாணத்தார்’ என்ற பிரிவினையைக் கிளப்பிவிட்டதுடன் கொழும்பு மணியத்தையும்
களத்தில் இறக்கிவிட்டார். விசாலாட்சி மாமியின் சுறுசுறுப்பு – விவேகம் – நளினம்
ஆகியவற்றிக்கு முன்னால் மாமாவின் மிடுக்குத் தோற்று போயிற்று!
கொழும்பு
மணியம் எலெக்ஷனில் வென்றதாக அறிவித்தார்கள். பலத்த கரகோஷத்துக்கு மத்தியிலே, தலைவர் கதிரையில் வந்தமர்ந்தார் மணியம். இதைக்கூட மாமாவால் தாங்கிக் கொள்ள
முடிந்தது. ஆனால் சடுதியாக விசாலாட்சி மாமி தான் கொண்டு வந்த பொன்னாடையை விரித்து, மாமா பக்கம் திரும்பி இலேசான் புன்முறுவலுடன், கொழும்பு மணியத்துக்கு
சாத்தி, கைகுலுக்கி, வாழ்த்துக் கூறினார்.
அதுதான்
விதானையார் மாமாவை சுட்டெரித்துச் சாம்பலாக்கியது.
நிலைமையை
உணர்ந்த விஸ்வலிங்கம் மாஸ்டர் டாக்ஸியைப் பிடித்து மாமாவை வீட்டுக்குக் கொண்டு
வந்து சேர்த்தார்.
அதிலிருந்து
அவர் அறையிலே முடங்கிக் கிடக்கிறார், என்ற இரண்டாவது தகவல்
கிடைத்த பிறகும், என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
பிளமிங்கடன்
மதுக்கடையில் மட்டுமே கிடைக்கும் யாழ்ப்பாணத்து பனஞ் சாராயப்போத்தல் ஒன்றினை
வாங்கி எடுத்துக் கொண்டு விதானையார் மாமா வீட்டுக் கதவைத் தட்டினேன். கல்யாணி வயிற்றில் பிறந்த, விதானையார் மாமாவின் பேரன், அவரைப் போலவே மிடுக்குடன் வந்து என்னை வரவேற்றான்.
‘தாத்தா எப்படி இருக்கிறார்…?’ என்று அவனைக் கேட்டு – தன்னுடைய தமிழ் அறிவை நான் சோதிக்கிறேன் என அவன்
நினைப்பான் என்றெண்ணி – நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
‘Thatha…? He is Ok now. For the past two days, he is
doing some research with the Tamil Yellow Guide (தமிழர் விபரக் கையேடு)’ என்று கூறியவாறே மாமாவின் அறைக்கு என்னை அழைத்துச்
சென்றான். அறைக்குள் எட்டிப் பார்த்தேன். உண்மைதான்!
அந்த மஞ்சள்
நிற, அவுஸ்திரேலிய தமிழர் விபரங்கள் அடங்கிய கையேட்டில், சிட்னி தமிழர் அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மாமா ஈடுபட்டிருந்தார்.
காலங்களும்
களங்களும் மாறினாலும், தமிழனுடைய குணம் மாறாது என்று என் மனதில் தோன்றிய நினைவினை மறைத்துக் கொண்டு, பனஞ்சாராயப் போத்தலைக் கவசமாகக் கைப்பற்றினேன்.
(கணையாழி, செப்டெம்பர் 2000)
No comments:
Post a Comment