இனமானம்
ஆசி கந்தராஜா
இப்பொழுதெல்லாம்
சாம்பசிவம் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறான். அவனுடைய உத்தியோகம் அப்படி!
இன்றும் பயணம். விமான நிலையத்திற்கு
சாம்பசிவத்தின் மனைவிதான் காரை ஓட்டிவருவாள். சாம்பசிவம் காரில் ஏறும்போது 'ஜிம்மி' ஓடிவந்து தன்
முன்னங்கால்களை அவன் கைகளிலே போட்டு விசுவாசத்துடன் இரண்டு தடவைகள் முக்கி
முகர்ந்தது. 'ஜிம்மி' அவன் வீட்டிலே செல்லப்
பிள்ளைப்போல் வளர்ந்து வரும் நாய். அது இவ்வாறு வழக்கமாகச் செய்யும் வழியனுப்புதல், அவனுக்குப்
பிடித்தமானதொன்றாய் அமையலாயிற்று.
சிட்னி விமான நிலையத்தில் எல்லாம் திட்மிட்டபடி நடந்தேற சாம்பசிவம் விமானத்தில் ஏறிக்கொண்டான். இது தென் கொரிய நாட்டைச் சென்றடைவதற்கான பறப்பு!
தென் கொரியாவின் கீழே குட்டித்தீவு ஒன்று
உண்டு. செஜு தீவு (Cheju
Island) என்று பெயர். இரண்டாம் உலகயுத்தத்திலே, யப்பான் இத்தீவீனைப் பிடித்தே இங்கிருந்து கொரியா முழுவதையும் தனது ஆட்சிக்குள் அடிமைப் படுத்தியதாகச் சொல்வார்கள். இத்தீவில் இப்பொழுது தென்கொரியாவின் ஆட்சி
நிலைத்துள்ளது. இத்தீவு சுண்ணாம்புக் கற்களுக்கும் குதிரைகளுக்கும் பெயர் பெற்றது.
மண்டறின் என்னும் தோடை இனம் இங்கு செழிப்பாகப் பயிரிடப்படுகின்றது. இத்தீவின்
இயற்கை அழகிலே மனதை பறிகொடுத்த யப்பானியர்கள், தேன்நிலவைக் கழிக்க பெருந்தொகையாக வருவதாகவும், இதனால் இது தேன்நிலவுத் தீவு என்று அழைக்கப்படுவதாகவும்
சாம்பசிவம் சஞ்சிகைகளில் படித்துள்ளான். தேனீக்களைப்போல இரவு பகலாக ஓடிஓடி
உழைக்கும் யப்பானியர்கள் இத்தீவுக்கு வந்தவுடன் பணத்தைத் தண்ணீர் போல் செலவு
செய்வார்கள். இவர்களின் பணச் செலவிலே தீவு புதிய வனப்பும் அந்தஸ்தும் பெறலாயிற்று. பட்டுப் போன்ற குறுமணற்
கடற்கரைகளும், உல்லாசமான குதிரைச்
சவாரிகளும், மறும் உல்லாசத்திற்கு
உதவும் 'இன்ன பிறவும்' அவற்றை அந்தரத்தில்
அனுபவிக்கும் ஒருவகைத் தனிமையும் இத்தீவிலே தாராளமாய்க் கிடைப்பதாக, அவனுக்கு முன்னர்
அத்தீவுக்குச் சென்று திரும்பிய சகா ஒருவன் வாயூறக் கூறியிருந்தான். சுண்ணாம்புக்
கற்களிலே செதுக்கப்படட காவல் தெய்வங்கள் தீவிலுள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
காணப்படுவதாக கூறி, சாம்பசிவத்திற்கு
அப்படியான தொரு காவல் தெய்வமொன்றை அவன் பரிசாகத் தந்துமிருந்தான்.
உல்லாச ஹோட்டல்கள் இங்கு சர்வதேச தரம்
வாய்ந்தவை. அதன் தரத்தினை மேலும் உயர்த்தக் கொரியா விரும்பியது. இந்த
சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இத்தீவின் ஹோட்டல் தொழிலை ஒட்டு மொத்தமாகக்
குத்தகைக்கு எடுத்துப் பெரும் பணம் சம்பாதித்தல் சாத்தியம் என்பதை சாம்பசிவத்தின்
நிறுவனம் புரிந்து கொண்டது. இந்த சூக்குமத்தை முன்மொழிந்த பெருமையும்
சாம்பசிவத்தையே சாரும். பல சர்வதேச நிறுவனங்கள் இதற்குப் போட்டியிட்டன. நடந்து முடிந்த இனக் கலவரங்களிலும்
அழிந்துபோகாது, மீண்டும் உயிர்த்து வளம்
கொண்ட இலங்கை நிறுவனம் ஒன்றும் செஜு தீவின் வருங்கால வருமானத்தைக் கணக்கில் எடுத்துப் போட்டியில் குதித்தது. இறுதியில் சாம்பசிவத்தின் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கும் இலங்கை நிறுவனத்திற்கும் இடையிலேயே போட்டி என்னும் நிலை உருவாயிற்று.
இலங்கை நிறுவனத்தின் ஒப்பந்த ஓட்டைகளை அங்கு
வேலை செய்த சிங்கள நண்பன் பியசேனா மூலம் நன்கு அறிந்து கொண்ட சாம்பசிவம் அந்த
ஒப்பந்தத்தை under cut பண்ணியே குத்தகையைத் தனது கம்பனிக்குக்
கிடைக்கச் செய்தான். இதற்குப் பிரதியுபகாரமாக பியசேனாவின் 'பை' ஆஸ்திரேலிய டொலர்களால்
நிரப்பப்பட்டது.
போட்டியிட்ட இலங்கைக் கம்பனி, தான் ஈட்டும் லாபத்தின்
பெரும் பகுதியை, இனக்கலவரத்தில் பாதிப்படைந்த மக்களின் புனர்வாழ்விற்கே செலவு செய்யும் சமூக நிறுவனம் என்பதை
அறிந்ததும் சாம்பசிவத்தின் உள்மனம் குறுகுறுத்தது. பிறந்த மண்ணிற்கும்
மக்களுக்கும் துரோகம் செய்கிறோமா? என்று அவனது மனச்சாட்சி ஓரிரு சந்தர்ப்பங்களில் அலட்டிக் கொண்டாலும், சாம்பசிவம் கட்டிக்காத்து
வளர்த்த 'தொழில் விசுவாசமே' ஈற்றில் வென்றது.
கம்பனிக்கு அவன் சம்பாதித்துக் கொடுத்த அந்த
உடன்படிக்கையில் கைச்சாதிடவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறான்.
உணவுகள் பரிமாறப்பட்டபின் லைற்றை அணைத்து
வீடியோப் படத்தை ஓடவிட்டாள் விமானப் பணிப்பெண். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள
பிரதான திரையிலும் ஒவ்வொரு இருக்கைக்கும் முன்னால் உள்ள குட்டித் திரையிலும்
வீடியோ படம் ஓடத் தொடங்கியது. நாய் ஒன்றை மையமாக வைத்து அந்தப்படம்
எடுக்கப்பட்டிருந்தது. நாயின் அட்டகாசமான புத்திசாலி செயல்கள் திரையில்
ஓடிக்கொண்டிருந்தன.
ஒருகாலத்தில் சாம்பசிவத்துக்கு நாயென்றாலே
ஒருவித நடுக்கம். தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தெருநாய் ஒன்று தன்னைக்
கடித்ததும், அதைத் தொடர்நது பட்டணத்திற்கு பஸ்ஏறி அங்குள்ள ஆஸ்பத்திரியில் பொக்கிளைச் சுற்றி இருபத்தொரு
ஊசி போட்டுக் கொண்டதும் அவன் மனத் திரையில் ஓடியது. அதன் வலியும் வேதனையும் அவன்
இன்றும் மறக்காதவை. ஆஸ்திரேலியா வாசியான பிறகும் நாய்
என்றால் அவனுக்கு அலேர்ஜியாகவே இருந்தது. நாய் வளர்க்கும் வீடுகளுக்குப் போவதையும்
அவன் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டான்.
குடும்பம் என்ற ஒன்று வந்தவுடன். சாம்பசிவம்
மற்றவர்களுடைய விருப்பு வெறுப்புகளையும் அனுசரித்துப் போகவேண்டி வந்தது.
சாம்பசிவத்தின் பெற்றோர் தெரிவு செய்த பணக்கார மனைவிக்கோ நாயின்மீது கொள்ளை ஆசை.
அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்தவள். பணக்காரத் தாத்தா காலத்திலிருந்தே அவளின்
குடும்பம், நாய் வளர்க்கும்
மோகத்தினை பூஜித்து வந்துள்ளது. பணக்கார மனைவியைத் திருப்திப்படுத்த நாய்
விடயத்தில் பல விட்டுக் கொடுப்புகளை அவன் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் சாம்பசிவம் வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டது.
ஜிம்மி ஊரில் உள்ள தெருநாய் போல் அல்ல. இது நல்ல சாதி நாய். குடும்ப அங்கத்தவர்கள்
அனைவருடனும் விசுவாசமாக, சமமாக, செல்லமாகப் பழகியது.
குழந்தை இல்லாத குறையைக்கூட அது பூர்த்தி செய்வதாக வீட்டில் உணர்ந்த
சந்தர்ப்பங்களும் உண்டு. இரண்டு வருடங்கள் கழித்து சாம்பசிவத்தின் மனைவி அழகான
குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். அது, ஜிம்மி வீட்டிற்கு வந்த ராசி என்றுதான் சாம்பசிவத்தின் மனைவி சாதித்தாள்.
அவனுக்கு நாய் மீதிருந்த பயம் முற்றாக நீங்கியது. அதனை அன்புடன் பாராட்டும் மனசும்
வந்தது.
ஜிம்மி மீது பாசம் மேலோங்குவதற்குப் பிறிதொரு
சம்பவமும் காரணமாக அமைந்தது.
சாம்பசிவம் எஜமான விசுவாசத்துடன் தொழில்
செய்வதில் மகா கெட்டிக்காரன். படிப்படியாகப் பதவி உயர்ந்து நிறைவேற்று அதிகாரம்
கொண்ட அதிகாரியாக முன்னேறிவிட்டான். பேச்சுச் சாமார்தியம் அவனுக்கு இயல்பாகவே வந்த
கலை. எவரையும் தனது பேச்சால் இலகுவில் மடக்கி, தன் வழிக்கு கொண்டு வந்துவிடுவான். கல்வி தராதரங்களிலும் பார்க்க ஆஸ்திரேலியா தொழில் நிறுவனங்களில்
இதுவே பெரிதும் வரவேற்கப்படுவதால் அவனது ஊதியமும்
உயர்ந்தது.
பதவிக்கும் பணத்திற்கும் ஏற்ப, நீச்சல் குளத்துடன் கூடிய
அழகிய மாடிவீடு ஒன்றினைப் புதிதாக வாங்கிக் குடியேறினான். தமது முன்னேற்றத்தினை
உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் தம்பட்டமடித்தல் சாமான்ய மனித
இயல்பு. அந்த அழகிய நீச்சல் குளத்தின் அருகே, ஆஸ்திரேலிய மோஸ்தரில் விருந்து ஒன்றினை ஏற்பாடு
செய்திருந்தான். நெருப்பிலே வாட்டிய இறைச்சி வகைகளுக்கு ஏற்ப மதுவகைகளும்
பரிமாறப்பட்டன. நீச்சல் குளத்தை ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருந்த மேசை ஒன்றிலே
பலவித மதுப்போத்தல்கள் அடுக்கப்பட்டிருந்தன. யாவும் விலை உயர்ந்த மது வகைகள்.
சாம்பசிவம் வெளிநாடு செல்லும் போதெல்லாம் வரித் தீர்வையற்ற கடைகளில் வாங்கி சேமித்தவையாக இருக்க வேண்டும்.
சூரியன் மறைய, மங்கிய நிலா வெளிச்சத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக
கலைநயத்துடன் மறைவாகப் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் சிந்திய ஊமை
வெளிச்சத்திலும் நீச்சல்குளம் மிக ரம்மியமாகக் காட்சி தந்தது. விருந்துக்கு
வந்தவர்களின் குழந்தைகள் குளத்தின் அருகில் ஜிம்மியுடன் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். விடலைப் பருவத்து இளைஞர் சிலர் ஆசையைக் கட்டுப்படுத்த
முடியாமல், நீச்சல் குளத்தில்
இறங்கிக் குளிக்கவும் நீந்தவும் சொய்தார்கள்.
'குளத்தின் ஆழமான பகுதிக்குப்
போயிடாதேயுங்கோ, என்று எச்சரித்துக்
கொண்டே மது வகைகளின் தாராளப்
பரிமாற்றத்தை ஊக்குவித்தான் சாம்பசிவம்.
மதுவின் சூடு தலைக்கேற 'பெருங்குடி' மக்கள், கூட்டம் கூட்டமாக நின்று
ஊர்வம்பளந்து கொண்டு நின்றார்கள்.
அப்பொழுதுதான் அது சடுதியாக நடந்தது!
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த
சாம்பசிவத்தின் நாலு வயது மகன், கால் தவறிக் குளத்தின் ஆழமானபகுதிக்குள் விழுந்துவிட்டான். சேர்ந்து விளையாடிய
குழந்தைகளின் அவல அலறல் கேட்டுத் திரும்பிப்பார்த்த அனைவரும் உடல் விறைக்க மலைத்து
நின்றார்கள். சாம்பசிவம் இரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல வெளிறிய முகத்துடன்
செயலற்று நின்றான். அவனது மனைவியோ ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். மனிதர்கள்
செயலற்றுப் போயிருந்த நிலையிலும், ஜிம்மி விவேகத்துடன் செயற்பட்டது. குளத்தில் பாய்ந்த அது, சாம்பசிவத்தின் மகனுடைய
சேட்டினை வாயில் கடித்துக் கவ்விக்கொண்டு நீச்சலும் இழுவையமாக அவனைக் கரைக்கு
இழுத்து வந்தது.
அன்றிலிருந்து சாம்பசிவம் வீட்டிலே ஜிம்மி ஒரு
ஹீரோவாகக் கணிக்கப்பட்டது. அதற்கு ராஜமரியாதை கிடைத்தது. ஆனால் ஜிம்மி புதிய
சலுகைகள் எதைப்பற்றியும் சட்டை செய்யாது, பழைய ஜிம்மியாக நட்பும் விசுவாசமும் உள்ள நாயாகவே பழகியது.
சாம்பசிவத்தின் எண்ண ஓட்டங்கள் நிறைவு பெற, சின்னத் திரையில் படமும்
முடிவடைந்தது. படத்தில் காட்டப்பட்ட நாயின் சாகஸங்களுடன் ஜிம்மிணை இணைத்துப்
பார்த்து சாம்பசிவம் பூரிப்படைந்தான்.
சாம்பசிவம் பறப்பினை மேற்கொண்ட விமானம்
தென்கொரிய தலைநகரான சியோலில் இறங்கிற்று. செஜு தீவில் நேரடியாகத் தரையிறங்க யப்பானிய விமானத்திற்கே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் சாம்பசிவம் ஒரு சிறிய கொரிய விமானத்தில் ஏறி, பயணத்தைத் தொடர்ந்தான். அங்கு அவனுக்குத் தடபுடல்
வரவேற்புக் கிடைத்தது. செங்கம்பள வரவேற்பின் சகல அம்சங்களையும் அது பெற்றிருந்தது.
சூழ்நிலைக்கு எற்ப நடந்துகொள்ளும் கலையில் சாம்பசிவம் மன்னன். அவனது அசுர
முன்னேற்றத்திற்கு இந்தக்குணம் பெரிதும் பங்களிப்புச் செய்தது.
எந்தவித இடைஞ்சலுமின்றி இருசாராருமே வெற்றி
கொண்டாடும் வகையில் ஒப்பந்தம் நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியக் கம்பனியின் சார்பில் சாம்பசிவம் கைச்சாத்திட்டான். கைகுலுக்கி பத்திரங்கள்
பரிமாறப்பட்டன.
இனி? வழமையான பார்ட்டி தான்!
கொரிய வழக்கப்படி ஒரு விசேடவிருந்துக்கு
ஏற்பாடு செய்திருந்தார்கள். கொரிய நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும் சாம்பசிவமும்
புத்தம் புதிய வாகனமொன்றில் ஏறிக்கொண்டார்கள். உடன்படிக்கை கைச்சாத்திட உதவி
புரிந்த பெண் செயலாளர் கையசைத்து விடைகொடுத்தாள்.
'அவளும் எங்களுடன் வரலாமல்லாவா?' என்று கொரியனைக் கேட்டான் சாம்பசிவம்.
கொரிய வழக்கப்படி 'இப்படியான' பார்ட்டிகளுக்கு இத்தகைய
பெண்கள் செல்வதில்லை என்றான் கொரியன்.
தீவின் அமைதியான பகுதியிலுள்ள பெரியதொரு
பழத்தோட்டம் ஒன்றிலேதான் அந்த விசேட விருந்து ஒழுங்கு செய்யபட்டிருந்தது.
கொரிய அதிகாரிகளும் சாம்பசிவமும் பயணித்த
வாகனம் அந்தத் தோட்டத்தின் வாசலிலே நிறுத்தப்பட்டது. வாசலில் அழகான சோடனைகள்.
இத்தகைய சோடனை விஷயங்களில் கொரியர்களையும் சீனர்களையும் யாரும் வெல்ல முடியாது.
எளிமையையும் அழகையும் இணைப்பது தான் அவர்களின் கலைத்துவத்தின் சாதனை என்று
சாம்பசிவம் நிதானித்தான். வாசல் அலங்காரத்தின் அங்கமாகத் தோற்றமளித்த கொரிய இளம்
பெண்கள் அவர்களைக் குதூகலமாக வரவேற்றார்கள். தோட்டத்தின் பிரதான
பாதையிலே நடக்கத் தொடங்கினார்கள்.
இருமருங்கிலும் தோடம்பழங்களும், ஆப்பிள் பழங்களும் செழுமையுடன் காய்த்துத் தொங்கின. அந்தப் பழ மரங்களில்
புகுந்த, இனிய மணம் கலந்த காற்று
இதமாக இருந்தது. தோட்டத்தின் மத்தியிலே ஆங்காங்கு வேயப்பட்ட சிறிய குடில்கள்
காணப்பட்டன.
சற்றே பெரிதாகத் தோன்றிய குடில் ஒன்றுக்குள்
சாம்பசிவம் அழைத்துச் செல்லப்பட்டான். வண்ண விளக்குகளும் பல நிறச்சேலைகளும் கொண்டு, கொரியக் கற்பனையும் கலைவண்ணமும் குழைய, குடில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பழத் தோட்டத்தின் நறுமணத்திற்கு ஒரு
கிறக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலே கொரிய இசை காற்றிலே கலந்து கொண்டிருந்தது.
குடிசைக்குள் அழகிய சீமெந்து திண்ணை. அதன்
மத்தியிலே குள்ளமான, பரப்பில் பெரிய, கொரிய வேலைப்பாடுகளுடன்
கூடிய மேசை. மேசையை சுற்றிவர அழகிய விரிப்பு ஒன்று போடப்பட்டிருந்தது. விரிப்பிலே
அமர்வதற்கும், வசதியாகச் சாய்வதற்கும்
பல்வேறு பட்டுத் தலையணைகள் ஆங்காங்கு வீசப்பட்டிருந்தன. பாதணிகளைக் கழற்றிய
பின்னர் மேசையைச் சுற்றிப் போடப்பிருந்த விரிப்பிலே விருந்தினர்கள் சம்மணம் கொட்டி
அமர்ந்து கொண்டனர். சாம்பசிவமும் கொரியர்களைப் பின்பற்றி வசதியான ஒரு இடத்தில்
அமர்ந்துகொண்டான்.
மேசையின் நடுவில் ஒரு எரிவாயு அடுப்பு. அழகிய
இளம் பெண் ஒருத்தி முழங்கால் குத்தி உடம்பை முன்னே வளைத்து வணக்கம் கூறிய பின்னர், அடுப்பைப் பற்ற வைத்து, சட்டியை வைத்தாள்.
அதற்குள் எண்ணையும் தண்ணீரும் கலந்த திரவமொன்றை ஊற்றிக் கொதிக்க விட்டாள். கொரியப்
பெண் சுறுசுறுப்பாகவே இயங்கினாள். சட்டியில் ஊற்றப்பட்ட திரவம் கொதிப்பதற்கிடையில்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும், ஊறுகாய், 'சலாட்' இலைகளையும் மேசை எங்கும்
பரப்பிவைத்தாள்.
மது அருந்தும் சடங்கு துவங்கியது. இதில் கொரிய
கலாசாரத்தை பின்பற்றுவதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள். மது அருந்துவதற்கு
மட்பாத்திரங்கள். கொரிய பாரம்பரிய முறையில் அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட
மதுவே பரிமாறப்பட்டது. பாத்திரத்தில் வார்க்கும் மதுவினை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, மதுஅருந்திய பாத்திரம் காலியாக்கப்பட்டதனை நிரூபிக்கப் பாத்திரத்தை கவிழ்த்து
வைத்து விடவேண்டும். ஒருவர் மாறி ஒருவர் மற்றவருடைய பாத்திரத்தில் மதுவை நிரப்பிக்
கொண்டிருந்தார்கள். ஒருவர் மது தரமுற்படுகையில் அதனை மறுத்தால், கொரிய வழக்கப்படி அவருடைய
நட்பை நிராகரிப்பதாகப் பொருள்படும். இந்த சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் நன்கு
அறிந்திருந்த சாம்பசிவம் யாருடைய மனமும் கோணாதவாறு கனவானாகவே நடந்துகொண்டான்.
மது அருந்தும் சம்பிரதாயம் நடந்து
கொண்டிருக்கும் பொழுதே கொரிய இளம் பெண் கொதிக்கும் சட்டியிலே இறைச்சித்
துண்டுகளையும் ஏதேதோ சரக்குகளையும் கொட்டி அவியவிட்டு, கிளறிக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொருவருக்கு முன்னாலும் வர்ண வேலைப்பாடுடன் கூடிய மட்பாத்திரத்திலே சோறு
வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ‘சாப்ஸ்டிக்ஸ்’ குச்சிகளும் சாத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் சாம்பசிவம் விசேடமாகக்
கவனிக்கப்பட்டார். அவனுடைய சோற்றுச்
சட்டிக்குப் பக்கத்தில் மூன்று நான்கு பொரித்த கோழிக் கால்களும்
வைக்கப்பட்டிருந்தன.
இளம் பெண்ணால் தயாரிக்கப்பட்ட 'சூப்'பின் மணம் குடில்
முழுவதும் தவழ்ந்தது. தடித்த சூப்பை ஒவ்வொரு முறையும் துளாவியவாறே சிறிய
மட்பாத்திரத்திலே ஊற்றி ஒவ்வொருவருக்கும் பரிமாறினாள் அந்தப்பெண். பின்னர்
ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தாங்களாகவே பரிமாறிக்கொண்டனர். சூடு
ஆறாது பரிமாறப்பட்ட 'சூப்'பினையும் இறைச்சித்
துண்டுகளையும் கொரிய நண்பர்கள் பெரிதும் சுவைப்பதைக் கண்ட சாம்பசிவம் அதை
விரும்புவதாகக் காட்டிக் கொண்டான்.
மேலும் மேலும் இறைச்சியை மென்று கொண்டே அது
என்ன இறைச்சி என்று நிதானிக்க முயன்றான். முடியவில்லை. சலாட் இல்லைபோன்று
காணப்பட்ட முழு இலை ஒன்றை எடுத்தான், அருகில் இருந்த கொரியன். இலையின் நடுவே பதப்படுத்தப்பட்ட இறைச்சித் துண்டையும்
நீட்டுவாக்கில் மெல்லியதாக சீவப்பட்ட பச்சை வாழைக்காய்த் துண்டையும், உள்ளி இஞ்சியையும்
ஒருங்கே வைத்து வெத்திலை போல் மடித்து, 'இது நன்றாக இருக்கும். சாப்பிட்டுப்பார். இதுவும் கொரிய உணவு முறையில்
ஒன்றுதான்' எனக் கொடுத்தான்.
தொடர்ந்து 'எப்படி இருக்கிறது...?'
எனக் கேட்டான், கொரியன், மதுவைக் கோப்பையில்
நிரப்பியவாறே.
'நல்லாகத்தான் இருக்கிறது. இது என்ன இறைச்சி?' எனக் கேட்டான் சாம்பசிவம்.
'இது நாய் இறைச்சி.'
'நாய் இறைச்சியா?' சாம்பசிவம் மிடறு
முறித்தான்.
'சட்டிக்குள் அவிவதும் அதுதான். ஏன்...? அவுஸ்திரேலியாவில் கங்காருவையும், பன்றியையும், குதிரையும்
சாப்பிடுகிறார்களே, அதுமாதிரிதான் இதுவும்.
நாய் இறைச்சி உண்பது எமது பாரம்பரிய வழக்கம்.'
போதை தலைக்கேறிய நிலையிலும் சாம்பசிவத்துக்கு
பிரக்கேறி சிரசிலடித்து. இதைக் கண்ட இன்னுமொரு கொரியன் 'கவலைப்படாதே, இது சுத்தமான
இறைச்சிதான். அவுஸ்திரேலியாவின் வடமாநிலத்திலே மக்கள் முதலை இறைச்சி
சாப்பிடுகிறார்களே, அதற்கு இது எந்த
வகையிலும் குறைந்தது இல்லை'
என்றான்
சிரித்தவாறே.
இவற்றைக் கேட்டதும் சாம்பசிவத்துக்கு வயிற்றைக்
குமட்டியது. பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்கிற தன்னுடைய
சவுடால்கள் எல்லாம் தன்னைக் கைவிடுவதாக உணர்ந்தான். இருந்தாலும், அவன் இங்கு தனி மனிதனல்ல.
ஒரு கம்பனியின் பிரதிநிதி. கொரிய மண்ணிலே அவனது கம்பனியின் வியாபாரம் நன்கு வேர்
ஊன்ற வேண்டும். தன்னுடைய சங்கடங்களை அவர்களிடமிருந்து மறைப்பதற்காகக் குடிலுக்கு
வெளியே உற்றுப் பார்த்தான்.
அழகிய கொழுத்த நாய்க்குட்டி ஒன்று மருட்சியுடன்
சாம்பசிவத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றது. அவனுக்கு ஜிம்மியின் ஞாபகம்
வந்தது.
தனக்குப் பிரத்தியேகமாகப் பரிமாறப்பட்ட பொரித்த
கோழிக் கால்களை எடுத்து நாய்க்குட்டிக்கு காட்டி அருகில் வருமாறு அழைத்தான்.
மருட்சியும் தயக்கமும் கலந்தபடி மெதுவாக அருகில் வந்தது நாய்க்குட்டி.
சாம்பசிவத்தின் மூளைக்குள் 'பொறி' ஒன்று தட்டியது
கோழிக்காலுடன் சட்டிக்குள் அவிந்த பெரிய நாய் இறைச்சித் துண்டொன்றையும் எடுத்துக்
கீழே போட்டான்.
நாய்க்குட்டி, நாய்இறைச்சித் துண்டை
முகர்ந்து பார்த்துவிட்டு, கோழி இறைச்சியை
மாத்திரம் உண்டது.
இந்த நாய்க்குட்டியைப் பார்த்த இன்னுமொரு நாய், அந்த இடத்துக்கு வந்து
சேர்ந்தது. சாம்பசிவத்துக்கு எப்போதும் பரிசோதனைக் குணம். முதல் நாய்க்
குட்டிக்குச் செய்தது போன்றே இதற்கும் செய்தான். ஊஹூம், நாய் இறைச்சியினை இதுவும்
தீண்டாது, கோழி இறைச்சியை மட்டுமே
உண்டது.
'இந்தப் பண்பிற்கு என்ன பெயர்?' மூளையைக் குடைந்து கொண்டான் சாம்பசிவம்.
தன் கம்பனியின் சார்பாகக் கொரியாவில் வெற்றி
நாட்டிய சாம்பசிவம் சிட்னி மீண்டான். மனைவியும் மகனும் அவனுக்காக விமான
நிலையத்தில் காத்திருந்தார்கள். காரில் ஏறிக் கொண்டதும் அவனையும் அறியாமலே 'ஜிம்மி எப்படி இருக்கிறது?' என்றான். He is fine என்று மகன் முந்திக் கொண்டு பதில் சொன்னான்.
அனைவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். காரைக்
கண்டதும் ஜிம்மி வழமைபோல ஓடிவந்து தன் முன்னங்கால்களை சாம்பசிவத்தின் கைகளில்
போட்டு இரண்டு தடவைகள் முக்கி முகர்ந்தது. இருப்பினும், இன்று அது
முக்கிமுகர்ந்தது சாம்பசிவத்துக்கு அசௌகர்யத்தை கொடுத்தது. சாம்பசிவம் பதிலுக்கு
ஜிம்மியைத் தட்டிக் கொடுத்தான்.
மூக்கை மேலே உயர்த்தி, துவாரத்தினை நன்கு
விரித்தவாறே, மீண்டும் அவனைச் சுற்றி
வந்து முகர்ந்து பார்த்தது ஜிம்மி. மறுகணம் வாலைச்சுருட்டிக் கொண்டுபோய் ஒரு
மூலையில் உட்கார்ந்து கொண்டது.
இது வழமைக்கு மாறான செயலானாலும், இதனை அதிகம் ஒருவரும்
பாராட்டவில்லை. கொரியப் புதினங்களிலே மூழ்கிப் போனார்கள். எல்லாப் புதினங்களையும்
விஸ்தாரமாகக் கூறினான் சாம்பசிவம். ஆனாலும் நாய் இறைச்சி சாப்பிட்டது பற்றி மூச்சே
விடவில்லை. அடுத்த நாள். சாம்பசிவம் பரபரப்புடன் கம்பனிக்குப் புறப்பட்டான். தனது
வெற்றியைக் கம்பனியின் இயக்குநர் சபையுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம். இயக்குநர்
சபையினர் அவனைப் பாராட்டுவதற்காக மதிய விருந்தொன்றை ஏற்பாடு
செய்திருந்தார்கள். சாம்பசிவம் தான் பிறந்த மண்ணின் கம்பனி சமர்பித்த கேள்விப்
பத்திரத்தை முறியடித்துத்தான் இந்த வெற்றியைச் சம்பாதித்தான் என்பது இயக்குநர்
சபைக்கு நன்கு தெரியும். சொந்த இன உணர்வுகளுக்கு மேலாக கம்பனி நலன்களைப் பேணும்
சாம்பசிவத்தை உரிய முறையில் அங்கீகரிப்பதற்கு, அவனது சம்பளத்தில் பெரியதொரு அதிகரிப்பினை பிரேரிக்க இருப்பதாகவும்
அறிவிக்க்படப்டிருந்தது. இந்தப் பரபரப்புகளுக்கு முகம் கொடுக்க சித்தம் உடையவனாகவே
அவன் புறப்பட்டான்.
வழக்கம் போல அவனை வழயனுப்பி வைக்க ஜிம்மி
வரவில்லை. ஜிம்மி எங்கே போயிருக்கும்..?
கம்பனிக்குப் போகும் அவசரத்தில் அவன் இதைப்
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொரிய வெற்றியை கம்பனி சகாக்களுடன் கோலாகலமாகக்
கொண்டாடிய சாம்பசிவம் வீடு திரும்பினான்.
'ஜிம்மியை எங்கேயும் காணவில்லை' என்ற தகவல் அவனை வரவேற்றது. 'ஜிம்மி எங்கே...?' அனைவரும் தேடினார்கள்.
அடுத்தநாளும் அது வரவில்லை.
'ஜிம்மிக்கு என்ன நடந்திருக்கும்? அது ஒரு நாளும் இப்படிப் போனதில்லையே?' பரிதவித்தாள் சாம்பசிவத்தின் மனைவி.
சாம்பசிவத்துக்கு உள்மனம் குறுகுறுத்தது. 'அது'தான் காரணமாக
இருக்குமோ?
நாய்க்கு அபார மோப்ப சக்தியும், உள்ளுணர்வுகளும்
இருப்பதுண்டு. அதன் மூலம் ஜிம்மி, அவன் நாய் இறைச்சி உண்ட சாமாச்சாரத்தை முகர்ந்து அறிந்து கொண்டதோ? காரணம் எதுவாக
இருந்தாலும் ஜிம்மி அந்த வீட்டிற்குத் திரும்பவேயில்லை. மனிதனிலும் பார்க்க
நாய்க்கு 'இனமான உணர்வு' அதிகம் என்ற புதிய
ஞானத்தினை யாருக்குமே சொல்ல முடியாதவாறு சாம்பசிவம் இன்றும் தவித்துக் கொண்டு
இருக்கிறான்.
(தினக்குரல், 14 நவம்பர் 1999)
No comments:
Post a Comment