முகமூடி மனிதர்கள்
ஆசி கந்தராஜா
அந்த நிகழ்வு, முன்னும் பின்னுமாக
ஏராளமான நினவுச் சுவடுகளைக் கோத்துக் கொண்டு என் முன்னே எழுந்து நின்றது. ஒரு
போதும் என்னால் நேற்றைக்குள் போகமுடியாதென்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை
நான் எதற்காகச் செய்தேன்?
அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகள், சிந்தனையைக் கலைத்துப் போட்டு என் மன நிம்மதியைக் கெடுக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத் தமிழன் நான்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்பலகாமம் கிராமத்தைச் சேர்ந்தவன். என்
அப்பாவுக்கு தம்பலகாமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. கிராமத்தின் விவசாய
சங்கத் தலைவரும் அவர்தான். பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. படிப்பில் எனக்கிருந்த
ஆர்வத்தால் அப்பா என்னை திருகோணமலையிலுள்ள பாடசாலையில் சேர்த்துவிட்டார்.
பாடசாலை விடுதியிலேயே தங்கிப் படித்தேன். என் வாழ்க்கையில் அற்புதமான அநுபவத்தை அருளிய நாட்கள் அவை. படிப்பும், விடுமுறைக்கு வீடுமென மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமது. பத்தாம் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் அதிவிசேஷ சித்திகள் பெற்று மாகாணத்திலேயே முதலாவதாக வந்தேன். தம்பலகாமம் கிராமமே என்னைக் கொண்டாடியது. உள்ளூர் பத்திரிகையில் என் படத்துடன் செய்தியும் வெளிவந்தது. பதினொராம் வகுப்பு முடிந்து நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் எங்கள் வீட்டிலே அந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. நினைக்கவே திகிலடிக்கிற மிகக் கொடூரமான நிகழ்ச்சி அது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தைப் போலவே, கிழக்கு மாகாணத்திலும்
அப்போது பல போராளிக் குழுக்கள் இயங்கி வந்தன. பெருந்தொகையான பணம் கேட்டு ஒரு
போராளிக் குழு என் அப்பாவிடம் வந்தது. அது அறுவடைக்கான காலம். போராளிக் குழு கேட்ட
தொகையை அப்பாவால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் ஒரு காலக்கெடு வைத்தார்கள்.
காலக்கெடு முடிந்த பின், பணம் கேட்டு வீட்டுக்கு
வந்தவர்கள் தகராறு செய்யவே,
அப்பா கோபத்தில்
அவருடைய வேட்டைத் துப்பாக்கியை எடுத்தாராம். அங்கிருந்து சென்றவர்கள் அடுத்தநாள்
அதிகாலை மூன்று மணிக்கு மீண்டும் வந்தார்கள். வந்தவர்கள் சும்மா போகவில்லை. வீட்டை எரித்து, எதிர்த்து நின்ற அப்பா அம்மா
இருவரையும் கொலை செய்துவிட்டுச் சென்றார்கள்.
அந்த நிலையிலும் பாடசாலை ஆசிரியர்களின்
உதவியினால் தொடர்ந்து படித்து அந்த வருட பல்கலைக்கழக புகுமுக பரீட்சையில் நாடளாவிய
ரீதியில் முதல் மாணவனாகச் சித்தியடைந்தேன். எனது பரீட்சை மதிப்பெண்கள் பற்றியும்
எனது குடும்ப பின்னணி பற்றியும் திருகோணமலை நிருபர், கொழும்பிலிருந்து
வெளிவரும் பத்திரிகையொன்றில் புகைப் படங்களுடன் ஒரு செய்திக் கட்டுரை
எழுதியிருந்தார். என் அதிஷ்டம் அது கொழும்பில் இருந்த ஆஸ்திரேலிய ஹைகொமிஷன்
அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றிருக்க வேண்டும். ஓர் அதிகாரி நான் படித்த
பாடசாலை அதிபரூடாக என்னைத் தொடர்பு கொண்டார். கொழும்பிலேயே அகதி அந்தஸ்துடன்
ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயரும் வாய்ப்புப் கிடைத்தது. அவர்களே பல்கலைக்கழக
மருத்துவ பீடத்தில் அநுமதியும் பெற்றுத் தந்தார்கள். படிக்கும்போது 'யுத் அலவன்ஸ்' எனப்படும் உதவித்
தொகைகளையும் ஹைகொமிஷனே ஒழுங்கு செய்திருந்தது.
வேருடன் புடுங்கி வந்து ஹைகொமிஷன்
அதிகாரிகளினால் ஆஸ்திரேலியாவில் நடப்பட நான், யாருமற்றவனாக பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்தேன். இதனால் இங்கு வாழ்ந்த
நம்மவர்களின் நெழிவு சுழிவுகளையும் அணுகு முறைகளையும் என்னால் தெரிந்துகொள்ள
முடியவில்லை.
மருத்துவப் படிப்பின் முன்றாவது வருடம் என்
வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்தச் சம்வம் நடந்தது. அது நான்கு வருடங்கள் என்னை
சிறைக்கு அனுப்பியது. வாழ்க்கையில் அது எத்தனையோ பாடங்களையும் கற்றுத் தந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு முன்னரே புலம்பெயர்ந்து, வளமாக வாழும்
தமிழர்களுடைய வாழ்கை முறையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை, கால ஓட்டத்தில் நான்
தெரிந்து கொண்டேன். ஆண்களின் உழைப்புக்கு ஏற்றபடி பெண்களும் இங்கு சரிக்குச் சமமாக
சம்பாதிப்பதால் ஊரிலிருந்த ஆணாதிக்க முறை ஆஸ்திரேலியாவில் மாறியிருந்தது. படிக்கும்போதே
'நல்ல பையனாகப்
பார்த்துப்பிடி' என்று பெண் பிள்ளைகளைத்
தூண்டிவிடும் பெற்றோர்கள் அதிகளவில் உருவாகியிருந்தார்கள். இளம் பெண்கள் மத்தியிலே
பல்கலைக் கழகத்தில் டாக்டர், லோயர் போன்ற படிப்புப் படிக்கும் பையன்களுக்கு, 'மவுசு' கூடியது. இதனால் மகள் கூட்டி வரும் 'வெயிட்டான' பையனை அம்மாக்கள்
விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.
இந்த வகையில் பெண்ணைப் பெற்ற ஒரு தமிழ்
அம்மாவிடம் நான் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டேன். டாக்டர் படிப்புத்தான் படிக்க
வேண்டுமென்று தாயும் மகளும் தலைகீழாக நின்றும், முயற்சி கைகூடவில்லை. கடைசி
டாக்டர் மாப்பிளையாவது பிடிக்கவேணும் என்ற
அங்கலாய்ப்புடன் அவர்கள் ஒடித் திரிந்தபோது அவர்களிடம் வகையாக நான்
மாட்டுப்பட்டேன். பெற்றோரை இழந்த நிலையில், யாருமற்றவனாக நான் நின்றது அவர்களுக்கு மேலும் வசதியாயிற்று. நான் படித்த
பல்கலைக் கழகத்திலேதான் அபர்ணாவும் படித்தாள். அவள் என்னிடம் வலிந்து ஒட்டிக்
கொண்டாள். அவளது ஆதரவும் அக்கறையும் அப்போது என் மனதை மலர்த்திப்போட்டது. அவை
மகிழ்ச்சியான காலங்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
புலம்பெயர்ந்த மண்ணிலே, தமிழ்ப் பெற்றோர்கள்
இறுகப் பற்றிக் கொண்ட இன்னுமொரு விஷயம் இந்தியக் கலைகள் என்பதையும் மெல்லப்
புரிந்துகொண்டேன். பிள்ளைகளுக்கு விருப்பமோ இல்லையோ, திறமை உண்டோ இல்லையோ சங்கீதம், நாட்டியம், மிருதங்கம் என, நாயோட்டம் பேயோட்டமாகப்
பிள்ளைகளைக் கூட்டித்திரிவது இங்கு இயல்பாயிற்று. இறுதியில் இந்த எலியோட்டம், தங்கள் குடும்ப பெருமைகளைப்
பறைசாற்றும் ஒர் அரங்கேற்றத்துடன் முற்றுப்பெறும். அந்த வகையில், அபர்ணாவுக்கும் மிக
ஆடம்பரமாக பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அங்கு நான்
முன்னிலைப்படுத்தப்பட்டேன்.
அபர்ணாவின் பையன், அதுவும் தமிழ்ப்பையன், டாக்டருக்குப்
படிக்கிறான், என ஓடிஓடி, வந்தவர்கள் மத்தியில் தகவல் சொல்லப்பட்டது.
மற்றவை பிடிச்சுப்போடாமல் இருக்க தந்திரமாய் 'பப்பிளிக்கிலை' கதை பரப்பிவிடுகினம், என்று அரங்கேற்றத்துக்கு
வந்திருந்த பெண்கள் என் காதுபடவே பேசினார்கள்.
பல்கலைக்கழக விடுதியில் வசித்த நான், பெற்றோர்களின் அழைப்பின்
பேரில், சனி ஞாயிற்றுக்
கிழமைகளில் அபர்ணாவின் வீட்டுக்குச் சென்று வந்தேன். ஞாயிறு மாலை மீண்டும்
விடுதிக்குத் திரும்பும்போது அந்த வாரம் வைத்துச் சாப்பிடுவதற்குப் போதுமான உணவுப்
பண்டங்களையும் மறக்காது தந்து விடுவார்கள். பெற்றோரை ஒரே நேரத்தில் சடுதியாக
இழந்திருந்த நிலையில், அவர்களது உபசரிப்பும்
பரிவும் எனக்குத் தந்த ஆறுதல் கொஞ்ச நஞ்சமல்ல.
அந்த சம்பவத்தின் காரணமாக
விளக்கமறியல் சிறையில் இருந்த நான் வழக்கு முடிந்தபின், தண்டனைக் கைதிகளுக்கான
சிறைக்கு மாற்றப் பட்டேன். அந்த சிறைக்குப் பொறுப்பாக இருந்த சிறை அதிகாரி ஜோசெப்
மிகவும் நல்ல மனிதர். ஆஸ்திரேலியாவில் புலம்பெர்ந்து வாழும் பல இனங்களின் வரலாறு, கலாசாரங்கள் பற்றி
விலாவாரியாக அறிந்தவர். எனது கடந்தகால வாழ்க்கை பற்றியும் நான் செய்த குற்றம்
தவிர்க்க முடியாத சூழலில் நடந்ததென்பதையும் அவர் நன்கு அறிவார். எனவே மற்றைய
கைதிகளிடமிருந்து என்னைப் பிரித்து சிறை நுலகத்தின் அருகிலுள்ள அறையில்
வைத்திருந்தார். அத்துடன் சிறை நூலக உதவியாளராகவும் என்னை நியமித்திருந்தார்.
கிறிமினல் குற்றமுள்ள நான் தண்டனைக் காலத்தின் பின் மருத்துவம் படித்து
முடித்தாலும் மருத்துவராக பணி புரிய, ஆஸ்திரேலிய 'மெடிக்கல் கவுன்சில்' அனுமதிக்காது என்பது அவருக்குத்
தெரியும். அதனால் சிறையிலிருந்தே, தபால் மூலம் பயிலக்கூடிய கற்கைநெறிக்கும் அனுமதி பெற்றுத் தந்திருந்தார்.
ஜோசெப்பின் அலுவலகத்தில் அவ்வப்போது கணனி
சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நான் உதவுவதுண்டு. அதற்கான ஊதியத்தை அவர் என்னுடைய
வங்கிக் கணக்கிற்கு முறைப்படி செலுத்திவிடுவர்.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாள், எங்கள் இருவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து என்முன் அமர்ந்தார். பல
விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்த பொழுது நான் எதிர்பாத்திராத இந்தக் கேள்வியை ஜோசெப்
கேட்டார்.
அபர்ணாவும் பெற்றோரும் ஏன் உன்னை சிறையில்
வந்து பார்ப்பதில்லை?
அந்தக் கேள்வி உண்மையிலேயே என்னைச் சங்கடப்
படுத்தியது. கண்கள் கலங்கிய நிலையில் எதுவும் பேசாது யன்னலுக்கு வெளியே
பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனது கேள்வி உன்னைப் புண்படுத்தியிருந்தால் என்னை
மன்னித்துவிடு.
இல்லை, இப்படிப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் என்று அவரின் கையைப் பற்றியபடி
அவருக்குத் தெரியாத பக்கத்தை சொல்லத் துவங்கினேன்.
இருவர் இணைந்து செய்யும் மருத்துவ செய்முறை
வகுப்பில், மருத்துவம் படிக்கும் ஒரு
வட இந்தியப் பெண், என்னுடன்
இணைந்திருந்தாள். இவள் ஓரு ஜாலியான பாட்டி டைப். இதைத் தெரிந்து கொண்ட அபர்ணா, வடஇந்தியப் பெண் என்னைத்
தன் பக்கம் இழுத்துவிடுவாளோ எனப் பயந்திருக்க வேண்டும். இதனால் மிகவும் 'பொஸெஸ்ஸிவ்'வாக என்னை
விட்டுப்பிரியாது ஒட்டிக்கொண்டே இருக்க முயன்றாள்.
வடஇந்தியப் பெண்ணை நீ விரும்பினாயா...?
இல்லை. எனது குடும்ப சோகமே என்னை விட்டுப்போகாத
நிலையிலிருந்த நான், காதலைப் பற்றிச்
சிந்திக்கும் நிலையில் அப்போது இருக்கவில்லை. ஆரம்பத்தில் எனக்கு ஒரு ஆதரவு
தேவைப்பட்டது. அது அபர்ணாவின் பெற்றோரிடமிருந்து கிடைத்தது. ஆனால் போகப் போக நிலமை
மாறி அது புலி வாலைப் பிடித்த நிலமைக்கு வந்து விட்டது.
சற்று நேரம் நிலத்தை வெறித்துப் பார்த்தபடி
அமைதியாக இருந்த நான் என் உணர்வுகளைக் கட்டுப்புடுத்திக் கொண்டு மேலும்
தொடர்ந்தேன்.
வார விடு முறையில் நான் வடஇந்தியப் பெண்ணுடன்
போய்விடக் கூடும் என்ற எண்ணத்தில் டிஸ்க்கோவும் பாட்டியுமென அபர்ணா என்னைக்
கூட்டித்திரிந்தாள். இலங்கையிலிருந்து வந்த எனக்கு இவை எல்லாம் புதிதாவும்
பிரமிப்பாகவும் இருந்தன.
ஒரு சனிக்கிழமை இரவு அது நடந்தது!
நகர மத்திலுள்ள டிஸ்க்கோவுக்கு அபர்ணா டிக்கற் வாங்கியிருந்தாள்.
ஆட்டம் முடிய நள்ளிரவைத் தாண்டிவிட்டது. இப்படியான நேரங்களில் எம்மை திரும்ப
அழைத்துச்செல்ல அபர்ணா கொடுக்கும் தொலைபேசி அழைப்பின் பேரில் அவளுடைய அப்பா
வருவார். வழமை போல அன்றும் வந்து கார் தரிப்பில் நின்றபடி அவர் தகவல் கொடுக்கவே
நாம் வெளியில் வந்தோம். போதையில் வெளியே நின்ற வெள்ளைக்கார இளைஞர்கள் அபர்ணாவைத்
தொட்டு சில்மிசம் செய்யவே இழுபறி ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற ஒருவன்
அபர்ணாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். அலறிக்கொண்டே அவள் என்னை உதவிக்கு
அழைத்தாள். அவனை அபர்ணாவிடமிருந்து பிரிப்பதற்கு, எனது முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனைத்
தள்ளவேண்டியதாயிற்று. அப்போது போதையில் நின்ற அவன் நிலை தடுமாறி அருகிலிருந்த
சீமெந்துக் குந்தில் தலை அடிபட விழுந்துவிட்டான். அவனது தலை உடைந்து, ரத்தம் பெருகி, மூர்ச்சையாகவே
அம்புலன்ஸ்ஸூம் போலீசும் வந்து விட்டது...!
அபர்ணாவின் அப்பா அங்கு நின்றாரா...?
இவ்வளவும் அவர் முன்னிலையில்தான் நடந்தது...!
அவர் உதவிக்கு வரவில்லையா...?
சொன்னால் நம்பமாட்டீர்கள், போலீஸ் வந்தவுடன் அவர் மகளைக் கூட்டிக்கொண்டு, எப்படி அங்கிருந்து மறைந்தாரோ எனக்குத் தெரியாது.
உண்மையாகவா...?
நான் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் உரத்துக்
கேட்டார் ஜோசெப். என்னுடைய கண்களிலே கரை கட்டி நின்ற கண்ணீரைக் கட்டுப்படுத்துவதற்காக சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே
பார்த்துக்கொண்டிருந்தேன். அங்குள்ள புற்தரையில் ஜோடி ஜோடியாக மணிப் புறாக்கள் இரை
தேடிக் கொண்டிருந்தன. ஜோசெப் உறைந்துபோய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்கள் எல்லாம்
சிறையில் இருந்த என் மனதை மரத்துப்போகச் செய்ததிருந்தது. மீண்டும் அவற்றை இரை
மீட்டதால் ஏற்பட்ட உணர்வுகளை அடக்கிக் கொண்டு மீதிக் கதையைத் தொடர்ந்தேன்.
மண்டை அடிபட விழுந்தவனின் உடம்பில் அதிக அளவு
அல்க்கஹால் இருந்ததனால் இரத்தப்பெருக்கு தீவிரமடைந்ததால் அடுத்த நாள் அவன் வைத்திய
சாலையில் இறந்துபோனான். வழக்கு நடந்தது. விளக்க மறியலில் இருந்த போது எனக்காக
வாதாட வழக்கறிஞரை வைக்கக்கூட ஆளில்லாத நிலையில் நீதிமன்றமே ஒருவரை நியமித்தது.
யாருமற்ற நிலையில் அனாதையாக நின்ற நான், தம்பலகாமம் தொடக்கம் என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் நீதிபதிக்குச்
சொன்னேன். என்மீது நீதிபதிக்கு அநுதாபம் ஏற்பட்டிருக்கவேண்டும். நான்கு வருடங்கள்
தீர்ப்பாயிற்று.
விளக்க மறியல் சிறையில் இருந்த போதுதாவது
அவர்கள் உன்னை வந்து பார்த்தார்களா?
இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீயே சொல்லு. அவர்கள் உனக்கு ஆதரவாக
இருந்தார்களா?
நான் என்னை அறியாமலே உரக்கச் சிரித்தேன்.
இந்தச் சிறைவாழ்க்கையும்,
என்னைப்
பொறுத்தவரையில் ஒரு பல்கலைக் கழகமே. இது எனக்கு நிறையவே பாடங்களைக்
கற்றுத்தந்துள்ளது. எமது சமூகத்தின் கபடத்தனங்களையும், சுயநலத்துக்காகச்
செய்யும் குள்ளத் தனங்களையும் எண்ணி நான் பல நாள் சிறையில்
ஆத்திரப்பட்டிருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலாசாரப் பெருமை
கொண்டவர்கள் தமிழர்கள் என்று என்னைப் பெருமைப்படுத்த அடிக்கடி சொல்வீர்களே? அவசர உலகத்தில் அவர்கள்
அதைத் தொலைந்து விட்டார்களா? எல்லாமே சுத்த ஹம்பக்! உண்மையைச்
சொன்னால், புலம் பெயர்ந்த மண்ணிலே
தாங்கள் கடந்து வந்த பாதையை, தமிழர்கள் சுலபபமாக மறக்கக் கற்றுக்கொண்டு சுயநலமாக வாழத் துவங்கி விட்டார்கள்.
அதுதான் பிரச்சனைகளின் ஆணிவேர்...!
ஜோசெப் அமைதியாக நான் சொல்வதை
கேட்டுக்கொண்டிருந்தார். என்னுடைய மனதைச் சில காலமாகவே அரித்துத் தின்னும்
தார்மீகக் கோபங்களின் அடையாளம் அதுவென அவருக்குத் தெரியும். சில நிமிஷ
நேரம் என் ஆத்திரத்தை அடைகாத்த பின் கதையைத் தொடர்ந்தேன்.
இப்பொழுது நீங்கள் கேட்ட விஷயத்துக்கு
வருகிறேன். அபர்ணாவும் தந்தையும்தான் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள்.
விளக்கமறியல் காலத்தில் என்னை அவர்கள் ஒரு நாளாவது வந்து பார்க்காத நிலையிலும், வழக்கறிஞர் மூலமாக
அவர்களை வந்து சாட்சி சொல்லுமாறு அழைத்தேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். சாட்சி
சொல்ல அவர்கள் வராததை நீதிபதி கண்டித்து, எனது எதிர்கால நன்மை கருதி குறைந்த பட்ச தண்டணை தருவதாக தீர்ப்பில்
குறிப்பிட்டார், என எனது கதையை நான் சொல்லி முடித்தபோது ஜோசெபின் உதடுகளிலே ஈரமற்ற புன்னகை ஒன்று
சுழிந்து மறைந்தது. திடீரென ஜோசெப் என்ன நினைத்தாரோ, என்னை ஆதரவுடன் அணைத்தது என் மனதுக்கு சுகமாகவும்
ஆறுதலாகவும் இருந்தது. பின்னர், யார்யாருடனோ அலை பேசியில் தொடர்பு கொண்டவர், கவலைப் படாதே, ஆண்டவன் அருள் உனக்கு
நிச்சயம் கிடைக்கும் எனச் சொல்லி விடை கொடுத்தார்.
ஜோசெப் பேச்சோடு நிற்பவரல்ல. சிறையில் எனது
நன்னடத்தையைக் காரணம் காட்டி மூன்று வருட முடிவில் எனக்கு விடுதலை வாங்கித்
தந்தார். சிறையிலிருந்து வெளியேறும் போது அங்கு நான் வேலை செய்ததற்கான பணம்
கணிசமான அளவு வங்கிக் கணக்கில் சேர்ந்திருந்தது. ஜோசெப் எனக்கு ஏற்ற வகையில் ஒரு
வேலை பெற்றுத்தர பல இடங்களில் முயற்சித்தும் எதுவும் சரிவரவில்லை. இறுதியில், தன்னுடைய நண்பர் ஒருவரின்
செக்கியூரிற்றி நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித்தந்தார்.
எதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையில் நான் என்
வாழ்க்கையை புதிசாக ஆரம்பித்தேன். வானத்து நட்சத்திரங்கள் போல நாட்கள் மெதுவாக உதிர்ந்துகொண்டிருந்தன. என்
வாழ்க்கையில் வளர்ச்சிகள் வீழ்ச்சிகள் என எல்லாவற்றையும் நிகழ்திய காலம் என்னை
வைத்து மீண்டும் விழையாட ஆரம்பித்தது.
அன்று நத்தார் விடுமுறையுடன் சேர்ந்து வந்த
சனிக்கிழமை.
பிரபலமான கேளிக்கைப்
பிரதேசமொன்றின் நைட் கிளப்புக்கு முதல் முறையாக என்னையும் முன் அநுபவமுள்ள
சிலரையும் கடமைக்கு அனுப்பி இருந்தார்கள். அந்தப் பிரதேசத்தில் அடிதடி, போதைப்பொருள், விபச்சாரம், கசினோவில் பணம் பறித்தல்
எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும்.
ஸ்கின் ஹெட், ஏ-டீ-எல்,
பீ-ஹெச்-ஏ போன்ற இனத் துவேஷக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அங்கங்கே
கும்பல் கும்பலாக நிற்பார்கள். அங்கு அடிக்கடி நடக்கும் அடிதடி மோதல்கள் ஆஸ்திரேலிய பொலீசாருக்கு
பெருத்த தலையிடி கொடுக்கும் சமாச்சாரங்கள். இதனால் இங்கு பணிபுரியும்
செக்கியூரிற்றி ஊழியர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட குண்டுகளுடன் சிறிய
கைத்துப்பாக்கி வழங்கி இருந்தார்கள். அன்று நான் இன்னொருவருடன் வாசலில் காவலுக்கு
நின்றேன். நள்ளிரவை நெருங்க நெருங்க கூட்டம் அலை மோதியது. அப்பொழுதுதான்
அருகிலுள்ள நைட் கிளப்பிலிருந்து அபர்ணா இளைஞன் ஒருவனுடன் வெளியே வந்தாள்.
மார்பகங்கங்கள் வெளியே துருத்தித் தெரிய மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தாள். அபர்ணாவை அணைத்தபடி வந்த இளைஞன்
வேறுயாருமல்ல. என்னுடன் மருத்துவம் படித்த சரவணன். அவன் இப்பொழுது படிப்பு
முடிந்து சிட்னியிலுள்ள வைத்திய சாலை ஒன்றில் பணிபுரியவேண்டும். அவனது பெற்றேரும்
வைத்தியர்களே. படிக்கும்போதே பணத்திமிருடன் எல்லோரையும் வம்புக்கு இழுப்பான்.
என்னைக் கடந்து சென்ற இருவரும் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அபர்ணாவை அணைத்தபடி சென்ற சரவணன் வீதியிலே கூட்டமாக நின்ற இனத்துவேஷ இளைஞர்கள்
குழுவொன்றுடன் முரன்பட்டிருக்கவேண்டும்.
குழுவிலிருந்த வெள்ளையன் ஒருவன் சரவணனின் முகத்தில் ஓங்கிக் குத்தினான்.
மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வடிந்தது.
அடுத்த அடி விழமுன் சரவணன் சாமர்த்தியமாகத் தப்பி ஓடிவிட்டான்.
இனத்துவேஷ இழைஞர்களுக்கு மத்தியில் கவர்ச்சியாக
நின்ற அபர்ணாவுடன் அவர்கள் சில்மிஷம் செய்யத் துவங்கினார்கள். அந்த இழுபறியில்
அவளின் மெல்லிய மேல்ச் சட்டை கிழிந்து தொங்கியது. கிழிசலினூடாகத் தெரிந்த அவளின்
கவர்ச்சிகரமான மாநிற தசையை அவர்கள் அதுவரை பார்க்காததாக இருக்கலாம். அவர்களுக்கு
அது போதையூட்டியது. தனித்து நின்ற அவளை தங்களின் காருக்குள் இழுத்துப்போட்டுப்
புறப்படத் தயாரானார்கள். அபர்ணா தன்னுடைய முழப் பெலத்தையும் ஒன்று திரட்டி
ஓலமிட்டாள். கேளிக்கை விடுதிகளிலிருந்து வந்த ராக் பாண்ட் சத்தத்துக்கு மத்தியில்
அவளின் ஓலம் அமுங்கிப்போனது. என்னுடன் காவலுக்கு நின்றவன் எல்லாவற்றையும்
அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றான். என்னால் அது முடியவில்லை. என்னை அறியாமலே
என்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் அவர்களின் கார் சில்லுக்கு குறிபார்த்துச்
சுட்டேன். அது என் கடமையல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை நான்
செய்தேன். பலத்த சத்தத்துடன் டயர் வெடித்ததும் இளைஞர்கள் ஒடிவிட்டார்கள்.
முகத்திலும் மார்பிலும் ஏற்பட்ட நகக்
கீறல்களிலிருந்து இரத்தம் கசிய, கிழிந்து தொங்கிய மேலாடையுடன், கைகளால் மார்பைப் பொத்தியபடி, உடல் நடுங்க, காருக்குள்
அமர்ந்திருந்தாள் அபர்ணா. அந்த நிலையில் அருகில் சென்று அவளுக்குச் சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. பொலீஸ்
உதவியுடன் அவளை வீட்டுக்கு அனுப்பும்படி என்னுடன் காவலுக்கு நின்ற என் சகாவிடம்
சொன்னேன். பின்னர் அங்கு நடந்த சம்பவத்தைச் சொல்ல, கிளப் அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.
நாளை, நான் துப்பாக்கிக் குண்டைப் பாவித்ததற்கான காரணத்தை விளக்கி, மேலதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
காலம் முழுவதும் இந்த சமூகம் என்னை வைத்து ஆடிய
சூதாட்டம் இனிப் போதும். இந்தப் பகடை ஆட்டத்தின் காரணமாக ஏற்படும்
சிக்கல்களுக்குள் மீண்டும் அகப்பட்டுத் தவிக்க, நான் இனியும் தயாரில்லை. இன்று இரவு மீண்டும் அதே இடத்தில் அதே வேலைக்கு நான்
செல்லவேண்டும். எனவே மனசை அமைதியாக்கி பகல் நித்திரைக்குத் தயாரானேன்.
(காலச்சுவடு. மே, 2018)
No comments:
Post a Comment