Saturday 23 January 2021

 

யாவரும் கேளிர்

ஆசி கந்தராஜா

முகுந்தனுக்கு ஏற்காட்டு மலையில் இருந்து மீண்டும் அழைப்பு வந்திருந்தது.

மலையின் அப்புறத்தேயுள்ள நகரத்தில் இருந்துவடக்கு நோக்கிச் செல்கிறது மலைப்பாதை. பல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இம் மலைப் பாதை இருபது கிலோ மீற்றர் நீண்டு ஏற்காட்டையடைகிறது. மலையில் ஆங்காங்கே அரசு வனத்துறைக்குச் சொந்தமான சந்தன மரங்கள். காட்டின் நடுவே உல்லாசம் விரும்பிகள் படகு விட்டுப் பொழுது போக்க பெரியதொரு ஏரியுண்டு. கடைத் தெருவையும் ஏரியின் விலாவில் அமைந்துள்ள பூங்காவையும் ஊடறுத்து நீளும் பாதையூடாகமேலும் ஐந்து கிலோ மீற்றர் பயணித்தால்செழித்து வளரும் தேயிலைத் தோட்டங்களை அடையாலம்.

தேயிலைத்தோட்டங்களின் நடுவே குத்துக்கல் போல் எழுந்து நின்ற ஆராய்ச்சி மையம்அந்த மலையின் வனப்பிற்குச் சற்றும் பொருத்தமில்லைத்தான். இருப்பினும்அங்கு வளரும் ‘காசுப் பயிர்கள்’ எதிர் நோக்கும் சவாலை நிவர்த்தி செய்ய அந்த நிலையம் அங்கு அவசியமாயிற்று. ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பதற்காகவே அவுஸ்திரேலியாவிலிருந்து முகுந்தன் வரவழைக்கப்பட்டிருந்தான். அவனுடைய சேவையால் பயனுற்ற மையத்தார் மூன்றாவது முறையாக முகுந்தனை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்திருந்தார்கள்.

ஏற்காடு என்றதும் முகுந்தனுக்கு முதலில் நினைவுக்கு வருவது அதன் வனப்பு மட்டுமல்லஅங்கு வேலை செய்யும் முத்துசாமியும்அவன் தாயார் சிரத்தையுடன் இலங்கை மணம் கமழச் சுட்டுத் தரும் பால் அப்பமும் தான்! ஏற்காட்டில் பணிபுரியும் காலங்களிலே முகுந்தனுக்குக் காலை உணவாக முத்துசாமி வீட்டிலிருந்து பால் அப்பம் வர வேண்டும். இது ஆராய்ச்சி மையத்தினருக்கு அவன் போட்டிருந்த எழுதாத நிபந்தனை.

காலை ஆறரை மணிக்கெல்லாம்குளித்துஉடையணிந்து விருந்தினர் விடுதியிலுள்ள முன்புற விறாந்தைக்கு முகுந்தன் வந்திடுவான்.

தேயிலைச் செடிகளினூடாகத் தவழ்ந்து வரும் இதமான குளிர் காற்றை அனுபவிப்பது அவனுக்குப் பிடித்தமானதொன்று. அந்த நேரங்களிலேதான் முத்துசாமி அங்கு பால் அப்பத்துடன் வருவான். அவை மகிழ்ச்சியான வேளைகள்!

முகுந்தன் சடங்கு அநுட்டானமானதோர் அலாதி முறையிலேயே பால் அப்பங்களைச் சாப்பிடுவான். அப்பத்தின் மொறு மொறுப்பான கரைப் பகுதியை மாசிக் கருவாடும்செத்தல் மிளகாயும்தேங்காயும் கலந்து இலங்கைப் பாணியில் இடிக்கப்படும் ‘கட்டா’ சம்பலுடன் முதலில் சாப்பிடுவான். நாக்கிலே காரச் சுவை சுள்ளிடபாலிலே பொங்கி எழுந்த அப்பத்தின் மெதுவான நடுப்பகுதியை இரண்டாக மடித்து ஒரே அடுக்காக வாய்க்குள் திணித்து காரத்துடன் இனிப்புக் கலந்த விந்தைச் சுவையை சாவதானமாக அநுபவிப்பான்.

இந்த அப்பம் சாப்பிடும் படலத்தின் போதுதான முத்துச் சாமிமுகுந்தனுடன் ஊர்ப் புதினங்களும்லோக்கல் பொலிட்டிக்ஸும் பேசுவான்.

முத்துசாமியை முகுந்தனுக்கு இலங்கையிலே தெரியும். அது அந்தக் காலம்! இலங்கையின் தேயிலைரப்பர் தோட்டங்களிலே ஆங்கிலத்துரைக்கு விசுவாசமான – கீழ்ப் படிவுள்ள ஊழியர்கள் என்ற ‘கியாதி’யை யாழ்ப்பாணத் தமிழர் பெற்றிருந்த காலம். இத்தோட்டங்களிலே கங்காணிக்கு மேற்பட்டதுரைக்குக் கீழ்ப்பட்ட பதவிகளிலே யாழ்ப்பாணத்தவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

இலங்கையின் மலைநாட்டு நகரங்களுள் ஒன்றான இரத்தினபுரியிலே செழித்திருந்த தேயிலைத் தோட்டம் ஒன்றில் முகுந்தனின் மாமா கணக்காளராகப் பணியாற்றினார். அந்த மாமாவின் வீட்டிலே தான் முதன்முதலில் முத்துசாமியை முகுந்தன் ஒரு சின்னப் பையனாகப் பார்த்தான்.

காலை நேரங்களிலே மாமாவின் வீட்டிற்கு முத்துசாமி அப்பம் கொண்டு வருவான். முத்துசாமியின் தாய் சுடும் அப்பம் அந்தத் தோட்டத்திலேயே பெயர் பெற்றிருந்தது. அப்பம் கொண்டு வரும் முத்துசாமி வந்தோம் போனோம் என்கிற பையனல்ல. வீட்டிலே ‘மயந்தி’க் கொண்டு நின்று அங்கு கிடைக்கும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஆர்வமுடன் வாசிப்பான். அவனிடம் வளர்ந்திருந்த அந்த வாசிப்புப் பழக்கம் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் அவன் மாமா வீட்டில் சுதந்திரமாக உலாவித் திரிவதற்கும்வேண்டிய சஞ்சிகைகள் புத்தகங்களைப் படிப்பதற்கும் மாமா அனுமதி கொடுத்திருந்தார். பிள்ளைகள் பரீட்சையில் குறைவான புள்ளிகள் எடுக்கும் போதெல்லாம், ‘உங்களைப் படிக்கிற நேரம் முத்துசாமியைப் படிப்பித்திருக்கலாம். அவனுக்குத் தான் படிப்பிலை எவ்வளவு கரிசனை’ என்று முகுந்தனின் மாமா அலுத்துக் கொள்வது வழக்கம்.

அந்தக் காலங்களில் தான் இலங்கையில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. அதன்பின் யாழ்ப்பாணத்தவர்கள் அமர்ந்திருந்த பதவிகளில் சிங்கள இளைஞர்கள் வந்தமரத் தொடங்கினார்கள். முத்துசாமியின் தோட்டத்திற்கும் சிங்கள இளைஞன் ஒருவன் ‘கண்டக்டராக’ நியமிக்கப்பட்டான். கண்டிய உயர்குடியிலே செல்வத்துடன் பிறந்த அவனுக்கு திரித்துவக் கல்லூரியிலே கல்வி பயின்றும் படிப்பு ஏறவில்லை. அரசியல் செல்வாக்குடன் தேயிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுக் கொண்டான். பகலில் ‘கண்டக்டர்’ என்கிற பந்தாவில் தோட்டமெல்லாம் சுற்றித்திரிவான். இரவில் குடியும் கும்மாளமும் மட்டுமல்லஅடியாட்களின் உதவியுடன்கொழுந்து பறிக்கும் குமரிகளின் குருத்து உடல் தேடும் வேட்டை. இதுக்கு இணங்கினாற்றான் கொழுந்து பறிக்கும் வேலைக்கு ‘செக்றோல்’ கிடைக்கும் என்பது போன்ற அட்டகாசம். இளைஞன் முத்துசாமியினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனைத் தோட்டத்திலே பிரச்சினையாக்க முனைந்தான். இந்த எதிர்ப்புக் குரலை முளையிலே கிள்ள முந்தினான் ‘கண்டக்டர்’. முத்துசாமியின் பெயர் ‘செக்றோல்’ எனப்படும் வேலை செய்வோர் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது.

வேலையற்று வெறுப்போடு சுற்றித் திரிந்த முத்துச் சாமியின் சேவையைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இலகுவில் பெற்றுக் கொண்டது. அதன் பின்பு அவன் தோட்ட நிர்வாகத்துக்கு ‘வேண்டப்படாத ஆளாகவே’ கணிக்கப்பட்டு இனக்கலவரம் வரும் பொழுதெல்லாம் ‘ஸ்பெஷலாகவே’ கவனிக்கப்பட்டான்.

எண்பத்து மூன்றாம் ஆண்டு இனக்கலவரம் வெடித்த போது காடையர் கூட்டமொன்று தோட்டத்தில் முத்துசாமியின் லயத்தையே முதலில் குறி வைத்துக் தாக்கியது. சிங்கள இளைஞனான கண்டக்டரே தனது ஜீப்பில் அடியாட்களைக் கொண்டு வந்து குவித்திருந்தான்.

அடேகள்ள தோணி தெமிழ பயலே…,

கண்டக்டர் துரையையா எதுக்கிற…,

இப்பபாரு உன் யூனியன் உதவிக்கு வருதானு…!’

கொச்சைத் தமிழும் கெட்டவார்த்தைகளும் கலந்து கோஷமிட்டவாறே ஜீப்பில் இருந்த பெற்றோல் ஊற்றப்பட்டு முத்துசாமி வாழ்ந்த லயத்துக்கு தீவைக்கப்பட்டது. எரியத்துவங்கிய லயத்து வீட்டிற்குள் புகுந்து முக்கிய சாமான்களை எடுத்துஅவசர அவசரமாக வெளியே எறிந்து கொண்டிருந்தாள் முத்துசாமியின் தங்கை. அதுவரை ஜீப்பினுள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் அவளது மயிரைக் கொத்தாகப் பிடித்து ஜீப்பிற்குள் இழுத்து வந்தான். தடுக்கப் போன முத்துசாமிஅடியாட்களால் நையப் புடைக்கப்பட்டுகைகள் கட்டப்பட்ட நிலையில்தங்கையின் கற்பு ஜீப்பிற்குள் பறிபோனது. சிங்களவர் மத்தியிலே வாழ்ந்த தமிழர்கள் அனைவருமே அன்று அகதிகளாக்கப்பட்ட நிலையில் சிங்களப் பெரும்பான்மையை எதிர்க்கத் தோட்டத்தில் யாருக்கும் திராணி இருக்கவில்லை.

இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்தோ என்னவோ. முத்துசாமி குடும்பம் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா செல்ல முன்னரே அனுமதி பெற்றிருந்தது.

எண்பத்தி மூன்றில் மனிதம் வேரறுக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் பூமிப் பந்தின் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறே இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த முகுந்தனும் அகதிகளோடு அகதிகளாக அவுஸ்திரேலியா வந்து கன்பராவிலுள்ள அரச ஆராய்ச்சி நிறுவனமொன்றில் ஆராய்ச்சியாளராக அமர்ந்தான். அவனுடைய விசேட ஞானத்தையும் அறிவுரைகளையும் இந்தியாவில் உள்ள ஏற்காட்டு ஆய்வு மையம் வேண்டிக் கொண்டது. அதன் நிமிர்த்தமே அவன் முதன் முதலிலே அங்கு வந்திருந்தான்.

ஏற்காட்டில் முத்துசாமியைக் கண்டதும் ‘உலகம் எவ்வளவு சிறியது’ என்று முகுந்தன் மகிழ்ந்தான். நீண்ட காலத்தின்பின் முத்துசாமி தன்னுடைய மனத்துயர் முழுவதையும் கொட்டித் தீர்த்து ஆறுதலடைந்தான். முத்துச் சாமியின் தங்கை பதினாறு வயது இளங்குருத்து இனக் கலவரத்தின் போது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்அவளுடைய உடல் வீதியிலே தூக்கி எறியப்பட்டதுடன்தந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதாக சொல்லியழுதான் முத்துசாமி.

போதுமடா சாமி’ என்ற மனநிலையிலேயே மூன்று தலைமுறைக்கு மேலாக வாழ்ந்து வளப்படுத்திய மண்ணில் இருந்து தாயுடன் வெளியேறி தனது மூதாதையர் ‘அவதரித்த’ புண்ணிய பூமி என்கிற கனவுகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தான்.

இந்தச் சோகங்களின் மத்தியிலே மனித உறவுகளின் மென்பகுதியைத் தொடுவதுபோல பால் அப்பம் மீண்டும் முகுந்தனின் சுவைக்குக் கிட்டுவதாயிற்று.

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற உத்தம உறவைக் கற்பித்து. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிற்பபான நாகரீகம் பேணும் இந்த தமிழ் மண்ணிலே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் முத்துசாமி’ என்று ஆறுதல் கூறி அவுஸ்திரேலியா திரும்பினான் முகுந்தன்.

இரண்டாவது தடவை முகுந்தன் ஏற்காட்டுக்குச் சென்றிருந்த பொழுதுபுதிய தோட்டச் சூழலில் இலங்கையில் இருந்து மீண்ட தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைச் சொல்லி முத்துசாமி குறைப்பட்டான்.

ஐயாநாங்க இங்க வேண்டப்படாத ஆளுக…எங்கள இங்க ‘சிலோன்காரங்க’ என்றுதான் சொல்றாங்க! சிலோன்ல எங்களை இந்தியாக்காரன்னு அடிச்சு விரட்டினான். இங்க எங்கள ஜாதியே தெரியாத சிலோன்காரன்னு மிதிக்கிறாங்க. இதில என்ன சாமி ஞாயம் இருக்கு?’ இவ்வாறெல்லாம் சொல்லி மனம் நொந்தான்.

இந்த முறைப்பாடுகளிலிருந்த உண்மையைச் சில தினங்களிலேயே முகுந்தன் இனங்கண்டு கொண்டான்.

ஏற்காட்டிலில் உள்ள பெரும்பாலான தோட்டங்கள்சிங்கப்பூர் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தன. அவர்கள் தமது செல்வத்தின் ஒரு பகுதியை இந்தத் தேயிலைத் தோட்டங்களிலே முதலீடு செய்திருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் தேவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதனால் அத்தோட்டங்களில் தேவர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளிலே முன் உரிமையும் முதன்மையும் கொடுக்கப்பட்டிருந்தது.

தேவர் ஜாதியின் பெருமையையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுவதற்காகத் தோட்டத்தில் நியமனம் பெற்றவர் போல சுந்தரத் தேவர் அங்கு குரல் எழுப்பிப் பேசுவார். தலைமைக் கங்காணியாக அவர் ஏற்காட்டு தோட்டங்களிலே வலம் வருபவர். ஒரு சந்தர்ப்பத்திலே அவர் ஏற்காட்டிலுள்ள தேயிலைத் தோட்டங்களின் நிர்வாகக் குரலாகச் சில நியாயங்களை முகுந்தனுக்குச் சொன்னார்.

இந்த தோட்டங்க தேவங்கட சொத்து… அவங்க எங்க பங்காளிக. சிலோன்காரங்கஅவங்க என்ன ஜாதின்னு சொல்லுங்க… சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் தேவங்க தேவங்க தான்…’

 ‘தமிழனுக்கு தமிழன் உதவி ஒத்தாசையா வாழ வேண்டாமோ?’ என்று எச்சில் விழுங்கியவாறு முகுந்தன் கேட்டான்.

சுந்தரத் தேவருக்கு முகுந்தன் இலங்கையில் பிறந்தவன் என்பது தெரியாது. அவன் பேசும் யாழ்ப்பாணத் தமிழை வைத்து அவன் மலையாளத்தான் என்ற அனுமானம் அவருக்கு!

தமிழின் அது இதுன்னு பேசுறதெல்லாம் அரசியல். அதை நம்ம கட்சித் தலைவங்க பாத்துக்குவாங்க. அவங்கஇன்னிக்கு ‘இந்தியாக்காரன்’ என்ற தேசியம் பேசுவாங்க. நாளைக்கு தமிழன்னு சொல்லி புறநாநூறுக் கதை சொல்வாங்க. அதெல்லாம் எலெக்ஷனுக்கு எலெக்ஷன்தொகுதிக்குத் தொகுதி மாறும். அதெல்லாம் கட்சித் தலைவங்க சமாச்சாரம். ஆனாஜாதி அபிமானம்தான் நமக்குப் பெரிசு. தேவன்மறவன்! அவனுக்காக நாங்க உசிரையும் குடுப்பம்!’ என்று சுந்தரத் தேவர் முழங்கினார். அவருடன் நீதிநியாயம் பேசமுடியாதென மௌனமானான் முகுந்தன்.

மூன்றாவது தடவை முகுந்தன் ஏற்காடு சென்றபோதுஆராய்ச்சி மைய அதிகாரிகளுடன்பெட்டி தூக்கும் கூலியாக முத்துசாமி விமான நிலையத்துக்கு வந்திருந்தான். கவலைகளினால் அவன் சடுதியாக மூப்படைந்திருப்பதாக முகுந்தனுக்கு தோன்றியது.

விருந்தினர் விடுதிக்கு வந்தவுடன் ‘என்ன சேதி முத்துசாமி?’ என அன்புடன் விசாரித்தான் முகுந்தன்.

ஏதோ இருக்கேன் சாமி’ என்று கூறிய முத்துசாமி நீண்டதொரு பெருமூச்சினை வெளிப்படுத்தி மௌனமானான். பின்பு எதையோ நினைத்துக் கொண்டவன்போல, ‘நாளைக்கு நடக்கிற மீட்டிங்கில தான் சிலோன்ல இருந்து வந்திருக்கிற எங்க தலை விதியை நிர்ணயிப்பாங்க’ என்றான் விரக்தி இழையோடிய புன்னகையுடன். முத்துசாமியை நேசத்துடன் பார்த்தான் முகுந்தன்.

படுக்கை அருகே பெட்டிகளை வைத்த் முத்துசாமி முகுந்தனின் கைகளை இறுகப்பற்றியவாறே ‘வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக சாமி…?’ என்றான்.

அப்பொழுது முத்துசாமியின் விழிகளில் துளிர்த்திருந்த கண்ணீர்த் துளிகளை முகுந்தன் அவதானிக்கத் தவறவில்லை. மீண்டும் சந்தித்ததால் உணர்ச்சிவசப்படுகிறான் என்ற சமாதானத்துடன் தாராளமாகவே அவனது கைகளில் பணத்தைத் திணித்துவிட்டு, ‘அப்பத்தை மறந்துவிடாதே’ என்று நினைவூட்டினான் முகுந்தன்.

 

நேரமாற்றத்தின் காரணமாக அடுத்த நாள் மதியம் போலவே முகுந்தனால் எழுந்திருக்க முடிந்தது. வெளியே எட்டிப் பார்த்தான். தோட்டத்தில் பதட்டம் நிலவியது. ஆயுதம் தாங்கிய பொலீஸார் தோட்டத்து வீதிகளில் ரோந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி மையத்துக்கு அருகில் விருந்தினர் விடுதியை ஒட்டிக் கூட்டம் கூட்டமாக ‘கசமுசா’ வெனப் பேசிக் கொண்டிருந்தவர்களை பொலீசார் கலைத்துக்கொண்டிருந்தனர்.

முன்பக்க விருந்தையிலுள்ள மேசை மீது முத்துசாமி காலையில் கொண்டு வந்த வைத்த பால் அப்பங்கள் ஆறிக் குளிர்ந்திருந்தன.

முகுந்தன் முத்துசாமியைத் தேடினான். காணவில்லை!

ஆராய்ச்சி மையத்திலே வேலை செய்யும் ராமசாமி முகத்திலே கலவரம் பரவ முகுந்தனிடம் வந்தார். அவர் சொன்ன விபரங்கள் முகுந்தனை உறையச் செய்தன.

தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதனால் ஆள்குறைப்பு அவசியம் என்றும்இதனால் இங்கு பிறந்தவர்களுக்குக்குத்தான் நிரந்தர வேலை என்றும் நிர்வாகம் அறிவித்ததாம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத்திட்டத்தின் கீழ் இந்தியா வந்து சேர்ந்தவர்கள் சிறிது காலத்திற்கு வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் சொல்லியது. இந்த அறிவிப்பினை தேவர் ஜாதியினர் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். அப்பொழுது முத்துசாமி எழுந்து ஏதோ நியாயம் கேட்டிருக்கிறான்.

இந்த சிலோன்கார நாய்களயார்ரா இங்க வெத்திலை வைச்சு அழைச்சது…?’ என்று சுந்தரத் தேவர் பல்லை நெறுமியிருக்கிறார். அப்பொழுது தான் முத்துசாமி ஆவேசாமாகப் பேசினானாம்.

இந்தத் தோட்டத்து முதலாளி சிங்கப்பூரில் இருக்கிற இந்திய வம்சாவழி. நானும் சிலோன்ல இருந்து வந்திருக்கிற இந்திய வம்சாவழிதான். சிலோன்ல எங்கள இந்தியாக்காரன்னு உதைச்சு விரட்டினான். இப்ப நீங்க – தமிழன்களேஎங்கள சிலோன்காரன்னு முத்திரை குத்தி ஓதுக்கிறது என்னா நாயம்என்று கேட்டு முடிப்பதற்கிடையில் ‘மூடடா வாயை…! தோட்டம் தேவன்ரநாங்க தேவன்கநீ யார்டாஜாதியே என்னன்னுனு தெரியாத பரதேசிப் பய…’ என்றவாறே ஆத்திரத்துடன் பாய்ந்து சென்று அவனைச் சுந்தரத் தேவர் அடித்திருக்கிறார். அப்போ கூட்டத்தில் இருந்த தேவரின் கையாட்கள் சிலர்முத்துசாமியை மீட்டிங் நடத்த ஹோலுக்கு வெளியே தூக்கிச் சென்றார்களாம்.

அதற்குப் பிறகு முத்துச்சாமிக்கு என்ன நடந்ததெனத் தெரியா தென்றார் ராமசாமி. பொலீஸ் ஜீப் ஒன்று சிவப்பு விளக்குடன் அங்கு வந்து நின்றது. அதிலிருந்து முத்துசாமியின் தாய் ஒப்பாரி வைத்தபடி இறங்கினார். பொறுமையை இழந்தவனாக இராமசாமி தடுத்தும் கேளாமல் முகுந்தன் வெளியே வந்தான். முகுந்தனைக் கண்டதும் முத்துசாமியின் தாய்அவன் காலடியில் விழுந்து கதறி அழுதார்.

தம்பி…! எம் மவனை இவங்க அடிச்சே கொன்னுட்டாங்க. நம்ம ரத்தம்… நம்ம பூமினு இங்க வந்தம்’ என்றவாறே காலடியில் மயங்கிச் சாய்ந்தார் முத்துச்சாமியின் தாய்.

ராமசாமியின் உதவியுடன் அந்த முதிய தாயைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுதி விறாந்தையிலுள்ள வாங்கில் கிடத்தினான் முகுந்தன்.

வாங்கினருகே இருந்த மேசைமீதுமுத்துசாமி காலையில் கொண்டுவந்து வைத்த பால் அப்பங்களை கட்டெறும்புகள் மொய்த்திருந்தன!

(மலேசிய நண்பன் 25. ஜூன் 2000)

 


No comments:

Post a Comment

.