Saturday 23 January 2021

 எதிரியுடன் படுத்தவள்

ஆசி கந்தராஜா

மேற்குச் சுவர் என்னும் வெயிலிங் வால்...!

யூதர்கள் வயது வித்தியாசமின்றி அந்தச் சுவரில் தலையை முட்டிப் பிரார்த்திக்கிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பிள்ளையார் கோவிலில் குட்டிக்கும்பிட்ட பழக்கத்தில் நானும் மூன்று முறை சுவரில் முட்டிப் பிரார்த்திக்கிறேன்.

மன்னர் தாவீதும், அவரின் மகன் சாலமனும் கட்டிய தேவாலயங்கள், தொடர் படையெடுப்புக்களால் சிதைக்கப்பட, யூதர்களின் கோயிலில் மிஞ்சியது, இந்த ஒற்றைச் சுவர் மட்டுமே. 'நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று காட்டுவதற்கு கடவுள் விட்டு வைத்திருக்கும் ஒற்றை அடையாளமாக யூதர்கள் இதை நினைக்கிறார்கள். இதனால் வாழ்வில் ஒருமுறையேனும் சுவரைத் தரிசித்து, முட்டிக்கொண்டு அழுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

சுவரிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் அங்காடித் தெரு. மேற்குச் சுவரின் புனிதத்தையும் யூத மதத்தின் மகத்துவங்களையும் சொல்லும் நினைவுப் பொருள்கள் அங்குள்ள கடைகளில் கொட்டிக் கிடக்கின்றன.

அன்று ஞாயிற்றுக்கிழமை!

மேற்குச்சுவரைத் தரிசிக்க பெருவாரியான யூதர்களும் வெளிநாட்டு உல்லாசிகளும் தங்கள் குழந்தைகளுடன் ஜெருசலேமின் பழைய நகரத்துக்கு வந்திருக்கிறார்கள். சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு  வெவ்வேறு மொழிகளில் ஜெருசலேமின் வரலாற்றை, அவரவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் விளக்கிச் சொல்லுகிறார்கள்.

நூற்று இருபத்தைந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஜெருசலேம் நகரின் கடுகளவு பகுதியே பழைய நகரம். இதன் பரப்பளவு வெறும் 0.9 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இங்கு தொன்மமும் புனிதமும் நிறைந்திருக்கிறது. பல கோடி மக்களின் நம்பிக்கைகளை இந்த மண் சுமந்து கொண்டிருக்கிறது. பல தடவைகள் இடிக்கப்பட்டு மீளக் கட்டப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட நகரத்தின் கற்களும் இடிபாடுகளும் பூமிக்கடியில் தடயங்களாக, ஒவ்வொரு தட்டில் இன்றும் புதைந்து கிடக்கின்றன.

ஜெருசலேம் நகரில் மூன்றில் இரண்டு பகுதியினர் யூதர்கள். மிகுதி பாலஸ்தீனிய இஸ்லாமியர்களும் கிறீஸ்தவர்களும். இந்த மூன்று மதத்தினருக்கும் ஜெருசலேம் புனித தலம். ஆனால், வரலாற்றுக் காலம் முதல் பிரச்சனைக்குரிய இந்த நகரத்தை யூதர்கள் தங்களின் பழமையான தலைநகரம் என முரண்டு பிடிக்கிறார்கள். காரணம் அங்குதான் அவர்களின் மேற்குச்சுவர் இருக்கிறது.

மேற்குச் சுவர் அருகே அரேபிய ஸ்பெஷல் காப்பி விற்கும் கடையிலிருந்து பாலஸ்தீனிய இசை உரத்துக் கேட்கிறது. அதற்கு எதிர்ப்புத் பெரிவித்து பழமைவாத யூதர் ஒருவர் சண்டை போடுகிறார். அரேபிய இசை அங்கு ஒலிப்பது அபத்தம் என வாதாடுகிறார். மேற்குச் சுவரின் புனிதம் இதனால் கெட்டுவிடும் என முரண்டு பிடிக்கிறார். முடிவில், பாலஸ்தீனியரின் உரத்த தொனி யூதரை அடக்கிவிடுகிறது.

உல்லாசிகள் மத்தியில் ஒரு சிறுவன்  'மினோரா' உருவம் கோத்த வெள்ளிச் சங்கிலிகளை கையில் ஏந்தியபடி அங்குமிங்கும் அலைந்து திரிகிறான். அவனது வியாபாரம் இன்னும் போணியாகவில்லை. அதனால்த்தான் அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு ஒலிவ் மரத்தை நோக்கி நடக்கிறானோ?

பெட்டிக் கடைகளின் ஓரமாக, சடைத்து வளர்ந்து நிற்கும் அந்த ஒலிவ் மரத்தின் கீழ், சிறுவனின் தாய் அவீவா, ஜமுக்காளம் ஒன்றை விரித்துக் கடை பரப்பியுள்ளாள். அவளும் ஒரு யூத பெண்மணிதான். ஆனால் அவளுக்கு  அங்கு கடைபோட அனுமதி இல்லை. அத்துமீறி அவள் அங்கு கடைபோடுவதால் அவளைப் போலீஸார் கைது செய்வதும் அபராதம் விதிப்பதும் அடிக்கடி நடக்கும் சங்கதி.

அவீவா ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறாள்? 

ஹோலோகோஸ்ட் காலத்தில் ஜேர்மனியில் வாழ்ந்த யூத பரம்பரையில் பிறந்தவள் அவள். அழகானவள். சியோனிச ஈர்ப்புக் காரணமாக யூத இனத்துக்கும் அரசுக்கும் தன் பங்களிப்பைச் செலுத்த இளவயதில் இஸ்ரேலுக்கு வந்தவள். கால ஓட்டத்தில் குடியுரிமை பெற்று  ஜெருசலேமில் வாழ்ந்தாலும் இன்றுவரை அவளால் கடினமான இலக்கண விதிகள் கொண்ட ஹீப்ரூ மொழியைத் தன்வசப்படுத்த முடியவில்லை.

வெள்ளிச் சங்கிலிகளை விற்க முடியாத சோகத்தில் வாடிக் களைத்து வரும் மகனை அணைத்து அவீவா முகத்தைத் துடைத்து விடுகிறாள். இளவதில் கணவனை இழந்து ஒற்றை ஆளாக மகனை வளர்க்கும் அவளின் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. மற்றவர்களால் அறிந்துணர முடியாத அதிர்ச்சியும் துயரமும் கலந்தது.

மேற்குச்சுவரின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்து பார்த்தால் தங்க மேற்கூரையோடு இருக்கும் மிகப் பழமையான 'அல் அக்ஸா' மசூதி தெரியும். நபிகள் நாயகம் இங்கிருந்தே விண்ணகப் பயணம் சென்று திரும்பியவர். இதனால் மெக்கா, மெதினாபோல, ஜெருசலேம் நகரும் முஸ்லிம்களுக்குப் புனிதமானது. இந்த மசூதியில் ரமலான் நோன்பு மாதத்தில் கூட்டம் அலைமோதும்.

மேற்குச்சுவர் அருகே, உல்லாசிகளுக்காகப் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து, ஜேர்மன் தம்பதிகள் சிலுவை கோத்த மணி மாலையை உருட்டி ஜெபம் செய்கிறார்கள். பழைய நகரத்தின் யூத குடியிருப்பை ஊடறுத்து, நெளிந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து வந்த சோர்வு அவர்களின் முகத்தில் தெரிகிறது. இவர்களுக்கும் ஜெருசலேம் நகரம் முக்கியமானது. இது இயேசு கிறிஸ்து நடமாடிய மண். இங்கிருந்துதான் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கல்லறையிலிருந்து அவர் உயிர்த்தெழுந்ததும் இங்குதான். இங்கிருக்கும் 'திருக்கல்லறை' தேவாலயம், இயேசு புதைக்கப்பட்ட இடத்தில் உருவானது என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இதைத் தரிசிப்பதை வாழ்நாள் கனவாக வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் கோடிக் கணக்கானவர்கள். இதற்காகவே ஜேர்மன் தம்பதிகளும் ஜெருசலேமிற்கு வந்திருக்கிறார்கள்.

மேற்குச் சுவர் முன்னால் அதீத பழமைவாத யூதர்கள் கூடி நிற்கிறார்கள். அவர்களின் கறுப்பு நிற நீண்ட மேலங்கியும், வட்ட வடிவத் தொப்பியும், நீண்ட தாடியும், தொப்பிக்கு வெளியே கயிறுபோலத் தொங்கும் தலைமுடியும், மற்றைய யூதர்களிடமிருந்து அவர்களை இனம் பிரித்துக் காட்டுகிறது. வழமைபோல அவர்கள் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, தங்கள் முறைப்படி ரனாஹ் என்றழைக்கப்படும் ஹீப்ரூ பைபிளை வாசித்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். இவர்களின் ஜெபம் மணிக் கணக்கில் நீளும்.

'அல் அக்ஸா' மசூதியிலிருந்து மாலை நேர தொழுகைக்கான பாங்கு ஒலிக்கிறது. மேற்குச் சுவரில் முட்டிப் பிரார்த்திக்கும் பழமைவாத யூதர்கள் தங்கள் காதை இறுகப் பொத்திக்கொள்ளுகிறார்கள். சிலர் பிரார்த்தனையை நிறுத்தி இஸ்லாமியர்களைத் திட்டுகிறார்கள்.

பிரார்த்தனை தடைப்பட்ட வெறுப்பில் தெருவுக்கு வந்த யூதர் ஒருவர் வெள்ளிச் சங்கிலிகள் விற்கும் சிறுவனை இனம் கண்டுகொண்டார். சிறுவனின் பின்னணி அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். யூதரின் கையில் அவன் அணிந்திருந்த கிப்பாஹ் தொப்பி. யூத அடையாளமான அந்தத் தொப்பியை அவன் அணியக்கூடாது என ஹீப்ரூ மொழியில் திட்டுவது யூதரின் உடல் மொழி மூலம் புரிகிறது.

யூதரின் கத்தலையும் மிரட்டலையும் அவீவா சட்டைசெய்யவில்லை. எதுவும் பேசாது தனது கைப்பையில் இருந்த இன்னுமொரு கிப்பாஹ் தொப்பியை எடுத்து மகனுக்கு அணிவித்து விடுகிறாள்.

நீ ஒரு சாத்தான், எதிரியுடன் படுத்தவள் எனச் சொல்லி, கையிலிருந்த யூத பைபிளைத் தொட்டு அவீவாவைச் சபிக்கிறார். சிறிது நேரம் கழித்து ஜேர்மன் மொழி கலந்து சாபமிடுகிறார். அவருடன் இணைந்து சுவரில் முட்டிப் பிரார்த்தனை செய்த பழமைவாதிகளும் அவீவாவைச் சுற்றி நின்று திட்டுகிறார்கள். இவர்களின் அத்துமீறலும் அடாவடித்தனமும் இஸ்ரேலிய பொலீஸ் அங்கு வரும்வரை தொடரும்.

அனைத்தையும் அருகிலிருந்து அவதானித்த ஜேர்மன் தம்பதிகள், எவாவும் சுல்ஸும், மெல்ல எழுந்து அவீவாவின் பாதையோரக் கடைக்கு வந்தார்கள். மினோரா உருவத்தில் அமைந்த நான்கு மெழுகுதிரித் தாங்கிகளை வாங்கியவர்கள், சற்றுத் தாராளமாகவே பணம் கொடுத்தார்கள். யூரோவில் சம்பாதிக்கும் அவர்களுக்கு அது பெரிய தொகையல்ல. ஆனால் அவீவாவுக்கு? அது மூன்று நாளைய வருமானம். தற்போதைய நிலையில் அவளால் அதை மறுக்க முடியாதென்பதுதான் நிஜம்.

ஜேர்மன் தம்பதிகளின் தாராள மனதுக்கு நன்றி சொன்னாள் அவீவா. பின்னர் எதையோ நினைத்தவள், பத்து வருடங்களுக்கு முன்னரென்றால் நீங்கள் மேலதிகமாகத் தந்த பணத்தை வாங்கியிருக்கமாட்டேன், முகம் கொடுத்துக் கதைத்தும் இருக்கமாட்டேன். ஜேர்மன் இனத்தை வெறுத்த காலம் அது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது என்றாள். அவீவாவின் முகம் அப்போது இறுகிச் சிவத்திருந்தது.

எமா எதுவும் பேசாது, மேலே சொல்லு என்னும் பாவனையில் அவளைப் பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

பேர்ளின் புற நகர்ப் பகுதியில் வசித்த யூத பெற்றேருக்கு பிறந்தவள் நான். ஹிட்லரின் ஆட்சியின் கீழ், யூதர்கள் பட்ட அவலங்களையும் அவஸ்தைகளையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது தந்தை வழிப் பூட்டனாரும் அவரது சகோதரரும் ஹிட்லரின், பொஸ்டம் நாசி வதை முகாமில் சித்திரவதை செய்ப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள். இது பற்றி எனது தந்தையார் நிறையவே எனக்குச் சொல்லியிருக்கிறார். இதனால் இயல்பாகவே சியோனிசத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது...

உன் நிலமை எனக்குப் புரிகிறது அவீவா. இருந்தாலும் சியோனிசத்துக்கு மறுபக்கமும் உண்டல்லவா?

உண்மைதான். ஜெர்மனியில் பிறந்த யூதரான தியோடோர் ஹெஸில் என்ற பத்திரிக்கையாளரின் சிந்தனையில் 1897ம் ஆண்டில் உருப்பெற்றதே சியோனிசம். அவர் எழுதிய 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம்' என்ற நாவலை நான் வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் கற்பனையே தற்போது நிஜமாகி 'ஸ்ரேல்' ஆக நிற்கிறது. அதன் உண்மை முகத்தை இங்கு வந்த பின்னர்தான் புரிந்துகொண்டேன் என்ற அவீவா, ஜமுக்காளத்தில் கடைபரப்பிய சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்துப் பெட்டிகளில் அடுக்கத் துவங்கினாள்.

யூதர்கள் அனைவரும் சியோனிஸ்ட்கள் அல்ல. அவர்கள் சிறு தொகையினரே, என யூதர்களுக்கு ஆதரவாகத் தன் அபிப்பிராயத்தைச் சொல்லி, அவீவா விட்ட இடத்திலிருந்து உரையாடலைத் தொடரவைத்தார் சுல்ஸ்.

உண்மைதான். ஜேர்மனியில் இருந்து இங்கு வந்த புதில் எனது மண், என் மக்கள் என்ற உணர்வு மேலிட இங்குள்ள வாழ்க்கை முறைக்குள் என்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக் கொண்டேன். இங்குள்ள எல்லாமே எனக்கு பிரமிப்பாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் இஸ்ரேலிய மக்கள் மத்தியில் சியோனிஸ்டுக்கள் மிக ஆழமாக ஊடுருவி இருப்பதை மெல்லத் தெரிந்து கொண்டேன்.

நிஜமாகவா? என்று ஆச்சரியப்பட்டார் எமா.

ஆம். ஆரிய இனத்தூய்மை பற்றி பேசிய ஹிட்லரின் இனப் பிரிவினைக் கொள்கையின் கீழ் யூதர்கள் ஜேர்மனியில் அடக்குமுறைகளைச் சந்தித்தார்கள். உண்மையில் அது இன்று இஸ்ரேலில் பரவலாக நடைமுறைப் படுத்தப்படுவதுதான் யதார்த்தம், எனச் சொல்லி நிறுத்தியவள், 'அல்அக்ஸா' மசூதியின் தங்கக் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூரையில் சோடிசோடியாக மாடப் புறாக்கள் அமர்ந்திருந்தன. அந்தக் காட்சியில் ஒன்றிய அவீவாவின் மனம், கடந்துபோன தன் காதல் நினைவுகளில் சங்கமமாகி இருக்க வேண்டும்.

சற்று முன்னர் யூத பழமைவாதி ஒருவர் உன்னுடைய மகனின் கிப்பாஹ் தொப்பியை பறித்துச் சென்றாரே, அதற்கான காரணத்தை அறியலாமா? என வார்த்தைகளை அவதானமாக தெரிந்தெடுத்து கொக்கி போட்டார் சுல்ஸ். அவர் ஒரு பத்திரிகையாளர். அவீவாவின் கதை, நல்லதொரு கட்டுரைக்கான கருவாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அவளிடம் கதை புடுங்குவதில் கண்ணாயிருந்தார்.

அவீவா இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில் தெரிந்தது. அவளின் உதடுகளில் வறண்ட புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. இதை அவதானித்த சுல்ஸ், எனது கேள்வி உன் மனதைப் புண்படுத்தியிருந்தால் விட்டுவிடு. அதற்காக வருந்துகிறேன், என்றார்.

அப்படியெல்லாம் இல்லை ஐயா! இவை எனக்குப் பழக்கப்பட்டவை. இங்குள்ள வாழ்க்கை, இப்படி எனக்கு எத்தனையோ பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கு, எனத் தனக்குத்தானே அனுதாபப்படும் தோரனையில் அனுங்கியவளின் குரல், உடைந்து நடுங்கியது.

சிறிது நேரம் அவீவா மௌனம் காத்தாள். பின்னர் மெல்லச் சுதாகரித்துக்கொண்டு சுல்ஸின் கேள்விக்கு விரிவாகவே பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு காலத்தில் நாசிச ஜெர்மனியிலும் நிறவெறி தென் னாப்பிரிக்காவிலும் நடைமுறையில் இருந்த இனப்பாகுபாடு, இன்றைய இஸ்ரேலில் தொடர்வது உங்களுக்குத் தெரியுமா? வெளி உலகத்துக்கு மதச் சார்பற்ற நாடாகத் தோன்றும் இஸ்ரேலில், யூதமத அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் அதிகாரத்தை மெல்லக் கைப்பற்றி வருகின்றன. இந்த மதவாத சக்திகளின் அண்மைய இலக்கு கலப்புத் திருமணங்கள் எனச் சொல்லி நிறுத்தினாள். அப்போது அவீவாவின் உதடுகள் ஆத்திரத்தால் துடித்தன.

நிலமையைச் சுமுகமாக்க பாலஸ்தீனியரின் கடைக்குச் சென்று, மூன்று அரேபிய காப்பிகளுடன் திரும்பினார் சுல்ஸ். அவரின் செயலுக்குத் தன் கண்களால் நன்றி செலுத்திய அவீவா கதையைத் தொடர்ந்தாள்.

நானும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவள்தான். எனது கணவர் ஒரு பாலஸ்தீனிய இஸ்லாமியர். அவரை நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனமொன்றில் சந்தித்தேன். பிடித்துக் கொண்டது. திருமணம் செய்துகொண்டோம்.

அது உனக்குப் பெரும் சவாலாக இருந்திருக்குமே?

இருந்தது. இஸ்ரேலில் காலங்காலமாக பின்பற்றப்படும் இனப் பாகுபாடு காரணமாக யூத-அரபு கலப்புத் திருமணங்களுக்கான வாய்ப்புக் குறைவு. இஸ்ரேலிய சட்டப்படி, மதச்சார்பற்ற சிவில் திருமணங்களுக்கு இடமில்லை. அனைத்துத் திருமணங்களும் யூத அல்லது இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மத விதிமுறைகளுக்கு உட்பட்டே பதிவு செய்யப்படவேண்டும்.

ஓஹோ...! வேறுவிதமாகச் செய்வதானால்?

இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பதிவுத் திருமணம் செய்ய விரும்பினால், இஸ்ரேலை விட்டு வெளியேறி, அந்நிய நாடொன்றில் திருமணம் செய்துவிட்டு வரவேண்டும். அந்தத் திருமணம் பின்னர் இஸ்ரேலில் சட்டப்படி அங்கீகரிக்கப்படும். இப்படித்தான் எங்கள் திருமணமும் நடந்தது, ஜேர்மனியில்.

இந்த இடத்தில் அவீவா தன் கதையை நிறுத்தி, கைகளால் முகத்தைப் பொத்தி அழுதாள்.

நல்ல வேளையாக, அப்போது அவீவாவின் ரெலிபோன் சிணுங்கியது. மறுமுனையில் அவளது சினேகிதி என அவர்களின் உரையாடலில் தெரிந்தது. கவலையை மறந்து அவீவா சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

இதை ஒரு வாய்ப்பாக எடுத்த சுல்ஸ், தொலைபேசி உரையாடல் முடியும்வரை காத்திருந்து, சமூகம் உங்களை எப்படி நடத்துகிறது? எனக் கேட்டார். யூத சமூகம் மட்டுமல்ல பாலஸ்தீனிய இஸ்லாமியர்களும் அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? என்ற விபரம் அறிவதே அவரது உண்மையான நோக்கம். அப்பொழுது அவர் செய்தி சேகரிக்கும் கைதேர்ந்த ஒரு பத்திரிகையாளனாகவே மாறியிருந்தார்.

பொதுவாகவே யூத குடியிருப்புகளும் அரபு குடியிருப்புகளும் பாதுகாப்பு வேலியிடப்பட்டு இங்கு பிரித்தே வைக்கப்பட்டுள்ளன. இரண்டு இனங்களும் கலந்து வாழும் பெரு நகரங்களில் கூட, தனித்தனியான குறிச்சிகள் உள்ளன. இருப்பினும் ஜெருசலேமை அண்டியிருக்கும் அரபு கிராமங்களைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய வதிவிட அனுமதி வைத்திருந்தால் ஜெருசலேமின் சில பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கமுடியும்...

இந்த இடத்தில் அவீவாவைச் சைகையால் இடைமறித்த சுல்ஸ், அரபு இஸ்லாமிய இளைஞர்கள் வேண்டுமென்றே யூத பெண்களை மயக்கி, காதல் வலையில் விழ வைப்பதாகவும், இது யூத இனத்தின் மீதான அவர்களின் போர் முறைகளில் ஒன்று எனவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறதே? எனத் தான் பத்திரிகையில் வாசித்த செய்தியொன்றைக் கேட்டார்.

இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனாலும், இஸ்ரேலில் காலங்காலமாக இறுகிய மத, மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழும் யூத நங்கைகள் அரபு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வெகு அரிது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் இங்கு வந்து குடியேறிய யூதர்கள் மத்தியில் மதக் கட்டுப்பாடுகள் மிகக் குறைவு.

ஓ...,

மேற்கத்திய கலாசாரத்தில் வளர்ந்து, இஸ்ரேலுக்குப் புலம்பெயர்ந்து வாழும் யூத கன்னிகள், அரபு ஆடவருடன் காதல் கொள்வது தற்போது அதிகரித்து வருவதை மறுக்கமுடியாது. இப்படிக் காதலிப்பவர்கள் பின்னர் கலியாணம் செய்து கொண்டு அரபு கிராமங்களிற்கு சென்று தங்கிவிடுவதும் உண்மைதான்.

இவர்களுள் பலர், பல்வேறு கலாசாரச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டு சீரழிந்து போவதாகவும் இதனால்தான் யூதமத அடிப்படை வாதிகள் கலப்புத் திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே? எனக் கேட்டு சம்பாஷனையை வளர்த்தார் சுல்ஸ்.

அதற்காக அவர்கள் கையிலெடுக்கும் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியுமா? என ஆத்திரப்பட்டாள் அவீவா. அவளது கோபம் அவளைப் பொறுத்தவரை நியாயமானதும் கூட.

என் கணவருடன் நான் நட்பில் இருந்த காலத்தில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தேன். அவர் அங்கு என்னைக் காண வரும்போதெல்லாம் விடுதியில் உள்ளவர்களால் அவமானப் படுத்தப்பட்டோம். கடுமையான வார்த்தைகளால் எங்களை வசைபாடினார்கள். இஸ்லாமியரை மணப்பதால் யூத இனம் நீத்துப் போய் அழிந்து விடும் என அவர் இல்லாத சமயத்தில் எனக்குப் போதித்தார்கள்.

அப்போது திருக்கல்லறைத் தேவாலயத்தின் மணி ஒலித்தது. அது அந்த மாதத்தின் புனித பிரார்த்தனைக்கான அழைப்பு.

எமா ஜெப மாலையை உருட்டிப் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் சுல்ஸ்?

அவருக்குத் தான் எழுதப்போகும் கட்டுரைக்கு ஒரு முடிவு தேவை என்ற அவசரம். அதனால், உன்னுடைய கணவர் எங்கே இருக்கிறார்? என, நீண்ட நேரம் தன் மனதில் பொத்தி வைத்திருந்த கேள்வியைத் தொடர்ந்தும் அடக்க முடியாது கேட்டார்.

மதத்தின் பெயரால் இந்த சமூகம் எமக்குத் தந்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. யூதர்களின் உணவகங்களில் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இரவு நேரங்களில் வீதியில் எனது கணவர் பல தடவைகள் தாக்கப்பட்டார். நான் கருவைச் சுமந்த காலம் அது. ஒருநாள் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையில், எனது கணவர் இனந் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டு எல்லைத் தூணில் கட்டப்பட்டிருந்தார்.

இதைச் சொல்லும்போது அவீவாவின் முகத்தில் ஆத்திரமும் அதனால் விளைந்த கோபங்களும் மாறிமாறிச் சுழன்றடித்தன.

நீ ஜேர்மனிக்கு வந்து நிம்மதியாக வாழலாமல்லவா? என தயங்கித் தயங்கி ஆலோசனை சொன்னார் எமா.

நான் ஏன் வரவேண்டும்? இஸ்ரேல் என் நாடு. நான் மட்டுமல்ல என் மகனும் யூதன்தான். யூதராகப் பதிவு செய்வதற்கு ஒரு குழந்தை யூதத் தாயின் வயிற்றில் கருவாகி இருக்க வேண்டும் என்பதுதான் விதி. உலகமெங்கும் சிதறி வாழும் யூதர்கள், மீண்டும் இங்கு குடியேறி வாழ்வதற்கான அடிப்படைச் சட்டமும் இதுதான். பின் எதற்காக இவர்கள் என் மகனை ஏற்க மறுக்கிறார்கள்? பாலஸ்தீனியருக்கு பிறந்தவன் என்ற காரணத்தாலா? அல்லது எதிரியின் மகன் என்பதால் நிராகரிக்கப்படுகிறானா? ஹிட்லரின் ஹோலோகோஸ்ட் இன அழிப்பின் கீழ் வதைபட்ட யூத இனம், ஜேர்மனியில் நாசி அரசின் இனச் சுத்திகரிப்புக்கு இலக்கான சமூகம், இன்று சியோனிச இனத்தூய்மைக் கொள்கையைத் தன் கையில் எடுத்திருப்பது எந்தவகையில் நியாயம்? என அவள் கேள்விகளை அடுக்கியபோது, எங்கோ ஒரு கூடுமறந்த பறவை கிறீச் எனச் சத்தம் எழுப்பியது.

(ஞானம், பெப்ரவரி 2019)

 

No comments:

Post a Comment

.