சாது மிரண்டால்...!
ஆசி கந்தராஜா
கிராமசேவகர் மாமா, பேர்த்சேட்டிபிக்கற் (Birth certificate) வந்திட்டுதோ? எனக்கேட்டு, வழமை போல எனது
அலுவலகத்துக்கு வந்திருந்தான் நாராயணன்.
நடந்து வந்த களைப்பினால் அவனுக்கு மூச்சு
வாங்கியது. பிறப்பிலேயே நாராயணனுக்கு கால் ஊனம். இருந்தாலும்
நல்ல மாற்றுத் திறனாளி. கண் பார்த்ததை, அவனது கை செய்யும். தோட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்கள், பழுதா? கூப்பிடு நாராயணனை, என்னுமளவுக்கு ஊரிலே அவன்
பிரசித்தம். அவனுக்கு ஆதரவாய் வாழ்ந்த பாட்டிக் கிழவியும் இறந்துவிட, மெசின் திருத்தப்
போகுமிடத்தில் சாப்பாடுவான். இல்லையேல், இருக்கவே இருக்கிறது கதிரேசு கடை ரொட்டியும், வாழைப் பழமும், தேத்தண்ணியும்.
'கார்த்திகை மாசத்தோடை உங்களுக்கு ‘பென்சன்’ எண்டு கேள்வி, அதுக்கு முதல் ‘பேர்த்சேட்டிபிக்கற்ரை’ எடுத்துத் தாங்கோ' என மீண்டும் நச்சரித்தான், நாராயணன்.
விவசாய சங்கத்தில், மாற்றுத் திறனாளிகள்
திட்டத்தின் கீழ், மெக்கானிக் வேலை
காலியாயுள்ளதாம். அதற்கு மனுச்செய்ய, அவனுக்கு இப்பொழுது பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனக்கும் அதை
எடுத்துக் கொடுக்க ஆசைதான். ஆனால், அவன் பிறந்தபோது, பிறப்பை யாரும் பதிவு செய்யாததால், சட்டப்படி நாராயணன்
என்னும் நபர், பிறக்கவில்லை. இதுதான்
சிக்கல்.
லுங்கியைத் தூக்கிப் பிடித்தபடி, பக்கவாட்டில் உடம்பை
சரித்து, விந்தி விந்தி, வீதி ஓரமாக நடந்து போய்க்
கொண்டிருந்தான் நாராயணன். மேலும் கீழும் மூச்சு வாங்க, நெஞ்சைத் தடவியபடி அவன்
நடந்து சென்ற காட்சி, என்னுள் ஏராளமான நினைவுக்
கண்ணிகளை, கலைத்துப் போட்டன.
நாராயணனின் தாய் அமிர்தவல்லிதான் அப்போது
எங்கள் கிராமத்தின் அழகு சுந்தரி. அவளை மையமாக வைத்து, ஊரிலே கிசுகிசுக்கள்
தாராளமாக வலம் வந்தன. இதனால், பேசிவந்த கலியாணங்கள் ஒன்றும் பொருந்தி வராததால், பல இழுபறிகளுக்கு
மத்தியில் பேரம்பலம் தாலி கட்டினான். பேரம்பலம் அதிகம் பேசமாட்டான். குட்டையாக, குண்டாக, தார் பீப்பா சைசில்
இருப்பான். சின்ன வயது முதல் என்னுடன் ஒன்றாகப்
படித்தவன். ஓணானைக் கண்டால் சும்மா விடமாட்டான். ஒரு கல்லெறியில் அதன் கதையை முடித்துவிடுவான். நான் கிராம சேவகர் சேவையில் சேர, பேரம்பலம் கொழும்பில், சௌக்கிய இலாகாவில், சேர்ந்தான். கலியாணத்தின்
பின்னர், சாப்பாட்டுச் செலவுபோக
மிகுதிச் சம்பளத்தை, பொத்திப் பிடித்தபடி
மனைவிக்கு அனுப்பிவிடுவான். ஆனாலும் அமிர்தவல்லி, பேரம்பலத்துடன் சந்தோசமாக
இருந்ததாகத் தெரியவில்லை. வீட்டு வேலைக்காரன் போலவே நடத்தினாள். இடையிடையே கை
நீட்டி அடிக்கவும் செய்தாள். மொத்தத்தில், பேரம்பலத்தை அவள் தன்னுடைய புருஷனாகவே நினைத்ததில்லை.
யாழ்ப்பாணத்தில், விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலமது. மூலைக்கு மூலை பல போராட்டக் குழுக்கள் தானாகவே முளைத்தன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆனான். இப்படியானதொரு போராட்டக் குழுவுக்கு, பிராந்திய தலைவனாக இருந்தவன், எங்கள் ஊர் மலர்வண்ணன். உயரமான, இறுக்கமான உடம்பு. ஊரிலே ஊதாரியாகச் சுற்றித் திரிந்தவன், இறுதியிலே போராட்டக் குழுவுடன் இணைந்து அதிகாரம் செய்துகொண்டு திரிந்தான். இடுப்பிலே பிஸ்ரல் துப்பாக்கி செருவிக்கொண்டு திரிவதாகவும், அமிர்தவல்லி வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் பேசிக் கொண்டார்கள். காலப் போக்கில் அமிர்தவல்லியின் தொடுப்பை, பேரம்பலம் அறிந்திருக்க வேண்டும். அதைத் தட்டிக் கேட்க, மலர்வண்ணனின் துப்பாக்கிக்குப் பயம். ஊருக்கு நிரந்தரமாக வந்தால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையில், அருகிலுள்ள சௌக்கிய இலாகா அலுவலகத்துக்கு வேலை மாறி, வீட்டோடு வந்து விட்டான். இருந்தாலும் பேரம்பலம் இருக்கும்போதே மலர்வண்ணன் வந்துபோனான்.
பிள்ளைகளின் படிப்புக்காக என்னுடைய மனைவியும்
பின்ளைகளும் பெருநகரத்தில் வாழ்ந்தார்கள். நான் மட்டும் எனது கிராமசேவகர் பணி
நிமிர்த்தம் பூர்வீக வீட்டில் வாழ்ந்தேன். திடீரென ஒரு ஞாயிற்றுக் கிழமை, தலைக்கு வைத்த நல்லெண்ணை
காதுவரை வழிய, அவசர அவசரமாக பேரம்பலம்
எனது வீட்டுக்கு வந்தான். போதையில் கண்கள் சிவந்து மின்னின. லுங்கி மட்டும்
அணிந்திருந்த அவனது உடம்பிலே கீறல்
காயங்கள் இருந்தன. வந்தவன் எதுவும் பேசாது, சாக்குப் பையில் கொண்டு வந்த சாராயத்தை, கிளாஸில் வாத்து, இரண்டு பெக் உள்ளே தள்ளிய
பின், திடீரென அழ ஆரம்பித்தான்.
என்ன பிரச்சினை பேரம்பலம்? எனக் கேட்டேன்.
‘என்னோடை நிலமை யாருக்கும்
வரக்கூடாதடா...’ எனத் துவங்கியவன், சட்டென எழுந்து வெளியே
ஓடினான். அதன் பிறகு மா மரத்தின் கீழே வாந்தி எடுக்கும் சத்தங்கள் வகை வகையாகக்
கேட்டன. லுங்கியால் முகத்தை துடைத்தபடி மீண்டும் வந்தமர்ந்த பேரம்பலம், சற்றுக் குறைவாக ஊற்றிக்
கொண்டான். இதில் கொடுமை என்ன வென்றால் குடிப்பதை நிறுத்திய நான், குடிப்பவன் முன்னால் உட்கார்ந்து கதை கேட்பதுதான். இருந்தாலும் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டுமென்ற நினைப்பில், என்ன நடந்தது? என மீண்டும் கேட்டேன்.
‘அமிர்தவல்லி மாசமா
இருக்கிறாள்’ என்றான் மொட்டையாக.
‘நல்ல விஷயம்தானே, நீ அப்பாவாகப் போறாய், வாழ்த்துக்கள்’ என்றேன்.
சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்த
பேரம்பலத்தின் உதடுகள் நடுங்கின. பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, கிளாஸ் நிறைய சாராயத்தை
ஊற்றி ஒரே மடக்கில் குடித்தவன், சிகரெற்றைப் பற்ற வைத்துக்கொண்டு புகைவழியே பேசத் துவங்கினான்.
‘உனக்கு தெரியுமா? கலியாணம் கட்டி இத்தனை
வருஷங்களாக அமிர்தவல்லியை நான் தொட்டதே கிடையாது’.
வெறுப்புடன் சிகரெற்றை நசுக்கி அணைத்து, நிலத்தைப் பார்த்தபடி
மௌனமாக இருந்தான் பேரம்பலம்.
விஷயத்தைச் சொல்லு, மனப்பாரம் குறையும், என ஆறுதல் சொன்னேன்.
இரண்டு கைகளாலும் முகத்தை அழுத்தித் துடைத்தவன், சிறிது நேர அமைதியின்
பின் தொடர்ந்தான். ‘உனக்கெல்லாம் இது
விளங்காதடா, அநுபவித்தால்தான் அதன்
வலி உனக்குப் புரியும். ஒவ்வொரு நாளும் காலமை எழும்பி, அமிர்தவல்லி வாந்தி
எடுக்கும்போதே, அவள் கர்ப்பமாய் இருப்பதை
விளங்கிக் கொண்டேன். இதைக்கூட என்னால் புரிந்து கொள்ள முடியாது என்ற நினைப்பில், குழந்தைக்கு தகப்பன் நான்
என, ஊரையும் என்னையும்
நம்பவைக்க, அந்த அவிசாரி நாய், எண்டைக்குமில்லாத புதினமாய், சேர அழைக்கிறாள்...’
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், பேரம்பலம் சொல்வதை நான்
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். நடந்த விஷயம் அனைத்தையும் அவன் சொல்லி
முடிக்கும்போது, முழுப் போத்தலும்
காலியாகியிருந்தது. தன்னுடைய கதைக்கு, நான் பதிலோ அபிப்பிராயமோ சொல்லாதது, அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்க வேண்டும். போத்தலைக் கவிழ்த்து, எஞ்சியிருந்த சொட்டு
மதுவையும் ஆவென வாயை திறந்து, நாவில் ஊற்றியவன், திடீரென எழுந்து வெளியே
போனான்.
கால ஓட்டத்தில், அமிர்தவல்லியின் வயிற்றில் குழந்தை வளர, அவளது உடம்பிலும் பல
மாறுதல்கள் ஏற்பட்டன. நாக்கிலும் சொண்டிலும் தோன்றிய பருக்கள் நாளடைவில் அவளது
உடல் முழுவதும் பரவி புண்ணாகி , நீர் வழியத் துவங்கியது.
நிணநீர் முடிச்சுக்கள் வீங்கி நடக்க முடியாமல், அமிர்தவல்லி மூலையில்
முடங்கிப்போனாள். இதே குணம் குறிகள் மலர்வண்ணனுக்கும் தோன்ற, ஊரில் அவனது நடமாட்டம்
வெகுவாகக் குறைந்து போனது.
அன்று எங்கள் பிராந்தியத்தின் சார்பில், இரத்த வங்கிக்கு இரத்தம்
வழங்கும் நாள். கிராமசேவகர் என்ற முறையில், இரத்த தானத்துக்கு நான் பொறுப்பாக இருந்தேன். இது சம்மந்தமாக, வைத்திய அதிகாரியைச்
சந்திக்கச் சென்றபோதுதான்,
வைத்திய சாலையில்
பேரம்பலத்தைச் சந்தித்தேன். வெளி நோயாளர் பிரிவில் ஊசி போட வந்திருந்தான்.
‘பத்து ஊசி போடவேணும், மறக்காமல் நாளைக்கும் வா.
தொடர்ந்து போட்டால்தான் பென்சிலின் வேலை செய்யும். போன தடவை, இடையிலை விட்டதாலை, திரும்ப புண் வந்திருக்கு.
கண்ட கண்ட சாக்கடையிலை உழண்டு திரியிறது, பிறகு இங்கை வந்து கழுத்தை அறுக்கிறது’ என கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத்திட்டி, பேரம்பலத்தை அனுப்பினாள், மருத்துவ மாது.
அதையும் இதையும் சேர்த்துப்பார்த்த எனக்கு, விஷயம் விளங்கி விட்டது.
அருகே நின்ற ஆலமரத்தின் கீழ், பேரம்பலத்தை நெட்டித் தள்ளிக்கொண்டு போனேன்.
படுபாவி, அமிர்தவல்லிக்கும் இதுதானா? நீயா குடுத்தனி? என பயங்கர டென்ஷனுடன்
கேட்டேன்.
ஆமாடா! நான்தான் குடுத்தேன், அதுக்கு என்ன இப்ப? என ஆத்திரப்பட்டவன், பின்னர் தன்னைச்
சுதாகரித்துக் கொண்டு, எனக்கு வேறு வழி
தெரியல்லையடா. வாழ்க்கை பூரா என்னை ஏமாத்தி துரோகம் செய்தவளுக்கும், துப்பாக்கி வைத்திருந்த தைரியத்தில், நான் வீட்டிலை இருக்கவே, மனைவியிடம் வந்து போனவனுக்கும், தண்டனை குடுக்க, என்னாலை முடிந்த வழி
இதுதான், என்றான் முகத்தை
இறுக்கமாக வைத்துக்கொண்டு.
அதுக்கு இப்பிடியாடா? என நான் கேட்டதுக்கு, பதில் சொல்லாமல் பஸ்
நிலையத்தை நோக்கி, நடக்கத் துவங்கினான்
பேரம்பலம்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், என் மனதில் படிந்திருந்த
பல முடிச்சுக்கள் மெல்ல அவிழத் துவங்கின.
பொதுமக்கள் வழங்கும் இரத்தத்தில், பாலியல் நோய்க் கிருமிகள்
முதலான தொற்று நோய்க் கிருமிகள் இருக்கிறதா? எனச் சோதிக்க, டாக்டர் ஒருவர் எம்முடன்
இருப்பார். அவரிடம் ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் நோய்கள் பற்றி, பொதுவாகக் கேட்டேன்.
ஆண்டு இரண்டாயிரத்துக்குப் பின்னரே, பாலியல் ரீதியாக
பரவக்கூடிய எயிட்ஸ் நோய்,
இந்தியா, இலங்கையில் பரவியது.
எயிட்ஸ், ஒரு ஹெச்.ஐ.வி. வைரஸ் நோய். வைரஸ்ஸைக் கட்டுப்படுத்த மருந்தில்லை. ஆனால் பக்டீரியாவால் வரும் பாலியல் நோய்களைக் குணப்படுத்த
மருந்துண்டு. ஆரம்ப நிலையில் இதை பென்சிலின் ஊசிமூலம் குணப்படுத்தலாம். ஆனால்
முற்றிய நிலை சிக்கலானதும்,
அபாயகரமானதும் என, சுருக்கமாக விளக்கம்
தந்தார் வைத்தியர்.
பாலியல் நோயுள்ளவர் பூரண குணமடைய
வாய்ப்பிருக்கிறதா டாக்டர்? என, பேரம்பலம் பற்றிய எனது
அனுமானத்தை தெளிவாக்க, மீண்டும் கேட்டேன்.
நிச்சயமாக. எயிட்ஸ் தவிர்ந்த மற்றைய நோய்களை, ஆரம்ப நிலையில், அன்டி பயோட்டிக் எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பாவித்து முற்றாகக்
குணப்படுத்தலாம், என்ற டாக்டர், என்ன விஷயம்? உங்களுக்கும் ஊசி போடவா? எனக் கேட்டுச்
சிரித்தார்.
இந்த அறிவியல் தகவலைத்தான் மனைவியைப்
பழிவாங்கவும், தன்னைக் குணப்படுத்தவும், பேரம்பலம் பயன்படுத்திக்
கொண்டான். இதற்காக, அவன் கையில் எடுத்த
உயிரியல் ஆயுதம், ‘றிப்போனீமா’
(Treponema) வகை பக்டீரியா கிருமிகள். இந்தக் கிருமிகளே, இருபதாம் நூற்றாண்டில் கொடிய பால்வினை நோயாகக் கருதப்பட்ட, சிபிலிஸ் (Syphilis) நோய்க்குக் காரணம். சௌக்கிய இலாகாவில்
பணிபுரிந்த பேரம்பலம், சிபிலிஸ் நோயின் தாக்கம், குணம்குறி, சிகிச்சை பற்றி, முழுமையாக வாசித்து
அறிந்திருக்கிறான். வயிற்றில் உருவாகிய கரு, கணவனது என ஊரை நம்ப வைக்க, அமிர்தவல்லி உடலுறவுக்கு
அழைத்ததை, பேரம்பலம் கனகச்சிதமாகப் பயன் படுத்திக் கொண்டான். சிபிலிஸ் நோயுள்ள விபசாரியை
தேடிப்பிடித்து உறவு கொண்டவன், தனக்கு ஆரம்ப நோய் அறிகுறி தோன்றும்வரை
காத்திருந்து, அமிர்தவல்லியின்
விருப்பத்துக்கு இணங்கி இருக்கிறான். மனைவிக்கு நோய் தொற்றியதும், தான் குணமடைய, பென்சிலின் ஊசி போடத்
துவங்கிவிட்டான். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான், அவனை நான்
வைத்தியசாசையில் சந்தித்தேன்.
மலர்வண்ணனின் உடலில் தோன்றிய பருக்களை வைத்து, இயக்கம் விஷயத்தை விளங்கிக் கொண்டது. நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும், இயக்க கட்டுப்பாட்டை மீறியதற்காகவும், நெற்றிப் பொட்டில் சுட்டு, அவனுக்கு மரண தண்டனை கொடுத்தது இயக்கம். சிபிலிஸ் நோய் பற்றி எதுவுமே அறிந்திராத, கிராமத்தில் வாழ்ந்த, அமிர்தவல்லிக்கு நோய் முற்றியது. படுத்த படுக்கையில் கிடந்தவள், மலர்வண்ணனின் குழந்தையை - நாராயணனை, சூம்பிய காலுடன், யாருடைய துணையுமின்றி, வீட்டில் பெற்றெடுத்தாள். அதன் பிறகு அமிர்தவல்லி, அதிக காலம் வாழவில்லை.
'கிராமசேவகர் மாமா, 'பிறப்புச் சான்றிதழ்' வந்திட்டுதோ...?' எனக் கேட்டு, மீண்டும் நாராயனன் நாளை வருவான். அவனுக்கு சொல்வதற்கு ஓரு பதிலை நான் தயாராக வைத்திருக்கவேண்டும்.
அவனது வாழ்க்கை, புரியவே முடியாத ஏராளமான அதிர்ச்சியும், துயரமுமான, பக்கங்களைக் கொண்டது.
காலம் செய்யும் மாயங்கள் இவை அனைத்தையும் ஒருநாள் புரட்டிப்போடும். அதுவரை நாராயணன் நம்பிக்கையுடன் காத்திருப்பான்.
(அம்ருதா, பெப்ரவரி 2018)
No comments:
Post a Comment