Saturday 23 January 2021

 சூக்குமம்

ஆசி கந்தராஜா

ராணுவ ஜீப் சடுதியாக அவர் முன் நின்றதும் சின்னக் கண்ணு திகைத்துப் போனார். ஜீப்பினுள் இருந்த ‘முக மூடி’ இளைஞன் தலையை ஆட்டிவேசின்னக்கண்ணுவின் முகத்தில் பளார் என ஒரு அறை விழுந்தது.

உன் மகன் சந்திரன் ‘கொட்டியா’(Tiger) தானே.?, சொல்லுடா!’

சின்னக்கண்ணு மிடறு முறித்து பதில் சொல்வதற்கிடையில் மீண்டும் பல அறைகள் விழுந்தன. அவருடைய மேலுதடு வெடித்து இரத்தம் வடியத் துவங்கியது. தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து வெடித்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டார்.

சந்திரன் இருக்கிற புலிப்படை முகாம் எங்கையெண்டு உனக்குத் தெரியும் தானே…?’

சின்னக்கண்ணுவின் கட்டுக் குடுமியை இறுகப் பிடித்துத் தலையை மேலும் கீழும் ஆட்டிமுழங்காலை மடித்து நாரியில் பலமானதொரு உதைவிட்டான் இராணுவ கோப்ரல் ஒருவன். ஜீப்பின் பின்புற ஆசனங்களுக்கு நடுவே முகம் குப்புற விழுந்தார் சின்னக்கண்ணு.

இராணுவத்தால் சின்னக்கண்ணு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கிராமமெங்கும் பரவியது.

அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் கைது செய்யப்படுவது சாதாரண விஷயமே. ஆனால்அயல் கிராமங்களுக்கெல்லாம் மிகவும் வேண்டப்பட்டவராக வாழ்ந்த சின்னக்கண்ணு,  இவ்வாறு கைது செய்யப்பட்டதை ஊர் மக்களாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர் எப்பொழுது திரும்புவார் என்பதுயாரும் ஆரூடம் கூற முடியாது. இந்த நிலையில்சின்னக்கண்ணு இல்லாமல் ஊரிலும் அயல் கிராமங்களிலும் அந்த வேலையைஎப்படி ஒப்பேத்துவது என்பதுதான் அனைவரது கவலையும்.

மாதத்தின் முதலாவது சனிக்கிழமை ‘உடையார் வளவு’ எனப் பலராலும் அறியப்பட்ட அந்த தென்னந் தோப்பில்தான் சின்னக்கண்ணு தனது தொழிலை ஆரம்பிப்பார்.

அதிகாலையிலேயே உதவிக்கு இரண்டு மூன்று எடுபிடிகளுடனும்உசார் ஏத்த அரைப் போத்தல் சாராயத்துடனும் தென்னந்தோப்பில் அவர் ஆஜராவார் என்பதை ஊர் அறியும். வெயில் ஏற ஏற கிராம மக்கள் தமது இளம் நாம்பன் மாடுகளுடனும்கடுவன் நாய்களுடனும் தோப்பில் குழுமத் தொடங்குவார்கள்.

தென்ன்ந்தோப்பின் மேற்கு மூலையில் நன்கு காய்ந்து முறுகிய பூவரச மர விறகுகளும் தேங்காய் மட்டைகளும் கொண்டு நெருப்பு மூட்டப்பட்டிருக்கும். நெருப்பின் நடுவே நீண்ட வளைந்த கம்பிகள் நெருப்பு நிறம் பெற்றுக் கனன்னு கொண்டிருக்கும்.

தோப்பின் நடுவே சடைத்து வளர்ந்த பலா மரம் ஒன்றுண்டு. அந்த மரம் இப்பொழுது காய்ப்பதில்லை. அதன் கீழே சாக் கொன்றை விரித்து சின்னக்கண்ணு அமர்ந்து கொள்வார். பழுப்பேறிய கிளாஸ் ஒன்றில் அளவாகச் சாராயத்தை ஊற்றி இடையிடையே உசார் ஏற்றிக் கொள்வார். அந்நேரம் அவரது எடுபிடிகள் சிறிதும் பெரிதுமான கத்திகளை மணலும் கலவான் ஓட்டுப் பொடியும் சேர்ந்த கலவையைதீட்டுக் கொட்டனில் போட்டுகூராகத் தீட்டியெடுத்து சாராயப் போத்தலுக்கு அருகே உள்ள சாக்கில் வைத்து விடுவார்கள். சுருட்டொன்றைப் புகைத்து முடித்தபின் எழுந்து நின்று காளைகளைப் பார்த்தால் சின்னக்கண்ணு தனது தொழிலை ஆரம்பிக்கப் போகிறார் என்பது அர்த்தம்.

இரண்டு கருங்காலில்ப் பொல்லுகளைஒரு முனையில் ‘ஸ்குறூ’ ஆணி கொண்டு இணைத்த ‘கிட்டி’யே அவருடைய தொழிலின் பிரதான ஆயுதம். சுத்தியல்ஆணிகுறடு போன்றவற்றை ஒழுங்கு சீராக எவ்வாறு வேலையின்போது அவர் கையில் கொடுக்க வேண்டுமென்பதையும் எடுபிடிகளுக்குச் சின்னக்கண்ணு நன்கு பழக்கியிருந்தார்.

கிராமத்து விவசாயிகளிடம் மாட்டுப்பட்டிகள் உண்டு. பட்டியில் உள்ள மாடுகளை இனங்காண அறிவதற்குக் குறியிடுதல் வேண்டும். சிவப்பேறி அடுப்பிலே கனன்று கொண்டிருக்கும் கம்பிகளைக் கொண்டு வெவ்வேறு வகையான குறிகளை அச்சொட்டாக வைப்பதில் சின்னக் கண்ணு நிபுணர். அந்த நேரங்களில் ஓவியம் தீட்டும் பக்குவம் அவர் விரல்களில் ஏறிவிடுவதுண்டு.

வண்டில் இழுக்கும் பருவத்தில் வளர்ந்து நிற்கும் காளைகளுக்குக் ‘காய்அடித்தல்’ வேண்டும். இதை சின்னக்கண்ணு தனது பாஷையில் ‘நலமடித்தல்’ என்பார். இது செய்வதால் காளைமாடுகள் பெலமேறி ஒழுங்காக வேலை செய்யும் என்பது கிராமத்து விவசாயிகளது நம்பிக்கை.

காளைகள் ஒவ்வொண்ணும் வரிசைக் கிராமத்திலேயே கவனிக்கப்படும். முன்னம் கால்களும் பின்னம் கால்களும் வெவ்வேறாகச் சேர்த்துக் கட்டப்பட்டு காளைகளை நிலத்தில் விழுத்தி அமத்திப்பிடித்துக் கொள்வார்கள் எடுபிடிகள். சின்னக்கண்ணு பின்னங்கால்களுக்கிடையே தொங்கும் விதைகளைத் தமது ‘கிட்டி’யால் நசுக்கிக் கலக்குவார். உபாதையில் காளைகளை போடும் கூப்பாட்டில் ஊரே வெடித்துவிடும். இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாது பின்னர் நான்கு கால்களுக்கும் லாடன் அடித்துபழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் அச்சொட்டாக விசேடக் குறிகளையும் போட்டுவிடுவார். வேலை ‘அசுப்புசுப்பானதல்ல’ ஆனாலும் தனது பணிகளை கனகச்சிதமாக முடித்த பின்னர். சுருட்டொன்றைப் பற்ற வைத்துக் கொள்வார். உபாதையில் நொந்து உடல் குன்றிப் போய் நடக்க முடியாமல் நிற்கும் காளைகளைச் சுருட்டுப் புகையை உறுஞ்சி வெளியே ஊதியபடி பெருமிதம் பொங்கப் பார்ப்பார் சின்னக்கண்ணு.

இந்தத் தொழில் வித்தைகளைச் சின்னக்கண்ணு தமது தந்தையிடமே எடுபிடியாகச் சேர்ந்து கற்றுக் கொண்டார். தனது மகன் சந்திரனுக்கும் இந்தக் குலவித்தையைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டுமென்பது அவருடைய ஆசை. ‘பட்டணத்திலுள்ள மிருக வைத்தியரிடம் கொண்டுபோனால் எந்த உபாதையுமில்லாமல் செய்துவிடுவார்நீங்கள் செய்வது மிருக வதை’ என்று சந்திரன் விவாதிப்பான். பன்னிரண்டாம் வகுப்புவரை படித்த அவன்தம்மை முற்போக்குவாதிகளென இனம்காட்டிக் கொண்டவர்களுடன் சிறிது காலம் சுற்றித் திரிந்தான். இப்பொழுது விடுதலை இயக்கத்தில் இருப்பதாக ஊரார் பேசிக் கொண்டார்கள். பட்டணத்தில் உள்ள ஒரேயொரு மிருக வைத்தியரிடம் ஊரில் உள்ள அனைவரும் சென்றால் அவரால் தனித்து இந்த வேலையை ஒப்பேத்த முடியாது என்பது சின்னக்கண்ணுவின் எதிர்வாதம். மிருக வைத்தியருக்கு வேறு வேலைகளும் உண்டல்லவா?

காளைகளுடன் மல்லுக்கட்டி முடிய மதியம் கழிந்து விடும். பசியைத் தாங்குவதற்காக எனச் சொல்லி இரண்டு போத்தல் தென்னங் கள்ளை வயிற்றுள் இறக்குவார். கள்ளும் சாராயமும் வயிற்றுள் கலந்து ‘கிக்’ ஏறும் நிலையில் தான் ‘எடுபிடிகள்’ கம்பிளைச் சூடேற்ற மூட்டப்பட்டட அடுப்பிலிருந்து சுடுசாம்பல் கொண்டு வாருவார்கள். அந்தக் கணமே அவர் கடுவன் நாய்களுடன் தனது கைங்கரியத்தைத் தொடங்குவார். குறுக்காகக் கட்டப்பட்ட இரண்டு தடிகளுக்குள் நாயின் தலையைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள் ‘எடுபிடிகள்’. நாயின் பின்புறத்தைத் தனது கால்கள் இரண்டுக்கும் இடையே விட்டு அமத்திப்பிடித்தவாறேகூரிய கத்தி கொண்டு விதையை வெட்டிப் பிதுக்கி சுடுசாம்பல் பூசி விடுவார். ஊர் நாய்கள் இவரைக் காணும் பொழுதெல்லாம் வாலைப் பின்னங் கால்களுக்கிடையில் மடித்துகால்களைப் பதித்து உறுமிக் கொண்டு ஓட்டம் பிடிக்கும். சின்னக்கண்ணுவின் கைபடாத கடுவன்களோ காளைமாடுகளோ அந்த சுற்று வட்டக் கிராமங்களில் இல்லை. அவருடைய தொழில் மூலம் காளை மாடுகள் ஊனமுற்றதாகவோ அன்றேல் நாய்கள் ஏற்பு வலி வந்து இறந்ததாகவோ சரித்திரமில்லை. அவரது கைராசி அப்படி. சுடுசாம்பல்தான் அவரது ‘அன்ரிபயோட்டிக்’.

சந்திரன் அந்தப் பகுதியில் அரசாங்கத்துக்கு கரைச்சல் தரும் புலிகளுள் முக்கியமானவன். அவனுடைய அப்பன் சின்னக் கண்ணுவைப் பிடித்து அடிபோட்டுஆமி காம்பில் அடைத்து வைத்தால் இயக்க இரகசியங்களைக் கறக்கலாம் என்பது இராணுவத்தின் அனுமானம்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் சின்னக்கண்ணு விடுதலை செய்யப்படவில்லை. அவரை வெளியே எடுப்பதற்கு சின்னக்கண்ணுவின் மனைவி இரவு பகலாக ஓடித்திரிந்தார். அப்போது புதிய நூற்றாண்டு தொடங்குவதற்கு சில நாட்களே இருந்தன. புதிய மெலேனியத் தொடக்கத்தில் நல்லெண்ணப் பிணையில் வெளியே எடுக்க முயற்சி செய்யலாம் என ஆலோசனை கூறினார் அந்த ஊர் பிரக்கிராசி.

பிரக்கிராசியுடன் இராணுவமுகாம் போன உடையாரைக் கட்டிப்பித்துக் கதறி அழுதார் சின்னக்கண்ணு. கால்கள் அடித்து நொறுக்கப்பட்டுநகங்களும் மயிர்களும் பிடுங்கப்பட்டுசூடு வைத்த தீக் காயங்களுடன் நடக்க முடியாமல் அவர் போட்ட கூப்பாட்டில் உடையாரே அழுது விட்டார். விதைகள் வீங்கிய நிலையில் அவரால் ஒரு சொட்டுச் சிறுநீர் கூடக் கழிக்க முடியவில்லை.

வாயில்லா ஜீவராசிகளுக்கு செய்த பாவம்தான் உடையார்நான் இப்ப ‘ஒண்டுக்கும்’ இருக்கேலாமல் அவஸ்தைப் படுகிறன்’ சிறுபிள்ளைபோல் தவழ்ந்து வந்து உடையாரின் காலைப் பிடித்தவாறே உபாதையில் அலறினார் சின்னக்கண்ணு.

தொழில் தர்மம் என்று ஒன்றுண்டு சின்னக்கண்ணுஅதை மறந்து போனியோ...?’ என்று ஆறுதல் கூறினார் உடையார்.

மனிசனுக்கு மனிசன் விதையடிக்கிறதை நான் இங்கைதான் உடையார் பாத்திருக்கிறேன். நான் தான் வாழ்ந்தனுபவிச்சனான். இளம் பெடியனுக்கும் ‘இதை’ செய்யிற கொடுமையை இங்கை என்ரை கண்ணாலை கண்டேன். இப்பிடியும் இனத்தை அழிக்கலாம் எண்ட எண்ணத்தோடை தான்பெடியளை ஆமிக்காம்புக்கு அள்ளிக் கொண்டு வாறாங்கள்…!’ உடைந்த குரலில் சின்னக்கண்ணு விக்கித்தள்ள, ‘சின்னக்கண்ணுவை வீட்டை கூட்டிக் கொண்டு போகலாமாம்..!’ என்றவாறே இராணுவ கப்ரனின் அறையிலிருந்து வெளியே வந்தார் பிரக்கிராசி.

உடையார் இளைஞனாக இருந்த போது அரசியல் கூட்டங்களிலே உரிமைக் குரல் எழுப்பியவர்.

எத்தனை வழிகளிலே ஏகாதிபத்தியம் நமது இனத்தை அழிக்க முற்படுகிறது’ என்ற தடத்திலே உடையார் சிந்திக்கலானார்.

வீடும் வேதனையும்’ என்று சின்னக்கண்ணு முணுமுணுத்தார்.

அவருடைய முணுமுணுப்பிலே ஆழ்ந்த தத்துவம் ஒன்று மறைந்து கிடப்பதாக உடையார் நினைத்தார்.

(இந்தியா டுடே 21 ஜூன் 2000)

 


No comments:

Post a Comment

.