Saturday 23 January 2021

 ஆண் சுகம்

ஆசி கந்தராஜா

-1-

ரவு இரண்டு மணி இருக்கும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனைவி மோனிக்காவுடன் வந்திருந்தார் ஜேம்ஸ். அவரின் முகம் இறுகிக் கறுத்திருந்தது. மோனிக்காதான் விஷயத்தைச் சொன்னார்.

'ரோனி இறந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது. நடந்தது விபத்து, என்பதை எங்களால் நம்ப முடியவில்லை' என்ற மோனிக்கா, கண்களில் திரண்டிருந்த கண்ணீரை மறைக்க, கழுத்தில் கட்டியிருந்த மவ்ளரை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். ஜேம்ஸ் மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அவரின் கண்களிலும் கண்ணீர் கரைகட்டி நின்றது.

இரவு நேரத்தில் ஜேம்ஸ் கார் ஓட்டுவதில்லை, கண்பார்வை குறைவு.  ஆனாலும், அந்த அகால வேளையில் விபத்து நடந்த இடத்துக்குப் போக வேன்டுமென இருவரும் அடம்பிடித்தார்கள். ரோனியின் உடல் அந்த இடத்தில் இருக்கப் போவதில்லை. பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பார்கள். இருந்தபோதிலும் அவர்களைத்  திருப்திப்படுத்த எனது காரில் விபத்து நடந்த இடத்துக்குப் போனோம். ரோனியின் கார், வீதி ஓரத்து மின் கம்பத்துடன் மோதி நொருங்கிக் கிடந்தது. போலீசார் விபத்து நடந்த இடத்தில் கோடுகள் கீறுவதும் படமெடுப்பதுமென சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரோனியின் அகால மரணம் அவனது நினைவுகளைக் கிளறிவிட பழைய சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தேன். கல்வி, காதல், லட்சியங்கள் என துள்ளித் திரிய வேண்டிய வயதில், தற்செயலான ஒரு நிகழ்வின் காரணமாக சிறைக்குள் வாடிய ரோனி, சென்ற வாரம்தான் ரிலீசாகி இருந்தான். அவனுக்கு வயது பத்தொன்பதுக்கு மேல் இருக்காது. அதற்குள் அவனுடைய வாழ்க்கையில் அலை அலையாக விரும்பத்தகாத பல விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன.

ஆஸ்திரேலிய அரசால், அதி புத்திசாலி மாணாக்கர்களுக்காக நடத்தப்படும் பாடசாலை ஒன்றில் படித்தவன் ரோனி. அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது அவனது பாடசாலை அவனை, செய்முறைப் பயிற்சிக்காக என்னிடம் அனுப்பி வைத்தது. ஆய்வு கூடத்தில் அவன் பயிற்சியை ஆரம்பித்த சில நாட்களுக்குள் அவனது விவேகம் என்னைப் பிரமிக்க வைத்தது. படிப்பில் மட்டுமல்ல கை வேலைகளிலும் ரோனி கெட்டிக்காரன். எந்த விஷயத்தையும் மிக நுட்பமாகச் செய்வான். இதனால் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கால ஓட்டத்தில், அம்மாவின் காரமான மீன் குழம்பை விரும்பிச் சாப்பிடும் அளவுக்கு எங்களுடன் ஐக்கியமாகிவிட்டான். ஏதாவது காரணத்தைச் சொல்லி என்னிடம் வரும் ரோனி, அம்மாவின் அறைக்குப்போய் நலம் விசாரித்தால், அன்று அவன் எங்கள் வீட்டில் சாப்பிட வந்திருக்கிறான் என்று அர்த்தம். பச்சை குத்திய வெள்ளைக்காரப் பிள்ளைகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அம்மாவும், காதலியின் பெயரை பச்சை குத்தியிருந்த ரோனியை நல்ல பையன் என ஒத்துக் கொண்டது ஆச்சரியமே.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலே ஒரு நாள், அவனுடைய குடும்ப பின்னணி பற்றிக் கேட்டேன்.

பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு நர்ஸிங் ஹோமில் படுக்கையில் இருக்கும் எனது தாய்க்கு நான் ஒரே பிள்ளை. தந்தை இல்லை. இதற்குமேல் என்னைப்பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்றான் வெகு இயல்பாக.

அப்போ, தனியாகவா இருக்கிறாய்? என அக்கறையுடன் விசாரித்தார் அம்மா. சமீபத்தில்தான் அம்மா ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர். பதின் பருவத்து  பிள்ளைகள் பெற்ரோரைப் பிரிந்து தனித்து வாழும் சங்கதி அம்மாவுக்கு புதிது.

இதிலென்ன பிரச்சனை? என்னைப் போன்ற இளைஞர்களுக்கு அரசாங்கம் உதவிப் பணம் கொடுக்கிறது. பகுதி நேரமாகவும் வேலை செய்கிறேன். இதனால் நானே ராஜா, நானே மந்திரி என்றான் ரோனி, சிரித்துக்கொண்டே.

அவன் வாழ்ந்த சூழ்நிலையில் வேறு யாருமாயிருந்தால் நிச்சயம் திசைமாறியிருப்பார்கள். படிப்பில் அவனுக்கிருந்த ஆர்வம்தான் அவனை சரியான பாதைக்குத் திருப்பியிருக்கிறது எனச் சந்தோஷப்பட்டேன். கால மாற்றத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சை நெருங்கவே அதன் பின், நீண்ட காலம் அவனை நான் சந்திக்கவில்லை.

திடீரென ஒரு நாள் சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து எனது முகவரிக்கு மின் அஞ்சல் வந்திருந்தது. ரோனி மறியல் கைதியாக சிறையில் இருப்பதாகவும் மிக்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவனே என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னதாகவும் குறிப்பிட்ட அந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியூட்டியது.

 

-2-

தில் தெரியாத பல கேள்விகள் கலவையாக என்னுள் சுழன்றடிக்க,  ரோனியை சந்திப்பதற்கு சிறைச் சாலைக்குச் சென்றேன். வழக்கமான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் சிறை வார்டன் என்னை ரோனியிடம் அழைத்துச் சென்றார். போகும் வழியில் ரோனிக்கு என்ன நடந்தது? என அவரிடம் கதையோடு கதையாக கேட்டேன். 

கார் விபத்து ஒன்றுக்காக ரோனி தண்டனை பெற்றிருப்பதாகவும் விபத்தில் இறந்த பெண்ணின் சகோதரி, ரோனியைச் சந்திக்க சமீபத்தில் வந்ததாகவும் அதன் பின்னர் அவன் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறை விதிகளை மீறாத கவனத்துடன் வார்டன் சொன்னார்.

சிறிது நேர காத்திருத்தலின் பின்னர், பார்வையாளர் அறைக்கு கூட்டிவரப்பட்ட ரோனி எதுவும் பேசாது அமைதி காத்தான். பின்னர் மேசையில், நான் பூர்த்தி செய்து வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தின் பின் புறத்தில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் வரைந்தவன், சட்டென தான் வரைந்த கோடுகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் முகத்தை வரைய ஆரம்பித்தான். அவன் வரைந்து முடிக்கும்வரை காத்திருந்த நான், என்ன நடந்தது ரோனி? என பேச்சை ஆரம்பித்தேன்.

பரீட்சை முடிந்த பினனர் வந்த விடுமுறையில், அந்தச் சம்பவம் நடந்தது, என்று ஆரம்பித்தவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. திடீரென கண்கள் கலங்கி கரை உடைந்து அழுதான். இந்த இடத்தில் ஒரு தண்டனைக் கைதியை தொடுவதோ, அணைத்து ஆறுதல் கூறுவதோ முறையல்ல. இதனால் ரோனிக்குத் தெம்பைத் தரும் வகையில் கனிவுடன் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தன் கண்ணீரைத் துடைத்தபடி கதையைத் தொடர்ந்தான்.

உங்களை அசௌகரியத்துக்கு ஆளாக்கி இருந்தால் மன்னியுங்கள், என்றவன் தன் சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஒரு பெண்ணின் படத்தை எடுத்து மேசை மேல் வைத்தான். அது சற்று நேரத்துக்கு முன்னர் அவன் வரைந்த ஓவியத்தின் சாயலாக இருந்தது.

இவள் உன் காதலியா? மனம் விட்டுப்பேசு. அப்பொழுதுதான் உன் மனப்பாரம் குறையும், என்றேன் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக.

ஆம், மேரி என்னுடன் படித்தவள். நாங்கள் இருவரும் மனதாரக் காதலித்தோம். பரீட்சை முடிந்த பின் இருவரும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தோம். விடுமுறையில் நான் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்ய, மேரி 'சுப்பர்மார்க்ட்' ஒன்றில் பணிபுரிந்தாள். நாங்கள் இருவரும் அன்று நண்பர்கள் ஒழுங்கு செய்திருந்த டிஸ்கோ விருந்துக்கு போகத் தீர்மானித்திருந்தோம், என்றவன் கண்களை மூடி சிறிது நேரம்  மௌனமாக இருந்தான். தொடர்ச்சியாகப் பேசமுடியாத மனநிலையில் இருக்கிறான் என்பதை விளங்கிக் கொண்ட நான், மேலே சொல்லு  என கதையை வளர்த்தேன்.

எதிர்பாராத வகையில் மேரி அன்று சில மணித்தியாலங்கள் மேலதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. டிஸ்கோவுக்கு பிந்திப் போக விரும்பாத மேரி, விருந்துக்கான ஆடைகளுடன் தனது காரை எடுத்துக்கொண்டு சுப்பர்மார்க்ட்டுக்கு வரச் சொன்னாள். ஆனால் என்னிடமிருந்ததோ 'எல்' லைசென்ஸ்!

இந்த இடத்தில் நிறுத்தி, குற்ற உணர்வுடன் ரோனி என்னை நிமிர்ந்து பார்த்தான். நான் எதுவும் பேசாது அமைதியாக இருந்தேன். அவனாகவே மீண்டும் தொடர்ந்தான்.

மேரியும் நானும் ஒன்றாகவே ஓட்டுநர் பரீட்சைக்குச் சென்றோம். செய்முறைப் பரீட்சையின் போது, அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கும் அதிகமாக கார் ஓட்டியததை காரணம் காட்டி, மீண்டும் பரீட்சை செய்ய எனக்கு நேரம் ஒதுக்கினார்கள். தன்னிலும் பார்க்க நான் நன்றாகவும் நிதானமாகவும் வண்டி ஓட்டுவதாக மேரி அடிக்கடி சொல்வாள். ஓருவகையில் உண்மையும் அதுதான். அந்தத் தைரியத்தில் மேரியின் காரை எடுத்துக்கொண்டு சுப்பர்மார்க்ட்டுக்கு சென்றேன். நீண்ட நேரம் வேலை செய்து களைத்தால் பதற்றமடைவது மேரியின் சுபாவம். அதனால், ஒருவகை அசட்டுத் தைரியத்தில் தொடர்தும் நானே காரை ஒட்டினேன்.

இந்த இடத்தில் ரோனி சடுதியாக நிறுத்தினான். மௌனமாக ஜன்னலுக்கு வெளியே வெகு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியாத நிலையில் அவன் தயங்குவதாகத் தோன்றியது. தொடர்ந்து பேசுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 'உம்' சேர்த்தேன்.

சிறிது தூரம் சென்றிருப்போம். திடீரென உணர்ச்சி வசப்பட்ட மேரி என்னை  கட்டி அணைத்தாள். தடுமாறிய நான் வீதியருகே இருந்த மின் கம்பத்துடன் மோதினேன்.

கண்களிருந்து தொடர்ந்து வழியும் கண்ணீரை துடைக்கக்கூட சக்தியற்றவனாக, பிரமை பிடித்தவனைப் போல என் முன்னே அமர்ந்திருந்தான் ரோனி.

அவனை எப்படித் தேற்றுவது என்று தெரியாத நிலையில் என்ன நடந்தது என்பதை நீதி மன்றத்தில் சொன்னாயா? எனக் கேட்டேன்.

இல்லை. மேரியின் சில நடவடிக்கைகள் அசாதாரணமானவை. உடல் களைத்திருக்கும் பொழுது, மேரி என் மீது அதீத காதல் கொள்வாள். அப்பொழுது அவளுக்கு ஆணின் ஸ்பரிசம் தேவை. அதை நான் உணர்ந்து, அதற்கேற்ற வகையில் நடந்திருக்க வேண்டும். இதை நீதிமன்றத்தில் சொல்லி, மேரியை கொச்சைப் படுத்த நான் விரும்பவில்லை. விபத்துக்கு நானே காரணமென ஒத்துக் கொண்டேன். மேரியின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை தந்திருக்கிறார்கள்.

ரோனி இதனைச் சொல்லி முடிக்கவும் பார்வையாளருக்கான எனது நேரம் முடியவும் சரியாக இருந்தது. அப்போது அவன் சார்ந்த கிறீஸ்தவ கோவிலின் மதபோதகர் வெளியே காத்திருப்பதாக சிறை வார்டன் சொன்னார். எனவே மீண்டும் சந்திக்கிறேன் எனச் சொல்லி ரோணியிடமிருந்து விடை பெற்றேன்.

 

-3-

ன்று இரவு எனக்குத் துக்கம் வரவில்லை. எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது என்ற எண்ணம் மனதை அரித்துத் தின்றது. இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்ற ரோனியின் பெயர் நிச்சயம் கிரிமினல் பட்டியலில் இடம்பெறும். அது அவனது எதிர்கால வேலை வாய்ப்பை பாதிக்கும். ரோனி செய்த குற்றம் உள் நோக்கமற்றதால் அதைக் காரணம் காட்டி, ரோனியின் பெயரை கிரிமினல் பட்டியலில் இடம் பெறாதிருக்க முயற்சிக்கலாம். இதற்கு அவன் சார்ந்த தேவாலயம் மனுச் செய்வதே நல்லதென வழக்கறிஞர் சொன்னதால் போதகரைச் சந்திக்க மறுநாள் தேவாலயம் சென்றேன். அங்கு அதற்கான மனுப்பத்திரத்தை நிரப்பும்போது போதகர் சொன் பல கொசுறுத் தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.

பக்க வாதத்தால் தாக்குண்டு நேர்ஸிங் ஹோமில் படுத்திருக்கும் ரோனியின் தாயால் சிறைக்குச் சென்று அவனைப் பார்க்க முடிவதில்லை. இதனால் மேரியின் பெற்றோர்களே அடிக்கடி சிறைக்குச் சென்று ரோனியைச் சந்திக்கிறார்களாம்.

மேரியின் பெற்றோருக்கு ரோனிமேல் கோபமில்லையா? என, என் மனதை குடைந்த அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

மேரியுடன் நட்பாய் இருந்த காலத்தில் அவளது பெற்றோருடன் ரோனி அன்யோன்யமாகப் பழகியவன். மகளை இழந்த வலி அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த விபத்துக்கு ரோனி மட்டும் காரணமல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். மேரியின் மரணச் சடங்குக்கு, அவர்களாகவே ரோனியைச் சிறைச்சாலை அனுமதியுடன் அழைத்து வந்தார்கள். அவர்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள் அல்லது வாழ்க்கையைப் புரிந்தவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், என்றவர் புதிய தகவலாக மேரியின் தங்கை லீசாதான் இப்பொழுது ரோனியைச் சந்திக்க அடிக்கடி சிறைச்சாலைக்குப் போகிறாள், என்றர்.

இதை அவர்களுக்கு இடையேயான ஆழமான நட்பாக எடுத்துக்கொள்ளலாமா?

நீங்கள் கேட்பதின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. அதுதான் தற்போதைய பிரச்சனையே! என்றவர், அது பற்றி மேலே பேச விரும்பாது மௌனம் காத்தார்.

ரோனி சிறையில் இருந்த காலத்தில்தான் பன்னிரண்டாம் ஆண்டுப் பரீட்சை மதிப்பெண்கள் வெளிவந்தன. ரோனி அதி உயர் புள்ளிகள் பெற்று சித்தி அடைந்திருந்தான். தண்டனை முடிந்து அவன் வெளியே வந்ததும் சிறப்பு பிரிவின் கீழ், பல்கலைக்க கழக அனுமதிக்கு ஏற்பாடு செய்யலாம். இது பற்றிப் பேசுவதற்காக என்னிடம் வந்த போதகருக்கு, விண்ணப்பிக்கத் தேவையான ரோனியின் சில விபரங்கள் தெரியவில்லை. ரோனியின் தாயாருக்கோ டிமென்சியா என்னும் மறதி நோய். இதனால் மேரியின் பெற்றோரை எனக்கு அறிமுகம் செய்தார் போதகர். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மேரியின் பெற்றோர்களான ஜோசெப் மோனிக்கா தம்பதியை  முதல் முறையாகச் சந்தித்தேன். இதன் பின்னர் ரோனியின் கல்விக்காக அவர்களைப் பல முறை சந்தித்ததால் அவர்களும் நண்பர்களானார்கள். இருந்தாலும் ரோனியின் விஷயத்தில் நான் தலையிடுவதை, மேரியின் தங்கை லீசா ஏனோ விரும்பவில்லை. என்னை வெறுப்புடன் பார்க்கத் துவங்கினாள். ரோனியின் நலன்களைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் அதற்கான உரிமை தனக்கு மட்டும் இருப்பதாகச் சொல்லி என்னுடன் சண்டைபோட்டாள். பின்னர் எதுவும் நடக்காததுபோல என்னிடம் வந்து சர்வ சாதாரணமாக செலவுக்கு, கடன் கேட்க ஆரம்பித்தாள்.

ஓரு பேய் மழையின் பின் இரவில் எங்கள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ஆபிரிக்க, கறுப்பு இன இளைஞனுடன் நிறை போதையில் வெளியே நின்ற லீசா, நூறு டொலர் பணம் என்னிடம் கடன் கேட்டாள். இருவரும் தெப்பமாக நனைந்திருந்தார்கள். இப்படி பல இளைஞர்களுடன் லீசா கூடித் திரிவது எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு ஆபிரிக் இளைஞனுடன் இரவில் வந்து கடன் கேட்டது, மனைவிக்குப் பயத்தை ஏற்படுத்தியது. நடந்ததை லீசாவின் தாயிடம்  சொல்லி மனைவி குறைப்பட்டிருக்க வேண்டும். அடுத்த நாளே வாடிய முகத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்த ஜோசெப், மகளின் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டதுடன், அதுவரை அவள் கடனாக வாங்கிய பணம் முழுவதையும் மொத்தமாகத் தந்தபோது அவரின் கைகள் நடுங்கின.

எதிர்பாராத விதமாக, அப்பொழுது ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அலைபேசியின் மறுமுனையில் லீசா. எங்கள் வீட்டுக்கு ஜோசெப் வந்ததை எப்படியோ மணந்து பிடித்திருக்கிறாள். இருவரும் கடின தொனியில் நீண்டநேரம் வாக்குவாதப்பட்டார்கள். முடிவில் ஜோசெப் உடல் சோர்ந்து எங்கள் வரவேற்பறைக் கதிரையில் சாய்ந்துவிட்டார்.

மனைவி அப்போது சமையலறையில், ஜோசெப் விரும்பி அருந்தும் பில்டர் காப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள். அதை எடுத்து வர  நான் சமையல் அறைக்குச் சென்று திரும்பிய போது, ஜோசெப் வீதி ஓரமாக நடந்து போவது தெரிந்தது. இந்த நிகழ்வின் பின்னர் அன்று முழுவதும் ஜோசெப்பின் ஞாபகம் என்னுள் தொடர்ச்சியாக அலையடித்துக் கொண்டு நின்றது.

 

-4-

ரோனியின் மரணச் சடங்கு ஜோசெப் தம்பதிகளின் ஏற்பாட்டில் அவர்களின் செலவிலேயே நடந்தது. இடுகாட்டில் நடந்த சவ அடக்கத்தின் போது லீசாவின் நடவடிக்கைகள் சற்று விசித்திரமாக இருந்ததன. ரோனியின் உடலை கல்லறைக்குள் வைக்கும்போது கண்ணீர் விட்டு அழுதவள் கண்ணீரைக்கூட துடைக்காமல் சட்டென சிரித்தாள். இந்தக் காட்சி மீண்டும் மீண்டும் மனதில் வட்டமிட்டு, என்னுள் ஏராளமான கேள்விகளை எழுப்பியது.

அந்தச் சம்பவம், மரணச் சடங்கு நடந்த மறுநாள் நடந்தது! 

நள்ளிரவில் எங்கள் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் 'நைட்டி' உடையுடன் லீசா நின்றாள்.

தன்னுடன் படுத்திருந்த ரோனி, திடீரென எழுந்து எங்களிடம் வந்து விட்டதாகவும் அவனைத் தன்னுடன் அனுப்பும்படியும் அதிகார தொனியில் கட்டளையிட்டாள். அவளது முகம் அப்போது வீங்கித் தடித்து, பார்ப்பதற்கு அகோரமாக இருந்தது. கண்களில் கொப்பளித்த 'அந்த'வெறி அப்பட்டமாக வெளியே தெரிந்தது. விரல்களால் அங்கங்கே சொறிந்து கொண்டு என் முன்னே ஆபாசமாக நின்ற லீசா, 'ரோனியை வரச்சொல்' என மீண்டும் உரத்த குரலில் கத்தினாள்.

லீசா நின்ற கோலத்தைக் கண்டு, என்னுடைய மனைவி பயந்துவிட்டாள்.

'ரோனி இறந்து விட்டானே, அவன் எப்படி இப்போது வருவான்?' என விக்கிவிழுங்கி மனைவி பதில் சொல்ல முன்னர், மனைவியின் முகத்தில் ஓங்கிக் குத்தினாள் லீசா. மனைவியின் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. நிலமை மோசமாகவே நான் போலீஸுக்கு அறிவித்தேன். உடனடியாக போலீஸூம் அம்புலன்ஸ்ஸூம் வந்துவிட்டார்கள். அம்புலன்ஸில் வந்த 'பரா' மெடிக்கல் உத்தியோகத்தருக்கு லீசாவின் பிரச்சனை புரிந்திருக்க வேண்டும்.

அன்று இரவே லீசா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மனநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவளைப்பற்றி அதிர்ச்சியும் ஆச்சரியமும் துயரமுமான பல செய்திகள் உலாவந்தன.

நடந்ததைக் கேள்விப்பட்டு எங்கள் வீட்டுக்கு வந்த போதகர், லீசாவின் அசாதாரண நடத்தைக்குரிய காரணத்தை மிகுந்த அவதானத்துடன் விளக்கி, லீசா Nymphomania என்னும் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக சொல்லி முடித்தார். இது வியாதியா? அல்லது உடற்தொழில் சிக்கலா? என்ற என்னுடைய மனைவியின் அறிவியல் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாது, எங்களிடமிருந்து விடை பெற்றார் போதகர்.

Nymphomania என்ற சொல் எனக்கு முற்றிலும் புதிது. விபரம் அறிய இணையத்தில் மேய்ந்தபோது, அதுவரை நடந்து முடிந்த சம்பவங்களுக்கான காரணங்கள் ஒவ்வொன்றும், சின்னத்திரை சீரியல் போல விரிந்துகொண்டு போயின.

'Nymphomania என்பது, பெண்களின் உடலில் சுரக்கும் பாலியல் ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் ஏற்படும் ஒருவகை 'உடற்தொழில்பாட்டு' சிக்கல். இது ஆண்களுக்கும் வருவதுண்டு. அதை Satyromania எனச் சொல்லப்படும்.

அடங்காத காம உணர்விவினால், பெண்களுக்கு ஏற்படும் பாலுறவு வெறியே, நோயின் முக்கிய அறிகுறியெனச் சொல்லப் படுகிறது. மரபணுக்களின் சீர் குலைவால் ஏற்படும் இந்த நோய், பரம்பரை பரம்பரையாக தொடரவும் வாய்ப்புண்டு. இந்த நோயுள்ளவர், ஒருவரில் காமம் கொண்டால் அது நிறைவேறும் வரை அதில் மூர்க்கமாக இருப்பார். மிருகங்களுடன் உறவு வைப்பதும் உயிரற்ற உடலுடன் உறவு கொள்வதும் இதன் வெளிப்பாடே.

தை வியாதி என்பதா? அல்லது ஹார்மோன்களின் குறைபாடு என்பதா? என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு'.

இவையே நான் இணைய நூல்களில் அறிந்து கொண்ட தகவல்கள். இவை அனைத்தும் படிப்படியாக என் பழைய நினைவுகளுடன் ஒன்றாகச் சேர்ந்து புயலடித்து ஓய்ந்து, 'உடல் களைத்தால் மேரிக்கு ஆண் ஸ்பரிசம் தேவை' என, ரோனி சொன்ன செய்தி ஒன்றின் மீது மையம் கொண்டது.

மறுகணம், ஏனோ என் மனம் திடீரென குத்துக்கரணமடித்து மேரியின் தங்கை லீசாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் மீது நிலைகுத்தி நின்றது.

நோயின் தாக்கத்தினால் லீசா அடிக்கடி புதுப்புது ஆடவர்களுடன் காணாமல் போய்விடுவாள். இதனால் பலதடவைகளில் அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள். கர்ப்பமான காலத்தில் அவளது ஹார்மோன்கள் சமநிலைக்கு வந்துவிட அவளது நடவடிக்கைகள் இயல்புக்குத் திரும்பிவிடும். நிலமையை உணர்ந்து, லீசா கருவைக் கலைத்துவிடுவாள்.

ரோனி வசீகரமானவன், ஒருமுறை பேசினால் மறுமுறை அவனுடன் பேசச் சொல்லும். இதனால் ரோனிமீது லீசா காதல் கொண்டதில் வியப்பேதுமில்லை. சிறையிலிருந்து ரிலீசாகி தனியாளாக நின்ற ரோனியின் நட்பைப்பெற லீசா கடுமையாக முயற்சித்திருக்க வேண்டும். அது நிறைவேறாத நிலையில் அவள் மூர்க்கத்தனமாக நடந்திருக்கலாம். இதனால்தான், விபத்து நடப்பதற்கு முன்னரே ரோனியின் முக்கிய உடல் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதயின்போது தெரியவந்ததோ, என்ற ஐயம் என் சிந்தனையில் குறுக்கிட்டது.

மேரியின் மரணத்துக்குக் காரணமாயிருந்த அதே வீதியோர மின் கம்பத்தில் மீண்டும் கார் மோதி, ரோனி மரணமடைந்தது, முன்னரே தீர்மானிக்கப்பட்டதா? அல்லது லீசா கொடுத்த இம்சை காரணமாகவா? என, மாறுபட்ட கோணத்தில் போலீசார் விசாரணையைத் துவங்கினார்கள். ஆனாலும், இன்றுவரை இதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

மனநோய் முற்றிய நிலையில் லீசா இன்னமும் வைத்திய சாலையில் வாடுகிறாள். இடையிடையே எனக்கும் ரோனிக்கும் எப்போ கலியாணம்? எனவும் கேட்கிறாளாம்.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும், ஜேம்ஸ்-மோனிக்கா தம்பதிகள் கிணத்துக்குள் போட்ட கல்லாக வீட்டில் அமுங்கிக் கிடக்கிறார்கள்.

அன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று அதீத காதல். மற்றது அடங்காத காமம், என மதபோதகர் விளக்கம் சொன்னார்.

(ஞானம், ​ பெப்ரவரி 2018)

 

 

No comments:

Post a Comment

.