சாத்திரம் உண்டோடி…?
ஆசி கந்தராஜா
சுந்தரமூர்த்திக்கு
இருப்புக் கொள்ளவில்லை.
உண்மையாகவே அது நடந்து விட்டால் என்னசெய்வது
என்கிற பயம் அவரை வாட்டியது. இந்த அவதியில் நாலுதடவைகளுக்கு மேல், அலுவலகத்தில் இருந்து, மனைவியுடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, அதுபற்றிக்
கேட்டுவிட்டார். தொலை பேசியின் மறுமுனையில், மனைவி சூடான எண்ணையில்
போட்ட கடுகாக வெடித்தாள்.
‘நான் சொல்லுறதைக் கேட்டால் ஏன் இந்தப்பாடு? வைச்சுக் கொண்டிருங்கோ. ஊர்ச்சனம் குண்டியாலை சிரிக்கப் போகுது’ என்கிற
வார்த்தைகளை இணைத்துப் பொரிந்து தள்ளினாள்.
கடைசி இரு முறையும் சுந்தரமூர்த்தியின் குரலைக் கேட்டதுமே, மௌனமே பதிலாகச் சடக்கென தொடர்பைத் துண்டித்து விட்டாள்.
சுந்தரமூர்த்தியின் சிந்தனையில் மனக்கணக்கு
ஒன்று ஊர்ந்தது. அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, அது நடக்கக் கூடிய சாத்தியமில்லை. ஆனாலும் `விதிவிலக்குகள்’ உண்டல்லவா…?`
‘என்ன, கொலைக் குற்றமே
செய்திருக்கிறன்’ என்று சிலசமயம் மனதை ஆறுதல்படுத்தினாலும், அதையும் மீறி பயம் பல
வழிகளிலும் அலைக்கழித்தது. எல்லா விதிகளையும் மீறி அது நடந்துவிட்டால், என்னென்ன பரிகாரங்கள்
சாத்தியம் என்பது குறித்து மனதில் பட்டியலிடத் துவங்கினார்.
`நான் கொஞ்சம் கவனமாக நடந்திருக்கலாம். அவசரப்பட்டு விசர்வேலை பாத்திட்டன்’ என
அவரது சிந்தனைப் பட்டம் வால் இழந்து, குத்துக்கரணமடித்து மண்
கவ்வியது.
`நடந்தது நடந்து போச்சு. இனி நடக்கப் போறதைப் பாப்பம்’ என்ற நினைப்பில்
பரிகாரம் செய்பவர்களின் தொலைபேசி இலக்கங்களையும் முகவரிகளையும் இணையத்தளத்தில்
சேகரித்து, கணனியில் இதற்கென
ஒருபக்கம் திறந்து பதிந்து கொண்டார். மேலதிக தகவல்களை அவ்வப்போது சேர்த்துக்
கொள்வதற்காக தனது கணனி அறிவைப் பயன்படுத்தி, அட்டவணைப் படுத்திக் கொண்டார்.
கை தன்னை அறியாமல் மீண்டும் தொலைபேசி எண்களை
அழுத்தியது.
`என்னப்பா’ என்று சுந்தரமூர்த்தி
துவங்க முன்னரே ரெலிபோன்
துண்டிக்கப்பட்டது.
`வரேல்லைப் போல கிடக்கு’ என்ற எண்ணம்
மேலோங்க, சுந்தரமூர்த்திக்கு
இரத்தக் கொதிப்பு அதிகமாகியது.
`என்ன சுந்தா பேயறைஞ்ச மாதிரி இருக்கிறாய், ஏதாவது பிரச்சனையா?’ என ஆங்கிலத்தில்
விசாரித்தவாறே அலுவலக கன்டீனுக்கு போனான் தோமஸ். அவன் அவருடன் பணிபுரியும் சகா.
சுந்தரமூர்த்தி அவனைத் தொடர்ந்து கன்டீனுக்கு
போவது வழக்கம். கடந்த இரண்டு நாள்களாக அவருக்கு பசிதூக்கமில்லை. நாலு பிள்ளைகள், வயதான பெற்றோர், வீட்டு மோட்கேஜ் என அவரது
குடும்பம் இயந்திர கதியில் இயங்குகிறது. அத்துடன் மனைவி இரண்டு இன்வெஸ்ற்மென்ற் வீடுகளையும் வருமான வரியை குறைக்கலாமென்று, வாங்கி விட்டிருக்கிறாள். ஆஸ்திரேலியாவில் நாலு பிள்ளைகளுக்கும் படிப்புச் செலவு, உடுப்பு, ரியூசன், சங்கீதம், டான்ஸ், விளையாட்டு எனப் பல
உபரிச் செலவுகள். கோவிலுக்கு, நாட்டுக்கு என நன்கொடைகள் கொடுப்பதிலும் அவர் முந்தி நின்றார். இல்லாவிட்டால்
சமூகத்தில் யாரும் மதிக்கமாட்டார்கள்.
மூத்தது இரண்டும் பெம்பிளைப் பிள்ளையள். அடுத்தடுத்து பிறந்ததுகள். பல்கலைக்கழகத்தில் படிப்பு நடக்கிறது.
படிப்பு முடிய, மூன்று வருடத்தில்
அதுகளின் கல்யாணச்செலவுகள். மற்றதுகள் கொஞ்சம் இடைவெளிவிட்டு, அவரது ஆஸ்திரேலியப் புலம் பெயர்வுக்குப் பின்னர் பிறந்ததுகள். மூத்தது பெடியன், அடுத்தது பெட்டை.
இரண்டும் இப்போது High
School. சுந்தரமூர்த்தியின் மனைவிக்கு நல்ல வேலை. அவள் கொண்டு வரும் சம்பளமும், அவர் மிதப்புக்கு ஒரு
காரணம் என்பதை அவர் நிதமும் மனசிலே வைத்திருப்பவர்.
இதற்குள் இந்த சிக்கல் வந்து இப்போ சுந்தர
மூர்த்தியின் நிம்மதியை காவு கொண்டிருக்கிறது.
கன்டீனிலிருந்து தோமஸ் திரும்பி வந்தான்.
`You are not normal’ என்று கூறியபடி தன் இருக்கைக்குச் சென்றான்.
தொலைபேசி இலக்கங்களை அழுத்தித் தொடர்பு பெற்றுச் சிரிக்கத் துவங்கினான்.
`இந்த அறுவான் காதலியோடை ரெலிபோனிலை சல்லாபம் செய்து கொண்டிருக்கிறான்.
இவங்களைப் போல இருந்திட்டால் பிரச்சனை இல்லை. நேரம் ஒரு பெட்டையெண்டு ஜாலியாய்
சுத்தித் திரியலாம். சமயம்,
சம்பிரதாயம், கலாசாரம் எண்டு இரண்டு
தோணியிலை கால் வைச்சுக் கொண்டு நாங்கள் அல்லல்படுகிறம். இங்கு வந்து குடியேறின
முதல் சந்ததிக்குத்தான் இந்தப் பிரச்சனை. எங்கடை பிள்ளையள் இதுகளைப் பார்க்கவா
போகுதுகள்?
சுந்தரமூர்த்தியின் மனதிலே பலவிதமான சிந்தனைகள்
குதியாட்டமிட்டன. ரெலிபோன் மணி அடித்தது. மனைவியாய் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தில்
அதைப் பாய்ந்து எடுத்தார்.
ஏமாற்றம்! மறுமுனையில் சந்திரசேகரம்.
சிட்னியிலுள்ள சமூக அமைப்புகளில் சுந்தரமூர்த்தியுடன் ஒரு கன்னைக்கு நின்று காய்
நகர்த்துபவன். ஊர்விடுப்பு கதைக்க தனது அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு
கொண்டிருந்தான். பலருக்கும் வம்பளக்க தோதான இடம் அலுவலகம் தான். போதாக் குறைக்கு e-mail, WhatsApp மூலமும் ஒரே முறையில்
பலருக்கு புதினம் பரப்புதலும் பிரபல்யமாகி விட்டது.
‘சனிக்கிழமை நடந்த கலை நிகழ்ச்சிக்கு கூட்டம் குறைவாம்’ என்றபடி சந்திரசேகரம்
கதையைத் துவக்கினான். வேறு நேரமாக இருந்திருந்தால் சுந்தரமூர்த்தியும் வலு சந்தோசமாகக் கதைத்திருப்பார். இவர்களது சம்பாசனையில் ஊரில் உள்ள பல தலைகள்
உருண்டிருக்கும். இன்று ஊர்ப்புதினச் சல்லாபத்தில் இறங்கும் `மூட்’ சுத்தரமூர்த்திக்கு
இருக்கவில்லை.
தனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கான பரிகாரத்தை
சந்திரசேகரிடம் கேட்போமா என்ற யோசனை சட்டென்று தலை தூக்கியது.
`இவன் ஊர் முழுக்க சொல்லித்திரிவான். இந்த விசயங்களிலை ஆளை நம்பேலாது.’ என, அதே வேகத்தில் அவர் அறிவு
எச்சரித்தது.
சுந்தரமூர்த்தி சில
மாதங்களுக்கு முன்புதான் ஐம்பத்தைந்து வயதைத் தாண்டினார். தலையும் மீசையும் நரைக்கத் துவங்கினாலும் மாதம் இருமுறை
கறுப்பு மையடித்து கனகச்சிதமாக இளமைத் தோற்றம் பேணுகிறார்.
ஊரில் தலைமை எஞ்சினியராக இருந்த காலங்களில்
பெரியதொரு இலாகாவையே தன் ஆளுமைக்கு கீழ் வைத்திருந்தவர். இளநிலை பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், எழுதுவினைஞர்கள், தொழிலாளர்கள் என்று
அனைவரும் `சலாம்’ போட்ட தனிக்காட்டு
ராஜா. இவர் யாழ்ப்பாணத்துக்கு அரசாங்க ஜீப்பில் வரும் காலங்களில் பல பெற்றோர்கள்
தமது பிள்ளைகளுக்கு வேலை கேட்டு இவரின் வீட்டு வாசலில் தவமிருப்பார்கள்.
சகல அதிகாரங்களையும் இலங்கையில் அனுபவித்த
சுந்தரமூர்த்தி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததும் மாநகர சபையொன்றில்
பொறியியலாளராக சேர்ந்து கொண்டார். நிலமை இங்கு ஊர் மாதிரி இல்லை என்பதைப் புரிந்து
கொள்ள இவருக்கு அதிக நாள்கள் செல்லவில்லை. சகல மரியாதைகளுடன் ஊரில் வலம் வந்த சுந்தரமூர்த்திக்கு
ஆஸ்திரேலியாவில் தான் `என்ஜினியர்’ என்று
அழைக்கப்படாதது மாத்திரமல்ல, சாதாரண ஊழியருக்கும் தனக்கும் கையில் கிடைக்கும் சம்பளத்தில் அதிக
வித்தியாசமில்லை என்று உணர்ந்ததும், தன்னை யாரோ அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
தொழில் ரீதியாக இவருக்கு ஏற்பட்ட
ஏமாற்றத்துக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக அமைப்புகள் வடிகால் அமைத்தன. மாறிமாறிப்
பல்வேறு சமூக, சமய, கலாசார அமைப்புகளில்
பங்கேற்றுப் பல தடவைகள் தலைமைப் பதவியையும் தனதாக்கிக்
கொண்டார். இதன் மூலம் தான் இழந்த அதிகாரமும் பெருமையும் சமூகத்தில்
நிலைநாட்டப்படுவதாக திருப்திப்பட்டுக் கொண்டார். அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில்
மங்கல விளக்கேற்றவும், உரையாற்றவும் வாய்ப்புகளை வலிந்து ஏற்படுத்தி பிரமுகராக வலம் வரும் நேரத்தில்
அவருக்கு இப்படியொரு வில்லங்கம் வந்திருக்கிறது.
அவருடைய கவலைகளுள், இது விஸ்வரூபம் எடுக்கவே, மணி ஐந்தானதும்
கொம்பியூட்டரை மூடிவிட்டு வீட்டுக்குப் போகத் தயாரானார். பணிக்கென மாநகர சபை
கொடுத்த கார். பெற்றோல் செலவும் இல்லை. போகும் வழியில் ‘எல்லாம் நல்லபடியாக நடக்க
வேணும்’ என நெஞ்சுருக வேண்டிக் கொண்டு, தனது பெயரிலும் மனைவி பெயரிலும் அருச்சனை செய்ய, கோவிலை நோக்கிக் காரைச்
செலுத்தினார்.
கோவில் ஐயர் இவரைக் கண்டதும் பாய்ந்து ஓடி
வந்து தட்டை வாங்கி இரண்டு மந்திரத்தை அதிகமாகச் சொல்லி சுந்தரமூர்த்தியின் மனதைக்
குளிர்விக்க முயன்றார். ஐயருக்குத் தெரியும் அடுத்த முறை கோவில் தலைவராக வர
சுந்தரமூர்த்திக்கு அதிக வாய்ப்பு இருப்பது.
இப்போது ஏற்பட்டது போன்ற சிக்கல்
சுந்தரமூர்த்திக்கு முன்பும் ஏற்பட்டதுண்டு. சிக்கல் தீர்ந்ததும் `இனி மிகக் கவனமாக இருக்க
வேண்டும்’ என சூளுரைத்துக் கொள்வது வழக்கம். ஆனாலும் தக்க தருணங்களிலே இந்த சூளுரை
அவரை `அம்போ’ எனக் கை விடுவதும்
உண்டு.
இப்படியான சிக்கல் வரும் போதெல்லாம் நிலைமையை
அறிந்து கொள்ள சில சங்கேத வார்த்தைகள் (Code
words) வைத்திருப்பார். இந்த சங்கேத வார்த்தைகள், பிள்ளைகள் முன்னிலையில் மனைவியிடம் உரையாட அவருக்கு மிகவும் உதவியாக இருந்தன. காரை கராஜுக்குள்
நிப்பாட்டி விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும், மனைவி குசினிக்குள் தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளுடைய
முகம் வாடியிருப்பதாக அவருக்குத் தோன்றியது.
கொண்டு வந்த Brief caseஐ கீழே வைக்காமலே ‘என்னப்பா சிவப்புக் கொடியா?’ என தனது சங்கேத மொழியை, மெதுவாக அவிழ்த்து
விட்டார். எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க நிமிர்ந்தாள் மனைவி.
‘ஊரிலை பெரிய மனிசன். வீட்டிலை குமரன் துள்ளி விளையாடுது. நானும் இது
நடக்கவேணும் எண்டுதான் விரும்பிறன். அப்பதான் உங்கடை கொட்டமடங்கும்’ என உஷ்ணம்
கக்கி வெடித்தாள்.
சகலவற்றையும்
ஆண்டவனிடம் ஒப்புக்கொடுத்து, சுரத்தற்று இயந்திர இயக்கத்தில் அன்றைய இரவு கழிந்தது.
அடுத்தநாள் அலுவலகத்தில் பணியைத் துவங்கியதும்
சுந்தரமூர்த்தியை பழைய அச்சங்களும், உளைச்சல்களும் படாதபாடுபடுத்தியது. மனைவியுடன் தொடர்பு கொண்டு, வாங்கிக் கட்டிக் கொள்வதை
மிகுந்த மனவுறுதியுடன் தவிர்த்துக் கொண்டார்.
மூன்றாம் நாளிரவு அவர் வீட்டிலே கலாசார
சங்கத்தின் செய்குழு உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.
சுந்தரமூர்த்தியே கலாசார சங்கத்தின்
நடப்பாண்டுத் தலைவர். கலைவிழா பற்றிய நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதற்கு அவர்கள்
அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இடையில் ஏற்பட்ட மன உளைச்சலிலே இந்தக் கூட்டம்
பற்றி அவர் துப்பரவாக மறந்து போனார். கூட்ட நடவடிக்கைகளிலே சுந்தரமூர்த்தி
வழக்கமான பதவி மிடுக்குடன் அன்று நடந்து கொள்ளவில்லை.
‘நீங்கள் திட்டமிட்டால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்’ என்று சகாக்கள்
தலைகளிலே பெரிய ஐஸ்கட்டிகளை வைத்து கூட்டத்தினை முடித்து வைத்தார்.
வந்தவர்கள் போன பின் செயற்குழு கூட்டம் பற்றி
மனைவிக்கு விடும் வழக்கமான `பீலா’ கதைகள் நிகழவில்லை. சாப்பாடு என்று ஏதோ சம்பிரதாயத்துக்குக் கொறித்து விட்டு படுக்கைக்குச்
சென்றார்.
தூக்கம் அவரைத் தழுவுவது போலவும்…,
கெட்ட கனவுகள் அவரைத் துரத்தின. எப்போதோ அவர்
மறந்து போன, கல்லூரி நாள்களில் அவர்
துரத்திய பெண்கள் திடீரெனத் தோன்றி மேனகைகளாக அவரைப்
படுத்தினார்கள். பெண்களிடம் அவர் தோற்றுப் போனதாகவும், அவரது பலவீனத்தை
ஊர்மக்கள் கூடி நின்று சிரிப்பதாகவும் காட்சிகள் வந்து போயின. அந்த ஊரவர்கள்
முகங்களிலே, கலாசார சங்க செயற்குழு
உறுப்பினர்களின் முகங்கள் அவரை கேலி செய்வதும் குசுகுசுப்பதுமாக தெரிந்தன.
குழந்தை ஒன்று அவரை நோக்கித் தவழ்ந்து வருவது
மங்கலாகத் தெரிந்தது. உடல் வேர்த்துக் கொட்டுவதான உணர்வு தோன்ற விழித்துக்
கொண்டார். மனைவி சுவர்ப்பக்கமாகத்
திரும்பிப் படுத்த கோலத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். சிறுநீர் கழிக்க வேண்டும் போன்றதோர் உணர்வு. எழுந்து உட்கார்ந்தார். கனவுகளில்
இருந்து விடுபட்டதான ஒரு நிதானம்.
சுந்தரமூர்த்தி தம்பதிகள் மட்டும் பாவிக்கும் `மாஸ்டர்’ படுக்கை
அறையுடன் (Master bed
room) இணைந்த பாத்றூமை நோக்கி நடந்தார். நீள்சதுர துண்டுக் காகிதம் ஒன்று கொமொட்(Commode) அருகே கிடந்தது. அதனைப்
பார்த்ததும் பொறி தட்டியது. மனைவியின் குளியல் உபகரணங்கள் அடைந்து கிடக்கும்
‘கபேட்டைத்’ திறந்தார். ஆம், அவர் ஊகம் சரியே. அந்தப் பொட்டலம் பிரிக்கப்பட்டிருந்தது. அவசரமாக பாத்றூம் Bin ஐ திறந்து பார்த்தார்.
பாவித்த ‘மாதவிடாய் கச்சை’ யொன்று பேப்பரில் சுற்றிப் போடப்பட்டிருந்தது.
இவள் ஏன் இப்படி என்னைத் தவிக்க விட்டாள்…?
பாரதியார் பாடல் வரி ஒன்றின் நினைவு அவர்
தலையிலே பலமாகக் குட்டியது. குட்டுப்பட்டாலும் தலை
தப்பிவிட்ட நிம்மதி.
`விமுக்தி’ என்ற சொல்லின் முழு அர்த்தத்தையும் சுகித்தவராக சுந்தரமூர்த்தி தமது
கட்டிலை நோக்கி நடக்கலானார்.
(ஞானம், ஆகஸ்ட் 2007)
No comments:
Post a Comment