Saturday, 23 January 2021

 அம்மா பையன்

ஆசி கந்தராஜா

'ன்சம்-வெயர்-பக் (Ransomware bug) உடன் இரவு பகலாகப் போராடி வருகிறார் பேராசிரியர் சந்திரசேகரம். அவர் சிட்னி பல்கலைக்கழகம் ஒன்றின் கொம்பியூட்டர் துறைத் தலைவரர்.  எங்கும் எதிலும் தனது மூக்கை நுழைத்து ஆதிக்கம் செய்யும் கொம்பியூட்டரில் றன்சம்-வெயர் வைரஸ் தாக்குதல் காரணமாக அழிந்துபோன தரவுகள் விரைவில் மீட்கப்படவேண்டும். இல்லையேல் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்.

'ரன்சம்வெயர் பக்பிரச்சனைக்கு Software patch ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான் அந்த வியட்நாமியன்...!என்ற தகவலுடன் வந்தமர்ந்தான் ரோணி. பேராசிரியரின் கீழ்ப்பணிபுரியும் அவன் அவரது வலக்கரம்.

 ‘யார்...? பெங்லீ என்பவனா..இதற்கு முன்பு Hardware bios ஒன்றை அறிமுகம் செய்த அதே பெங்லீ தானா?’ எனப் பேராசிரியர் ஆர்வம் காட்டினார்.

அவனேதான். இவனைப் போல இரண்டு பேர் இருந்தால் ஓரிரு வருடங்களில் வியட்நாம்கொம்பியூட்டர் தொழில் நுட்பத்திலே கிழக்காசியாவை ஆட்சி செய்யத் தொடங்கி விடும். இவனை எங்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சி அணிக்குள் சேர்த்தால் என்ன..?’

 ‘இது நடக்கக் கூடிய காரியமா ரோனிவியட்நாமிய அரசைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே…அவனை நாட்டைவிட்டு வெளியேற அவர்கள் அனுமதிப்பார்களா…இரும்புத் திரை தகர்ந்தாலும்மூங்கில் திரை இருக்கவே செய்கிறது.’

சிறந்த முளைகளை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வருவதற்கொன்றே நம் நாட்டு குடிவரவுச் சட்டத்தில் பல வழி முறைகள் இருக்கின்றன. முதலில் பெங்லீயை மையமாக வைத்து வியட்நாமுடன் ஒரு ஆராய்ச்சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவோம்’ எனத் தீர்வுக்கு வழி சொன்னான் ரோனி.

வியட்நாம்!

பெயரைக் கேட்கும் பொழுதெல்லாம் பேராசிரியரின் முகத்தில் ஒரு சலனம் தோன்றி மறையும்.

அமெரிக்காவின் சர்வதேசப் போலீஸ்காரச் சண்டித்தனத்தை நிராகரித்து நிமிர்ந்த நாடு அது. கொம்பியூட்டர் புலியாக உலகின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றிய பேராசிரியர்ஏனோ அங்கு செல்வதை மட்டும் தவிர்த்து வந்தார்.

 

பெங்லீயைப் பற்றிய சகல விபரங்களையும் சேகரித்துக் கொண்டு மறு நாளே பேராசிரியரிடம் வந்தான் ரோனி. அதுதான் ரோனி. ஒரு விடயத்தை எடுத்தானாகில் முடிக்காது விடமாட்டான். தீவிர நாட்டுப்பற்றுள்ளவன்.

வியட்நாமுடன் E Mail தொடர்பு கொண்டார் பேராசிரியர். பேராசிரியருடன் கூட்டுச் சேர்வதில் தமது அரசு பெருமை கொள்வதாகவும்அவரது வரவை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் பதில் அனுப்பியிருந்தார்கள் வியட்நாமிய அதிகாரிகள்.

-2-

டுத்த வாரமே ‘கோசிமிங்’ நகர விமான நிலையத்தில் வந்திறங்கினார் பேராசிரியர். அவரைக் கௌரவிக்கும் வகையில் சில மூத்த வியட்நாமிய அதிகாரிகளும்மொழி பெயர்க்கவென ஒரு இளம் பெண்ணும் வந்திருந்தார்கள்.

சம்பிரதாய வரவேற்புகள் யாவும் முடிவடைந்த பின்னர்வியட்நாமிய கொடி பொருத்தப்பட்ட நீண்ட Ford கார் ஒன்றில் ஏறிக் கொண்டனர்.

வியட்நாமிய மண்ணில் அமெரிக்க வாகனத்தை எதிர்பார்க்காத பேராசிரியர் ‘அமெரிக்க பொருள்கள் மீண்டும் வியட்நாமிற்குள்ளா…?’ எனக் கேட்டுவிட்டார்.

நாம் அமெரிக்க அடக்குமுறையையும் அத்துமீறல்களையும் தான் எதிர்த்தோம். தொழில் நுட்பம் எங்கிருந்து வந்தாலும் அதை வரவேற்போம். ஏன்…அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உங்களை நாம் இப்போது வரவேற்கவில்லையா…?’ என்றார் அரசில் இருந்த மூத்த வியட்நாமிய அதிகரிபுன்சிரிப்புடன்.

யுத்தத்தின் தாக்கம்வியட்நாமின் திறந்த பொருளாதாரக் கொள்கைஒன்றுபட்ட வியட்நாமிய மக்களின் வாழ்க்கை முறைபற்றிய பேச்சுக்களிடையேதான் ஆறு வருடங்கள் ரஷ்ய ‘லுமும்பா’ பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றதையும் சொல்லி வைத்தார் பேராசிரியர்.

நீங்கள் எங்களருகே மிகவும் நெருங்கி வந்து விட்டீர்கள். இங்குள்ள பெரும்பாலான அதிகாரிகள் ரஷ்யா போன்ற சோஷலிச நாடுகளில் படித்தவர்கள். அமெரிக்கா தென்வியட்நாமை விட்டு வெளியேறியபோதுஇங்கிருந்த புத்தி ஜீவிகளும் பணக்காரர்களும் அமெரிக்காஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி விட்டார்கள். இவர்களது இடத்தை நிரப்ப வடக்கிலிருந்து வரவேண்டிய தாயிற்று’ என்றார் காரின் முன் சீற்றில் அமர்ந்திருந்த வியட்நாமிய அதிகாரி.

அமெரிக்க Ford கார் வியட்நாமிய சாலையில் சீராகவே ஓடிக் கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் கடைகள் திறந்திருந்தன. மக்கள் சைக்கிள்களிலும்மோட்டார் சைக்கிள்களிலும் வீதியில் வழிந்தார்கள். முழுக்குடும்பமும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் அதிசயத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார் பேராசிரியர்.

சிக்னல் லைட்’ நிறம் மாறும் போது அலை அலையாக சைக்கிள்கள் செல்வதை வீடியோ கமராவில் பதிவு செய்து கொண்டே, ‘ஆய்திரேலியாவில் சைக்கிள் செய்வதற்கென பிரத்தியேகப் பாதையுண்டு. நெடுஞ்சாலைகளில் சைக்கிள் செல்வதை காணவே முடியாது’ என்றார் பேராசிரியர்.

வியட்நாமிலுள்ள ஒவ்வொரு சைக்கிளுக்கும் பதிலாகக் கார் வைத்திருந்தால் இந்த வீதி எப்படி இருந்திருக்கும்?’ எனக் கூறிச் சிரித்தபடியே, ‘வியட்நாமின் ஜனத்தொகைக்கு சைக்கிளே பொருத்தமானது. சூழலும் மாசுபடாது’ என்றாள் மொழிபெயர்ப்புப் பணிக்கு வந்த பெண்மணி. அவள் கூடவே இருந்தபோதிலும்அதிகாரிகள் அனைவரும் தட்டுத்தடுமாறிஆங்கிலந்திலேயே பேசினார்கள். வீம்பு பாராட்டாது சகஜகமாகப் பழகிய அவர்களைப் பேராசிரியருக்குப் பிடித்திருந்தது.

நீண்ட அமைதியைக் கலைக்கக் கார் ஓட்டி றேடியோ கசெற்றை தட்டிவிட்டான். வியட்நாமிய புல்லாங்குழல் இசை காரை நிறைத்தது. இந்த இசை பேராசிரியருக்கு மிகவும் பிடித்தமானது. சிட்னியில் அடிக்கடி அவர் வியட்நாமிய புல்லாங்குழல் கசெற் ஒன்றைப் போட்டுக் கேட்பார். தனது மேஜை லாச்சிக்குள்பூட்டிப் பாதுகாக்கும் பொருட்களுள்இதுவும் ஒன்று.

ஹொட்டல் போட்டிக்கோவில் பணியாள் காரின் கதவை திறந்து மேனாட்டுப் பாணியில் பவ்வியமாக வரவேற்றான்.

அமெரிக்காவின் அதிகாரம் தென்வியாட்நாமில் வியாபித்திருந்த காலத்தில்அமெரிக்க அதிகாரிகளும் விருந்தினர்களும் இந்தக் கட்டிடத்தில் தான் தங்குவார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்பு இதற்கு Victory Hotel என பெயரிடப்பட்டுள்ளது. இது நமது வெற்றிச் சின்னங்களுள் ஒன்று! இதில் உங்களை இப்பொழுது தங்க வைப்பதில் பெருமைப்படுகிறோம்’ என்ற வியட்நாமிய அதிகாரிஅவருடன் அவரது அறைவாசல் வரை வந்தபடியே, ‘நாளைக்காலை இங்கிருந்து முன்னூற்று அறுபது கிலோ மீற்றர் தூரம் பிரயாணம் செய்தல் வேண்டும். Dac Lac என்பது பிரசித்தி பெற்ற நகரம். அங்குதான் பெங்லீ வேலை செய்யும் கொம்பியூட்டர் மையம் இருக்கிறது. அதுவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு நீங்கள் விரும்பும் உணவுகளைப் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு’ எனக் கூறி விடைபெறத் தயாரானார்.

காரில்தான் பயணம். இங்குள்ள வீதிகள் ஆஸ்திரேலியா மாதிரி இல்லை. பயணம் குறைந்தது எட்டு மணி நேரம்.’ இதமாக நகைத்தவாறே மொழி பெயர்க்க வந்த இளம் பெண் சொன்னாள்.

திட்டமிட்டபடிமறுநாள் காலை Dac-Lac நகரை நோக்கிப் பயணமானார்கள். மலையும் மலை சார்ந்த பகுதிகளினூடாக வியட்நாமிய தேசியக் கொடியுடனான கார் ஓடிக் கொண்டிருந்தது.

வீதியில் சிறுவர் சிறுமியர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தமது கழுத்தில் சிவப்பு நிறத்துண்டொன்றைக் கட்டியிருந்தார்கள்.

விடுமுறையின் பின்பு இன்றுதான் பாடசாலை மீண்டும் துவங்குகிறது. நாம் இன்னமும் கோ-சி-மிங் தத்துவங்களை மறந்துவிடவில்லை. அதன் சின்னம்தான் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் சிவத்தப் பட்டி’ என கூறிய வியட்நாமிய அதிகாரிக் காரை சாலை ஓரமாக நிறுத்துமாறு கூறினான்.

இப்பொழுது பழக் கலம். உலர் வலய பழங்களை உண்டுபாருங்கள். இங்குள்ள குறை இவற்றைப் பதப்படுத்தும் தொழில் நுட்பம் இல்லாததே. இதற்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான் உதவவேண்டும்’ என்று கூறியவாறே மொழி பெயர்ப்புப் பெண்ணுடன் சாலையோரம் இருந்த பழக்கடைக்குச் சென்றான்கூடவந்த வியட்நாமியன்.

காற்றில் கலந்து வந்த பழ மணங்களும்வீதியோரக் கடைகளும்ஆங்காங்கே தேங்கிநிற்கும் மழைத்தண்ணீரும்பரவலாகப் போடப்பட்ட குப்பை கூழங்களும்சைக்கிள் மணி அடித்தவாறே விரைந்து செல்லும் மனிதக் கூட்டங்களும்இடையிடையே கேட்கும் ஹோன் சத்தங்களும்பேராசிரியருக்குத் தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தை நினைவூட்டியது.

பாடசாலைக்குச் சென்ற பள்ளிச் சிறார்கள் திறந்திருந்த கார்க் கதவினூடாகப் பேராசிரியரை எட்டிப்பார்த்துச் சிரித்தார்கள். சிறு குழந்தை ஒன்று தட்டுத் தடுமாறி ஓடிவந்து சாலை ஓரத்தில் அசிங்கம் பண்ணியது. இதைக் கண்ட தாய் விரைந்து வந்து குழந்தையை சுத்தம் பண்ணுவதில் ஈடுபட்டாள்.

கிராமிய இயற்கைச் சூழலில் வியட்நாமிய குழந்தைகளைக் கண்டதும் பேராசிரியரின் மனசிலே சிந்தனைச் சலனங்கள். கண்களை மூடி ஒரு நீண்ட பெருமூச்சை வெளியில் விட்டார். அவருக்கு எல்லா சம்பத்துக்களுமே இருந்தன. ஆனால்வாரிசு என்று சொல்லக் குழந்தை இல்லை. சாத்தியமும் இல்லை. இதனை மறப்பதற்கான வடிகாலாகவும் தீவரமான கம்பியூட்டர் ஆராய்ச்சி உதவியது.

பழங்களடங்கிய பையொன்றை பேராசிரியரின் மடியில் வைத்தாள் மொழிப்பெயர்ப்புப் பெண்மணி. நினைவுகளில் இருந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்டவராகப் பழங்களைச் சுவைக்கலானார். றம்புட்டான்லச்சிலொங்கான் போன்ற பழங்கள் அவர் முன்னரே சுவைத்தவை. சில பழங்கள் அவருக்குப் புதியன. உலர் வெப்ப வலயத்தில் அவை விளைந்ததனால் அவை அனைத்துமே அதிக சாறு கொண்டவையாக இருந்தன.

Dac Lac நகரை நெருங்க நெருங்க குளிர்காற்று வீசத் தொடங்கியது. வீதியின் இருமருங்கும் நீண்டு வளர்ந்த ரப்பர் மரங்களும்காய்த்துக் குலுங்கும் கோப்பிக் கன்றுகளும் அப்பகுதிக்கு வனப்பூட்டின.

இப்பிரதேசம் மலைப்பகுதி. இங்குதான் வியட்நாமுக்குப் பணவருவாயைப் பெற்றுத் தரும் காசுப்பயிர்கள் வளர்கின்றன. Dac Lac நகருக்கு சரித்திர முக்கியத்துவமும் உண்டு. யுத்த காலத்திலேயே வடக்கு வியட்நாமில் இருந்து கம்போடிய நாட்டின் காடுகளுடாக வியட்நாமிய எல்லையை ஒட்டி நீண்ட தொருபாதை அமைக்கப்பட்டது. இதற்கு கோ சி மிங் பாதை என்று பெயர். இதனூடாக வியட்நாமிய வீரர்கள் Dac Lac நகருக்கு விரைந்து வந்து இங்கிருந்தே வடக்கும் தெற்கும் நோக்கித் தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். இதனைத் தாக்குபிடிக்க முடியாமல்தான் 1975ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் வெளியேறினார்கள். இந்நகரம் தென் வியட்நாமின் நடுவே மலை சூழ இருந்தமை எமது தாக்குதலை இலகுவாக்கிற்று. அந்தப் படையில் நானும் இருந்தேன்.’ என்றான் முகத்தில் பெருமை பொங்கஅருகில் இருந்த வியட்நாமியன்.

Dac Lac வந்துசேர இருளத் தொடங்கிவிட்டது. ‘பெங்லீயை எப்போது சந்திக்கலாம்…?’ என்று கேட்டார் பேராசிரியர்.

நாளை சந்திக்கலாம். அவன் நகரின் ஒதுக்குப்புறமாக மலையின் அடிவாரத்தில் தனது தாயுடன் வசிக்கிறான். இப்பொழுது அவன் வீட்டிற்கு சென்றிருப்பான்’ என்றான் கூடவந்த இளம் வியட்நாமியன்.

பெங்லீ எமது நாட்டிற்குக் கிடைத்த பொக்கிஷம். விரைவிலேயே கொம்பியூட்டர் துறையில் அவனது சாதனைகளுக்காக வியட்நாமின் அதி உயர் விருது கிடைக்க விருக்கிறது. இதைப் பெறும் முதல் இளைஞன் இவனே’ எனப் பெருமை பொங்கக் கூறினார் வியட்நாமிய அதிகாரி.

உண்மைதான். உலகமே இவனது Software patch பற்றி வியந்து நிற்கிறது. குறுகிய காலத்தில் எம்மை எல்லாம் விஞ்சிவிடுவான்’ என்றார் பேராசிரியர். அவர் வார்த்தைகள் வெறும் புகழ்ச்சியல்ல. அவரது உள்மனமோ, ‘அவனை ஆஸ்திரேயாவுக்கு கவர்ந்திழுப்பதற்காகத்தானே நான் இங்கு வந்திருக்கின்றேன்என் உள் நோக்கம் வெல்ல வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள். வழமையான சம்பிரதாயங்கள் மற்றும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் முடிவடைந்தபின்னர்மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அது ஒரு Sea food றெஸ்றோறன்ற். இப்படியான விருந்து வைபவங்களில் வியட்நாமியர்கள் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்வார்கள். விருந்தின் போது பெங்லீ பேராசிரியருக்கு அறிமுகம் செய்யப்பட்டான். இருவரும் கை குலுக்கி பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

அவனுக்கு இருபதைந்து வயதிற்கு மேல் இருக்காதென மதிப்பிட்டார் பேராசிரியர். கம்பீரமான உருவம்எடுத்த ஏடுப்பில் அவனது கண்களே முதலில் பேராசிரியரைக் கவர்ந்தன. அவை வழக்கமான வியட்நாமிய கண்களைப் போல் அல்லாமல் பெரிதாக ஒளிவீசிக் கொண்டிருந்தன.

வந்திருந்த வியட்நாமியர்கள் அனைவரின் கவனமும் சாப்பாட்டில் இருக்கஇவன் மட்டும் கொம்பியூட்டர் உலகத்திலே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஆங்கிலத்தில் அவன் கலந்துரையாடிய பாங்குஅவனது தோற்றம்அறிவுபழகும் விதம் எல்லாமே பேராசிரியருக்கு மிகவும் பிடித்திருந்தன.

விருந்தின் இறுதியில் வியட்நாமியர்கள் அனைவருக்கும் போதை தலைக்கேறிவிட்டது. இதனால் பேராசிரியரை அவரது ஹோட்டல் அறையில் விடும் பொறுப்பு பெங்லீயிடம் ஒப்படைக்க்படப்டது.

ஹோட்டல் அறையில் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டுத் திரும்பிய பெங்லீயை அன்புடன் அழைத்தார் பேராசிரியர். ‘பெங்…உன்னுடன் தனிமையில் சில விடயங்கள் பேசவேண்டும். இன்று இரவு என்னுடன் சாப்பிட வருவாயா…?’ என்றார்.

கொம்பியூட்டர் தொழில்நுட்பம் பற்றிய விடயமொன்றால் நான் எனது அதிகாரிகள் இன்றிப் பேசமுடியாது…!’ என்றான் பணிவுடன்.

இல்லை பெங்உனது அழகிய ஆங்கிலமும் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்த விடயங்கள். இந்நாட்டின் மொழி தெரியாத சூழலில் தனியே உணவருந்துவதிலும் பார்க்கஉன்னுடன் பேசிக் கொண்டே உணவருந்தலாம் என்பதுதான் எனது எண்ணம்’ என்றார் பேராசிரியர்.

அப்படியென்றால் நிச்சயம் வருகிறேன். நகரின் நடுப் பகுதியிலே ஒரு ‘இந்தியன்’ றெஸ்றோறன்ற் இருக்கிறது. அங்கு போகலாம். எனக்கும் இந்திய உணவு வகைகள் பிடிக்கும். எனது தாய் வியட்நாமியராக இருந்தாலும் என் தந்தை ஒரு இந்தியர்தான்.’

பேராசிரியர் மனதில் ஒரு சலனம்.

என்ன…உனது தந்தை இந்தியரா…அவர் பெயர் என்ன?’ என்றார் ஆச்சரியம் பொங்க.

எனக்கு அவரைத் தெரியாது’ என்றான் பெங்லீ.

என்னைப் போன்ற தந்தை முகத்தைப் பார்க்காத எத்தனையோ கலப்பினக் குழந்தைகள் வியட்நாமில் இருக்கிறார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பு இதற்கு வசதி செய்தது. அவர்களை நினைவுபடுத்தும் இவர்கள் அவமானச் சின்னங்களாக இன்னமும் வெறுக்கபடுகிறார்கள்’ என்ற பெங்லீ சிறிது நிறுத்திபெருமூச்சொன்றை வெளியே விட்டவாறே, ‘எனது கதையோமுற்றிலும் வித்தியாசமானது’ என்றான் அமைதியாக.

அவனது மன உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுப்பவராக அவனருகே மிக நெருங்கி வந்த பேராசிரியர், ‘இன்று இரவு சாப்பாட்டிற்கு வரும் போது உனது தாயையும் அழைத்துவாயேன். உலகப் புகழ் பெற்ற கொம்பியூட்டர் நிபுணனை பெற்றெடுத்த அன்னை எனது விருந்தினராக வருவது எனக்கும் பெருமைதான்’ என்றார்.

கண்களை மூடி இமைகளை வருடியவாறே சிறிது நேரம் அமைதியாக இருந்தான் பெங்லீ. பின் மௌனத்தை கலைத்து ‘அதற்கென்னகூட்டிவருகிறேன். எனது தந்தையின் பெயரை யாருக்கும் சொல்ல மறுக்கும் எனது தாயார்இப்பொழுதும் அவர் நினைவாகவே வாழ்வது எனக்குத் தெரியும். இந்திய உணவைச் சாப்பிடுவதில் அவருக்கு ஒரு மன நிறைவு ஏற்படட்டும்’ என்றான்.

உனது தந்தை அமெரிக்க இராணுவத்துடன் இங்கு வந்தாரா…?’ எனக்கேட்டார் பேராசிரியர் நெஞ்சு படபடக்க.

எனது கதைதான் வித்தியாசமானது என்றேனே….! வியட்நாமின் வடபகுதி சோஷலிச ஆட்சியில் இருந்த காலத்தில் சோஷலிச நாடொன்றின் புலமைப்பரிசில் பெற்று ஐரோப்பிய நாடொன்றில் படித்தவர் எனது தாயார். எனது தந்தையை அங்கு சந்தித்தே கருவுற்றார். இதற்குமேல் இதுபற்றி அவர் எதுவுமே எனக்குக் கூற விரும்பியதில்லை.’ சிறிது நேரம் மௌனித்த அவன், ‘மாலை ஆறு மணிக்கு உங்களை வந்து சந்திக்கிறேன்’ எனக்கூறி அறையை விட்டு வெளியேறினான்.

அவன் மனதைப் புண்படுத்திவிட்டேனா எனப் பேராசிரியரின் மனசு வருந்தியது. அத்துடன் இனந்தெரியாத கவலையோ அன்றேல் சோகமோ அவரை வளைத்துக் கொண்டது. அறையிலிருந்து மினி பிரிஜ்ஜைத் திறந்துமதுப்புட்டி ஒன்றை எடுத்துக் குடிக்கத் துவங்கினார். அவருடைய செயல் அவருக்கே ஆச்சர்யத்தைத் தந்தது.

சரியாக ஆறுமணிக்கு வந்தான் பெங்லீ. பேராசிரியரும் தயாராகக் காத்திருந்தார்.

எங்கே உன் தாயார்…?’ ஆவலை அடக்க முடியாமல் கேட்டார்.

அவர் நேரடியாக றெஸ்ரோறன்றுக்கு வருவார். என்னிடம் கார் இல்லை. மோட்டர் சைக்கிளில்தான் இங்கு வந்தேன். தங்களுக்கு அசௌகரியம் இல்லை என்றால்அதிலேயே நாங்கள் போகலாம். இல்லையேல் வாடகைக்கு ஒரு கார் அமர்த்திக் கொள்வோம். அரச வாகனத்தை என் சொந்தத் தேவைகளுக்கு நான் உபயோகிப்பதில்லை’ என்றான் பெங்லீ பணிவுடன்.

நீ எனக்கு வாகனமோட்டியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ எனச் சொல்லிப் பேராசிரியர் சிரித்தார்.

Dac Lac நகர வீதிகளினுடாகச் சிறிய ‘கொண்டா’ மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. அதன் பின்னால் இருந்து போவது பேராசிரியருக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

உங்கள் பெயர் என்ன…பிறந்த நாடு என்ன…?’ என்றெல்லாம் துருவித் துருவி எனது தாயார் பல கேள்விகளைக் கேட்டார். உங்கள் பெயரை முறையாக உச்சரிக்க எனக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால் ஆஸ்திரேலியப் பேராசிரியர்தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் இருந்து புலம் பெயர்ந்தவராக இருக்க வேண்டுமென்று கூறினேன். என்னஎனது ஊகம் சரிதானே…?’ எனக் கேட்டான் பெங்லீ வண்டியின் வேகத்தை குறைத்தவாறே.

பேராசிரியர் பதில் கூற முனைவதற்கு முன்பு இந்திய றெஸ்றோரன்ற் வாசலில் நின்றது வண்டி.

இந்த இந்திய றெஸ்றோறன்ற் வியட்நாமியர் ஒருவரால் நடத்தப்படுவது. சமையல் வேலையில் மாத்திரம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்’ என றெஸ்றோறன்ற் பற்றி விளக்கம் கொடுத்தான் பெங்லீ.

இருவரும் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் வந்தமர்ந்து கொண்டனர்.

ரவிசங்கரின் சித்தார் இசை காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. வியட்நாமிய மண்ணில் ரவிசங்கரின் இசையைக் கேட்பது விநோதமாக இருந்தாலும் பேராசிரியர் ரசித்துக் கொண்டிருந்தார்.

பெங்லீ ‘றைஸ்வைன்’ ஒன்றுக்கு ஓடர் கொடுத்தான். பேராசிரியர் பழச்சாறுடன் நிறுத்திக் கொண்டார்.

எதேச்சையாக வாசலைத்திரும்பிப் பார்த்த பெங்லீ, ‘அதோ எனது தாயார் வருகிறார்’ என்றான்.

உற்றுப் பார்த்தார் பேராசிரியர். அவளேதான். கிம் (Kim)! பெங்லீயைச் சந்தித்ததிலிருந்து அவருக்கு ஏற்பட்ட மனக் குழப்பங்களுக்கு எல்லாம் விடை தருவதுபோலஅவள் தோன்றினாள்.

அவளது முகம் பேராசிரியரைக் கண்டதும் வியப்பிலே மாறியது. கதிரையை இறுகப்பிடித்தவாறு சில கணங்கள் மௌனமாக நின்றாள். சுருங்கிய அவளது விழிகளைதிரண்டுவந்த நீர் மறைக்கஇருகைகளாலும் முகத்தை மறைத்தாள்.

ஓ… கடவுளேஇவ்வளவு நாட்களின் பின்பா…?’ என்றாள் கிம்பெங்லீயின் தாயார். பேராசிரியர் அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குப் பல பணங்களாயின.

‘Oh, my dear son, Peng Lee, you are my son…! என்றவாறே அவனைக் கட்டடி அணைப்பதற்காக கிம்மைக் கடந்து நடந்தார்.

பெங்லீ இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அணைக்க வந்த பேராசிரியர் கைகளைத் தட்டி விலகினான். மறுகணம் தாயை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியியேறிவிட்டான்.

மேஜைமீது மீதம் விடப்பட்டிருந்த றைஸ் வைனை போத்தலுடன் எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடிந்தார் பேராசிரியர். மதுவின் சூடு தலைக்கேறஅவர் தமது இளமைக் காலத்தில் மிதக்கலானார்.

-3-

பேராசிரியர் பாடசாலையின் உயர் வகுப்பில் கல்வி பயின்ற காலத்தில் ‘சோஷலிச சார்பு’ என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட அரசு இலங்கையில் பதவிக்கு வந்தது. அக்காலக்கட்டத்தில் ‘வாசோ’ கூட்டமைப்பிலே அணி திரண்ட சோஷலிச நாடுகள்பல்வேறு நாடுகளிலில் இருந்தும் தெரிந்தெடுத்த மாணாக்கருக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கிதமது பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொண்டன. கல்வியுடன் சோஷலிச கொள்கைளை அந்த மாணாக்கள் மூலம் பரப்பலாம் என்பது உள்நோக்கம். மொஸ்கோவில் இதற்காக ஒரு பல்கலைக்கழகமே நிறுவியிருந்தார்கள். இதற்கு விடுதலை வீரன் லுமும்பா நினைவாக, ‘லுமும்பா பல்கலைக்கழகம்’ எனவும் பெயரிட்டனர்.

கஷ்டத்தின் மத்தியில் கல்விகற்ற சந்திரசேகரம் பன்னிரண்டாம் வகுப்பில் தனது நாட்டிலேயே அதிபுள்ளி பெற்ற மாணவனாகச் சித்தி பெற்றான். இதனால் லுமும்பா பல்கலைக்கழகத்துக்குப் புலமைப் பரிசில் பெற்றுச் செல்வது இலகுவாயிற்று.

அது கொம்பியூட்டரின் முக்கியத்துவம் முகிழத் துவங்கிய காலம். கணிதத்தில் திறமையான ஐந்து பேரை லுமும்பா பல்கலைக்கழகம் கொம்பியூட்டர் கல்விக்கெனத் தெரிவு செய்திருந்தது. இவர்களுள் சந்திரசேகரமும் பெங்-லியின் தாயார் Kimம் முன்னிலை வகித்தார்கள்.

கணிதப்புலமை இவர்கள் இருவரையும் நெருங்கிப் பழக வைத்தது. செய்முறை வகுப்புகளும் கலந்துரையாடல்களும் இவர்கள் உணர்ச்சிகளுக்கு தீனிபோடவேபெங்லீ, Kim வயிற்றில் கருவானான்.

படிப்பின் இறுதியாண்டும் நிறைவு பெற்றது. Kim (கிம்) வியட்நாம் திரும்ப வேண்டும். வியட்நாமிய சட்டம் அப்படி.

பல்வேறு வாக்குறுதிகள்அன்பு வார்த்தைகள் யாவும் சொல்லி அவளை வியாட்நாமுக்கு அனுப்பி வைத்தார் சந்திரசேகரம். ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்து பணமும் அனுப்பப்பட்டது.

சந்திரசேகரத்தின் வாழ்வில் மாற்றங்கள் துரித கதியில் நிகழ்ந்தன. ஹார்வாட் பல்கலைக்கழகம் சென்ற சந்திர சேகரம் கொம்பியூட்டர் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். ஊரில் தாயாரால் விலை கூறி விற்கப்பட்டு பணக்காரப் பெண் ஒன்றிற்குக் கணவனாகி ஆஸ்திரேலியாவிற்கும் குடி பெயர்ந்து விட்டார். இப்பொழுது அவர் உலகம் போற்றும் விஞ்ஞானி. கொம்பியூட்டர் துறை பேராசிரியர்.

பேராசிரியரின் முதுகைதட்டிஅரைகுறை ஆங்கிலத்தில்கடையை மூடப்போவதாகக் கூறினான் பணியாள்.

கையில் அகப்பட்ட டொலர்களை அப்படியே எடுத்து அவன் கைகளில் திணித்துவிட்டுஅறைக்கு வந்து போதை மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டார் பேராசிரியர்.

அடுத்த நாள் உடன்படிக்கை பற்றி வியட்நாமிய அதிகாரிகளுடன் பேசவேண்டும். அப்பொழுது பெங்லீ வரலாம். இந்த நினைவு அவரைப் பரபரப்புக்குள்ளாகியது.

விரைவில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார்.

சில தகவல்களை சேகரிக்க வேண்டி தனது Lap Top கொம்பியூட்டரைத் திறந்தார்.

அவருக்காக ஒரு E- mail காத்திருந்தது.

பெங்லீதான் அனுப்பியிருந்தான். மொட்டையாக ‘பேராசிரியருக்கு’ என்று தலைப்பிட்டு அந்தக் கடிதம் துவங்கியது.

தங்களை ஞானமுள்ள மேதை என்கிறமுறையிலே மிகவும் மதிக்கிறேன். இருப்பினும் தங்கள் உறவு முறையை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. என் தாய் உங்கள் நிமித்தமாக இந்த நாட்டிலே எத்தனை அவமானங்களைத் தாங்கியிருப்பாள் என்பதை நினைத்துப்பாருங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல்இன்றுவரை அவள் உங்கள் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆனால் நீங்கள்…?

எனது தாயாரை இத்தனை ஆண்டு பிரிவின்பின் முதல் முறையாகச் சந்தித்தபொழுது குறைந்த பட்சம் ‘மன்னித்துக்கொள்’ என ஒரு வார்த்தை கூடக் கூறத் தோன்றவில்லை. கிம்- என்தாய்- உங்களுக்காகத் தன்னை இழந்தவள். அவளின்றியா நான்நான் என்றும் அவளுடைய மகனே… பேராசிரியரே…நாங்கள் இதுவரை வாழ்ந்த மாதிரியே வாழ்ந்துவிடுகிறோம். இனியும் எங்கள் வாழ்க்கையின் குறுக்கிட்டு எங்கள் அமைதியைக் குலைக்க வேண்டாம். ‘புத்தி ஜீவி’ என்கிற மமதையிலே மானிட தர்மங்களை மறந்த ஒருவரை என் தந்தையென்று அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. கிம்மின் மகனாகவும் வியட்நாம் குடிமகனாகவும் வாழ்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன் – பெங்லீ.

 

(தமிழ் முரசுசிங்கப்பூர், 14/21 நவம்பர் 1999)

 

 


No comments:

Post a Comment

.