Saturday 23 January 2021

 

எதிலீன் ஹோமோன் வாயு

ஆசி கந்தராஜா

 -1-

ரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தபோது எனக்கு பதின்மூன்று வயது. இராசதுரை, நான், சரவணை அம்மானின் ஒரே மகள் பூங்கொடி எல்லோரும் அப்போது ஊர்ப் பாடசாலையில் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். சரவணை அம்மான் தூக்கில் தொங்கிச் செத்தவரோ அல்லது அவரை அடித்துத் தூக்கினதோ...? என்ற சமசியம், அப்போது பலருக்கு இருந்தது. இதுபற்றி ஊரிலே ஆரென்ன சொன்னாலும், சந்தையால் வந்த சரவணை அம்மான், அன்று பெண்சாதியுடன் சண்டை பிடித்ததை, நான் பார்த்தேன். இந்தச் சண்டை வெறும் வெண்டிக் காயால் வந்தது.

சரவணை அம்மான் தோட்டக்காரன் என்றாலும் நல்ல முதுசக்காரன். வயல், தோட்டம், துரவு என்று நிலபுலன்கள் ஏராளம். அதனால்தான் அவருக்கு நல்ல வடிவான பெண்சாதி அமைந்ததென்று சொல்லக்கேள்வி. கனகம் மாமி அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்புவரை இங்கிலிஷ் படித்தவர். அவவின் வடிவுக்கும் சீதனபாதனத்துக்கும் நிறையப்பேர் அவவைப் பெண் கேட்டு வந்தவர்களாம். அதனால் அவவுக்கு 'றாங்கி' கொஞ்சம் அதிகமென இராசதுரை வீட்டில் சொன்னார்கள். இறுதியில், சொந்தமும் சொத்தும் விட்டுப் போகக் கூடாதென்பதற்காக, சொந்த மச்சான் சரவணையை, அவவுக்கு எப்பனும் விருப்பமில்லாமல் தகப்பன் கட்டிவைத்தாக, பாட்டி சொன்னார். இதனால் அரைக்காசு பெறாத விஷயத்துக்கும் புருஷனுடன் மல்லுக்கு நிற்பார்.

செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சாவகச்சேரியில் சந்தை கூடும். இவற்றுள் சனிக்கிழமையே மிகப் பெரிய சந்தை. சரவணை அம்மான் விடிய நாலு மணிக்கு வண்டில் கட்டி, தனது தோட்டத்து விளை பொருள்களைச் சந்தைப்படுத்த, சாவகச்சேரிக்குப் போவார். புகையிலையும் மிளகாயும்தான் அப்பொழுது காசுப் பயிர்கள். அறுவடை காலங்களில் செத்தல் மிளகாயும் புகையிலையும் வாங்க, கொழும்பு வியாபாரிகள் வீடு தேடி வருவார்கள். ஆனால் யாழ்ப்பாண விவசாயிகளின் அன்றாட செலவுகளுக்கு வாழைக் குலைகளே கைகொடுத்தன. கப்பல், கதலி, கறிமொந்தன் என சரவணை அம்மான் தோட்டத்து வாழைகள், வஞ்சகமில்லாமல் குலை தள்ளின. வாழைக் குலைகள் விற்ற காசில்தான் சரவணை அம்மான், வீட்டுக்குத் தேவையான சாமான்களும் கோவிலாக்கண்டி மீன், பாலாவி றால், கணவாய் வகைகளும், பூங்கொடிக்கு விருப்பமான கச்சான் அல்வாவும் வாங்கிவருவார்.

தகப்பன் சாகிறதுக்கு ஒரு மாதம் முந்தித்தான் பூங்கொடி பக்குவப்பட்டு, தடல்புடலாக சாமத்தியச் சடங்கு வைச்சவை. பூங்கொடியும் தாயைப்போல நல்ல வடிவும் வெள்ளையும். ஆனால் பெயருக்கு ஏற்றமாதிரி கொடிபோல இருந்தாள். பள்ளிக்கூடத்துக்கு ஆடிஆடி நடந்து வருவாள். அவள் தூக்கி வரும் புத்தகச்சுமை தாங்காமல் முறிந்து விடுவாளோ? என்ற பயம் இராசதுரைக்கு நெடுக இருந்தது. ஒருவேளை அப்படி நடந்தால், ஓடிப்போய்த் தூக்குவதற்கு இராசதுரை தயாராக இருந்தான்.

 இராசதுரை குடும்பம் கொஞ்சம் முட்டுப்பட்டது. இதனால் கனகம் மாமியின் சீதனக் காணியிலேயே குடியிருந்தார்கள். இராசதுரைக்கு இரண்டு வயதில், தகப்பன் பாம்பு கடித்து இறந்துபோக தாய், சரவணை அம்மானின் தோட்டத்தில் வேலை செய்தே அவனை வளர்த்தார். அவர்களும் சரவணை அம்மான் 'பகுதி' என்றாலும், கனகம்மாமி, புருஷனை இராசதுரை வீட்டில் செம்பெடுக்கவிடார். 

சரவணை அம்மானின் தோட்டத்தில் யாழ்ப்பாண மரக்கறிகள் பெருமளவில் விளைந்தன. இருந்தாலும் பூங்கொடிக்கு பெலமேத்த இங்கிலிஷ் மரக்கறிதான் சரிவரும் என, கனகம்மாமி நம்பினார். ஒரு வெண்டிக்காயில் ஒரு முட்டையின் சத்தென, ஏதோவொரு இங்கிலிஸ் புத்தகத்தில் கனகம்மாமி வாசித்ததால், வெள்ளைக்கார மரக்கறிகளுடன் சேர்ந்துகொள்ள, பால் வெண்டிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. வெண்டி மரத்தில் அழுக்கணவன் பிடிக்குமென சரவணை அம்மான் பால்வெண்டி நடுவதில்லை. இதனால் அவர்களது வாராந்த சாமான் பட்டியலில் பால் வெண்டி சேர்ந்து கொள்ளும். வெண்டிக்காய் வாங்கும்போது நுனியை முறிச்சுப்பாத்து பிஞ்சாக வாங்கவேண்டு மென்பது கனகம் மாமியின் கட்டளை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுபதுகள்வரை, சந்தையில் சாமான் வாங்க சாக்குப்பையும் பனை ஓலை உமலுமே பாவித்தார்கள். சாவகச்சேரிச் சந்தையில் காய் பிஞ்சு விக்கும் சின்னாச்சிக் கிழவியின் ஏச்சுப்பேச்சையும் தூஷணத்தையும் காதில் வாங்காது, சரவணை அம்மான் வெண்டிக் காய்களை முறித்துப் பார்த்து, நுனிமுறிஞ்ச காய்களாகப் பொறுக்கி எடுத்தார். நல்ல புளிக்காயென்று சொல்லி, விலைப்படாமல் வாடிக் கிடந்த பத்து எலுமிச்சம் பழங்களையும் அரை விலைக்கு, வெண்டிக் காய்களுடன் சரவவணை அம்மானின் சாக்குப் பைக்குள் தள்ளிவிட்டது, கிழவி. சரவவணை அம்மானின் எருத்து மாடுகளுக்கு சந்தைக்குப் போய்வரும் பாதை அத்துப்படி. சந்தையால் திரும்பி வரும் வழியில் மாடுகள் தாங்களாகவே, நுணாவில் கள்ளுக் கொட்டில் முகப்பில் நின்றுவிடும். வழக்கம்போல அன்றும் கள்ளுக் கொட்டிலில் 'சமா' வைத்தபின்பே, சரவணை அம்மான் வீடுவந்து சேர்ந்தார்.

அன்று புரட்டாதிச் சனி!

வீட்டில் மச்சமாமிசமில்லை. வெண்டிக்காயை நல்லெண்ணையில் வதக்கி, தக்காளியும் உள்ளி மிளகு சீரகமும் தட்டிப்போட்டு, வத்தக் குழம்பு செய்யவென வெண்டிக்காயை அரியத்துவங்கிய கனகம் மாமி, பத்திராளியாட்டம் வெளியே வந்தார். கலியாணம் கட்டின நாள் துவக்கம் கனகம் மாமி, புருஷனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வார்த்தைகள் நெருப்பாக வெளியில் வரும். அன்றும் அப்படித்தான். புருஷனை வறுத்தெடுத்துவிட்டார்.

'த்து, நீயும் ஒரு ஆம்பிளையே...? ஒழுங்கான வெண்டிக்காய் வாங்கத் துப்பில்லை' எனத் துவங்கி அவரின் அந்தரங்க பலவீனத்தை அனலாய்க் கொட்டினார்.

நுனி முறிச்சுப்பார்த்து, பிஞ்சாகத்தான் வாங்கியதாக சரவனை அம்மான் முடிந்தவரை அனுங்கிப்பார்த்தார். ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. கள்ளுக் கொட்டிலை நோக்கி நடந்த சரவணை அம்மானை, அடுத்தநாள் பிணமாகத்தான் இறக்கினார்கள்.

வெண்டிக்காய் விசயத்தில் சரவணை அம்மான் பொய் சொல்லவில்லை என்பது, எனக்கும் இராசதுரைக்கும் பல வருடங்களுக்குப் பிறகே தெரியவந்தது.

 

-2-

ராசதுரை படிப்பில் வலு விண்ணன். கஸ்டமான கணக்குகளையும் ஒரு நொடியில் போட்டுவிடுவான். அந்த வருட பல்கலைக் கழக புகுமுகப் பரீட்ஷையில், அவன் மாநிலத்தில் முதலாவதாக வருவான் என்று பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் நம்பினார்கள். விளையாட்டுப் போட்டிகளில் அவன்தான் சம்பியன். மரதன் ஓட்டப் போட்டியில் எவரும் அவனை வென்றது கிடையாது. இடையிடையே தாயுடன் தோட்ட வேலைகளும் செய்வதால், திடகாத்திரமான Four pack'  உடம்பு, இராசதுரைக்கு தானாகவே வந்தது. எங்களுடன் கூடப்படித்த 'பாஷனான' வேதப் பெட்டையள், இராசதுரையைச் சுற்றிச் சுழன்று திரிந்தாலும் 'பூங்கொடிக்கே கொழுகொம்பாவேன்' என அடம் பிடித்தான். ஆனால் பூங்கொடி அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வானத்திலிருந்து ஒரு அழகான தேவகுமாரன், சகல சௌபாக்கியங்களுடனும் தனக்கு மாப்பிளையாக வருவான் என்று நம்பினாள். அதேசமயம், கலியாண விஷயத்தில் தான் ஏமாந்தது போல, மகள் ஏமாறக்கூடாதென்பதில் கனகம்மாமியும் வலு கவனமாக இருந்தார். சரவணை அம்மான் சாவுக்குப் பிறகு சகலதும் கனகம் மாமியின் இராச்சியத்தின் கீழ் வந்தது. தோட்ட வேலைக்கு தாய், எடுபிடி வேலைக்கு இராசதுரை என, வசமாக இவர்கள் மாட்டிக் கொண்டதால், கனகம் மாமியின் காலம் பிரச்சனையின்றிக் கழிந்தது.

அப்பொழுது எமக்குப் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை நெருங்கவே, நாங்களெல்லோரும் படிப்பிலே மும்முரமானோம். ஆனால் இராசதுரையோ காதலாகி கசிந்து, பூங்கொடியை சுற்றித் திரிந்தான். அப்பொழுது அலை பேசிகளோ அல்லது அதில் அனுப்பப்படும் குறுஞ்செய்தி, 'வட்சப்' வசதிகளோ இல்லை. காதலை வெளிப்படுத்துவது கடிதமூலம்தான். கணிதபாட பரீட்சை முடிந்த அடுத்தநாள், இராசதுரை தன்னுடைய அளவு கடந்த காதலையும் மோகத்தையும் எழுத்தில் கொட்டி, பூங்கொடிக்கு ஒரு கடிதம் எழுதினான். 'இப்பொழுது எனக்குப் பணவசதி இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் நான் உன்னத நிலைக்கு வந்து உன்னை ராணிபோல வைத்திருப்பேன்' என்ற வரிகளுக்கு சிவப்பு மையால் அடிக்கோடிட்டான். காதல் கடிதம் எழுதும் விஷயத்தில் எனக்கு எந்தவித முன் அநுபவம் இல்லை என்று தெரிந்தும்,  இரண்டு முறை தான் எழுதியதை எனக்கு வாசித்துக் காட்டி, வேண்டிய திருத்தங்களைச் செய்து கொண்டான். கடிதத்தை எப்படிச் சேர்ப்பிக்கலாம் என்பதை நானும் இராசதுரையும் பல கோணங்களில் ஆராய்ந்தோம். இறுதியில் கனகம்மாமி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, பூங்கொடியின் 'கொம்பாஸ்' பெட்டிக்குள் கச்சான் அல்வாவுடன் சேர்த்து கடிதத்தை வைப்பது என்று முடிவெடுத்தோம். ஆனால், பாடசாலையில் கெட்டிக்காரனாக கருதப்பட்ட இராசதுரை, எங்கள் திட்டத்தை அமுல் படுத்தும் விஷயத்தில் 'சொதப்பி'விட்டான். கடிதம் தடம்மாறி கனகம் மாமியின் கைகளில் கிடைத்தது பெரும் சோகம்.

'ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பரதேசி நாய்களுக்கு எங்கடை வீட்டுச் சம்மந்தம் வேண்டிக்கிடக்கோ...' என்ற தடித்த வார்த்தைகளுடன், செருப்பால் அடிக்காத குறையாக இராசதுரையும் தாயும் துரத்தப்பட்டார்கள். 'நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டிலை வைச்சிருந்தது, தன்ரை பிழை...!' என ஊரெல்லாம் கனகம் மாமி தூற்றித் திரிந்தா. 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதாக' வீட்டுத் திண்ணைகளில், ஊர் மாமிகள் வம்பளந்தார்கள். பிரளி குளப்படி இல்லாத நல்ல பெடியன் எனப் பெயரெடுத்த இராசதுரை, வெளியில் தலைகாட்ட முடியாமல் முடங்கிப்போனான். இதன் தொடர்ச்சியாக அந்த வருட பல்கலைக் கழக புகுமுக பரீட்ஷையில்,  இராசதுரை எல்லாப் பாடங்களிலும் பெயிலானது அனைவருக்கும் அதிர்ச்சி.

அப்பொழுதுதான் முத்தையன்கட்டு படித்த வாலிபர் விவசாய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியது. ஊரில் இருக்க விரும்பாத இராசதுரையும் தாயும், முத்தையன்கட்டில் காணிபெற்று இரவோடிரவாகப் போய்விட்டார்கள். கால ஓட்டத்தில் இராசதுரையுடன் இருந்த தொடர்பு எனக்கு அறுந்து போயிற்று. விவசாய தொழில் நுட்பத்தில் எனது படிப்பு முடிந்த பின்னர், புலம்பெயர்வு என்ற அலைகளிலே எற்றுண்டு, நானும் அவுஸ்திரேலியா வந்து குடும்பஸ்தனாக  சிட்னியில் வாழத்தலைப்பட்டேன்.

 

-3- 

ப்பொழுது சிட்னி கடைகளில் இலங்கை மரக்கறிகள் பெருமளவில் விற்பனையாகின்றன. இவை அனைத்தும் அவுஸ்திரேலிய குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் உலர் வலயத்திலிருந்து வருவதாக வியாபாரிகள் சொன்னார்கள். இப்படியானதொரு தமிழ்க் கடையில் பூங்கொடியைக் கணவனுடன் சந்தித்தேன். மெலிந்து வயக்கெட்டுப் போயிருந்தாள். எந்த விதத்திலும் அவளுக்குப் பொருத்தமில்லாத, சாயம் மங்கிய சட்டை போட்டிருந்தாள். ஒரு முருங்கைக்காயும் இரண்டு உருளைக் கிழங்குகளும் வாங்கியவள், கவனமாக கையிலே பொத்தி வைத்திருந்த சில்லறைக் காசை ஒவ்வொன்றாக எண்ணிக் கடைக்காரரிடம் கொடுத்தாள். பூங்கொடி வரும்வரை கடைக்கு வெளியே காத்திருந்தேன். வந்தவள், என்னை நேருக்கு நேர் பார்க்கச் சங்கடப்பட்டாள். நிலமையைச் சுமுகமாக்க 'அம்மா எப்படி இருக்கிறார்...?' எனக் கேட்டேன்.

பூங்கொடி வார்த்தைகளை அளந்து பேசினாள். தாய் தங்களுடன் இருப்பதாகவும் புருஷனின் தொழில் விசாவில் சிட்னிக்கு வந்து, இரண்டு வருஷம் முடியப்போவதாகவும், புருஷனுக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை என்றும் விக்கி விழுங்கிச் சொன்னாள். தொழில் பெறும் விஷயத்தில் ஏதாவது உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் 'உங்களின் 'தொழில்த்துறை' என்ன?' என்று பூங்கொடியின் அருகில் நின்ற கணவனைக் கேட்டேன். அவர் எந்தவித சலனமும் இன்றி றோட்டை வெறித்துப் பார்த்தபடி நின்றார். பூங்கொடிதான் பதில் சொன்னாள்.

'பேராதனை பல்கலைக் கழகத்தில் அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இலங்கை றெயில்வேயிலை வேலை செய்தவர். இப்ப அவருக்கு கொஞ்சம் சுகமில்லை' என்றவள் கதையைத் மேலும் வளர்க்க விரும்பாதவளாக கணவனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

பூங்கொடியின் நிலமை எனக்குப் புரிந்தது. பாரிய 'மனச்சோர்வு' (Depression) என்னும் நோயால், அவளின் கணவன் பாதிக்கப்பட்டிருப்பது அவருடைய முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஊரில் கட்டியாண்ட அதிகாரங்களும் பதவிகளும் புலம்பெயர்ந்த நாடுகளில் கிடைக்காத பட்சத்தில், மனச்சிதைவு நோய்க்கு ஆளான பலரை எனக்குத் தெரியும். 'சேட்டிபிக்கற்றும் சிபாரிசும் இருந்துவிட்டால் ஊரில் ஆமான வேலை எடுத்துவிடலாம். ஆனால் அவுஸ்திரேலியாவில் இந்த 'வாய்ப்பாடு' சரிவராது. உங்களை நீங்களே இங்கு சந்தைப்படுத்த வேண்டும். 'இந்த வேலைக்கு நான்தான் பொருத்தமானவன், வேலை செய்யுமிடத்தில் என்னால் கூட்டாகப் பணிபுரியமுடியும்' என்று வேலை செய்யும் போது நிரூபிக்க வேண்டும். புத்தகப் பூச்சிகளாக ஊரில் படித்துப் பட்டம் பெற்ற பலர், பரந்துபட்ட சிந்தனையின்மையால் புலம்பெயர்ந்த நாடுகளில், வேலை தேடும் விஷயத்தில் கோட்டை விடுவது சர்வ சாதாரணம். பூங்கொடியின் கணவன் இந்த ரகமாக இருக்கலாம். தொழில் விசாவில் வந்தவருக்கு குடும்பவிசாவில் வந்தவர்களைப் போன்று பண உதவி கிடைக்கவும் வாய்ப்பில்லை. சாப்பாடு, வீட்டு வாடகை என்று இலங்கை ரூபாவை டொலரில் மாத்தி வருடக் கணக்கில் சீவிப்பது ஆனையைக் கட்டி தீனி போட்ட மாதிரித்தான். சற்று முன்னர் கடையிலே, சில்லறைக் காசைக் கவனமாக எண்ணி, பூங்கொடி கொடுத்ததின் காரணம் எனக்கு விளங்கியது.

பூங்கொடியை மீண்டுமொருமுறை சிட்னி முருகன் கோவிலில் கண்டேன். பிள்ளைகளுடன் வந்திருந்தாள். அவளின் கைக்குழந்தை இடுப்பிலிருந்து நழுவி மீண்டும் மரமேற முயற்சித்தது. மற்றப் பிள்ளைகள் அவளைக் கும்பிட விடாமல் குழப்படி செய்தார்கள். வெகு சாமர்த்தியமாக என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்ட பூங்கொடி, போகும்போது சடாரெனத் திரும்பி என்னை ஒருமுறை பார்த்தாள். இராசதுரையின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பூங்கொடியின் முகம், அப்போது சோகம் மண்டிய கண்களுடன் வாடிப் போயிருந்தது.

 

-4-

ந்தையில் திடீரென யாழப்பாணத்து முருங்கைக் காயின் வரத்துக் குறைந்தது. அதைத்தொடர்ந்து அதுபற்றி எமது பல்கலைக்கழக பூங்கனியியல் பிரிவுக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. முருங்கைக்காயை பழஈக்கள் குத்துவதாகவும் இதனால் காய்களில் கறுத்தப் புள்ளிகள் தோன்றுவதால் அவற்றை சந்தைப்படுத்த முடியாதிருப்பதாகவும், அதற்குரிய பரிகாரம் என்ன என்றும் கேட்கப்பட்டிருந்தது. சாரதா என்ற பெண்மணி அதை அனுப்பியிருந்தாலும் மின்னஞ்சல் முகவரி 'இராசதுரை அற் கொட்மெயில் டொட் கொம்' என்று இருக்கவே, ஒரு பொறி தட்டியது. மின்அஞ்சலிலிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். மறுமுனையில் 'சாட்சாத்' எங்கள் ஊர் இராசதுரை பேசினான். மகிழ்ச்சியில் இருவரும் திக்குமுக்காடிப் போனோம். வன்னிச் சமர் தங்களைப் புலம்பெயர வைத்ததாகச் சொன்னான். இதைத் தொடர்ந்து எங்கள் நட்பு அவுஸ்திரேலியாவில் மீண்டும் துளிர்த்தது. அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். என்னிடம் விவசாயம் சம்மந்தமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டான். எங்களிடம் வரும்பொழுது தனது விவசாயப் பண்ணையில் விளைந்த யாழ்ப்பாணத்து மரக்கறிகளை தாராளமாகக் கொண்டு வருவான். புத்தம் புது இரண்டு 'மெசெடிஸ் பென்ஸ்' கார்களும் ஐந்து விநியோக வான்களும் அவனது விவசாயப் பண்ணையில் சேவை புரிகின்றன. தாய்க்கு இப்பொழுது எண்பத்தேழு வயது. உடல் உழைப்பால் வைரம் பாய்ந்த தேகம். இற்றைவரை எந்தவித மருந்து மாத்திரைகளும் எடுப்பதில்லை எனச் சொன்னார். ஆணும் பெண்ணுமாக அவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள். வளமான தங்களின் வாழ்க்கைக்கு காரணம், சாரதாவே என இராசதுரை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லிப் பெருமைப்பட்டான்.

சாரதா யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் விவசாயம் படித்தவள். நெடுந்தீவிலுள்ள ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். சிபாரிசு இல்லாததால் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. முத்தையன் கட்டில் காணி எடுத்து விவசாயம் செய்ய வந்தவளை, இராசதுரை கலியாணம் செய்து கொண்டான். நல்ல முயற்சிக்காறி, அற்புதமான சோடிப் பொருத்தம் என என்னுடைய மனைவி சான்றிதழ் வழங்கினாள்.

அந்த வருட தீபாவளி ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்தது. 'இந்த முறை தீபாவளியை உன்னோடை முறையாகக் கொண்டாட வேணும் மச்சான்...' என்று சொல்லி இராசதுரை குடும்பத்துடன் வந்திருந்தான். அப்பொழுது அம்மா எங்களுடன் வாழ்ந்தகாலம். இராசதுரையின் தாய்க்கு அம்மாவுடன் பொழுது போனது. என்னுடைய மனைவிக்கு சாரதாவுடன் ஒத்துப்போனது. இராசதுரை வரும்போது விலை உயர்ந்த 'புளுலேபல் யொனிவாக்கர்' விஸ்கியுடனும் வெள்ளாட்டு இறைச்சியுடனும் வந்திருந்தான். கிடாய் ஆட்டு இறைச்சியில் அதன் 'மொச்சை'தான் ஸ்பெசல். ஊரில் சமைக்கும்போது நாலு வீடுகளுக்கு கறி கமகமக்கும். இந்த 'வாசம்' ஆட்டுக் கிடாயின் விதைகளிலிருந்து வெளியேறி உடம்பிலுள்ள தசைநார்களுக்குப் பரவும் ஒருவகை நொதியத்தால் வருவதென நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கிடாய்கள் விரைவில் வளர, மிருக வைத்தியரைக் கொண்டு நலமடிப்பார்கள். இதனால் கடைகளில் வாங்கும் வெள்ளாட்டு இறைச்சியில் மொச்சை வாசம் இருக்காது. மொச்சை வாசத்துக்காகவே இராசதுரையின் பண்ணையில் நலமடிக்காத கிடாய் ஆடுகள் வளர்கின்றன. தகுந்த சௌக்கிய பரிசோதனைகளின் பின்னர் முறைப்படி வெட்டிப் பொதி செய்து, கிடாய் ஆட்டு இறைச்சியை, இராசதுரை சந்தைப் படுத்துகிறான். தீபாவளி நத்தார் நாட்களில் வியாபாரம் சக்கைபோடும்.

ஈரல், இறைச்சி, கொழுப்பு, எலும்பு என அவன் அன்று தாராளமாகவே கொண்டு வந்திருந்தான். சாரதாவும் என்னுடைய மனைவியும் சமையலில் ஈடுபட, இராசதுரை முன் ஹோலில் போத்தலை திறந்தான். எங்களிருவருக்கும் உசார் ஏறவே ஊரிலுள்ள பலரின் தலைகள் உருண்டன. அப்பொழுது பூங்கொடி பற்றியும் பேச்சு வந்தது. திடீரென விஸ்கியை வாத்து எதையும் கலக்காது 'றோ'வாகக் குடித்தான் இராசதுரை.

பின்னர் வெளியே சென்று ஒரு சிகரெற்றைப் பற்றவைத்துப் புகைத்தபின் 'நீ கனவு காண்பதுண்டா...? எனக் கேட்டபடி உள்ளே வந்தான்.

'இதிலென்ன சந்தேகம். எல்லோரும் கனவு காண்கிறார்கள். மிருகங்களும் கனவு காண்பதாகச் சொல்லப்படுகிறது. திடீரென்று ஏன் கனவு பற்றிக் கேட்கிறாய்...?'

இராசதுரை பதிலேதும் சொல்லாமல் சிறிது நேரம் மௌனமானான். பின்னர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, 'கனவுகள் நேரடியாக மனதிலிருந்து வருபவை மட்டுமல்ல, அவை ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள்...' என தத்துவம் பேசினான்.

'இதென்ன மச்சான்...? சாராயத்துக்குப் பிறகு வாற பூராயமா...?' என அவனைச் சீண்டினேன்.

'மனிதன் எதை வேண்டுமானாலும் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் தன் வாழ்வில் எட்டிப்பார்த்த முதல் காதலை ஒருபோதும் மறக்க முடியாது....' என்றான் சீரியஸ்ஸாக.

'சேரன் எடுத்த 'ஆட்டகிராஃப்' சினிமாப் படம் மாதிரி, பூங்கொடிக்கு நீ கடிதம் குடுத்ததைச் சொல்லுறியா...?' என சிரிப்பை அடக்க முடியாமல் கேட்டேன். எனது கேள்வி அவனது உள்ளத்தை துளைத்திருக்க வேண்டும். வேறு நேரமென்றால் இராசதுரை எனக்குப்ப பொழிப்பான பதில் சொல்லியிருப்பான்.

ஆனால் இன்று...?

இராசதுரையின் மனதில் எண்ணிறைந்த கண்ணறைகள். மனது வடிதட்டாகியது. அதனூடாக வெளிப்பட்ட கடந்தகால நினைவுகளால் அவனுடைய உதடுகள் நடுங்கின.

'இந்த வருட கார்த்திகை விளக்கீட்டுடன் இருபத்தைந்து வருடங்கள்...!' விஸ்கியுடன் ஒன்றிய இராசதுரையின் மனம், நினைவுச் சிதறலுடன் ஐக்கியமாகியது.

'ஊரெல்லாம் ஜெகசோதியாக தீபங்கள் எரிய, நானும் அம்மாவும் கனகம் மாமியால் அவமானப் படுத்தப்பட்டு, அவர்களின் வளவிலே, நாங்கள் குடியிருந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டோம். உடுத்த உடுப்புடன் அனாதைகளாக, முத்தையன் கட்டுக்குச் செல்லவென முல்லைத்தீவுக்கு பஸ் ஏறினோம். என்னுடைய வாழ்க்கையே இதனால் திசைமாறியது. நடந்ததை அம்மா தன்னுடைய மனதுக்குள் புதைத்து வாழ்ந்தாலும் என்னால் அது முடியவில்லை. சொன்னால் நீ நம்பமாட்டாய், இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இன்றும் பூங்கொடியின் முகமும், முத்தையன் கட்டுக்கு நாங்கள் பஸ் ஏறும் காட்சியும், அடிக்கடி கனவில் வருவதுண்டு' எனச் சொல்லி நிறுத்தியவன், குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவனுடைய உடம்பு வேர்த்திருந்தது. கிளாஸில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தேன். அவன் யன்னலூடாக வெளியே பார்த்துக்கொண்டு நின்றான். பூங்கொடியை சமீபத்தில் நான் சந்தித்த விஷயத்தை இனியும் இராசதுரைக்குச் சொல்லமல் இருப்பது அழகல்ல. நாம் பேசுவது சமையல் அறையிலுள்ள பெண்களுக்கு கேட்கக் கூடும். எழுந்து சென்று வரவேற்பறைக்கும் சமையல் அறைக்கும் இடையேயுள்ள கதவைச் சாத்திய பின், பூங்கொடியை சிட்னியிலுள்ள தமிழ்க் கடையொன்றில் சந்தித்ததைச் சொன்னேன். கிளாஸிலுள்ள தண்ணீரை ஒரேமூச்சில் குடித்து முடித்த இராசதுரை, 'மேலே சொல்லு' என்னும் பாவனையில் என் முகத்தைப் பார்த்தான். 

பூங்கொடி தன் குடும்பத்துடனும் தாயுடனும் சிட்னியில் வாழ்வதையும், அவர்களுடைய கஷ்ட நிலமையையும் சுருக்கமாகச் சொன்னேன். இராசதுரை எதுவும் பேசவில்லை. இறுகிக் காய்ந்துபோன தோட்ட மண்ணை, காட்டு மண்வெட்டியால் கொத்திக் கிளறி விட்டது போன்றதொரு மன நிலையிலிருந்தான். பின்னர் கண்களிலே தேங்கி நின்ற கண்ணீர் மணிகளை மறைக்க, தன்னுடைய இரண்டு விரல்களினாலும் கண்களை மூடி மௌனமானான்.

சமையல் முடிந்து சாப்பிடத் தயாரானோம். சாரதாவினதும் என்னுடைய மனைவியினதும் கைப்பக்குவத்தில் தீபாவளிச் சாப்பாடு அமர்க்களமாக இருந்தது. இராசதுரை சாப்பாட்டு மேசையில் எதுவும் பேசவில்லை. பீறிட்டுப் பாயும் கடந்த கால நினைவுகளுடன் சோற்றை அளைந்து கொண்டிருந்தான்.

 

 

-5-

சாரதா கெட்டிக்காரி. பண்ணை உற்பத்தியில் மாத்திரம் நின்றுவிடாமல் விவசாய விளைபொருட்களின் விநியோகம் மற்றும் ஏற்றுமதி வியாபாரத்திலும் காலடிவைத்தாள். அவுஸ்திரேலியா உலர்வலயம், உப-உலர்வலயம், குளிர்வலயம் ஆகிய மூன்று மண்டலங்களையும் கொண்டதொரு கண்டம். இங்கு வருஷம் பூராவும் வெவ்வேறு சுவாத்தியங்களில் வளரக்கூடிய பயிர்களை பயிரிட முடியும். இவற்றுக்கான விநியோக மற்றும் சேமிப்பு சந்தை சிட்னியில் உண்டு. அங்கு பாரிய கிட்டங்கிகளிலே காய்கறி மற்றும் பழங்கள் குளிர் நிலையில் சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். சாரதா இதுபற்றிய தொழில்நுட்பப் பயிற்சியொன்றை அவுஸ்திரேலியாவில் முடித்திருந்தாள். பத்து வருடங்களுக்கு ஒருமுறை இத்தகைய சேமிப்புக் கிட்டங்கிகள் குத்தகைக்கு விடப்படும். இராசதுரை சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி  கிட்டங்கிகளை ஏலத்தில் பெற்றிருந்தான். அதிலே வாழைப்பழ சேமிப்பும் விநியோகமும் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியாவில் வாழைப்பழ வியாபாரம் என்பது லேசுப்பட்ட விஷயமல்ல. வாரம் தோறும் பல்லாயிரக்கணக்கான மெற்றிக் தொன்கள் விநியோகிக்கப்படல் வேண்டும். இதிலே சரியான கணிப்பும் முறையான தொழில் நுட்பமும் பிரயோகிக்காவிட்டால் பழங்கள் பழுதாகி பாரிய நஷ்டம் ஏற்படும். இதனால் இந்த வியாபாரத்தை ஏலமெடுக்க பலர் தயங்குவார்கள். சாரதா கொடுத்த தைரியத்திலே இராசதுரை வாழைப்பழ வியாபாரத்தில் இறங்கி, இப்போது கொடிகட்டிப் பறக்கிறான். தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல வெள்ளையர்கள் மத்தியிலும் இராசதுரை இப்பொழுது பெரிய முதலாளி. ஐம்பதுக்கு மேற்பட்ட குளிரூட்டப்பட்ட லொறிகள் 'சாரதா றான்ஸ்போட் சேர்விஸ்' என்னும் பெயரில் வாழைப் பழங்களையும் பண்ணை விளை பொருட்களையும் விநியோகிக்கின்றன. தாராளமாக நன்கொடைகள் வழங்குவதிலும் அவன் பின்னிற்கவில்லை. அவனது முயற்சியையும் வியாபார வெற்றியையும் கண்டு நான் உண்மையாகவே பெருமைப்பட்டேன்.

ந்தக் கதையை மேலும் நகர்த்துவதற்கு, வாழைக் குலைகளை பழுக்க வைக்கும் தொழில் நுட்பம் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.

 

காய் பிஞ்சுகளை, முற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன் என்னும் வாயு நிலை ஹோர்மோனே. வாழைக்காய் உட்பட எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாகவே எதிலீன் வாயு வெளியேறும். அப்பிள், எலுமிச்சை தோடங்காய்களிலிருந்து எதிலீன் பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சாரதா நிறையவே வாசித்து போதிய தகவல்களைச் சேமித்திருந்தாள். அவளுக்கு கற்பூர புத்தி. படித்த விஷயங்களை நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து விளங்கிக் கொள்வாள். பெட்டிக்குள் வைக்கோல் போட்டு அடைத்து வைத்த மாங்காய்களும், நிலத்தில் தாட்டு புகையடித்த வாழைக் குலைகளும் கெதியில் பழுக்கும் சூக்குமத்தை, என்னுடைய மனைவிக்கு ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தாள். 'புகையினாலும் வைக்கோலினாலும் வெப்பம் அதிகரிக்க காய்களிலிருந்து இயற்கையாக வெளியேறும் எதிலீன் வாயு, காய்களைப் பழுக்கச் செய்யும்' எனச் சொன்னவள், சாப்பாட்டு மேசையில் அப்பிளுக்கு மேல் என்னுடைய மனைவி அழகாக அடுக்கி வைத்திருந்த வாழைப் பழங்களை எடுத்து வேறொரு பழக் கூடையில் வைத்தாள்.

'அப்பிளில் இருந்து வெளியேறும் எதிலீன்வாயு, வாழைப் பழத்தை மேலும் கனியச் செய்யும், அப்படித்தானே சாரதா?' எனக்கேட்டு தன்னுடைய விஞ்ஞான அறிவைப் புதுப்பித்தாள் என்னுடைய மனைவி.

இராசதுரையின் தொழில் நுட்பத்துக்கும் இதுவே அடிப்படை. ஆனால் சற்று நவீனமானது!

வியாபார நடை முறைகளை இராசதுரை கவனித்துக்கொள்ள தொழில் நுட்ப விஷயங்களை சாரதா பார்த்துக் கொண்டாள். வாழைக் குலைகளை இராசதுரை குவீன்ஸ்லாந்து விவசாயிகளிடம் மொத்தமாக வாங்குவான். சீப்புகளாக அவற்றை வெட்டி, பூஞ்சண எதிர்ப்புத் திரவத்தில் கழுவியபின் குளிரூட்டிய கிட்டங்கிகளில் சேமிக்கப்படும். சந்தைப்படுத்த தேவையான வாழைப் பழங்களை கணக்கிட்டு, பாரிய 'சேம்பரில்' அடைத்து, குறிக்கப்பட்ட அளவு எதிலீன் புகையை செலுத்த வேண்டியது மிக முக்கியம். இது கத்தி விளிம்பில் நடப்பதைப் போன்றது. அதிகளவு எதிலீன், பழங்களை விரைவில் பழுக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தும். கணணி மயப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் ஒருமுறை சிக்கல் ஏற்படவே, சாரதா எனக்கு மின்அஞ்சல் அனுப்பியிருந்தாள்.

அடுத்த நாள் காலை அங்கு சென்றபோது, எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. எதிலீன் கட்டுப்பாட்டு அறையில், பூங்கொடிக்கு தொழில் நுட்பங்களை விளக்கிக்கொண்டு நின்றாள் சாரதா. சகல சௌபாக்கியங்களுடன் வானத்திலிருந்து வந்த  பூங்கொடியின் கணவன், அங்குள்ள ரெக்னீசியன் (Technician) இருக்கையிலே இருந்து விட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார். என்னை அங்கு எதிர்பார்க்காத பூங்கொடி நெளிவது கண்ணாடி யன்னலூடாகத் தெரிந்தது. எதையுமே காணத பாவனையில் நான் கணணி அறைக்குள் புகுந்து, எதிலீன் அளவுகளைச் கணித்துத் தரவேற்றியபின் இராசதுரையின் அலுவலக அறைக்கு வந்தேன்.

தமிழ்க் கடையில் வாங்கிய கடலை வடையுடனும் எனக்கு விருப்பமான ஏலக்காய் போட்ட தேத்தண்ணியுடனும் இராசதுரை காத்திருந்தான். என்னை வரவேற்று தேத்தண்ணிக் கோப்பையை என்முன்னால் நகர்த்தியவன் 'உன்ரை மனதிலை நீ என்ன நினைக்கிறாய்...' என ஆரம்பித்தான்.

'நீ எனக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை இராசதுரை. மனசார உன்ரை பெருந்தன்மை ஆருக்கும் வராது. ஆனால் எனக்கு விளங்காதது, பூங்கொடியின் புருஷனை நீ ரெக்னீசியன் கதிரையிலை இருக்க வைச்சிருக்கிறதுதான். அந்தாள் மரக் கட்டைபோல முகட்டைப் பார்த்துக்கொண்டிருக்குது...'

சிறிது நேரம் இராசதுரை எதுவும் பேசவில்லை. அவனுடைய மனம் கடந்த கால நிகழ்ச்சிகளை அசைபோட்டிருக்க வேண்டும். பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு வார்த்தைகளை கவனமாகத் தெரிந்தெடுத்துப் பேசினான்.

'இதிலை இரண்டு விஷயங்களிருக்கு. பூங்கொடி-புருஷன்ரை தொழில் விசா ஒரு மாசத்திலை முடியப் போகுது. அதுக்கிடையிலை விசாவைப் புதுப்பிக்க அவருக்கு ஒரு வேலை வேணும். அந்தாளுக்கு ஊரிலையே ஒருவகை மனச்சிதைவு நோய் இருந்திருக்க வேண்டும். நோய் முற்றிய நிலையிலை, அவர் இங்கை மட்டுமல்ல, இலங்கையிலும் வேலை எடுக்க முடியாது...'

'அதாலை, நீ சம்பளப் பட்டியல்லை புருஷனை சேர்த்திருக்கிறாய், வேலை செய்யிறது பூங்கொடி...! ஆனால், பூங்கொடி விஷயத்திலை கனகம்மாமி, இப்பிடிக் கூழ்ப் பானைக்குள் விழுந்திருக்கிறதைத்தான் என்னாலை நம்பேலாமல் இருக்கு...'

அப்போது தொலைபேசியில் வியாபார ஓடர் வரவே, அதை அலுவலக வியாபாரப் பிரிவுக்கு திசை திருப்பிய இராசதுரை, கதையைத் தொடர்ந்தான். 

'சிலசமயம் நீயும் இந்த விசயத்திலை என்னை வித்தியாசமாக நினைக்கக் கூடும். பூங்கொடியையும் புருஷனையும் வேலைக்குச் சேர்த்தது, சாரதாவும் நானும் சேர்ந்து எடுத்த முடிவுதான். இங்கை எங்கடை ஊர்ச்சனங்கள் நிறையப்பேர் இருக்கிறது, உனக்குத் தெரியும். பூங்கொடி தனியனாக என்னட்டை வேலை செய்தால் அவையின்ரை வாய் சும்மா இருக்குமெண்டு நினைக்கிறியோ? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவினம். இது எனக்குத் தேவையோ...?'    

'சரவணை அம்மான், கனகம் மாமி, பூங்கொடி, நீ, நான், வெண்டிக்காய், எதிலீன்வாயு என, காலம் எப்பிடி முடிச்சுப் போட்டிருக்கு பாத்தியோ, என்றேன் நான் பூடகமாக.

'பொடிவைச்சுப் பேசாமல் கொஞ்சம் விளக்கமாய் சொல்லு' என்றான், நான் சொல்லப் போவதைக் கேட்கும் ஆவலில்.

'சரவணை அம்மான் சாகிறதுக்கு முதல் நடந்த வெண்டிக்காய்ச் சண்டை உனக்கு ஞாபகமிருக்கும். சாவகச்சேரிச் சந்தையிலை அவர் நுனி முறிச்சுப்பாத்து, பிஞ்சாகத்தான் வெண்டிக்காய் வாங்கினவர். சின்னாச்சிக் கிழவி விக்காமல் கிடந்த எலுமிச்சங்காய்களையும் வெண்டிக் காயோடை சேர்த்து சாக்குப் பைக்குள்ள தள்ளிவிட, சரவணை அம்மான் கள்ளுக் கொட்டில்லை சமா வைத்திருக்கிறார். வெய்யில்சூட்டுக்கு எலுமிச்சங்காயிலிருந்து எதிலீன் வெளியேற, பிஞ்சு வெண்டிக்காய் முத்திப்போச்சு' என விளக்கம் சொன்ன என்னை மறித்து, 'இதாலை வீணாய் சரவணை அம்மான்ரை உயிரும் போச்சுது...' எனச் சொல்லி நிறுத்தினான் இராசதுரை.

பலதும் பத்துமாக நனவிடை தோய்ந்தபின், இராசதுரையிடமிருந்து விடைபெற்றேன். வீடு நோக்கி காரைச் செலுத்திய எனக்கு, கனகம் மாமிபற்றிய நினைவுகள் மனதிலே குதியாட்டமிட்டன. மகளுடன் இருக்கும் அவருக்கு ஊரிலுள்ள எல்லா வியாதிகளும் இருப்பதாகக் கேள்வி. இப்போது அவர் வெளியிலெங்கும் போவதில்லையாம். எனக்கு கனகம் மாமியை ஒருமுறை பார்க்கவேணும் போல, மனதிலே அரிப்பெடுத்தது. என்னதான் இருந்தாலும், இந்த விவரணத்தின் மூலம் அவரல்லவா!

(ஞானம், டிசம்பர் 2015) ​

 

No comments:

Post a Comment

.