Saturday 23 January 2021

 பாலன் பிறக்கிறான்

ஆசி கந்தராஜா

றட்சி. கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலே மழை பொய்த்து விட்டது. இதுவரை காணாத வறட்சி எனப் பேசிக் கொண்டார்கள்.

கிளிமஞ்சாரோ (Kilimanjaro) ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை. அதன் உச்சியிலுள்ள உறைபனிகள் என்றும் உருகுவதில்லை. இருந்தாலும் என்னஅதன் அடிவாரத்திலே இப்பொழுது வறட்சி. பசுமை இழந்து குச்சிகளைத் தாங்கிய மரங்கள். வற்றிய நீரோடை. மரங்கள் சிலவற்றின் உச்சிகளுக்குதமது கழுத்தை நீட்டி ஒட்டகச்சிவிங்கிகள் உணவு தேடின. மெலிந்தன வலியனவுக்குப் பணியும் நியதி. பிணம் தின்னும் கழுகுகள் மட்டும் வயிறாற உண்ட களைப்பில் உயிர்ப்பிழந்த மரக்கொம்புகளில் இளைப்பாறின. மலை அடிவாரத்தின் தென்மேற்குத் திசையில் குரவைச் சத்தங்களும் மேளச்சத்தங்களும் ஒலித்தன. அங்கு வாழும் சுதேசிகள் ஒன்றாக இணைந்து வேள்வி நடத்துகிறார்கள். மழை பொய்த்ததால் வனமும் மக்கள் வயிறும் வறண்டு விட்டன. அந்த வறட்சியிலே ‘டிரைபல்’ (Tribal) முறுகல்களும் விரோதங்களும் கருகினபோலும். அனைவருக்கும் இப்போது வேண்டியது மழையே! அதற்காகஅவர்கள் கலாசார மரபு, வேள்வியும் கூட்டுவழிபாடும்!

வேள்வி தொடங்கியிருக்க வேண்டும். வேள்வியில் பலியிடும் ஆடுகளின் அலறல் கொட்டுமேளச் சத்தங்களை மேவி எதிரொலித்தது. எலும்பும் தோலுமாக வயிறு ஒட்டிய நிலையில் உள்ள ஆடுகள்மேலதிகமாக வேள்வி நடக்கும் இடத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.

ஹகங்கி இன்று வேள்விக்குப் போகவில்லை. அவளால் இயலவில்லை. இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவள் சிறுநீர் கழிக்க வேண்டும். பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்த உபத்திரவம் அவளைப் பாடாய் படுத்துகிறது. இன்று மதியத்திலிருந்து அடிவயிறும் விட்டுவிட்டு வலிக்கிறது. இந்த வலியின் அர்த்தம் அவளுக்குத் தெரியும். ஒருமுறையல்ல மூன்று முறை ஆண் குழந்தைகளைப் பிரசவித்தவள். ஒன்றுமே பிழைக்கவில்லை. இந்தக் குழந்தையாவது தனக்குத் தங்க வேண்டுமென்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.

சென்றவாரம் தான் கணவனின் இனத்தவர்கள் காட்டுக் கிராமத்திலிருந்துகிளிமஞ்சாரோ மலையையொட்டிஇவள் வாழும் விவசாய பூமிக்கு வந்திருந்தார்கள். மழை இல்லை. வன வருமானமும் வேட்டையும் படுத்துவிட்டது. மழை வரும் வரைஅல்லது ஏதோ ஒரு வருமானம் கிடைக்கும் வரை இங்கே தான் இருப்பதாக உத்தேசம் என்று கூறி உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை ‘வெளியே போ’ என்று சொல்லவோ அல்லது ‘எம்மிடம் பணமில்லை’ என்று கூறவோ முடியாது. குல ஆசாரங்களைப் பேணுதல் அவர்களின் இனக் கடமை. இதனால் அவர்கள் அங்கு இருக்கும் வரை சாப்பாடு போட்டேயாக வேண்டும். தவறினால், அந்த ‘டிரைப்’ மக்கள் ஹகங்கியையும் அவள் கணவனையும் தங்கள் குலத்திருந்து விலக்கி விடுவார்கள்.

எதிர்பாராத இந்த செலவுகளைச் சமாளிப்பதற்காக அவள் கணவன் எல்லைதாண்டி நைல் நதிக் கரையில் வாழும் தன் பால்ய நண்பனைப் பார்க்கச் சென்றிருக்கிறான். வாரம் ஒன்றாகியும் அவனிடமிருந்து தகவல்கள் வராதது ஹகங்கிக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. அண்டி வாழவந்த கணவனின் ‘டிரைபல்’ இனத்தவர்களும் வேள்விக்கு சென்று விட்டார்கள்.

ஹகங்கிக்கு அடிவயிற்றில் மீண்டும் நோவெடுத்தது. பன்னீர்குடம் உடைந்து விட்டது. பிரசவத்துக்கு வந்திருந்த எலிசபெத் சுறுசுறுப்படைந்தாள். இவள் அங்குள்ள மாதா கோவிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி. அந்த கோவிலில்தான் ஹகங்கியும் தோட்ட வேலை செய்கிறாள். அவளும் இவளும் ஒத்த வயதுத் தோழிகள். நட்பின் இறுக்கம் எலிசபெத்தை இங்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளது.

மின்னலென ஒரு வலி அடி வயிற்றில் இருந்து நெஞ்சுவரை பாயவேஹகங்கி தம்பிடித்து முக்கினாள்.

அது பிரசவ முக்கல்…

அழகான குழந்தை ஒன்று ஜனனமாகியது. ‘ஹகங்கிநீ அதிர்ஷ்டக்காரி. பெண்குழந்தை….ராணியாட்டம் உனக்கு சீர்வரிசை கொண்டுவரப் போகிறாள். எத்தனைபேர் அவளுக்கு ‘மணப்பெண் கூலி’ கொடுக்க போட்டி போடுகிறார்கள் என்று பாரேன்’ என்று உற்சாக வார்த்தைகள் கூறிக்கொண்டே தொப்புள் கொடியை கயிறால் இறுகக்கட்டி நறுக்கத் தயாரானாள்.

ஹகங்கி மூச்சைப்பிடித்து மீண்டும் முக்கினாள். முன்னைய தொப்புள் கொடியை நசித்தவாறு இன்னொரு சோடி பிஞ்சுக்கால்கள் உலகத்தை எட்டிப் பார்த்தன. பிரசவம் பார்த்த எலிசபெத் அரண்டு விட்டாள். இரட்டைக்குழந்தைஅதுவும் காலால் பிறக்கிறது.

ஆண்டவரே…இந்த நேரத்திலா….?’ எலிசபெத் சிலுவை குறியிட்டாள்.

ஹகங்கி கண்களை மூடி அரை மயக்கத்தில் படுத்திருந்தாள். முக்குவதற்குக்கூட அவளிடம் பலமில்லை. ஆட்டமும் பாட்டமும் வேள்வியும் முடிந்து உறவுகள் வீட்டுக்கு வருவதற்கு முன்பு ஏதாவது செய்ய வேண்டும். கன்னியாஸ்திரிகளுக்கான மேலங்கியை இழுத்துச் செருகியவாறு எலிசபெத் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டாள். காட்டாமணக்கெண்ணையை கைகளிலே தடவி பிஞ்சுக் கால்களை இறுகப்பற்றி குழந்தையை வெளியே இழுத்தாள். இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமானவையாகத் தோன்றின.

இவை குலஆசாரங்களுக்குத் தப்புமா…?

வேள்வி முடிந்து இனத்தவர்கள் இப்போது வந்துவிட்டால்…?

அசுரகெதியில் எலிசபெத் செயற்படத் துவங்கினாள். வெள்ளெருக்கம் சருகுகளைக் குவித்து நெருப்பிட்டு மூட்டினாள். கருகிய எருக்கம்பாலின் வாசனை ஹகங்கியை விழிப்படையச் செய்தது. தான் இரு குழந்தைகளைப் பிரசவித்திருப்பதை பூரணமாக உணரத் தொடங்கினாள். பலம் முழுவதையும் திரட்டிஎழுந்து உட்கார்ந்தாள். குழந்தைகளைப் பார்த்ததும் அழுகை பீறிட்டது.

இரட்டைக் குழந்தைகள் தான்…பயப்படாதே! இதற்கு ஏதாவது வழி செய்வோம் என்று எலிசபெத் ஆறுதல் கூறினாள். ஆறுதலான வார்த்தைகளையும் மீறி அழுகை தொடர்ந்தது. அவளுடைய அழுகையின் காரணத்தை எலிசபெத் பூரணமாக அறிவாள்.

பிறந்த குழந்தைகளுக்கு என்ன நடக்குமென்பது ஹகங்கிக்கு நன்கு தெரியும். அவளுடைய கணவனின் ‘டிரைப்’பில் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது பற்றி விநோதமான கருத்திருக்கிறது. அது அபசகுணம் என்று கருதுகிறார்கள். மழை பொய்த்து பஞ்சம் பரவியுள்ள இந்தக் காலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ‘சாத்தான்களே’ எனச் சொல்லி கொன்று விடுவார்கள்.

மேளச்சத்தம் அடங்கியது. வேள்வி முடிந்து விட்டதா…ஹகங்கியின் கண்ணீரும் வறண்டுவிட்டது. திக்பிரமை பிடித்தவள் போல மூலையில் குந்தி இருந்தாள். உறவுகளின் உரையாடல் சத்தம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அவர்கள் வருகிறார்கள்… என் குழந்தைகளைக் காப்பாற்று’ என ஹகங்கி எலிசபெத்தை யாசித்தாள். கழுத்தில் தொங்கிய சிலுவையை கண்களில் ஒற்றி ‘ஆண்டவரே இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றும்’ என கண்களை மூடி எலிசபெத் மண்டியிட்டு பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

உறவுகளின் சத்தம் முற்றத்தில் மிக அருகில் கேட்டது. தாமதிக்க இனி நேரமில்லை. தனது தீர்மானத்தினைச் செயற்படுத்துவதில் எலிசபெத் தீவிரமானாள். ஹகங்கியின் தொடைகளிலே வழிந்துகிடந்த இரத்தத்தையும் பிரசவ திரவங்களையும் தன் தொடைகளிலும் அங்கியிலும் பூசிக் கொண்டாள்.

ஆண்குழந்தையை தானே பிரசவித்த பாவனையில் ஒன்றி…,

கன்னிமரியாள் அல்லஎலிசபெத்தும் தன்னைத் தாயாக்கி படுத்துக்கிடந்தாள்.

(திசைகள்ஏப்பிரல் 2003)

 


2 comments:

  1. வழமை போல் தங்களுக்கே உரித்தான முத்திரை பதிந்த கதை.போகும் தேசத்தின் சுற்றுலா தலங்களையும் அவை பற்றி கூறப்படும் விபரங்களையுமே எல்லோரும் பார்த்தும் கேட்டும் வருவார்கள். விதிவிலக்காக நீங்கள் இருப்பதாலேயே அரிய கதைகள் எமக்கு கிடைக்கின்றன. மனமார்ந்த பாராட்டுகள்

    ReplyDelete

.