Saturday 23 January 2021

 கோபுர தரிசனம்

ஆசி கந்தராஜா

ந்தக் குடியிருப்புக்கு கடிகாரம் தேவையில்லை. அதில் வாழ்பவர்கள் கடிகாரத்தின் முள்ளைப் போலவே இயங்கினார்கள். ‘அப்பாட்மென்ற்’ கதவு அடித்து சாத்தப்படும் சத்தத்தை தொடர்ந்துமாடிப்படிகளில் ‘பூட்ஸ்’ சத்தம் கேட்டால் இறைச்சிக்கடை யூசுப் காலை ஐந்து மணிக்கு கடைக்குப் போகிறான் என்று அர்த்தம். ஆனால் நாலுமணிக்கு வேலைக்கு செல்லும் குப்பை அள்ளும் லொறிச்சாரதி மத்தியாஸ்பூனை போலத்தான் வெளியேறுவார். மற்றவர்களை தூக்கமெழச் செய்யத் தான் காரணமாக இருக்கக்கூடாது என்கிற அவதானம் அவருக்கு. யூசுப்பிற்கு பிறகு அரக்கப் பரக்க புறப்படுவார் ஹெலன். அவருக்கு விமானநிலைய சுங்கப் பிரிவில் வேலை. இரண்டு ரயில்கள் எடுத்துநேரத்துக்கு விமான நிலையம் செல்ல வேண்டும் என்கிற அக்கறையில் அவர் ஏனையோர் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. ‘சென்ரலிங்’ சியாமளா படியிறங்கி வந்தால்சரியாக ஏழுமணி என்று அர்த்தம். அதற்குப் பிறகு அப்பாட்மென்ற் முழுவதுமே விழித்துக்கொள்ளும். எட்டுமணிக்கு பெரும்சத்தத்துடன் பள்ளிக்குச் செல்லும் பல் இனக்குழந்தைகள் புறப்படுவார்கள். பல மொழிகள்பலவகைக் குரல்கள். இனம்புரியாத குதூகலச் சத்தங்களின் ஒலிச் சேர்க்கை!

இந்தக் குடியிருப்பின் பின்பக்க வாசலால் இரண்டாம் மாடிக்குச் சென்றால்நடுவில் உள்ள ஆறாம் இலக்க ‘அப்பாட் மென்ரில்’தான் பார்வதி அம்மாள் குடியிருக்கிறார். ‘கவுன்சில்’ கட்டிக் கொடுத்த இந்த குடியிருப்புக்கு அவர் குடிவந்து ஐந்து வருடமாகிறது. இந்த குடியிருப்பில் வாழும் பெரும்பாலானோரைப் பொறுத்தமட்டில்பார்வதி அம்மாள் தனியாக வாழும் ஒரு கிழவி. ஒரு காலத்திலே ‘ஓகோ’ என கொடிகட்டிப் பறந்த டாக்டர் நடராஜசிவத்தின் மனைவியேதானென்பதை அவர் இந்தக் குடியிருப்பிலே பறைசாற்றிக் கொண்டதில்லை.

இறைச்சிக்கடை யூசுப் கடைக்குப் போவதற்கு முன்பேபார்வதிஅம்மாள் எழுந்து விடுவார். இவ்வாறு அதிகாலையில் துயில் எழுவது தொட்டில் பழக்கம். கணவனுடன் அவுஸ்ரேலியாவில் வாழத் துவங்கிய காலம் துவக்கம் இதே பழக்கம் தொடர்கிறது. வந்த புதிதில் கணவனின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது தொடக்கம்கணவன் தனது ‘கிளினிக்’கிற்கு போவதற்கான ஆயத்தங்கள் செய்வதுவரை சகலகாரியங்களையும் கச்சிதமாக முடிப்பதற்கு இந்த விடியற்காலை துயில் எழும் பழக்கம் மிகவும் உதவியது.

‘…ம்அது ஒரு காலம்பம்பரம்போல் சுழன்று வாழ்ந்த காலம்…! இப்பொழுது மனசு நினைத்தாலும்உடல் ஒத்துழைக்க வேண்டுமே…?’

 

நேற்று இரவு முழுவதும் பார்வதி அம்மாளுக்கு நித்திரையில்லை. வயோதிபம் வந்துவிட்டது. அதனுடன் இணைந்த உடல் உபாதைகளும் உபத்திரவங்களும் மெல்லத் தலைகாட்டத் துவங்கிவிட்டன. ஆனாலும் அதிகாலையில் எழும் பழக்கம் தொடர்கிறது. இன்று வழமைக்கு மாறாககாலை ஐந்து மணியாகியும் பார்வதி அம்மாளால் எழுந்திருக்க முடியவில்லை.

உடம்பெல்லாம் முறிச்சுப் போட்டது போலை கிடக்குது. பனடீன் குளிகைகளை எத்தனை தரமெண்டு போடுறதுநெடுகப் போடுறதாலை ‘டோஸ்’ கூடக் கேட்குதோஇன்னும் ஒருக்கா பனடீனைப் போட்டுப் பார்ப்பம்’ அலைபாய்ந்த மனசை நிதானப்படுத்திஇன்னும் இரண்டு பனடீன் குளிகைகளைப் போடுவது என்கிற தீர்மானத்துக்கு வருகிறார். வலதுகையை மெத்தையில் ஊன்றிஇடது கையால் சட்டத்தை பிடித்தவாறு மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.

முதுகுத் தண்டின் நாரிப்பகுதியில் ஏற்பட்டவலி ‘சுள்’ என்று கழுத்துவரை பாய்ந்தது. வலியையும் பொருட் படுத்தாது பக்கவாட்டுக்கு ஒருக்களித்துக் குனிந்துகட்டிலின்கீழ் வழமையாக வைத்திருக்கும் தண்ணீர்க் கூசாவை எடுத்தார். அதிலே தண்ணீர் இல்லை. நடுஇரவில் விழுங்கிய குளிகை களுடன் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தது அப்பொழுது நினைவுக்கு வந்தது. சமையலறைக்கு போய் தண்ணீர் எடுக்க உடல் பஞ்சிப் பட்டது. பனடீன் குளிசைகளை அப்படியே வாயில் போட்டுக் கடித்து விழுங்கினார். வாய் கசத்தது. கசப்பை போக்க தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ‘போட்டது போட்டாச்சு. இனித்தான் தண்ணி தேவையோ?’ எனச் சமாதானம் அடைந்துமீண்டும் படுக்கையில் சாய்ந்து கொண்டார்.

கடந்த பன்னிரண்டு மணித்தியாலங்களில் பத்து பனடீன் குளிசைகளை விழுங்கியுள்ள ஒரு கணக்கு நினைவில் குறுக்கிட்டது. ‘பனடீன் குளிசைகளில் கலந்துள்ள ‘கோடியின்’ வலியைக் குறைக்கிறதாம். அடிக்கடி இவர் சொல்லுவர். மருந்தெண்டாப் போலை அளவுக்கு மிஞ்சிப் போடக் கூடாது. மருந்தை மருந்தாகப் பாவிக்க வேணும் எண்டு இவர் வலு கண்டிப்பு. ‘கோடி’யினும் ஒருவகை போதைப் பொருள்தான் எண்டும் அதுக்கு அடிமையானால் பிறகு அதையே கேட்டுக் கொண்டிருக்குமெண்டும் சொல்லுறவர். இப்ப நான் கோடி யினுக்கு அடிமையாயிட்டன் போல…’

இந்த எண்ணங்கள் ஒரு கணம் பார்வதி அம்மாளைச் சங்கடப் படுத்தியது.

அடிமையானால்தான் என்ன…பிள்ளையோகுட்டியோ…ஆருக்கு பிரச்சனை வரப்போகுதுஅவர் உயிரோடை இருந்திருந்தால் ஊசிபோட்டிருப்பார். ஒரேயொரு ஊசியோடை நாரிநோ பறந்திருக்கும். அவருடைய கைராசி அப்படி. இந்தக் கோதாரி விழுந்த குளிசைகளை விழுங்க விழுங்க வயிறெல்லாம் பச்சைப்புண்ணாய் நோகுது. போடாட்டியும் இண்டைக்கு என்னாலை எழும்பி நடக்கேலாது. காலமை போட்ட குளிசையோடை ‘நோ’ கொஞ்சம் குறைஞ்ச மாதிரித்தான் இருக்கு. தண்ணி இல்லாமல் மெண்டி விழுங்கினதும் நல்லதாய் போச்சு. உடம்பிலை கெதியாய் சுவறி யிட்டுது போல…இனியும் சாஞ்சு கிடந்தால் ஒரு வேலையும் நடக்காது…’

கட்டிலின் அருகே இருந்த இருபத்திநாலு மணி நேர தமிழ் றேடியோவைப் போட்டார். பக்திப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இடையிடையே வானொலி அறிவிப்பாளர்முருகன் கோவில் இன்று எத்தனை மணிக்கு கொடியேற்றம் என்பதையும்தொடரும் பத்து திருவிழாக்கள் பற்றியும்விபரமாக தகவல்களை கூறிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு குளிசைகளை விழுங்கி எழும்பியிருக்கிறது வேறை எதுக்குமுருகன் கோவில் கொடியேற்றத்தைப் போய்ப் பார்க்கத்தானேஅந்த உறவு விட்டுப் போகுமே…?’ என்று முணுமுணுத்தபடி கட்டிலில் இருந்து இறங்கி, ‘பாத்றூம்’ பக்கம் மெதுவாக நடந்தார். இனி எல்லா அலுவல்களும் கிரமப்படி நடக்கும். மெசின் ஸ்ராட் எடுத்தால் பிறகு எல்லாம் ஒழுங்காக நடப்பது போலத் தான். இந்த இயந்திர இயக்கத்திலே ‘முருகன் உறவு’ பார்வதி அம்மாளுக்கு மனித வாழ்வை அருளிக் கொண்டிருக்கிறது.

முருகன் கோவில் இல்லாட்டில் எனக்கு விசர் பிடிச்சிருக்கும். முந்தியெல்லாம் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வர ஒரு பகல் பொழுது தேவை. அப்ப ஹெலன்ஸ்பேர்க் கோயிலுக்கு காரிலை போய்வர நூற்றம்பது கட்டைக்கு கிட்டவரும். என்னவாய் இருந்தாலும் இவர் மாதம் இரண்டு தடவையாவது அங்கை இருக்கிற வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போறவர். கிளினிக்கை மூட வேணும். இதையெல்லாம் அவர் வலு ஒழுங்காய் செய்து போடுவார். ஆனால் அங்கை நடக்கிற பூசை முறைகள் யாழ்ப்பாணத்து முறைகளுக்கு ஒத்துப்போறதில்லை எண்டுதான் கவலை. இதாலைதான் இவரும் இன்னும் கொஞ்சப்பேரும் கூடிக் கதைச்சு எங்கடை முறைப்படி நாங்கள் கும்பிட கிட்டத்திலை ஒரு கோவில் கட்டவேணும் எண்டு ஒரு கொம் மிற்றி துவங்கினவை…’

தமிழ் றேடியோவில் ‘தமிழுக்கு மறுபெயர் முருகன்’ என்ற சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்திப்பாடல் ஒபரப்பாகிக் கொண்டிருந்தது.

பெரிய டொக்டராய் இருந்தாப் போலை என்னஅவருக்குள்ளை எப்பவும் தமிழ் வாழ்ந்து கொண்டிருந்தது. அதை அவர் ஒரு நாளும் மறைச்சு வாழ்ந்ததும் இல்லை. தமிழைப் பற்றிப் பேசினாலும் சமய விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சாப்பாடு கூடத் தேவையில்லை. பேசிக்கொண்டே இருப்பர். முருகேசர் வந்தால் போதும். கிளினிக்கை கூட மறந்து போவார். எங்கடை கலாசாரம்கந்தபுராண கலாசாரம்தான் எண்டு முருகேசர் அடிக்கடி சொல்லுவார். இது விஷயங்களிலை அவர் தமிழ் பண்டிதர்போலத்தான் பேசுவர். யாழ்ப்பாண ஊர்முறைப்படி கோயில் திருவிழாக்கள் நடக்க வேணும் எண்டு விடாப்பிடியாய் சொன்னவர். மனதுக்கு நிறைவாய் இருக்குது…ஊரிலை இருந்து மேளம்ஊர் முறைப்படி பூசை அருச்சனைகள்… என்ன இருந்தாலும் சிட்னி முருகன் மனசுக்கு ஆறுதல் தாறவன் தான்….’

கோவில் வீதியிலே பக்தர்களினாலே இழுக்க ஓடும் தேர் போல பார்வதி அம்மாளின் மனசிலே வலம் வந்த கோவில் பற்றிய சிந்தனைகளைரெலிபோன்மணி அலறிக் குழப்பியது. மறுமுனையில் மரகதம் மாமி என அழைக்கப்படும் மரகதலஷ்மி பேசினார். அவரின் கணவன் நமசிவாயகம் டொக்டர் நடராஜசிவத்துடன் ஆரம்பகால கோவில் கொம்மிற்றியில் இருந்தவர்.

என்ன மரகதம்கொடியேற்றத்துக்கு ஆயத்தம் போலை?’ வஞ்சகமில்லாமல் கேட்ட இந்தக் கேள்வியால்மரகதம் மாமி எரிச்சலடைந்திருக்க வேணும். கொதிக்கும் நல்லெண்ணை போல் பொரிந்து தள்ளினார்.

நாங்கள் கோவில்பக்கம் கால் மிதிக்கிறதில்லை எண்டு எப்பவோ தீர்மானிச்சுப் போட்டம். குருவி சேர்த்த மாதிரி ஒவ்வொரு டொலராய் பொறுக்கிச் சேர்த்து கோயில் கட்டி எழுப்பினது. கறையான்புத்துக்கை பாம்பு நுழைஞ்சமாதிரி இப்ப கனபேர் தலைவர் காரியதரிசி எண்டு முளைச்சிட்டினம். இவரைத்தான் வீடுஉன்ரை மனிசன் உதுக்குள்ளை எவ்வளவு சொந்தக் காசை கொட்டி யிருக்கும்..’ மரகதம் மாமியின் புறுபுறுப்புகளை தொடர்ந்து கேட்கும் மனநிலையில் பார்வதி அம்மாள் இல்லை.

குடும்பம்சமூகம்அவைசார்ந்த அந்தஸ்துஇவையெல்லாவற்றையும் பார்வதி அம்மாள் இப்போது நினைத்துப் பார்ப்பதில்லை. அதற்குரிய தேவையும் அவருக்கு இப்போது இல்லை. உறவுகள் பிறப்பாலும் விதியாலும் ஏற்படும் பந்தங்கள் என்ற நினைவுடனேயே பார்வதி அம்மாள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பால் பொங்குது…’ என்று ஒரு சாட்டைச் சொல்லி ரெபோன் உரையாடலை துண்டித்துக் கொண்டார்.

கோயில் காரியங்களை அசுக்கிடாமல் செய்யவேணும். முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரியும். நரம்பில்லாத மனுஷ நாக்குகள்புகழவேணும் எண்டதுக்காகக் கோயில் காரியம் செய்யிறதில்லை’ என்று முருகேசர் அடிக்கடி சொல்லுவதும்பார்வதி அம்மாளின் நினைவில் குறுக்கிட்டது.

பார்வதி அம்மாள் அவுஸ்ரேலியாவுக்கு வந்தபோது இருபது வயது. யாழ்ப்பாணக் கிராமமொன்றில் சராசரி கிராமத்துக் கனவுகளுடன் வாழ்ந்தவரை நாற்பது வயதை தாண்டிய டொக்டர் நடராஜசிவம் சிட்னிக்கு அழைத்து வந்தார். இரண்டாந்தாரமாகத்தான்.

இரண்டாம் தாரம் எண்டு யோசிக்கிறியளோமுருகனுக்கு ஆர் சிறப்பான மனுஷி. இரண்டாம் தாரமாக வந்த வள்ளிதானே’ என்று ஊரிலுள்ள தரகர் தம்பையா போட்ட போடிலை பார்வதியின் தகப்பன் எதுவும் பேசவில்லை. கயாணம் முடிந்து விட்டது. குஞ்சும் குருமனுமாக மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டு முதல் மனைவி இறந்து போககுழந்தைகளை வளர்த்தெடுக்க டொக்டர் நடராஜசிவத்துக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. பிள்ளைகளை பராமரிக்க தன் தாயாரை கூட்டிவரும் யோசனையுடன் தான் ஊருக்கு போனார். தாயாரின் உடல்நிலை காரணமாக கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதரகத்தில் விசா பிரச்சனை தலை தூக்கவே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். இந்தக் கட்டத்தில்தான்கலியாணத் தரகர் தம்பையா ரூபத்தில் தோன்றிய விதிபார்வதி அம்மாளுடன் முடிச்சைப் போட்டது.

அளவெட்டி பத்மநாதனும் சாவகச்சேரி பஞ்சாபி கேசனின் மகன் நாகேந்திரமும் கோவிலில் நாகசுரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வானொலி மூலம் அஞ்சல் செய்யப்படுகிறது. கொடி மரப்பூசை துவங்க முன்னர்பத்து நாளும் வழமையாக நடைபெறும் மேளச்சமா அது.

இப்ப வெளிக்கிட்டால்தான் பரமற்றா ஸ்ரேசனிலை இறங்கிபஸ் எடுத்து கோயிலடியிலை இறங்கலாம். மேல் அப்பாட்மென்றிலை இருக்கிற ‘சென்ரலிங்’ சியாமளா இண்டைக்கு லீவு போலை. காலமை வேலைக்கு போன சாங்கம் இல்லை. அவள் எந்தநேரம் கோயிலுக்கு போறாளாளோ ஆருக்குத் தெரியும். ஏன் வீணாய் அவையிவையிட்டை கடமைப்படுவான்…’ என்று நினைத்தவாறே பாத்றூமில் தோய்ந்து புனிதமாகிகோவில் செல்வதற்கு தயாரானார்.

பார்வதி அம்மாள் இன்று விரதம். பங்குனியில் சிட்னி முருகன் கோவில் துவங்கினால் பத்து நாளும் ஒரு நேரச் சாப்பாடுதான். ஊரில் உள்ள பிள்ளையார் கோவில்பிறகு நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில்நல்லூர்செல்லச் சந்நிதி என்று புரட்டாதி மாதம் தான் அவர் விரதத்தை முடித்துக் கொள்வார். விரதங்கள் இருப்பது உடலை வருத்தி உடல் இச்சைகளை வெல்லும் போராட்டம். அது தெய்வபக்தியுடன் சம்பந்தப் பட்டதற்கப்பால்விரதங்கள் அவருடைய தற்போதைய பொருளாதார வசதிகளுக்கு பொருந்துவதாகவும் அமையலாயிற்று. ‘போன வருஷம் பத்துநாளும் கோயில்லை மத்தியானம் அன்னதான் குடுத்தவையெல்லே. இந்த வருஷமும் கட்டாயம் குடுப்பினம். அன்னதானமும் ஒருவகை பூசைதான். அதை நாங்கள் மகேஸ்வர பூசை என்டுதானே சொல்லுறனாங்கள். கடவுளே எண்டு கோயிலுக்கு கொஞ்ச நஞ்சவருமானமேசும்மா சொல்லப்படாதுஅவங்களும் அதை சரியான முறையிலை திட்டம் போட்டுத்தான் செலவு செய்யிறாங்கள். நொட்டை சொல்லப் புறப்பட்டால் எதிலையும் குறை கண்டுபிடிக்கலாம். எங்கடை கண்ணுக்கு முன்னாலை கோவில் வளர்றதை பார்க்கிறம் தானே?

கார்பாக்’ எண்டும் மண்டபம் எண்டும் கட்டி முடிஞ்சுகொஞ்சம் கொஞ்சமாய் பக்கத்திலை இருக்கிற காணிளையுமெல்லே வாங்கிறாங்கள். குறுக்கு றோட்டுமட்டும் காணிவாங்கிப் போட்டால் பிறகு அதாலை ஆக்கள் வந்து போகலாம். இப்ப வாசல் இருக்கிற பரமற்றா றோட்டாலை கார் லொறி வாகன ஓட்டம் வலு மோசம்… ‘

முருகாஎல்லாம் நீ வழி நடத்தி வைக்கிறாய்…’

நல்லதையே செய்து நல்லதையே நினைத்துப் பழக்கப் பட்டவர்பார்வதி அம்மாள். இருப்பினும் யாருமற்ற தனிமை அவரை கொல்லாமல் கொல்கிறது. ‘சேலையை உடுத்தி வெளிக்கிடுவம்’ என்ற நினைப்பில்இருக்கை அறையின் ஊடாக வந்த அவருக்கு சுவரில் தொங்கும் கணவனின் படம் தென்படுகிறது.

ஊருக்கெல்லாம் வழிகாட்டின மனுஷன்எனக்கொரு வழிகாட்ட மறந்து போனார். என்னைக் கட்டேக்கை அவருக்கு நாற்பத்திரண்டு வயதுதான். ஆம்பிளையளுக்கு அதொரு வயதே. என்ரை வயித்திலையும் ஒரு குழந்தை தங்க வேணுமெண்டு எனக்கிருந்த ஆசையை அவராலை ஏன் விளங்கிக்கொள்ள முடியேல்லைதங்கின பிள்ளையளை எல்லாம் ஒவ்வொண்டாய் கரைச்சு…கொஞ்ச குளிசைகளையே விழுங்கினன்அவருக்கு தெரியாத குளிசைகளே…நான் எதுவும் சொல்லேல்லை… யார் பெத்தால் என்னஅவரின்ரை பிள்ளையளை என்ரை பிள்ளையள் எண்டு பாசம் காட்டி வளர்த்தன். எல்லாம் சுயநலம் தான்…’

பார்வதி அம்மாளின் நல்ல மனம் விழித்துக் கொள்ள அடிமனதிலுள்ள ஆதங்கம் அமுங்கிப் போகிறது.

சீ… நான் இப்பிடியெல்லாம் நினைக்கப்படாது. ஊரிலை உலகத்திலை நடக்காததையே அவர் நினைச்சவர். இரண்டாந்தாரமாய் வாறவைமுதல் தாரத்து பிள்ளையளைக் கொடுமைப்படுத்தின கதையள் கொஞ்ச நஞ்சமேபரந்தாமற்றை மனுஷி முதல் தாரத்தின்ரை பிள்ளையளை என்ன பாடுபடுத்தினது…?

மற்றவை அப்படி நடக்கினம் எண்டாப்போலை நானும் அப்படி நடப்பன் எண்டு ஏன் நினைச்சார்...? நான் பிள்ளையளிலை காட்டின பாசம் கொஞ்சமேசின்னவனை நான் வயித்திலை சுமக்கேல்லை எண்ட குறைதான். என்ரை நெஞ்சிலை கிடந்து வளர்ந்தவன். நியாயங்கள் அறிந்த மனுஷன். எனக்கு நியாயம் செய்யாமல் போயிட்டியள்…’

எவை நினைவுக்கு வரக்கூடாது என்று பார்வதி அம்மாள் பகீரதப் பிரயத்தனப்பட்டாரோ அவை திரும்ப திரும்ப மனதில் வந்து அலைமோதுகிறது. பழைய நினைவுகளின் தாக்கத்தால் கழுத்திலும் பிடரியிலும் தாங்க முடியாத வலி ஏற்பட்டது.

இனி பனடீன் குளிசைகள் வேண்டாம்எல்லாம் முருகன் துணை…’ என்று நினைத்துக் கொண்டு கந்தசட்டி கவசத்தினை மனசிலே நினைவுபடுத்தி உச்சரிக்கத் துவங்கினார். வலிகள் போய் மனசு இலேசாகி கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

கீழேயுள்ள தனது வீட்டு தபால் பெட்டிக்குள் கடிதம் பார்க்க வந்த ‘சென்ரலிங்’ சியாமளாவீட்டு கதவு திறந்து கிடக்க எட்டிப்பார்த்தாள். பார்வதி அம்மாள் சேலைகட்டி புறப்பட நிலையில் கந்தசஷ்டி கவசம் பாடிக் கொண்டிருப்பதை கண்டாள்.

அன்ரிகோயிலுக்கே…இருங்கோ நானும் அங்கைதான் போறன். காரிலை போகலாம். இவர் இண்டைக்கு லீவு எடுக்கேலாதெண்டு வேலைக்கு போட்டார். கொடியேற்றத்துக்கு நான் Flexi’ லீவு எடுத்தனான்.’ என்றவாறே கடிதங்களை வீட்டிலே வைத்துவிட்டுவர மேலே ஓடினாள்.

சியாமளாவின் கார் முருகன் கோவிலை நோக்கி பிரதான வீதியில் ஓடிக் கொண்டிருந்தது. மௌனத்தைக் கலைக்க சியாமளா பேச்சை துவங்கினான்.

முந்தி எண்டால்தெற்பை போட காளாஞ்சி வாங்க எண்டு அன்ரி கோயில்ல முன்னுக்கு நிண்டிருப்பியள்…என்ன தான் இருந்தாலும் அங்கிள் இப்பிடிச் செய்திருக்கப்படாது. நீங்கள் எண்டபடியால் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்கிறியள். நானாய் இருக்கவேணும் இப்ப எல்லாரையும் கோட்டுக்கு கொண்டு போயிருப்பன்’. பார்வதி அம்மாளுடைய இன்றைய பொருளாதாரக் கஷ்டங்களுக் கெல்லாம் அவருடைய புருஷன் கொண்டிருந்த புத்திரபாசமே காரணமென்பதை சியாமளா சாடைமாடையாக அறிந்து வைத்திருந்தாள். பார்வதி அம்மாள் எதுவும் பேசவில்லை. விரக்தி கலந்த புன்னகை ஒன்றை உதித்தவாறு மௌனமாக இருந்தார்.

அன்ரி…உங்களைப்போல பொறுமை பொறுமை எண்டு சொல்லி அடங்கி இருக்கிற பொம்பிளையளாலை தான்ஆம்பிளையள் தாங்கள் நினைச்சதெல்லாத்தையும் செய்து போடலாம் எண்டு நினைக்கினம். பெத்தபிள்ளையளே இந்த நாட்டிலை பெற்றோரை பார்க்கிறதில்லை. முந்தின தாரத்தின் பிள்ளையள் என்னண்டு உங்களைப் பார்க்குமெண்டு அங்கிள் நினைச்சவர்உங்களுக்கெண்டு கொஞ்சம் சொத்தை எழுதி வைக்கப்படாதே…?

கார் இப்போது குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக் கொண்டிருந்தது. பார்வதி அம்மாளுடன் பேசிக்கொண்டு காரை ஓட்டியதால்பிரதான வீதியில் வந்த காருக்கு வாகன ஓட்டுநர் விதிமுறைப்படி சியாமளாவின் கார் வழிவிடவில்லை. மற்றக் காருக்குரியவன் ஒரு வெள்ளைக் காரன். ஆங்கிலத்திலுள்ள மிகக் கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி திட்டியவாறு கடந்து சென்றான்.

சியாமளா அவனது தூஷண வார்த்தையைச் சட்டை செய்யாது காரை ஓட்டிக் கொண்டே பேச்சை தொடர்ந்தாள். அவள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றின் தீவிர உறுப்பினர். பார்வதி அம்மாளுக்கு இழைக்கப் பட்ட கொடுமையை அவளால் தாங்கிக் கொள்ள முடி வில்லை.

தன்ரை பெருமைக்கும் நடப்புக்கும்இருக்கிற காசையெல்லாம் பிற்காலத்திலை அங்கிள் ஊருக்கு செலவழிச்சார். மிஞ்சி இருந்த ஒரு வீட்டையும் அங்கிள் செத்தாப்போலை, ‘தங்கடை தாயிருக்கேக்கை வாங்கினதுதங்களுக்குத் தான் சொந்தம்’ எண்டு சட்டம் பேசி அங்கிளின்ரை மகன்கள் அபகரிச்சுஉங்களை கலைச்சு விட்டான்கள். அவங்களை வளர்த்து ஆளாக்கினதிலை உங்களுக்கு பங்கில்லையே…? ‘நோத் சிட்னியில்’ நீங்கள் வாழ்ந்து அனுபவித்த வீடு இண்டைய நிலைவரப்படி ஒரு கோடி டொலருக்கு மேலை போகும். அந்த வீட்டிலை உங்களுக்கும் பங்கிருக்கெண்டு வாதாடியிருக்க வேணும். இப்பவும் காலம் போகேல்லை அன்ரி…’ என்றவாறே பார்வதி அம்மாளை திரும்பிப்பார்த்தாள் சியாமளா.

பார்வதி அம்மாளை உருவேற்றிவிட்ட வேண்டுமென்பதல்ல அவளின் நோக்கம். பெண்களுக்கு நியாயங்கள் மட்டுமல்ல சம உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்று நினைப்பவள்.

எனக்கார் இருக்கினம் பிள்ளை…அவரில்லையாம்எனக்கேன் சொத்தை. நீ வேலை செய்யிற ‘சென்ரலிங்’ தாற உதவிப்பணம் எனக்கு காணும்.

அன்ரிநான் இப்ப சென்ரங்கிலிலை உங்களைப் போல ஆக்களுக்கு உதவிப்பணம் குடுக்கிற பிரிவிலைதான் வேலை செய்யிறன். மூண்டு மாதத்துக்கு ஒருக்கா எல்லா கொடுப்பனவும் ஒழுங்காய் போகுதோ எண்டு எல்லாற்ரை பைலையும் கொம்பியூட்டரிலை தட்டிப் பார்த்து சரி செய்யிறதுதான் என்னைப் போன்ற ஆக்களின்ரை வேலை. போன கிழமை உங்கடை பைலைப் பாக்கேக்கை தான் உங்கடை சரித்திரம் முழுதும் எனக்கு தெரிஞ்சுது. நான் விறைச்சுப் போனன். என்னதான் இருந்தாலும் நீங்கள் இப்பிடி இருக்கப் படாது. நீங்கள் ஒரு கடிதம் எழுதித் தாங்கோ. நான் சென்றலிங் மூலமாக நடவடிக்கை எடுக்கிறன்.’

காரின் இருக்கையில் சாய்ந்தபடி அரைக்கண் மூடியவாறு சியாமளா சொல்வதை மௌனமாக கேட்டுக்கொண்டு வந்தார் பார்வதி அம்மாள். பனடீன் அதிகம் போட்டதால் ஏற்பட்ட களைப்பாக அல்லது கணவனின் நினைவால் ஏற்பட்ட சோர்வாக இருக்கலாம். அவர் எதுவும் பேசவில்லை.

டொக்டர் நடராஜசிவம் செய்த ஓரவஞ்சகத்தையும் அவரது பிள்ளைகள் பார்வதிஅம்மாளை திரும்பிப் பார்க்காத நன்றி கெட்ட தனத்தையும் அர்ச்சனை செய்தவாறே சியாமளா காரை ஓட்டினாள். அவளுடைய பேச்சை நிறுத்த முடிய வில்லை.

கார் கோயிலை அடைந்தது. சியாமளா காரை மெதுவாக கோயில் வாசலுக்கு அருகிலே நிறுத்தி ‘அன்ரிநீங்கள் இறங்கி கோயிலுக்குள்ள போங்கோ…கோயில் கார்பார்க் நிறைஞ்சு போச்சு. இந்த நேரம் ‘பாக்கிங்’ இடம் கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்நான் குறுக்கு றோட்டிலை எங்கையாவது பார்க் செய்து போட்டு வாறன்.’

பார்வதி அம்மாள் இறங்கிக் கொண்டார். உடனடியாக உள்ளே போகாமல் றோட்டுக் கரையில் நின்று கோபுரத்தினை அண்ணாந்து பார்த்தார்.

கோபுரம் நிமிர்ந்து நின்றது. ஒரு தெய்வீக அருள் பூசி மிளிர்வதாகப் பார்வதி அம்மாளுக்குத் தோன்றியது. கோவிலில் இருந்து ‘அரோகரா’ சத்தம் கேட்டது. முருகப் பெருமான் கொடிக்கம்பத்துக்கு முன்னால் வள்ளி தெய்வானை சமோதராய் எழுந்தருளியிருக்க வேண்டும்.

வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே’ என்று தரகர் தம்பையா அன்று கூறியது மிக மங்கலாக கேட்பது போலவும் இருந்தது.

உள்ளே இருந்து ‘அரோகாராச் சத்தம் மேளச் சத்தத்துடன் வாசனைப் பிளக்கிறது.

முருகனின் கொடிகொடிக்கம்பத்தில் ஏறியிருக்க வேண்டும்’ என்று பார்வதி அம்மாளின் மனம் நிதானிக்கவேகோவில் வாசலுக்கு விரைந்தார்.

அரோகரா’ என்று பக்திபூர்வமாக அவர் குரல் அனுங்கிற்று.

என்ன அன்ரி அனுங்கிறியள்அரோகரா என்டு பிலத்து சொல்லுங்கோ. நானிருக்கிறன். வாருங்கோ உள்ளுக்கு.’ என்று கூறியபடி ஆதரவாக பார்வதி அம்மாளை கோவிலுள்ளே கூட்டிச் சென்றாள் சியாமளா. கொடிக்கம்பத்துக்கு தீபாராதனை நடக்கிறது.

அரோகரா…’

பக்தர்கள் எழுப்பும் குரலிலேபார்வதி அம்மாளின் குரலும் சியாமளாவின் குரலுடன் இணைந்து பிசிர் இன்றிலயத்துடன் சங்கமிக்கிறது.

(உதயம்செப்டெம்பர் 2003)

 


No comments:

Post a Comment

.