Friday 1 December 2023

 அறிவியல் புனைகதை:

சிலீப் அப்னியா

பீட்டர் சுல்ஸ், என்னுடன் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தவன். அவனுக்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. எல்லோருடனும் கலகலப்பாகப் பேசுவான். அதேயளவுக்கு அனைவரையும் ஐமிச்சமாகப் பார்ப்பான், அவதானமாக இருப்பான். தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என்ற மனநிலையிலிருந்து மாறமாட்டான். தானொரு யூதன், ஜேர்மன் நாட்டிலிருந்து சிறு வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவன், என அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

ஜேர்மனி இரண்டாகப் பிளவுபட்டிருந்த காலத்தில், கிழக்கிலும் மேற்கிலும் படித்தவன், பணிபுரிந்தவன் என்ற வகையில் இவனது பெயர் ஒரு யூதப்பெயரல்ல, அது ஜேர்மன் பெயர் என்பதை நான் அறிவேன்.

எமது கல்விப் பீடத்தின் நத்தார் கொண்டாட்டத்தின் போது இருவரும் மது அருந்திப் போதையேறிய நிலையில், உண்மையில் நீ யூதனா? என எதேச்சையாகக் கேட்டேன். கொஞ்சநேரம் எதுவும்பேசாது அமைதி காத்தவன், பதில் எதுவும் சொல்லாமல் கொண்டாட்ட மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டான். இது அவனது இயல்பான குணமல்ல. கேள்வி கேட்பவனை மடக்கி, வெட்டி, உரத்துப்பேசி, தகுந்த பதிலடி கொடுப்பது அவனது இயல்பு.

அதிக அளவிலே அவன் மது அருந்துவதையும், யூதர்களுக்கான உணவுப் பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் வாழ்வதையும் மனதில் கொண்டே, நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

பீட்டர் ஒரு உணவுப்பிரியன். எல்லா இனக் குசினிகளிலும் தயாராகும் உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவான். எனது மனைவியைக் கண்டால் எப்போது புரியாணிபோடுகிறாய்? எனக்கேட்டு, சாப்பாட்டுக்கு வரும் நாளையும் சொல்லி, மெனுவையும் சொல்வான். இப்படி நேரகாலம் பார்க்காது கண்டதையும் தின்பதால், ஊளைச்சதை வைத்து, உடல்பருத்து, குண்டாக இருந்தான். இதுபற்றி அவன் என்றும் கவலைப்பட்டது கிடையாது. உலகிலுள்ள எல்லா வியாதிகளும் அவனுக்கு இருந்தன. குளிசைகளை விழுங்கி, கொன்றோலில் வைத்திருந்தான்.

நத்தார், புதுவருட விடுமுறைகளின் பின்னர் பல்கலைக்கழகம் துவங்கிய முதல் நாள், பீட்டர் என்னைப் பல்கலைக் கழக வாசிகசாலையில் கண்டதும் என்னை ஒரு மூலைக்கு இழுத்துக்கொண்டுபோய், நான் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொன்னான். தனது தந்தை ஜேர்மன் என்றும் தாய் ஒரு யூதப் பெண்மணி என்றும் சொன்னவன், யூத இன வழக்கப்படி ஒரு குழந்தை, யூத இனத்தைச் சேர்ந்தது என அங்கீகரிக்கப்படுவதற்கு யூதத்தாயின் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். தந்தையின் பின்புலம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இந்தவகையிலேதான் சந்ததி சந்ததியாகப் பூமிப் பந்தெங்கும் சிதறுண்டு வாழ்ந்த யூதர்கள் கணக்கெடுக்கப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டார்கள். இந்த உண்மையைத் தெரிந்துகொள், என்றான் முகத்தில் அடிக்காத குறையாக. அடுத்தநாள் இந்திய சாப்பாட்டுக் கடையில் வாங்கிய புரியாணிப் பார்சலுடன் சென்று அவனைச் சமாதானப்படுத்தினேன்.

பீட்டர் மூன்று தடவைகள் திருமணம் முடித்தவன். ஒன்றும் நிலைக்கவில்லை. குழந்தைகளும் இல்லை. மூன்றாவது மனைவியின் விவாகரத்தின் பின்னர் வெளிவந்த பத்திரிகைச் செய்திமூலமே இதற்கான காரணம் வெளியில் தெரிந்தது. இவன் உரத்த சத்தத்தில் குறட்டை விடுவானாம். குறட்டையும், விவாகரத்துக்கு வலுவான காரணமாகலாமென, பத்திரிகைச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தார்கள்.

பல்கலைக்கழகத்திலும் அவ்வப்போது மேசைமீது தலையைச் சரித்து குட்டித்தூக்கம் போடுவான். விரிவுரையாளர்களின் கூட்டங்களின் போது பின் வரிசையில் அமர்ந்து கொள்வான். திடீரென வெளிப்படும் குறட்டைச் சத்தத்தின்போது, மற்றவர்கள் சிரிக்க, திடுக்கிட்டு எழுவான். நீண்ட நேரம் இரவில் விரிவுரைகளுக்குத் தயார் செய்வதாக, இதற்குக் காரணம் சொல்வான்.

திடீரென ஒருநாள் வாகனம் ஓட்டும்போது தூங்கியதால், விபத்து ஏற்பட்டு அவன் மரணமான செய்தி வந்தது. அவனுக்கு 'சிலீப் அப்னியா' (Sleep-apnea) என்ற குறைபாடு இருந்ததாகப் பின்னர் அறிந்துகொண்டோம்.

சிலீப் அப்னியா என்னும் பதத்தை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. இதுபற்றி எமது குடும்ப வைத்தியரைக் கேட்டேன்.

இரவில் நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, உங்களை அறியாமலே, உங்கள் தொடர் சுவாசம் தடை செய்யப்படுவதை, சிலீப் அப்னியா என்பார்கள். இதனால் மூளைக்கும் மற்றைய உடல் உறுப்புக்களுக்கும் செல்லும் பிராணவாயு, அதாவது ஒக்சிஜின் தடைப்படும். இது நோயல்ல. ஒரு குறைபாடே, என்றார் வைத்தியர்.

இதன் அறிகுறியென்ன?

சத்தம் போட்டுக் குறட்டை விடுதல், நித்திரை தடைப்படுதல், ஆழ்ந்த நித்திரையில் மூச்சுத் திணறுதல், காலையில் தலைவலி, சீறிச்சினத்தல், அளவிற்கு அதிகமான பகற்தூக்கம், வாகனம் செலுத்தும்போது தன்னை மறந்து தூங்குதல். அதனால் விபத்து, உணர்ச்சி வசப்படுதல், கோர்வையாக ஒன்றைப் பேச முடியாத நிலை, அவதானக் குறைவு, மனவழுத்தம் என்பன, சிலீப் அப்னியாக் குறைபாட்டால் வருபவை. இதன் காரணமாக இருதயம், சிறுநீரகம் ஆகிய உள்ளுறுப்புக்கள் பாதிப்படைவதுடன் தாம்பத்திய வாழ்வும் பாதிக்கப்படும் எனக் குணம் குறிகளைப் பட்டியலிட்டவர், பீட்டரின் விஷயத்துக்கு வந்தார்.

சிலீப் அப்னியா குறைபாடு காரணமாக உங்கள் நண்பருக்கு இரவில் சரியான தூக்கம் இருந்திருக்காது. மூச்சுத் திணறி அடிக்கடி விழித்திருப்பார். இதன் காரணமாகவே பகலில் அவர் பல்கலைக்கழகத்தில் தூங்குவது, என விளக்கினார் வைத்தியர்.

அப்போ, விபத்து எப்படி ஏற்பட்டது?

சிலீப் அப்னியா உள்ளவர்கள், வாகனம் ஓட்டும்போது தூங்குவது சாதாரணமாக நடக்கும் சங்கதி. தூக்கத்தில் பலர் எதிர்ப்பக்கம் வாகனத்தைச் செலுத்தி, நேருக்குநேர் இன்னொரு வாகனத்துடன் மோதியிருக்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின் படி அறுபது வயதைத் தாண்டியவர்களுள் நாற்பது வீதமானவர்களுக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் குண்டாகவும் ஊளைச்சதை வைத்தவர்களாகவும் இருப்பார்கள். இரவில் குறட்டை விடுவார்கள், என்றவர் சற்று நிறுத்தி என்னைப் பார்வையால் அளந்தார்.

வைத்தியரின் விளக்கத்தைக் கேட்டதும் எனக்குச் சற்றுப் பயம்வந்தது. சமீப காலமாக நான் பயங்கரமாகக் குறட்டை விடுவதாக மனைவி சொல்கிறாள். எனது உடல் நிறையும் அதிகரித்திருப்பதை உணர்கிறேன். அதனால் இதுபற்றி மேலும் கேட்டேன்.

குற்ட்டைவிடுதல், குறிப்பாக சிலவினாடிகள் இடைவெளிவிட்டுக் குறட்டைவிடுதல், அடிக்கடி நித்திரை குழம்பி எழும்புதல் என்பன சிலீப் அப்னியாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறி.

இதுக்கு என்ன செய்யவேணும் டொக்டர்?

நான் சொன்ன இவ் அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்கள் குடும்ப வைத்தியரிடம் முறையிடவேண்டும். அவர் இதற்குரிய நிபுணர்களிடம் அனுப்புவார். அங்கு இவர்களை ஓரிரவு தங்கவைத்து, இவர்கள் தூங்கும்போது அதற்குரிய பரிசோதனைகளைச் (Sleep study) செய்வாரகள். சிலீப் அப்னியா இருப்பதைக் கண்டறிந்தால் அதற்குரிய காற்றுச் செலுத்தி இயந்திரத்தைக் (CPAP - Continuous Positive Airway Pressure) கொடுத்துப் பரிசோதிப்பார்கள். பலன் கிடைக்கும் பட்சத்தில், நீங்கள் உங்களுக்கான இயந்திரத்தை வாங்கிப் பலனடையமுடியும். இந்தக் குறைபாட்டுக்கு மருந்தில்லை.

இதைக் கேட்டதும் ஒருவித கலக்கத்துடன் வைத்தியரைப் பார்த்த்தேன்.

இயந்திரம் என்றவுடன் பயப்படாதீர்கள். பல விதமான சிறிய இயந்திரங்கள் தற்போது இருக்கின்றன. இவற்றைப் பாவித்த பலர் புதிய மனிதர்களாக மாறி, மகிழ்ச்சிகரமாக வாழ்வதை நான் அறிவேன்.

குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் குறட்டை விடுபவர்களுக்கும்  இக்குறைபாடு இருக்கும் சாத்தியம் அதிகம். எனவே தாமதிக்காது வைத்தியரை நாடுங்கள் என, எனக்கும் அது இருக்கக்கூடும் என்ற பாவனையில், ஒரு புதுவிதமான குண்டை, என்னை நோக்கி உருட்டிவிட்டார் வைத்தியர்.

-ஆசி கந்தராஜா-

 

No comments:

Post a Comment

.