Tuesday 12 December 2023

 அறிவியல் புனைகதை:

வைரஸ் புராணம்

 


ங்கள் வீட்டில், ஒரு எலுமிச்சை நின்றது. வருடம் முழுக்கக் காய்க்கும். விதைகள் இல்லை, நல்ல புளி. திடீரென அதன் இலைகள் வெளிறிச் சுருண்டு, பட்டை வெடித்து, காய்ப்பதை நிறுத்திக் கொண்டது.

எலுமிச்சைக்கு வைரஸ் நோய் (CTV) என்பதை உறுதி செய்து கொண்டேன். தாமதிக்காது மரத்தை வேருடன் பிடுங்கி எரித்து விட்டேன்.

மனைவிக்கோ அது பெரும் கவலை. அது அவள் ஆசை ஆசையாக, பண்ணையில் வாங்கி, நட்டுவளர்த்த மரம்.

எல்லாத்துக்கும் மருந்தடிக்கிறியள் எலுமிச்சைக்கு மருந்தடிக்கேலாதோ? எனப் புறுபுறுத்தாள் மனைவி.

தாவரத்தையோ அல்லது மனிதர் உட்பட விலங்குகளையோ தாக்கும்   வைரஸ் கிருமிகளுக்கு மருந்தில்லை என்றேன் மொட்டையாக.

என்ன சொல்லுறியள்? உலகமே கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்க, கங்கணம் கட்டிக்கொண்டு ஆராச்சியில் இறங்கியிருக்குது. நீங்கள் வைரஸ் கிருமிக்கு மருந்தில்லை என, புதுக்கதை சொல்லுறியள் என்றவாறே என் முன் வந்தமர்ந்தாள் மனைவி.

உயிருள்ள ஒரு ஜீவனைத்தான் கொல்லலாம். ஜடப் பொருளைக் கொல்லலாமோ? என ஆரம்பித்த என்னை இடைமறித்த மனைவி, அண்டிபயாட்டிக் மருந்து, வைரஸ் கிருமியைக் கொல்லாதோ? என அடுத்த கேள்வியையும் என்முன் வைத்தாள்.

அவள் அப்படித்தான், எப்பொழுதும் ஒரு அவசரக்குடுக்கை.

பக்டீரியா ஒரு உயிருள்ள ஜீவன். ஆனால் வைரஸ் ஒரு ஜடப் பொருள். அதற்கு உயிர் இல்லை.

ஓ...!

அண்டிபயாட்டிக் மருந்து, உயிருள்ள பக்டீரியாவைத்தான் கொல்லும். உயிரற்ற வைரஸ்ஸை அழிக்காது. இதையே சற்று விரிவாகச் சொன்னால், ஒரு உயிரைக் கொல்ல வேண்டுமாயின் அந்த உயிரின் ஏதோவொரு பாகத்தைச் சிதைக்க வேண்டும். அண்டிபயாட்டிக் மருந்து செய்வதும் இதைத்தான். அதாவது, அது பக்டீரியாக் கலத்தின் சவ்வையோ (Membrane) அல்லது அதன் உட்புறத்தேயுள்ள ஒரு அமைப்பையோ தாக்கி அழிக்கும்.

ம்...!

பலவகை பக்டீரியாக்களைக் கொல்லும் அமொக்ஸ்ஸிலின் (Amoxicillin) போன்ற பொதுவான அண்டிபயாட்டிக் மருந்துகள் இருந்தாலும், சில அண்டிபயாட்டிக் மருந்துகள் குறிக்கப்பட்ட வகை பக்டீரியாவையே கொல்லும். அதனால்தான் நூற்றுக்கணக்கான அண்டிபயாட்டிக் மருந்துகள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பெடியளுக்கு விரிவுரை நடத்திறமாதிரிச் சுற்றி வளைச்சுச் சொல்லாமல், நான் கேட்ட வைரஸ் விஷயத்துக்கு வாங்கோ.

கவனமாய்க் கேள். வைரஸ் கிருமியால் தனக்குத் தேவையான சக்தியை சுயமாக உற்பத்தி செய்யமுடியாது. அதுமட்டுமல்ல அது பெருகுவதற்கு இன்னுமொரு உயிரில் தங்கியிருக்கவேண்டும்.

என்னப்பா புதுசு புதுசாய்க் கதை சொல்லுறியள். அப்போ எப்படி கொரோனா வைரஸ் டக்கெண்டு பரவி உலகத்தையே ஆட்டிப் படைக்குது?

சரி, நீ கேட்ட கொரோனா வைரஸை உதாரணமாக வைத்துக்கொண்டே விஷயத்துக்கு வாறன். ஆனால் இது எல்லா வைரஸ்ஸூக்கும் பொதுவானதுதான்.

வெளியிலை இருக்கிற கொரோனா வைரஸ் மனித உடம்புக்குள் போனால், அது தனக்கு வசதியான ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். ஈரலிப்புத் தன்மையான சுவாசக்குழாய், சுவாசப்பை போன்றவை இதற்குத் தோதான இடங்கள்.

ஓஹோ, அதாலைதான் மூச்சுத் திணறல் வாறதாச் சொல்லுறாங்கள்? என்றபடி, சுந்தரி அக்காவும் எமது உரையடலில் கலந்துகொண்டார்.

நான் தொடர்ந்தேன். மனித உடலில் ஒட்டிக்கொண்ட கொரோனா வைரஸ், கலத்தினுள்ளே (Cell) சென்று பெருக ஆரம்பிக்கும்.

அதெப்படி? வெளியிலை பெருகாத வைரஸ் கிருமி, உடம்புக்குள் எப்படிப் பெருகுது? இப்படி நியாயமானதொரு கேள்வியை முன்வைத்தாள் மனைவி.

மனித உடல், கலங்களினால் (Cells) ஆனது. கலத்துக்கு உள்ளே இருக்கும் கருவுடன் ஒட்டிக்கொள்ளும் வைரஸ், அதன் டிஎன்ஏ-யைத் தூண்டி தனது இனப்பெருக்கத்துக்குத் தேவையான நொதியத்தைச் சுரக்கச் செய்து, தன்னைப் பெருக்கிக் கொள்ளும். இப்படி ஒரு வைரஸ் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்காக வைரஸ் கிருமிகளை உற்பத்தி செய்யும்.

இதை இப்படிச் சொன்னால் என்ன?

எப்படி?

உங்கடை வீட்டுக்கு வந்திருக்கிற நான், உங்களைத்தூண்டி உங்கடை சாமான்களையே பாவித்து, உங்கள் உதவியுடன் எனக்குத் தேவையான சாப்பாட்டைச் சமைத்துக்கொள்வது என உதாரணம் சொல்லிச் சிரித்தார் சுந்தரியக்கா.

ஒருவகையில் அப்படித்தான் என நானும் சுந்தரியக்காவுடன் சேர்ந்து சிரித்தேன்.

கருமத்தில் கண்ணாயிருந்த மனைவியோ அடுத்த கேள்வியை எடுத்துவிட்டாள்.

மருந்து கண்டுபிடிக்கிறன், இந்தா மருந்து கண்டுபிடிக்கிறன் எண்டு சொல்லுறாங்களே, இந்த மருந்து என்ன செய்யுது?

மருந்துகளால் வைரஸ் கிருமியை அழிக்க முடியாவிட்டாலும் அதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாமல்லவா?

எப்படி?

வைரஸின் பெருக்கத்துக்கு உதவி செய்யும் நொதியத்தின் தொழிற் பாட்டை, மருந்துகள் கட்டுக்குள் கொண்டுவந்து வைரஸின் பெருக்கத்தை நிறுத்தும்.

என்ரை சமையலை நிறுத்த, உன்ரை மனுசியைக் கொண்டு நீ அடுப்பை நூத்தமாதிரி, என மீண்டும் ஒரு நகைச்சுவை வாணம் விட்ட சுந்தரி அக்கா, மறுகணம் சீரியஸாகி, உள்ளுக்கை போன ஒறிஜினல் வைரஸ் கிருமிக்கு என்ன நடக்கும்? எனக்கேட்டார்.

கலத்துக்கு உள்ளேயிருக்கும் ஒறிஜினல் வைரஸைக் அழிக்கும் சக்தி எமது இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களுக்கு மாத்திரம்தான் உண்டு. இதையே வேறுவிதமாகச் சொன்னால் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியால் மட்டுமே முடியும். நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத ஒருவர் வைரஸ் கிருமியின் பெருக்கத்தை தடுக்க அற்கான மருந்தை தொடர்ந்து எடுக்கவேண்டும்.

வக்சீன் எனப்படும் தடுப்பூசி என்ன பங்களிப்பைச் செய்கிறது?

வருமுன் காப்பது. அதாவது வைரஸ் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை உடம்பில் உருவாக்குவது.

சரி, இனி எலுமிச்சை மரத்தை ஏன் வேரோடை புடுங்கி எரிச்சனீங்கள் எண்டு சொல்லுங்கோ. மரத்தை அடியோடை வெட்டி விட்டால், அடிக் கட்டையிலை இருந்து தழைக்காதோ?

நான் ஆரம்பத்தில் சொன்னமாதிரி தாவரங்களையோ, விலங்கு மற்றும் மனிதர்களையோ தாக்கும் வைரஸ் கிருமிகள் உயிரற்ற ஜடப்பொருள்கள். அவற்றை அழிக்க மருந்தில்லை. அதேவேளை தாவரங்களுக்கு இமுயூன் (Immune) எனப்படும் நோய் எதிர்ப்புச்சக்தியும் இல்லை. அதுமட்டுமல்ல தாவரங்களில், வைரஸ் கிருமிகள் நீரைக் கடத்தும் ஈரப்பிடிப்புள்ள காழ் (Xylem) கலங்களில், நுனிக் குருத்து முதல் அடி வேர் வரை இருக்கும்.

வெட்டின மரத்தைக் குப்பைக்குள் போடாமல் ஏனடா தம்பி எரிச்சனி? - இது சுந்தரி அக்கா.

வைரஸ் பரம்பலைத் தடுப்பதற்கான ஒரே வழி, தாவரங்களைப் பிடுங்கி எரிப்பதுதான். மண்ணுள் புதைத்தாலும் அவை நிலத்தடி நீர் மூலம் மற்ற தாவரங்களின் வேர்களில் தொற்ற வாய்ப்புண்டு.

அப்போ, வைரஸ் கிருமியில் இருந்து தப்ப என்னதான் வழி? எனப் பரிதாபமாகக் கேட்டார் சுந்தரி அக்கா. அவர் பாவம். ஒரு கலியாணத்துக்கென லண்டனில் இருந்து சிட்னிக்கு வந்தவர், கொரோனா பிரச்சனையால் திரும்பிப்போக முடியாமல் எங்களுடன் நிக்கிறார்.

எதிர்காலத்தில் வைரஸ் கிருமிகளுடன் வாழப் பழகவேண்டியதுதான், எனச் சாட்டுக்கு ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன் நான்.

அவரவர் கவலை அவரவருக்கு!

-ஆசி கந்தராஜா-

No comments:

Post a Comment

.