அறிவியல் புனைகதை:
மரணத்தின் குடி.
-ஆசி கந்தராஜா-
(ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை. தை 2024)
வாக்கெடுப்பு, பதினான்கு அக்டோபர் 2023 சனிக்கிழமை நடந்தது!
ஆஸ்திரேலிய ஆதிவாசிகளான, அபொர்ஜினி பழங்குடி
மக்களின் நலன் சார்ந்து, அரசியலமைப்பை மாற்ற
வேண்டுமா என்பதற்கான கருத்துக் கணிப்பு
அது. அறுபது சதவீதமான வாக்காளர்கள், வேண்டாம் என்றே வாக்களித்தார்கள். அபொர்ஜினிகளுக்குச் சொந்தமான இந்த நாட்டில், வந்தேறு குடிகளாக வாழும்
வெள்ளையர்களும் மற்றவர்களும் அபொர்ஜினிகளுக்கு எதிராக வாக்களித்ததை, மாலினியும் அவர்சார்ந்த
மனித உரிமை அமைப்பும் எதிர்பாக்கவில்லை. இதற்கும்மேலாக மாலினி வாக்களிக்கச்
சென்றபோது நடந்த சம்பவம் அவரது மனதைப் பெரிதும் வருத்தியது.
நடந்தது இதுதான்!
வாக்களிப்பு நிலையத்தின் முன்னால் ஆதரவு தேடி
இரண்டு குழுக்கள் நின்றன. ஆம் என்பதற்கு ஆதரவு தேடி ஒன்றும், அபொர்ஜினிகளுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்று இன்னொரு குழுவும்
பிரச்சாரம் செய்தன. இரண்டாவது குழுவில், மஞ்சள்தோல் ஆசிய நாட்டவர்களே, பெரும்பாலானவர்கள். மாலினி எதையும் வெளிப்படையாக, நேருக்கு நேராகப்
போட்டுடைக்கும் சுபாவமுள்ளவர். அன்றும் அப்படித்தான்.
வசதியான வாழ்வுதேடி ஆஸ்திரேலியா வந்த நீங்கள், இந்த நாட்டின் உண்மையான
குடிமக்களுக்கு எதிராக வாக்களிகச் சொல்லி, எப்படிப் பிரச்சாரம் செய்யலாம்? என உரத்துச் சத்தம்போட்டார். நிலைமை மோசமாகாமல் தடுக்க மாலினியுடன் வந்தவர்கள்
அவரை வாக்களிக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்றனர்.
எண்பத்துமூன்று இனக் கலவரத்தைத் தொடர்ந்து
அகதிகளாக வந்த பெற்றோருடன்,
எட்டு வயதில்
ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர் மாலினி. ஆரம்பக்கல்வி முதல் பட்டப் பின்படிப்புவரை
இங்குதான். பல்கலைக் கழகத்தில் மனித உரிமை அமைப்புடன் இணைந்தவர், இன்றுவரை
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பவர், அவர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பவர், நிறைய வாசிப்பவர்.
முனைவர் பட்டம் பெற்ற பின்னர், விரிவுரையாளராகப்
பணிக்குச் சேர்ந்த கிராமப்புறக் கல்விச்சாலை ஒன்றிலே, ஆதிவாசிகளும்
கல்விகற்றார்கள். வழமையான விரிவுரைகளுக்கு அப்பால் அவர்களுக்குத் தேவையான மேலதிக கல்விப் பணியை, அவர் விரும்பி
ஏற்றுக்கொண்டது இயல்பாக நடந்த செயல்.
அபொர்ஜினி மக்கள், இயற்கையுடன் இணைந்து
வாழ்பவர்கள். ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மட்டுமே கண்டம்
முழுவதும் சொந்தமானது. கப்டன் குக், ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானிய
வெள்ளையர்களின் வருகை, இவர்களின் வாழ்க்கையை
முற்றிலும் புரட்டிப் போட்டது. வெள்ளையர்கள், விலங்குகளையும் அபொர்ஜினிகளையும் பிரித்துப் பார்க்கவில்லை. அவர்கள்
மீன்பிடித்த, வேட்டையாடிய
இடங்களிலிருந்து துரத்தி அடித்தார்கள். குருவி சுடுவது போன்று சுட்டுக்
கொன்றார்கள்.
ஆதிகாலம் தொட்டு, அபொர்ஜினிகள், சில தாவரங்களின் வேர்களையும், விதைகளையும், இலைகளையும் உடலில்
கிளர்ச்சி ஊட்டுவதற்காக உண்பார்கள். ஆனால் அவை போதைப் பொருள்கள் அல்ல.
இந்தியர்களின் வெற்றிலை பாக்கைப் போன்றவை, என்ற பல தகவல்களை அபொர்ஜினிகளுடன் நெருங்கிப் பழகிய காலங்களில் மாலினி
தெரிந்துகொண்டார்.
அபொர்ஜினிகளைப் படிப்பறிவில்லாத சோம்பேறிகளாக்க, வெள்ளையர்கள் மதுவைத்
தாராளமாக அறிமுகம் செய்தார்கள். தொடர்ந்து அதை வாங்குவதற்கு, பல கொடுப்பனவுகளையும் பண
உதவிகளையும் வழங்கினார்கள். இளைஞர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க பதின்ம
வயது இளவல்களுக்கு, மதுவை மட்டுமல்ல, மேலதிக போதைக்காக
பெற்றோல், பெயின்ற் தின்னர் போன்ற
வேதிப் பொருள்களை நுகரவும்,
மெத்திலேட்டட்
ஸ்பிரிட்டை அருந்தவும் பழக்கினார்கள். இதனால் உடல் ஊனமாகித் தம் வாழ்க்கையைத்
தொலைத்தவர்கள் பலர். அதில் ஒருவன் அக்காமா.
மாலினி தாவர உயிரியல் கற்பிப்பவர். அவரது ஆய்வு
கூடத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்தான் பீட்டர் என்னும் ஒரு வெள்ளையன்.
ஆய்வுகூடத்துக்கு ஓர் இளநிலை உத்தியோகத்தர் தேவைப்பட்டபோது அதை அபொர்ஜினி இளைஞன்
ஒருவனுக்கு கொடுக்க விரும்பி, அக்காமாவை நியமித்தார்.
தாவர திசுக்களிலுள்ள நுண்கிருமிகளை நீக்கிச்
சுத்திகரிக்க ஆய்வுகூடத்தில் அல்கஹால் பாவிப்பார்கள். அதற்கு, எதைல் அல்கஹால் தேவை.
சந்தையில் இதை வாங்குவதற்கு சுங்க இலாகாவின் விதிகளைப் பின்பற்றி, பல பத்திரங்களைப்
பூர்த்தி செய்யவேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சிரமங்களைத் தவிர்க்கவும்
நீண்டகாலப் பாவனைக்கு இருக்கட்டும் என்ற எண்ணத்திலும், பெரிய பீப்பாவில் வாங்கிய
எதைல் அல்கஹாலை, மாலினி ஆய்வுகூட மேசையில்
வைத்திருந்தார். விலையுயர்ந்த, கலப்படமற்ற வேதிப்பொருள் இது. நாள்கள் நகரநகர பீப்பாயிலுள்ள அல்கஹால்
கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, அடிமட்டத்துக்கு வந்துவிட்டது. குறுகிய காலத்துக்குள் தாவர திசுக்களைச்
சுத்தம் செய்ய, இந்த அளவு அல்கஹால்
தேவைப்பட்டிருக்காது என்பது மாலினிக்குத் தெரியும். பீப்பாவில் வெடிப்பு ஏற்பட்டு
ஒழுகவில்லை என்பதையும் மாலினி உறுதி செய்துகொண்டார். பெருமளவில் அல்கஹால்
ஆவியாவதற்கான சாத்தியமும் இல்லை.
பீட்டர், தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனச் சாதித்தான். அக்காமா, தெரியாது எனத்
தலையாட்டியதுடன் நிறுத்திக்கொண்டான். சுற்றிச்சுழன்று பலகோணங்களிலும் யோசித்த
விரிவுரையாளர் மாலினியின் மூளை, 'இப்படி' நடந்திருக்கலாம் என்ற
கோணத்தில் சிந்திக்காதது ஆச்சரியம்.
இன்னுமொரு அல்கஹால் பீப்பா வாங்குவதாயின்
துறைத் தலைவரூடாக விண்ணப்பிக்கவேண்டும். ஏற்கனவே வாங்கிய பெருமளவு அல்கஹால்
குறுகிய காலத்தில் எப்படி முடிந்ததென்ற கணக்கை, சுங்க இலாகாவுக்குச் சொல்லவேண்டும். இதனால் பீப்பாவை அலுமாரிக்குள்
பூட்டிவைத்து, தேவைப்படும் அளவு
அல்கஹாலை, மாலினியே ஊற்றிக்கொடுக்க
ஆரம்பித்தார்.
நத்தாருக்கு அடுத்தநாள்!
ஆஸ்திரேலியாவில் அன்றும் பொதுவிடுமுறை நாள்.
அருகிலுள்ள வைத்தியசாலைக்கு வருமாறு மாலினிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
வைத்தியசாலையில் இரண்டு கண்களும் மூடிக்கட்டிய நிலையில் அக்காமா படுத்திருந்தான்.
அவனுக்கு இரவோடு இரவாக, கண்பார்வை போய்விட்டது.
வைத்தியர் சொன்ன தகவல்களையும் அக்காமா
தெட்டம்தெட்டமாகச் சொன்ன கதைகளையும் வைத்து மாலினி நடந்ததை விளங்கிக்கொண்டார்.
ஆய்வுகூடத்தில் பீப்பாவில் இருந்தது, நூறுசதவீத எதைல்
அல்கஹால். பீட்டர் தனக்கு வேண்டியபோதெல்லாம், இதில் நானூற்றுநாற்பது மில்லி லிட்டர் எடுத்து அதற்கு ஐநூற்றுஅறுபது மில்லி லிட்டர் காய்ச்சிவடிகட்டிய நீரைக்
கலந்து, நாற்பத்துநாலு சதவீத
அல்கஹால் ஆக்கியிருக்கிறான். இது ஒருலீட்டர் தூய ரஷ்ய வொட்காவுக்கு நிகரானது. இதை
வெளியில் வாங்குவதாயின் கணிசமான அளவு பணம் கொடுக்கவேண்டும். தான் பிடிபடாதிருக்க
அக்காமாவுக்கும் அவ்வப்போது கொடுத்துப் பழக்கியிருக்கிறான். படிப்படியாக மதுவுக்கு
அடிமையான அக்காமா, நத்தார் தினத்தன்று மாலை, மதுச்சாலைக்கு மது
அருந்தப் போயிருக்கிறான். தொடர்ந்து மது அருந்தப் பணம் போதவில்லை. நேரே ஆய்வு
கூடத்துக்கு வந்தவவன், மது மயக்கத்தில் ஆய்வு
கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மெதைல் அல்க்கஹாலை எடுத்து அருந்தியிருக்கிறான்.
ஏற்கனவே போதையிலிருந்தவனுக்கு எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தநாள் காலையில் கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன.
மெதைல், எதைல் இரண்டும் அல்க்கஹால் மதுக்களே! இவை இரண்டுக்கும் ஒரு காபன் அணுவும்
இரண்டு ஐதரசன் அணுக்களுமே வித்தியாசம்.
நாம் அருந்தும் விஸ்க்கி, பிரண்டி, வொட்கா, சாராயம் அனைத்திலும்
எதைல் அல்க்கஹால் 40 தொடக்கம் 45 சதவீதம்வரை
கலந்திருக்கும். இதை அளவோடு அருந்தினால் சௌக்கியத்துக்கு எந்தக் கேடுமில்லை. ஆனால்
மெதைல் அல்க்கஹால் நஞ்சு,
அருந்தினால் சில
மணித்தியாலங்களுக்குள் கண்களிலுள்ள நரம்புகளைப் பாதித்து, கண்களைக் குருடாக்கும்.
பத்து சதவீதமளவில், மெதைல் அல்க்ககோல் கலந்த, எதைல் அல்க்ககோல்தான்
கடைகளில் விற்கப்படும் மெத்திலேட்டட் ஸ்பிரிட். இதை விளக்கு எரிக்கப்
பாவிப்பார்கள். முன்பு பெட்ரோமாக்ஸ் விளக்குக் கொழுத்த ஊரில் பாவித்ததும்
இதைத்தான். போதைக்காகச் சிலர் மெத்திலேட்டட் ஸ்பிரிடுடன் எலுமிச்சைச் சாறைக்
கலந்து குடிப்பதுமுண்டு. எலுமிச்சை, மெதைல் அல்க்ககோல் நஞ்சைச் சமப் படுத்தும் என்பது அவர்கள் வாதம். ஆனால் இது
அபாயகரமானது. படிப்படியாக கண்பார்வையைக் குறைத்து குருடாக்கும்.
எதைல் அல்க்கஹால் மதுவை வடிக்கும் போது மெதைல்
அல்க்ககோலும், மலிவு விலை மதுவகைகளில்
கலந்திருக்க வாய்ப்புண்டு. கிராமங்களில் வடிக்கும் கள்ளச் சாராயம் அல்லது காச்சுச்
சாராயம் இந்தவகைகளே.
மெதைல் அல்க்ககோல் - Methyl alcohol, CH3OH.
எதைல் அல்க்ககோல் - Ethyl alcohol, C2H5OH
வைத்தியசாலையிலிருந்து கண்பார்வை இழந்து வெளியே
வந்த அக்காமா, காட்டிலுள்ள நச்சு
விதைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
அக்காமாவின் மரணம் பீட்டரை எந்தவிதத்திலும்
பாதித்ததாகத் தெரியவில்லை. களவை நிரூபிக்கமுடியாத நிலையில், அவனை வேறு
ஆய்வுகூடத்துக்கு மாற்றும்படி துறைத் தலைவருக்கு சிபார்சு செய்யமட்டுமே மாலினியால்
முடிந்தது.
ஒரு சமூகத்தை ஏமாத்திப் பிழைக்க வேண்டுமென்றால், அவர்களைப் போதைக்கு
அடிமையாக்க வேணுமென்பார்கள். அபொர்ஜினிகள் விஷயத்தில், வெள்ளையர்கள் செய்ததும்
இதைத்தான்.
வெள்ளையர்கள் பெரும்பாலும் குடியை, கொண்டாட்டத்துடன்
நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறிமுகப்படுத்திய குடியிலிருந்து
அபொர்ஜினிகளால் வெளியேற முடியவில்லை. அது வெள்ளையர்கள் பழக்கிய குடி, அபொர்ஜினிகளின்
வாழ்க்கையை அழித்த குடி. மரணத்தின் குடி!
-ஆசி கந்தராஜா-
No comments:
Post a Comment