Saturday, 23 January 2021

 அந்திமம்

ஆசி கந்தராஜா



ம்மாவிடம், ஒரு கொட்டைப் பெட்டி இருந்தது. அதைச் செல்வச்சந்நிதி கோவில், தேர்த் திருவிழாவின் போது வாங்கியதாக ஞாபகம். அது, பனம் சார்வோலையால், தட்டையாக, தனியான மூடியுடன் பின்னப்பட்டு, பல வர்ணங்களில் சாயம்போட்ட குருத்தோலையால் பொத்தி, அழகு படுத்தப்பட்டிருந்தது. அம்மா வாங்கிய கொட்டைப் பெட்டியில், ஒன்றுக்குள் ஒன்றாகச் செருகப்பட்ட நான்கு அறைகள் இருந்தன. அதன் உட்பகுதியில் சில்லறைகளும், பக்கவாட்டில் தாள் காசும் வைத்திருந்தார்.

அம்மா கணக்கில் கெட்டிக்காரி. பெரிய நெடும் பிரித்தல் கணக்கையும் சில நொடிகளில் மனதுக்குள் போட்டுவிடுவார். எத்தனையோ பணப் பிரச்சனைகளை, தனி ஆளாக எதிர் நோக்கிச் சமாளித்தவர். அவர் கருமியல்ல. எங்கே காசைப் பொத்திப் பிடிக்கவேணும், எங்கே விரிக்கவேணும், என அவருக்குத் தெரியும். ஆனால், வயோதிபம் வந்து, அவரது இயக்கம் தானாகக் குறைந்தபோது, காசு விஷயத்தில் அம்மாவிடம் எவ்வளவோ பெலவீனங்கள்!

 பாலன் பிறக்கிறான்

ஆசி கந்தராஜா




றட்சி. கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலே மழை பொய்த்து விட்டது. இதுவரை காணாத வறட்சி எனப் பேசிக் கொண்டார்கள்.

கிளிமஞ்சாரோ (Kilimanjaro) ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை. அதன் உச்சியிலுள்ள உறைபனிகள் என்றும் உருகுவதில்லை. இருந்தாலும் என்னஅதன் அடிவாரத்திலே இப்பொழுது வறட்சி. பசுமை இழந்து குச்சிகளைத் தாங்கிய மரங்கள். வற்றிய நீரோடை. மரங்கள் சிலவற்றின் உச்சிகளுக்குதமது கழுத்தை நீட்டி ஒட்டகச்சிவிங்கிகள் உணவு தேடின. மெலிந்தன வலியனவுக்குப் பணியும் நியதி. பிணம் தின்னும் கழுகுகள் மட்டும் வயிறாற உண்ட களைப்பில் உயிர்ப்பிழந்த மரக்கொம்புகளில் இளைப்பாறின. மலை அடிவாரத்தின் தென்மேற்குத் திசையில் குரவைச் சத்தங்களும் மேளச்சத்தங்களும் ஒலித்தன. அங்கு வாழும் சுதேசிகள் ஒன்றாக இணைந்து வேள்வி நடத்துகிறார்கள். மழை பொய்த்ததால் வனமும் மக்கள் வயிறும் வறண்டு விட்டன. அந்த வறட்சியிலே ‘டிரைபல்’ (Tribal) முறுகல்களும் விரோதங்களும் கருகினபோலும். அனைவருக்கும் இப்போது வேண்டியது மழையே! அதற்காகஅவர்கள் கலாசார மரபு, வேள்வியும் கூட்டுவழிபாடும்!

வேள்வி தொடங்கியிருக்க வேண்டும். வேள்வியில் பலியிடும் ஆடுகளின் அலறல் கொட்டுமேளச் சத்தங்களை மேவி எதிரொலித்தது. எலும்பும் தோலுமாக வயிறு ஒட்டிய நிலையில் உள்ள ஆடுகள்மேலதிகமாக வேள்வி நடக்கும் இடத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.

 முன்னிரவு மயக்கங்கள்

ஆசி கந்தராஜா



ந்த அழைப்பிதழ் அழகாக அமைந்திருந்தது.

கம்பியூட்டரில் வடிவமைத்து கலர் பிரிண்டரில் அச்சடித்திருந்தார்கள். அழைப்பிதழ் மேசைமேல் கிடந்த கோலத்தில் அது மனைவிக்குப் பிடிக்காத ஒருவர் அனுப்பியதென அவன் ஊகித்துக் கொண்டான்.

சிட்னியில் வாழும் நண்பன் ஒருவன் தன் மனைவியின் நாற்பதாவது பிறந்த தின விழாவிற்கு குடும்ப சமேதராய் வருமாறு அழைத்திருந்தான். பொருளாதாரத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் அவன் எதையும் மணி கிலுக்கிச் செய்வது வழக்கம். சமீபத்தில்தான் தனது வெடிங் அனிவேசரியை மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தடல்புடலாக கொண்டாடியிருந்தான். அந்தப் பாட்டிக்கு வெள்ளைக்கார நண்பர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் ‘கோட்சூட்’ என படு நாகரீகமாக உடையணிந்திருந்தார்கள். நண்பன் தானே என்ற நினைப்பில் சாதாரண உடையில் சென்று பாட்டி முடிந்து வீடு வந்து சேரும் வரையிலும் மனைவியிடம் வாங்கிக் கட்டிய பேச்சுக்கள் சுந்தரமூர்த்திக்கு சட்டென்று நினைவுக்கு வந்தன. இந்த தடவை மற்றவர்களுக்கு சோடை போகாத விதத்தில் உடுத்த வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

அன்றைய இரவுச் சாப்பாட்டின் போது நண்பனின் பாட்டிக்கு என்ன பரிசு கொண்டு போவது என்ற பிரச்சனையை மகள் துவக்கினாள். அவள் பாவம். வஞ்சகமில்லாமல் ஏதாவது ஆசையாய் பேசத்துவங்கி சுந்தரமூர்த்தியை வில்லங்கத்துள் மாட்டிவிடுவாள்.

 அவையளுக்கென்னபுளிப்புடிச்சவை. காசுத்திமிரைக் காட்ட ‘ஒண்டவிட்ட’ ஒரு கிழமை பாட்டிவைப்பினம்நீங்களும் நல்லாய் பல்லை இளிச்சுக் கொண்டு போய் திண்டு குடிச்சுப் போட்டு வாருங்கோ. அவனவன் நாலைஞ்சு வழியிலை காசுழைக்கிறான்பாட்டி வைக்கிறான். உங்களுக்கென்ன வக்கிருக்கெண்டு கூத்தடிக்கிறியள்?’ தனது மனஎரிச்சலை வெளியில் கொட்டினாள் மனைவி.

 வெள்ளிக்கிழமை விரதம்

ஆசி கந்தராஜா

பிறந்த மண்ணைவிட்டு புதிய வாழ்க்கை ஒன்று தேடும் நீண்ட பயணத்திலேவெள்ளிக்கிழமை விரதம் போன்ற மண்ணின் பெருமைகளையும் மரபுகளையும் தொலைத்து விட்டேன் என்கிற வருத்தம் அவருக்கு சடுதியாக இந்த இருண்ட கண்டத்தில் தோன்றுவதற்கு காரணம் என்ன?

ஆபிரிக்க பல்கலைக்கழகமொன்றில் சிறப்பு விரிவுரை நிகழ்த்தவென வீரசிங்கம் வந்திருக்கிறார். அவரின் விரிவுரைகள் சாரமுள்ளதாகவும் சுவராஸ்யமானதாகவும் அமையும். அதற்காக அவர் கடுமையாகவும் உழைப்பார். ஆனால் வெள்ளிக் கிழமைகளிலே நடைபெறும் விரிவுரைகளை வெறும் நாற்காலிகளுக்கு ஆற்றும் அவலம். பெண்கள் வரமாட்டார்கள். ஆண்களிலும் நூறு சதவீதம் எதிர்பார்க்க இயலாது. அவரின் விரிவுரைகள் மாணவரைக் கவரவில்லையாஇந்த எண்ணம் அவரை வருத்தியது. அவரின் மனக்குறையை மொறிஸிடம் கொட்டித் தீர்க்கத் துணிந்தார்.

 ஒட்டுக் கன்றுகளின் காலம்

ஆசி கந்தராஜா




பென்னாம் பெரிய டிரக் வண்டிமெதுவாக வந்து Cul-de-sac’ இல் நின்றது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள்.

ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள்அதனை விளையாட்டு மைதானமாகப் பாவிப்பார்கள்.

சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாகவானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய்புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது. அந்த வளையங்களை விரல்களை ஒவ்வொன்றாக மடித்து எண்ணி, ‘ஆறு’ என்று கத்தினாள் அபிராமி ஆங்கிலத்தில்.

 தப்புஐந்தரை!’ என மறுப்புச் சொன்னான் ரோனி.

எப்படி அரை வரும்என அபிராமிக்கு ஆதரவாகக் குறுக்கிட்டான் யோன்.

கடைசி வளையத்தின் போது என்ஜினை நிற்பாட்டியாயிற்றே…!’ நாக்கு நுனியை சிறிது வெளியே தள்ளி ‘கெக்கே’ காட்டினான் ரோனி.

 அந்நியமாகுதல்

ஆசி கந்தராஜா



ழமையான காற்றழுத்த பிரச்சனைகள் ஏதுமின்றி இந்து சமுத்திரத்தின் மேலாக விமானம் அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது. இரவு உணவு முடிந்தபின் அனைவரும் தூங்குவதற்கு வசதியாக விளக்குகள் அணைக்கப்பட்டுநடுவிலுள்ள பெரிய வெண்திரையிலும் ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்பட்ட குட்டி ‘மொனிற்றிர்’களிலும் வெவ்வேறு சனல்களில் படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

விமானத்தில் வழங்கப்பட்ட இரண்டு ‘பெக்’ விஸ்கியைக் குடித்து நன்றாகச் சாப்பிட்டும் வழமைக்கு மாறாக அன்று என்னால் தூங்கமுடியவில்லை. அந்த சம்பவம் மீண்டும் மீண்டும் என் மனதை அலைக்கழித்தது. யன்னலோர இருக்கையை நன்கு பதித்து தலையணை ஒன்றை தலைமாட்டிலும் இன்னொன்றை நெஞ்சுடனும் அணைத்துப் பிடித்தவாறு எனக்குப் பின்னால் மல்கம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். அவனது உணர்வுகளை அந்த நிகழ்வு அதிகம் பாதித்திருக்கவில்லைப் போலும். Poor fellow’ என இரண்டு வார்த்தைகளை உதிர்த்து அதற்கு வடிகால் அமைத்துக் கொண்டான். நடந்து முடிந்த காரண காரியங்களுக்காக பெரிதும் அலட்டிக்கொள்ளாத பிறவி அவன். ஆனால் வாழ்க்கையின் மேடுபள்ளங்களை யெல்லாம் கடந்து கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து முன்னேறிய எனக்குஅது பெரும் தாக்கத்தையேற்படுத்தியது.

 கோபுர தரிசனம்

ஆசி கந்தராஜா

ந்தக் குடியிருப்புக்கு கடிகாரம் தேவையில்லை. அதில் வாழ்பவர்கள் கடிகாரத்தின் முள்ளைப் போலவே இயங்கினார்கள். ‘அப்பாட்மென்ற்’ கதவு அடித்து சாத்தப்படும் சத்தத்தை தொடர்ந்துமாடிப்படிகளில் ‘பூட்ஸ்’ சத்தம் கேட்டால் இறைச்சிக்கடை யூசுப் காலை ஐந்து மணிக்கு கடைக்குப் போகிறான் என்று அர்த்தம். ஆனால் நாலுமணிக்கு வேலைக்கு செல்லும் குப்பை அள்ளும் லொறிச்சாரதி மத்தியாஸ்பூனை போலத்தான் வெளியேறுவார். மற்றவர்களை தூக்கமெழச் செய்யத் தான் காரணமாக இருக்கக்கூடாது என்கிற அவதானம் அவருக்கு. யூசுப்பிற்கு பிறகு அரக்கப் பரக்க புறப்படுவார் ஹெலன். அவருக்கு விமானநிலைய சுங்கப் பிரிவில் வேலை. இரண்டு ரயில்கள் எடுத்துநேரத்துக்கு விமான நிலையம் செல்ல வேண்டும் என்கிற அக்கறையில் அவர் ஏனையோர் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. ‘சென்ரலிங்’ சியாமளா படியிறங்கி வந்தால்சரியாக ஏழுமணி என்று அர்த்தம். அதற்குப் பிறகு அப்பாட்மென்ற் முழுவதுமே விழித்துக்கொள்ளும். எட்டுமணிக்கு பெரும்சத்தத்துடன் பள்ளிக்குச் செல்லும் பல்லினக்குழந்தைகள் புறப்படுவார்கள். பல மொழிகள்பலவகைக் குரல்கள். இனம்புரியாத குதூகலச் சத்தங்களின் ஒலிச் சேர்க்கை!

இந்தக் குடியிருப்பின் பின்பக்க வாசலால் இரண்டாம் மாடிக்குச் சென்றால்நடுவில் உள்ள ஆறாம் இலக்க ‘அப்பாட்மென்ரில்’தான் பார்வதி அம்மாள் குடியிருக்கிறார். ‘கவுன்சில்’ கட்டிக் கொடுத்த இந்த குடியிருப்புக்கு அவர் குடிவந்து ஐந்து வருடமாகிறது. இந்த குடியிருப்பில் வாழும் பெரும்பாலானோரைப் பொறுத்தமட்டில்பார்வதி அம்மாள் தனியாக வாழும் ஒரு கிழவி. ஒரு காலத்திலே ‘ஓகோ’ என கொடிகட்டிப் பறந்த டாக்டர் நடராஜசிவத்தின் மனைவியேதானென்பதை அவர் இந்தக் குடியிருப்பிலே பறைசாற்றிக் கொண்டதில்லை.

 தேன்சுவைக்காத் தேனீக்கள்

-ஆசி கந்தராஜா-

ட்டப் பின்படிப்புக்கு புலமைப்பரிசில் பெற்றுநளாயினி யப்பான் வந்து ஆறுமாதமாகிறது. பாஷை இன்னமும் சரியாகப் பிடிபடவில்லை. இதனால் மொழியில் பயிற்சி பெறவென யப்பானிய சிறார்களுடன் வலிந்து ஒட்டிக்கொள்வாள்.

அன்று பல்கலைக் கழகத்திருந்து நளாயினி வீடு திரும்புகையில் யப்பானியச் சிறுமிகள் இருவர் சாமான் நிரம்பிய கைகளுடன் நடந்து வந்தார்கள். வயது பத்தும் பன்னிரண்டுமாக இருக்கலாம். நிச்சயம் பதினைந்தை தாண்டாது. பைகளின் சுமை அவர்களின் முகங்களில் தெரிந்தது.

நான் உதவட்டுமா…?’ என நளாயினி பேச்சை ஆரம்பித்தாள். பெரியவள் பதிலுக்குப் புன்னகைத்தாள். சின்னவளோ நளாயினியை ஏக்கத்துடன் பார்த்தாள்.

இப்படிக் கொடு நான் தூக்கிவருகிறேன்’ என்று சின்னவளின் கையில் இருந்த பைகளை நளாயினி தன் கைகளுக்கு மாற்றிக் கொண்டாள்.

உன் பெயரென்ன…?’

கெய்கோ’ என்றாள் பெரியவள்.

 துர்கா தாண்டவம்

ஆசி கந்தராஜா

லசலத்து ஓடிக்கொண்டிருந்தது நைல் நதி.

வெசொங்காஅதிலே குளித்துக் கொண்டிருந்தான். அந்தக் குளிப்பு திருப்தி தருவது. கடந்த சில நாட்களாகஅவனுக்கு தன்மீதே ஒருவகை வெறுப்பு. அந்த வெறுப்பு மற்றவர்கள் மீது பற்றிப் படர்வதாகவும் தோன்றுகிறது.

நதியில் நீச்சல்வாழ்க்கையில் எதிர் நீச்சலா?

வெசொங்கா, Barக்கு சீக்கிரம் வந்திடு. அதையும் இதையும் பிணைத்துக் குழம்பாதே!’ என்று எலிசபெத் குரல் கொடுத்தாள். அவள் இவனின் தாய். கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலே பொதுமொழியாகப் பயிலப்படும் ‘சொகியில்’ பேசினாள். தொழில் முறையாக இந்த மொழியில் பேசத்துவங்கி அதுவே வீட்டு மொழியும் ஆகிவிட்டது. ‘மசாய்’ இனத்தைச் சேர்ந்தவள் என்கிற அடையாளம் மெல்ல மெல்ல விலகுகின்றது.

மகன்படும் வேதனைகளை எலிசபெத் நன்கு அறிவாள். ஆனால் சர்வ வல்லமையுள்ள சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் அந்தக் கிழவனை எதிர்த்து அவளால் என்ன செய்யமுடியும்?

 தவக்கோலங்கள்

ஆசி கந்தராஜா



டலில் இருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின்மீது சென்றது.

ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன்.

என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்கள்.

கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் ‘ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாக கோடைகாலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடைசெய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்டகாலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ‘ஆயத்தீர்வை’ என அழைக்கப்பட்டதாகவும்அது வசூலிக்கப்பட்ட இடம் ஆயத்தடி என வழங்கப்படலாயிற்று என்றும் என் ஐயாஆயம் பற்றிக் கூறியவை நினைவுக்கு வருகின்றன. அவர் கைதடியிலே பிறந்து வளர்ந்து அங்கேயே தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பொருள் சேர்க்கா விட்டாலும் ‘நல்லமனிதர்’ என்ற பெயரை பல வட்டங்களிலும் சம்பாதித்திருந்தார். இப்படிப்பட்ட வாத்தியாரின் பிள்ளை தப்புத்தண்டா செய்யக் கூடாது என்ற கிராமத்தின் பொதுவான விதிபல தடவைகளில் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதுண்டு.

 இனமானம்

ஆசி கந்தராஜா


ப்பொழுதெல்லாம் சாம்பசிவம் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறான். அவனுடைய உத்தியோகம் அப்படி!

இன்றும் பயணம். விமான நிலையத்திற்கு சாம்பசிவத்தின் மனைவிதான் காரை ஓட்டிவருவாள். சாம்பசிவம் காரில் ஏறும்போது 'ஜிம்மி' ஓடிவந்து தன் முன்னங்கால்களை அவன் கைகளிலே போட்டு விசுவாசத்துடன் இரண்டு தடவைகள் முக்கி முகர்ந்தது. 'ஜிம்மி' அவன் வீட்டிலே செல்லப் பிள்ளைப்போல் வளர்ந்து வரும் நாய். அது இவ்வாறு வழக்கமாகச் செய்யும் வழியனுப்புதல், அவனுக்குப் பிடித்தமானதொன்றாய் அமையலாயிற்று.

சிட்னி விமான நிலையத்தில் எல்லாம் திட்மிட்டபடி நடந்தேற சாம்பசிவம் விமானத்தில் ஏறிக்கொண்டான். இது தென் கொரிய நாட்டைச் சென்றடைவதற்கான பறப்பு!

 மறுக்கப்படும் வயசுகள்

ஆசி கந்தராஜா

 

குப்பில் கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது!

பன்னிரண்டை மூன்று மூன்றாக எப்படி வகுக்கலாம்என்ற கணக்கைப் புதிய முறையில் விளக்கிக் கொண்டிருந்தார் கணக்கு ரீச்சர் மிஸ்ஸிஸ் தொம்ஸன்.

நாலாம் வகுப்பு படிக்கும் ராஜிக்குட்டியின் சிந்தனையோ கிங்ஸ்வூட் பார்க்கில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த றாட்டணத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது.

ராஜி எப்போதும் வகுப்பில் முன்வரிசையிலேயே அமர்ந்து கொள்வாள். அதுவும் அம்மாவின் கட்டளைப்படி. எதிலும் எப்படியும் தன் மகள் முதலாவதாகத் திகழ வேண்டும் என்கிற தவிப்பு அம்மாவுக்கு!

ராஜி படிப்பில் கெட்டிக்காரிதான். பாடத்தின் நடுவே கேள்வி கேட்பது மிஸ்ஸிஸ் தொம்ஸனின் வழக்கமல்ல. இதனால் தனது மனதைத் தன்னிச்சையாகக் கிங்ஸ்வூட் பார்க்கில் மேயவிட்டாள்.

சனிக்கிழமைகளில் நடக்கும் ரியூஷன் கிளாஸில் போன வருடமே சிக்கலான நெடும் பிரித்தல் கணக்குவரை ராஜி படித்திருந்தாள். ரியூஷன் என்றால் அது ராஜிக் குட்டிக்கு மட்டும் தனியாக நடக்கும் வகுப்பல்ல. இதுவும் பள்ளிக்கூட வகுப்பு போன்றதுதான். பத்துப் பதினைந்து பேர் வரை வகுப்பில் இருப்பார்கள். பாதிக்கு மேல் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த ஆசிய நாட்டவர்கள். தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அங்கு குறைவில்லை.

 அம்மா பையன்

ஆசி கந்தராஜா



'ன்சம்-வெயர்-பக் (Ransomware bug) உடன் இரவு பகலாகப் போராடி வருகிறார் பேராசிரியர் சந்திரசேகரம். அவர் சிட்னி பல்கலைக்கழகம் ஒன்றின் கொம்பியூட்டர் துறைத் தலைவரர்.  எங்கும் எதிலும் தனது மூக்கை நுழைத்து ஆதிக்கம் செய்யும் கொம்பியூட்டரில் றன்சம்-வெயர் வைரஸ் தாக்குதல் காரணமாக அழிந்துபோன தரவுகள் விரைவில் மீட்கப்படவேண்டும். இல்லையேல் உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்.

'ரன்சம்வெயர் பக்பிரச்சனைக்கு Software patch ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறான் அந்த வியட்நாமியன்...!என்ற தகவலுடன் வந்தமர்ந்தான் ரோணி. பேராசிரியரின் கீழ்ப்பணிபுரியும் அவன் அவரது வலக்கரம்.

 ‘யார்...? பெங்லீ என்பவனா..இதற்கு முன்பு Hardware bios ஒன்றை அறிமுகம் செய்த அதே பெங்லீ தானா?’ எனப் பேராசிரியர் ஆர்வம் காட்டினார்.

 எலி புராணம்

ஆசி கந்தராஜா

ன்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்குவேலையால் வந்த களை! அத்துடன்சமையலை கெதியாய் முடித்தால்தான்மகளின் படிப்பைக் கவனிக்கலாம்.

அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும்இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள்.

சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது.

சுளகு இருந்தால் தாருங்கோநான் புடைத்துத் தருகிறேன்…’ என்றார் எனது அம்மா. இரண்டு மாதங்களின் முன்புதான் என்னுடன் இருப்பதற்கு நிரந்தர விசா அனுமதி கிடைத்து அம்மா சிட்னி வாசத்தை ஏற்றிருந்தார். அவர் ஒரு கைம்பெண்.

 சூக்குமம்

ஆசி கந்தராஜா

(இந்தியா டுடே, 21 ஜூன் 2000)



ராணுவ ஜீப் சடுதியாக அவர் முன் நின்றதும் சின்னக் கண்ணு திகைத்துப் போனார். ஜீப்பினுள் இருந்த ‘முக மூடி’ இளைஞன் தலையை ஆட்டிவேசின்னக்கண்ணுவின் முகத்தில் பளார் என ஒரு அறை விழுந்தது.

உன் மகன் சந்திரன் ‘கொட்டியா’(Tiger) தானே.?, சொல்லுடா!’

சின்னக்கண்ணு மிடறு முறித்து பதில் சொல்வதற்கிடையில் மீண்டும் பல அறைகள் விழுந்தன. அவருடைய மேலுதடு வெடித்து இரத்தம் வடியத் துவங்கியது. தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து வெடித்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டார்.

சந்திரன் இருக்கிற புலிப்படை முகாம் எங்கையெண்டு உனக்குத் தெரியும் தானே…?’

சின்னக்கண்ணுவின் கட்டுக் குடுமியை இறுகப் பிடித்துத் தலையை மேலும் கீழும் ஆட்டிமுழங்காலை மடித்து நாரியில் பலமானதொரு உதைவிட்டான் இராணுவ கோப்ரல் ஒருவன். ஜீப்பின் பின்புற ஆசனங்களுக்கு நடுவே முகம் குப்புற விழுந்தார் சின்னக்கண்ணு.

.