Friday, 27 November 2026

 

‘பொஸம்’

ஆசி கந்தராஜா


(ஞானம் 2026)

பகல் முழுவதும் நீலமாக விரிந்திருந்த வானம், மாலை நெருங்க, யாரோ அதன் மீது சாம்பல் நிறத்தைப் பூசியது போல மாறியது. சிட்னியின் வானம் வசந்த காலத்தில் பெரும்பாலும் அப்படித்தான்.

மணியம் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் விரல்கள் மண்ணுக்குள் இறங்கும்போது, அவருடைய நினைவுகள் பின்னோக்கிச் செல்லும். விரல்களுககு இடையில் சிக்கியிருக்கும் மண், அவருக்கு இந்த நாட்டின் மண்ணாக மட்டும் தெரிவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு காலடியில் ஒட்டிக்கொண்டு தன்னுடன் வந்த தாயகத்தின் மண்ணாகவும் தோன்றும். ஊரில் விட்டுவந்த வீடும், அந்த வீட்டைச் சூழ்ந்திருந்த மண்ணும், தலைமுறைகளாக அவர் குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அவர் நினைவில் வந்து மறையும்.

மணியம் ஊரிலிருந்து வெளியேறி பல ஆண்டுகளாயிற்று. 

பதின்ம வயதில் விடுதலை வேண்டித் துவக்குத் தூக்கிப் போராடியதால் குடும்பம், உறவுகள், நிம்மதியான வாழ்க்கை என, அனைத்தையும் இழந்திருந்தார். வள்ளத்தில் வாரக்கணக்காக கடலில் அலைந்து, அகதி முகாம்களில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு, எண்ணற்ற விசாரணைகளையும் காத்திருப்புகளையும் கடந்து ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் காலடி எடுத்துவைத்த போது, அவருக்கு வயது, நாற்பது. வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள் ஏற்கனவே அவரது தலைமுடியிலும் மீசையிலும் நரையாகப் படரத் தொடங்கியிருந்தன.

விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் அரங்கேறும் செயற்பாடுகள், மணியத்தின் மனத்தில் கசப்பைச் சேர்த்திருந்தன. மக்களின் வலி அரசியலானது. இனத்தின் கண்ணீர் முழக்கமானது. போரில் இறந்தவர்களின் நினைவுகள் சிலருக்கு பிழைப்புக்கான மூலதனமாகின. மணியம் எல்லாவற்றையும் பார்த்தார். அனைத்தையும் கேட்டார். எதற்காகப் போராடினோம்? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. யாருக்காகப் போராடினோம்? என்ற இன்னொரு கேள்வி அதற்குப் பின்னால் வந்து நின்றது.

போராட்டம் இப்பொழுது யாருடைய வாழ்க்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறது? என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்த காலத்தில், மணியம் எல்லாவற்றிலிருந்தும் விலகினார். கொடியிலிருந்தும் முழக்கத்திலிருந்தும் கூட்டத்திலிருந்தும் தன்னை ஒரு பெயருக்குள் அடைத்து வைத்திருந்த கடந்த காலத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டார். முடிவில், அமைதியான ஒரு புறநகரைத் தனது வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்தார். இங்கே அவரை எந்தக் கொடியையும் எவரும் தூக்கச் சொல்லவில்லை. எந்த முழக்கத்தையும் எழுப்பச் சொல்லவில்லை. தான் யார் என்பதைத் தானே தீர்மானித்துக் கொள்ளக் கூடிய ஒரு இடமாக சிட்னியின் புறநகர்ப் பகுதி அமைந்தது.

கால ஓட்டத்தில் அவருக்குள் தேங்கிக்கிடந்த நினைவுகளுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அதை அவர் மண்ணுக்குள் தேடிக் கண்டார். நினைவுகளை வெறுமனே மனதுக்குள் சுமந்து கொண்டிருக்காமல், அவற்றுக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதனால் வீட்டின் பின்புறத்தே ஒரு தோட்டத்தை உருவாக்கினார்.

இலங்கையில் அப்பா நடவு செய்த கீரை. மாலை நேரத்தில் அம்மா பறித்த மிளகாய். மழை பெய்து முடிந்ததும் தோட்டத்தில் வீசிய மண்வாசனை என தன் இளவயது ஞாபகங்களைப் பின்வளவுத் தோட்டத்துக்குள் கொண்டுவர முயன்றார்.  தக்காளி, புடலை, பாவல், பயத்தை, கத்தரி, மிளகாய், கீரை, பூசணி என ஊரில் வளர்த்த ஒவ்வொரு செடியையும் இங்கும் நட்டுவளர்த்தார். ஒவ்வொரு செடியும் மரமும் ஊருடன் இணைக்கும் பாலமாக நின்றன.

சில நேரங்களில் தோட்டத்தின் நடுவே நின்றுகொண்டு நீண்ட நேரம் செடிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அவருக்குள் ஒரு கேள்வி எழும். இந்த நிலம் உனக்குச் சொந்தமானதா? இந்தக் கேள்விக்குப் பதில் தேடமுன் இன்னொரு கேள்வி வரும். நீ இங்கே ஒரு தற்காலிகமான நிழலா?

யார் அகதி? யார் பூர்வீகன்? யார் குடியேறியவன்? என்று மண் ஒருபோதும் கேட்பதில்லை. அதில் ஊன்றப்படும் விதை, நடப்படும் நாற்று எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதும் மண்ணுக்குத் தெரியாது. பாரபட்சமின்றி அவை வேர்விட்டு வளர மண் இடம் கொடுக்கும். அதுதான் வாழ்க்கை என்ற தீர்மானத்துக்கு மணியம் வந்தார்.

அன்று காலை மணியம் தோட்டத்திற்குள் வந்தபோது அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார். நேற்று வரை பசுமையாகத் தலையாட்டிக்கொண்டிருந்த மிளகாய்ச் செடிகள் சிதைந்து இருந்தன. சில கிளைகள் முறிந்து மண்ணில் கிடந்தன. பூசணிக் கொடிகள் இழுத்து அறுக்கப்பட்டடுக் கிடந்தன. தக்காளிக் காய்களிலும் கத்தரியிலும் பற்கள் பதித்த தடயங்கள் தெரிந்தன. புடலைகள் சில முற்றாகக் நறுக்கப்பட்டிருந்தன.

மணியம் ஒவ்வொரு செடியையும் வலியோடு தொட்டுப் பார்த்தார். முறிந்திருந்த கிளைகளைத் தடவிப் பார்த்தார். மண்ணுக்குள் பாதியாக வெளியே தெரிந்த வேர்களைப் பார்த்தார். நேற்று வரை உயிரோடு நின்றிருந்த செடிகள் இன்று அவருடைய கண் முன்னால் சாய்ந்து கிடந்தன. பல மாதங்களாக மனதில் வளர்த்த கனவு, ஒரே இரவில் சிதைக்கப்பட்டது போல இருந்தது. அவருடைய கண்களில் நீர் திரண்டது. அது செடிகளுக்காக வந்த கண்ணீர் அல்ல. தன் கைகளால் மீண்டும் கட்டியெழுப்பிய ஒரு உலகம், மீண்டும் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதற்கான கண்ணீர்.

தோட்டத்தின் நடுவே சம்மணமிட்டு நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.

மணியத்தை இந்த நிலையில் அவதானித்த பக்கத்து வளவில் குடியிருந்த வியட்நாமியன், இது பொஸத்தின் வேலை என்றான்.

பொஸமா?

ஆம். பொஸம்தான். பகலில் ஒளிந்திருக்கும். இரவில் வெளியே வரும் என விபரம் சொன்னான்.

அவனிடமே மணியம் தனக்குத் தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். சிறுவனாக இருந்தபோதே பெற்றோருடன் அகதியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த வியட்நாமியன், இப்போது மனைவி, பிள்ளைகள் சகிதம் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பொஸம் எப்படியிருக்கும்?

பெரிய காதுகள். கூர்மையான முகம். நீண்ட வால். கங்காருபோல வயிற்றுப் பைக்குள் குட்டியை வைத்திருக்கும். பகலில் தேடினாலும் கிடைக்காது. மரத்தின் பொந்துக்குள் அல்லது இலைகளுக்கு நடுவே பதுங்கியிருக்கும். இது வியட்நாமியன் சொன்ன விளக்கம்.

ஆஸ்திரேலிய பூர்வீக மிருகங்களான கங்காருவையும் குவாலாவையும் வொம்பட்டையும் மணியம் அவ்வப்போது பார்த்திருக்கிறார். பறக்க முடியாத ஆள் உயர, எமு பறவையையும் கண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய காட்டு நாயான டிங்கோ, ஒருமுறை வியட்நாமியனின் வளவுக்குள் புகுந்து, ஆட்டுக்குட்டி ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடியதையும் பார்த்திருக்கிறார். ஆனால் பொஸத்தை மட்டும் மணியம் ஒருபோதும் பார்த்ததில்லை.

இப்போது இதுதான் அவருடைய தோட்டத்திற்குப் பெரும் தலைவலியாகிவிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் இரவில் வந்து, உழைப்பின் சுவடுகளைச் சிதைத்துவிட்டுப் போயிருக்கிறது.

அன்றிரவு மணியம் தூங்கவில்லை.

தோட்டத்தின் ஓரத்தில் ஒரு தடியுடன் அமர்ந்திருந்தார். வீட்டு விளக்குகளை அணைத்திருந்தார். சுற்றிலும் இருள் படர்ந்திருந்தது. தொலைவில் மாதா கோவிலின் குவிய வெளிச்சம் மட்டும் வானத்தை நோக்கி மெல்ல எழுந்து கொண்டிருந்தது.

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டும்.

பின்வளவில் நின்ற மாமரத்தின் கூடலுக்குள் ஓர் அரவம் கேட்டது. முதலில் இலைகள் லேசாகச் சலசலத்தன. பின்னர் ஒரு கிளை அசைந்தது. பிறகு இன்னொரு கிளை. இருளுக்குள் ஏதோ ஒன்று மெதுவாக நகர்ந்தது.

மணியம் மூச்சை அடக்கிக்கொண்டார்.

மாதா கோவிலின் சுழல் வெளிச்சம் ஒரு கணம் மாமரத்தின் மீது படர்ந்தது.

இலைகளுக்கிடையே இரண்டு கண்கள் மினுமினுத்தன.

மணியம் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

இருளுக்குள் நிழல் போல அந்த உருவம் கிளையிலிருந்து கிளைக்கு நகர்ந்தது. சிறிது நேரம் அது அங்கேயே நின்று சுற்றிலும் பார்த்தது. காதுகளை நிமிர்த்தியது. ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கவனித்தது. சுற்றிலும் அமைதி. அதன் பிறகுதான் அது மரத்திலிருந்து மெதுவாக இறங்கியது.

மணியம் தடியை இறுகப் பற்றிக்கொண்டார். அது தோட்டத்திற்குள் நுழைந்ததும், அவர் பதுங்கிப் பதுங்கி அதனை நோக்கிச் சென்றார். இத்தனை நாட்களாகத் தன்னை ஏமாற்றிக்கொண்டிருந்த அந்த இரவு மிருகத்தை இன்று பிடித்துவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவருக்குள் இருந்தது.

தடியை உயர்த்தினார்.

பொஸம் திரும்பிப் பார்த்தது. இருவருடைய கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன.

மணியம் எதிர்பார்த்தது போல அது ஓடவில்லை. மாறாக, அங்கேயே நின்று அவரைப் பார்த்தது.

ஏய், மனிதனே! என்றது பொஸம்.

மணியத்தின் கை தளர்ந்து தடி கீழே இறங்கியது.

என்னைக் கலைக்கப் பார்க்கிறாயா? இது நியாயமா?

மணியம் திகைத்தார். உன்னைத் துரத்தாமல் வேறு என்ன செய்வது? நான் உருவாக்கிய தோட்டம் இது. என் உழைப்பு. என் நேரம். என் வியர்வை. நீ வந்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டுச் செல்கிறாய். இது நியாயமா?

பொஸம் சிறிது நேரம் அமைதியாக மணியத்தைப் பார்த்தது.

எனக்கு வேறு வழி தெரியவில்லை.

வேறு வழி இல்லையா?

ஆம். உன்னைப் போலத்தான் நானும்.

மணியம் புரியாமல் பார்த்தார். என்னைப் போலவா, என்ன சொல்கிறாய்?

ஆம். நீ உன் நாட்டில் எந்த இனப் பாகுபாட்டை அனுபவித்துவிட்டு இங்கே ஓடிவந்தாயோ, அதையேதான் நானும் என் சொந்தமண்ணில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

தடியை மெதுவாகக் கீழே வைத்த மணியம், என்ன சொல்கிறாய், உனக்குமா?

ஆம். ஆனால் ஒரு வித்தியாசம். அடக்குமுறைக்குத் தப்பி உன்னால் உன் நாட்டை விட்டு வெளியேற முடிந்தது. என்னால் என் மண்ணைவிட்டு வெளியேற முடியவில்லை.

அந்த வார்த்தைகள் மணியத்தின் மனதுக்குள் சென்று தைத்தன.

பொஸத்தை உற்றுப் பார்த்த மணியம், உனக்கென்ன பிரச்சினை? என்றார்.

நான் தரையில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்டிருக்கிறாயா?

இல்லை. இன்றுதான் உன்னை முதன்முறையாகப் பார்க்கிறேன்.

ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?

பதில் தெரியாததால் மணியம் மௌனம் காத்தார்.

பொஸம் தொடர்ந்தது. பகலில் நான் எங்கே இருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? மரத்தின் பொந்துக்குள், இலைகளுக்கு நடுவில். பகலில் ஒளிந்திருந்து இரவில் மட்டும் வெளியே வருகிறேன். இருளில்த்தான் தரை எனக்குச் சொந்தமானது போலத் தோன்றுகிறது.

அதற்குக் காரணம்? மணியம் மெதுவாகக் கேட்டார்.

ஆதிக்கம்.

அந்தச் சொல் மணியத்தின் காதுக்குள் நீண்ட நேரம் ஒலித்தது.

தரையில் ஆதிக்கம் செலுத்தும் கங்காருகளும் நாங்களும் ஒரே உயிரியல் குழுவைச் சேர்ந்தவர்கள். மாசூப்பியல்கள். வளர்ச்சியடையாத நிலையில் குட்டிகளை ஈன்றெடுத்து, பின்னர் வயிற்றுப் பைக்குள் வைத்து வளர்க்கும் ஆஸ்திரேலிய பாலூட்டிகள். இந்த நாட்டின் அதிசயமான பூர்வீக இனங்கள்.

என்னதான் சொல்ல வருகிறாய்?

ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் உலகில் சமமான இடம் கிடைத்து விடுவதில்லை. அதிக எண்ணிக்கையும் வலிமையும் கொண்டவர்களுக்கு முன்னால், மற்றவர்கள் ஓரம் கட்டப்படுவது நீ அறியாததா?

மணியம் எதுவும் பேசாது கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மண்ணில்தான் என் இனமும் பல தலைமுறைகளாக வாழ்கிறது. இந்த மண்ணுக்கு நான் அந்நியன் அல்ல. ஆனால், அந்நியனாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

மணியம் பதில் சொல்லமுடியாது தலையைக் குனிந்தார்.

நீயும் நானும் ஒன்றுதான் என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறாயா? உன்னைப் பெரும்பான்மை இனம் அடக்கியபோது நீ புலம் பெயர்ந்தாய். நான் மரத்துக்குள் ஒளிந்தேன். நீ கடலைக் கடந்து வந்தாய். நான் மரக்கிளைகளைக் கடந்து இரவைத் தேடுகிறேன்.

அதற்காக என் தோட்டத்தை அழிப்பதை எப்படி நியாயப் படுத்துகிறாய்?

பொஸம் அமைதியாகச் சொன்னது. உன் உழைப்பை அழிப்பது எனக்கும் விருப்பமில்லை. ஆனால் என் பசியைத் தீர்க்க என்ன செய்வது? நான் எங்கே போவேன்? பகலில் வெளியில் வந்தால் விரட்டப்படுகிறேன். மரங்களில் ஒளிந்தாலும் என் இருப்பை ஏற்றுக்கொள்ளாத பலர் இருக்கிறார்கள்.

பொஸம் சற்று நெருங்கி வந்தது.

அடைக்கலம் தேடி வந்த உன்னை, உன் கடந்த காலத்தைப் பற்றிக் கேட்காமல் ஏற்றுக்கொண்ட எனது மண்ணில் நீ வாழ்கிறாய். அதே மண்ணில் பிறந்த என்னை மட்டும் நீ ஏன் விரட்டுகிறாய்?

மணியம் தன் கையில் இருந்த தடியைத் தரையில் போட்டார். நெடுநேரம் இருவரும் பேசவில்லை. மாதா கோவிலின் வெளிச்சம் சுழன்று தோட்டத்தின் மீது விழுந்தது. பொஸத்தின் கண்கள் அந்த வெளிச்சத்தில் மேலும் மினுமினுத்தன.

மணியம் சிறிது நேரம் பொஸத்தின் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதன் கண்களில் தெரிந்த பசியை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. அதே நேரத்தில், தன் கைகளால் வளர்த்த செடிகளின் கிழிந்த இலைகளும் அவர் கண்முன்னே நின்றன.

நீ பசியோடு வருகிறாய் என்பதற்காக என் செடிகளை உன்னிடம் முற்றாக விட்டுவிட முடியாது. அதே நேரத்தில், உன் பசியையும் நான் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டுக்கும் நடுவில் ஒரு சமநிலையைத் தேடுவோம் என மணியம் சொன்னார்.

மணியத்தின் சமரசத்தைப் புரிந்துகொண்டதுபோல் பொஸம் மெதுவாகத் தனது வாலை அசைத்தது. அதன் கண்களில் முதல் முறையாக அச்சத்திற்குப் பதிலாக ஓர் அமைதி தெரிந்தது.

பொஸம் மீண்டும் மாமரத்தின் மீது ஏறியது. கிளையிலிருந்து கிளைக்கு மெதுவாகச் சென்றது. மரத்தின் இருளுக்குள் மறைவதற்கு முன் ஒரு கணம் திரும்பிப் பார்த்தது.

மணியம் தோட்டத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

மண்ணை மாற்றிக்கொள்ள முடிந்தவன் அந்நிய நாட்டில் அகதியாகிறான். மண்ணை மாற்றிக்கொள்ள முடியாதவன், அந்த மண்ணிலேயே அகதியாகிறான் என்ற உண்மை அவருக்குப் புரிந்தது.

அன்றுமுதல், தோட்டத்திற்குள் இருந்து வரும் ஒவ்வொரு இரவுச் சத்தத்தையும் அவர் முன்பு போலக் கேட்கவில்லை. தன் மண்ணிலேயே இடம் தேடி அலைகின்ற ஒரு உயிரின் உரிமைக் குரலாகவே கேட்டார்.

(ஞானம் 2026)

No comments:

Post a Comment

.