டாட்டூ சித்திரங்கள்.
ஆசி
கந்தராஜா
-1-
உள்நாட்டு
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமான பெட்டிச் செய்தி இது!
‘பயிற்றப்பட்ட தாதி ஒருவர், தனது பராமரிப்பின்
கீழிருந்த நோயாளியின் இறப்புக்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாதியும் நோயாளியும் இலங்கைத் தமிழர்கள்
எனத் தெரியவருகிறது. விசாரணை தொடர்கிறது’.
செய்தியில்
சொல்லப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பதால் அங்குள்ள தமிழ் ஊடகங்களும்
பக்கம்பக்கமாகச் செய்திகளையும் புலனாய்வுக் கட்டுரைகளையும் வெளியிடத் துவங்கின. யூ-டியூப்
செய்தியாளர்களும் தங்கள் பங்கிற்கு கற்பனை கலந்து கிசுகிசு தகவல்களை அள்ளித்
தெளித்தார்கள். காலஞ்சென்ற தமிழர், குலசேகரம் என்பதும் அவர் அந்த நாட்டில்
பிரபல்யமான பிரமுகர், புரவலர், கோவில்
தர்மகர்த்தா என்பதும் அங்குள்ள தமிழர்களுக்கும் தமிழ் மீடியாவுக்கும் தெரியும்.
அந்த அளவுக்கு அவர் பிரபல்யமானவர். அவரின் இறுதிச் சடங்கு, சகல
மரியாதைகளுடன் பெரும் தொகையான வெள்ளையர்களும் கலந்து கொண்ட நிகழ்வாக நடந்தது.
சென்ற மாநகர சபைத் தேர்தலில் குலசேகரம் தமிழர்கள் செறிந்து வாழும் தொகுதியில் போட்டியிட்டு கவுன்சில் மெம்பர் ஆனவர். அதனால் மாநகர சபைக் கட்டிடத்தில், கவுன்சில் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. வழமைக்கு மாறாக, உயிரோடு இருக்கும்போதே ஈழவிடுதலை அமைப்பொன்றினால், பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அதனால் வெளிநாடுகளில் வெளிவரும் ஈழவிடுதலை சார்ந்த பத்திரிகைகள், அவர் செய்த சேவைகள் பற்றி பக்கம் பக்கமாகச் சிலாகித்து எழுதின. மொத்தத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர் அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து உச்சுக்கொட்டினார்கள். அறுபது வயதைத் தாண்டிய பெரிசுகள் மட்டும் இவன் செய்த அநியாயங்களுக்கு வேறையெப்படிச் சாவான்? எனச் சபித்தார்கள். ஆனால், குலம் என வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட குலசேகரத்துக்கு வைத்தியசாலையில் என்ன நடந்ததென்பதோ, எப்படி இறந்தார் என்றோ வெளியிலுள்ளவர்களுக்குத் தெரியாது. அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் கமுக்கமாகவே இருந்தார்கள். பிரபலமான ஒரு தனியார் வைத்தியசாலையில் குலசேகரம் இறந்தார் என்பதை அறிவதில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குச் சிரமம் இருக்கவில்லை. அதிக கட்டணங்களை அறவிடும் தனியார் வைத்தியசாலையே அதுவென்பதும் குலசேகரம் போன்ற பெரும் பணக்காரர்களே அங்கு சிகிச்சை பெறமுடியும் என்பதும் ஊரறிந்த விஷயம்.
துடிப்பான இளம்
தமிழ் யூடியூப் நிருபர் ஒருவர், பல வழிகளில் புகுந்து விளையாடிப் பெற்ற
தகவல்களை வைத்து, குலசேகரம் புரொஸ்டேட் அழற்சி காரணமாக
சிறுநீர்வழி அடைத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக ஊகங்களைக் கலந்து ஒரு
பதிவுபோட்டார். காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக, மருத்துவ
சஞ்சிகையொன்று புரொஸ்டேட் சுரப்பி என்றால் என்னவென்றும் அதில் ஏற்படும் வீக்கம்,
அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வருவது இயல்பென்றும் வரிவடிவப்
படங்களுடன் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது. ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில்
ஒன்றான இச்சுரப்பி, ஆண்குறியின் அடிப்புறம், சிறுநீர்ப்பையும் சிறுநீர்க்குழாயும் சேருமிடத்தில், நெல்லிக்காயளவு பெருப்பத்தில் அமைந்திருக்குமென்றும் விந்துகள்
நீந்துவதற்குத் தேவையான திரவத்தைச் சுரப்பதே இதன் வேலையெனவும் காதலின் உயிர்மையம்
இதுவென்றும் விளக்கமாக விபரித்தது அக்கட்டுரை.
இவ்வளவு
அமளிகளுக்கு மத்தியிலும் குலசேகரத்தின் இறப்புக்கு காரணமான தமிழ்த் தாதியின் பெயர்
என்ன? தாதி செய்த தவறு என்ன? என்ற
கேள்விகளுக்குப் பொதுவெளியில் பதில்சொல்ல வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவிட்டது.
தங்கள் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுமென்ற காரணத்தை வைத்து, வைத்திய தர்மம் கருதி தாம் இரகசியம் காப்பதாகச் சொன்னார்கள். இதனால்
குலசேகரத்தின் மரணத்துக்கும் தாதிக்கும் என்ன தொடர்பு, என்பது
தொடர்ந்தும் மர்மமாகவே இருந்தது.
வேலைக்குச்
சேர்ந்த நாள் முதல் குறித்த தாதி, மகப்பேறு வார்டில் மட்டும் பணிபுரிந்ததாக
ஒரு தகவல் கசிந்தது. மகப்பேறு வார்டில் இரவு பகல் என்றில்லாமல் சுழற்சி முறையில்
பணிபுரிய வேண்டும். வேலை மிகக் கடினமென்றாலும் அதை விரும்பி ஏற்று, பணிக்குச் சேர்ந்த நாள்முதல் அங்கு பணிபுரிந்தது ஏன்? எனக் கேட்டு ஒரு யூடியுபர் மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்
போட்டார்.
கோவிட் லொக்டவுன்
காலத்தில் பெருமளவிலான மருத்துவ தாதிகளை வைரஸ் கிருமி
தாக்கியதால், வைத்தியசாலையில் தாதிகள் பற்றாக்குறை
ஏற்பட்டது. சத்திர சிகிச்சைக்குப் பின்னர் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டிய
நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய, கோவிட் வைரஸ் தொற்றாத ஒருவர் தேவையென,
குறித்த தாதி சர்ஜரி-ரிக்கவரி வாட்டுக்கு மாற்றப்பட்டார். அதே
வாட்டுக்கு குலசேகரம் புரொஸ்டேட் வெட்டி நீக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டது
முற்றிலும் தற்செயலான நிகழ்ச்சியே. ஆனாலும் அவர் சார்ந்த ஒரு ஈழ அமைப்பு ஈரைப்
பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கி, குறித்ததாதி மாற்று ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர் என தன்
பங்கிற்கு வெடிகொழுத்திப் போட்டது.
குலசேகரத்தாரால்
இயற்கையான வழியில் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இதனால் அடிவயிற்றில் துளைபோட்டு
சிறுநீர் சேகரமாக பையொன்றை இணைத்திருந்தார்கள். உயிர்மையத்தில் கத்தி வைத்ததால்
பயங்கரமாக வலித்தது. வலியைக் குறைக்க ஊசி போட்டு பையை மாற்றும்போதே குலசேகரத்தார்
அடிவயிற்றிலும் இடுப்பை அண்மித்த தொடைகளிலும் பச்சை குத்தியிருந்த டாட்டூச்
சித்திரங்கள் தாதியின் கண்களில் பட்டன. வெவ்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் அமைந்த
டாட்டுச் சித்திரங்களைக் கண்டதும் தாதியின் உதடுகள் துடித்தன. விபரிக்க முடியாத
உணர்வுகளில் மனது உறைந்துபோனது.
சேவையிலிருந்து
தற்காலிகமாக நிறுத்தியது, தாதியைப் பெரிதும் பாதித்தாகத்
தெரியவில்லை. மாறாக, இரவுபகல் என்றில்லாமல் நீண்டகாலம் ஷிப்ட்
வேலை செய்ததால், பணி இடைநிறுத்தம் அவருக்கு ஓய்வாகவும்
விடுமுறையாகவும் இருந்தது. மேலதிகமாக, இதுவரை காலமும்
மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைத்த நிம்மதியையும் தந்தது.
விசாரணை
தன்பாட்டுக்கு நடக்கட்டும், விடுமுறையில் எங்காவது போகலாம் என
நினைத்தார். எங்குபோவது, யாருடன்போவது என்ற சிக்கல். முடிவில்
இலங்கைக்கு போகலாம் என்ற தீர்மானத்தில் மனம் நிலைகுத்த, இதற்கு
எதிர்வினையாற்றிய அவரது மனச்சாட்சி, ஊரில் உனக்கு யார்
இருக்கிறார்கள்? என எச்சரித்தது.
-2-
இலங்கையில்
ஈழவிடுதலைப் போராட்டம் முனைப்படைந்திருந்த காலத்தில் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் படித்தவள் கயல்விழி. புலம்பெயர்ந்த நாட்டில் இதை அடிப்படையாக
வைத்தே தொடர்ந்து படித்து, பதிவு செய்யப்பட்ட மருத்துவ தாதியாக
வரமுடிந்தது.
கயல்விழி மீது
ஈழவிடுதலை இயக்கங்களின் நிழல்படாதிருக்க தகப்பன் கந்தையா வாத்தியார் தான் அதிபராக
இருந்த கிராமத்துப் பாடசாலையில் படிக்கவிட்டதால் உயிரியல்விஞ்ஞான, பட்டப் படிப்புக்கே இடம் கிடைத்தது. டியூசனுக்கும் அனுப்பி, நகரத்துப் பாடசாலைக்கும் அனுப்பியிருந்தால் கூடிய புள்ளிகள் பெற்று
மருத்துவம் படித்திருப்பாள் என்பது அயலவர்களின் கணிப்பு. அந்த அளவுக்கு கயல்விழி
புத்திசாலியான, மரியாதை தெரிந்த பிள்ளை என்பார்கள் அவளை
அறிந்தவர்கள்.
கயல்விழி
இப்பொழுது ‘அவள்’ அல்ல. நாற்பது வயதைத் தாண்டிய ‘அவர்’. பிரபல தனியார் வைத்தியசாலையின் முக்கிய வார்டை நிர்வகிக்கும்
பெண்தாதி, பெரிதும் மதிக்கப்படுபவர். கைநிறையச்
சம்பளம். சமீபத்திய சம்பவம் காரணமாக வேலைக்குப் போகாது வீட்டிலிருக்கிறார்.
இருந்தாலும் அவரது நினைவுகள் மருத்துவ மனையைச் சுற்றியே வலம் வந்தன.
வைத்தியசாலை
எண்ணங்களைத் திசைதிருப்ப ஏதாவது வாசிக்கலாமென நினைத்தபோது, முன்பு
வாசிக்க ஆரம்பித்து இன்னமும் முடிக்காமலிருந்த ஜோன் றொன்சனின் உளவியல்
தொகுப்புநூல் நினைவுக்கு வந்தது. புத்தக அலுமாரியில் அதைத் தேடிக் கண்டுபிடித்து
உருவியெடுத்தபோது அலுமாரித் தட்டில் புதைந்திருந்த ஒரு தபால் உறையும்
புத்தகத்துடன் சேர்ந்து வந்தது. வந்தவேகத்தில் அதை உள்ளே தள்ளிவிட்டார் கயல்விழி.
கந்தையா வாத்தியார் இறந்தபின், தனியே வாழவிரும்பாத தாய், தற்கொலை செய்வதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பிவைத்த உறுதிகள்
அவை. அதே தபாலுறையுடன் இத்தனை வருடங்களாக அவை புத்தக அடுக்குகளுக்கு இடையே
தேடுவாரற்றுக் கிடந்தன.
உறுதிக்கட்டு பழைய
நினைவுகளைக் கிளறிவிட, யன்னலருகே சென்று வெளியே பார்த்தார்.
ஸ்நோ இடைவிடாது கொட்டிக் கொண்டிருந்தது. வருஷம் வருஷம் பெய்யும்
ஸ்நோதான். இருந்தாலும் ஏதோவொரு உந்துதலால் அதை நெடுநேரம் பார்த்துக்
கொண்டிருந்தார். இலைகளை இழந்து நிர்வாணமான பப்ப, லார்ஷ,
மேப்பல் மரங்களை வாரம் முழுவதும் தொடர்ந்து கொட்டிய ஸ்நோ, மூடிமறைத்து மானம்காத்தன. அகன்ற இலை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக
நடப்பட்ட ஊசியிலை மரங்கள் மாத்திரம் இலைகளை இழக்காது கம்பீரமாகக் காட்சி தந்தன.
மேப்பல் மரக் கிளைகளின் இடுக்கில் கூடுகட்டி வாழ்ந்த பெண் சிக்கடிக்குருவியை
நெடுநேரம் பார்த்துக்கொண்டு நின்றார். திடீரென ஊசியிலை மரக் கூடலில் இருந்து
பறந்து வந்த ஆண் சிக்கடி, பெண்குருவி மீது ஏறி அமுக்கியது.
கூட்டிலிருந்த குஞ்சுகளின் கத்தலுக்கும் தாய்க் குருவியின் திமிறலுக்கும் அசராத
ஆண்குருவி தன் இச்சையைத் தீர்த்த இறுமாப்பில் மீண்டும் ஊசியிலை மரக் கூடலுக்குத்
தாவியது. கயல்விழிக்கு தேகமெங்கும் உஸ்ணம் பரவி வேர்த்தது. குருவிகளானாலும்
கண்முன்னே நடந்தது வல்லுறவே. அதைத் தடுக்கமுடியாத குற்ற உணர்வில், பொங்கிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டார்.
தொடர்மாடியின்
முகப்பு வாசலில் பொருத்தியிருந்த இண்டர்காம் இணைப்புச் சிணுங்கியது. சிறிது
நேரத்தில் ஓடர் செய்த எடுப்புச் சாப்பாட்டைக் கொண்டுவந்த பெண், லிப்டில் வராது மாடிப்படிகளில் ஏறிக் களைத்து வந்தாள். அந்த நாட்டில்
டிலிவரி செய்பவர்கள் பெரும்பாலும் இளவயதினரே. வந்த பெண்ணுக்கு நடுத்தர
வயதிருக்கும். வாழ்க்கையில் நன்கு அடிபட்ட சாயல் தோற்றத்தில் தெரிந்தது. முகம்
அழகாக இருந்தாலும் வயது தெரிந்தது. தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்தாள்.
தொழிலுக்கு ஏற்றபடி கேற்றரிங் கடையின் பெயர் பொறித்த வின்டர் ஜாக்கெட்டும்
ஜீன்சும் அணிந்திருந்தாள். அவளின் ஆங்கில உச்சரிப்பில் யாழ்ப்பாணத் தமிழ்வாடை
வீசியது. சாப்பாட்டுக்கான பணம் முழுவதையும் ஏற்கனவே கயல்விழி ஒன்லைன் மூலம்
செலுத்தியிருந்தார். ஆனாலும் ஏதாவது டிப்ஸ் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில்
வீட்டினுள்ளே பார்வையை நுழைத்து, அக்கா யாழ்ப்பாணத்திலை எவடம்? நயினாதீவு அம்மன் கோவில் படம் தூக்கியிருக்கிறியள் என்றாள்.
இந்த நாட்டுக்கு
வந்த நாள் முதல் இங்கு வாழும் இலங்கை, இந்தியர்களுடன்
எந்தவித தொடர்புமில்லாமல் வாழ்பவர் கயல்விழி. இதற்கு வலுவான காரணங்களும் உண்டு.
அவர் பணிபுரியும், அதிக கட்டணம் அறவிடும் தனியார் வைத்திய
சாலைக்குத் தமிழர்கள் பெரும்பாலும் வருவதில்லை. அவர் வாழும் குறிச்சியில் வாடகை
வீடுகள் குறைவு என்பதற்கு அப்பால் மனைகளின் விலையும் அதிகம். அதனால் மேட்டுக்குடி
மக்களே அங்கு குடியிருந்தார்கள்.
டிலிவரி சாப்பாடு
கொண்டுவந்த பெண் அக்காவென அழைத்து யாழ்ப்பாணத் தீவுகளின் வட்டாரத் தமிழ் பேசியது
கயல்விழிக்கு ஊர் நினைவுகளைத் தூண்டிவிட்டன. கயல்விழியும் தீவில் பிறந்து
வளர்ந்தவர். இன்றைய நிலையில் அவருக்கு ஒரு பேச்சுத்துணை தேவை என்பதால், வந்தவளுடன் பேசுவது
மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
களைச்சுப்போனாய்,
மூச்சுவாங்குது, லிப்டில் வந்திருக்கலாமே. உள்ளே வா.
ஏதாவது குடிக்கிறாயா? என கயல்விழி அழைத்தார்.
கொஞ்சம் தண்ணி
தாங்கோ அக்கா, எனக்கு லிப்டில் வரப் பயம், தலை சுத்தும். பிரான்ஸில ஒருமுறை உள்ளுக்கை அம்பிட்டு அரைநாள்
அதுக்குள்ளை கிடந்தனான். அதுக்குப் பிறகு மாடிவீடுகளில் படியிலைதான் ஏத்தம்,
எனச் சொல்லியபடி அங்குள்ள கதிரையின் நுனியில் பட்டும்படாமலும்
அமர்ந்தாள். மாடிப்படிகளில் ஏறி வந்த களைப்புக்கு வீட்டின் சுவாத்தியம் இதமாக
இருந்தது.
கயல்விழிக்குச்
சொந்தமான பிளாட்குடியிருப்பு, மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும்
பராமரிக்கப்பட்டிருந்தது. எல்லாம் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. வீட்டில்
குழந்தைகள் இல்லையெனத் தெரிந்தது. மேலதிக விபரம் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்
அங்குள்ள படங்களில் கண்களைச் சுழலவிட்டாள். இதை விடுப்பென்று சொல்லமுடியாது. ஊரவள்
என்ற நினைப்பில் இயல்பாகவே தோன்றிய ஆர்வம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
மனிதர்களின் படங்கள் எதுவுமில்லை. மாறாக பல்வேறு கோடுகளாலான, இலகுவில் புரியாத, சில உளவியல் சித்திரங்கள் மட்டும் சட்டம்
போட்டு மாட்டப்பட்டிருந்தன. அவற்றை உற்றுக் கவனித்தாள். சிக்கலான கோடுகளின்
மையத்தில் பெண்களின் வெவ்வேறு உருவங்கள் தெரிந்தன. உதவிகேட்டு யாசிப்பதே அக்
கோட்டுச் சித்திரங்கள் சொல்லும் செய்தியென்பதை தன் அறிவுக்கு எட்டியபடி விளங்கிக்
கொண்டாள். கயல்விழியே அவற்றை வரைந்ததாகக் காட்டும் கிறுக்கலான குறியீடு, கையொப்ப வடிவில் ஒரு மூலையில் இருந்தது.
தண்ணீருக்குப்
பதிலாக அப்பிள்யூஸ் கொண்டு வந்த கயல்விழி, உனக்கு வேறு
டிலிவரி இருக்கா? என்ற கேள்வியுடன் அருகிலுள்ள சோபாவில்
அமர்ந்தார்.
இப்போதைக்கு இல்லை
அக்கா. வந்தால் போனில் டிங் சத்தம் கேட்கும். அதுவரை இருந்திட்டுப் போறன், என கதிரையில் உரிமையுடன் சாய்ந்து ஒரேமூச்சில் யூஸைக் குடித்தாள்.
வந்த களைப்புக்கு அப்பிள்யூஸ் அற்புதமாகச் சுவைத்தது. யூஸ்குடித்த கிளாஸை எட்டி
முன்னால் இருந்த ரீப்போ-மேசையில் வைத்தபோது, அவள்
தன் இடுப்பில் குத்தியிருந்த டாட்டூ சித்திரம், ஜீன்ஸ்
இடுப்புப் பட்டிக்கு மேலால் எட்டிப்பார்த்தது. கட்டுமஸ்தான ஆண் ஒருவனை மலைப்பாம்பு
சுற்றி இறுக்க அவன் வலிதாங்காது கதறுவது போன்ற தோற்றத்தில் அது
வரையப்பட்டிருந்தது.
டாட்டூச்
சித்திரங்கள் கயல்விழியின் கடந்த காலத்தை நினைவூட்டும். அவற்றைக் காணும்போது
தேகமெங்கும் கட்டெறும்புகள் ஊர்ந்து கடிப்பதுபோன்ற உணர்வைத் தோற்றுவிக்கும்.
இன்றும் அப்படித்தான். சாப்பாடு கொண்டுவந்தவள் பச்சைகுத்தியிருந்த
டாட்டூச்சித்திரம் கடந்தகால சம்பவங்களை நினைவுபடுத்தின. உடம்பு நடுங்கி உஸ்ணமாகி
வேர்த்தது. எழுந்து குளியலறைக்குப் போய் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவி
நிதானமார். பின்னர் குளிர்ப் பெட்டியிலிருந்த அப்பிள், ஆரஞ்சுக்
கலவை ஜுஸ் போத்தலுடன் டிலிவரிபெண் முன்னால் வந்தமர்ந்தார். இருவரும் கிளாஸை நிரப்பிக்கொண்டனர்.
இலங்கையிலிருந்து
பிரான்ஸ் வந்து, இப்ப இந்த நாட்டில் நிக்கிறாய். கஷ்டமான
பயணமாச்சே, எனப் பேச்சை வளர்த்தார் கயல்விழி. யூஸ்
குடித்துக் கொண்டிருந்தவளுக்குப் பிரக்கடித்து மூக்கால் வழிந்தது. நிலைமையைச்
சமாளிக்க குசினி மேசையிலிருந்த சேர்வியற் கைக்குட்டையை எடுத்துக் கொடுத்து,
நானும் தீவுப்பகுதிதான் என நெருங்கிவந்தார்.
அக்கா, என்ரை பயணம் மொத்தமாய் மூன்று வருசம். மும்பையில் மட்டும்
பாஸ்ப்போட்டும் இல்லாமல் ஓண்டரை வருசம் என்றவள், கண்ணீரை
அடக்கிக்கொண்டாள்.
கயல்விழி எதுவும்
பேசவில்லை. அவளின் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். ஐரோப்பிய நாடொன்றுக்கு
அகதி அந்தஸ்துக் கோரவரும் பயணத்தில் விசாவும் இல்லாமல் நீண்டகாலம் மும்பையில்
தங்கியதையும் இடுப்பில் குத்தியிருந்த டாட்டூச் சித்திரத்தின் அர்த்தத்தையும்
இணைத்துப் பார்த்து, என்ன நடந்திருக்குமென ஊகித்துக்கொண்டார்.
இதே பாதையைக் கடந்துதான் அவரும் வந்தவர். வசதியுள்ளவர்களுக்கு மும்பை ஒரு
சொர்க்கம். மற்றவர்களுக்கு அது நரகம். அகதி அந்தஸ்துக்கோரி வெளிநாடு போக
வெளிக்கிட்டு மும்பையில் இடைத்தங்கல் தங்கியவர்கள் அங்கு பட்ட கஷ்டங்களையும்
வேதனைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை. ஆனாலும் கதைகேட்க
வேண்டுமென்ற கயல்விழியின் ஆர்வத்திற்கு காரணம் உண்டு.
உனக்கு வேறு
டிலிவறி எதுவும் இல்லையென்றால் என்னுடன் சேர்ந்து சாப்பிடு, எனக்கும்
துணையாக இருக்குமென உரையாடலைத் தொடர தூபம் போட்டார் கயல்விழி.
எடுப்புச்சாப்பாடு
ஓடர்செய்யும் வாடிக்கையாளர்களில் பலர் சாப்பாட்டை வாங்கினமா, பணத்தைக் கொடுத்தமா என்ற மனப்பான்மையில் இருப்பவர்கள். இப்படியான
நட்பான வாடிக்கையாளரை இதுவரை வந்தவள் சந்தித்ததில்லை. நிரந்தர விசாவுமில்லாமல்
றெஸ்ரோரன்ட் குசினி ஒன்றில் அரைச் சம்பளத்துக்கு நெருப்பில் வெந்து
கஷ்டப்பட்டவளுக்கு சமீபத்தில்த்தான் இரண்டு வருடங்களுக்குரிய தற்காலிக விசாவும்
கேற்றரிங் டிலிவரி வேலையும் கிடைத்திருக்கிறது. விசா முடியும் தறுவாயில்
தொடர்ந்தும் ஊரில் வாழப் பாதுகாப்பு இல்லையென நிருபித்தால் மட்டுமே விசா
நீடிக்கப்படும். இந்த நிலையில் கயல்விழியைப் போன்ற ஒருவரின் நட்பு தனக்கு நல்லதென
நினைத்தாள். ஊரவர் என்ற வட்டாரபாசம் மேலதிக நெருக்கத்தை ஏற்படுத்த, ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு பீங்கான்
கோப்பைகளை மேசையில் வைத்த கயல்விழி குளிர்சாதனப் பெட்டியில் இருந்த, பஸ்மதி அரிசிச் சோறையும் பருப்பையும் சூடாக்கிக் கொண்டுவந்தார்.
எடுப்புச் சாப்பாட்டை கயல்விழி பகிர ஆரம்பித்தபோது, இந்திய
சாப்பாட்டுக் கடைகளில் இருக்கும் ஒன்-பை-டூ
வழக்கத்தை நினவுபடுத்தி இருவரும் சிரித்தார்கள். தனக்குப் பசியில்லை என்று,
கோப்பையில் குறைவாகவே எடுத்துக்கொண்டாள் வந்தவள். சம்பாஷனை
தொடர்ந்தது.
அக்கா, கேற்றரிங் ஜாக்கெட்டில் குத்தியிருக்கும் மேரியல்ல என் பெயர். நான்
இந்த நாட்டுக்கு வந்தது, பிரான்ஸ் குடியுரிமை வைத்திருந்த
பாண்டிச்சேரிப் பெண்ணின் பாஸ்போட்டில். இதனால் இங்கு நான் மேரிலதா, சுருக்கமாக மேரி, என்றவளின் விழியோரத்தில் கண்ணீர்
திரண்டது.
ஆசையாசையாக அப்பா
எனக்கு வைத்த பெயர் வளர்மதி. ஊரிலை நாங்கள் சுத்த சைவம். எனக்கு விசாகிடைக்க
இங்குள்ள கிறீஸ்தவ தேவாலயம்தான் உதவியாயிருந்தது. இப்ப எனக்கு எல்லாக் கடவுளும்
ஒன்றுதான் அக்கா. நயினாதீவு அம்மனுக்கு நான் எத்தினை விரதம் பிடிசிருப்பன்.
அம்மாளாச்சி என்ரை விசயத்திலை கண்திறக்கேல்லை.
முன்னால் இருந்த
ரிசூப்பேப்பரைப் பெட்டியிலிருந்து உருவி முகத்தை அழுத்தித் துடைத்தாள் வந்தவள்.
நிலைமையைச்
சுமூகமாக்க, ‘வளர்மதி’ என அவளின் உண்மையான பெரைச் சொல்லி அழைத்து இயல்பு நிலைக்குக்
கொண்டுவர முயன்றார் கயல்விழி.
எவ்வளவு காலமக்கா
என்ரை உண்மையான பெரைச் சொல்லக்கேட்டு என்றவள் சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள்.
உங்களைப்
பார்த்ததும் என்ரை அக்காவின் ஞாபகம்தான் வந்தது. நாலு வயது மூப்பு. நாங்கள்
இரண்டுபேரும்தான் குடும்பத்தில். படிக்கிற காலத்தில் இயக்கத்தில் இணைந்து
போர்க்களத்தில் அக்கா வீரச் சாவடைந்தவர். அப்பா கிராமசேவகர், பழைய பாஷையில் சொன்னால் ஊர் விதானை. ஊர்முழுக்க எங்களுக்குக்
காணிகள். தாய்வழித் தாத்தா, கொள்ளுத்தாத்தா அனைவரும் முன்னாள்
விதானைமார்கள். நாங்கள் வாழ்ந்த வளவை இன்றும் விதானையார் வளவு என்றே சொல்லுவினம்.
ஊர்த் தமிழையும்
விதானையார் என்ற சொல்லையும் கேட்டு எவ்வளவு காலம். எங்கடை ஊரிலும் ஒரு விதானையார்
வளவு இருக்கு, என்று சொல்லிக் கதையை வளர்த்தார்
கயல்விழி.
தாத்தாவின்
பதவிக்காலத்திலேயே விதானைமுறை மாறி கிராமசேவகர் பதவி அமுலுக்கு வந்தது.
இருந்தாலும் பரம்பரை விதானை என்ற பந்தாவோடுதான் அப்பா ஊரில் வலம் வந்தார். மகள்
விடுதலை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள் என்ற பெருமை வேறு.
வளர்மதிக்கு
சகோதரியின் நினைவு வந்திருக்கவேண்டும். கரைகட்டி வழியத் தயாராக நின்ற கண்ணீருக்கு
நடுவே, அக்கா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது.
என்னை வலோற்காரமாகப் பாழாக்கி அழிச்சதோடை, வயித்திலை
பிள்ளையையும் தந்த அந்த அரக்கனை மும்பையிலேயே முடிச்சிருப்பன் என்றவளின் முகம்
கோணியது. அவளது முகத் தசைகள் கோபத்தில் அசைந்தது துலக்கமாகத் தெரிந்தது.
மும்பையில்
அவளுக்கு நடந்த சம்பவங்களின் முடிச்சு அவிழ்ந்ததால் விசயத்தை ஊகித்துக் கொண்டார்
கயல்விழி. அவள் சொன்ன அரக்கன் வளர்மதியைக் கூட்டிவந்த ஏஜண்ட் என்பதும், இடுப்பில் குத்தியிருந்த டாட்டுச் சித்திரத்தில் மலைப்பாம்பு
சுற்றியிறுக்கும் மனிதனும் அவனேதான் என்பதும் கயல்விழிக்குப் புரியாததல்ல. அந்தச்
சித்திரம் வளர்மதியின் மனதில் படிந்து கிடக்கும் வன்மத்தின் வெளிப்பாடு என்பதை
விளங்கிக்கொண்டார். ஈழப்போர் நடந்த காலத்தில், இத்தகைய
ஏஜண்டுகள் ஒரு குழுவாகச் செயல்பட்டு பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு
ஆளாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை,
பாதிப்புகளை வெளியே சொல்ல மாட்டார்கள், சிக்கல்களிலிருந்து
மீள்வதற்கு சட்டத்தின் உதவியை நாட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கைதான் அந்தக்
கயவர்கள் தொடர்ந்து அத்தகைய குற்றங்களில் ஈடுபடக் காரணம், என்ற
விவரண எண்ணங்கள் அலையலையாக கயல்விழியின் மனதில் எழுந்து எழுந்து விழுந்தன.
வளர்மதிக்கு
இப்போதைய தேவை ஒரு வடிகால். கதையைச் செவிமடுக்க ஒரு ஆள். இதனால் மேலேசொல்லு என்னும் பாவனையில் ‘ம்’ சேர்த்தார் கயல்விழி.
அப்போது பார்த்து
செல்போன் தொடர்ந்து சிணுங்கியது. சத்தத்தைக் குறைத்து போனைப் பைக்குள் வைத்த
வளர்மதி, குவளையில் இருந்த தண்ணீரைக் கிளாஸில் வாத்து ஒரே மடக்கில்
குடித்தாள்.
அவளின் கதை
தொடர்ந்தது.
அது, புலிகளும் இலங்கை அரசாங்கமும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்ட காலம்.
வெளி நாட்டிலிருக்கும் சோலிசுரட்டில்லாத நல்ல பெடியன் என, கலியாணப்
புரோக்கர் சம்பந்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். விசாரித்துப் பார்த்ததில் எல்லோரும்
நல்ல விதமாகவே சொன்னார்கள். அக்காவும் இறந்த நிலையில் மிஞ்சியிருக்கும் ஒரே
பிள்ளையை, அதுவும் பெண்பிள்ளையை கண்காணாத
தேசத்துக்கு அனுப்ப அம்மாவுக்கு விருப்பமில்லை. சாதகம் தொண்ணூறு வீதம்
பொருந்துகிறது என்ற, காரணத்தைச் சொன்னார் புரோக்கர். மூத்தவள்
இயக்கத்துக்குபோய் அவளின்ரை கதை முடிஞ்சுது. அவளுக்கு ஒரு தங்கச்சி இருப்பது
இயக்கத்துக்கு தெரியாதே? சூட்டோடை சூடாய், சண்டை
ஓய்ஞ்ச இந்தநேரம் வெளிநாட்டுக்குப் போய், அக்கா
இயக்கத்துக்குப் போய்ச் செத்தவ. அதாலை எனக்கு இயக்கத்தாலும் இராணுவத்தாலும்
பிரச்சனை என்ற காரணத்தைச் சொல்லி ‘அசைல்’ அடிச்சால் உடனை விசா குத்திக் குடுப்பான், எனப்
பொறுத்த இடத்தில் புரோக்கர் கைவைத்ததும் அப்பாவும் அம்மாவும் அடங்கிப் போனார்கள்.
பிரான்ஸ்
மாப்பிளைக்கு நிரந்தர விசா இருந்ததா?
அவருக்கு நிரந்தர
விசா இல்லை என்பது பின்னரே தெரிந்தது. அதற்கு முன்னரே நாங்கள் இருவரும் தொலை
பேசியில் பேசத் துவங்கிவிட்டோம். எல்லாமே கைமீறிய நிலையில் பிரான்சுக்குப்
போகவெளிக்கிட்ட பயணத்தில்த்தான் என் வாழக்கை மும்பையில் சீரழிஞ்சது.
இதைச் சொல்லி
முடித்தபோது வளர்மதி அழவில்லை. முகம் கறுத்து இறுகியிருந்தது.
கூட்டிவந்த ஏஸண்ட்
யார்? குழந்தைக்கு என்ன நடந்தது? மாப்பிளை சுதாகரனை
பிரான்ஸில் சந்தித்தாளா? என்ற கேள்விகள் கயல்விழியின் மனதில்
வரிசைகட்டி நின்றபோது, சத்தத்தைக் குறைத்துவைத்த வளர்மதியின்
தொலைபேசியின் அதிர்வும் அடுத்தடுத்த டிங்டிங் ஒலியும், அவசரமான
டிலிவறி ஓடர் ஒன்றைத் தெரிவித்தது.
அக்கா, இனியும் தாமதித்தால் வேலை போயிடும். இன்னொருநாள் வாறன் என்று சொல்லி
வெளியேறினாள் வளர்மதி.
கயல்விழிக்கு
அன்று இரவு தூக்கம் வரவில்லை. விழிகள் இருளின் மெல்லிய துடிப்பை உற்றுப் பார்த்தன.
மனத்தின் அடியில் கிளர்ந்த நினைவுகள் ஒவ்வொன்றும் கரையோரம் மோதும் அலைகள் போல
உடைந்து சிதறின. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றிக் காசு சம்பாதித்து, பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பலரும் பிற்காலத்தில் தமிழ்ஈழ
தேசியம் பேசியே பிரமுகர்களானார்கள். இவர்களின் லீலைகளினால் இன்றும் மாறாத
ரணத்துடன் வாழும் எத்தனையெத்தனை கயல்விழிகளும் வளர்மதிகளும் தீராத வன்மத்துடனும்
நெஞ்சை நொருக்கும் சோகத்துடனும் வாழ்கிறார்கள் என்பது இன்றும் நிலைத்து நிற்கும் நிதர்சனம்.
சிலர் தங்கள் மீது படிந்துள்ள தூசைத் தட்டி விடுவதுபோலத் துடைத்து விட்டுச்
சென்றாலும் பலரின் மனம் இன்னமும் அந்த தூசியிலேயே சிக்கித் தவிக்கிறது என்ற நினைவு,
கயல்விழியின் உள்ளத்தில் மின்னலெனப் பாய்ந்தது.
இரவு நீண்டநேரம்
தூங்காது உழன்றதால் அதிகாலையியே நித்திரை வந்ததது. காலை பத்துமணிவாக்கில் எழும்பிய
கயல்விழி வழமைபோல கைத்தொலை பேசியைத் திறந்தார்.
வைத்தியசாலை
நிர்வாகத்திலிருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில், உங்கள்
மீதான விசாரணை முடிவடைந்தது. வழமைபோல நீங்கள் பணிக்குத் திரும்பலாம். விடுப்பில்
நின்ற காலத்துக்கான ஊதியம் வழங்கப்படும். விசாரணை அறிக்கையைப் பெற விரும்பின்
நிர்வாக இலாகாவைத் தொடர்பு கொள்ளவும், எனச் சுருக்கமாக
எழுதப்பட்டிருந்தது.
விசாரணைக் கமிஷன்
அறிக்கையை வைத்தியசாலை வெப்சைற்றில் மணந்து பிடித்த, குலசேகரம்
சார்ந்த, ஈழத்தமிழ் அமைப்புப் பத்திரிகை அவரது இறப்பின் ஃபாலோஅப் செய்தியொன்றை
முதல் பக்பத்தில் வெளியிட்டிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்.
‘’உயிர் மையச் சுரப்பியில் ஏற்பட்ட அழற்சி காரணமாக வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்ட தமிழ்ஈழ அமைப்பின் போசகர் திரு குலசேகரம் அவர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும் வலி நிவாரணிகளையும் ஒழுங்காக வழங்காது, இன்பெக்ஷன்
ஏற்படுத்தித் துன்புறுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை என, வைத்தியசாலை விசாரணைக் கமிஷன் அறிக்கை
தெரிவிக்கிறது. குறித்த தாதி மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக
எமது அமைப்பு நீதி மன்றத்தை நாடும்’’
இவை எதையும்
பொருட்படுத்தாத கயல்விழி, தன் ‘’கணக்கை’’ நேர்செய்த திருப்தியுடன் ஆண் வாடை அதிகமற்ற மகப்பேறு வாட்
வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஆனாலும் டாட்டூச் சித்திரங்களின் நினைவுகள்
மட்டும் இடையிடையே வந்து கயல்விழியின் பணியைக் குழப்ப முயல்கின்றன.
அம்ருதா 222,
மே 2026
அம்ருதா 222, மே 2026 : Free Download, Borrow, and Streaming : Internet Archive

No comments:
Post a Comment